Pages

Sunday, November 20, 2011

ஶ்ரீ ராம "ராஜா" ராஜ்ஜியம்

மனதுக்கு நிறைவானதொரு படைப்பைப் பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி யாரிடமாவது சொல்லிச் சொல்லிச் சிலாகிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வருமே அதே நிலையில் தான் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஶ்ரீ ராம ராஜ்யம், தெலுங்கில் வரப்போகும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளிவந்த நாளே கேட்டுக் களித்துக் கொண்டிருக்க வைத்து விட்டது. அதை ஆந்திராவின் இசையுலகமும் நிரூபிப்பது போல இப்படத்தின் பாடல் இசைத்தட்டுக்கள் விற்பனையில் சாதனையைப் படைத்து விட்டது.
சில மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் இப்படம் வெளியாகியிருக்கின்றது. ஏற்கனவே இந்தப் படம் வந்தால் தியேட்டர் சென்று பார்க்கவேண்டும் என்ற முனைப்பில் இருந்த எனக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் அமைந்து விட்டது. ஶ்ரீ ராம ராஜ்யம் படம் பார்க்கவேண்டும் என்பதற்கு முழுமுதற்காரணியாக அமைந்தது இசைஞானி இளையராஜா ஏற்கனவே தந்து விட்ட பாடல்களும், படத்தில் தரப்போகும் பின்னணி இசை தான். ஏற்கனவே "சீனி கம்" (ஹிந்தி), "ரசதந்திரம்", "பாக்யதேவதா" (மலையாளம்) வந்தபோதும் இன்னொரு மொழிப்படத்துக்காகத் தியேட்டரை எட்டிப்பார்க்க வைத்தார் ராஜா. இப்போது முதன்முறையாக ஒரு தெலுங்குப் படத்துக்குப் போகும் பெருமையை இந்தப் படம் பெற்றுக்கொண்டது.

இராமாயணத்தின் முக்கியமான பகுதியாக இராவணன் சங்காரம், சீதை சிறைமீட்பு என்பதோடு படங்கள் வந்துவிட்டன. அதன் நீட்சியாக சம்பூர்ண ராமாயணம், லவ குச போன்ற படங்கள் இராமர் சீதை, இலக்குமணர் சகிதம் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் பூண்டு ஆட்சி செய்யும் போது சீதை மீதான அவதூறால் சீதையைக் காட்டில் விட, காட்டிலே வால்மீகி முனிவரின் பராமரிப்பில் சீதை லவ குச என்ற பிள்ளைகளை ஈன்றெடுத்து வளர்த்து வரும்போது மீண்டும் தந்தை இராமனை லவ குச சந்திப்பதும், சீதை எடுக்கும் முடிவும் என்று செல்லும். இந்த ஶ்ரீராம ராஜ்யம் படம் இராவண சங்காரத்துக்குப் பின்னான கதையை மட்டுமே எடுத்தாண்டிருக்கின்றது.

இசைஞானி இளையராஜாவை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்யும் போதே, இது உங்கள் படம் என்று அதீத உரிமை கொடுத்திருப்பார்கள் போல. படத்தில் மொத்தம் 16 பாடல்களை ஏற்கனவே கொடுத்து முன்னோட்டம் காட்டியவர், இரண்டரை மணி நேரப்படத்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் தன்னைக் காட்டி நிற்கின்றார். படத்தின் எழுத்தோட்டத்தில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜ்ஜியம், ஆரம்பக் காட்சியில் இராமர், சீதா, லக்குவணன் சமேதம் அயோத்யா வரும் காட்சி "ஜெகதானந்த" என்ற பாடலோடு இனிமையான பாரம்பரிய நடன அமைப்போடு நெஞ்சை நிறைக்கின்றது. படத்தின் முதல் 20 நிமிடங்களுக்குப் பாடல்கள் தான் அணி சேர்க்கின்றன. என் நினைவுக்கு எட்டியவரை இப்படித் தொடர்ந்து காட்சிகளுக்கு நெருக்கமாகப் பாடல்களைக் கொடுத்த சினிமா எழுபதுக்குப் பிந்திய காலத்தில் இருந்ததாக நினைவில் இல்லை.

