Pages

Saturday, January 31, 2009

நாகேஷ் என்றதோர் நகைச்சுவைத்திலகம் ஒலிப்பேட்டி


"நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you" நடிகர் நாகேஷ் சிட்னி தமிழ் முழக்கம் வானொலிப் பேட்டிக்காக

தற்போது நிலவும் அசாதாரண நிலையும், அவலச் செய்திகளும் வரும் இவ்வேளை நம் வாழ்வில் இது நாள் வரை திரையில் பிம்பமாக வந்து சந்தோஷங்களை மனதில் நிரப்பிய இன்னொரு கலைஞன் மறைந்திருக்கின்றான். நாகேஷ் என்ற அந்த மாபெரும் கலைஞனைப் பற்றிய பதிவை இறக்கி வைக்காமல் இருக்க முடியாது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நான் தங்கியிருந்த கன்னிமாரா ஓட்டலில் ஒரு நாள் மாலைப் பொழுது எனது அறையை விட்டு வரவேற்பு இடம் நோக்கி இறங்கி வருகின்றேன். அந்த இடம் அந்த சமயம் பரபரப்பாகின்றது. விடுப்புப் பார்க்கும் நோக்கில் எட்டிப் பார்க்கின்றேன். அது அவரே தான். நாகேஷுக்கு சென்னை ரோட்டரி கிளப் ஒரு கெளரவ விருதை அந்த மாலைப் பொழுதில் கன்னிமாராவில் வழங்கி கெளரவித்த நிகழ்வு முடிந்து வரவேற்பு இடத்தில் இருந்த சோபாவில் ஆற அமர இருந்து கொண்டிருந்தார். ஆவலோடு போய் பேச்சுக் கொடுத்தேன். என்னைப் பற்றிய விபரங்களை எல்லாம் கேட்டவாறே அவர் கை மட்டும் என் கையை இறுகப் பற்றியிருந்தது. ஆசையோடு புகைப்படம் எடுத்த போது தோழில் கையால் அணைத்தவாறே போஸ் கொடுத்து விடைபெறும் போதும் அன்பாக வழியனுப்பி வைத்தார்.

திருவிளையாடல் போன்ற படங்களில் நாகேஷ் என்ற கலைஞனின் நகைச்சுவைப் பரிமாணம் தொட்டது போல, அவரது அடுத்த சுற்றில் கமலஹாசனின் பல படங்களில் வெறும் நகைச்சுவைப் பாத்திரமென்றில்லாது விதவிதமாக வித்தியாசம் காட்டிச் சென்றவர். அதற்குத் தலை சிறந்த உதாரணம் நம்மவர் படத்தில் அவர் நடிப்பு.

நகைச்சுவைத் திலகம் நாகேஷ் நினைவாக எமது சகோதர வானொலி தமிழ் முழக்கம் என்ற வானொலியில் கலாநிதி் ஆ.சி.கந்தராசா அவர்கள் நடிகர் நாகேஷ் உடன் பத்தாண்டுகளுக்கு முன்னர் கண்ட பேட்டியின் எழுத்து வடிவையும், ஒலி வடிவையும் இங்கே தருகின்றேன். வானொலியில் இருந்து கேட்ட கேள்விகளுக்கு நாகேஷிற்கே உரித்தான நகைச்சுவை மட்டுமன்றி சிந்திக்கவும் விட்டிருக்கின்றார்.வானொலி: வணக்கம் நாகேஷ் சார்
நாகேஷ்: வணக்கம் சார்

வானொலி: உங்களிடம் இப்பொழுது என்னென்ன படங்கள் கைவசம் இருக்கின்றன?
நாகேஷ்: எங்கிட்ட இப்போ கைவசம் இருக்கின்ற படம் முருகன் படம், ராமர் படம், ஆஞ்சநேயர் படம், திருவள்ளுவர்... இதுமாதிரி நிறையப் படங்கள் இருக்கு

வானொலி:
நடித்துக் கொண்டிருக்கின்ற படங்களைக் கேட்டேன்
நாகேஷ்: இப்ப யார் நடிக்கலேங்கிறீங்க? ஒவ்வொரு வீட்டிலேயும் அம்மா, பையன், பேத்தி, மாமன், மச்சான் எல்லோரும் ஒருத்தொருக்கொருத்தர் நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க

வானொலி: இல்லை, எத்தனை படங்கள்னு கேட்டேன்.
நாகேஷ்: ரசிக்கும் படங்கள் ரொம்ப.....கம்மி. ரசிக்க முடியாத படங்கள் நிறைய

வானொலி: உங்க எதிர்காலம் எப்படி இருக்கும்?
நாகேஷ்: இன்னிக்கே சொல்லணும்; இல்லையா? நான் உங்களைக் கேட்கிறேன், சார்.
உங்கலுக்கு மொத்தம் எத்தனை பல்லு? அப்படின்னு நான் கேட்டா, 32ன்னு சொல்லுவீங்க. சொல்லிக் கேட்டீங்களே தவிர என்னிக்காவது என்ணிப் பார்த்திருக்கீங்களா?


