Pages

Friday, August 30, 2013

பாடல் தந்த சுகம் : "நினைத்தது யாரோ நீ தானே தினம் உனைப்பாட நான் தானே"

விஜய்காந்தின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் அவரின் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் கூடவே இருந்து விஜய்காந்துக்கேற்ற படங்களை நடிக்க வைத்ததில் உறுதுணையாக இருந்ததோடு தேவைப்பட்டால் நல்ல படங்களைத் தயாரித்தும் இவரின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானவராகச் செயற்பட்டார். ராவுதர் பிலிம்ஸ் விஜய்காந்தின் நிழல் தயாரிப்பு நிறுவனம் என்ற கருத்தும் நிலவியது. அதுபோலவே தீபாவளிக்கு தீபாவளி சத்யராஜின் ஒரு படத்தையாவது தயாரித்துக் கொடுப்பார் அவரின் மானேஜர் ராமநாதன்.

அந்தக்காலத்தில் ராவுத்தர் பிலிம்ஸ், தமிழ்ப்பொன்னி ஆட்ஸ் ( தயாரிப்பு தமிழ்ப்பாத்திமா) என்றெல்லாம் விஜய்காந்துக்கேயான தயாரிப்பு நிறுவனங்களாகப் படங்களைத் தயாரித்தளித்தன. அப்படி வந்த படம் தான் டி.சிவா தயாரிப்பில் "பாட்டுக்கு ஒரு தலைவன்" . பாடல்களை அண்ணனும் தம்பியுமாகப் பங்கு போட்டு இளையராஜா, கங்கை அமரன் எழுதினார்கள்.

விஜய்காந்துக்கு நண்பர் இப்ராகிம் ராவுத்தர் ஒரு கை என்றால், இன்னொரு கையாக லியாகத் அலிகானைப் பொருத்தலாம். புரட்சிகரமான அனல் பறக்கும் வசனங்களை உழைத்து வாழ வேண்டும் காலத்திலிருந்து எழுதிக் கொடுத்தவர். விஜய்காந்துக்கு புரட்சிக்கலைஞர் என்ற பட்டம் பின்னாளில் வலுவாக ஊன்ற இவரது வசனங்களே சான்று.
லியாகத் அலிகான் திரைக்கதை வசனம் எழுதி விஜய்காந்தை வைத்து இயக்கிய முதற்படமே இந்த "பாட்டுக்கு ஒரு தலைவன்"

சித்தியின் மகன் துளசி அண்ணாவுக்கு திருமணம் 8.8.1988 இல் நடக்கிறது ஜேர்மனியில். அவர்து திருமண வீடியோ காசெட்டைப் பார்க்க உறவினர்கள் எல்லாருக்கும் அழைப்பு விடுத்து சித்தி வீட்டில் திரள்கிறார்கள். துளசி அண்ணாவின் ஜேர்மனியில் கல்யாணத்தை ஏதோ கண்ணுக்கு முன்னால் நடப்பது போல எல்லாரும் உன்னிப்பாகப் பார்க்கிறார்கள். இடைக்கிடை அந்த வீடியோவில் தலைகாட்டும் சொந்தங்களை அடையாளம் கண்டு "இஞ்சை பார் உவன் நிக்கிறான், அவன் நிக்கிறான்" என்ற நேரடி வர்ணனை வேறு, எனக்கோ அந்தப் பதின்ம வயசிலும் புதுப்பாட்டுக் கேட்கும் தொற்று வியாதி. தொற்றுவியாதி என நான் சொல்லக் காரணம், இரண்டு இளந்தாரிப்பிள்ளைகளைப் பெற்றெடுத்து விட்டாலும் இன்னமும் கிட்டாரும் கையும் இளையராஜா பாட்டும் என்றிருக்கும் துளசி அண்ணரிடமிருந்து தான் இளையராஜா பாடல்களை வெறியோடு நேசிக்கும் பண்பு வந்தது எனக்கு, அவரைப் பற்றி இன்னொரு முறை விலாவாரியாகப் பேசவேண்டும்

