Pages

Wednesday, June 21, 2023

திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர் இசை கூறும் 80 கள் ❤️🎸🥁


மணியோசையும்....

கை வளையோசையும்

ஆனந்த ராகம் சொல்ல

நான் கேட்கிறேன்

உன்னை ஆகாயம் பூமி

எங்கும் நான் பார்க்கிறேன்......

https://www.youtube.com/watch?v=38aOGQ7pAUA

திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் எண்பதுகளின் பங்களிப்பை நினைத்தால் நளினமாக வந்து இந்தப் பாட்டை நினைப்பூட்டுகின்றார் எஸ்பிபி.

எண்பதுகளிலே மெல்லிசை மன்னரும், இசைஞானியும் கோலோச்சிக் கொண்டிருந்த போதும் கே.வி.மகாதேவன் என்ற முன்னோடிக்கான இடம் தனித்து இருந்தது. தெலுங்கிலே கோலோச்சிக் கொண்டிருந்த “கே.வி.மகத்துவம்” தமிழிலும் அவ்வப்போது நேரடிப் படைப்புகளிலும், மொழித் தழுவல் படைப்புகளிலும் வந்து சேர்ந்தது.

இங்கே நேரடிப்படங்கள் என்று சொல்லும் போது ஆர்.சுந்தரராஜனை நன்றியோடு நினைவு கூட வேண்டும். “பயணங்கள் முடிவதில்லை” கொடுத்த புகழேணியில் இருந்தாலும், இளையராஜாவின்  இசை வாகனத்தில் மட்டும் அவர் சவாரி செய்யவில்லை. அப்பப்போது மூத்தோர்கள் மெல்லிசை மன்னரையும், திரையிசைத் திலகத்தையும் கூட உள்வாங்கித் தன் படைப்புகளிலே முதல் மரியாதை கொடுத்தார் எனலாம்.

அப்படி ஒன்றாக அமைந்தது தான் “அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை” அந்தப் படத்துப் பாடல்களைக் கேட்டாலே தேனமுதம் தான். முகாரி ராகமாய் அமைந்த திரைக்கதையை இனிக்க இனிக்கப் பாடல்கள் கொடுத்து, அப்படத்தை நினைப்பூட்டும் போதெல்லாம் மோகனமாக்கினார்.

“எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணலையே

இளங்காத்தே ஏன் வரலைத் தெரியலையே”

https://www.youtube.com/watch?v=MoteV8Ai92s

என்ற பரிதவிப்பிலும் சுகம் கொள்ள வைத்து,

“சுமைதாங்கி ஏன் இன்று விழுகின்றது”

https://www.youtube.com/watch?v=F39baB6ERog

சோகம் பற்ற வைத்தார்.

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்

அது ஆசை அலைகளின் ஊர்வலம்

நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்

அது சிந்தையில் நீ செய்த சாகசம்

https://www.youtube.com/watch?v=65FTpnF291M

பாடலை எழுதிய புலவர் புலமைப்பித்தனும், இசையமைத்த திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனும், பாடும் நிலா எஸ்.பி.பியும் வானகத்தில் தம் ஆரம்ப காலத்து "ஆயிரம் நிலாவே வா" வைப் பேசிக் கொண்டிருப்பார்கள். கூடவே எண்பதுகளில் மூவரும் சேர்ந்த இந்தப் பாடலைப் பற்றியும் விசேஷமாக.
இந்தப் பாடல் இடம்பிடித்த “தூங்காத கண்ணின்று ஒன்று” படமும் கூட ஆர்.சுந்தரராஜன் கை வண்ணமே.

“இதய வாசல் திறந்த போது

உறவு வந்தது.......”

https://youtu.be/vncM4IQjMdE

இன்னொரு இனிமை சொட்டும் பாட்டையும் இந்தப் படத்துக்காகக் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

“ஈரத்தாமரைப் பூவே

உன் இதழில் எத்தனை சாரங்கள்

https://www.youtube.com/watch?v=XeHrcdIrwCw

எஸ்பிபியின் குரல் ஜனகராஜ் நாயகனாக அரிதாரம் கொண்ட “பாய்மரக் கப்பல்” படத்திலும் அணி செய்தது கே.வி.மகாதேவன் இசை துணை செய்ய.  

“என் தலைவன் வருகின்றான்

நேரிலே…,

நல்ல இளமை என்னும் 

கவிதைக் கோவில் தேரிலே”

https://youtu.be/TDWe9WRZDuE

“மலர்கின்ற பருவத்திலே” படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலில் நாகசுர மேள முழக்கங்களோடு அற்புதம் படைத்தார். 

“எங்கெங்கும் அவள் முகம்

அங்கெல்லாம் என் மனம்”

https://youtu.be/EE_KhVnm9lk

என்று சிவகுமாருக்காக நெருப்பிலே பூத்த மலர் படத்துக்காக ஜெயச்சந்திரனைப் பாட வைத்தவர்

இதற்கு முன் 1979 இல் வெளிவந்த காதல் கிளிகள் படத்துக்காக ஜேசுதாஸ் & S.P.சைல்ச்ஜாவை வைத்து

“செவ்வானமே சீர் கொண்டு வா”

https://youtu.be/k7Xz1qh3DBo

நதிக்கரை ஓரத்து நாணல்களே

https://youtu.be/UVtPAk46fwI

என்ற புகழ்பூத்த பாடலையும் கொடுத்திருக்கிறார். ஏணிப்படிகள் அதற்கு முந்திய இசை ஜாலமாக அமைந்தது.

“வானவில்லின் வர்ணஜாலங்கள்

  ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்”

https://youtu.be/4o5rVDzY2tw

“நான் நானே தான்” படத்தில் இடம்பெற்ற எஸ்பிபி குழுவினர் பாடிய அந்தப் பாடலையும்,

இனிமையானது

அந்த இறைவன் போன்றது

இறைவன் போன்றது

அது புனிதமானது

காதல் பொருள் நிறைந்தது

https://youtu.be/bwQL9QR12gs

“மன்மத ரதங்கள்”படத்துக்காக எஸ்பிபி & வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடலையும் கேட்கும் போதே இலங்கை வானொலியின் பொற்காலத்துக்குப் போய் விடுவீர்கள் இல்லையா?கே.வி.மகாதேவன் என்றால் ஊதுபத்தி மணம் கமிழும் தெய்வீக இசை பிறப்பிப்பவர். அப்படியாகப்பட்டவரின் இறுதிச் சுற்று எண்பதுகளில் இயங்கிக் கொண்டிருந்த போது “ஓம்சக்தி” எஸ்.ஜெகதீசன் இயக்கிய பதில் சொல்வாள் பத்திரகாளி, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி, சமயபுரத்தாளே சாட்சி, மேல் மருவத்தூர் அற்புதங்கள், ஒரே தாய் ஒரே குலம் ஆகிய படங்களுக்கும்,

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய மகாசக்தி மாரியம்மன் பாம் ஈறாகப் பக்தி இசை வெள்ளம் ஓடவிட்டார். பதிவை எழுதியவர் கானா பிரபா

சிவாஜி & பிரபு கூட்டுச் சேர்ந்து நடித்த படங்களில் ஒன்றான “சிம்ம சொப்பனம்”, சுதாகரின் “குருவிக்கூடு”, மன்மத ரதங்கள்,

இராம நாராயணன் இயக்கி மோகன், பிரபு நடித்த “சின்னஞ் சிறுசுகள்”, சிவகுமாரின் “நெருப்பிலே பூத்த மலர்”, ஶ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமாரின் “நான் நானே தான்”, சுரேஷ், நளினி, சுலக்சனா நடித்த “ஆஷா”, மலர்கின்ற பருவத்திலே, மவுன யுத்தம் என்று நேரடித் தமிழ்ப் படங்களை இசையமைத்தார். பதிவை எழுதியவர் கானா பிரபா'புகழ்பூத்த “சங்கராபரணம்” தொடக்கி வைத்த மொழிமாற்றுப் பட வரிசையில் கே.விஸ்வநாத் இன் “சிரிக்கும் சலங்கை”, “ராக தேவதை”, “இசைக்கு ஒரு கோவில்” என்று தமிழுக்கு மொழி மாற்றித் தந்தார். சங்கராபரணத்தின் நேரடித் தெலுங்கு மூலமே தமிழ் ரசிகர்களிடம் பெரு வரவேற்பைப் பெற்றாலும் அது பின்னர் தமிழ் வடிவமும் கண்டது. மாதிரிக்கு இதோ இந்தப் பாட்டு “ஓம்கார நாதங்கள்”

https://youtu.be/xRLxHgoPTk8

“சங்கரா” பாடல் முன்னர் “கிரிதரா” என்ற பெயரிலும் தமிழில் மொழி மாற்றம் கண்டிருந்தது.

இந்த இடத்தில் நிறுத்தி விட்டு

“என்றுமே நல்ல ராசி

இந்தத் திருமகள் ராசி

தடைகள் இல்லாத யோகமே

தருகிற ராசி இன்பத் தமிழ்மகள் ராசி”

https://youtu.be/TrRXwleUeyw

 என்ற “இசைக்கு ஒரு கோயில்” மொழிமாற்றுப் பாடலைக் கேளுங்கள் சொக்கிப் போவீர்கள்.

அப்படியே இதன் மூல, தெலுங்கு வடிவமும் இதோ

https://youtu.be/DorQlNRVmCY

தெலுங்கு, தமிழில் ஒரே நேரத்தில் தயாரான, “நீதி தேவன் மயக்கம்” (கமல்ஹாசன் கெளரவ வேடத்திலும் நடித்தார்) படமும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.திரையிசையில் பக்தி இலக்கியத்தைச் செழுமையாகப் பதித்த கே.வி.மகாதேவன் அவர்கள் 1990 இல் வெளியான “முருகனே துணை” திரைப்படத்தோடு தமிழில் தன் இசையுலக வாழ்வை நிறைவு செய்தார். தெலுங்கில் தொடர்ந்து பங்களித்தார். தன்னுடய 50 ஆண்டு கால இசைச் சரிதத்தை அசை போட்டுக் கொண்டு நிறை வாழ்வு வாழ்ந்து 2001 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் ஆண்டு முருகன் அடி சேர்ந்தார். 

கானா பிரபா

21.06.2023


Tuesday, June 6, 2023

அந்தரங்கம் யாவுமே ❤️❤️❤️ மஞ்சள் அந்தி வேளையோ💛💛💛


“ஆயிரம் நிலவே வா” SPB க்கு அடையாளம் கொடுத்த பாட்டு,

அடுத்த பதினான்கு ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்ட அவருக்கு

இன்னொரு வாய்ப்பு “ஆயிரம் நிலவே வா” படம் வழியாக.

இரட்டை வேடத்துக்கு ஒரே குரல், குணத்தால் மாறுபட்ட இரு துருவங்கள் அவர்கள். 

அதில் கெட்டவனின் தனிப்பழக்கம் “எப்பிடி எப்பிடி" போடுவது. 

அந்த “எப்பிடி எப்பிடி" யை மட்டுமே வைத்துக் கொண்டு இரண்டாவது துருவமாக நிற்கின்றார்.

இந்தப் பக்கம், உருகி உருகித் தன் காதலியை வர்ணிக்கும் காதலன் அந்தக் குரலிலேயே அவ்வளவு காதலைக் கொட்டிக் கொண்டே ஒப்பிவிப்பார்,

மறு பக்கம் “எப்பிடி எப்பிடி" எப்படி எப்படியெல்லாம் கையாளப்பட்டிருக்கிறது பாருங்கள்.

இதே மாதிரி “ஓடக்கார மாரிமுத்து" பாடலில் “செளக்யமா” என்ற சொல்லை ஒவ்வோர் மாதிரிப் பிரயோகித்திருப்பார் அதுதான் SPB.

பாடல் வரிகளிலே தன் காதலி பற்றிய வர்ணிப்பும், அதை எதிராளி கேட்பதுமாக அமைய, இடையிசையைப் பயன்படுத்தி அந்தக் காதலர் கூடலை இன்னோர் பரிமாணத்தில் ஒரு காதல் பாட்டுக்கே உரிய வடிவத்தைக் காட்டி விட்டு மீண்டும் பாய்கிறார் ராஜா.

QFR இல் இசைஞானியின் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வில் கலந்து சிறப்பித்த மணி, பாடல்களில் “Bass” ஐச் சிலாகித்துப் பேசிய போது விஜி மேனுவேலின் கிட்டார் வித்தையின் திறனை இந்தப் பாடலை வைத்து உதாரணத்தோடு விளக்கியிருப்பார். அந்த ஒலி1 வது நிமிடத்தில் ஆரம்பிக்கிறது பாருங்கள். இதெல்லாம் இன்றைய தொழில் நுட்பம் வருவதற்கு நாற்பது வருடங்களுக்கு முன்பு செய்த “கைவினைத் திறன்”. 