வானொலி: உங்கள் திருமணத்துக்குப் பிறகுதான் நீங்கள் பெரிய நிலையை அடைந்தீர்களென்று கேள்விப்பட்டேன், உண்மைதானா அது?
நாகேஷ்: நீங்க கேள்விப்பட்டது அப்படி, நான் கேள்விப்பட்டது என்ன தெரியுமா? Marriage is a romance in which the hero dies in the first chapter.

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.

வானொலி: நீங்கள் நடித்த முதல் படம்?
நாகேஷ்: இரண்டாவது படத்துக்கு முந்திய படம்

வானொலி: உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி?
நாகேஷ்: நினைவில் வச்சுக்கிற அளவுக்கு எந்த நிகழ்ச்சியுமே இல்லை, என்னைப் பொறுத்தவரையிலும். ஆனா ஒண்ணு. மறக்க முடியாம இருக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. ஒலிம்பிக்கிலே நடக்குதே அந்த ஓட்டப்பந்தயத்துல இந்தியா வர்ரது ரொம்பக் கஷ்டமாயிருக்கு. தமிழன் வர்ரது ரொம்பக் கஷ்டம். லிஸ்டிலேயே வரமாட்டேங்கிறாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரையிலும் அது 100 மீட்டராயிருந்தாலும் சரி, 400 மீட்டர்ஸ் தடையோட்டமா இருந்தாலும் சரி ஒரு தமிழனுக்குப் பின்னால ஒரு வெறி நாயை விட்டாப் போதும், world best record அவன் தான். உயிருக்குப் பயந்து அப்படி ஓடுவான்னா அப்படி ஓடுவன் சார்.

இந்த ஒரு சான்ஸ் இருக்கு, ஒரு வேளை அவங்க ஒரு வெறி நாயும் கூட ஓடலாம்னு பர்மிஷன் குடுத்தாங்கன்னா.

வானொலி: முந்திய நகைச்சுவைக்கும் இன்றைய நகைச்சுவைக்கும் ஏனிந்த தேய்மானம்?
நாகேஷ்: நிலவு அதாவது நிலா....I mean moon....என்னிக்குமே ஒரே மாதிரித்தான் இருக்கும், ஆனா, நாம பார்க்கும் போது தேய்பிறையா வந்து ஒருநாள் இருட்டடிச்சுப் போய் அமாவாசை ஆகி, அதுக்கப்புறம் வளர்பிறை வரத்தான் செய்யும். அந்த வளர்பிறை வருவதற்கு அதிக நாட்கள் ஆகாதுங்குற நம்பிக்கை எனக்கு நிச்சயமா இருக்கிறது சார்.

வானொலி: ஜாதிப்பிரிவினைகளைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
நாகேஷ்: பலபேர் பலவிதமான காரணக்கள் சொல்லுவாங்க. என் வீட்டைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு அந்தணன், பிறப்பால். நான் ஒரு கிறித்தவப் பெண்ணை மணந்து கொண்டேன். மூன்று பையன்கள். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். முதல் மகன் ஒரு கிறித்தவப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான். இரண்டாவது மகன் ஒரு முசல்மான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான். மூன்றாம் மகன் ஒரு ஐயர்ப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான்.

எங்கள் குடும்பத்தில் எதுவிதமான குழப்பமும் இல்லை. காரணம் எல்லாக் கல்யாணத்துக்குமே மறுப்பே சொல்லாமல் நான் நடத்தி வைத்தது தான். ஏனென்றால், என் மனதுக்குள் இந்த ஜாதி மதம் என்பதெல்லாம் கிடையாது. எவ்வளவு பேர் எத்தனைவிதமான காரணங்கள் சொன்னாலும் கடைசியில் என் முடிவுக்குத்தான் வந்து தீர வேண்டும். அதை நான் செய்து காட்டவும் முடியும்.

ஜாதி மதமென்று எப்படி வருகிறதென்றால் உன் வெளித்தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இது நெம்பர் 1.

நெம்பர் 2, உனக்கு ஒன்று பிடித்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.

நெம்பர் 3, உனக்கு ஒன்று பிடித்தது அதுவே எனக்கும் பிடித்தது. அதனால் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.

வானொலி: அடுத்ததாக, உங்களிடம் ஒரு அரசியல் கேள்வி, பிற்கால இந்தியா எப்படி இருக்கும்?
நாகேஷ்: அது ஒரு டைப்பாத்தான் இருக்கும். இப்ப உங்க ஆஸ்த்திரேலியா இருக்கே, அங்க வந்து கிரிக்கெட், விஞ்ஞானம், கங்காரு, புல்வெளிகள், பால், விவசாயம், இதெல்லாம் முன்னேறிக்கிட்டே இருக்கு. அங்கிருக்கும் தமிழர்கள்....நீங்க தயவு செய்து எனக்காக இல்லை மைக்கு....ஒண்ணு கண்டுபிடியுங்க. அந்த மைக் முன்னால் நின்னு யாராவது பேசுறாங்கன்னா....அவங்க பேசும் போது ஒரு சின்னப் பொய் சொன்னாக் கூட அந்த மைக் டைம் பாம் மாதிரி வெடிச்சு பேசுறவனுடைய தலை சுக்கு நூறாலகி....செத்துடணும்...on the spot.

