Pages

Thursday, July 30, 2015

பாடல் தந்த சுகம் : கண்மணி கண்மணி

கண்மணி கண்மணி 🎵 ஒம்புல வைகரி 

தெலுங்குத் திரையுலகில் எண்பதுகளின் ஆர்.சுந்தராஜன் வகையறா இயக்குநராக எண்ணத் தகுந்தவர் இயக்குநர் வம்சி.
இசைஞானி இளையராஜா இசையில் இயங்கிய வம்சி குறித்து முன்னரும் ஒரு பாட்டம் சொல்லியொருந்தேன் இங்கே http://www.radiospathy.com/2014/11/blog-post.html

நேற்று இலங்கை சூரியன் எஃப் எம் இல் லோஷன் தொகுத்து வழங்கிய "சூரிய ராகங்கள்" நிகழ்ச்சியில் ஒலித்த "கண்மணி கண்மணி மின்னிடும் பைங்கிளி பாடலைக் கேட்ட போது மீண்டும் வம்சி ஞாபகத்துக்கு வந்தார்.
வம்சி தெலுங்கில் இயக்கிய April 1st Vidadala படத்தில் இடம்பெற்ற "ஒம்புல வைகரி" பாடலின் தமிழ் வடிவமே இந்த "கண்மணி கண்மணி" பாடல்.

"தெலுங்கு பாக்யராஜ்" ராஜேந்திர பிரசாத் மற்றும் ஷோபனா நடித்த April 1st Vidudala திரைப்படத்தைத் தமிழில் "சத்தியவான்" என்ற பெயரில் ராஜ்கபூர் இயக்கி "முரளி , கெளதமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் வந்த "சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ" பாட்டு அந்த நாளில் வீடியோக் கடைகளின் விளம்பரத்துக்கும் கூடப் பாவிக்கப்பட்டது. "காற்றினிலே வரும் கீதம்" திரைப்படத்தில் வந்த "சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்" என்ற பாடலை மீள் வடிவமாக "எப்பவும் நாந்தாண்டா இங்கொரு ராஜா" என்றும் பயப்படுத்தினார் இளையராஜா.
அதன் தெலுங்கு வடிவம் இதோ

 http://www.youtube.com/watch?v=NJRnVi9gBR4&sns=tw 

"கண்மணி கண்மணி மின்னிடும் பைங்கிளி" பாடலின் ரிதம் 90களில் இசைஞானி பயன்படுத்திய பக்கா காதல் துள்ளிசை. இதே காலகட்டத்தில் வந்த பாடல்களில் இந்த ஒலி நயத்தை ஒப்பு நோக்கி நயக்கலாம். பாஸ் மார்க் படத்தில் தேவா இசையமைத்த "உன் புன்னகை போதுமடி" பாடலும் இந்தப் பாடலோடு அன்போடு உரசிக் கொள்ளும் :-)
மனோ, சித்ரா கூட்டுக் குரல்களோடு தமிழில் பாடிய "கண்மணி கண்மணி பாடல்"
http://www.mayuren.org/site/mayurengorg/1Tamil/Movie%20A%20-%20Z%20Collection/S/SATHYAVAN/Kanmani%20Kanmani%20%20%20Mano%20%20%20Ch.Mp3.MP3?l=12

மேலே தந்த பாடலைக் கேட்டு ரசித்தவர்களைக் கொஞ்சம் தெலுங்குப் 
பக்கம் அழைத்துப் போகிறேன். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடிய "ஒம்புல வைகரி" பாடலைக் கேளுங்கள் இன்னொரு புது அனுபவம் கிட்டும்.

 http://www.youtube.com/watch?v=5xyyhECcC1k&sns=tw 

Monday, July 27, 2015

இசைஞானி இளையராஜா இசையில் சின்னக் குயில் தந்த 52


இன்று சின்னக் குயில் சித்ரா தனது 52 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 
எனவே ஒரு சிறப்புத் தொகுப்பைக் கொடுக்கலாமே என்று எண்ணி இசைஞானி இளையராஜா இசையில் சின்னக்குயில் சித்ரா பாடிய 52 தனிப்பாடல்களின் திரட்டாக இங்கே பகிர்கிறேன். இவை தனித்தும் கூட்டுக் குரல்களோடும் சித்ராவால் பாடிச் சிறப்பிக்கப்பட்டவை. இயற்கை, அன்பு, காதல் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பாடல் தொகுப்பு இது.

இந்தப் பாடல்களில் சிறப்பாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இசைஞானி இளையராஜா இணைந்த மெல்லத் திறந்தது கதவு படப் பாடலும், அறுவடை நாள் படத்தில் ராஜாவே கூட்டுக் குரலாக இணைந்து பாடிய பாடலையும், சித்ரா பாடிய மலையாளப் பாடல்களில் என்னைக் கவர்ந்த, உள்ளத்துக்கு மிக நெருக்கமான இரண்டு பாடல்களும் அணி செய்கின்றன.

1. சின்னக்குயில் பாடும் பாட்டு (பூவே பூச்சூடவா)
2. இந்த வெண்ணிலா எங்கு வந்தது (டிசெம்பர் பூக்கள்)
3. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் (புன்னகை மன்னன்)
4. நானொரு சிந்து (சிந்து பைரவி)
5. தேவனின் கோயில் (அறுவடை நாள்)
6. ஆத்தாடி அம்மாடி பூ மெட்டு (இதயத்தைத் திருடாதே)
7. சொந்தம் வந்தது வந்தது (புதுப்பாட்டு)
8. ஹே சித்திரச் சிட்டுகள் (என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு)
9. சந்தோஷம் இன்று சந்தோஷம் (மனிதனின் மறுபக்கம்)
10. கொட்டிக் கிடக்குது செல்வங்கள் (தீர்த்தக் கரையினிலே)
11. நின்னுக்கோரி வர்ணம் (அக்னி நட்சத்திரம்)
12. ஒரு ராஜா வந்தானாம் (மெளனம் சம்மதம்)
13. மாமனுக்கும் மச்சானுக்கும் (அரங்கேற்ற வேளை)
14. உச்சிமலை மேகங்கள் (வெள்ளையத் தேவன்)
15. வண்ணப் பூங்காவனம் (ஈரமான ரோஜாவே)
16. வானம்பாடி பாடும் நேரம் ( சார் ஐ லவ் யூ)
17. மாலை சூடும் நேரம் (புதிய ராகம்)
18. தூளியிலே ஆட வந்த (சின்ன தம்பி)
19. கற்பூர முல்லை ஒன்று (கற்பூர முல்லை)
20. வந்ததே ஓ குங்குமம் (கிழக்கு வாசல்)
21. மன்னன் கூரைச் சேலை (சிறைச்சாலை)
22. புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் (ராமன் அப்துல்லா)
23. நல் அன்பே தான் தாயானது (கை வீசம்மா கை வீசு)
24. தென்மதுர சீமையிலே (தங்கமான ராசா)
25. காலை நேர ராகமே (ராசாவே உன்னை நம்பி)
26.யாரைக் கேட்டு (என் உயிர்க் கண்ணம்மா)
27. ஒரு கிளியின் தனிமையிலே (பூவிழி வாசலிலே)
28. ஒத்தையிலே நின்னதென்ன ( வனஜா கிரிஜா)
29. கொட்டிக் கிடக்கு குண்டு மல்லி (தாயம் ஒண்ணு)
30. குத்தம்மா நெல்லு குத்து (பாடு நிலாவே)
31. பொடி நடையாப் போறவரே (கடலோரக் கவிதைகள்)
32. இளமை ரதத்தில் (நினைக்கத் தெரிந்த மனமே)
33. பழைய கனவை (தாயம்மா)
34. மங்கலத்துக் குங்குமப் பொட்டு (சாமி போட்ட முடிச்சு)
35. உன்னை நானே அழைத்தேனே (சின்ன குயில் பாடுது)
36. காலம் இளவேனிற்காலம் (விடிஞ்சா கல்யாணம்)
36. காற்றோடு குழலின் நாதமே (கோடை மழை)
37. கண்ணே என் (கிராமத்து மின்னல்)
38. மழலை என்றும் (சேதுபதி IPS)
39. குன்றத்துக் கொன்றை (பழசி ராஜா)
40. உல்லாசப் பூங்காற்றே (கோலங்கள்)
41. துளியோ துளி (காத்திருக்க நேரமில்லை)
42. ஶ்ரீராமனே உன்னை (கண்களின் வார்த்தைகள்)
43. வண்ண நிலவே (பாடாத தேனீக்கள்)
44. நான் வண்ண நிலா (கட்டளை)
45. வா வாத்தியாரே (பரதன்)
46. திருடா திருடா (எனக்கு நானே நீதிபதி)
47. ஆயிரம் பூவும் உண்டு (பாச மழை)
48. மஞ்சள் நீராட்டு (இல்லம்)
49. சிட்டுப் போலே (இனிய உறவு பூத்தது)
50. எந்து பறஞ்ஞாலும் (அச்சுவிண்ட அம்மா - மலையாளம்)
51. புழயோரத்தில் (அதர்வம் - மலையாளம்)
52. குழலூதும் கண்ணனுக்கு ( மெல்லத் திறந்தது கதவு)

Sunday, July 26, 2015

"இலங்கை சூரியன் எஃப் எம்" - வாழ்த்தும் நன்றியும்

இலங்கையின் முன்னணிப் பண்பலை வானொலியான சூரியன் எஃப்.எஃம் தனது பதினேழு அகவையை நிறைத்திருக்கின்றது.

உலக வானொலிப் பிரியனான என் வானொலி நேரத்தில் சூரியனுக்கும் தனித்துவமான இடமுண்டு.
குறிப்பாக "பொற்காலப் புதன்" என்று நாள் முழுக்க 80கள், 90கள் என்று அந்தக் காலகட்டத்துப் பாடல்களைக் கொண்டாடி மகிழும் புதன்கிழமைகள் என்னளவில் தைப்பொங்கல், வருஷப் பிறப்பு, தீபாவளிக்கு ஈடான சந்தோஷம் தருபவை. 

"கள்ள மனத்தின் கோடியில்" என்ற சுறுக் நறுக் பேட்டி வழியாக பத்து நிமிடத்துக்குள் தமிழகத்தின் திரையுலக, கலையுலக ஆளுமைகளின் முழு வரலாற்றைத் தெரிந்து கொள்ள வைத்திருப்பது தேர்ந்த வானொலித் திறனுக்கு எடுத்துக் காட்டு. எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட பிரபலங்களில் இருந்து "உன்னைத் தானே தஞ்சம் என்று" பாடிய பாடகி மஞ்சுளா போன்ற புகழ் வெளிச்சம் படாத கலைஞர் வரை இதில் கலக்குவார்கள். தொகுத்து வழங்கும் டிஜே அஷ்ராப் கேள்விகளிலும் காரசாரம்
இருக்கும். 

"ஹலோ யாரு பேசுறீங்க", "மாளிகாவத்தை சின்னக் கொமாண்டோ" எல்லாம் நான் டவுன்லோட் பண்ணித் திரும்பத் திரும்பக் கேட்டு வரும் நகைச்சுவைப் பகிர்வுகள்.

சகோதரன் காஸ்ட்ரோவை ஊடகத்துறை மாணவனாக இருக்கும் போதே பழக்கம். இன்று காலை காரில் பயணிக்கும் போது காலை நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தார். என் மனைவியிடம் அவரைப் பற்றிப் பெருமையாகச் சொன்னேன். அந்த அளவுக்குச் சூரிய வெளிச்சத்தில் அவர் புடம் போடப்பட்டிருக்கிறார்.

சந்த்ரு, மேனகா ஏட்டிக்குப் போட்டிக் கூட்டணியின் கல கலா கலக்குற நிகழ்ச்சிப் பகிர்வையும் சிரித்துக் கொண்டே ரசிப்பேன்.

லோஷனுடன் பயபக்தியோடு நிகழ்ச்சி செய்யும் தம்பி டிஜே டிலான் மற்றும் பிரஷா, பிரசந்தா, தரணி, கோபிகா, நிஷாந்தன் - வர்ஷி கூட்டணி (ரஜினிகாந்த் பாடல் பிரியர்கள் போல ஒரு பாட்டாவது சூப்பர் ஸ்டார் பாட்டு வரும்) என்று நீளும் நிகழ்ச்சிப் படைப்பாளிகளின் நிகழ்ச்சிகளை அவுஸி நேரத்தில் கேட்க வாய்ப்புக் கிடைப்பதால் பலமுறை கேட்டு ரசித்ததுண்டு. மற்றைய உறவுகளின் நிகழ்ச்சிகளை இன்னார் பெயர் என்று தெரியாமல் கேட்டதால் அவர்களையும் கண்டிப்பாக வரவு வைக்க வேண்டும்.

"நேற்றைய காற்று" என்றொரு நிகழ்ச்சி முன்னர் சூரியன் எஃப் எம் இல் படைக்கப்பட்டு வந்தது. இப்போது வருகுதோ தெரியவில்லை. ஆனால் ஒரு வானொலி நிகழ்ச்சியின் தலைப்பு எவ்வளவு தூரம் உள்ளார்த்தம் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தத் தலைப்பு உலக வானொலி வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டியது.

சூரியன் எஃப். எம் தன் விடிகாலை வாடிக்கையாளர்கள் பெரும்பலும் இரவு நேரப் பணியாளர்கள் என்பதாலோ என்னமோ கும்மாங்குத்துப் பாடல்களைப் போட்டுத் தாக்குவார்கள். அது ஏற்கக்கூடிய பணியாக இருப்பினும் நல்ல மென் மெட்டுகள் பொருந்திய பாடல் கோப்பு நிகழ்ச்சிக்காகவும் காத்திருக்கிறேன்.  
பொற்காலப் புதனில் வரும் ஒரே பாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும். சில நேரம் ஒரே நேரத்திலேயே சொல்லி வைத்தால் போல வரும் அவ்வ்வ்.
 இதெல்லாம் நான் இந்த வானொலியை நேசிக்கும் நேயர் என்ற உரிமையோடு  சொல்பவை.

மற்றப்படி "தலைவர் எவ்வழி சனமும் அவ்வழி" (என்ன விளங்குது தானே ;-) ) என்று லோஷன் அண்ணையோடு சேர்ந்து பெட்டி, படுக்கையோடு நாங்கள் பயணப்படக் காரணமே அவரின் திறம்பட்ட வானொலி முகாமைத்துவம் தான்.  எந்த நேரம் எது செய்ய வேண்டும் என்று கால நேரத்துக்கேற்பத் தன் படைப்புகளை வழங்குபவர். எங்கிருந்தாலும் தன் கூட்டணியின் சிறப்பான பணியில் லோஷனின் பங்கும் இருக்கும். மைக் இருக்கோ இல்லையோ அண்ணை Cricket Bat ஐ நிலையக் கலையகத்துக்குத் தப்பாமல் கொண்டு போவாரோ என்ற சந்தேகம் நெடு நாளாக இருக்கு. நிகழ்ச்சிப் படைப்பாளராக, தயாரிப்பாளராக, மேலாண்மைப் பணியாளராக அவரின் தேரின் பல குதிரைகள் எல்லாமே நிதானம் தப்பாமல் பயணிக்கும்.  வானொலி உலக ஆளுமை சானாவின் பேரன் ஆச்சே இதெல்லாம் ரத்தத்தின் ஒவ்வொரு செல் இலும் ஊறியிருக்குமே.

