Pages

Sunday, October 30, 2011

இளையராஜா இசையில் பாடகி மின்மினி

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். பாடகி மின்மினி விஷயத்திலும் அப்படித்தான் அமைந்திருக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் "மீரா"திரைப்படத்தின் மூலம் தமிழில் பாடகியாக வந்த அவருக்கு, அந்த ஆரம்ப காலத்தில் நிறையைப் பாடல்களைக் கொடுத்து வாய்ப்பளித்திருக்கின்றார் ராஜா. மலையாள தேசத்துக் குரல்களின் மீது ஏனோ ராஜாவுக்குத் தீராக் காதல். சுஜாதா, சித்ரா, சுனந்தா, செர்ணலதா (இவர் எம்.எஸ்.வி இசையில் தான் அறிமுகமானார் ஆனால் ராஜா கொடுத்த பாடல்களால் கிடைத்த புகழை இங்கே சொல்லவா வேண்டும்), என்று நீளும பட்டியலில் மின்மினியும் இணைந்து கொண்டார். ரோஸில்லி என்ற இயற்பெயர் கொண்ட

மினி ஜோசப் என்ற பெயரிலேயே வலம்வந்திருக்கின்றார் இது தமிழ்த்திரையுலகுக்கு வரமுன்னர். மினி ஐ மின்மினி என்று பெயர் சூட்டியதும் ராஜாவே தான். செர்ணலதா போல இவருக்கும் ஓரவஞ்சனை இல்லாது நிறைய நல்ல நல்ல பாடல்களை ராஜா கொடுத்திருக்கின்றார். ஆனால் அன்றைய சூழலில் ஜானகி, சித்ரா போன்ற முதல் வரிசைப் பாடகிகள் அளவுக்கு வராமற் போயிருந்தார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு ரோஜா படத்தின் மூலம் ஆரம்பமாக, அந்தப் படத்தின் முத்திரைப் பாடல் "சின்னச் சின்ன ஆசை" பாடல் மின்மினிக்குக் கிடைக்க அவர் அதுவரை தொடாத உயரங்களைத் தொட்டார் இந்தப் பாடல் கொடுத்த புகழால். இசைஞானியின் பாடகிகளில் செர்ணலதாவையும், மின்மினியையும் வைத்து ரஹ்மான் தன் ஆரம்ப காலப் படங்களில் நிறையவே கொடுத்திருக்கின்றார். ஆனால் மின்மினி என்பது வானத்தில் ஒளிர்ந்து மறையும் என்பது இவரின் வாழ்க்கையிலும் எழுதப்பட்ட துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது. மின்மினிக்குத்க் திடீரென்று பேச்சாற்றால் இழக்கப்பட, அதுவரை சேர்த்த அத்தனை புகழும் அங்கீகாரமும் ஒரே நாளில் கலைந்து போகின்றது. பாடகி மின்மினி, தமிழ்த்திரையுலகின் முக்கிய ஆளுமைகள் இளையராஜா, ரஹ்மான் தவிர தேவா உள்ளிட்ட மற்றைய இசையமைப்பாளர்களின் இசையில் பாடினாலும் இந்த இரு இசையமைப்பாளர்களிடம் இருந்து பெற்ற பாடல்கள் அளவுக்கு இல்லை என்பதையும் இங்கே சொல்லி வைக்க வேண்டும்.