ஏன்னு கேட்டா.....இவன் எடுக்கும் போதே....அன்பார்ந்த சகோதரிகளே, தாய்மார்களேன்னுதான் ஆரம்பிக்கிறான். இதில அன்பு இருக்கா? சகோதரி மாதிரிப் பார்க்கிறானா? அப்படின்னு ஆரம்பிக்கும் போதே....டமால் அப்படின்னு வெடி வெடிக்கும். இவன் இருக்க மாட்டான். அனேகமாக மைக் முன்னால பேசுறதுக்கு எவனுமே வரமாட்டான்.
மைக் முன்னால பேசுறத நிறுத்த முடிஞ்சா, சத்தியமா எந்த countryயும் முன்னுக்கு வரும் சார்.

வானொலி: உங்க குறிக்கோள் என்ன?
நாகேஷ்: குறிக்கோள்னு கேட்டா... ஒருத்தொருக்கொருத்தர் பேசாம.....யார் வம்புக்கும் போகாம....சும்மா உட்கார்ந்திடம்னு சொன்னாக்கா...ஏதோ சவ வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும்.

அதாவது ஒரு இழவு வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும்.

அதனால, கொஞ்சம் சுறுசுறுப்பா இருக்கணும்னா சண்டை வரணும் சார். ஆனா, சமாதானமா முடியணும். அப்புரம் வந்து....சழக்கு வழக்கெல்லாம் இருக்கணும். அது வந்து....சுவாரஸ்யமா முடியணும். பணக்காரன் ஏழையெல்லாம் இருக்கணும். ஆனா ஏழைதான் பணக்காரனுக்கே ஐடியா குடுக்கணும். இதெல்லாம் இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப சப்ணு போயிடும்.

இப்ப... ஏறி ஏறி இறங்கினாத்தான்....அதுக்குப் பேரே ட்ரெயின், கைகழுவி கைகழுவி சாப்பிட்டு முடிஞ்சவுடன் பந்திக்குப் பந்தி மாத்தி மாத்தி வேற பந்தி போட்டாத்தான் அது கல்யாண வீடே.
அது மாதிரி செத்துச் செத்துப் பிழைச்சாத்தான் உலகமே.
எதையுமே லேட் பண்ணுற தைரியம் வேணும் சார். அதான் சார் தமிழனுடைய குறிக்கோளா இருக்கணும்.

வானொலி: வாழ்க்கை சவுக்கியமா, சங்கீதமா இருக்கணும்னா என்ன பண்ணணும் சார்?
நாகேஷ்: நான் ஒரு கச்சேரிக்குப் போயிருந்தேன் சார். சிமிண்டுத் தரை போட்ட அற்புதமான ஆடிட்டோரியம். ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் தோடி ராகத்தில் மிகச் சிறப்பான வித்துவான். அப்பேர்ப்பட்ட மேதை தோடிராகத்தை வாசிச்சிட்டிருக்கும் போது உச்சக்கட்டத்தைத் தொடப் போறாரு. எல்லோரும் சீட் நுனிக்கு வந்து உட்கார்ந்துக்கிட்டிருக்காங்க. கை தட்டுறதுக்கு இரண்டு கையையும் விரிச்சு வைச்சிட்டிருக்காங்க. ஒண்ணு சேரணும். அந்த நேரத்தில் பின் வரிசையில் யாரோ ஒருத்தரு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து டங்... என்ற சத்தத்தோட கீழ போட்டாரு. தன்னுடையதில்லைன்னு தெரிஞ்ச முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவன் கூட எல்லோரும் யார்ரது காசுன்னு பார்க்கிறான். இப்போ எந்த நாதம் பெரிசுங்கிறீங்க? காசுடைய நாதமா? இல்லே சங்கீதத்தினுடைய நாதமா?

We all people especially வெளிநாட்டுல இருக்கிறவங்களா நான் பார்த்திருக்கிறேன். They live only on dollars.

வானொலி: சார், திருவிளையாடல் படத்தில சிவாஜி அவர்களை நடிப்பில் முந்திட்டீங்களே?
நாகேஷ்: அது உங்க அபிப்பிராயம். அவரை அடிக்கிறதுக்கு யாராலயும் முடியாது. நடிப்புக்குன்னே பிறந்த ஒரு பெரிய மேதைன்னு சொன்னாக்க அது சிவாஜி கணேசன் அவர்கள் தான்.