அந்த வீடியோ காசெட்டில் ஒவ்வொரு புதுபுதுப் பாடல்களாகக் கடக்கின்றன ஆனால் அப்போதே மனதை ஆக்கிரமித்துக் கொண்டது " நினைத்தது யாரோ நீதானே" பாட்டு. அப்போது படமே வரவில்லை ஆனால ஆறேழு மாதங்களுக்கு முன்பே எல்பி ரெக்கார்ட்டில் வந்துவிடும். இப்போது கிட்டும் பரவலான வெகுஜனத்தொடர்பு இல்லாததால் அந்த எல்பி ரெக்கார்ட்ஸ் ஐ வைத்து உள்ளூர் ரெக்கார்டிங் பார் எல்லாம் உச்ச ஒலியில் கடைவிரித்துக் கல்லா கட்டிவிடும். படம் வரும்போதும் நல்ல பப்ளிசிட்டி கிட்டிவிடும். அப்படித்தான் இந்தப் பாட்டை நான் கேட்ட அந்த கல்யாண காசெட் ஒளிபரப்பின் பின் சில நாட்களிலேயே உள்ளூர் இசைக்கூடங்களின் இதய நாதமாக மாறிவிட்டது இந்தப் பாட்டு. தாவடிச் சந்தியில் இருந்த ரெக்கோர்டிங் பார் காரர் நான் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது சொல்லி வைத்தாற்போல இந்தப் பாட்டைப் போடுவார். வேடிக்கை பார்ப்பது போல சீன் போட்டு ஐந்து நிமிடத்தைக் கடத்துவேன். அப்போதெல்லாம் கைக்காசைப் போட்டுப் பாட்டுக் கேட்டால் செவிப்பறையில் வந்து விழும் அடி என்பதும் நான் அறிந்ததே. பின்னர் மெல்ல மெல்ல உள்ளூர் நாதஸ்வரக்காரரின் பெருவிருப்பத்துக்குரிய பாடல்களில் ஒன்றாகி, சுவாமி வீதி வலம் வடக்கு வீதியில் வரும் போது மனோ, ஜிக்கியாக நாதஸ்வரத்தின் குரல் மாறி விடும். எனக்கு இந்தப் பாட்டை அடிக்கடி தீனி போட்ட பெருமை சென்னை வானொலியைச் சாரும். யாழ்ப்பாணத்தில் இருந்து றேடியோவை மயக்கி சென்னை அலைவரிசை தொட்டால் நாலு மணிக்கு நேயர் விருப்பம். அதில் லல்லு , சத்யா, ரேவதி என்று யார் யாரோவெல்லாம் பாட்டுக் கேட்பார்கள், யாராவது ஒருவர் இந்தப் பாட்டைக் கேட்பார். பதின்ம வயது கடந்து ஆதலினால் காதல் செய்த பருவத்திலும் கொண்டாடிய பாட்டு. இப்போது கேட்டாலும் எனக்கான பாட்டு.
 
 
 

Wednesday, August 28, 2013

பாடல் தந்த சுகம் - கோகுலத்து கண்ணா கண்ணா

இசையமைப்பாளர் தேவா ஒருமுறை மனதோடு மனோ நிகழ்ச்சிக்கு வந்தபோது தான் சினிமாவுக்கு இசையமைப்பாளராக வருவதற்கு நிகழ்த்திய வாழ்க்கைப் போராட்டங்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருந்தார். வாழ்க்கையின் ஒரு நல்ல நிலைக்கு வந்தபின் அந்த எல்லையை அடைவதற்கு முன் நேர்ந்த அவமானங்களையும் வலிகளையும் திரும்பிப் பார்க்கும் போது அதை அனுபவித்தவருக்கே வேடிக்கையாக இருக்கும். அதுபோலத்தான் இருந்தது அவர் சொல்லச் சொல்ல. அதுவரை இசையமைத்த படமொன்றும் பொட்டியில் சிறைப்பட்டிருக்க, புதிய வாய்ப்பு நம்ம "மனசுக்கேத்த மகராசா" படத்தின் வழியாக வருகிறது. அந்தப் படத்தின் இயக்குனர் தீனதயாள் வழியாக, படத்தின் வடநாட்டுத் தயாரிப்பாளர் தன்னுடைய இசைத்திறமையைக் காட்டும் அந்த நாளில் தன் வாத்தியக்காரர்களோடு ஆட்டோ வாகனத்தில் பயணிக்கிறார். நடுவழியில் வண்டி கோளாறு பண்ணவே, ஆர்மோனியம் தபேலா இத்தியாதியை ஒவ்வொருவரும் கையில் பிடித்தவாறே தயாரிப்பாளர் இருக்கும் ஒலிப்பதிவுக்கூடம் நோக்கி ஓடிச்சென்று குறித்த நேரத்தை எட்டிப்பிடித்து மெட்டுப் போட்டுத் தயாரிப்பாளரைக் கவர்கிறார் தேவா.

