Pages

Saturday, March 31, 2007

இது குழந்தை பாடும் தாலாட்டு


இன்றைய ஒலித்தொகுப்பு பகுதியிலே நான் தரவிருப்பது, T.ராஜேந்தர் குறித்த (சீரியசான) பார்வை, மற்றும் அவரின் இசையில் மலர்ந்த ஒரு தலை ராக திரைப்படப் பாடலான "இது குழந்தை பாடும் தாலாட்டு"

கவிஞர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர், என்று பல பரிமணங்களைக் கொண்ட இவர் "கிளிஞ்சல்கள்" திரைப்படத்துக்காக தங்க இசைத்தட்டுப் பெற்ற முதற் தமிழ் இசையமைப்பாளரும் கூட.

இது குழந்தை பாடும் தாலாட்டு, ராஜேந்தர் கவி புனைந்து இசையமைக்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். இப்பாடலின் தன் நாயகி மீது ஒருதலைக் காதல் கொண்ட நாயகனின் மனவுணர்வுகள் அழகாகச் சித்தரிக்கப்படுகின்றன.
"வெறும் காற்றில் உளி கொண்டு சிலையை நான் வடிக்கின்றேன்", வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கின்றேன்" என்று இவ்வரிகள் நடைமுறைச் சாத்தியமில்லா உதாரணங்களாக இவன் காதலுக்கு ஒப்புவமை ஆக்கப்படுகின்றன.

இனி என் பேச்சை கேளுங்கள்.

Saturday, March 24, 2007

S.கணேசராஜ் நினைவில் சின்னத்தாயி பாடல்கள்தமிழ் சினிமா இயக்குநர் S.கணேசராஜ் நேற்று 23 மார்ச் காலமானதாக செய்தியில் வந்த போது உடன் என் நினைப்பில் வந்தது தாயகத்தில் நான் இருந்த காலகட்டத்தில் 92 ஆம் ஆண்டு "சின்னத்தாயி" என்ற கணேஷ்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த படத்தின் பாடல்கள்.

அன்றைய காலகட்டத்தில் மின்சாரவசதி இல்லாத காலத்தில் யாழ்ப்பாணம் , ஷண் ரெக்கோடிங்க் பார் என்ற ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒலிநாடாவில் பதிவு செய்து சைக்கிள் சக்கரம் சுற்றிக் கேட்ட பாடல்களை மீண்டும் இரை மீட்கின்றேன். இப்பதிவில் என் குரற் பதிவோடு சின்னத்தாயி படப்பாடல்களையும் நீங்கள் கேட்கலாம்.
இயக்குநர் S.கணேசராஜ் அவர்களுக்கு என் அஞ்சலிகள்.

சின்னத்தாயி பாடல்கள் பற்றி நான் பேசுகிறேன்பாடல்களைக் கேட்க

Friday, March 23, 2007

அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ


சயந்தன், மலைநாடான், கொழுவி, வசந்தன், டி சே, சினேகிதி என்று ஆளாளுக்கு "நாங்கள் பொம்பிளை பார்க்கும் முறை" என்று பதிவு மேல் பதிவு போட்டு ஓய்ந்த இந்த வேளை (மிச்சம் இருக்கிறவை மதி, சின்னக்குட்டி, யோகன் அண்ணை, மழை, செல்லி) நானும் என் பங்கிற்கு ஏதாவது தரலாம் என்று யோசித்தேன். கிடைத்தது கைவசம் வைத்திருந்த ஒலிநாடா ஒன்று.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இங்கிலாந்தின் லூசியம் தமிழ் நண்பர்கள் வெளியிட்ட பூபாளம் ஒலிநாடா.அதில் நகைச்சுவையாக வெளிநாட்டு அவலங்களைச் சொல்லும் பாடல்கள் உள்ளன. இங்கே நான் தருவது, வெளிநாடு சென்று ஊரில் இருக்கும் தன் குடும்பத்துக்காக ஓடாய் உழைக்கும் இளைஞர் கூட்டமும், அவர்களின் வயசுக்கோளாறைக் (?) கண்டும் காணாமல் இருக்கும் பெற்றோரின் பணம் குறித்த சிந்தனையும். இப்பாடல் வரிகளையும் தருகின்றேன். முழுமையான ஈழத்துப் பேச்சு வழக்கில் இப்பாடல் அமைந்திருக்கின்றது. இரண்டு வகையான இசையில் இவை இங்கே தரப்படுகின்றன.