ஏன்னா படம் முடிஞ்சதுக்கப்புறம் அதை டப் பண்ணுறதுக்காக டப்பிங் பேசுறதுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களால். அப்ப என்னுடைய பாத்திரத்தைப் பார்த்தவுடன் சிவாஜிசார் முகமே கொஞ்சம் மாறினமாதிரி இருந்திருக்கு டைரக்டருக்கு. ஏதாவது சொல்லிடப் போறார், இதை எடுத்திடுங்க.... நான் இருக்கிற இடமே தெரியல...அப்படிங்கிறமாதிரி நினைச்சுடப் போறார்னு பயந்துகிட்டு இருக்கிறபோது..."ஏ.பி.என். இன்னொருதரம் அந்த சீனைப் போடு" ன்னு சிவாஜி கேட்டார். அப்ப பயம் இன்னும் ஜாஸ்தியாப் போச்சு.

மறுபடியும் போட்டாங்க. போட்டவுடன் "ஏ.பி.என் நான் இருக்கிறதே தெரியலியே, நகேஷ்தானே இருக்காப்பல இந்த சீன்ல" அப்படின்னவுடன்...எனக்கு உயிரே இல்லை. அப்புறம் சிவாஜி அவர்கள் சொன்ன வார்த்தைகள்...இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு foot கூட - ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே வாஇகக்ணு; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு" சொன்னதுக்கபுறம் தான். அவர் நடிகர் மாத்திரமல்ல அவர் பெரிய ரசிகர்னு சொல்ல ஆசைப்படறேன்.

அதே போர்ஷனை இன்னிக்கு வந்த ஹீரோ யார் கூடாவாவது நான் நடிச்சிருந்தேன்னா சத்தியமா தமிழ் மக்கள் யாருமே என்னை தருமி வேஷத்தில பார்த்திருக்க முடியாது. ஆகையினால, அவர் நடிகர் மட்டுமல்ல, பெரிய ரசிகர் ; அவர் சீன்னு வரும்போது அது யாராராயிருந்தாலும் சரி, அவர் மிதிச்சுத் தள்ளுவாரு. அதே சமயத்தில் அவரை விட நல்லா யாராவது பண்ணினாங்கன்னா அதை மதிக்கத் தெரிஞ்ச ஒரே ஆள், என்னைப் பொறுத்தவரைக்கும் சிவாஜி கணேசன் அவர்கள்தான்.

வானொலி: இறுதியான கேள்வி சார், ஆஸ்திரேலியா தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்?
நாகேஷ்: நண்பரே! ஆஸ்திரேலியத் தமிழர்களுக்காக நீங்கள் கேட்கிற கேள்விக்கு நான் பதில் சொன்னேன் தவிர எனக்கு இதெல்லாம் தெரியும், இதெல்லாம் என்னுடைய அனுபவம், இதெல்லாம் என்னுடைய சாதனையென்று சத்தியமாக தற்பெருமையிலயோ, இல்லை, மற்ற விதத்திலயோ நான் சொல்லவில்லை.

"நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you

Monday, January 19, 2009

றேடியோஸ்புதிர் 34 - படம் சொன்னா பாட்டு சொல்லுவீங்களா?

இந்த வாரம் மீண்டும் ராஜா வாரம்.
ஒரு நிகழ்ச்சியில் பிரபல பாடகர் சொன்னதையே புதிரா போட்டு வைக்கிறேன். ஆனால் அந்தக் குறிப்பிட்ட பாடலை சொன்ன பாடகர் பாடவில்லை.
மெல்லிசை மன்னரை எப்போது பார்த்தாலும் "அண்ணே நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணனும்ணே" என்று சொல்வாராம் இளையராஜா. அந்த நல்வாய்ப்பு ஏவிஎம் தயாரித்து ஆர்.சுந்தரராஜன் இயக்கிய "மெல்லத் திறந்தது கதவு" ரூபத்தில் வந்தது.

மெல்லிசை மன்னர் மெட்டுப் போட இளையராஜாவின் இசையருவி கலக்க, பாடல்கள் எல்லாம் தேன் மாரியாய். "ஒரே ஒரு பாடலை மட்டும் நானே மெட்டுப் போட்டு இசையமைக்க விடுங்கண்ணே" என்று ஆசையாகக் கேட்டு, இளையராஜாவே மெட்டுப் போட்டு இசையமைத்த அந்தப் பாட்டு எது என்பது தான் கேள்வி. ஒரே ஒரு க்ளூ கொடுப்போம் என்றால் அதையும் கப்பென்று பிடிச்சிடுவீங்க அதனால் எல்லாப் பாட்டையும் கேட்டு ராஜா மெட்டு கேட்குதான்னு தேடிப்பார்க்கவும் ;)

போட்டி முடிவடைந்தது, இளையராஜா மெட்டுப் போட்டு இசையமைத்த பாடல்
குழலூதும் கண்ணனுக்கு (சித்ரா). இந்தத் தகவலை என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி ஆல் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் பாடல் பின்னர் சீனி கம் என்ற ஹிந்தி திரைப்படத்திற்காகவும் ராஜாவால் மீள மெட்டுப் பயன்படுத்தப்பட்டது. இப்படத்தின் பின்னணி இசைத்தொகுப்பு வார இறுதியில் வெளியாகும்

Sunday, January 11, 2009

மை டியர் குட்டிச்சாத்தான் பின்னணிஇசைத்தொகுப்பு

தமிழில் வெளிவந்த முதல் முப்பரிமாணத் (3D) திரைப்படம் என்ற பெருமையைப் பெறுவது "மை டியர் குட்டிச்சாத்தான்". மலையாளத்தின் மிகப்பெரும் தயாரிப்பாளர் அப்பச்சனின் தயாரிப்பில் ஜிஜோவின் இயக்கத்தில் வெளி வந்தது. டிவிடி வடிவில் அண்மையில் இப்படம் எனக்குக் கிடைத்ததும், இந்த சாதனைப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தது.