இப்படி ஒரு உரையாடல் பாங்கில் அமைந்த பாட்டுக்குள் காதலிசை. அப்படியே இந்த மெட்டைத் தூக்கிக் கொண்டு போய் இன்னொரு கார்த்திக் படத்துக்குப் பயன்படுத்துகிறார் ராஜா.

அதுதான் தெலுங்கில் அசோக்குமார் இயக்கிய “அபிநந்தனா”, தமிழில் காதல் கீதம் ஆகிறது. 

“அபிநந்தனா” இந்தப் பெயர் தான் எவ்வளவு அழகானது. இதில் 

இடம் பெற்ற அத்தனை பாடல்களும் தேன் தேன். கீதாஞ்சலி போலவே அபிநந்தனா என்ற தலைப்பின் மீது ஒரு காதல்.

“மஞ்சு குருசே வேளலு” இவ்வளவு தூரம் உள்ளார்ந்தமாக ரசிக்கப்படுவதற்குக் காரணமே அன்பால் இணைந்த காதலர்கள் எவ்வளவு தூரம் தங்கள் நேசத்தை வார்த்தைகளால் பரிமாறிக் கொள்வார்களோ அதை அப்படியே ஒரு பாட்டாக வடித்தால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி அதை அப்படியே மொழி பெயர்த்துக் கொடுத்தது போலவொரு உணர்வு. அந்த இசை மொழி கூட கூடவே அணைத்துக் கொண்டு வரும். “அந்தரங்கம் யாவுமே” பாடலை எடுத்து ஒரு தூய காதலிசையாக மாற்றி அதை எங்கள் மனதில் ஆளப் பதிய வைக்கும் தொடக்கத்தில் துளிர்க்கும் இசையோடு கலந்த பாட்டு. இரண்டு பாடல்களுமே வைரமுத்துவின் கைவண்ணம்.

இந்தப் பாடலை ஓட விட்டு மனம் அந்த அழகிய பழைய உலகத்தில் உலாவிக் கொண்டிருக்கும். பாடல் முடிந்த பின்னும் அந்தச் சிந்தனைகள் வியாபித்துக் கொண்டிருப்பதால் மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

அந்தரங்கம் யாவுமே

https://www.youtube.com/watch?v=ng6QA5u8FnA

மஞ்சு குருசே வேளலு ( அபிநந்தனா)

https://www.youtube.com/watch?v=n8aoEXydVT0

மஞ்சள் அந்தி வேளையோ (காதல் கீதம்)

https://www.youtube.com/watch?v=66FZ8n6B1Jk

கானா பிரபா


Sunday, June 4, 2023

அழகிய சிங்கர் SPB ❤️ ஐம்பது பாடலாசிரியர்கள்

“என்னென்ன எண்ணங்கள்

உன் நெஞ்சிலே

காணாத சொர்க்கம்

உந்தன் காதல் அல்லவா

லா-லா-ல-லா-லா

லா-ல-லா-லா-லா-ல-லா.....”

இன்று விடிகாலை ஓட்டத்தில் 

“என் வாழ்விலே வரும் அன்பே வா” 

https://www.youtube.com/watch?v=qbvEK1y_T6c

பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த போது எண்ண அலைகள் கிளம்பின.

ஒரு இயக்குநர் தான் எடுத்த உரையாடலற்ற காட்சியை வைத்துக் கொண்டு, அதைப் பின்னணி இசையில் இளையராஜா கவனித்துக் கொள்வார் என்பது போலத் தான். எத்தனையோ பல பாடல்களை எஸ்பிபி கவனித்துக் கொள்வார் என்பது போலத்தான் இசையமைப்பாளர்கள் அவற்றின் சங்கதிகளை அவரிடமேயே விட்டு வைப்பார்கள் போல. அது மட்டுமன்றி “என் வாழ்விலே” போன்ற உதாரணப் பருக்கைகளில் பாடலாசிரியர்கள் கூட இந்த இடைவெளியை அவரிடமேயே ஒதுக்கி விடுவார்கள் போல.

இங்கே இன்னொரு விஷயமும் சொல்லி வைக்க வேண்டும். “என் வாழ்விலே” பாடல் முன்பேயே “சத்மா”வில் “ஹே ஸிந்தகி” என்ற பிறப்புக் கண்டு தான் இங்கு வந்தது. அங்கேயும் அந்த லாலல லாலா எல்லாம் உண்டு. ஆனால் இப்போது போய்க் கேட்டுப் பாருங்கள் சுரேஷ் வாட்கர் மறைந்து எஸ்பிபித்தனம் தான் அங்கே முன்னிற்கும். 

“செழித்த அழகில் 

சிவந்து நிற்கும் செந்தேனே

என் கழுத்து வரையில் 

ஆசை வந்து நொந்தேனே”

“SPB பாடகன் சங்கதி நூலில் ஏ.ஆர்.ரஹ்மானும் எஸ்பிபியும் குறித்த பகிர்வில் அந்த “தங்கத்தாமரை மகளே” பாடல் உதாரணத்தோடு தான் தொடங்கும்.

ஒரு மொழியை “அறுத்து உறுத்து” பிரயோகிக்கும் ஆற்றல் தான் மிக முக்கியமானது, அதன் பின்னர் தான் நல்ல குரல் வளமும், சங்கதியும் என்பதில் மிகக் கடுமையான கொள்கை கொண்டவர் எஸ்பிபி. அதையே போட்டிப் பாட்டு மேடைகளில் சொல்லி வந்தவர்.

40,000 பாடல்களைப் பாடியவர் என்ற கணக்கில் இருந்து ஒரு 10,000 ஐ எடுத்துக் கொள்ளுங்கள், சரி அதுவும் வேண்டாம் ஒரு சைபரை எடுத்து விட்டு 1000 என்ற கணக்கை வைத்துக் கொண்டு பாருங்கள்.

எத்தனை விதமான பாத்திரங்கள், எத்தனை எத்தனை காட்சிச் சூழல்கள் ஆனால் எல்லாமே வித்தியாசமான எஸ்பிபிகள்.

