Pages

Thursday, May 27, 2010

றேடியோஸ்புதிர்: 55 இயக்குனர்சிகரம் எடுத்த மெட்டு; இயக்கியதோ இன்னொரு முத்து

அந்தப் பெரிய நடிகரின் தீராத ஆசை குறித்த பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று. அந்த ஆசையை நடிகரின் குருநாதரே தயாரித்து இன்னொரு இயக்குனரை இயக்க வைத்து குறித்த நடிகரின் இலட்சிய பாத்திரத்தில் நடிக்க வைத்து மனம் நிறைந்ததே மிச்சம் கல்லா நிறையவில்லை.

மீண்டும் கூட்டணி சேர்ந்தார்கள். இயக்குனர் சிகரம் தயாரிப்பு, அதே நடிகர் நடிப்பு, இயக்கம் கூட அதே முந்திய இயக்குனர் தான். இம்முறை முழுமையான மசாலா, நகைச்சுவை கலந்த படம். படம் எடுத்ததோ வடமாநிலத்தில். இந்த நிலையில் குறித்த இயக்குனர் நடிகர் பட்டாளத்தோடு வடமாநிலத்துக்குக் கிளம்பிவிட்டார். தயாரிப்பாளராக இருந்த சிகர இயக்குனர் , இந்தப் படத்தின் இயக்குனரின் ரசனை எப்படியிருக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்றாற்போலப் பாடல்களை மு.மேத்தாவை எழுத வைத்து இசைஞானி இளையராஜா மூலம் இசையமைத்து வந்த பாடல்களை உடனுக்குடன் வடமாநிலத்தில் இருக்கும் ஷூட்டிங் தளத்துக்கு அனுப்பி வைத்தாராம். பாடல்கள் அனைத்துமே முத்து, இன்றுவரை கேட்டாலும். குடும்பப்பாங்கான படங்களை இயக்கிய இயக்குனர் ஒரு மசாலா இயக்குனரின் ரசனையறிந்து பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்ததென்பது புதுமை. படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாள சிகரத்தின் நெஞ்சையும் கல்லாவையும் நிறைத்தது. அந்தப் பாடல்கள் வந்த படம் என்னவென்பது தான் கேள்வியே ;)

தந்தந்தான தந்தன்னன்னா தந்ததந்தான தன்னன்னா....

சரியான விடை இது தான்

அந்த தயாரிப்பாளர் - இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்
நடிகர்: ரஜினிகாந்த்
இலட்சிய வேடம் பூண்ட படம்:
ஸ்ரீ ராகவேந்திரர்
இயக்குனர்: எஸ்.பி.முத்துராமன்
வெற்றிகண்ட மசாலாப்படம்: வேலைக்காரன்

போட்டியில் கலந்து சிறப்பித்த நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

Thursday, May 20, 2010

அனுராதா ரமணனின் "சிறை" - ஒலிப்பகிர்வு

பிரபல தமிழ் இலக்கியப்படைப்பாளர் அனுராதா ரமணன் அவர்கள் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி மாரடைப்பால் அகால மரணமானது அவரது எழுத்துக்களை நேசித்தவர்களுக்கும் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்து விட்டது. சிறுகதை, நாவல் என்ற எல்லைகளைக்கடந்து தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளையும், வாசகர் கேள்வி பதிலுக்கு அவர் தந்த ஆறுதல் பகிர்வுகளுமாக இவரது எழுத்துப்பணி விசாலமடைந்திருந்தது எல்லோரும் அறிந்த ஒன்று.