மாலைச் சந்திரன் (உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்) பாடலை எஸ்.பி.பி என்ற ஜாம்பவானுடன் பாடும் போது அதில் வரும் 2.28 நிமிடத்துளிகளில் மின்மினி அனாயாசமாக "மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மன்மத ராகத்திலே" என்று பாடுவதிலாகட்டும் "ஏ அம்மன் கோயில் வாசலிலே வாசலிலே" (திருமதி பழனிச்சாமி) என்று ( 2.47 நிமிடம்) அதுவரை கலாய்த்துப் பாடிய எஸ்.பி.பி, சுந்தரராஜன் குழுவுக்குப் போட்டி போட்டுப் பாடுவதிலாகட்டும் மின்மினியின் குரலின் கனிவுக்கு சில சான்றுகள். "அடி பூங்குயிலே பூங்குயிலே" (அரண்மனைக் கிளி) பாடலில் மனோவோடு இணைந்து பாடும் மின்மினிக்கு மாற்றீடாக இந்தப் பாடலில் இன்னொரு குரலைப் பொருத்திப் பார்க்கமுடியவில்லை. ஆர்.வி.உதயகுமாரின் உதவியாளராக இருந்து இயக்குனராக வந்த செய்யாறு ரவியின் இயக்கத்தில் வந்த தர்மசீலன் படத்தில் வரும் "தென்றல் வரும் முன்னே முன்னே" பாடல் மின்மினிக்கு ராஜா கொடுத்த அங்கீகாரங்களில் ஒன்று. வள்ளி படத்தில் வரும் "என்னுள்ளே என்னுள்ளே" என்ற பாடலில் சொர்ணலதா வழியாக ஏங்கும் காதலியின் உணர்வைக் கொண்டு வந்த ராஜா, உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் படத்தில் "தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே" பாடலை மின்மினிக்குக் கொடுத்து அதே பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார். இவையெல்லாவற்றுக்கும் மேலாக என் மனசுக்கு நெருங்கிய பாடல்களில் ஒன்றான "நல்ல தலைவனும் தலைவியும்" (பிள்ளைப்பாசம்) பாடலில் "எங்கும் பொழியுது ஒளிமழை வண்ண விளக்குகள் பலவகை... ஊரெல்லாம் திருவிழா" என்று பாடும் அந்தக் கணங்களில் நெஞ்சில் நிறைந்த் நிற்கின்றார்.

இந்தப் பகிர்வில் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடகி மின்மினிக்குக் கிட்டிய பாடல் முத்துக்கள் சிலவற்றைப் பகிர்கின்றேன். கேட்டு அனுபவியுங்கள்.

"லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணை ஸ்டவ்வு" (மீரா) மனோவுடன் மின்மினி



"மாலைச் சந்திரன் மலரைத் தேடுது" (உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்) எஸ்.பி.பியுடன் மின்மினி



"அம்மன் கோயில் வாசலிலே" (திருமதி பழனிச்சாமி) எஸ்.பி.பி, சுந்தரராஜன், மின்மினி


"தொட்டுத் தொட்டுத் தூக்கிப்புட்டே" (உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்) மின்மினி தனித்து


"தென்றல் வரும் முன்னே முன்னே" (தர்மசீலன்) அருண்மொழியுடன் மின்மினி


"நல்ல தலைவனும் தலைவியும் வாழும் வீடு தேவன் ஆலயம்" (பிள்ளைப்பாசம்) மனோவுடன் மின்மினி


"அடி பூங்குயிலே பூங்குயிலே" (அரண்மனைக்கிளி) மனோவுடன் மின்மினி

Thursday, October 20, 2011

றேடியோஸ்புதிர் 62: மினி ஜோசப் என்னவானர்?


வணக்கம் வணக்கம் வணக்கம்,

நீஈஈஈஈண்ட நாட்களுக்குப் பின்னர் றேடியோஸ்புதிர் பகுதியில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தப் புதிரும் ஒரு அட்டகாசமான ராஜாவின் அறிமுகம் சார்ந்த கேள்வியாக அமைந்திருக்கின்றது.
இசைஞானி இளையராஜாவுக்கு கேரளத்துக் குயில்களின் குரல்களில் ஏனோ மோகம், அந்தவகையில் அவர் தமிழுக்கு அறிமுகப்படுத்திய மலையாளப்பாடகர்கள் பட்டியல் நீண்டது. அப்படி வந்தவர் தான் இந்தப் பாடகி. இந்தப் பாடகி ஏற்கனவே மலையாளத்தில் ஒரு பாட்டுப் பாடியிருந்தாலும், தமிழில் இசைஞானி இளையராஜாவின் முத்திரைப் பாடலைப் பாடக் கிடைத்தது அவருக்கு ஒரு கெளரவம்.