மூன்று ஏழைச் சிறுவர்களுக்கு வாய்க்கும் குட்டிச் சாத்தானின் நட்பும், அந்தக் குட்டிச் சாத்தான் மூலம் இவர்கள் தங்கள் எல்லைகளுக்கு உட்பட்டு எவற்றையெல்லாம் சாதிக்கின்றார்கள், இறுதியில் இந்தக் குட்டிச் சாத்தானை உருவாக்கிய மந்திரவாதியால் ஏற்படும் ஆபத்து, குட்டிச்சாத்தானின் நிலை என்ன என்பதை மையப்படுத்தியே இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவினை அன்றைய பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமார் கொடுத்திருந்தார். முதல் 3D படத்திற்கு அதிகபட்சம் விட்டலாச்சாரியாவின் படங்களில் வரும் சிறப்பான மாயாஜாலத் தந்திரக் காட்சிகள் போல இப்படத்திலும் இல்லாதது பெரும் குறை. அத்தோடு அசோக்குமாரின் ஒளிப்பதிவு முக்கியமான தந்திரக் காட்சிகளுக்கே பயன்படுகின்றது. இன்னும் அதிகபட்ச காமிரா கைவண்ணத்தையும் கொடுத்திருக்கலாம்.

இசைஞானி இளையராஜாவின் இசையும், வைரமுத்து வரிகளில் இரண்டு பாடல்களோடு மட்டும் ஓய்ந்து விட்டது. ஆனாலும் பின்னணி இசையில் இசைஞானியின் தனித்துவம் இருக்கின்றது. குறிப்பாக வயலின் இசை பல இடங்களில் சோகத்துக்கும், மகிழ்ச்சிக்கும், வியப்புக்கும், விந்தைக்குமாக ராஜாங்கமே நடத்துகின்றது. எனவே தான் இப்படம் வெளியாகும் இசைத்தட்டுக்களிலும் முக்கியமான பின்னணி இசைத் துண்டுகளையும் சேர்த்தே கொடுக்கின்றார்கள்.

மலையாளத்தில் இருந்து ஆரூர் தாஸின் வசனங்கள் தமிழாக்கியிருக்கின்றன. நடிப்பைப் பொறுத்தவரை சோனியாவும், மற்றைய இரண்டு குட்டிப் பையன்களும், குட்டிச்சாத்தானாக வரும் பையனும் அளவுக்கு அதிகமாகவே சிறப்பாகத் தம் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். மற்றைய பாத்திரங்களில் மலையாள மூலப்படத்தின் நெடி அடிக்கின்றது.

"மை டியர் குட்டிச்சாத்தான்'' பட அனுபவம் பற்றி தினத்தந்தி, மாலைமலருக்காக அந்தத் திரைப்படத்தினைத் தமிழில் தயாரித்த்து விநியோகம் செய்திருந்த தயாரிப்பாளர் "கேயார்'' இப்படிச் சொல்கின்றார்.

"அப்பச்சனின் நவோதயா நிறுவனம் ஜிஜோ இயக்கத்தில் மலையாளத்தில் தயாரித்த "குட்டிச்சாத்தான்'' படம், கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அது ஒரு "3டி'' படம். கண்ணாடி போட்டுக்கொண்டு படம் பார்க்க வேண்டும். அந்த தொழில் நுட்பம் நமக்குப் புதியது. இந்த "3டி'' எனப்படும் முப்பரிமாணத் தொழில் நுட்பம் பற்றிய அடிப்படையான விஷயங்கள் எனக்குத் தெரியும்.

நான் திரைப்படக்கல்லூரியில் படித்தது பிலிம் பிராசஸிங் படிப்பு. எனவே, எனக்கு "3டி'' பற்றி கூடுதலாகவே அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

"குட்டிச்சாத்தான்'' கேரளாவில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அதை வாங்கி தமிழில் டப் செய்ய பலர் விரும்பினார்கள். ஆனாலும் அதன் தயாரிப்பாளர் மிகப்பெரிய விலையைச் சொல்லிக்கொண்டு இருந்தார். போட்டி அதிகரிக்கவே அவர் விலையைக் கூட்டிக் கொண்டே இருந்தார். அதை வாங்குவதற்கு இளையராஜா, பாலாஜி, ஜீவி போன்றவர்கள் முயற்சி செய்தார்கள். விலை ஏறிக்கொண்டே போனதால் சற்று தயங்கினார்கள்.