ஒரு கமல் அல்ல, பல கமல்கள், ஒரு ரஜினி அல்ல பல ரஜினிகள் என்று பொழுதுபோக்குச் சித்திரங்களிலும் ஒவ்வொரு பாடல்களிலும் மின்னுவார் எஸ்பிபி.

இன்று 77 வது பிறந்த நாள் காணும் எஸ்பிபிக்கான புகழ் மாலையாக இங்கே நான் பகிர்வது, தமிழில் மட்டும் அவர் ‘முக”வரியாய் அணி செய்த பாடலாசிரியர்கள்.

இந்தப் பாடலாசிரியர்களின் ஒரு சில பாடல்கள் அல்லது பல நூறு பாடல்களைப் பாடியிருந்தாலும் இங்கே காட்டியிருப்பது உதாரணக் குறிகள் தான். அந்தந்தப் பாடலாசிரியர்களின் தனித்துவமும், எஸ்பிபியின் தனித்துவமும் இணை சேர்ந்தவற்றை இயன்றவரை இணைத்துப் பகிர்கிறேன்.

1. ஆண்டாள் – வாரணம் ஆயிரம் ( கேளடி கண்மணி)

https://www.youtube.com/watch?v=POxGgSX-uik

2. புலமைப்பித்தன் - ஆயிரம் நிலவே வா (அடிமைப் பெண்)

https://www.youtube.com/watch?v=iNhhDdxs8Q0

3. கண்ணதாசன் - அங்கும் இங்கும் (அவர்கள்)

https://www.youtube.com/watch?v=IvTxaQ6UesY

4. சுப்ரமணிய பாரதியார் - தீர்த்தக்கரையினிலே ( வறுமையின் நிறம் சிகப்பு)

https://www.youtube.com/watch?v=yNQzciNAvyw

5. பாரதிதாசன் – காலை இளம் பருதியிலே (கண்ணன் ஒரு கைக்குழந்தை)

https://www.youtube.com/watch?v=NBC6HXtbra4

6. முத்துலிங்கம் - ராகதீபம் ஏற்றும் நேரம் (பயணங்கள் முடிவதில்லை)

https://www.youtube.com/watch?v=YZDNVNQxnE4

7. ஜெயகாந்தன் – சித்திரப்பூ சேலை ( புதுச் செருப்பு கடிக்கும்)

https://www.youtube.com/watch?v=MJhsR7bjsRw

8. பாவலர் வரதராஜன் – வானுயர்ந்த சோலையிலே ( இதயக் கோயில்)

https://www.youtube.com/watch?v=0WaS7-SgqTg

9. பொன்னடியான் – வானின் தேவி வருக ( ஒருவர் வாழும் ஆலயம்)

https://www.youtube.com/watch?v=C11N8SBZKL0

10. காமகோடியன் -  உனக்கொருத்தி பொறந்திருக்கா ( புண்ணியவதி)

https://www.youtube.com/watch?v=lLAeI8THtPk

11. வாலி – உலகம் ஒரு வாடகை வீடு ( தையல்காரன்) 

https://www.youtube.com/watch?v=g8arQDY37fc

12. இளையராஜா – இதயம் ஒரு கோயில் ( இதயக் கோவில்)

https://www.youtube.com/watch?v=A_SXPo8PL9Y

13. கு.மா.பாலசுப்ரமணியம் – வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே (கனவுகள் கற்பனைகள்)

https://www.youtube.com/watch?v=DnJX1EVHil8

14. பஞ்சு அருணாசலம் – வா பொன்மயிலே (பூந்தளிர்)

https://www.youtube.com/watch?v=fo4fKE-wS-g

15. எம்.ஜி.வல்லபன் – என்னோடு பாட்டு பாடுங்கள் ( உதயகீதம்)

https://www.youtube.com/watch?v=gRef9NgUNmM

16. நா.காமராசன் – பாடும் வானம்பாடி ( நான் பாடும் பாடல்)

https://www.youtube.com/watch?v=ZJHjnYc8h2U

17. மு.மேத்தா – யார் வீட்டில் ரோஜா ( இதயக் கோவில்)

https://www.youtube.com/watch?v=THgaQGJCQSY

18. குருவிக்கரம்பை சண்முகம் - செங்கமலம் சிரிக்குது (தாவணிக்கனவுகள்)

https://www.youtube.com/watch?v=GXMWVecrjKw

19.  விஸ்வம் – முத்துத்தாரகை (ஒரு கை ஓசை)

https://www.youtube.com/watch?v=pE3lOFNeACg

20. சிதம்பர நாதன் – பூமாதேவி போலே வாழும் (பஞ்சகல்யாணி)

https://www.youtube.com/watch?v=yKW-7lyYHVs

21. கங்கை அமரன் – தோளில் விழும் மாலையே ( உள்ளத்தில் நல்ல உள்ளம்)

https://www.youtube.com/watch?v=fXdlP-5KFqg

தொகுப்பு கானா பிரபா

22. வைரமுத்து – வண்ணம் கொண்ட வெண்ணிலவே ( சிகரம்)

https://www.youtube.com/watch?v=pBlY-QVAH_0

23. பிறைசூடன் – நடந்தால் இரண்டடி ( செம்பருத்தி)

https://www.youtube.com/watch?v=J6gYOhzxf4o

24. பொன்னியின் செல்வன் – சிகப்பு லோலாக்கு குலுங்குது

https://www.youtube.com/watch?v=NVHlfoQTxQQ

25. எஸ்.ஏ.ராஜ்குமார் – பொன்மான் குயில் (மனசுக்குள் மத்தாப்பு)

https://www.youtube.com/watch?v=x2yQ7UZnZiE

26. டி.ராஜேந்தர் – ஒரு பொன்மானை நான் காண ( மைதிலி என்னைக் காதலி)

https://www.youtube.com/watch?v=EgyoS3TsBsY

27.  பாக்யநாதன் – துள்ளித்திரிந்ததொரு காலம் ( என்றும் அன்புடன்)

https://www.youtube.com/watch?v=vuMzSgl7PKg

28.  அவினாசி மணி – பூப்போட்ட தாவணி (காக்கிச்சட்டை)

https://www.youtube.com/watch?v=n0hsTOu5ZvU

29. அறிவுமதி – அழகூரில் பூத்தவளே (திருமலை)

https://www.youtube.com/watch?v=3wOtzuizb7U

30.  வாசன் – இரு கண்கள் போதாது ( தர்மா)