இவரது நாவல்களில் ஒரு மலரின் பயணம், அம்மா, சிறை, கூட்டுப்புழுக்கள் போன்றவை திரைப்படங்களாகவும் பிறப்பெடுத்தன. சிறை திரைப்படத்தினை நாவலின் சாரம் கெடாமல் இயக்கியிருந்தார் ஆர்.சி. சக்தி. லட்சுமி, பிரசன்னா, ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்க இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துச் சிறப்பித்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஒலிபரப்புத்துறையில் 15 வருஷங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த எமது சக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி சிவாஜினி சச்சிதானந்தா அவர்கள் அனுராதா ரமணன் அவர்களது எழுத்துக்களை நேசிப்பவர். கடந்த மே 13 ஆம் திகதி தனது வானொலிப் படைப்பில் "திரையில் புகுந்த கதைகள்" என்ற பகுதியில் தான் நேசிக்கும் அனுராதா ரமணன் குறித்தும், அவரைச் சந்தித்த அந்தக் கணங்களை சுவாரஸ்யமான நனவிடை தோய்தலைத் தந்தவாறே, திரையில் காவியமான "சிறை" திரைப்படத்தின் பகிர்வையும் அந்தப் படத்தில் இடம்பெற்ற முத்தான இரண்டு பாடல்களோடு பகிர்ந்து கொண்டார். மூன்று நாட்களின் பின் தன்னுடைய ஆதர்ஷ எழுத்தாளர் இவ்வுலகை விட்டு நீங்குவார் என்று அப்போது நினைத்திருப்பாரா என்ன.
அந்த ஒலிப்பகிர்வை இங்கே உங்கள் செவிகளுக்கு விருந்தாகத் தருகின்றேன்.
ஒலிப்பகிர்வைத் தயாரித்துப் பகிர்ந்து கொண்ட திருமதி சிவாஜினி சச்சிதானந்தாவுக்கு எமது நன்றிகள்.

Sunday, May 9, 2010

பாடகி சுஜாதாவின் ஆரம்ப காலம்















தமிழ் சினிமாவில் பெண் குரல்களில் தனித்துவமாக மிளிரும் சுஜாதாவின் ஆரம்பகாலப் பாடல்கள் இரண்டு. இந்தப் பதிவை நான் போடுவதற்குக் காரணமாக அமைந்ததே நான் இங்கே தரும் முதல் பாடல் இன்று பல நாட்களின் பின் அடிக்கடி முணுமுணுத்து ரசிக்க வைக்கிறது.

எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களைப் படமாக்கும் சீசனாக எழுபதுகளின் இறுதிப்பகுதி இருந்தது. அதில் முதல் முயற்சியாக அமைந்தது "காயத்ரி" என்ற திரைப்படம். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வில்லனாகவும், எதிர் மறை நாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்திய படங்களில் காயத்ரியும் ஒன்று. காயத்ரி நாவலின் முடிவில் சொல்லப்பட்ட விடயங்களைச் சினிமாவுக்குப் பொருந்தாது என்று திரைக்கதை அமைத்த பஞ்சு அருணாசலம் மாற்றி விட்டார் என்று எழுத்தாளர் சுஜாதா தன் குறிப்புக்களில் சொல்லியிருக்கின்றார். 1977 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தில் வந்த ஒரு இனிய பாடல் "காலைப்பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள்" அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமான மசாலாத் திரைக்கதைகளை மட்டுமல்ல, இனிய பாடல்கள் பலவற்றுக்கும் திரையிசைக்கவிஞராக இருந்து சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம். கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அனுபவம் இந்தத் திரையிசைக் கவிதைக்கு உதவி புரிந்திருக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் அறிமுகத்துக்குத் துணை போன பெருமையோடு அவரின் ஆரம்பகாலப் படங்களுக்குப் பெருவாரியாகப் பாடல்கள் எழுதிச் சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம்.

அந்தவகையில் அமைந்தது தான் "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" என்ற இந்தப் பாடல். மணமாகிப் புகுந்த வீடு போன அந்தப் பெண் அந்த மலர்ச்சியில் பாடும் சூழ்நிலைக்குப் பொருந்தும் வரிகளுக்குத் துணையாக மெல்லிசையாக இழைத்திருக்கின்றார் ராஜா. ஒரு காலைச் சூழ்நிலைக்குப் பொருந்தும் இதமான இசையாக கையாண்டிருக்கும் கருவிகளும் துணை போயிருக்கின்றன. ஆரம்பத்தில் மெல்லிய ஹம் கொடுத்து ஆரம்பிக்கும் சுஜாதாவின் குரல் கூட கள்ளங்கபடமில்லாத் தொனியோடு இருக்கின்றது. பாடலின் இடையிலும் லலலலா, இம்ஹிம் இம்ஹிம் என்று சங்கதிகளைக் குரலிசையாக ஹம் ஐ லாவகமாகச் செருகியிருப்பது சிறப்பு. ஒரு திகில்ப்படத்துக்கு இப்படியான பாடலை லாவகமாகப் பொருத்தமான இடத்தில் சேர்ப்பது ஒரு சவால். அதில் வெற்றி கண்டிருக்கின்றார்கள் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம், பாடகி சுஜாதா கூடவே இசைஞானி இளையராஜா



மேற்குறித்த பாடலை Airtel Top Singer ஸ்ரீவித்யா பாடும் கனிவு கூடக் கிறங்க வைக்கின்றது.



