Pages

Showing posts with label றேடியோஸ்புதிர். Show all posts
Showing posts with label றேடியோஸ்புதிர். Show all posts

Thursday, April 11, 2013

றேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் "என்ன தமிழ்ப்பாட்டு"


வணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று வித்தியாசமாக, தெலுங்கில் இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களைக் கொடுக்கிறேன். இந்தப்பாடல்களின் மெட்டுக்களில் இளையராஜா இசைமைத்த தமிழ் வடிவப்பாடல்களை நீங்கள் குறிப்பிடவேண்டும், இந்தத் தமிழ்ப்பாடல்கள் எல்லாமே தெலுங்கிலிருந்து நேரடியாக வெளிவந்த படங்களின் டப்பிங் படங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்தப் பாடல்கள், கேட்டு, பார்த்து, யோசித்துப் பதிலோடு வாருங்கள். போட்டி இத்தோடு முடிந்தது இதோ அந்தத் தமிழ்ப்பாடல்கல 1. Vennello Godaari Andam - Sitara இந்தப் பாடலின் தமிழ் வடிவம், நிழல்கள் படத்திற்காக எஸ்.ஜானகி பாடிய "தூரத்தில் நான் கண்ட உன் முகம்" படத்தில் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 2. Ilalo Kalise - Anveshana இந்தப் பாடல் அன்பின் முகவரி படத்திற்காக "உயிரே உறவே" எனத் தமிழில் வந்திருக்கிறது, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடியிருக்கிறார்கள். தெலுங்கிலிருந்து மொழிமாற்றப்பட்ட காதல் கீதம் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட "வாழ்வா சாவா" எனவும் வந்திருக்கிறது 3. Ee Chaitra Veena -Preminchu Pelladu இந்தப்பாடல் "ஆனந்தக் கும்மி" படத்திற்காக "ஓ வெண்ணிலா" எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குரல்களில் 4. Maata Raani - Maharshi செண்பகமே செண்பகமே படத்தில் வரும் "மஞ்சப்பொடி தேய்க்கையிலே" எஸ்.பி.பாலசுப்ரமணியம் 5. Chukkalu Themanna - Vidudala காற்றினிலே வரும் கீதம் படத்திற்காக ஜெயச்சந்திரன் குரலில் "சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்"

Sunday, August 5, 2012

றேடியோஸ்புதிர் 66 - லால லாலா லா லா

தமிழ்த் திரையிசைப்பாடல்களில் வாத்திய இசையோடு கூட்டுக் குரல்களும் வரிகளை உச்சரிக்காது ஆலாபனை செய்யும் வண்ணம் பல பாடல்கள் தொன்று தொட்டு வந்திருக்கின்றன. இன்னும் விசேஷமாக பிரபல பாடகர்களை இந்த இடைக் குரலுக்குப் பயன்படுத்தியது எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்துப் பாணி. எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோரின் பாடல்கள் சில உதாரணமாக விளங்கி நிற்கின்றன.
இங்கே நான் தந்திருக்கும் றேடியோஸ்புதிர் பாடல் துளிகளும் அவ்வமயமே, எழுபதுக்குப் பின் வெளிவந்த பிரபல பாடகர்களை இடைக்குரல் ஆலாபனைக்குப் பயன்படுத்திய பாடல்கள். உங்கள் வேலை, இங்கே தரப்பட்ட பாடல்கள் என்ன என்ன, அவற்றில் வந்து கலக்கும் இடைக்குரல் பாடகர்கள் யார் என்பது. எங்கே ஆரம்பிக்கட்டும் போட்டி ;-)



பாடல் ஒன்று பாடல் இரண்டு பாடல் மூன்று பாடல் நான்கு பாடல் ஐந்து


ஓகே மக்கள்ஸ் போட்டி முடிந்தது இதோ பதில்கள்

பாடல் ஒன்று : மெளனமேன் மெளனமே - இடைக்குரல் சித்ரா

பாடல் இரண்டு : நாரினில் பூத்தொடுத்து மாலை ஆக்கினேன்
இடைக்குரல் சித்ரா

பாடல் மூன்று: அதோ மேக ஊர்வலம்
இடைக்குரல் சுனந்தா

பாடல் நான்கு : தீர்த்தக்கரை தனிலே
இடைக்குரல் ஜென்சி

பாடல் ஐந்து : மழை தருமோ என் மேகம்
இடைக்குரல் சைலஜா

Tuesday, May 8, 2012

றேடியோஸ்புதிர் 65 : சாக்ஸ் கலந்து நான் தருவேன்







வணக்கம் மக்கள்ஸ், மீண்டும் ஒரு றேடியோஸ்புதிரோடு வந்திருக்கின்றேன். இந்தத் தடவையும் கடந்த இரு போட்டிகள் போன்று பாடல்களின் இடை இசை கொடுக்கப்பட்டு அந்தப் பாடல்கள் எவை என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். இதோ
தொடர்ந்து வரும் இடையிசை எந்தெந்தப் பாடல்களில் அமைந்தவை என்று கண்டுபிடித்துப் பதிலோடு வாருங்கள்.