அதுவரை பாரம்பரிய இசையோடு அமைக்கப்பட்ட காட்சிகளில் இருந்து விலகி, இராமர் பட்டாபிஷேகம் செய்யும் போது ஒரு சிம்பொனியை எடுத்து விடுகிறார் ராஜா. மேற்கத்தேய இசை நயம் உறுத்தவில்லை தொடர்ந்து தையோடு இராமர் காதல் கொள்ளும் போது ஒரு மெல்லிசை, சீதை மேல் ஐயம் கொண்டு இராமர் குழம்பித் தவிக்கும் போது கலவையாகக் கொட்டித் தீர்க்கும் வாத்திய முழக்கங்கள், சீதையின் தனிமை என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொன்றுக்குமே தனித்தனி ஆலாபனைகள். இப்படியொரு பிரமாண்டமான வரலாற்றுக்கதைக்களனுக்கு இசைஞானியின் தேவை இன்றி மற்றெல்லாம் வெறும் ஒலிச்சத்தங்களாகவே இருக்கும்.

படத்தில் திடீர் திடீரென்று முளைக்கும் பாடல்கள் கதையோட்டத்தோடு பயணிப்பதால் உண்மையில் ஒரு சுகானுபவம் கிடைக்கின்றது. எத்தனை நாளாகிற்று கம்பியூட்டரை நோண்டிப் போட்ட இ(ம்)சைகளை விடுத்து இப்படியான வாத்தியங்களின் உணர்வுபூர்வமான உழைப்பைக் கேட்டு. தியேட்டர் சென்று பார்ப்பவர்களுக்கு வாத்தியங்களின் சல்லாபத்தை இன்னும் நெருக்கமாக அனுபவிக்கக்கிட்டும்.

இசைஞானி இளையராஜா எங்கும் போகவில்லை, இப்படியான நல்ல படைப்புக்கள் வரும்போது தன்னை அவர் வெளிப்படுத்துவார் என்பது போன்று அமைந்திருக்கின்றது ராஜாவின் அதீத உழைப்பு.

இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு இன்னொருவகையில் பெரிதும் கை கொடுத்திருப்பது திறமையான கிராபிக்ஸ் காட்சிகள். வனவாசத்தில் மான்கள் கூட மாந்தரோடு நடைபயில்வதும், அடவியில் சலசக்கும் பறவைகளும், பூஞ்சோலைகளும் என்று எல்லாமே உயிரோட்டமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பூமாதேவி சீதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி உச்சம்.
இந்தமாதிரியான படத்துக்குத் தேவை தானே என்று எண்ண வைக்கும் பிரமாண்டமான செட், ஆனால் எதிர்பார்ப்பை மீறி ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கலைரசனை கொண்டு அமைக்கப்பட்டிருப்பது வெகு சிறப்பு. குறிப்பாக அந்த அரண்மனையின் பிரமாண்டம், சின்னச் சின்னக் கற்களில் கூட ஏதோ ஒன்றைப் பொறித்து அழகு நயம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதிகாச காலத்துக்குக் கொண்டு செல்லும் வண்ணமயமான ஒளிப்பதிவாளர் P.R.K.ராஜீவின் பங்கும் நிறைவாக இருக்கின்றது.

ஶ்ரீ ராம ராஜ்யம் படம் ஆரம்பிக்கின்றது. படத்தின் எழுத்தோட்டத்தின் பின்னணியில் தபேலாவும், வீணையும் சேர்ந்து முழங்க, இராமாயணத்தின் ஆரம்பக் காட்சிகள சித்திரமாகப் போட்டுக் கொண்டே பயணிப்பது புதுமை. ஆரம்பமே இசைஞானி இளையராஜாவின் முழு ஈடுபாட்டைக் காட்டி நிற்க, எந்தவிதமான கதாநாயகத்தனமும் இல்லாத அறிமுகமாக புஷ்பக விமானத்தில் அயோத்தி நோக்கிப் பயணிக்கும் இராமர் (பாலகிருஷ்ணா), சீதை (நயன்தாரா), இலக்குவணன் (ஶ்ரீகாந்த்).

பாலகிருஷ்ணா இராமர் வேஷம் கட்டுகிறார் என்ற போது கொஞ்சம் யோசனையாகத் தான் இருந்தது. அவரின் தந்தை என்.டி.ராமராவ் கிருஷ்ணராகவே வாழ்ந்தவர், தனையனோ ஒற்றை விரலால் ரயிலை நிறுத்தி மசாலாச் சகாசங்கள் நிகழ்த்திய வகையில் தான் அதிகம் அறியப்பட்டவர். ஆனால் சொன்னால் நம்பமாட்டீர்கள். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பாலகிருஷ்ணாவை விட இன்னொரு நடிகர் இவ்வளவு பாந்தமாக நடித்திருக்க முடியுமா என்று எண்ண வைத்துவிட்டார். சீதையோடு காதல் காட்சிகளிலும், தனிமையில் உருகும் காட்சிகளிலும் எல்லாம் மிகைப்படுத்திவிட்டார் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பை மனுஷர் தந்துவிட்டார்.


சீதையாக வந்த நயன்தாராவுக்கு ஒரு சில காட்சிகள் தவிர மற்றைய எல்லாக் காட்சிகளுமே இராமனை நினைத்து உருகி அழும் தோரணையில் இருப்பவை. நயன்தாராவை விட்டால் இந்தப் பாத்திரத்துக்கு யார் பொருத்தம் என்பதை விட இப்போது வேறு யார் இருக்கிறார்கள்? என்ற கேள்விக்குறியோடு முடித்துக் கொள்ளலாம். இனிமேல் வால்மீகியை நினைக்கும் போதெல்லாம் நினைவுக்கு வருமாற்போல வால்மீகியாக வரும் அக்கினேனி நாகேஸ்வரராவ் இன் நடிப்பு. சிறுபையனாக உருமாறி வால்மீகி வனத்தில் உலாவரும் கலகலப்பான அந்தச் சுட்டிப்பையனும் கவர்கின்றான்.


என்னதான் தெரிந்ததொரு இதிகாசக்கதை என்றாலும், இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது இயக்குனர் எவ்வளவு தூரம் தெரிந்த கதைக்கு வித்தியாசமான திரைக்கதையைக் கொடுத்து இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருக்கின்றார் என்பது இந்தப் படத்தைப் பார்த்து அனுபவித்தவர்களுக்குப் புரியும். இராமருக்கு சீதை மேல் ஏற்பட்ட மனக்குழப்பம், அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகள் எல்லாமே உணர்வு ரீதியான கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, இராமன் இன்னொரு பெண்ணைக் கரம்பிடிப்பானோ என்று மனம் சஞ்சலமடைந்து உணர்விழந்து சீதை நிற்கும் சமயம், வான்மீகி முனிவர் சீதையின் ஆவியை மட்டும் அயோத்திக்கு அனுப்பி அங்கே இராமன் தன் மஞ்சத்தில் சீதையைச் சிலைவடிவாக்கி நிதமும் உருகிநிற்பதுவும், சீதை அதைக் கண்டு மருகுவதுமான அந்தக் காட்சி ஒரு காவியம். இப்படி ஏகப்பட்ட காட்சி அமைப்புக்களில் தெரிவது இயக்குனர் மற்றும் திரைக்கதாசிரியர் பாபு. இந்தப் படத்தைத் தமிழிலும் மொழியாக்கிக் கொடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் இப்போது மேலிடுகின்றது.

ஶ்ரீ ராம ராஜ்யம், சினிமாவுக்கு நீண்டகாலத்துக்குப் பிறகு ஒரு புதுவெள்ளம் பாய்ச்சுகின்றது இசைஞானி இளையராஜாவின் துணையோடு.

Tuesday, November 8, 2011

தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்...

வழக்கம் போல வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக ரயில் பிடிக்கப் பாய்கின்றேன். இடைப்பட்ட நேரத்தில் மினி சூறாவளி சிட்னியைத் தாக்கியதன் விளைவு ரயில்கள் தாமதித்துத் தம் ஓட்டத்தைக் கவனிக்க, எனக்கோ இருக்கவே இருக்கிறது என்று ஐபாட் இற்குள் ஐக்கியமாகின்றேன். வழக்கமான இந்த நேரம் ஹலோ எஃப் எம் இன் RJ கே.கே தன் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்பி அத்துணை நேரம் கனத்திருந்த வேலைக்களைப்பை மறக்கடிக்க வைப்பார். இன்று எடுத்த எடுப்பில் "தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்" பாடல் காதுக்குள் விழுந்த முதல் தேனாறாகப் பாய, இந்தப் பாடலை ரசித்தவாறே பயணிக்கிறேன்.