ஆனால் நாகூர் பாபு, பாடகர் மனோ ஆனது போல, மினி ஜோசப் என்று வந்த இந்தப் பாடகியின் பேரை மாற்றினார் இசைஞானி. அப்போது பெரும் எதிர்பார்ப்பில் வந்த படத்திற்காக நல்லதொரு பாடலொன்றை இந்தப் பாடகிக்காக வழங்கினார் ராஜா. தொடர்ந்து இளையராஜாவின் பல படங்களில் பாடகியாகச் சிறப்பிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு ஒரு திருப்புமுனை கிடைத்தது இன்னொரு இசையமைப்பாளரால். ஆனால் என்ன பயன். இவருக்குக் கிடைத்த அந்தப் பெரும் புகழ் இருக்கும் போதே தன்னால் பாட முடியவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார். மீண்டும் பாட வந்தபோது ஏற்கனவே புதுக்குயில்கள் பல கூடாரமிட்டிருந்ததால் முற்றாகவே மறக்கடிப்பட்ட பாடகியாகிப் போனார். யார் இந்த மினி ஜோசப் இவர் பாடிய அந்த முதற்பாட்டு என்ன, இவரின் பெயரை இசைஞானி எப்படி மாற்றி அமைத்தார் என்பது தான் இந்தப் புதிரின் கேள்வி

மண்ணெண்ணை தீப்பிடிப்பது போலச் சட்டென்று வரவேண்டும் பதில்கள் ;)

போட்டி இனிதே ஓய்ந்தது

பதில் இதுதான்
அந்தப் பாடகி மினி ஜோசப் என்ற மின்மினி
ராஜா அறிமுகப்படுத்திய படம்: மீரா
பாடல்: லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணை ஸ்டவ்வு
பிரபலமாக்கிய இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: சின்னச் சின்ன ஆசை (ரோஜா)

Friday, October 14, 2011

கேட்டதில் இனித்தது: நடந்தால் இரண்டடி....இருந்தால் நான்கடி

பதினாறு வருஷங்களுக்கு முந்திய என் தீபாவளி சொந்த பந்தங்கள், நட்புக்களைப் பிரிந்து சந்தித்த முதல் தீபாவளியாக மெல்பனில் அப்போது பல்கலைக்கழக மாணவனாகப் புலம்பெயர்ந்தபோது அமைந்தது. தீபாவளிக்கு ஒரு சில தினங்கள் முன்னர், தங்கியிருந்த வீட்டுத் தபால்பெட்டியைத் திறக்கிறேன். ஊரில் இருந்து ஒரு தீபாவளி வாழ்த்து மடல். மடலைப் பிரித்துப் பார்த்தால் "அன்புள்ள பிரபு அண்ணாவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்", சித்தியின் மகள் தன் கைப்பட எழுதிய அந்த வாழ்த்துமடலில் பிரசாந்த் இன் படம் போட்டிருந்தது. குறும்பாக என்னைப் பிரசாந்த் அண்ணா என்று அப்போது என் தங்கை அழைப்பது வழக்கம். அதன் வெளிப்பாடே வாழ்த்துமடலிலும் பிரதிபலித்திருந்தது. அந்த நேரம் வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, வண்ண வண்ணப்பூக்கள், உனக்காகப் பிறந்தேன் என்று பிரசாந்த் இன் படங்களும் தொடர்ச்சியாக வந்து கொட்டமடித்துக் கொண்டிருந்த நேரமது. அந்த வாழ்த்துமடலைப் பத்திரப்படுத்தி இன்னமும் வைத்திருக்கின்றேன். நாகரீகமும், தொழில்நுட்பமும் மறக்கடிக்க வைக்கின்ற நல்ல விஷயங்களில் ஒன்று நமது பண்டிகைகளுக்கு வரும் வாழ்த்துமடல்கள்.