https://www.youtube.com/watch?v=_5FIVxQx5PA

31. உமா கண்ணதாசன் – பூ மலர்ந்த வேளையிலே ( ஒரு புதிய கதை)

https://www.youtube.com/watch?v=0KfBcAKX90s

32.  சின்னக் கோனார் - வா வா சாமி ( சின்ன வீடு)

https://www.youtube.com/watch?v=jD0szlzYvOA

33. ஆர்.வி.உதயகுமார் – பச்சமலைப் பூவு (கிழக்கு வாசல்)

https://www.youtube.com/watch?v=a1BZll6uw5M

34.  நா.முத்துக்குமார் – பல்லேலக்க ( சிவாஜி)

https://www.youtube.com/watch?v=4h8WUuDtH4I

35.  யார் கண்ணன் – மலரே மலரே (உன்னை ஒன்று கேட்பேன்)

https://www.youtube.com/watch?v=uWDx_dy6vI8

36.  கஸ்தூரி ராஜா - கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் ( வீரத்தாலாட்டு)

https://www.youtube.com/watch?v=HDlAvZmnmNk

37. சிவகுமார் – கனவு பலித்தது ( வெற்றி படிகள்)

https://www.youtube.com/watch?v=rhFvZiFIWH4

38.  கண்ணம்மா கனவில்லையா - சுமதிராம் ( விஸ்வ துளசி)

https://www.youtube.com/watch?v=qDak-7AsRUc

39.  காளிதாசன் – ஓ ஓ மதுபாலா ( மதுமதி)

https://www.youtube.com/watch?v=CuIz_-EzzYs

40. அகத்தியன் – நலம் நலமறிய ஆவல் ( காதல் கோட்டை)

https://www.youtube.com/watch?v=lc2eM5AbmhI

41. பழநி பாரதி – முன்பனியா ( நந்தா)

https://www.youtube.com/watch?v=MWZoDydF40E

42. சினேகன் – ஐய்யய்யோ நெஞ்சு அலையுதடி ( ஆடுகளம்)

https://www.youtube.com/watch?v=uxb-TMoqb9k

43.  கபிலன் – எங்கடி நீ போனே ( தேவ்)

https://www.youtube.com/watch?v=dlFjUCoWrA4

44. யுகபாரதி – பாட்டு ஒண்ணு (ஜில்லா)

https://www.youtube.com/watch?v=Y4x_j_vt6fk

45. மதன் கார்க்கி – எங்கே போனாய் (ஜீவா)

https://www.youtube.com/watch?v=IEM2759ItbU

46. பா.விஜய் – யம்மா யம்மா காதல் பொன்னம்மா ( ஏழாம் அறிவு)

https://www.youtube.com/watch?v=Xt-RpOfOxDU

47.  விவேகா – அண்ணாத்தே (அண்ணத்தே) 

https://www.youtube.com/watch?v=FK6dUrfYx84

48. A.பவுன்ராஜ் – அபூர்வசக்தி 369 (ராசலீலை)

https://www.youtube.com/watch?v=0X2YfEkQvVk

49. ஆர்.சுந்தரராஜன் - நில்லடி என்றது (காலமெல்லாம் காத்திருப்பேன்)

https://www.youtube.com/watch?v=4j364_P3LY4

50. தபூ சங்கர் – செம்மொழியே செம்மொழியே (  வல்லக்கோட்டை)

https://www.youtube.com/watch?v=PxxIelm2G6k


போனஸ்

51. தாமரை - நான் போகிறேன் மேலே மேலே (நாணயம்)

https://youtu.be/9lCoAvd0wX8


“நல்ல பாடகராக வர வேண்டுமென்றால் போய்

 நன்றாக மொழியைக் கற்றுக் கொண்டு வா”

என்று எம்.எஸ்.வி சொன்ன பாலபாடத்தைத் தான் வாழ் நாளில் எந்த மொழிக்குப் போனாலும் அங்கே நியாயம் செய்து கற்பித்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்.

“அழகிய சிங்கர்” என்ற அடையாளத்தில் “சிங்கர்” என்பது SPB என்ற அந்தச் சிங்கத்தின் உயர்வு நவிற்சியே.

SPB நம் வாழ்வில் பல்லாண்டு காலம் வாழ்வார்.

கானா பிரபா

03.06.2023

#spb #SPBalasubrahmanyam


Friday, June 2, 2023

"இளையராஜா"வின்ர ஆள் ❤️

வார இறுதி ஞாயிறு காலையானால் 

வழக்கம் போலப் பயணிக்கும் மாதா கோயில் 

நோக்கிய பயணம் தான்.

சிட்னியின் நகர ஒழுங்குகளைக் கடந்தவொரு காட்டுப்புறம் போன்றதொரு சூழலை ஊடறுக்கும் பாதை அசந்து தூங்கிக் கொண்டிருப்பது போலிருக்கும். மன அமைதி தேடிப் போகும் தேவாலயத்தை எதிர்கொள்ளப் பழக்கப்படுத்தி விடுமாற்போல அந்த நேரமும், சூழலும் இருக்கும்.

அன்றும் அப்படித்தான், பழக்கப்பட்ட மந்தை தானே வீடு வருமாற் போல கார் அந்தத் திசை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்க, 

ஒலி 96.8 வானொலி வழியே வழிந்தோடுகிறது

“வழி நெடுக காட்டுமல்லி

யாரும் அதைப் பார்க்கலையே

எனக்கா பூத்தது காட்டுக்குள்ள

வருமா வருமா வீட்டுக்குள்ள

காடே மணக்குது வாசத்துல

என்னோட கலக்குது நேசத்துல....”

உடம்பெல்லாம் சில்லிட்டது போலிருந்தது. 

ஏற்கனவே கேட்ட பாடல் தான். ஆனால் இந்தச் சூழலில், இந்த நேரத்தில் அது எதேச்சையாக ஒலிக்கும் அந்தக் கணம், மனம் ஒரு சில வருடங்களுக்கு முன்னால் இருந்த மனோ நிலையை ஒப்பிட்டுப் பார்த்து விடுகிறது அந்த நேரம்.

அப்போதும் இதே மாதிரியானதொரு பயணம் தான். இதேபோலொரு ஏகாந்தம் தான், ஆனால் மனமோ அமைதியற்று அலைச்சலோடும், அந்த நேரம் சந்தித்த சவாலோடும் குழம்பியிருந்தது. 

அந்தச் சோதனை மிகுந்த வாழ்வியல் பயணத்தில் ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.  

