Pages

Sunday, January 20, 2013

நாடோடி தென்றல் பின்னணி இசைத் தொகுப்பு

நாடோடி தென்றல் திரைப்படம் வெளிவந்து இந்த ஆண்டோடு 21 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படம் அப்போது தொடங்கப்பட்டபோது கிளம்பிய பரபரப்புக்கள் இன்னும் ஞாபக அடுக்குகளில் இருக்கின்றன. வழக்கமான பாரதிராஜாவின் படம் என்ற கணக்கில் இல்லாது இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகப்படப் பல அம்சங்கள் இருந்தன. அதில் தலையாயது, இசைஞானி இளையராஜாவே படத்தின் கதையை எழுதியிருந்ததோடு, ஆங்கிலப்பாடலை மட்டும் விஜி எழுத மற்றைய அனைத்துப் பாடல்களையும் எழுதி வழங்கியிருந்தார். கூடவே எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா அவர்கள் ராஜாக்களின் கூட்டணியோடு கைகோர்த்து வசனம் எழுதியிருந்தார். இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம், பிரபல ஓவியர் மணியம் செல்வன் அவர்களே கலை இயக்குனராக.
இந்த முக்கியமான விஷயங்களோடு, அப்போது வெற்றிகரமான நாயகனாக வலம் வந்த நவரச நாயகன் கார்த்திக் நீண்ட இடைவேளைக்குப் பின் தன் குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் நடித்திருந்தார். கூடவே அவரின் இன்னொரு அறிமுகம் பாண்டியனுக்கு ஒரு குணச்சித்திர வேடம். பாரதிராஜாவின் ர வரிசை நாயகிகளில் "ரஞ்சிதா" இந்தப்படத்தில் அறிமுகமாகியிருந்தார். புது நெல்லு புது நாத்து மூலம் அறிமுகமாகி வில்லனாக, நாயகனாக மாறிய நெப்போலியன் தன் குருநாதருக்காக கெளரவ வேடத்தில் நடித்திருந்தார். ஜனகராஜும் வழக்கம் போல, இவர்களோடு கிருபா என்ற பிரான்ஸ் நாட்டு வெள்ளையினப் பெண்மணியும் அறிமுகமாக நடித்திருந்தார்.
 இன்றும் பிரபல பாடலாசிரியராகத் தனித்துவத்தோடு இயங்கும் அறிவுமதி அவர்கள் உதவி இயக்குனர்களில் ஒருவராக இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கின்றார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், நகைத் தயாரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக், அவ்வூருக்கு வாத்து மேய்க்க வரும் கூட்டத்தின் இளமங்கை ரஞ்சிதா மேல் காதல் கொள்வதும், அந்த ஊரை நிர்வகிக்கும் துரையின் தங்கை கிருபா கார்த்திக் மேல் காதல் கொள்வதும், ரஞ்சிதாவின் முறைமாமன் பாண்டியன், வெள்ளைக்காரத் துரை ஆகியோர் கார்த்திக் இற்கு எதிராக எப்படி இயங்குகின்றார்கள் என்பதையும் வைத்து எழுதப்பட்ட கதை தான் இது. இசைஞானி இளையராஜா, பாரதிராஜா கூட்டணி சேர்ந்தாலே பாடல்கள் தனிச்சிறப்போடு விளங்கும், அந்த வகையில் இசைஞானி இளையராஜா, மலேசியா வாசுதேவன், ஜானகி, மனோ,சித்ரா,சுபா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். "ஒரு கணம் ஒரு யுகமாக" என்ற பாடலை இந்தப் படத்துக்காக இசையமைத்துப் பின்னர் படமாக்காமல் விட்டிருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசைப்பிரிப்பு வேலைகளில் நான் இறங்கியபோது, பாரதிராஜாவின் அறிமுகக்குரல் தவிர மொத்தம் 31 இசைத்துணுக்குகளைப் பிரித்தெடுத்திருக்கிறேன், இவை பாடல்கள் தவிர்ந்த பின்னணி இசை மட்டுமே. இதோ தொடர்ந்து கேட்டு, ரசித்து அனுபவியுங்கள்
 