வழக்கமாக ஒரு படத்தின் ஒன்றிரண்டு பாடல்கள் கேட்ட மாத்திரத்திலேயே மனதில் ஒட்டிக்கொள்ளும் பின்னர் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். ஒருகட்டத்தில் அந்தப் பாடல்கள் கேட்டுத் தித்தித்த கணத்தில் அதே படத்தில் அதுவரை கவனிக்கப்படாத இன்னொரு பாடலைக் கேட்டுப் பார்க்கலாமே என்று தோன்றும். அதுவரை சீண்டாதிருந்த பாடலின் வசீகரம் அடடா இதுநாள் வரை இதை விட்டுவைத்து விட்டேனே என்று எண்ணத் தோன்றும் அப்படி ஒரு வகையறா தான் இந்த "தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்".

அப்போது "கேளடி கண்மணி" படம் வரப்போகின்றது என்பதைக் கட்டியம் கூறும் விவித்பாரதி விளம்பரங்களில் மூச்சுவிடாமல் பாடிய எஸ்பிபியின் "மண்ணில் இந்தக் காதல் இன்றி"யும் அவ்வப்போது "நீ பாதி நான் பாதி" "கற்பூர பொம்மை ஒன்று" பாடல்களின் ஒரு சில வரிகளும் இடம்பெறும் ஆனால் "தென்றல் தான் திங்கள் தான்" பாட்டுக்கு எடுத்த மாத்திரத்தில் அறிவிப்பாளரும் அங்கீகாரம் கொடுக்கவில்லைப் போலும். நாளாக நாளாக "கேளடி கண்மணி" படத்தில் அதுவரை முன்னிலையில் இருந்த பாடல்களுக்கு நிகராக "தென்றல் தான் திங்கள் தான்" பாடலை உயர்த்திய பெருமை ஞாயிற்றுக்கிழமை நாலுமணி நேயர் விருப்பம் கேட்கும் சென்னைவானொலி நேயர்களைத் தான் சென்று சேரும். அப்படி உயர்ந்தது தான் இந்தப் பாடல், ரசிகமனங்களில்.


2006 ஆம் ஆண்டு, உலகின் கலையழகும் மிக்க கட்டிடங்களில் ஒன்றாகவும் அவுஸ்திரேலியாவின் அடையாளமாகவும் திகழும் ஒபரா ஹவுசில் முதன் முதலில் ஒரு தமிழ் இசை நிகழ்ச்சி. அதுவும் தமிழ்திரை இசை மட்டுமன்றி மலையாள தேசத்தின் நவீன இசைக்கடவுளாக ரசிகர்களால் உயர்த்தி நோக்கும் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் இசை நிகழ்வு. அரங்கம் கொள்ளாத கூட்டம். அங்கே எல்லோருக்கும் பரவலாகப் பிடித்த புகழ்பெற்ற பாடல்களைப் பாடிக் கைதட்டல் வாங்கிவிடலாம் என்ற சபலம் எந்தவொரு இசைக்கலைஞனுக்கும் வந்தால் வியப்பில்லை. ஆனால் அங்கே கே.ஜே.ஜேசுதாஸ் அனுபவித்துப் பாடியது "தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்"


"தென்றல் தான் திங்கள் தான்" பாடலை ஓடவிடும் போதெல்லாம் பாடலோடு இழைத்திருக்கும் இசையும் வயலினும், புல்லாங்குழலும் கதை பேசிக்கொள்ளும் சங்கதிகளையும் கடந்து இன்னொரு திசைக்கு மெட்டு மாறும் கட்டம்
"காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்" என்று நாயகன் பாட
"தீராத காதல் தேனிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம்" என்று அவள் ஒத்திசைக்க
இன்னொரு திசைக்குப் பயணிக்கும். எந்தவித உபத்திரமும் கொடுக்காமல் பாட்டு வளைந்து நெளிந்து ஓடக் கேட்கின்ற மனசும் அதற்கேற்பத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும். பாட்டுக்குப் பின்னணியில் ஒரே தாள லயத்தோடு ட்ரம்ஸ் இசை.
இதுவே இன்னொரு இசையமைப்பாளர் கையில் வாய்த்தால் அடுக்களையில் பாத்திரங்களை உருட்டிப் போடும் எலியின் செய்கை ஆகிவிடும்.
கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா குரல்கள் எவ்வளவு கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன இந்தப் பாட்டுக்கு. அதுமட்டுமா, ராஜா கொடுத்த மெட்டுக்கு இட்டுக் கட்டிய பிறைசூடனும் காதல் சந்தம் பண்ணியிருக்கிறார்.
நான் இன்று இந்தப் பாடலைக் கேட்டு அனுபவித்த அளவுக்கு நீங்களும் கேட்கவேண்டும் என்ற ஆசையில் இதோ, எத்தனை முறை இன்று இந்தப் பாடலை நான் கேட்கப்போகின்றேன் என்று கணக்கில் வைக்கின்றேன் நீங்களும் உங்கள் பங்கிற்கு =>Sunday, November 6, 2011

இசையமைப்பாளர் பூபேன் ஹஸாரிகா நினைவில்பழம்பெரும் பாடகரும் இசையமைப்பாளருமான பூபேன் ஹஸாரிகா மும்பையில் நவம்பர் 5, 2011 சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 85.

சமீபகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது.

இசையமைப்பாளர் பூபேன் ஹஸாரிகா இசையமைத்த Dil hoom hoom பாடலை இன்று மட்டும் கணக்கில்லாமல் கேட்டிருப்பேன். என்னவொரு ரம்யமான பாடலது. மெல்லிசையை மென்மையான உணர்வுகள் சேர்த்துக் குழைத்த பாடல். பூபேன் ஹஸாரிகா குறித்த ஒரு அஞ்சலிப்பகிர்வை றேடியோஸ்பதியில் இடவேண்டும் என்று அவர் இசையமைத்த Dil hoom hoom என்ற Rudaali 1(1993) திரைப்படப்பாடலை நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் (கே.ஆர்.எஸ்) இடம் பகிர்ந்த போது அப்பாடலின் தமிழ் வடிவத்தை அழகாக எழுதித் தந்தார். இதோ அந்த மூலப்பாடலும் கண்ணபிரான் ரவிசங்கர் எழுதித்தந்த பாடலின் தமிழ் வடிவமும்.


பூபேன் ஹஸாரிகா குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல்அதே பாடலை லதா மங்கேஷ்கர் பாடுகின்றார்Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!

Ghan dham dham kare, darr jaaye
வானம் இடிஇடி என இடி..க்குதே, பயத்தாலே!

Ek boond kabhi paani ki, mori ankhiyon se barsaaye
இரு விழிகளில் நீர் ஆறு
ஒரு சுருளாய்ப் பாய்..கிறேதே

Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!
---------------

Teri jhori daaroon, sab sukhe paat jo aaye
உன் நினைவு என்னைத் தீண்டி, பழுப்பிலைகள் உதிர்க்கின்றேனே!

Tera chhua laage, meri sukhi daar hariyaaye
உன் கைகள் என்னைத் தீண்ட, பசுமரம் போல் துளிர்க்கின்றேனே!

Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!
--------------

Jis tan ko chhua tune, us tan ko chhupaaoon
நீ தொட்டுப் பருகிய மேனி, அதை மூடியே வைத்தேன் அன்று!

Jis man ko laage naina, voh kisko dikhaaoon
நீ நெருங்கி நோக்கிய இதயம், அதை யாரிடம் காட்டுவேன் இன்று?

O more chandrama, teri chaandni ang jalaaye
ஓ நிலவே...நளிர் நிலவே...நீ எரித்து விடாதே என்னை

Teri oonchi ataari maine pankh liye katwaaye
மலை மேலே சென்று விட்டாயே, என் சிறகுகள் அறுத்து விட்டேனே!

Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!பூபேன் ஹசாரிகா குறித்து தினமணி நாளிதழிலும், விக்கிபீடியாவிலும் கிடைத்த தகவல்கள்.


அசாமின் சாடியா என்னுமிடத்தில் பூபேன் பிறந்தார். பத்தாவது அகவையிலேயே தனது முதல் பாடலை முதலாவது அசாமிய மொழித் திரைப்படமான ஜோய்மோதி என்ற திரைப்படத்தில் எழுதிப் பாடினார். 1939ஆம் ஆண்டு இரண்டாவது அசாமியத் திரைப்படமான இந்திரமாலதி என்ற படத்திலும் தனது 12 அகவையில் பங்கு பெற்றார்.

1942ஆம் ஆண்டு குவஹாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் இடைநிலை கலை பட்டப்படிப்பிற்கு பின்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் 1944ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். 1946ஆம் ஆண்டு அரசறிவியல் முதுகலைப்பட்டமும் பெற்றார். 1954ஆம் ஆண்டில் நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழக்கத்தில் இந்திய முதியோர் கல்வியில் ஒலிஒளி ஊடக செய்முறைகளுக்கான தயார்படுத்தலுக்கான திட்டமொன்றை ஆய்வுக்கட்டுரையாக வடித்து முனைவர் பட்டம் பெற்றார். அசாம் சாகித்திய சபாவின் தலைவராக 1993ஆம் ஆண்டு பொறுப்பாற்றி உள்ளார்.