இந்த நிலையில் அதன் தயாரிப்பாளர் அப்பச்சனை அணுகினேன். சந்தித்தபின் அதை வாங்குவதென்று துணிச்சலாக முடிவு செய்தேன். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யும் உரிமையை நான் வாங்கினேன். எவ்வளவு விலை தெரியுமா? ஒரு கோடியே பதினைந்து லட்சம் ரூபாய்! அப்போது, ரஜினி படத்தின் தமிழ்நாட்டு வியாபாரமே நாற்பது முதல் ஐம்பது லட்சம்தான். டப்பிங் பட வியாபாரத்தின் விலை ஒரு லட்சம் தான்.

ரஜினி படத்தைவிட கூடுதலாகக் கொடுத்து ஒரு டப்பிங் படத்தை இவர் வாங்குகிறாரே என்று பலருக்கும் ஆச்சரியம் - அதிர்ச்சி!

முதலில் இந்திரா தியேட்டரை வாங்கிய நான், பிறகு பல தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தேன். அப்படி என் கட்டுப்பாட்டில் இருந்த சத்யம் தியேட்டரில்தான் "மை டியர் குட்டிச்சாத்தான்'' படத்தை வெளியிட்டேன்.

"3டி'' பட தொழில் நுட்பம், தியேட்டர்களுக்கும் புதிது. எனவே, திரையிடும் விஷயத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அவ்வளவுதான். பெரிய இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

இருந்தாலும் தைரியமாகவே இந்த விஷயத்தில் இறங்கினேன். முதலில் சத்யம் தியேட்டர். பிறகு ஈகா. சில நாட்களில் தமிழ்நாடெங்கும் திரையிட்டேன்.

1984 தீபாவளிக்கு இப்படம் வெளியானது.

அதே சமயத்தில், "வைதேகிகாத்திருந் தாள்''படத்தையும் வாங்கி வெளியிட்டேன். இரண்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன.

"மை டியர் குட்டிச்சாத்தான்'', எனது வாழ்க்கையில் எனக்குக்கிடைத்த முதல் பெரிய வெற்றி. எனவே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

இருப்பினும் எதிர்பாராத சோதனைகள் ஏற்பட்டன. படம் வெளியான நான்கு நாட்களில், இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அதனால் நாடெங்கும் கலவரம் மூண்டது. தமிழ்நாட்டிலும் பல தியேட்டர்கள் சேதப்படுத்தப்பட்டன. அது என் பட வெற்றியைப் பாதித்தது. பிறகு சமாளித்து வேகமெடுத்தது.

10-வது நாள் இன்னொரு பிரச்சினை. அப்போது சென்னை எங்கும் `மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் பரவியது. "3டி'' படம் என்பதால் கண்ணாடி போட்டுக்கொண்டுதான் படம் பார்க்க வேண்டும். அப்படி நாங்கள் தியேட்டரில் கொடுத்த கண்ணாடி மூலம்தான் இந்த நோய் வருகிறது என்று சிலர் பிரசாரம் செய்தார்கள்! நான் கவலைப்படவில்லை. எல்லா தியேட்டர்களிலும் கிருமிகள் பரவாமல் தடுக்க கண்ணாடிகளை "ஸ்டெரிலெஸ்'' முறையில் சுத்தம் செய்யும் மெஷின் வாங்கிக் கொடுத்தேன். அதனால் எந்தக் கிருமியும் கண்ணாடி மூலம் பரவ வாய்ப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. குழந்தைகளை தைரியமாக படம் பார்க்க அழைத்து வந்தார்கள்.

மீண்டும் சுறுசுறுப்பான வசூல் தொடங்கியது. முதலில் சென்னைக்கு 3 பிரதிகள் வெளியிட்டோம். மற்ற மாவட்டங்களுக்கு தலா ஒரு பிரதி. அடுத்த வாரமே 60 பிரதிகள் போடுமளவுக்கு அபார வெற்றியடைந்தது. "எப்படி கண்ணாடி அணிந்து படம் பார்ப்பது?'' என்று ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், ஜிதேந்திரா ஆகியோர் விளக்கப்படத்தின் `டெமோ'வில் இலவசமாக நடித்துக் கொடுத்தது மறக்க முடியாத அனுபவங்கள்.

சரி, இனி இந்த "மைடியர் குட்டிச் சாத்தான்" திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா வழங்கிய பின்னணி இசை, மற்றும் பாடல்களை இங்கே தொகுத்துத் தருகின்றேன். அனுபவியுங்கள் ;)

படத்தின் முகப்பு இசை


படத்தின் இறுதி இசை


மந்திரவாதிகள் தங்க வேட்டைக்குச் சென்று சிக்கலில் அகப்படுதல்
சிறுவர்கள் பாழடைந்த பங்களாவுக்கு குட்டிச்சாத்தானை முதல் தடவை தேடிப் போதல்


குட்டிச்சாத்தானை வரைந்து மகிழும் சிறுவர்கள்


சிறுவர்கள் குட்டிச்சாத்தானைத் தேடிப் போகும் இறுதி முயற்சி


குட்டிச்சாத்தானைக் காணும் சிறுவர்கள் மகிழ்ச்சியில். அற்புதமான வயலின் இசையும் இழையோடுகின்றது.