புதிர் 1



பதில்
காதல் பரிசு படத்தில் வரும் "ஏ உன்னைத்தானே"


புதிர் 2



பதில்
தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் வரும் "வருது வருது"


புதிர் 3



பதில்
ரெட்டைவால் குருவி படத்தில் வரும் "கண்ணன் வந்து பாடுகின்றான்"



புதிர் 4



பதில்
நினைக்கத் தெரிந்த மனமே படத்தில் இருந்து "கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்"


புதிர் 5



பதில்
வெற்றிவிழா படத்தில் இருந்து "சீவி சிணுக்கெடுத்து"

Monday, March 5, 2012

றேடியோஸ்புதிர் 64: குழலூதும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ


வணக்கம் மக்கள்ஸ்,

கடந்த இசைத்துணுக்குப் புதிருக்கு நீங்கள் கொடுத்த பெருவாரியான ஆதரவில் (?) மீண்டும் இன்னொரு இசைத்துணுக்குப் புதிரில் உங்களைச் சந்திக்கிறேன். இம்முறையும் வழக்கம் போல இசைஞானி இளையராஜாவின் முத்தான ஐந்து படங்களின் பாடல்களில் இருந்து இந்தப் புதிர்கள் வருகின்றன. இவற்றின் பொது அம்சம், எல்லாப் பாடல்களிலும் புல்லாங்குழல் வாத்தியத்தின் பயன்பாடு காணப்படுகின்றது. இதோ தொடர்ந்து இசையைக் கேட்டுப் பதிலோடு வாருங்கள் ;)

ஒகே மக்கள்ஸ், போட்டி நிறைந்தது, பங்குபற்றிய அனைவருக்கும் மிக்க நன்றியும் போட்டியில் வெற்றி கண்டோருக்கு வாழ்த்துக்களும்

பாட்டு 1



சரியான பதில்: பாண்டிநாட்டுத் தங்கம் படத்தில் இருந்து "உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது" பாடியவர்கள் மனோ, சித்ரா. இதோ முழுமையான பாடல்





பாட்டு 2



சரியான பதில்: "முத்தமிழ் கவியே வருக" தர்மத்தின் தலைவன் படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா



பாட்டு 3



சரியான பதில்: நினைவுச்சின்னம் படத்துக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "வைகாசி மாதத்துல பந்தல் ஒண்ணு போட்டு"



பாட்டு 4



சரியான பதில்: "நினைத்தது யாரோ நீ தானே" பாடல் பாட்டுக்கொரு தலைவன் படத்தில் இருந்து ஜிக்கி, மனோ பாடுகிறார்கள்



பாட்டு 5



சரியான பதில்: பாசப்பறவைகள் படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடுகின்றார்கள் "தென்பாட்டித் தமிழே"


Thursday, February 23, 2012

றேடியோஸ்புதிர் 63 "கிட்டார் இசைப்பதைப் பாராய்" பதிலோடு வாராய்


வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் மக்கள்ஸ்,
ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டுமொரு றேடியோஸ்புதிரில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த றேடியோஸ்புதிர் சற்று வித்தியாசமாக ஐந்து பாடல்களின் இடையிசை தரப்பட்டு அந்தப் பாடல்கள் எதுவென்று கண்டுபிடிக்கும் போட்டியாக அமையவிருக்கின்றது. இந்தப் போட்டியில் இடம்பெறும் ஐந்து பாடல்களிலும் பொதுவாக அமையும் அம்சங்கள், இவை அனைத்தும் இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த பாடல்கள் என்பதோடு இந்த இடையிசையில் கிட்டார் வாத்தியத்தின் பயன்பாட்டைக் காணலாம்.

புதிரில் இடம்பெறும் பாடல்கள் எவை என்பதே போட்டி, எங்கே ஆரம்பிக்கட்டும் உங்கள் பொது அறிவு :)
ஒகே மக்கள்ஸ், கடந்த இரண்டு நாள் அவகாசத்தில் வந்த பதில்களில் ஒரேயொருவர் மட்டுமே அனைத்துப் புதிர்களுக்குமான பதிலை அளித்திருக்கின்றார். அவர் பெயர் மணி, காண்க பின்னூட்டத்தில்.
போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி :)

இதோ விடைகள்.

பாட்டுப்புதிர் 1



அந்தப் பாட்டு கண்ணுக்கொரு வண்ணக்கிளி படத்தில் வந்த, இசைஞானி இளையராஜா இசையமைத்துப் பாடும்
"கானம் தென்காற்றோடு போய்ச் சொல்லும் தூது"




பாட்டுப்புதிர் 2



இந்தப் பாட்டு காக்கிச் சட்டை படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,பி.சுசீலா பாடும் "பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்"




பாட்டுப்புதிர் 3



அந்தப் பாடல் ஜெயச்சந்திரன், முடிவல்ல ஆரம்பம் படத்துக்காகப் பாடும் "பாடி வா தென்றலே"




பாட்டுப்புதிர் 4



இந்தப் புதிருக்கான பதில், இசைஞானி இளையராஜா இசையமைத்துப் பாடும் "நிலவே நீ வரவேண்டும்" பாடல் என்னருகே நீ இருந்தால்" படத்தில் இருந்து




பாட்டுப்புதிர் 5



இறுதிப் புதிருக்கான பதில் "பூந்தளிர் ஆட பொன் மலர் சூட" என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் பாடல் பன்னீர்ப்புஷ்பங்கள் திரைப்படத்திற்காக.

Thursday, October 20, 2011

றேடியோஸ்புதிர் 62: மினி ஜோசப் என்னவானர்?


வணக்கம் வணக்கம் வணக்கம்,

நீஈஈஈஈண்ட நாட்களுக்குப் பின்னர் றேடியோஸ்புதிர் பகுதியில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தப் புதிரும் ஒரு அட்டகாசமான ராஜாவின் அறிமுகம் சார்ந்த கேள்வியாக அமைந்திருக்கின்றது.
இசைஞானி இளையராஜாவுக்கு கேரளத்துக் குயில்களின் குரல்களில் ஏனோ மோகம், அந்தவகையில் அவர் தமிழுக்கு அறிமுகப்படுத்திய மலையாளப்பாடகர்கள் பட்டியல் நீண்டது. அப்படி வந்தவர் தான் இந்தப் பாடகி. இந்தப் பாடகி ஏற்கனவே மலையாளத்தில் ஒரு பாட்டுப் பாடியிருந்தாலும், தமிழில் இசைஞானி இளையராஜாவின் முத்திரைப் பாடலைப் பாடக் கிடைத்தது அவருக்கு ஒரு கெளரவம்.