ஹஸாரிகா "பிரம்மபுத்திராவின் பறவை' என்று அழைக்கப்பட்டார். பாரம்பரிய அசாமி இசை மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். பாடகர், இசையமைப்பாளர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு வகையில் புகழ்பெற்றார்.

பின்னர் ஹிந்தி, பெங்காலி திரைப்படங்களிலும் பாடல்களைப் பாடி புகழ் பெற்றார். 1976-ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார். 1977-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். அசாம் சட்டப் பேரவை உறுப்பினராகி மக்கள் பணியாற்றினார்.

அவருக்குக் கிடைத்த விருதுகள்

சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருது (1975)
பத்ம பூசன் (2001)
தாதாசாகெப் பால்கே விருது (1992)
அசாம் ரத்னா (2009)
சங்கீத நாடக அகாதமி விருது (2009)
1993ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த ஆசியா பசிபிக் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இந்தித் திரைப்படம் ருடாலியின் இசையமைப்பிற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது.
சிறந்த நிகழ்கலை நாட்டுக் கலைஞராக அனைத்திந்திய விமர்சகர் சங்க விருது (1979)

பெப்ரவரி 2009இல், அனைத்து அசாம் மாணவர் சங்கம் பூபேன் அசாரிகாவினை கௌரவிக்கும் வண்ணம் குவஹாத்தியில் அவரது சிலை ஒன்றை நிறுவியுள்ளது.

Tuesday, November 1, 2011

திருமதி ஜீவா இளையராஜா - இசைரசிகர்கள் தரும் அஞ்சலி

இன்று காலை இசைஞானி இளையராஜாவின் மனைவியார் ஜீவா அம்மையாரின் மறைவை இணையத்தின் வாயிலாக அறிந்த போது எமது வீட்டில் நிகழ்ந்த ஓர் துன்பியல் நிகழ்வாக எடுத்துக் கொண்டது மனம். எனக்கு மட்டுமல்ல என்னைப்போல இருக்கும் பல்லாயிரக்கணக்கான
இசைஞானியின் தீவிர ரசிகர்களுக்கும் இதே உணர்வுதான் இருக்கும். இசைஞானி என்ற மாபெரும் கலைஞனைக் கைப்பிடித்த நாள் முதல் அவரின் சாதனைகள் பலவற்றுக்கும் நிழலாகத் துணையாக நின்று சோரா மனம் கொண்டிருக்க வைத்தவர். இனிமேல் இளையராஜாவிற்குத் துணையாக அவரின் தொடர்ந்த வாழ்வியல் பயணத்தில் இவர் இருக்கமாட்டார் என்ற துயர் தரும் சேதியையும் இவரின் மரணம் எழுதி வைத்துப் போயிருக்கின்றது.நண்பர் ரவிசங்கர் ஆனந்த், இசைஞானியின் மனைவிக்கான ஒரு அஞ்சலிப்பகிர்வை வானொலிக்காக ஏற்பாடு செய்யப் பெரிதும் உதவினார், அவரோடு இசைஞானியின் தீவிர ரசிகரான நண்பர் அலெக்ஸ் ராஜாவும் இணைந்து கொள்ள, இளையராஜாவின் வாத்தியக்குழுவில் இயங்கும் பகவதி (இவர் நடிகர் டி.கே.பகவதியின் பேரன் கூட) அவர்களுமாக மூவரும் சேர்ந்து இசைஞானியின் இல்வாழ்க்கைத் துணை திருமதி ஜீவாவிற்கான ஒரு சிறு அஞ்சலிப்பகிர்வைச் சமர்ப்பிக்கின்றோம். இந்த முயற்சியில் பெரிதும் உதவிய நண்பர் ரவிசங்கர் ஆனந்த், இசைஞானியின் பொக்கிஷப்புகைப்படங்களைத் தந்துதவிய நண்பர் அலெக்ஸ் ராஜாவுக்கும் இந்த வேளை நன்றிகளைப் பகிர்கின்றேன்.

தொடர்ந்து திருமதி ஜீவா இளையராஜாவிற்கு இசைரசிகர்கள் தரும் அஞ்சலிஇறுதி நிகழ்வில்