 இயக்குனர் பாரதிராஜாவின் அறிமுக உரை
 

முகப்போட்ட இசை
 

இரவில் கள்ளத்தனமாக கார்த்திக் வாத்து மேய்ப்போர் கூடாரம் சென்று ரஞ்சிதாவைச் சந்திக்கும் நேரம்

கார்த்திக், ரஞ்சிதா காதல் அரும்பிய வேளை
 

 காதல் கவிதை பாடும் கார்த்திக்
 

குறும்பு செய்யும் கார்த்திக், வெள்ளைக்காரி கிருபாவை சந்திக்கும் போது

வெள்ளைக்காரரின் கோட்டையில் திருடிய எல்.பி இசைத்தட்டை ரஞ்சிதா தன் கைவிரலில் வைத்துச் சுழற்ற, மறைவாக இருந்து அந்த இசைத்தட்டிலிருந்து வருமாற்போல "மணியே மணிக்குயிலே" பாடலை கார்த்திக் தன் குரலில் பாடும்போது
 

ரஞ்சிதா கொண்டுவந்த சோற்றைப் பறித்துத் தின்னும் கார்த்திக், தொடரும் காதல் பரவசத்தில் இனிய இசை கலக்க
 

ரஞ்சிதாவின் முறைமாமன் பாண்டியன் கோபம்
 

வாத்துக்கூட்டத்தை வெள்ளைக்காரி கிருபா குறிவைத்துச் சுடும்போது வாத்து ஒன்று கொல்லப்படும் காட்சியும் தொடர்ந்த இசையும், கார்த்திக் தகராறு பண்ணுவதும்

வெள்ளைக்காரியின் வீட்டுக்கு இரவில் களவாக வரும் கார்த்திக்

கார்த்திக் மேல் அபிமானம் கொள்ளும் வெள்ளைக்காரி
 

வெள்ளைக்காரி தனக்கு ஆபரணம் செய்ய கார்த்திக் ஐ நாடும் போது

கார்த்திக் தன் கண்களால் வெள்ளைக்காரியின் உடல்வாகைப் பார்த்து ஆபரணத்துக்கு அளவு எடுத்தல்

ரஞ்சிதாவின் காதல் அறிந்து தண்டனை கொடுக்கும் முறைமாமன் பாண்டியன்

கார்த்திக் வீட்டுக்கு வந்து நகை செய்ய வரும் வெள்ளைக்காரி

கார்த்திக் மேல் காதல் கொள்ளும் வெள்ளைக்காரி
 

 காதல் சோகத்தில் ரஞ்சிதா
 

கார்த்திக் மேல் கொண்ட காதலால் வெள்ளைக்காரி முட்கள் கொண்ட மலையில் ஓடுதல்

காதலோடு பியானோ வாசிக்கும் வெள்ளைக்காரி
 

கோயில் திருவிழாவில் ரஞ்சிதாவைச் சந்திக்க வரும் கார்த்திக்கை வெள்ளைக்காரி காணும்போது, அதை மறைவாக இருந்து காணும் ரஞ்சிதா தவறாக எண்ணுதல்

 வெள்ளைக்கார துரையுடன் மோதும் கார்த்திக்
 

 காதல் சோகத்தில் ரஞ்சிதா, ஆறுதல் வார்த்தைகளோடு முறைமாமன் பாண்டியன், "யாரும் விளையாடும் தோட்டம்" பாடல் சித்ராவின் சோகக்குரலோடு
 

ரஞ்சிதாவின் சந்தேகத்தால் கவலை கொள்ளும் கார்த்திக் மலையிலிருந்து குதிக்கப் போதல்

 கார்த்திக்குடன் மோதும் பாண்டியன், தொடர்ந்து வெள்ளைக்காரத்துரையால் கொல்லப்படுதல், கொலைப்பழி கார்த்திக் மேல் விழுதல்
 

பாண்டியன் மரணச் சடங்கு ஆற்றில் மிதக்கும் சடலம்
 

பியானோ இசை மீட்கும் வெள்ளைக்காரி
 

நீதிமன்றில் சாட்சி சொல்ல ரஞ்சிதா வரும்போது, காதல் இசை சோக வடிவில் மாறி மீட்கப்படுகின்றது