ஆனால் நாகூர் பாபு, பாடகர் மனோ ஆனது போல, மினி ஜோசப் என்று வந்த இந்தப் பாடகியின் பேரை மாற்றினார் இசைஞானி. அப்போது பெரும் எதிர்பார்ப்பில் வந்த படத்திற்காக நல்லதொரு பாடலொன்றை இந்தப் பாடகிக்காக வழங்கினார் ராஜா. தொடர்ந்து இளையராஜாவின் பல படங்களில் பாடகியாகச் சிறப்பிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு ஒரு திருப்புமுனை கிடைத்தது இன்னொரு இசையமைப்பாளரால். ஆனால் என்ன பயன். இவருக்குக் கிடைத்த அந்தப் பெரும் புகழ் இருக்கும் போதே தன்னால் பாட முடியவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார். மீண்டும் பாட வந்தபோது ஏற்கனவே புதுக்குயில்கள் பல கூடாரமிட்டிருந்ததால் முற்றாகவே மறக்கடிப்பட்ட பாடகியாகிப் போனார். யார் இந்த மினி ஜோசப் இவர் பாடிய அந்த முதற்பாட்டு என்ன, இவரின் பெயரை இசைஞானி எப்படி மாற்றி அமைத்தார் என்பது தான் இந்தப் புதிரின் கேள்வி

மண்ணெண்ணை தீப்பிடிப்பது போலச் சட்டென்று வரவேண்டும் பதில்கள் ;)

போட்டி இனிதே ஓய்ந்தது

பதில் இதுதான்
அந்தப் பாடகி மினி ஜோசப் என்ற மின்மினி
ராஜா அறிமுகப்படுத்திய படம்: மீரா
பாடல்: லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணை ஸ்டவ்வு
பிரபலமாக்கிய இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: சின்னச் சின்ன ஆசை (ரோஜா)

Thursday, April 21, 2011

றேடியோஸ்புதிர் 61: ஒரே படம் மூன்று தேசிய விருதுகள்


என்னதான் சிறப்பானதொரு படைப்பாக இருந்தாலும்,இந்தப் படம் இவ்வளவு தேசிய விருதுகளைக் கொடுக்கும் என்று இயக்குனரே எதிர்பார்த்திருக்கமாட்டார். படிப்பைத் தொடர வேண்டிய பாடகியை நிறுத்தி இந்தப் படம் உன்னை உயர்த்தும் என்ற இசைஞானியின் சொல்லை மெய்ப்பிக்க சிறந்த பாடகி என்ற தேசிய விருது அவருக்குக் கிட்டியது. பாடல்கள் ஒவ்வொன்றுமே முத்துக்கள் ஆனால் இந்தப் படத்துக்கு முன்னமே கவிஞர் இன்னொரு படத்துக்குத் தேசிய விருதை வாங்கி விருதுக்கு கெளரவம் தேடிக்கொடுத்து விட்டார். ஆனால் இத்தனை ஆண்டுகள் உழைப்பில் ஒவ்வொரு படத்துக்குமே விருதுகள் வாங்கக்கூடிய தரத்தில் இருந்தாலும் இந்தத் தேசிய விருது இசையமைப்பாளருக்கு இரண்டாவது தடவையாகக் கிடைக்கின்றது. ஒளிப்பதிவாளராகவேண்டும் என்று ஆசைப்பட்டுத் திரையுலகம் வந்த அம்மணிக்கு அரிதாரம் போட்டு, கூடவே இந்தப் படத்தின் மூலம் தேசிய விருதையும் கொடுத்துக் கெளரவித்துக் கொண்டது.

என்ன இருந்தாலும் வாழ்க்கையில் இப்படி ஒரு இயல்பானதொரு கலைஞன் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்தும் நாயகனுக்குத் தேசிய விருது கிட்டவும் வரவில்லை இனியும் கிட்டாது ஏனென்றால் அவர் இனி நடிக்க மாட்டாராமே.

ஒகே மக்கள் புதிருக்கு ஏகப்பட்ட க்ளூ விரவியிருக்கு, பதிலோடு வருக
என்ன படம் கூடவே ஒரே படத்தில் தேசிய விருது கிடைத்த அந்த மூன்று பிரபலங்கள் யார்?

சரியான பதில்

சிறந்த நடிகை: சுஹாசினி
சிறந்த பாடகி: சித்ரா
சிறந்த இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சிந்து பைரவி

போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

Wednesday, April 6, 2011

றேடியோஸ்புதிர் 60 - "பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு"


வணக்கம் வணக்கம் வணக்கம், ஒரு சின்ன இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிரோடு வந்திருக்கிறேன். இந்தப் புதிரில் நான் கேட்கப்போவது ஒரு பாடல் குறித்தது. கவிஞர் முத்துலிங்கம் அவர்களும் இசைஞானி இளையராஜாவும் இணைந்து ஏராளமான முத்துக்களைக் கொடுத்திருக்கின்றார்கள். அதில் ஒன்றுதான் இந்த முத்து.