ஒரே ஆண்டில் ராஜா இசையில் இரண்டு ஹிட் பாடல்களைக் கொடுத்து விட்டு இடையில் காணாமல் போய் பின்னர் ஒரு தசாப்தம் கழித்து (இடையில் தமிழில் ஒரு சில வாய்ப்புக்கள் கிட்டினாலும் பிரபலமாகவில்லை) இன்னொரு புதிய பாணி இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான் இசையில் தமிழில் மறு அறிமுகமாகும் வாய்ப்பு அல்லது பெருமை சுஜாதாவைச் சேரும். பாடகி சுஜாதா 1977 இல் இளையராஜா இசையில் முன்னர் பார்த்த காயத்ரி பாடத்தில் பாடுவதற்கு முன்னதாக அவருக்கு வாய்த்தது "கவிக்குயில்" வாய்ப்பு. பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.ஜானகி போன்ற ஜாம்பவான்களோடு சுஜாதாவின் குரலைத் தனித்துவமாக்கியது "காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ" இங்கேயும் பஞ்சு அருணாசலம் தான் துணை போயிருக்கின்றார். பதின்மவயதுப் பாடகியாக ஜேசுதாசின் வழிகாட்டலில் இளையராஜாவிடம் அறிமுகம் கிட்டிய சுஜாதா பாடிய "காதல் ஓவியம் கண்டேன்" பாடல் ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலியில் மகா மெகா ஹிட் பாடலாகப் பலகாலம் ஒலித்தது இன்னும் ஓயவில்லை. அந்தப் பெருமையில் 1980 ஆம் ஆண்டு கே.ஜே.ஜேசுதாஸ் யாழ்ப்பாணம் வந்தபோது வீரசிங்கம் மண்டபத்தில் இரட்டைச் சடை போட்ட சுஜாதா என்ற இந்தச் சிறுமியும் கூடவே வந்து பாடிய இந்தப் பாடலின் அந்தப் பசுமை நினைவுகளை இன்றும் அந்த வீடியோ கசட்டில் போட்டு இரை மீட்கின்றேன். "காதல் ஓவியம் கண்டேன் கனவோ" 33 வருஷங்கள் கழிந்த நிலையில் இன்றைய இளம் நாயகிக்குக் கூடப் பொருந்திப் பார்க்கக் கூடிய அதே புத்துணர்வைத் தன் இசையாலும் குரலினிமையாலும் நிரப்பிய பாடல். இந்தப் பாடலிலும் சுஜாதாவுக்குச் சுதந்திரமான துள்ளல்களை வெகு இலாவகமாக்கி அடக்கி விட்டிருக்கின்றது.

மேற்குறித்த இரண்டு பாடல்களுமே சுஜாதா ஒரே ஆண்டில் பாடிய வண்ணம் "கா" என்ற அடியில் வருவது இன்னொரு சிறப்பு.

சில பாடல்கள் பெண்களுக்கே உரித்தான, பெண்ணின் உணர்வுகளின் அடி நாதமாக விளங்கினாலும் அந்தப் பாடல்களை பொதுவானதொரு உணர்ச்சிப் பிரவாகமாக எல்லோராலும் ரசிக்கத்தக்கதாக மாறிக் கேட்டு ரசிக்க வைக்கும், எவ்வளவு தரம் கேட்டாலும் அவை திகட்டாது என்பதற்கு இந்த இரண்டு பாடல்களுமே சாட்சி.



பி.கு: சுஜாதாவின் குரலில் வந்த "ஒரு இனிய மனது" பாடல் "ஜானி" திரைப்படப் பின்னணி இசைத்தொகுப்போடு வரவிருக்கின்றது.