வாத்துமேய்ப்போர் ஊரைக் காலி செய்தல்
 

நீதிமன்றத்தில் வெள்ளைக்காரி, கார்த்திக்கைக் காப்பாற்ற முனையும்போது

 சிறைச்சாலையில் இருந்து கார்த்திக் தப்பிக்கும்போது
 

மலர்ப்படுக்கையில் கிடத்தப்பட்டு ரஞ்சிதா ஆற்றில் இறக்கிவிடப்படுதல், தப்பி வரும் கார்த்திக் காணல், காதல் ஜோடி சேருகின்றனர், மணியே மணிக்குயிலே பாடல் இசையோடு 3.53 நிமிட இறுதி இசை வார்ப்பு
 

 

Thursday, January 3, 2013

இசைஞானி இளையராஜாவும் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனும் ஓர் இன்னிசைக்கூட்டு



ஒரு தேர்ந்த இயக்குனரின் பணி வெறுமனே ஒளிப்பதிவு, கதை, இசை உள்ளிட்ட சமாச்சாரங்களில் வல்லமை கொண்ட திறமைசாலிகளிடம் இருந்து அப்படியே எடுத்துக்கொள்வது மட்டுமல்ல, ரசிகனின் மனநிலையில் இருந்துகொண்டு தன்னால் எப்படியெல்லாம் அந்த ஆளுமைகளிடமிருந்து தனக்கான படைப்புக்கு உரமூட்டக்கூடிய அளவு உழைப்பை வேண்டிய அளவு வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படியானதொரு வெற்றிகரமான இயக்குனராக எண்பதுகளில் விளங்கியவர் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். எண்பதுகளில் இசைஞானி இளையராஜா, ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் வெளிவந்த படங்களுக்குக்கும் இளையராஜா - கே.ரங்கராஜ் (உதயகீதம், நினைவோ ஒரு சங்கீதம், பாடு நிலாவே உள்ளிட்டவை)கூட்டணியில் வெளிவந்த படங்களுக்கும் நூலிழை அளவுக்குத் தான் வித்தியாசம் இருக்கும். பலர் இருவரின் படங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளுமளவுக்கு. இதற்குக் காரணம், பாடல்களை மையப்படுத்திய பாங்கில் கதையம்சம் கொண்ட படங்களாக இவை இருப்பதே. ஆனால் ஆர்.சுந்தரராஜனின் பலம், இளையராஜா மட்டுமன்றி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் (சரணாலயம் உள்ளிட்ட பல படங்கள்), கே.வி.மகாதேவன் (அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை, தூங்காத கண்ணின்று ஒன்று), தேவேந்திரன் (காலையும் நீயே மாலையும் நீயே), தேவா (என் ஆசை மச்சான் உள்ளிட்ட பல படங்கள்) என்று இவர் சேர்ந்து பணியாற்றிய ஒவ்வொரு படங்களிலும் அட்டகாசமான பாடல்களைத் தருவித்திருப்பார். எண்பதுகளிலே இளையராஜா கோலோச்சிக்கொண்டிருந்த வேளை, "எதிர்பார்த்தேன் இளங்கிளியை காணலையே", "சுமைதாங்கி ஏன் இன்று"(அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை), "எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை" (சரணாலயம்) , "ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்"(காலையும் நீயே மாலையும் நீயே) போன்ற பாடல்களை அன்றைய இலங்கை வானொலி ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். கூடவே தேவாவுடன் இவர் இணைந்து பணியாற்றிய என் ஆசை மச்சான் திரைப்படத்தில் வந்த பாடல்களையும் கூட.