ட்றம்ஸ் ஒலிக்கலவையோடு கேட்க
தபேலா ஒலிக்கலவையோடு கேட்கஎழுத்தில் இந்த அரிய (!) கவியாக்கத்தைக் கேட்க ;-)

அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
எனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ
காசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ
குடும்பத்துக்கேற்ற பெண்ணைப் பாருங்கோ

பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு

அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ

முருகற்ற மூத்ததுக்கு மொன்றியல்ல பெடியன்
கனகற்ற கடைசிக்கு ரண்டு மூண்டு போய்(boy) பிறண்ட்
மயிலற்ற மகளுக்கு கியூவில பெடியள்
ஒருத்தி கூட மிச்சமில்லை, இங்கு நானும் என்ன செய்ய
பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு

அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ

கந்தற்ற மகளின்ர குறிப்பைக் கொஞ்சம் பாருங்கோ
கொழுந்தற்ற மச்சாளிற்ற கதையை மெல்லப் போடுங்கோ
குருவற்ற கெளரிக்கு வயதென்ன கேளுங்கோ
பிளீஸ்..பிளீஸ்..பிளீஸ்...பிளீஸேதுஞ்செய்யுங்கோ

பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு

அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ

காலமைல வேலை, கஷ்டப்பட்டுச் செய்யிறன்
கண்டறியாப் படிப்பில கனகாலம் போக்கிப் போட்டன்
கறி புளி சமைக்கத் துணையொண்டைத் தேடுறன்
காத்திருந்து காத்திருந்து கோட்டை விட்டுட்டன்
பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு

அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ

கோயில், குளம், டிஸ்கோ குறிவைக்கப் போறன்
கே றேஸ் காறில குட்டி பார்க்கப் போறன்
கறுவலோ வெள்ளையோ கொண்டுவரப் போறன்
கடைசியா உங்களுக்கு எச்சரிக்கை செய்யிறன்

Wednesday, March 21, 2007

மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் - பாகம் 1

பிரபல பத்திரிகையாளர்
ராணி மைந்தன் தொகுத்த "மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்" என்ற நூலை இரண்டு வருஷம் முன் சென்னை போனபோது வாங்கியிருந்தேன். அப்புத்தகத்தில் இடம்பெற்ற அம்சங்களில் தேர்ந்தெடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்களும், அவர்களின் படங்களில் பாடல்கள் பிறந்தபோது இடம்பெற்ற சுவையான தகவல்களையும் கோர்த்து பாடல்களோடு இணைத்து வானொலி வடிவமாக்கியிருந்தேன். அதில் முதற்பாகத்தை இங்கு தருகின்றேன்.

இப்பகுதியில் மெல்லிசை மன்னரோடு இயக்குனர் ஸ்ரீதர், பந்துலு, பீம்சிங் இணைந்து பணியாற்றியபோது நடந்த சில சம்பவங்களோடு நெஞ்சம் மறப்பதில்லை படத்திலிருந்து "நெஞ்சம் மறப்பதில்லை", கர்ணன் படத்திலிருந்து "ஆயிரம் கரங்கள்", பாவமன்னிப்பு படத்திலிருந்து "வந்த நாள் முதல்" ஆகிய பாடல்கள் பிறந்த கதையும் இடம்பெறுகின்றது.தகவற் குறிப்புக்கள் நன்றி : ராணி மைந்தன்
புகைப்படம் நன்றி: MSV Times

Monday, March 19, 2007

ஒரு மெட்டு மூன்று பாட்டு

இன்றைய இசைத் தொகுப்பு பகுதியிலே நான் தரவிருப்பது, ஒரே மெட்டு திரையிசையாக தமிழ், தெலுங்கு மலையாளப் பாடல்களாக வந்திருப்பதை அப்பாடல்களோடு இணைத்துத் தருகின்றேன்.

மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற பின்னணி இசைக்கோர்ப்பு ஒன்றை அப்பட இயக்குனர் பாலுமகேந்திரா, தனது ஓளங்கள் மலையாளப்படத்தின் பாடல் வடிவமாக்கித் தருமாறு இசையமைப்பாளர் இளையராஜாவைக் கேட்கவும் அவர் அப்படியே மலையாளப்பாடலாக்கிக் கொடுத்திருந்தார். பின்னர் அதே மெட்டு பாலுமகேந்திராவின் "நிரீக்சனா" என்ற தெலுங்குப் படப்பாடலாகவும், ஓட்டோ ராஜா தமிழ்த் திரைப்படத்தின் காதல் ஜோடிப் பாடலாகவும் தாவியதை விபரிக்கின்றது இவ் ஒலித்தொகுப்பு.

ஒரு மெட்டு மூன்று பாட்டு

Thursday, March 15, 2007

மாயக்கண்ணாடி படப்பாடல்கள்


பஞ்சு அருணாசலத்தின் தயாரிப்பில் சேரனின் இயக்கத்தில் வெளிவரும் "மாயக்கண்ணாடி" திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் எப்படி இருந்தன என்பதை (பரிசோதனை முயற்சியாக) ஒலிப்படைப்பின் மூலம் தருகின்றேன்.
ஒரு திருத்தம்: ஒலிப்படைப்பில் , பஞ்சு அருணாசலத்தோடு இளையராஜா 73 படங்களில் பணியாற்றினார் என்பதை 62 ஆகத் திருத்திக்கேட்கவும் ;-)
பாடல்களைக் கேட்க

Friday, March 9, 2007

கவிஞர் அறிவுமதி பேசுகிறார்

தன் கவித்தமிழில் ஆங்கிலம் ஆக்கிரமிக்காது கவி படைத்த கவிஞர் அறிவுமதி, தன் வாழ்வியல் அனுபவங்களைத் தருகின்றார். தன் இலக்கியப் பிரவேசம், சினிமா உலக அனுபவம், ஈற்றில் சினிமா உலகில் தன் வனவாசம் மேற்கொள்ள ஏதுவாய் அமைந்த சம்பவம் போன்றவற்றைத் தொட்டுப் போகின்றது இப்பேட்டி.

கேட்க, கீழே உள்ள பெட்டியை அழுத்தவும்.

Arivu.wma

காற்றின் மொழி


காற்றின் மொழி ஒலியா.....இசையா......?
பூவின் மொழி நிறமா....மணமா....?
கடலின் மொழி அலையா...நுரையா....?
காதல் மொழி விழியா....இதழா......?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மெளனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது

உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சிமீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு வித்யாசாகரின் இசை கலந்து, சுஜாதா மற்றும் பால்ராம் இரு தனித்தனிப்பாடல்களாகப் பாடியிருக்கின்றார்கள்.அழகிய தீயே, பொன்னியின் செல்வன் போன்ற ரசனை மிகு திரைப்படங்களைத் தந்த இயக்குனர் ராதாமோகனின் படமிது. தன் நண்பன் மற்றும் இப்படத்தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜுக்கு கொடுக்கப்போகும் ஓப்பற்ற பரிசு என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். வாய்பேசமுடியாப் பெண்ணாக ஜோதிகா நடித்த இறுதிப்படம் கூட.
மொழி படம் பற்றிய காட்சித்தளம்: http://www.mozhithefilm.com/

Wednesday, March 7, 2007

முதல் வணக்கம்

என் மனங்கவர்ந்த பாடல்கள், நான் கண்ட ஒலிப்பேட்டிகள், வானொலிப் படையல்களின் அணிவகுப்புக்கான இல்லம் இது.

நேசம் கலந்த நட்புடன்
-கானா.பிரபா-