பாரதிராஜாவின் ஒரு படம், இந்தப் படத்தின் அறிமுக நாயகிக்கான பாடலை எழுதவேண்டும் என்று ஒரு நாள் இரவு பாரதிராஜாவின் மேலாளர் வடுகநாதன் கவிஞர் முத்துலிங்கத்தைச் சந்தித்து கூடவே அந்தப் பாடலுக்கான மெட்டமைக்கப்பட்ட இசை தாங்கிய ஒலி நாடாவையும் கொடுத்து விட்டுக் கிளம்பினார். துரதிஷ்டவசமான வீட்டில் மின்சாரம் இல்லை அன்று. அடுத்த நாள் பாடல் ஒலிப்பதிவு. இந்த நிலையில் மறுநாள் ராஜாவைச் சந்திக்கிறார் முத்துலிங்கம். பாடல் ரெடியா என்று கேட்டபோது நிலமையைச் சொல்லி விளக்கிவிட்டுடு இப்பொழுதே எழுதிவிடுகிறெஎன் என்று சொல்லியவாறே அவர் முன்னால் எழுத ஆரம்பிக்கிறார். முதல் அடியை எழுதி விட்டு பொருத்தமான அடுத்த அடியை எழுதும் போது கவனித்த ராஜா இரண்டாவது அடியை மாற்றிவிட்டு "பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்" என்று எழுதுமாறு சொன்னாராம். அதையே இணைத்துவிட்டு முழுப்பாடலையும் எழுதிமுடித்தார் முத்துலிங்கம். அந்தப் படத்திலேயே வெற்றிபெற்ற பாடலாக இந்தப் பாடலும் அமைந்து விட்டது. அது எந்தப் பாடல் என்பது தான் கேள்வி. பதிலோடு ஓடி வாருங்கள் ;-)

இதோ போட்டி முடிவடைந்து விட்டது, சரியான பதில் இதுதான்

பாடல் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
படம்: புது நெல்லு புது நாத்து
அறிமுக நாயகி: சுகன்யா

Tuesday, January 4, 2011

றேடியோஸ்புதிர் 59 - மூத்த பாகம் உதவிக்கு இளைய பாகம் மூத்ததுக்கு

றேடியோஸ்பதியின் ஆங்கிலப்புத்தாண்டு ஆரம்ப இடுகையாக ஒரு புதிரோடு தொடங்குகிறேன். நீண்ட நாட்களாகப் போட்டி இன்றித் தவிக்கும் அன்பு உள்ளங்களுக்கும் ஒரு தீனி போட்டது மாதிரியும் ஆச்சு.
இங்கே ஒரு படத்தின் பின்னணி இசையைக் கொடுக்கிறேன். இந்தப் பின்னணி இசை வரும் படத்தை இயக்கியவர் எண்பதுகளின் முக்கியமான நட்சத்திர இயக்குனர். இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால் இதே படத்தின் பாகம் 1 ஐ இந்த நட்சத்திர இயக்குனரின் உதவி இயக்குனராக இருந்தவர் பாகம் 2 ஐத் தன் குருநாதர் இயக்குவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இயக்கிப் பெருவெற்றி பெற்ற படம். சிஷ்யனுக்குக் கிடைத்ததோ பெருவெற்றி, ஆனால் பாகம் இரண்டை இயக்கிய அவரின் குருநாதருக்குக் கிடைத்ததோ தோல்விப் படம். சீமைக்குப் போனாலும் சரக்கிருந்தாத் தானே எடுபடும்.

இரண்டு படங்களின் நாயகனும் ஒருவரே, இசையும் ஒரேயொரு ராஜா அந்த இளையராஜாவே. பின்னணி இசையைக் கேட்டுக்கொண்டே ஓடி வருக பதிலோடு

போட்டி இனிதே முடிந்தது, பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;)

சரியான பதில்
கல்யாணராமன் - இயக்கம் ஜி.என்.ரங்கராஜன்
ஜப்பானில் கல்யாணராமன் - இயக்கம் எஸ்.பி.முத்துராமன்

Tuesday, October 12, 2010

றேடியோஸ்புதிர் 58 : தேசிய விருது பெற்ற அந்தக் கலைஞருக்கு வயசு 80

ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டு(ம்) ஒரு றேடியோஸ்புதிரில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்தமுறை வரும் புதிர் சற்று வித்தியாசமாக திரைப்படத்திற்கு அத்திபூத்தாற்போல நுழைந்த ஒரு கலைஞர் எடுத்த எடுப்பிலேயே அவரின் இசையமைப்பில் வெளிவந்த படத்துக்குத் தேசியவிருதைப் பெற்றுக் கொடுத்த சங்கதியை வைத்துப் புதிர் போடுகின்றேன்.

குறித்த அந்த இசைக் கலைஞர் இந்த ஆண்டோடு 80 வயதை எட்டியிருக்கின்றார், நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் இவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் இசையமைத்த அந்தப் படம் குறித்த ஆண்டில் வெளியான படங்களில் சிறந்த இசைக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொண்ட தமிழ்ப்படம் அது. கூடவே இதே படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடன இயக்குனர் ஆகிய பிரிவுகளிலும் தேசிய விருதைத் தட்டிக்கொண்டது மேலதிக தகவல்.

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் அடலெயில்ட் நகரில் இடம்பெற்ற படவிழாவிலும் கலந்து கொண்டதோடு சிட்னியிலும் இரண்டு காட்சிகள் காண்பிக்கப்பட இருந்தது. இந்தப் படத்துக்கெல்லாம் கூட்டம் வருமா என்று நினைத்தேன். ஆனால் அரங்கம் நிறைந்த காட்சிகளாக அவை அமைந்திருந்தன. கூடவே படத்தின் கதையம்சமும் எடுத்த விதமும் கூட இயல்பானதொரு வரலாற்றுச் சித்திரமாக அமைந்தது.