“காட்டு வழி

கால் நடையா போற

தம்பி காட்டு வழி கால்

நடையா போற தம்பி

பொழுதாகும் முன்னே

போற இடம் சேர்ந்துவிடு”

அந்த நேரம் காரின் முன்னிருக்கையில் உட்கார்ந்திருந்து ஆறுதல்படுத்துவார் இளையராஜா.

தனியனாகக் கார் ஓட்டும் போது அந்தப் பாட்டை ஓடவிட்டால் எல்லாச் சோகங்களின் திண்மத்தையும் கரைத்து விடுகிறதோ என்பது போலக் என் கண்கள் சாட்சியம் பறையும்.

அந்தப் பழைய நினைவை ஏன் இந்த நேரம் கிளறிப்பார்த்தது என் மனம் என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன்.

நம் சுக, துக்கங்கள் எல்லாவற்றிலும் ஒரு “பாதுகாவலனாக” இயங்கியிருக்கிறார் அவர். 

சந்தோஷம் கரைபுரண்டு ஓடும் தருணங்களில் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடவும்,

துவண்டு விழும் போது அள்ளி அரவணைத்து முதுகு தடவி ஆற்றுப்படுத்தவும் அவரே எல்லாமும் ஆகியிருக்கிறார்.

இளையராஜா இசையமைத்த பாடல் என்ன மொழியில் கிடைக்கிறது என்று தேடிப் பிடித்துக் கைக்குள் போடுமளவுக்குச் சுருங்கிய இன்றைய உலகத்தில் தான் அவரின் பரந்து விரிந்த இசை உலகம் பார்த்துப் பிரமிக்கிறோம்.

இளையராஜா, தென்னாட்டை இணைத்த ஒரு இசை நதி.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னகத்தையே ஒரு குடையின் கீழ் வளைத்துப் போட்ட இசைச் சக்கரவர்த்தி.

அந்த எல்லா மொழிகளிலும் அடையாளப்பட்ட ஒவ்வொரு சூப்பர் ஸ்டார்களதும் ஒருமித்த காலத்தில் அடையாள இசையாக இயங்கியவர்.

இசையமைப்பாளராக 47 ஆண்டு கணக்கைப் போட்டு வைக்கலாம், ஆனால் ஒரு வாத்திய விற்பன்னராக 50 ஆண்டுகளைக் கடந்த பொன் விழா நாயகன் எங்கள் இசைஞானி.

பக்தி இலக்கியம் சமைத்த இறையடியார்களின் கீர்த்தனைகள் தொட்டு, 

தமிழில் பாரதியார், பாரதிதாசன் தொட்டு கண்ணதாசன், ஆலங்குடி சோமு, பஞ்சு அருணாசலம், புலவர் புலமைப்பித்தன், வாலி, முத்துலிங்கம், உள்ளிட்ட மூத்த கவிஞர் ஈறாக உள்வாங்கி, அறிவுமதி, பழநிபாரதி, யுகபாரதி என்ற சம காலத்துப் பாடலாசிரியர்கள்,

தெலுங்கின் மூத்த ஆளுமை வெட்டூரி சுந்தரராமமூர்த்தி தொடக்கம் மறைந்தும் தன் படைப்பிலக்கியம் கொடுத்துப் போன சிரிவென்னில சீதாராம சாஸ்திரி,

மலையாளத்தின் மகோன்னதம் ஓ.என்.வி.குரூப் எனுமோர் பழுத்த ஆளுமை தொடங்கி ஒரு வரிசை,  

கன்னடத்தில் உதயசங்கர் என்ற மூத்த பாடலாசிரியர்

ஹிந்தியில் குல்சார் ஐயும் விட்டு வைக்காது, அப்படியே மராத்தியும், ஆங்கிலமும் என்று 250 + பாடலாசிரியர்களோடும்,

இத்தனை மொழிகளையும் கூட்டி 380 + இயக்குநர்களோடும் தன் அட்சய பாத்திரம் வழியே இசை கொடுத்தவர் எங்கள் இசைஞானியார்,

தமிழில் மட்டும் உதாரணம் பறைய வேண்டில், இயக்குநர் சிகரம்  கே.பாலசந்தர், ஶ்ரீதர், இயக்குநர் இமயம் பாரதிராஜா, மகேந்திரன்,பாலுமகேந்திரா, அடூர் கோபாலகிருஷ்ணன், பத்மராஜன் உள்ளிட படைப்பாளிகளின் புதிய புதிய சிந்தனைகளுக்கு இசைக் கருவூலமாக அமைந்தவர், புதிய படைப்பாளிகளின் அறிமுகப்படங்களைத் தன் இசையால் தூக்கி நிறுத்திக் கொடுத்த அடையாளத்தைப் பற்றிப் பேசப் புகுந்தால் இன்னொரு நீள் கட்டுரையாக விரியும்.

தென்னகத்தை எழுபதுகளின் இறுதிக்காற்பகுதியில் ஆண்ட இயக்குநர்களில்

தேவராஜ் – மோகன் தொடங்கி,  ஏ.சி.திருலோகச்சந்தர், சிங்கீதம் சீனிவாசராவ், எஸ்.பி.முத்துராமன், டி.யோகானந்த், எஸ்.ஏ.சந்திரசேகர், ஏ.ஜெகந்நாதன், கே.சங்கர், எம்.பாஸ்கர், பெகட்டி சிவராம், ஆர்.சி.சக்தி, வி.சி.குக நாதன், ஐ.வி.சசி, V.B.ராஜேந்திரபிரசாத், எம்.ஏ.திருமுகம், சங்கர் நாக், கே.பாக்யராஜ், பார்த்திபன், மனோபாலா, மணிவண்ணன்,  ஆர்.சுந்தரராஜன், ராஜசேகர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.ரங்கராஜ், விசு, பாசில், பாலச்சந்திரன்மேனன், சத்யன் அந்திக்காட், கே.ராகவேந்திரராவ்,வி.எம்.சி,ஹனீபா, பத்மராஜன், ஆர்.வி.உதயகுமார், ஈ.வி.வி.சத்யநாராயணா, வம்சி, கிருஷ்ணவம்சி, பி.பானுமதி, சேரன், லோகிததாஸ், குணசேகர், மிஷ்கின், வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா

அறிமுக அடையாளங்களில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளாக ருத்ரையா, ஜி.என்.ரங்கராஜன், ஆர்.செல்வராஜ், நிவாஸ், பி.லெனின், எம்.ஜி.வல்லபன், கோகுலகிருஷ்ணா, பாண்டியராஜன், பாரதி - வாசு, கங்கை அமரன், பிரதாப் போத்தன், மணிரத்னம், கே.நட்ராஜ், அமீர் ஜான், ஜி.எம்.குமார், சுரேஷ் கிருஷ்ணா, வஸந்த், கதிர், பஞ்சு அருணாசலம், ஆர்.கே.செல்வமணி, ராம் கோபால் வர்மா,  கஸ்தூரி ராஜா, ராஜ்கிரண், நாஸர், ஞான ராஜசேகரன், கணேசராஜ், பாலா, தங்கர் பச்சான், லெனின் பாரதி என்று நீண்டு செல்லும் படைப்பாளிகளோடும்.