இன்று யதேச்சையாக ராஜ் டிவியைப் போட்டபோது, "நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி" என்ற பாடல் போய்க்கொண்டிருந்து. சிலைபோல இருந்து பாடலை ரசித்து விட்டு, மீண்டும் மீண்டும் ஐபொட் இல் கேட்டும் தீரா ஆசையோடு கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். அப்போதெல்லாம் டியூசன் சென்ரர் காலத்துக் காதலில், தேர்ந்தெடுத்த சந்தோஷம் கொட்டும் பாடல்களையும், அவள் வராதவிடத்து வந்து போகும் "குடகுமலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி" போன்ற காதல் அலைவரிசையில் வரும் சோக மெட்டுக்களையுமே கேட்டுக் கேட்டுத் தீர்ப்பது வழக்கம். தத்துவம் கொட்டும் பாடல்களைச் சீண்டாது ஒதுக்கி வைப்பேன். அப்படியான பாடல்களைக் கேட்டால் "நீ அது ஆகிறாய்" என்ற தத்துவமசி விளக்கத்துக்கு இலக்கணமாகி விடுவோமோ என்ற பயமும் ஒருபுறம். அப்படி இருக்கையில் விதிவிலக்காக மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது தான் இந்த "நடந்தால் இரண்டடி" பாட்டு. செம்பருத்தி படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். எல்லாப் பாடல்களுமே கேட்டுச் சலிக்காத மெட்டுக்கள். அத்தோடு அந்த நேரம் மேம்படுத்தப்பட்ட ஒலித்தரத்தில் ராஜாவின் பாடல்களை ஒலிப்பதிவு செய்து வந்த பாடல்களில் இதுவுமொன்று. பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க எடுத்த நேரமோ மொத்தம் முக்கால் மணி நேரம் என்று செல்வமணி முன்னர் தன் பேட்டியில் சொல்லியிருக்கிறார். அப்படி வந்த மெட்டுக்களில் ஒன்றுதான் நடந்தால் இரண்டடி. இப்போதெல்லாம் முக்கால் மணி நேரம் முப்பது பாட்டுக்கள் போடுமளவுக்கு நம்ம இசையமைப்பாளர்கள் அங்க இங்க கைவச்சு ஒப்பேத்திவிடுவார்கள். ஆனால் ஒவ்வொரு பாட்டிலும் துளிகூட இன்னொருவர் சாயல் கலக்காது எட்டுப்பாட்டுக் கொடுப்பது அசாத்தியம். அது ராஜாவால் மட்டுமே முடியும்.


மெளத் ஆர்கனை வைத்துக் கொண்டு பாடலின் ஆரம்பத்தைத் தொடுத்து அப்படியே பாட்டு முழுக்க வரும் பின்னணித் தபேலாவும், இன்னபிற வாத்தியங்களும் வார்த்தைகளைச் சேதாரமின்றிக் கரை சேர்க்கின்றன. பாட்டியம்மாவின் வீடு தேடி வரும் பேரன், அவள் அரவணைப்புக் கிட்டாத விரக்தியில் பாடும் இந்தப் பாடலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் பிறைசூடன். பாடலை மீண்டும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள், விரக்தியில் இருந்தாலும் நேர்மறைக் கருத்தற்ற நம்பிக்கையோடு அவன் பாடும் வரிகள் உங்களையும் கட்டிப்போடும்.

Monday, October 10, 2011

இயக்குனர் டி.கே.போஸ் & இசைஞானி இளையராஜா கூட்டணி


எண்பதுகளிலே இசைஞானி, தனிக்காட்டு ராஜாவாக இருந்த நேரம். அவருடைய படத்தை போஸ்டரின் மேல் முகப்பில் ஒரு வட்டத்துக்குள் போட்டாலே போதும் வேறு எந்த சமரசங்களும் இல்லாமல் தயாரிப்பாளர் போட்ட காசுக்கு மேலாக எடுத்துக் கொண்டு போய்விடுவார். அந்த நேரத்தில் ராஜாவின் நாலு பாட்டுக் கிடைத்தால் போதும் அதற்கேற்றாற்போலக் கதை பண்ணிக் காசு பார்த்து விடலாம். இந்த நிலையில் கே.ரங்கராஜ், கங்கை அமரன் போன்ற இயக்குனர்கள் ராஜாவின் இசைக்குத் தோதான கதையைப் பொருத்திப் படம் பண்ணினார்கள். அதிலும் எண்பதுகளிலே கே.ரங்கராஜ் இன் படங்களுக்குத் தான் இசைஞானி இளையராஜா அதிகம் இசையமைத்தார் என்ற பெருமை வேறு.