இசையமைப்பாளர் தேவா குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இன்றும் கிராமப்புறத் தேநீர்ச்சாலைகளில் இருந்து பஸ் பயணம் வரை ராஜாவுக்கு அடுத்துப் பந்தி விரித்து வெகுஜன அபிமானம் பெற்றிருக்கிறார். இவர் இசையமைத்த பத்தாண்டுக்கு முந்திய பாடல்களை இன்றும் அலுக்காமல் சுருதி பிடிக்கின்றன மினி பஸ்களின் ஒலி நாடாக்கள். தேவாவின் ஆரம்பகாலம் பெரும் இயக்குனர்களது அரவணைப்பின்றியும், ஒரு பட்ஜெட் இசையமைப்பாளர் என்ற ரீதியிலும் இருந்ததாலோ என்னமோ பாடல்களின் ஒலித்தரத்தில் பெருங்குறை இருக்கும். செம்பருத்தி செம்பருத்தி பூவப்போல பெண்ணொருத்தி பாடலில் எல்லாம் தபேலா சத்தமே ஏதோ தகரடப்பா ஒலியில் வருமாற்போல இருக்கும். இந்தக் குறை அண்ணாமலை போன்ற படங்களில் வந்த பாடல்களை உன்னிப்பாகக் கேட்கும் போது அவதானிக்கலாம். ஆண்குரல், பெண்குரல், இடையிசை எல்லாம் வெவ்வேறு திசை நோக்கி இருக்குமாற்போலவும் சில பாடல்கள். நாளாக தேவாவின் மீது ஒளி பரவலாக வீசியதாலோ என்னமோ ஆசை,காதல் கோட்டை என்று தொடங்கி முகவரி, குஷி போன்ற படங்களின் பாடல்களில் உச்சமான ஒலியமைப்பு சீராக இருக்கும். அப்படி ஒன்று தான் கோகுலத்தில் சீதை படத்தில் வரும் இந்தப் பாட்டு.

தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரனின் மாங்கல்யம் தந்துனானே என்ற ஒரு நாள் ஷோ ஓடிய படத்தின் வைகைக்கரைப் பூங்காற்றே பாட்டு எனக்கு இன்றும் பிடித்தமானது. எத்தனை பேருக்கு இப்பிடி ஒரு பாட்டு இருப்பதே தெரியுமோ தெரியவில்லை தொடர்ந்து வான்மதி, காதல்கோட்டை, கோகுலத்தில் சீதை என்று நீளும் பட்டியலில் பாடல்களுக்குத் தனியிடம் கொடுக்கலாம்.

நண்பர் கலைச்செல்வன் தன்னுடைய காரில் உச்ச ஒலியில் பாடலை ஒலிக்கவிட்டு அந்த ஷெனாய் இசையில் இருந்து ஆரம்பித்து இடையில் மீட்கும் புல்லாங்குழலின் ஜாலம், தபேலா என வரிசையாகச் சுவைப்பார். இயக்குனர் அகத்தியன் தேவா கூட்டணி சோடை போனதில்லை. கோகுலத்தில் சீதை படத்தில் வரும் இந்தப் பாட்டு காட்சியோடு கச்சிதமாகப் பொருந்தும் பாடல்களில் ஒன்றாக இடம் பிடிக்கின்றது. பேபி தீபிகா, சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் இவர்களோடு தேவா பாடும்போது அச்சொட்டாக மணிவண்ணனே பாடுமாற் போல. துல்லிய ஒலிப்பதிவோடு, சீரான வாத்தியங்களின் ஆவர்த்தனம், பொருத்தமான நேரத்தில் தோன்றும் பாடகர் பங்கு என்று எல்லாமே நிறைவாக இருக்கின்றது. குறிப்பாக கோரஸ் பாடகிகளின் ஆலாபனையோடு இழைத்த புல்லாங்குழல் இசை, பாட்டு முழுக்கத் தாளம் போடும் அடக்கமான தபேலா இசை என்று கனகச்சிதமாக அமைந்துவிட்டதாலோ என்னமோ கிருஷ்ண ஜெயந்தி என்றாலே விசேஷமாக முணுமுணுக்கிறது "கோகுலத்து கண்ணா கண்ணா" என்று