சரி, கேள்வி இதுதான். எடுத்த எடுப்பிலேயே தான் முதலில் இசையமைத்த படத்தில் தேசிய விருதைப் பெற்றுக் கொண்ட அந்த இசைக்கலைஞர் யார்? குறித்த அந்தத் தமிழ்ப்படத்தின் பெயர் சொன்னால் போனஸ் புள்ளிகள் ;)

Saturday, July 10, 2010

றேடியோஸ்புதிர் 57 - தியேட்டர் பெயரையே படத்துக்கும் வச்சாச்சு

தெலுங்கில் அதிரடியாய் வந்த திரைப்படங்களில் இந்தப் படத்துக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. இந்தப் படத்தின் நாயகனுக்கும் சரி, வில்லனுக்கும் சரி பெரும் திருப்புமுனையாக அமைந்து விட்ட படம் இது. படம் கொடுத்த பெரு வெற்றி அப்படியே இயக்குனருக்கும் பெரும் அங்கீகாரம் கொடுத்து விட்டது. இவர்கள் எல்லோருக்கும் மேல் இந்தப் படத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி அடி பின்னிவிட்டார் இசைஞானி. இல்லாவிட்டால் 21 வருஷங்களுக்குப் பின்னர் பின்னணி இசையை ஞாபகம் வைத்து அதை நேயர் விருப்பமாக ஒரு சகோதரி கேட்கும் அளவுக்குப் பிரபலமாக இருக்கிறதே.

தமிழிலும் இந்தப் படம் மொழி தாவியது. ஆனால் ஏற்கனவே இந்தப் படத்தின் தெலுங்கு மூலப் பெயரில் ஒரு தமிழ்ப்படம் வந்திருந்தது. எனவே ஒரு தியேட்டரின் பெயரே படத்தின் பெயராக வைக்கப்பட்டது.
கல்லூரிக்குள் படிப்பு இருக்கலாம் வன்முறை இருக்கலாமோ? ஆனால் படம் வந்த நேரம் Botany class இற்குக் கட் அடித்து விட்டுத் தியேட்டர் பக்கம் போனவர்களும் உண்டாம் ;)
இதுவரை கேட்டது போதும், எங்கே சமர்த்தா அந்தப் படம் பெயர் சொல்லுங்கள் பார்க்கலாம் , தெலுங்கு, தமிழ் இரண்டில் ஏதாவது ஒரு தலைப்பு அல்லது இரண்டும் சொன்னால் போனஸ்.

துக்கடாவாக படத்தின் அதிரடி இசை ஒன்றைத் தருகின்றேன், இரண்டு நாட்களுக்குள் மேலும் சில அதிரடி இசைக்குளிகைகள் தொகுப்பாக வரும் ;)

கேட்ட கேள்விக்குச் சரியான பதில்:
தெலுங்கு: ஷிவா
தமிழ்: உதயம்
இயக்கம்: ராம்கோபால்வர்மா
வில்லன்கள்: ரகுவரன், சக்ரவர்த்தி

Thursday, May 27, 2010

றேடியோஸ்புதிர்: 55 இயக்குனர்சிகரம் எடுத்த மெட்டு; இயக்கியதோ இன்னொரு முத்து

அந்தப் பெரிய நடிகரின் தீராத ஆசை குறித்த பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று. அந்த ஆசையை நடிகரின் குருநாதரே தயாரித்து இன்னொரு இயக்குனரை இயக்க வைத்து குறித்த நடிகரின் இலட்சிய பாத்திரத்தில் நடிக்க வைத்து மனம் நிறைந்ததே மிச்சம் கல்லா நிறையவில்லை.

மீண்டும் கூட்டணி சேர்ந்தார்கள். இயக்குனர் சிகரம் தயாரிப்பு, அதே நடிகர் நடிப்பு, இயக்கம் கூட அதே முந்திய இயக்குனர் தான். இம்முறை முழுமையான மசாலா, நகைச்சுவை கலந்த படம். படம் எடுத்ததோ வடமாநிலத்தில். இந்த நிலையில் குறித்த இயக்குனர் நடிகர் பட்டாளத்தோடு வடமாநிலத்துக்குக் கிளம்பிவிட்டார். தயாரிப்பாளராக இருந்த சிகர இயக்குனர் , இந்தப் படத்தின் இயக்குனரின் ரசனை எப்படியிருக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்றாற்போலப் பாடல்களை மு.மேத்தாவை எழுத வைத்து இசைஞானி இளையராஜா மூலம் இசையமைத்து வந்த பாடல்களை உடனுக்குடன் வடமாநிலத்தில் இருக்கும் ஷூட்டிங் தளத்துக்கு அனுப்பி வைத்தாராம். பாடல்கள் அனைத்துமே முத்து, இன்றுவரை கேட்டாலும். குடும்பப்பாங்கான படங்களை இயக்கிய இயக்குனர் ஒரு மசாலா இயக்குனரின் ரசனையறிந்து பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்ததென்பது புதுமை. படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாள சிகரத்தின் நெஞ்சையும் கல்லாவையும் நிறைத்தது. அந்தப் பாடல்கள் வந்த படம் என்னவென்பது தான் கேள்வியே ;)

தந்தந்தான தந்தன்னன்னா தந்ததந்தான தன்னன்னா....

சரியான விடை இது தான்

அந்த தயாரிப்பாளர் - இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்
நடிகர்: ரஜினிகாந்த்
இலட்சிய வேடம் பூண்ட படம்:
ஸ்ரீ ராகவேந்திரர்
இயக்குனர்: எஸ்.பி.முத்துராமன்
வெற்றிகண்ட மசாலாப்படம்: வேலைக்காரன்

போட்டியில் கலந்து சிறப்பித்த நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

Monday, April 26, 2010

றேடியோஸ்புதிர் 54 - ஆண்கள் மட்டுமே பாட்டிசைத்த படம்

கற்பகம் என்று பழைய படம், அதில் பெண் குரல் மட்டுமே பின்னணி பாடல்கள் எல்லாவற்றிலும் இருக்கும். பின்னர் ஒருதலை ராகம் படத்தில் டி.ராஜேந்தர் ஆண் குரலை மட்டுமே பின்னணிப் பாடல்களில் பயன்படுத்தி இருப்பார். அப்படி வந்த இன்னொரு படம் தான் இது. இந்தப் படத்தின் இயக்குனர் அடிப்படையில் ஓவியர் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் ஸ்கெட்ச் ஆக வரைந்து விட்டுத் தான் எடுப்பாராம் என்று படம் வெளிவருவதற்கு முன்னான காலத்தில் ஜெமினி சினிமா, பொம்மை போன்ற ஊடகங்கள் அப்போது பரபரப்பு பப்ளிசிட்டியை கிளப்பியிருந்தன.

இதயத்தை திருடாதே படத்துக்குப் பிறகு இசைஞானி இளையராஜாவுக்குக் கிடைத்த இன்னொரு இளமையான அழகான கரு என்பதால் மனுஷர் பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து விட்டார். கூடவே கவிஞர் மு.மேத்தாவின் காதல் ரசம் கொட்டும் புதுக்கவிதையையும் அழகாகச் சேர்த்து நெய்த அற்புதக் களஞ்சியம் இப்படம்.

இளையராஜாவும் இந்த இயக்குனரும் இணைந்த முதல் படமே பெரு வெற்றி. ஆனால் இயக்குனர் தொடர்ந்து ராஜாவுக்கு கா விட்டு விட்டு ரஹ்மானுடன் ராசியாகி விட்டார்.

சரி ஏகப்பட்ட க்ளூ கொடுத்திருக்கிறேன், மனசை நோகடிக்காமல் கண்டுபிடிங்க தம்பி தங்கைங்களா ;)

சரியான படம் : இதயம்

இயக்குனர்: கதிர்

போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

Wednesday, March 31, 2010

றேடியோஸ்புதிர் 53 - நாயகி பேரெடுத்து அதை மெட்டாக்கி வந்ததொரு பாட்டு



















ஒரு படத்தின் கதைக்கருவை உள்வாங்கி பின்னர் இசையமைக்கும் போது உயிர்கொடுக்கும் மந்திரவித்தைக்காரன் எங்கள் இசைஞானி என்று சொல்லவா வேண்டும்.
அவரோ இயக்குனர்களில் எவரெஸ்ட், நாயகனோ புதுமையைத் தேடித் தீர்ப்போம் வா என்னும் ஜாதி. இந்தக் கூட்டணியில் வந்ததொரு படம். தெலுங்கில் அதே இயக்குனர் எடுத்துப் புகழ் மட்டும் கொடுத்தது கல்லாவை நிரப்பவில்லை. ஆனாலும் வீம்பாக தமிழில் இந்த நாயகனை வைத்து தன்னம்பிக்கையோடு எடுத்தார்.

படத்தின் நாயகியோ லலிதா ராகத்தில் அமைந்த பெயர். ஆனால் நாயகனைச் சீண்ட எ.கே.மலம் என்று தன்னை அடையாளப்படுத்துவாள். பொய் அவிழ்ந்து உண்மை தெரியும் அந்த நேரம் நாயகி லலிதாவுக்கும் நாயகன் சத்தியமூர்த்திக்கும் காதல் வரும் காட்சி. காதல் உணர்வுகளுக்கு மெட்டமைக்க யாருமே சீண்டாத லலிதா ராகத்தை எடுத்தார் இசைஞானி போட்டார் ஒரு மெட்டு. எல்லோர் இதழும் உச்சரித்தது அந்த லலிதா ராக மெட்டை. இதோ அந்த இசைக்கலவையை வித்துவான் கணேஷ் இசைக்கும் வீடியோ துண்டத்தை ஒலிப்பதிவாக்கித் தந்திருக்கின்றேன். கண்டுபிடியுங்களேன் அந்த லலிதா ராகத்தில் வந்த பாட்டை.

சரியான பதில்:

இதழில் கதை எழுதும் நேரமிது
படம் : உன்னால் முடியும் தம்பி
இயக்கம்: கே.பாலசந்தர்
நடிப்பு: கமல்ஹாசன், சீதா, ஜெமினி கணேசன்

Friday, March 26, 2010

றேடியோஸ்புதிர் 52 - அறுபது நாளின் பின் ஒட்டி ஓடிய பாட்டு?

"ஊமை விழிகள்", திரைப்படக் கல்லூரி மாணவர்கள் புது சகாப்தம் படைத்த படமிது, இந்தப் படத்துக்கு முன்னும் பின்னும் இவ்வளவு பிரமாண்டமான வெற்றியை அந்தக் கல்லூரி சந்தித்திருக்காது. ஆபாவாணனின் தயாரிப்பில் சக திரைப்படக்கல்லூரி மாணவர் அரவிந்தராஜ் இயக்கிய படமது.

விஜய்காந்த், கார்த்திக், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடித்து பெருவெற்றி கண்ட அந்தப்படத்தின் இசை மனோஜ் கியான் இரட்டையர்கள். முன்னணிப்பாடகர்களை ஒதுக்கி விட்டு சுரேந்தர், கிருஷ்ணசந்தர், ஆபாவாணன், சசிரேகா இவர்களோடு நீண்ட இடைவெளிக்குப் பின் பி.பி.சிறீனிவாசையும் பாட வைத்தார்கள்.