 
நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இசைஞானி இளையராஜாவோடு, இயக்குனர் ஆர்.சுந்தராஜன் இணைந்து பணியாற்றும் "நிலாச்சோறு" திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கும் இந்தவேளை, இந்த இருவரின் கூட்டணியில் வந்த திரைப்படங்களின் தொகுப்பாக இந்தப் பகிர்வு அமைகின்றது. ஒரு வருஷம் ஓடிச் சாதனை புரிந்த படம், தயாரிப்பாளர் கோவைத்தம்பிக்கு ஒரு நல்ல முகவரி கொடுத்த திரைப்படம் என்ற பெருமையோடு ஆர்.சுந்தரராஜனுக்கு திரையுலகில் வெற்றிப்பயணத்தை ஆரம்பிக்க ஏதுவாக அமைந்த படம் பயணங்கள் முடிவதில்லை. நடிகர் மோகனுக்கு இந்தப் படத்தின் பின்னர் கற்றை கற்றையாகப் படங்கள் கிடைத்ததும் மைக் மோகன் என்றே பட்டம் ஒட்டிக்கொண்டதும் உப பாண்டவம். படத்தின் எல்லாப் பாடல்களுமே இன்றும் மீண்டும் மீண்டும் ஏதோவொரு வானொலியில் ஒவ்வொரு நாளும் காற்றை அளந்து போகுமளவுக்குப் பிரபலம். அதிலும் இளைய நிலா பொழிகிறதே பாடல் மொழி கடந்து எங்கும் புகழ் பரப்பியது. வைரமுத்துவின் வரிகளுக்கு "இளைய நிலா பொழிகிறதே", "தோகை இளமயில்", "சாலையோரம்" பாடல்களும், கங்கை அமரன் "ஏ ஆத்தா ஆத்தோரமா", "வைகறையில்" பாடல்களை எழுத, முத்துலிங்கமும் சேர்ந்து "மணி ஓசை கேட்டு", "ராக தீபம் ஏற்றும் நேரம்" ஆகிய பாடல்களையும் எழுதி வைத்தார் மெட்டுக்கு அணியாக.
 

 "தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ"

இளையராஜாவின் இசையில் நடிகர் சிவகுமாரின் படங்கள் விசேஷமானவை, அதிலும் மோகன், பாண்டியன் உள்ளிட்ட நட்சத்திரங்களையும் வைத்துப் படைத்த இன்னொரு இசைக்காவியம் "நான் பாடும் பாடல்". இதுவும் கோவைத்தம்பியின் தயாரிப்பு. பாடகியை நாயகியாக வைத்துப் பண்ணிய கதையில் பாட்டுக்களுக்கா பஞ்சம்? வைரமுத்து "பாடவா உன் பாடலை (சோகம், சந்தோஷம் இரண்டும்), கங்கை அமரன் "சீர் கொண்டு வா", முத்துலிங்கம் "தேவன் கோயில் (ஆண், பெண் குரல் இரண்டும்), காமராசன் "பாடும் வானம்பாடி", வாலி "மச்சானை வச்சுக்கடி" ஆகிய பாடல்களுமாக ஏறக்குறைய எண்பதுகளின் முன்னணிப் பாடலாசிரியர்களின் கூட்டில் வந்த பாட்டுப் பெட்டகம் இது.  

"பாடும் வானம்பாடி"
 

இசைஞானி இளையராஜா ஏற்கனவே இசையமைத்த பாடல்களை வைத்துக் கொண்டு, ஒரு அழகான கதையையும் அதற்கேற்றாற்போலத் தயார் செய்து மீண்டும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது "வைதேகி காத்திருந்தாள்". அண்மையில் நீதானே என் பொன் வசந்தம் இசை வெளியீட்டிலும் இதைக் குறிப்பிட்டார் ஆர்.சுந்தரராஜன். ஆனால் அவர் சொல்லாதது, ராஜா இசையமைத்து, பி.சுசீலா பாடிய "ராசாவே உன்னை காணாத நெஞ்சு" பாடலைப் படமாக்காமலேயே அடுத்த படத்தின் வேலைக்குப் போய் விட்டார். அதை இங்கே சொல்லியிருக்கிறேன். படத்தைத் தயாரித்தது பிரபல சினிமா வசனகர்த்தா தூயவன். வாலியின் வரிகளுக்கு 'இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே", "ராசாத்தி உன்னை", "ராசாவே உன்னை", "அழகு மலராட" "காத்திருந்து காத்திருந்து" பாடல்களும், கங்கை அமரன் "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே" பாடலையும், பஞ்சு அருணாசலம் "மேகம் கருக்கையிலே" பாடலையும் எழுதினார்கள்.
  "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே"
 

ஏவி.எம் நிறுவனத்தின் தயாரிப்பு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா இணைந்த இசைக்கூட்டணியில் ஆர்.சுந்தரராஜனுக்குக் கிடைத்த ஜாக்பாட் "மெல்லத் திறந்தது கதவு" ஆனால் இந்தப் படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த பெருவெற்றி படத்தைப் பெரிதும் தூக்கி நிறுத்தவில்லை. இந்தப் படத்தின் பின்னணி இசையை முன்னர் கொடுத்திருக்கிறேன். "மெல்லத் திறந்தது கதவு" பின்னணிஇசைத்தொகுப்பு இதே படத்தில் இளையராஜா முன்னர் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷும் நடித்திருக்கிறார். படத்தின் பாடல்களை கங்கை அமரனும் வாலியும் எழுதியிருக்கிறார்கள்.  