Sunday, August 4, 2013

இசையமைப்பாளர் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள் நினைவில்

தொண்ணூறுகளின் இறுதியில் பிரபலமாக இருந்த சன் டிவி "சப்தஸ்வரங்கள்" பாடற் போட்டி நிகழ்ச்சியின் வழியாகத் தான் வி.தட்சணாமூர்த்தி என்ற இசையமைப்பாளரை அறிந்து கொண்டேன். அதற்கு முன்னர் அவரின் இசையில் வெளிவந்த ஓரிரு தமிழ்ப்படங்களில் குறிப்பாக "நந்தா என் நிலா" என்ற பாடலை இலங்கை வானொலி மூச்சு விடாமல் முன்னூறு தடவைக்கு மேல் அலுக்க அலுக்கப் போட்ட போதெல்லாம் கூட இந்த இசையமைப்பாளர் குறித்த தேடல் இருந்திருக்கவில்லை. எழுபதுகளின் இறுதியிலே வி.குமார், விஜயபாஸ்கர், ஷியாம் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் வந்த பல நல்ல பாடல்களை சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்தவையாக இருக்கும் என்று அதிகம் மெனக்கடவில்லை. அந்த வகையில் வி.தட்சணாமூர்த்தி அவர்களை சுவாமிகள் என்று விளித்து அவரின் பெருமைகளை சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரமணன் சிலாகித்தபோதுதான் அவர் மேல் வெளிச்சம் பட்டது எனக்கு. தமிழ்த்திரையுலகில் இரண்டு தட்சணாமூர்த்திகள் இருந்திருக்கிறார்கள், ஒருவர் எஸ்.தட்சணாமூர்த்தி இவர் அலிபாபாவும் 40 திருடர்களும்" போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர், பின்னவர் தான் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள். கொஞ்சக்காலம் எல்லாவற்றையும் உதறவிட்டு காசிக்குப் போய் சாமியாராக இருந்ததாக செய்திகளின் வாயிலாக அறிந்தேன். "நந்தா என் நிலா" படத்தில் வந்த பாடலான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய "நந்தா என் நிலா பாடலை விடவும் என்னை அதிகம் கவர்ந்ததென்னவோ ஜெயச்சந்திரன், டி.கே. கலா பாடியிருந்த "ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தேன்" என்ற பாடல் தான். அன்றைய சனிக்கிழமை இரவுப்பொழுதில் அதிகாலை ஒரு மணியைத் தொடும் போது வானொலி நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் என் தனிமையை விரட்டிப் பல தடவை சொந்தம் கொண்டாடிய பாடல் அது. வானொலியின் பிறந்த நாள் வாழ்த்துப்பாடல்களில் எழுதப்படாத ஒப்பந்தமாக அமைந்து போன பாடல்களில் ஒன்று "நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க", ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது திரைப்படத்துக்காக வி.தட்சணாமூர்த்தி இசையில் வந்த அந்தப் பாடலோடு அதே படத்தில் வந்த "ஆண்டவன் இல்லா உலகமிது" பாடலும் அப்போதைய இலங்கை வானொலி ஒலிபரப்பால் பிரபலமான பாடல்களில் ஒன்று. மீண்டும் தொலைக்காட்சி வாயிலாகவே இன்னொரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்திருந்தது வி.தட்சணாமூர்த்தி அவர்களின் கேரள சினிமாவுக்கான பணி. கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் ஐம்பது ஆண்டுகள் திரையுலகில் நிறைவாக்கியதை ஏஷியா நெட் தொலைக்காட்சி கொண்டாடியபோது, வி.தட்சணாமூர்த்திக்கான சிறப்பு கெளரவத்தையும் அவர் முன்னிலையிலேயே வழங்கியிருந்தார்கள். அப்போது கேட்ட "சந்த்ரிகையில் அலியுன்னு சந்த்ரகாந்தம்" என்ற பாடலை யூடியூபின் வழியாகக் கேட்டுப் பரவசம் கொண்டேன். தட்சணாமூர்த்தி சுவாமிகளின் பேச்சு 25 வது நிமிடத்திலிருந்து மலையாள சினிமாவுலகில் வி.தட்சணாமூர்த்திக்கான தனித்துவத்தையும் கே.ஜே.ஜேசுதாஸின் சிலாகிப்பின் மூலம் அறிந்து கொண்டேன். உள்ளூர் இந்தியக் கடை ஒன்றில் வி.தட்சணாமூர்த்தி அவர்களின் இசையில் வந்த மலையாளப் பாடல் தொகுப்பையும் அடிக்கடி கண்டு கொள்வேன். ஆனால் அதிகம் கேட்டதில்லை. ஒருவரை அவரின் சாகித்யம் வாயிலாக அறிந்து கொள்வதில் தான் எவ்வளவு பெருமை. அந்த வகையில் வி.தட்சணாமூர்த்தி அவர்களின் இறப்பு நேற்று ஆகஸ்ட் 2 நிகழ்ந்த பின்னர் பேஸ்புக், ட்விட்டர் வழியாக அவரின் ரசிகர்கள் பகிர்ந்து கொள்ளும் திரையிசை இன்னும் இன்னும் இந்த இசை மேதை மீதான பற்றை அதிகப்படுத்துகின்றது. அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும், அவர் ஆக்கிய பாடல்கள் ஜீவனுடன் நம்முள் என்றும் உறைந்திருக்கும்.