இந்தப் படத்தில் மூன்று பாடல்களை சுரேந்தர் பாடியிருக்கிறார், ஆனால் அந்த மூன்று பாடல்களில் ஒன்றை படத்தை திரையிடும் போது இணைக்காமல், அறுபது நாள் கழித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தோடு இணைத்து திரையிட்டார்களாம். கூடவே "அறுபது நாள் கழித்து உங்கள் மனம் கவர்ந்த பாடல் இணைக்கப்பட்டிருக்கிறது" என்ற விளம்பரத்தையும் செய்தார்களாம். ஊமை விழிகள் பட வீடியோ காசெட்டுகளில் இந்தப் பாட்டு இல்லாத படப்பிரதி கூட இப்போதும் உண்டு.

கேள்வி இது தான், அந்த அறுபது நாள் கழித்து ஒட்டி ஓடிய பாட்டு எது? அந்தப் படத்தில் சுரேந்தர் பாடிய மூன்று பாடல்களையும் தருகின்றேன். எதுவென்று கண்டுபிடியுங்களேன்.
போட்டி விதிமுறை ஒருவர் ஒரு பாடலை மட்டுமே தெரிவு செய்யலாம்.

1. குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப் பேச்சு

2. மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா

3. கண்மணி நில்லு காரணம் சொல்லு



சரியான பதில்:

கண்மணி நில்லு காரணம் சொல்லு, போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

Wednesday, March 3, 2010

றேடியோஸ்புதிர் 51 : பதிவிரதன் படி தாண்டினால்


வணக்கம் மக்கள்ஸ், மீண்டும் ஒரு றேடியோஸ்புதிரை ஒரு பாடலின் இடையிசையோடு கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் படம் என்னவென்று கண்டு பிடியுங்களேன்.

இந்தப் படத்தை இயக்கியவர் ஏற்கனவே தங்கையை வச்சு முடிச்சுப் போட்டவர், பின்னர் அக்காவையும் தமிழுக்கு நல்லதொரு அறிமுகமாக "கட்டிய" படம் இது. தங்கையை இரண்டாம் தாரமாக முந்திய படத்தில் இயக்கியிருந்தார். ஆனால் அக்காவை தாரமாக்கி அலைய விட்டார் இரண்டாவது படத்தில். ராஜாவோடு சேர்ந்த ராசி இந்தப்படமும் வெற்றி. கூடவே இந்தப் படம் வந்த பின்னர் குறித்த சொல்லுக்கே தனி மவுசு தான் ;)

சரி,இவ்வளவு க்ளூவும் போதும், நீங்கள் கூகூளாண்டவரை கும்புடுறீங்களோ, யாகூ அம்மனை வேண்டுறீங்களோ தெரியாது பதிலோடு வந்து வூடு கட்டி அடியுங்கள் ;).



சரியான பதில்:
படம்: சின்ன வீடு
நடிகர்கள்: பாக்யராஜ், கல்பனா (ஊர்வசியின் சகோதரி)

போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி ;)

Tuesday, February 16, 2010

உங்கள் ஆதரவுடன் 50 வது றேடியோஸ்புதிர் ;)

நேற்று ஆரம்பித்த ஓட்டம் போல இருக்கிறது, மடமடவென்று 50 ஆவது புதிரை எட்டிப் பிடித்து விட்டது றேடியோஸ்புதிர் தொடர்.

பொதுவாகவே இந்தப் புதிரில் வரும் கேள்விகள் சுலபமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், கடந்த 49 புதிர்களைப் பார்த்தீர்களாயின், ஒருவருக்குச் சுலபமாக இருக்கும் பதில் இன்னொருவருக்கு கடும் கஷ்டமானதாக அமைந்து விடும். இருந்தாலும் இந்தப் புதிரில் சுவாரஸ்யமாகக் கலந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கோடு வருகை தரும் உங்களுக்கு மீண்டும் இனிய நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு இந்த 50 வது புதிரில் ஒரு கலக்கலான திரைப்படத்தின் பின்னணி இசையோடு சந்திக்கிறேன். வழக்கம் போல் புதிர் முடிவில் அந்தப் படத்தின் முழுமையான பின்னணி இசையும் வரும்.

ஒரு காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய நடிகையின் மகள் நடித்த முதல் படம் இது, கூட நடித்த நாயகருக்கு அன்று தொட்டதெல்லாம் வசூல்படங்களாக அமைந்து விட்டது. எல்லாம் ராஜ யோகம். அண்ணன் மெட்டுக் கட்ட, தம்பி கட் சொன்ன படங்கள் பெரும்பாலும் ஹிட்டு தானே ;)

"என்ன கேட்டானா? காரை நமம வச்சிருக்கிறோம் இந்தக் காரை வச்சிருந்த சொப்பனசுந்தரியை இப்ப யாரு வச்சிருக்கிறாங்கன்னு கேட்கிறான், ஒரு வித்துவானைப் பார்த்துக் கேட்கிற கேள்வியாய்யா இது?"



போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு
பதிலைப் பார்ப்போம்.

படம்: கரகாட்டக்காரன்
நடிகர்கள்: ராமராஜன், கனகா (நடிகை தேவிகா மகள்)
இசை: இசைஞானி இளையராஜா
இயக்கம்: கங்கை அமரன்

Monday, December 21, 2009

றேடியோஸ்புதிர் 49 - யாரந்த சகலகலாவல்லி

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி ஒரு விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் இயக்குனர் பற்றிய புதிர் தான் இது. இவரும் கூட நடிகை சுஹாசினி போல ஒளிப்பதிவைப் பயின்றவர். ஆனால் ஒளிப்பதிவாளராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

இவரின் தந்தை கூட சிவாஜி காலத்தில் பிரபல தயாரிப்பாளர் சக இயக்குனராக இருந்திருக்கிறார்.
இந்தப் பெண்மணி அடுத்துக் கைவைத்தது கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் என்று எல்லாவற்றையும் ஒரே திரைப்படத்தில் செய்து ஒரு படத்தினை இயக்கியிருந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து இன்னொரு படம் கூடப் பண்ணியிருந்தார். முதலில் இயக்கிய படத்தில் ஒரு பாடகரை நாயகனாக்கியதோடு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பெயரில் உள்ள இன்னொரு நாயகனையும் நடிக்க வைத்தார். இரண்டு படங்களுக்குமே இசை இளையராஜா.
சரி, யார் இந்த சகலகலாவல்லி இயக்குனர் என்று கண்டு பிடியுங்களேன்.
பி.கு. இவர் இப்போது ஒளிப்பதிவில் இல்லாமல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தின் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கிறார்.