குட்டிச் சாத்தானுடன் கூடி விளையாடும் சிறுவர்கள். குட்டிச்சாத்தான் நடத்தும் இசைக்கச்சேரி


"செல்லக்குழந்தைகளே" பாடலோடு குட்டிச்சாத்தானும் சிறுவர்களும் ஆடிப்பாடுதல். (பாடியவர்கள் வாணி ஜெயராம், சுஜாதா)


குட்டிச்சாத்தான் ஓடும் கை ரிக்க்ஷாவில் அமர்ந்து, குறும்பு செய்யும் பணக்காரச் சிறுவர்களின் காரை விரட்டிப் பிடித்து முன்னேறல்


மதுபானக்கடையில் குட்டிச்சாத்தான் போய் மதுவை விரும்பி ரசிக்கும் காட்சி, ஆர்ப்பாட்டமான வயலின் இசை சிறப்பு


மந்திரவாதி குட்டிச்சாத்தானைத் தேடிப் பள்ளிக்கு வருதல்


குட்டிச்சாத்தானை தங்களிடம் இருந்து விலகிப் போகாமல் இருக்க சிறுவர்கள் போடும் திட்டத்தோடு "பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா" பாடல் (பாடியவர் கே.ஜே.ஜேசுதாஸ்)


மந்திரவாதியின் கையில் அகப்பட்டு கஷ்டப்படும் குட்டிச்சாத்தான்


குட்டிச்சாத்தானின் பிரியாவிடை

Wednesday, January 7, 2009

றேடியோஸ்புதிர் 33 - நான் கடவுள் இல்லை ;)

இசைஞானியின் "நான் கடவுள்" பாடல்கள் வந்து பட்டி தொட்டி, ஜீசாட், டிவிட்டார் எங்கும் அதே பேச்சுத்தான் இப்போது. "நான் கடவுள்" படம் வந்தால் பின்னணி இசையிலும் அவர் பின்னி எடுத்திருப்பது தெரியும். அதுவரை காத்திருப்போம்.

இந்தவேளை சற்றே சிறிய இடைவெளிக்குப் பின் இளையராஜாவின் கலக்கலான பின்னணி இசையோடு ஒரு புதிர். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இசை வரும் படத்தில் நடித்த சின்ன பொண்ணை இப்போது சின்னத் திரையில் தான் அதிகம் பார்க்கமுடிகிறது. சிறுவர்கள் அளவுக்கு மீறிப் படுத்தினால் இந்தப் படத்தின் தலைப்பில் வரும் சொல்லை வச்சு திட்டுவது இந்த கணினி யுகத்திலும் இருக்கே. அதுக்காக கடவுள் என்றெல்லாம் திட்டுவாங்களா?
தியேட்டருக்குப் போனதும் மறக்காம கண்ணாடி வாங்கிக் கொண்டு உள்ளே போவீங்களா மாட்டீங்களா?
அதுக்கு முதல் இந்தப் படம் என்னவென்று கண்டு பிடியுங்களேன், நான் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு வருகிறேன் ;)

புதிர் காலாவதியாகிவிட்டது

சரியான பதில்:

அந்தப்படம்: மை டியர் குட்டிச்சாத்தான்

சிறுமி: சோனியா

மை டியர் குட்டிச்சாத்தான் பின்ன‌ணி இசை வார‌ இறுதியில் வெளியிட‌ப்ப‌டும்puthir33.mp3 - Ilayaraja

Friday, January 2, 2009

பாடல் எடுத்து படம் பெற்ற பாலு ஆனந்த்

கடந்த றேடியோஸ்புதிரில் கேட்கப்பட்ட புதிருக்கான பதிலோடு இந்தப் பதிவு வருகின்றது. ஒரு காலகட்டத்தில் தொடர்ச்சியான வெற்றிப்படங்களைத் தந்த இயக்குனர் ஆர்.சுந்தரராஜன்.

அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற படங்களைத் தயாரித்த தூயவன் தயாரிப்பில் ஆர்.சுந்தரராஜன் இவர் இயக்கிய "வைதேகி காத்திருந்தாள்" பாடல்களை இசைஞானி இளையராஜா உருவாக்கி அவை ஒலிப்பேழைகளிலும் வந்து வெகு பிரபலம் அடைந்தன. அபோதெல்லாம் வழக்கமாக எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை வைத்து ஒரு பாடலாவது தரும் ராஜா அந்தப் படத்தில் அவரை உபயோகிக்காமலேயே பாடல்கள் அனைத்தும் பேசப்பட்டன. அதில் வரும் "ராசாத்தி உன்னை பாடல்" ஜெயச்சந்திரன் குரலிலும், ராசாவே உன்னை என்ற பாடல் பி.சுசீலாவின் குரலிலும் இருக்கும். மற்றைய பாடல்களோடு ஆண் குரல் பாடலான "ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை மட்டும் இயக்குனர் இயக்கிக் கொடுத்து விட்டு படத்தையும் முடித்து விட்டு அடுத்த படத்திற்குப் பாய்ந்து விட்டார். தயாரிப்பாளரோ "படத்தை பிரிவியூ பார்த்த விநியோகஸ்தர்கள் கேட்கிறார்கள், அந்தப் பெண் குரல் பாடலையும் படமாக்கித் தாருங்களேன்" என்று கேட்கவும் அந்த நேரத்தில் சுந்தரராஜன் மறுத்து விட்டாராம்.

