Pages

Wednesday, October 5, 2022

ராதா…ராதா… நீ எங்கே…..❤️



அந்த ஆரம்ப ஆலாபனையிலேயே நம்மை மிதக்க வைத்து முகில் கூட்டங்களில் ஒன்றாக்கி விடுவார்கள் ஜானகிம்மாவும், ராட்சச பாலசுப்ரமணியத்தாரும்.


கொஞ்சம் நிதானித்து மேகத் திரை விலக்கினால் ஶ்ரீ கிருஷ்ணரின் வாத்திய அடையாளத்தை நிறுவி விட்டு மீண்டும் அந்த அகண்ட வெளியில் பிருந்தாவனமாய், ஓரமாய் நம்மைத் தூக்கி இருத்தும் இசை.


ஒரு நவயுக கிருஷ்ணரும், ராதையும் காதல் கொண்டால் எப்படி இருக்கும் என்பதை நிறுவும் வாத்தியக் கூட்டு.

சகியே….

பிராணநாதா….

காலம் கடந்தாலும் அதை நினைப்பூட்டும்

ராதா….ராதா

கண்ணா…கண்ணா….


இந்தப் பாடலின் சந்தத்தை மட்டும் எடுத்துப் பார்த்தால் படிக்கட்டில் குதிப்பது போலொரு சாகசம் இருக்கும் ஆனால் வரிகள் இட்டது கவியரசர் ஆயிற்றே.


பாடலைக் கேட்கும் போது இந்த நூற்றாண்டுக் காதலில் இவ்விருவரும் இணைந்து பாடுவது போலிருக்கும்.  காட்சியமைப்பிலும் ஏக குறும்பு. மயிலிறகு முளைத்த நவீன தொப்பி, 80ஸ் டிஸ்கோ சட்டை சகிதம் கமலும், தானும் ஆடிக் கொண்டு பொறுப்பாக கமலின் ஆடையைச் சரி செய்து விடுவதுமாக ஶ்ரீதேவி. 

கமல், மறு கரையில் ஆடிக் கொண்டே போனவர் திடீரென்று வழுக்கி விழுவார்,

“நாணலில் பாய் விரித்து

 நானதில் பள்ளி கொண்டேன்”

என்று விட்டுத் தன் பின்னால் இருக்கும் ஒரு புல்லை எடுத்துப் பார்த்து விட்டு வீசி விடுவார். இப்படிச் சின்னச் சின்னக் குறும்புத்தனங்கள் கொண்ட காட்சியமைப்பு 


https://youtu.be/GqrCm5F3m7Q


அந்த கிட்டார் துள்ளலைக் கேட்கும் போது கால் தாளம் அமைந்து துள்ளி வரும் ராதையான ஶ்ரீதேவி மனக்கண் முன் வருவார்.


“கண்ணா கண்ணா நீ எங்கே” ஜானகிம்மா உருகித் தள்ளி விடுவார்.  எஸ்பிபி மட்டும் என்னவாம்?

“என்னுள்ளம் புதுவெள்ளம்” எனும் போது தரை தட்டி விடுவார்.


பாட்டு முழுக்க அந்த இசை நர்த்தனத்தில் மகுடியான பாம்பாகி விடுவோம் அதுவும் அந்த வயலின் சிணுங்கலெல்லாம் புல்லாங்குழல் ஓசை போல் அர்த்தப்படும் என்றாலும்,

இரண்டாவது சரணத்துக்கு முந்திய கிட்டார் இசையோடு பரிணமிக்கும் இசைக்கூட்டு தான் மீண்டும் மீண்டும் இழுத்துப் போய் முன்னிருந்து கேட்க வைக்கும். அப்படி நேற்று மட்டும் ஒரு மணி நேரம் கடந்து இந்தப் பாடலில் மூழ்கியிருந்தேன்.


அதுவும் கோபால் நாதஸ்வரம் இசைக்குழு மேடையில் செண்பராஜ் உடன் சுர்முகியும் இணையும் போது மூலப் பாடலை மாசற்ற பிரவாகமாகத் தந்திருப்பர்.


https://youtu.be/FPgm2YaB4ds


கமல் & ஶ்ரீதேவி ஜோடி எவ்வளவு அச்சாப் பொருத்தம் என்பதை “மீண்டும் கோகிலா” நிரூபிக்க,

இதே கண்ணன் ராதையாக


தெலுங்கில் “ஒக ராதா இதரு கிருஷ்ணுலு” (தமிழில் “ஹரே ராதா ஹரே கிருஷ்ணா”) இதே குறும்பாட்டம்.


பிரபல நாவலாசிரியர் எண்டமூரி வீரேந்திரநாத் இன் கதையில் பிரபல இயக்குநர் கோதண்டராமி ரெட்டி இயக்கியது. 


“பருவம் உருக இதயம் தவிக்க

இனிய குழலில் யமுனை முழுதும் பொங்க 

அலை பொங்க.....

இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா 

கை சேராதோ நீ வா 

என் கண்ணா”


 https://youtu.be/YwJ6_k52Jzo


வாலியார் கை வண்ணத்தில் மிளிர்ந்திருக்கும்.


தெலுங்கு மூலம்


https://youtu.be/yrxYD24UUA8


எஸ்.பி.பாலசுப்ரமணியம் & கல்பனா மேடை நிகழ்ச்சி

https://youtu.be/R_402rzLNXw


மூலப் பாடல் துல்லிய ஒலிப்பதிவில்

https://youtu.be/8LqTzsz0Geg


மீண்டும் கோகிலா படத்தின் ஒவ்வொரு பாடல்களும் தித்திப்பு. அதுவும் “சுத்த சாவேரி” யில் சுருட்டிய இந்தப் பாடலோ மலை முகட்டில் இருந்து அசரீரி போடும் அந்த ஆரம்ப ஆலாபனை போல். 


கிருஷ்ண பரமாத்மாவிடம் கிட்டாரைக் கொடுத்தது போலொரு ரம்மியம்.


❤️ 

என் உள்ளம் புது வெள்ளம்

பூ வண்ணம் உன் வண்ணம் 

பொன் வண்ணம்

ராதா ராதா 

நீ எங்கே

கண்ணன் எங்கே 

நான் அங்கே….❤️


https://youtu.be/Yq13-kA-ல்3ச்


கானா பிரபா

0 comments: