Pages

Thursday, February 23, 2012

றேடியோஸ்புதிர் 63 "கிட்டார் இசைப்பதைப் பாராய்" பதிலோடு வாராய்


வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் மக்கள்ஸ்,
ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டுமொரு றேடியோஸ்புதிரில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த றேடியோஸ்புதிர் சற்று வித்தியாசமாக ஐந்து பாடல்களின் இடையிசை தரப்பட்டு அந்தப் பாடல்கள் எதுவென்று கண்டுபிடிக்கும் போட்டியாக அமையவிருக்கின்றது. இந்தப் போட்டியில் இடம்பெறும் ஐந்து பாடல்களிலும் பொதுவாக அமையும் அம்சங்கள், இவை அனைத்தும் இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த பாடல்கள் என்பதோடு இந்த இடையிசையில் கிட்டார் வாத்தியத்தின் பயன்பாட்டைக் காணலாம்.

புதிரில் இடம்பெறும் பாடல்கள் எவை என்பதே போட்டி, எங்கே ஆரம்பிக்கட்டும் உங்கள் பொது அறிவு :)
ஒகே மக்கள்ஸ், கடந்த இரண்டு நாள் அவகாசத்தில் வந்த பதில்களில் ஒரேயொருவர் மட்டுமே அனைத்துப் புதிர்களுக்குமான பதிலை அளித்திருக்கின்றார். அவர் பெயர் மணி, காண்க பின்னூட்டத்தில்.
போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி :)

இதோ விடைகள்.

பாட்டுப்புதிர் 1அந்தப் பாட்டு கண்ணுக்கொரு வண்ணக்கிளி படத்தில் வந்த, இசைஞானி இளையராஜா இசையமைத்துப் பாடும்
"கானம் தென்காற்றோடு போய்ச் சொல்லும் தூது"
பாட்டுப்புதிர் 2இந்தப் பாட்டு காக்கிச் சட்டை படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,பி.சுசீலா பாடும் "பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்"
பாட்டுப்புதிர் 3அந்தப் பாடல் ஜெயச்சந்திரன், முடிவல்ல ஆரம்பம் படத்துக்காகப் பாடும் "பாடி வா தென்றலே"
பாட்டுப்புதிர் 4இந்தப் புதிருக்கான பதில், இசைஞானி இளையராஜா இசையமைத்துப் பாடும் "நிலவே நீ வரவேண்டும்" பாடல் என்னருகே நீ இருந்தால்" படத்தில் இருந்து
பாட்டுப்புதிர் 5இறுதிப் புதிருக்கான பதில் "பூந்தளிர் ஆட பொன் மலர் சூட" என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் பாடல் பன்னீர்ப்புஷ்பங்கள் திரைப்படத்திற்காக.

Thursday, February 16, 2012

இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன் பாடல்களோடு பேசுகிறார்தமிழ் சினிமா உலகம் தன் கைக்கெட்டும் தூரத்தில் வைத்திருந்தும் அதிகம் பயன்படுத்திக் கொள்ளாத அற்புதமான கலைஞர்களில் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மனும் ஒருவர். எண்பதுகளிலே எவ்வளவுக்கெவ்வளவு இசைஞானி இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு அனுபவிக்க வேண்டும் என்ற தீரா வெறி இருந்ததோ அதையும் கடந்து மனதில் தென்றலாக வந்து போன இசையமைப்பாளர்களில் இசைஞானி இளையராஜாவுக்கு அடுத்த தட்டில் வைத்து என் மனசு எப்போதும் கெளரவிக்கும் வி.எஸ்.நரசிம்மன் இசையமைப்பாளராகக் கொடுத்த பங்களிப்பை.

இசைஞானி இளையராஜாவின் முக்கிய வாத்தியக்காரராகப் பாடல்களின் பின்னால் ராஜாங்கத்தின் ஆஸ்தான கெளரவத்தோடு இருந்த வி.எஸ்.நரசிம்மன் அவர்களை இளையராஜாவே ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி இசை நிகழ்ச்சி நடந்த மேடையில், "இவரை இசையமைப்பாளராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று சொன்னபோது இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கண்பட்டு தனது "அச்சமில்லை....அச்சமில்லை...!" திரைக்காக இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகப் பணியாற்றியது மிகச் சொற்பப் படங்களே. அச்சமில்லை அச்சமில்லை, புதியவன், ஆயிரம் பூக்கள் மலரட்டும், கல்யாண அகதிகள் போன்ற குறிப்பிடத்தக்க படங்களோடு, சின்னத்திரையில் கலக்கிய "ரயில் சினேகம்" தொடருக்கும் பாடல்களோடு இசையமைப்பாளர் என்ற பணியையும் மேற்கொண்டார்.

ஆவாரம்பூவு ஆறேழு நாளா பாடலில் பொங்கி வரும் அருவியாகப் பாயும் இசையாகட்டும், பூமேடையோ பொன்வீணையோ பாடலில் ஒரு மினி இசை ஆலாபனையைப் பாடலின் இடையிசையில் நிரப்பிவைத்திருப்பதாகட்டும், வி.எஸ்.நரசிம்மனின் தனித்துவத்துக்குச் சின்ன உதாரணங்கள் அவை. வி.எஸ்.நரசிம்மன் இசைக்க, பிரியதர்ஷன் இயக்கத்தில் கார்த்திக் நடிக்க "சின்ன மணிக்குயிலே" என்று எடுக்கவிருந்த படத்தில் வந்த "அழகிய கல்யாணப்பூமாலை தான் விழுந்தது என் தோளில் தான்" என்ற பாடலுக்கு ஆயுட்கால அடிமை நான்.

வி.எஸ்.நரசிம்மன் அவர்களை என் ஊடக வாழ்வில் ஒருமுறையாவது பேட்டி எடுத்துவிடவேண்டும் என்ற கனவு அவ்வளவு சீக்கிரம் நனவாகும் என்று நினைக்கவில்லை. வழக்கம் போல ரேகா ராகவன் சார் வி.எஸ்.நரசிம்மனின் தொடர்பிலக்கத்தைப் பெற்றுத்தர, நானோ தயக்கத்தோடு அழைக்கிறேன். மீடியாவின் வெளிச்சம் அதிகம் படாத, தொலைக்காட்சிப் பேட்டிகளுக்கே வரக் கூச்சப்படும் இவர் வானொலிப்பேட்டிக்குச் சம்மதிப்பாரா என்ற எண்ணம் தான் காரணம். ஆனால் என் பேட்டி பற்றிச் சொன்னதுமே "ஒரு மணி நேரத்தில் செய்வோமா" என்ற போது நாட்கணக்கில் இழுத்தடிக்கும் பிரபலமே இல்லாத பிரபலங்களும் திடீரென்று வந்து போயினர். பேட்டி முடிந்ததும், "திருப்தியா இருந்துச்சா, நான் பேசினது எல்லாம் கரெக்டா" என்று கேட்டபோது நிறைகுடமாகப்பட்டார்.

வி.எஸ்.நரசிம்மன், திரையிசையிலும், திரையிசை கடந்தும் செய்த சாதனைகள் ஏராளம், அவரைப் பற்றி அறிந்தவர்களுக்கு அவரின் தெரியாத பக்கங்களைச் சொல்ல இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட அளவில் எனக்குப் பரமதிருப்தி.

இதோ அவர் பேசுவதைக் கேளுங்கள், பாடல்களோடு


வி.எஸ்.நரசிம்மனின் இசையில் மலர்ந்த பாடற்தொகுப்பு ஒன்று


வி.எஸ்.நரசிம்மனின் இசையில் மலர்ந்த பாடற்தொகுப்பு இரண்டுவி.எஸ்.நரசிம்மன் அவர்களின் வயலின் இசை ஜாலத்தைக் கண்குளிரக் காண