"ஊரு சனம் தூங்கிருச்சு"
 

ஆர்.சுந்தராஜன், இளையராஜா, விஜய்காந்த் சேர்ந்த அடுத்த படைப்பு "தழுவாத கைகள்" முந்திய படங்கள் அளவுக்குப் பேர் கிட்டாத படம். ஆனால் இந்தப் படத்தில் வரும் "ஒண்ணா ரெண்டா", "விழியே விளக்கொன்று ஏற்று" பாடல்களை இன்றும் கேட்டாலும் சொக்க வைக்கும். படத்தின் பாடல்களை வாலியும், கங்கை அமரனும் பங்கு போட்டுக்கொண்டார்கள். படத்தில் வந்த பிரபல பாடல்களான "ஒண்ணா ரெண்டா" பாடலை வாலியும், "விழியே விளக்கொன்று எற்று" பாடலை கங்கை அமரனும் எழுதினார்கள். மேலும் நான்கு பாடல்கள் உண்டு  
விழியே விளக்கொன்று ஏற்று
 

 
மீண்டும் அதே ஆர்.சுந்தரராஜன், இளையராஜா, விஜய்காந்த் கூட்டணி ஆனால் இம்முறை இன்னொரு வெற்றிப்படமாக அமைந்தது "அம்மன் கோயில் கிழக்காலே". இந்தப்படமும் மசாலா கலந்த, ஆர்மோனியப்பெட்டியை தன்னுள் அடக்கிய கதை. படத்தின் அனைத்துப் பாடல்களையும் தம்பி கங்கை அமரனுக்குக் கொடுத்து அழகு பார்த்தார் ராஜா. மொத்தம் ஆறு முத்துக்கள். எல்லாமே கேட்கக் கேட்கத் திகட்டாதவை. 
"காலை நேரப்பூங்குயில்"
 

பஞ்சு அருணாசலம் என்ற வெற்றிகரமான தயாரிப்பாளர் கைகொடுத்தும் அதிகம் எடுபடாமல் போன படங்களில் ஒன்று "என் ஜீவன் பாடுது". அந்தக்காலத்துக் காதலர்களின் தேசியகீதங்களில் ஒன்று "எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்" உள்ளிட்ட எல்லாப்பாடல்களுமே அருமையாக அமைந்தவை.இளையராஜாவின் வரிகளில் இந்தப்பாடல் மட்டும் இளையராஜா, லதா மங்கேஷ்கர் குரல்களோடு படத்தில் மட்டும் மனோ பாடவும் இடம்பெற்றிருக்கிறது. மற்றைய அனைத்துப் பாடல்களையும் (கட்டி வச்சுக்கோ, மெளனமேன், ஆண்பிள்ளை என்றால், காதல் வானிலே, ஒரே முறை உன் தரிசனம்) பஞ்சு அருணாசலம் எழுதியிருக்கிறார். "மெளனமேன் மெளனமே" பாடலைச் சிலாகித்து முன்னர் இடுகை ஒன்றும் இட்டிருக்கிறேன் இங்கே
"கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச"
 
இசைஞானி இளையாராஜாவின் குடும்ப நிறுவனம் "பாவலர் கிரியேஷன்ஸ்" தயாரிப்பில் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐ அழகாகக் காட்டிய படங்களில் ஒன்று ராஜாதி ராஜா. படத்தின் பேருக்கேற்றாற்போல ராஜபாட்டை போட்டது பாடல்கள். கங்கை அமரன் (மாமா உன் பொண்ணக் கொடு),பிறைசூடன் (மீனம்மா), இளையராஜா (வா வா மஞ்சள் மலரே, (அடி ஆத்துக்குள்ள, உலகவாழ்க்கையே சிறுபாடல்கள்)), வாலி (மலையாளக்கரையோரம்), பொன்னடியான் (எங்கிட்ட மோதாதே), இவற்றோடு படத்தில் இடம்பெறாத "உன் நெஞ்சத்தொட்டு சொல்லு" என்ற பாடலை கங்கை அமரனும் எழுதியிருக்கிறார்கள்.