சூரியன் எஃப் எம் சேவை இன்னும் பல தசாப்தங்கள் இன்று போல் என்றும் நீடித்து நிலைத்து நிற்க என் வாழ்த்துகளும், நன்றிகளும்.

Friday, July 24, 2015

பாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி


கை தட்டல்  ஒலியாய் இசையெழுப்ப தொடரும் சலங்கைச் சத்த நடையோடு மேளமும், நாயனமும், இன்ன பிற வாத்தியங்களும் அப்படியே குதியாட்டம் போட்டுத் துள்ளிக் குதித்துப் பிரவாகிக்கும் போதே மனசு அப்படியே டிக்கெட் வாங்காமல் கிராமத்துக்குப் பாய்ந்து விடும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஜோடிக் குரலுக்கு இம்மாதிரிக் கிராமியத் துள்ளிசை சர்க்கரைப் பொங்கலை அளவு கணக்கில்லாமல் சாப்பிடுவது போல, கேட்பவருக்கோ அந்த அதீத இனிப்பின் சுவையை அப்படியே கடத்துவது போல.
பாடல் முழுக்க இந்த ஜோடி கொடுக்கும் நையாண்டித் தொனி பாடலின் சாரத்தை ஈறு கெடாமல் காப்பாற்றும்.

"முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெட்கமா" என்று இரண்டு அடிகளாக ஒலிக்கும் எஸ்.பி.பியின் குரலின் முதன் அடிகளைக் கவனியுங்கள் அந்த "முத்தம்மா"வில் ஒரு கொஞ்சல் இருக்கும் "வெட்கமா" வில் வெட்கம் ஒட்டியிருக்கும். பாடலை எப்படி வளைத்து நெளித்து உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற குறும் பாடம் ஒட்டியிருக்கும். 
அதே போல் "சாடை" (சொல்லிப் பேசுதடி) இல் சாடை செய்யும் பாவனை, "குத்தாலத்து" வில் குதிக்கும் குதூகலம்.

"சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா" எனும் எஸ்.ஜானகியின் எசப்பாட்டில் வண்ணத்துப் பூச்சியாகப் புல்லாங்குழல் ஊடுருவும்.

இடையிசையில் குலவைச் சத்தத்தோடு  "வந்தது வந்தது பொங்கலின்று" என்று கலக்கும் மகளிரணியோடு சேர்ந்து "தந்தகத் தந்தத் தந்தகத் தந்த" சோடி கட்டும் ஆடவருமாகப் போடும் துள்ளாட்டம்
கிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தை அப்படியே படம் போட்டுக் காட்டும்.

ரஜினிகாந்த் இற்குக் கிடைத்த பாடல்களில் அவருக்கேயான பாடல்கள் என்ற தெம்மாங்குப் பாடல் பட்டியல் போடும் போது தவிர்க்க முடியாத பாட்டு இது. எண்பதுகளில் வந்த மசாலாப் படங்களில் இயக்குநர் ராஜசேகர் கொடுத்த பங்களிப்பு மகத்தானது. ஆனால் அவர் இயக்கிய படங்கள் பல எஸ்.பி.முத்துராமன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டவர்களும் உண்டு. 
1991 ஆம் ஆண்டு "தர்மதுரை" படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே அதன் நூறு நாள் ஓட்டத்தைக் கூடக் காணும் அதிஷ்டமில்லாமல் இறந்துவிட்டார் இந்தப் பட இயக்குநர் ராஜசேகர்.

"தர்மதுரை" படத்தின் பாடல்களைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? "ஆணெண்ண பெண்ணென்ன" பாடல் மட்டும் கங்கை அமரன். மீதி எல்லாம் பஞ்சு அருணாசலம் தன் கணக்கில் வைத்துக் கொண்டார்.
"சந்தைக்கு வந்த கிளி" பாடல் கங்கை அமரனின் பாணியில் எழுந்த வரிகள். "மதுர மரிக்கொழுந்து வாசம்" பாடலுக்கு ஒரு வகையில் உறவுக்காரி.