Friday, February 3, 2012

றேடியோஸ்பதி வழங்கும் =>" நானும் பாடுவேன்" போட்டி நிகழ்ச்சி


வணக்கம், வந்தனம், வெல்கம் மக்கள்ஸ்,

நீண்ட இடைவெளிக்குப் பின் றேடியோஸ்பதி சார்பில் ஒரு போட்டி நிகழ்ச்சியை உங்கள் பங்களிப்போடு வழங்கலாம் என்றிருக்கிறோம். அந்தவகையில் ஒரு அறிமுகப் பகிர்வாக இந்தப் பதிவு இது. பாத்ரூமுக்குள் மட்டும் பாடும் பாடகர்களாக இருக்கும் பலரின் திறமையையும், ஏற்கனவெ தம் பாடற்திறமையைக் காட்டிவரும் அன்பர்களுக்கும் கூட இந்தப் போட்டி வகை செய்ய இருக்கின்றது. "நானும் பாடுவேன்" என்ற இந்தப் போட்டி இன்று முதல் வரும் மார்ச் 15 ஆம் திகதிவரை நிகழவுள்ளது. மார்ச் 15 ஆம் திகதி வரை அனுப்பப்பட்ட ஆக்கங்கள் பின்னர் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை றேடியோஸ்பதி தளத்தில் நேயர்கள் பார்வைக்காகப் பகிரப்படும். ஆக்கங்களை அனுப்பியவர்களில் சிறந்த பாடகர்கள் ஆண், பெண் என்ற இரு வகையில் தனித்தனியாக வாக்களிக்கும் வசதி செய்யபட்டு இரண்டு பிரிவுகளிலும் அதிக வாக்குகளைப் பெறும் ஆண், பெண் பாடகர்களுக்குச் சிறப்புப் புத்தகப் பொதி ஒன்று பரிசாக வழங்கப்படும். இந்தப் பரிசு இசை சார்ந்த நூல்களாக அமையவுள்ளன.

இதோ தொடர்ந்து போட்டி விதிமுறைகளைப் பாருங்கள்
1. இதுவரை வந்த தமிழ்த் திரையிசைப்பாடலில் ஏதாவது ஒன்றை நீங்கள் உங்கள் குரலில் பாடி அனுப்ப வேண்டும்.

2. ஒருவர் எத்தனை ஆக்கங்களும் மார்ச் 10 இற்கு முன் அனுப்பலாம் ஆனால் மார்ச் 15 ஆம் திகதிக்குள் தாம் அனுப்பியதில் எதைப் போட்டிக்காகப் பரிசீலிக்க வேண்டும் என்பதை அறியத் தரவேண்டும். ஒருவர் பாடிய ஒரு ஆக்கம் மட்டுமே போட்டிக் களத்தில் இருக்கும்.

3. பாடல்களைத் தேர்ந்தெடுக்கும் போது இசை சேர்த்தோ அல்லது இசை இல்லாமல் தனித்தோ பாடுவது உங்கள் சுய விருப்பம் சார்ந்தது.

4. தமிழில் வந்த திரைப்படப்பாடல்களை மட்டுமே போட்டிக்காகத் தேர்தெடுக்க வேண்டும்

5. பாடல்களில் தனிப்பாடலைத் தவிர்த்து, ஜோடிப்பாடலையும் தேர்ந்தெடுத்து இன்னொரு ஜோடிக் குரலையும் சேர்த்துப் பாடலாம், ஆனால் இருவரில் ஒருவர் மட்டுமே அதே பாடலின் போட்டியாளராக இருக்க முடியும்

6. நீங்கள் பாடிப் பதிவு பண்ணிய ஒலிப்பதிவை radiospathy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்

7. போட்டியில் மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டத்திலோ அல்லது மேற்சொன்ன மின்னஞ்சலிலோ அறியத் தாருங்கள்.

8. ஆண், பெண் இருப்பாலாருக்குமான இந்தப் போட்டியில் வயது எல்லை கிடையாது.

கணினியில் நீங்கள் பாடலைப் பதிவு பண்ண Audacity http://audacity.sourceforge.net/ போன்ற மென்பொருட்களைப் பரிசீலிக்கலாம்.

ஒகே ரெடி ஸ்டார்ட் மியூசிக்