எழுத்தாளர் பூமணி கருவேலம் பூக்கள் படத்தை இயக்கிய போது அங்கேயும் இசை படைத்து, சுகாவின் “படித்துறை”யில் எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன் என்று சமகால எழுத்துலக ஆளுமைகளைத் தன்னிசையில் பாடலாசிரியர்களாக்கியும் அழகுபார்த்தார். இலக்கியக்காரர் சிற்பி பாலசுப்ரமணியத்தின் ஒரேயொரு திரையெழுத்து “மலர்களே நாதஸ்வரங்கள்” ராஜா இசையில் வரவேண்டிய பேறு பெற்றது.

பாலமுரளிகிருஷ்ணா தொடங்கிய சாஸ்திரிய இசைப் பாடகர் குழாம், T.M.செளந்தரராஜன், P.B. ஶ்ரீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், K.J.ஜேசுதாஸ் என்று இன்னொரு வரிசையாக இளையராஜாவின் கூட்டுச் சேர்ந்த பாடகர்களை எண்ணிப் பார்த்தால் நூறைத் தாண்டி நிற்கும்.

பண்டிட் பீம் சென் ஜோஷி, உத்தம் சிங் என்று இன்னொரு பக்கம் மொழி கடந்து நீளும் இந்திய இசை ஐக்கியம் எனும் இசைராஜாவின் கூட்டு.

இந்த ஐந்து தசாப்தங்களுக்குள் இளையராஜா என்ற ஒரு இசையாளுமை கூட்டுச் சேர்ந்த அணிகளை எண்ணிப் பார்த்தாலேயே பிரமிப்பு விலகாத சூழலில் அவரின் ஒவ்வொரு இசைப் படைப்பிலக்கியங்களையும் ஒவ்வொன்றாக ஆய்ந்து பேச ஒரு ஆயுள் போதுமோ?

மலையாளத்தில் தன் ஆத்ம குரு வெ.தட்சணாமூர்த்தி சுவாமிகளோடு “காவேரி”க்கு இசை கொடுக்கிறார், கூடவே மரகதவீணை படத்தில் பாட வைத்துப் போற்றுகிறார்.

அது போல் மெல்லிசை மன்னருக்கு ஏகலைவனாக வாழ்க்கைப்பட்டவர் தன்னிசையில் பாட வைத்தும்,கூட்டுச் சேர்ந்து இசையமைத்தும் நிறைவு கொள்கிறார். தன் சாஸ்திரிய சங்கீதத்தின் குருவான T.V.கோபாலகிருஷ்ணனைத் தன் பாடல்களில் ஆலாபனை இசைக்க வைக்கிறார்.

தென்னகத்தை ஆண்ட அளவுக்கு வட நாட்டில் இசைஞானி கால்பதிக்கவில்லை என்றதொரு கூற்றுக்குப் பதில் சொல்லும் 

சத்மா வழி வந்த “Aye Zindagi Gale Lagaa Le”, அப்படியே YouTube ஐத் தட்டிப் பாருங்கள் “இளைய நிலா பொழிகிறது" பாடலை இளையராஜாவின் அடையாளத்தை மறைத்து எத்தனை பேர் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள் என்று. அந்தப் பாடல் ஹிந்திக்குத் தாவிய போது “கலாகர்” படத்தில் கல்யாண்ஜி – ஆனந்த்ஜி ஆக அடையாளப்பட்டது போல, “இஞ்சி இடுப்பழகா” பாடலும் மீள் அடையாளத்தில் அனுமாலிக்கின் இசையாகக் கொண்டாடப்பட்டு சித்ராவுக்குத் தேசிய விருது பெற்றதெல்லாம் தனிக் கதை.

தெலுங்கில் இளையராஜா இசையமைத்த “பிரேமா” (தமிழில் அன்புச் சின்னம்) ஹிந்திக்குத் தாவிய போது “ ஈ நாடே” என்ற புகழ்பூத்த பாடல் “சாத்தியா” ஆகி இன்று வரை அதற்கு இசை ஆனந்த் மிலிந்த் என்று கொண்டாடும் அவலமும் அங்கே நிகழ்கிறது. இசைஞானியின் பன்முக இசைப் பிரவாகத்தை அள்ளிப் பருகும் பாக்கியம் தென்னகத்தவருக்கே அதிகம் வாய்த்திருக்கிறது.

இந்த மிலேனியத்திலும் மராத்தி மொழியில் வந்த “சாய்ராட்” இசைஞானியின் இசைத் தாக்கத்தில் வெளிவந்த சேதி இணைய உலகில் பரபரப்பானது நீங்களும் அறிந்ததே.

இசைஞானி இளையராஜா மேற்கத்தேயம், கீழைத்தேயம் என்று இசை மரபுகளைக் கற்றுத் தேர்ந்தவர் என்றாலும் அவற்றை அப்படியே கொடுக்காமல் கட்டுடைப்பை நிகழ்த்தியவர். சொல்லப் போனால் அப்படியானதொரு கட்டுடைப்புச் செய்ய குறித்த இசை மரபில் ஆழ்ந்த புலமை இருந்தால் தான் சாத்தியப்படும் என்று நிரூபித்தவர்.

உலக வானொலிகளைக் கேட்கும் மரபு எனக்குண்டு. உலகின் எந்தத் திசையில் இருந்து நேயர்கள் பேசினாலும் அங்கே தம் ஆன்மாவில் இளையராஜாவின் இசை ஒட்டியிருப்பதற்கு இரண்டு உதாரணங்கள் தருகிறேன்.

