“தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல்
வைகாசி வெய்யில் போல வாட்டுதே”
https://www.youtube.com/watch?v=A2Sb6x1F9o0
அனிச்சையாக அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களில் இதுவுமொன்று. அதுவும் இன்று வாலியார் பிறந்த நாளில்
காலையில் முகத்தில் முழித்ததும் இந்தப் பாடலோடு தான்.
“சொல்லவா சொல்லவா ஒரு காதல்கதை” பாடலெல்லாம் ராஜாத்தனமான மெட்டும், இசையுமாக தேவா கொடுத்த உச்சம்.
அதில் சரிபாதி பங்கு இயல்பாகக் கவசகுண்டலமாக ஒட்டிக் கொண்ட வாலி அவர்களுக்கும் போய்ச் சேர வேண்டும்.
"மை அளந்த கண்ணும்
என் கையளந்த பெண்ணும்
மின்சாரம் பாய்ச்சுமா"
"கள்ளிருக்கும் கிண்ணம்
என்னுள்ளிருக்கும் வண்ணம்
உன் பார்வை பார்க்குமா"
என்று சொற்களோடு சிலம்பம் ஆடுவார்.
வாலியாரை “வேட்டி கட்டிய சரஸ்வதி” என்று விழித்தது சாட்சாத் தேவாவே தான். “வாலிப வாலி” நிகழ்வில் https://www.youtube.com/watch?v=WjvZw6nysFM
தன்னுடைய முதற்பாடலுக்கு நல்ல சகுனமாக வாலியார் தொடக்கி வைத்த வரிகளோடு நெகிழ்ந்து பேசியிருப்பார் தேவா.
வாலியை நினைத்தால் நூறு தலைப்புகள் வரும். சரி வாலியும் தேவாவும் என்று கணக்குப் போட்டால் அதைப் பிரித்தாலேயே ஏகபட்ட கிளை பரப்பும். ஆகவே “சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை”யின் நீட்சியாக அந்தப் பாடலின் பாட்டுடைத் தலைவன் சரத்குமாருக்காக வாலி(ப) வரிகளில் தேவா கொடுத்த பாடல்களை அலசிப் பார்த்தேன்.
“சூரியன்” திரைப்படம் தேனிசைத் தென்றல் தேவா வாழ்வில் வெளிச்சம் பரப்பிய பிரமாண்டம். அந்தப் பிரமாண்டத்தில் அணி சேர்ந்தவர் வாலி அவர்களும்.
எப்படி “மஸ்தானா மஸ்தானா”வுக்கும், “முக்காலா முக்காப்புலா”வுக்கும் அர்த்தம் தேடத் தேவை இல்லாமல் இசையின் தள லயத்தோடு வரிகளை ரசித்தோமோ அது போல ஒரு பாட்டு
“லாலாக்கு டோல் டப்பிமா”. ஆனால் இந்தப் பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்த மர ஆலையில் வேலை செய்பவர்களின் களைப்பு நீங்க ஒரு பாட்டு. அங்கே பாமரத்தனமாக, நாட்டுப்புற மனிதர்களுக்கான சொல்லாடலாகவே பாடலும் அமைகின்றது.
அதே சமயம் சூரியன் படத்தின் ஏனைய பாடல்களைப் பார்த்தால்
கந்த சஷ்டி கவசத்தில் இருந்து உருவிய சந்தத்தில் “பதினெட்டு வயசு இளமொட்டு மனசு” இந்தப் பாடலில் வாலியின் சொல்லாடல் எவ்வளவு தூரம் இலாவகமாக வந்து அமரும் என்பதற்கு உதாரணம் பறையும்
“பக்கம் நெருங்கிட..
விருந்திட.. ஆசை விடுமா”.
வளைகாப்புச் செய்யும் பெண்ணுக்கு ஒரு பாட்டு “கொட்டுங்கடி கும்மி”
https://www.youtube.com/watch?v=p6o7rKU3P0I
“சிவப்புக் கல்லு மாணிக்கம் போல்
புள்ளப் பொறக்கணும்
அது சூர்யகாந்தி பூவைப் போல
மெல்ல சிரிக்கணும்”
போகிற போக்கில் ஒரு அழகியலைப் பூப்போல எறிந்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார் வாலி.
“தூங்கு மூஞ்சி மரங்களெல்லாம்” பாடலும் அது போலத் தான்,
பூமிக்கு என்னென்ன தாகங்களோ பங்குனி மாதத்திலே
பூவைக்கு என்னென்ன மோகங்களோ பூ பூத்த காலத்திலே"
இயற்கையையும், காட்சிச் சூழலையும் இணைத்து அழகு பார்ப்பார்.
சூரியனின் ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு ரகம். அவற்றுக்கான வரிகளில் வாலி காட்சிப்படுத்தியிருக்கும் எளிமையும், பிரமாண்டமுமே காலம் தாண்டி மனசில் நிக்க வைக்கின்றது. உணர்வு பூர்வமான நெகிழ வைக்கும் பாட்டாய் “மன்னாதி மன்னன்” கேட்டால் கண்கள் கசியும்.
வசந்த காலப் பறவை படத்தின் வெற்றியே சூரியனிலும் அதே வாலி & தேவா வெற்றிக் கூட்டணி தொடர வழி வகுத்திருக்கும். அடுத்த “இந்து” படத்திலும் அப்படியே ஆயிற்று. இம்மூன்றிலும் சரத்குமார் இருந்தாலும் சூரியனில் நாயகனாக மிளிர்ந்தார்.
“பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது
வீட்டுக்குள் நீ இருந்தால்......”
https://www.youtube.com/watch?v=GtPCGimwZGI
எஸ்பிபியை 90களில் முழு வீச்சில் பயன்படுத்திய விதத்தில் தேனிசைத் தென்றல் தேவா குறையே வைத்திருக்க மாட்டார்.
கனத்த போர்க்காலத்தில் மின்சாரமில்லாப் பொழுதுகளில்
சைக்கிளில் இருக்கும் டைனமோ வழியாக மின்சாரம் கொடுத்து
இந்தப் பாட்டைக் கேட்ட காலமெல்லாம் நினைப்பில் வரும்
ஒவ்வொரு தாயகப் பயணத்திலும் பயணிக்கும் பஸ் இல் மீண்டும்
கேட்கும் போதெலாம். பேண்டு மாஸ்டர் படத்தில் இந்தப் பாடலின் சந்தோஷ & சோக வடிவங்களை மட்டும் வாலியாரை வைத்து எழுதி வாங்கியிருப்பார் தேவா.
சரத்குமாருக்காக தேவா இசைத்ததில் “மகா பிரபு” படத்தின் அனைத்துப் பாடல்கள் கணக்கில் இன்னொரு முத்து
“மைனா மைனா மடியிலே”
https://www.youtube.com/watch?v=xQ5IsSgDY6E
தேவா இசையில் சரத்குமாருக்கான படமாக வந்த “முன் அறிவிப்பு” பாடல்கள் அனைத்துமே பெண் குரல்கள். அவற்றையும் வாலியே எழுதினார்.
“நீலகிரி மலை ஓரத்தில ஒரு செவ்வந்தி மெட்டு”
https://www.youtube.com/watch?v=daoeLKrbZgs
அப்படியே 90களுக்கு அழைத்துப் போய்விடும். வாலி அவர்கள் எழுதிய அந்தப் பாடலோடு மொத்தம் நான்கு பாடல்களைக் கொடுத்தார் தேவா இசையில் “நம்ம அண்ணாச்சி” சரத்குமாருக்கு. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய “தோஸ்து” படத்தின் அனைத்துப் பாடல்களும் வாலி கொடுத்தவையே.
இன்றும் தாயகப் பயணத்தில் நம்மூரை மிதித்தால் எங்கோ ஒரு வீட்டில் இருந்து தேனிசைத் தென்றல் தேவா கொடுத்த தொண்ணூறுகளில் ஒன்று காதில் விழும். அதில் தவிர்க்க முடியாதது “முத்து நகையே முழு நிலவே” பாடல். அதுவும் கலியாண வீடு என்றால் பாட்டுப் போடுபவர் மறவாது இந்தப் பாட்டு சீடியையும் எடுத்து வந்து விடுவார் போல.
“மண்ணுக்குள் வைரம்” புகழ் இயக்குநர் மனோஜ்குமார் தொண்ணூறுகளில் பழி வாங்காத வில்லனே இல்லை எனுமளவுக்குப் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வந்தார். ஆனால் அதிலும் குடும்ப sentiment மசாலாவை அதிகம் தூவி விடுவார். நடிகர் சரத்குமார் நாயகனாக அரிதாரம் பூசிய போது கூடவே வித்தியாசமான தோற்றங்களும் கிட்டிய அதிஷ்டக்காரர். மனோஜ்குமார் இயக்கிய சாமுண்டி அப்படி இன்னொன்றாக அமைந்தது.