புதிருக்கான சரியான பதில் இதோ:
அந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர்: பி.ஆர்.விஜயலஷ்மி
இயக்கிய படம்: பாட்டு பாடவா
ஒளிப்பதிவு செய்த படங்கள்: சின்ன வீடு, அறுவடை நாள், தாலாட்டு
அவரின் தந்தை: பி.ஆர்.பந்துலு
போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

Thursday, November 19, 2009

றேடியோஸ்புதிர் 48 - யாரவர்....யாரவர்?

கடந்த ரேடியோஸ்புதிர் கொஞ்சம் கஷ்டம் என்பதால் நண்பர்கள் பலர் சிக் லீவ் எடுத்திருந்ததாகச் சொல்லியிருந்தார்கள். எனவே இந்த முறை கொஞ்சம் இலகுவான புதிரோடு களம் இறங்குகின்றேன்.

ஒரு ஹிந்திப் பிரபலம் தான் சேமித்த காசையெல்லாம் கரைக்கவேண்டும் என்ற விதிப்பயன் காரணமாக சினிமாப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஹிந்தி, தமிழ் என்று படங்களைத் தயாரித்து சேமித்த காசையெல்லாம் கரைத்தார். அப்படியாக அவர் தயாரித்த ஒரு தமிழ்ப்படத்திற்கு இயக்கம் பிரபல விளம்பர இரட்டை இயக்குனர்கள். ராசியில்லாத அந்த திறமைசாலி இளைஞன் தான் இசை. அன்றும் இன்றும் முன்னணியில் இருக்கும் நாயகனோடு அன்றைய ராசியில்லாத நாயகனும் நடித்திருந்தார். அந்த ராசியில்லா நாயகன் படத்திலே ஆமையை நண்பனாக "இமையவர்மன்" என்று பெயர் சூட்டி தன் காதலை எல்லாம் சொல்வாரே.

புதிரில் சொன்ன விஷயங்களை வைத்து படத்தையோ அல்லது அந்த இசையமைப்பாளரையோ ஊகிக்க முடிகிறதா? இல்லாவிட்டால் இந்த ஒலித்துண்டத்தையாவது கேட்டுப் பாருங்களேன் கண்டுபிடித்தால் உற்சாகம் தான் ;)

Get this widget | Track details | eSnips Social DNA


கேட்ட கேள்விக்கான சரியான பதில்

படம்: உல்லாசம்

நடிகர்கள்: அஜித், விக்ரம்

தயாரிப்பு: அமிதாப் பச்சனின் ஏ.பி.சி.எல் கார்ப்பரேஷன்

இசை: கார்த்திக் ராஜா

இயக்கம்: ஜேடி - ஜெரி

பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

Tuesday, November 3, 2009

றேடியோஸ்புதிர் 47 - "ராஜாதி ராஜா" படத்தில் வராத பாட்டு

"ராஜாதி ராஜா" படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் திரைப்படங்களில் காலம் கடந்து ரசிக்க வைக்கும் படம். பாவலர் கிரியேஷன்ஸ் படம் என்றால் சொல்ல வேண்டுமா பாடல்களும் கூடுதல் கலக்கலாக இருக்கும். ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் ரஜினி, ராதா, நதியா போன்றோர் நடித்த இந்தப் படத்தில் இருந்து ஒரு புதிர்.

படத்தின் நீளம் கருதி இப்படி பாடல்கள் பல படங்களிலே துண்டாடப்பட்டிருப்பது வழக்கம். இந்தப் படத்திற்காக இசையமைத்து ஒலிநாடாக்களிலும், இசைத்தட்டிலும் வெளிவந்த பாடல்களில் ஒரு பாடல் ராஜாதி ராஜா படத்தினைப் பார்க்கும் போது காணாமல் போயிருக்கும்.கேள்வி இதுதான் இந்த ராஜாதி ராஜா திரைப்படத்திற்காக இசையமைத்து ஒலிநாடாக்களிலும், ஏன் வானொலிகளிலும் ஒலிபரப்பப்படும் பாடல் ஒன்று படத்தில் வரவில்லை. அந்தப் பாடல் எது என்பதே கேள்வியாகும். பின்னர் இந்தப் பாடலை அன்றைய காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த "டவுசர் பாண்டி" ராமராஜன் பின்னர் தான் நடிக்க இருந்த "பெத்தவமனசு" என்ற திரைப்படத்தில் பயன்படுத்த இருந்தார். கொடுமை என்னவென்றால் பின்னர் 'பெத்தவமனசு' படமே வராமல் போய் விட்டது. அந்த ராசியான பாட்டைக் கண்டுபிடியுங்களேன்.

போட்டி முடிவடைந்தது, பதில் இதுதான்.

இந்தப் படத்தில் வராத பாடல் "உன் நெஞ்சத் தொட்டுச் சொல் ராசா என் மேல் ஆசை இல்லையா" பாடியவர்கள் பி.சுசீலா மற்றும் சித்ரா

போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்

அந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்