அப்போது ஆர்.சுந்தரராஜனின் உதவி இயக்குனராக இருந்த பாலு ஆனந்த் தயாரிப்பாளரிடம் சென்று, "நான் ஒரே நாளில் அந்தப் பாடலைப் படமாக்கித் தருகின்றேன், எனக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள்" என்று கேட்கவும், தயாரிப்பாளரும் வேறு வழியின்றி சம்மதித்து, பணத்தையும் கொடுக்கிறார். பாலு ஆனந்தும் தான் சொன்னது போலவே இதை சவாலாக எடுத்துக் கொண்டு அந்தப் பாடலைப் படமாக்கிக் கொடுக்கிறார். அந்தப் படம் பெரு வெற்றி கண்டது. இதோ அந்த "ராசாவே உன்னை காணாத நெஞ்சு பாடல்" பி.சுசீலா குரலில்.

Rasave unnai - PSuseela

பாலு ஆனந்த் அந்த நெருக்கடி வேளையில் கை கொடுத்ததற்காக அவருக்குக் கிடைத்த பரிசு, அந்த தயாரிப்பாளர் தூயவனின் தயாரிப்பில் அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பு. "நானே ராஜா நானே மந்திரி" என்று விஜயகாந்த், ராதிகா, ஜீவிதா நடிக்க அப்படத்தை இயக்கிய அவர், அதே இளையராஜா இசையமைக்க முன்னர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் தனித் தனியாகப் பாடிய ஜெயச்சந்திரன், பி.சுசீலா ஜோடி இணைந்து "மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் பாடலைப் பாடி இன்னொரு சூப்பர் ஹிட்டைக் கொடுத்தார்கள். படமும் ஓரளவு ஓடியது. அந்தப் பாடலைக் கேட்க

Mayankinen Solla - P Suseela, Jeyachandran

அதன் பின்னர் பாலு ஆனந்த் "ரசிகன் ஒரு ரசிகை திரைப்படத்தினை சத்யராஜ், அம்பிகா போன்றோர் நடிக்க ரவீந்திரன் இசையில் இயக்கினார். தயாரிப்பாளர் வற்புறுத்தலிலேயே நல்லதொரு கதையில் சத்யராஜின் பாத்திரம் பலவந்தமாக நுளைக்கப்பட்டது என்று இவர் பின்னர் சொல்லியிருக்கிறார். இந்தப் படத்திலும் எல்லாப்பாடல்களும் அருமை. இங்கே கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "பாடி அழைத்தேன் உன்னை" என்ற பாடலைத் தருகின்றேன்.

Ezhisai Geethame - K.J.Jesudas

மலையாளத்தில் வெளிவந்த மோகன்லால் நடித்த Gaandhinagar 2nd Street என்ற திரைப்படத்தை தமிழில் அண்ணாநகர் முதல் தெரு" என்று சத்யராஜ், ராதா நடிக்க இயக்கினார். சந்திரபோஸ் இசையில் மலர்ந்த இந்தப் படத்தின் பாடல்களும் அருமை. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு என்ற பாடலை ஏற்கனவே தந்திருப்பதால், இதே படத்தில் வரும் மலேசியா வாசுதேவன், வாணிஜெயராம் பாடும் "ஏ பச்சைக்கிளி இஷ்டப்படி: என்ற இன்னொரு கலக்கல் பாடலைத் தருகின்றேன்.

heypachai.mp3 - MVasudevan, vani

இயக்குனர் பாலு ஆனந்த் பின்னர் வேறு படவாய்ப்புக்கள் இன்றி நீண்டகால ஓய்வெடுத்து மீண்டு வந்து மன்சூர் அலிகான் நடித்த மிக நீளமான தலைப்பு வைத்த படமான "ராராரா...காத்தவராய கிருஷ்ண காமராஜன்" படத்தையும் "சிந்துபாத்" படத்தையும் இயக்கி ஓய்ந்து போனார். பாலுஆனந்த் இயக்கிய எல்லாப் படங்களுமே ஒவ்வொரு இசையமைப்பாளர்களாக அமைந்தது புதுமை.இப்போது இயக்குனர்கள் நகைச்சுவை நடிகர்களாகி வரும் மரபில் பாலு ஆனந்தும் இடம் பிடித்து விட்டார். அவ்வப்போது சின்னச் சின்ன வேடங்களில் படங்களில் தலைகாட்டி வருகின்றார்.