ஒன்று,

சில வருடங்களுக்கு முன் நடந்தது இது. ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை கார்ப் பயணத்தில் சிங்கப்பூர் ஒலி வானொலி நிலைய ஒலிபரப்பை முடுக்கி விடுகிறேன்.

அன்று அன்னையர் தினமென்பதால் சிறப்பு நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கிறது. சிங்கை வானொலி அங்கு பிறந்து வளர்பவர்களை விட, தொழில் நிமித்தம் அந்த ஊருக்குப் போனவர்களுக்கு உவப்பானதொரு களைப்பு நீக்கி என்பதை உணர்ந்திருக்கிறேன்.

தொலைபேசி உரையாடல்களில் அதிகம் அவ்வாறானதோரே கலந்து கொள்வர்.

அன்றும் அப்படித்தான் ஒரு தொலைபேசி அழைப்பு.

கட்டுமானத் துறையில் வேலை செய்யும்

தொழிலாளி ஒருவர் அழைத்துப் பேசினார்.

தான் மிகுந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், ஒற்றை ஆளாகத் தன் தாயே காணி, பூமியை விற்றுத் தன்னை ஆளாக்கி அனுப்பி வைத்தார் என்றும் சொன்னவரின் குரல் கமறத் தொடங்கியது.

சிங்கப்பூர் வந்து தன் முதல் சம்பளத்தில் தன் தாய்க்கு அருமை பெருமையாக ஏதும் வாங்கி அனுப்புவோம் என நினைப்பதற்குள் தாய் இறந்து போய் விட்டார் என்றும் கலங்கியவாறே சொல்லித் தன் தாயின் நினைவில் "அம்மா அம்மா எந்தன் ஆருயிரே" பாட்டைக் கேட்டார். காரில் போய்க் கொண்டிருந்த எனக்குக் கண்கள் முட்டி விட்டது.

அதற்குப் பின்னர் எப்போது கேட்டாலும் அந்த இளைஞன் ஞாபகம் தான் வரும். எங்கள் சக்திக்கு ஏதாவது செய்து பார்த்து விடவேண்டுமென்றால் அது நண்பரோ, உறவினரோ காலம் தாழ்த்தக் கூடாதென்றும் நினைத்துக் கொண்டேன்.

இன்று காலையில் கூட இந்தப் பாடலைக் கேட்கும் போது அந்த இளைஞன் தான் ஞாபகத்துக்கு வந்தார்.

அதுவும் அந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும் புல்லாங்குழல் ரீங்காரம் தாய்ப் பறவை ஒன்று தன் இறகால் சேயை வருடுமாற் போல இருக்கும்.

ஒவ்வொரு பாட்டும் எத்தனை பேர் கதைகளைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது....

இன்னொன்று,

நிகழ்ச்சி அறிவிப்பாளர் : இளையராஜாவோட பாடல்கள் நிறையவே பிடிக்கும் போல உங்களுக்கு?

வானொலி நேயர் : என்னோட உசுரு சார் அது..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னக மொழிகளின் சினிமாவில் ஊற்றெடுத்த புதிய புதிய படைப்பிலக்கியக்காரர்களின் இசை அடையாளத்தை நிறுவியவர் 1995 இலிருந்து சமீப வருடங்களில் ஒரு தேக்க நிலையில் நிற்கக் கூடிய அளவுக்கு அவரை அடுத்த தலைமுறை பயன்படுத்தவில்லையோ என்றவொரு ஏக்கம் எழுகிறது 

“காட்டு மல்லி”யும் “Modern Love Chennai” யும் ஊற்றெடுத்தது போலப் பொங்கியதொரு இசைப் பிரவாகம் கண்டு.

“அன்னக்கிளி” வெளிவந்து 47 ஆண்டுகள், 

அன்று தொட்டிலில் கிடந்த குழந்தை இன்று 47 வருஷம் கழித்துப் பாட்டு வாங்குகிறது அவரிடம். அந்த 47 வயசுக்காரர் வேறு யாருமல்ல இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவே தான்.

இளையராஜாவின் ஒவ்வொரு பாடலுக்குள்ளேயும் 

ஒவ்வொரு கதை இருக்கும். 

உள்ளே ஒவ்வொரு இசையாக மாறிக் கொண்டிக்கும் போது ஒவ்வொரு காட்சியாகவும் விரியும் அது” 

என்று அண்மையில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி சொன்னார்.

இசைஞானியின் ஒவ்வொரு பாடல்களும் கடந்த அரை நூற்றாண்டு மனிதர்களின் வாழ்ந்த வரலாறு பேசும். 

 நம்மூர் தோட்டக்காரர்கள் தம் நிலத்தைக் கிண்டிக் கொண்டே இருப்பார்கள். ஏதாவது பயிர் செய்து கொண்டே இருப்பார்கள். விளைச்சல்கள், வருமானம் இல்லாவிட்டாலும் அவர்கள் ஓய்வதில்லை. மூப்பு அவர்களைப் பிடித்தாலும் மண்வெட்டியை இறக்கிப் பார்த்ததில்லை.

“ஏன் இந்த வயசில் இவ்வளவு தோட்டவேலை?”

என்று கேட்டால், 

“இதுதான் வாழ்க்கை” 

என்பார்கள். இந்த மனிதர்களை என் வாழ்வியலில் கண்டதுண்டு, என் அப்பாவும் அதில் ஒருத்தர்.

இளையராஜாவும் அப்படித்தான், 80 வயதைத் தொட்டு நிற்கும் கடின உழைப்பாளியாகவும்  அந்த இசை மேதையின் இன்னொரு பரிமாணத்தை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அவர் நம் மனதை உழுது கொண்டிருக்கிறார்.

எவரவராகிலும் 

அவர்க்கொரு துயரம் 

உயர் இசை கேட்டால் 

துயர் மனம் உருகும் 

இன்னிசை உன்னிசை

எவர்க்கும் பொதுவென்று

அள்ளிக் கொடுத்து....

https://www.youtube.com/watch?v=sAMT75FlUvU&list=RDsAMT75FlUvU&start_radio=1

எத்தனையோ இசைமைப்பாளர்களைக் கொண்டாடி எழுதியிருக்கிறேன். ஆனால் 

“இளையராஜாவின்ர ஆள்” 

என்று சுற்றம் அடையாளப்படுத்தும் அளவுக்கு 

என்னுள் உறைந்து விட்டார் இசைஞானி.

கானா பிரபா

02.06.2023