இந்த வட்டத்தில் இருந்த இன்னொரு இயக்குனர் தான் டி.கே.போஸ். டி.கே.போஸ் இயக்கிய படங்கள் பெரும்பாலும் கங்கை அமரனின் மாமூல் கதைகளாக இருந்த காரணத்தால் அதிகம் தெரியாமலேயே மறைந்து போனவர் இவர். அந்த நேரத்தில் பேசும் படம், பொம்மை போன்ற சினிமா இதழ்கள் வந்துகொண்டிருந்தன. அந்த இதழ்களில் புதுப்படங்கள் குறித்த கண்ணோட்டத்திலேயே டி.கே.போஸ் என்ற இயக்குனர் கவிதை பாடும் அலைகள் என்றதொரு படத்தை இயக்குவதாக அறிந்து கொண்டேன். அப்போது தான் எங்கே படித்த ஞாபகம் , டி.கே.போஸ் உம் இசைஞானி இளையராஜாவும் பால்யகால நண்பர்கள் என்று. கவிதை பாடும் அலைகள் படத்துக்கு முன்பதாகவே என்னை விட்டுப் போகாதே, பொங்கி வரும் காவேரி, ராசாவே உன்னை நம்பி ஆகிய படங்களை இசைஞானி இளையராஜாவோடு கூட்டணி அமைத்து இயக்கியிருக்கின்றார் இவர். அப்போதெல்லாம் இசைஞானியின் பாடல்களைக் கேட்டுக் கேட்டு உடம்பெல்லாம் சுதி ஏற்றிக் கொண்டு திரிந்த வேளை, பாட்டுக் காட்சியையும் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் வீடியோ கடைகளில் இந்தப் படங்களைத் தேடியெடுத்து நண்பன் வீட்டு வீசிஆரில் போட்டுப் பார்த்ததுண்டு. நாலு பாட்டுக்காக ஒரு முழு நீளப்படத்தையே இரண்டரை மணி நேரம் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் அப்போது. ரஜினி, கமல் என்று கோஷ்டி அமைத்துப் படம் பார்க்கும் நண்பர் கூட்டத்தில், இளையராஜாவுக்காக ராமராஜனையும், புதுமுகத்தையும் பார்க்கும் சகிப்புத் தன்மை எனக்கு இருக்கலாம், கூட்டாளிகளுக்கு இருக்குமா? அடிக்கடி பல்பு வாங்கினேன். அதிலும் கவிதை பாடும் அலைகள் என்ற படத்தை நான் பரிந்துரைக்கப் போய், வீடியோக்கடையில் வாங்கி வீட்டுக்காரரோடு படம் பார்த்த இன்னொரு நண்பன் கொடுத்த சாபம் இன்றுவரை நினைவில் இருக்கு.
ஆனாலும் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தூண்டியது அந்தப் படத்தில் வந்த எல்லாப் பாடல்களுமே அப்போது சென்னை வானொலியில் பிரபலப்படுத்தப்பட்டவை.


டி.கே.போஸ் என்ற இயக்குனர் தன்னளவில் ரசிகர்களைத் திருப்திப்படுத்தக் கூடிய படங்களை அதிகம் கொடுக்காவிட்டாலும், இசைஞானி இளையராஜாவோடு இணைந்த இந்தப் படங்களே அவருக்கான விலாசத்தைக் கொடுத்திருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 18, 2011 இல் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த இவரின் நினைவாக, டி.கே.போஸ், ராஜாவோடு கூட்டணி அமைத்த படங்களின் பாடற் தொகுப்பை இங்கே தருகின்றேன்.



பொங்கி வரும் காவேரி படத்திற்காக வரும் "வெள்ளிக் கொலுசு மணி வேலான கண்ணுமணி" அருண்மொழியோடு சித்ரா


ராசாவே உன்னை நம்பி படத்தில் வரும் "ராசாத்தி மனசுல இந்த ராசாவின் நெனப்புத் தான்" மனோவோடு பி.சுசீலா


என்னை விட்டுப் போகாதே படத்திற்காக"பொன்னப்போல ஆத்தா" பாடும் இசைஞானி இளையராஜா


கவிதை பாடும் அலைகள் படத்தில் வரும் முத்தான மூன்று பாடல்கள் இனி

"உன்னைக் காணாமல் நான் ஏது" அருண்மொழி, சித்ராவோடு


"வானிலா தேனிலா வாடைப்பூ நிலா" மனோவும், சித்ராவும்


"கண்ணே என் கண்மணியே" மனோவும், சித்ராவும்