 "வா வா மஞ்சள் மலரே"
 

ஆர்.சுந்தரராஜனுக்கு ஒரே ஆண்டு கிடைத்த இரண்டு தோல்விப்படங்களில் ஒன்று எங்கிட்ட மோதாதே. படத்தின் பெயரைப் போலவே எங்கும் மோதாமல் பெட்டிக்குள் சுருண்டு விட்ட படம். விஜய்காந்த்துடன் இணைந்த படங்களில் மோசமான தோல்வியும் இந்தப்படத்துக்குக் கிட்டியது. இளையராஜா, ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் அதிகம் எடுபடாமல் போன படம் என்றால் இதுதான் எனலாம். பாடல்களை வாலியும் புலமைப்பித்தனும் எழுதியிருக்கிறார்கள். வாலி எழுதிய "சரியோ சரியோ" பாடல் மட்டும் கேட்கும் ரகம்  
"சரியோ சரியோ"
 

அட்டகாசமான பாடல்கள், ஒன்றுக்கு இரண்டு ஹீரோயின்கள் (ரூபிணி, குஷ்பு) இவற்றோடு அப்போது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாயகன் பார்த்திபன் இவர்கள் இருந்தும் என்ன பயன், மோசமான கதை, திரைக்கதை இருந்தால் தாலாட்டு பாடினால் முகாரியில் வந்து விழுந்தது படத்தின் வெற்றிப்பலன். பார்த்திபனோடு நீண்ட பகையை ஆர்.சுந்தரராஜன் பெற்றுக்கொண்டதுதான் இந்தப் படத்தின் பலாபலன். பாடகர் அருண்மொழிக்கு இந்தப் படத்தில் கிட்டிய பாடல்கள் எல்லாமே பெரும் பேறு. சொந்தம் என்று வந்தவளே ஆத்தா பாடலை எழுதிப்பாடியவர் இளையராஜா, வராது வந்த நாயகன் பாடலை வாலி எழுத, கங்கை அமரன் "நீதானா", "வெண்ணிலவுக்கு", "ஓடைக்குயில்" ஆகிய மூன்று பாடல்களையும் எழுதி வைத்தார். இன்றும் தாலாட்டிக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்கள்

 "வராது வந்த நாயகன்"


"நீலவேணி அம்மா நீலவேணி" சென்னை வானொலியை நான் காதலித்த காலங்களில் கேட்டுக் கேட்டுக்கிறங்கிய பாடலுக்குச் சொந்தமான படம் "சாமி போட்ட முடிச்சு". முரளியோடு முக்கிய பாத்திரத்தில் ஆர்.சுந்தரராஜனும் நடித்த படம். பெரும் வெற்றி பெறாவிட்டாலும் "பொன்னெடுத்து வாரேன் வாரேன்", "மாதுளங்கனியே" போன்ற பாடல்கள் இன்றும் இன்றும் இனிக்கும். மங்கலத்து குங்குமப்பொட்டு பாடலை வாலி எழுத மற்ற அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கங்கை அமரன்.

"நீலவேணி அம்மா நீலவேணி"
 

1992 ஆம் ஆண்டு இருபது வருஷங்களுக்கு முன்னர் ஆர்.சுந்தராஜனும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய இறுதிப்படம் "திருமதி பழனிச்சாமி". கல்வியின் முக்கியத்துவத்தை வைத்து எடுத்த படம், வரிவிலக்கு கொடுக்கவேண்டும் என்றெல்லாம் விளம்பரம் தேடிய படம் கூட. குத்தாலக்குயிலே பாடலை கங்கை அமரன் எழுத மற்றைய பாடல்களை வாலி கவனித்துக் கொண்டார். அம்மன் கோயில் வாசலிலே பாடலோடு நடு சாமத்துல, பாதக்கொலுசு பாட்டு பாடலும் இந்தப் படத்தின் இனிய இசைக்கு அணி சேர்ப்பவை
"பாதக்கொலுசு பாட்டு"