அந்தக் காலகட்டத்தில் தேனிசைத் தென்றல் தேவாவோடு படத்தின் முழுப்பாடல்கள் அல்லது அதிகபட்சப் பாடல்கள் என்று கணக்கு வைத்து எழுதிய காளிதாசன் இல்லாத படங்கள் அரிது. அப்படி அரிதாக தேவாவோடு கவிஞர் வாலி கூட்டணி அமைத்த படமே “சாமுண்டி”.
“முத்து நகையே.. முழு நிலவே..
குத்து விளக்கே.. கொடி மலரே”
https://www.youtube.com/watch?v=Onkgvb0cppw
பாடலில் மெட்டும், இசைக் கோப்பும் அப்பட்டமான இசைஞானி இளையராஜாவின் தாக்கத்தால் கொடுத்த பாட்டு.
எஸ்.பி.பி & எஸ்.ஜானகியின் குரல்களில் அப்படியே கிறங்கி விடுவோம். இந்தப் பாட்டு முழுக்க வாலியாரின் வரிகளும் தெம்மாங்கு இசையும் அப்படியே வயற்காட்டுக்கு இழுத்துப் போய் விடும்.
“மண்ணத் தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டொண்ணு வச்சுக்கம்மா”
https://www.youtube.com/watch?v=uCLBMbNOPt0
தங்கை பாசத்தோடு கலந்து வரும் படத்தின் முகப்புப் பாடல். முத்து நகையே பாடலுக்கு நிகராகக் கொண்டாடப்படுவது.
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் வெள்ளையத் தேவன் படத்தில் இளையராஜா கொடுத்த “தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு” பாடல் வந்து ஞாபகமூட்டும். அதுவும் வாலியார் கைவண்ணம் தான்.
கண்ணுல பால ஊத்த வந்த கண்ணம்மா”
https://www.youtube.com/watch?v=ZRa-FFtxsIc
அந்தக் காலத்து தொண்ணூறுகளின் தேவா முத்திரைப் பாட்டு. எஸ்.பி.பியோடு இதில் ஜோடி கட்டிப் பாடுபவர் சித்ரா.
“ஏத்துங்கடி ஏத்துங்கடி நல்ல கார்த்திகை தீபம்”
சித்ரா மற்றும் குழுவினர் பாடும் பாடல் வட இந்திய இசையமைப்பாளர் கொடுத்த இசையமைப்போ எனுமளவுக்கு அதன் ஆரம்பம். கிராமியத் துள்ளிசையாக இனிக்கும்.
எஸ்.ஜானகி பாடும் “கும்மணும் கும்மணும்” பாடல் அதிகம் எடுபடாத பாடல். “கதவ சாத்து கதவ சாத்து மாமா” அந்தக் காலத்துப் பட்டிமன்ற மேடைகளில் திரையிசைப் பாடல்களை எள்ளி நகையாடக் கை கொடுத்த பாட்டு.
இளையராஜாவின் இசையை ஆழ்ந்து கவனிப்பவர்கள் அந்த இசை அளிப்பில் காலத்துக்குக் காலம் மாற்றமொன்று நிகழ்வதை அவதானிக்கலாம். தொண்ணூறுகளிலும் அப்படியொரு மாற்றம் நிகழ்ந்தது. அந்தச் சூழலில் தேவாவின் வருகை இளையராஜாவின் பாடல்களைத் தழுவிய போக்கில் ரசிகனை ஈர்க்கும் வண்ணம் முந்திய காலகட்டத்துப் பாணியைக் கலந்து கொடுத்து தேனிசைத் தென்றல் தேவா ஆட்கொண்டார். அதில் இந்த சாமுண்டி படத்தில் கவிஞர் வாலியோடு இணைந்து அனைத்துப் பாடல்களைக் கொடுத்ததும் ஒரு புதுமை. ஏனெனில் இதே தொண்ணூறுகளில் இளையராஜாவின் இசையில் முழுப் படப் பாடல்கள், அதிக பாடல்கள் என்று சம காலத்தில் மீட்டர் ஏற்றிக் கொண்டிருந்தார் வாலி.
கண் இரண்டும்
மயங்கிட கன்னி மயில்
உறங்கிட நான் தான்
பாட்டெடுப்பேன் உன்னை
தாய் போல் காத்திருப்பேன்
இன்னொரு பிறவி இருந்தால் கவிஞர் வாலியாக அல்ல, மனிதர் வாலியாக ஜாலியாக வாழ்வைக் கொண்டாடிய மனிதனாகப் பிறக்க வேண்டும் என்றொரு ஆசை.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நம் இறவாக் கவிஞருக்கு.
கானா பிரபா
29.10.2022