இசைஞானி தந்த கிராமத்துப் பாடல்களை ஒவ்வொரு தசாப்தங்களாகப் பிரித்து நுணுக்கமாக ஆய்வுப் பட்டம் செய்யலாம். அந்த வகையில் தொண்ணூறுகளின் முத்திரை இது.

அந்தக் காலத்துச் சென்னை வானொலி நேயர் விருப்ப நினைவுகளைக் கிளப்பிவிட்டது போன சனிக்கிழமை இரவில் இந்தப் பாட்டு. ஒரு அலுவல் காரணமாக  என் காரில் அந்தச் சனிக்கிழமை இரவு தனியனாகப் பயணித்த போது சிங்கப்பூர் ஒலி "சந்தைக்கு வந்த கிளி" பாடலைக் கொண்டு வந்து தந்தது.
பால்ய நண்பனை வெகு காலத்துக்குப் பின் சந்தித்துக் கதை பேசும் சுகானுபவம் தான் இந்தப் பாடல். அந்த நேரம் என் கார் யாழ்ப்பாணத்துக்கு பஸ் பிடித்து இணுவில் கிராமத்தின் செம்பாட்டு நினைவுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.

https://soundcloud.com/arulselvam-sekar/sandhaikku-vanda 

 http://www.youtube.com/watch?v=z_MQod9HCuY&sns=tw

Wednesday, July 15, 2015

எண்பதுகளில் மெல்லிசை மன்னர் தந்த இருபது


மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையில் 80களில் வெளியான முத்தான தேர்ந்த ஜோடிக் குரல்களின் இசைப்பாடல்களின் பொட்டலம் ஆக்கியிருக்கிறேன். ரசித்து அனுபவியுங்கள்.


Tuesday, July 14, 2015

"எரிகனல் காற்றில்" மெல்லிசை மாமன்னர் நினைவில்

மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது உற்ற தோழமை கவியரசர் கண்ணதாசன் சந்நிதி தேடி இன்று போய் விட்டார்.

இன்று எம்.எஸ்.விஸ்வநாதன்  அவர்கள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்வுகள் வருவது வெறுமனே கண் துடைப்பல்ல அந்த மாபெரும் கலைஞனுக்கான மானசீக அஞ்சலி என்பதை அதே உணர்வோடு பார்ப்பவர்கள் உய்த்துணர்வார்கள்.

மெல்லிசை மாமன்னர் குறித்த வரலாற்றுப் பகிர்வையோ அல்லது அவரின் பாடல்கள் குறித்த ஆழ அகலத்தையோ பேச இன்றொரு நாள் போதாது. அவர் தந்தது இசைப் பாற்கடல் அல்லவோ?

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்த இறப்புச் சேதி கேட்ட போது என் மனத்தில் இருந்த இசைத்தட்டு இந்த "எரிகனல் காற்றில் உள்ளம் கொள்ளும் போலே" பாடலைத் தான் மீட்டியது.
இசைஞானி இளையராஜா இசையில் "ஒரு யாத்ரா மொழி" படத்துக்காக மலையாளத்தின் மறைந்த பாடலாசிரியர் கிரிஷ் புத்தன்சேரி வரிகளில் ஒலித்த பாடல் இது.
 https://soundcloud.com/raja4ever/yerikanalkaattil
இதே பாடலை இளையராஜா பாடும் இன்னொரு வடிவமும் உண்டு.  அந்த வகையில் ஒரே பாடலை இரு வேறுபட்ட இசையமைப்பாளர் பாடிய புதுமையும் இந்தப் பாடலில் நிகழ்ந்திருக்கிறது.


தமிழ்த் திரையிசையில் அசரீரிப் பாடல்கள் என்று சொல்லக் கூடிய, கதையோட்டத்தின் பின்னணியில் ஒலிக்கும் பாடலாகவோ அல்லது கதை மாந்தரின் அவலத்தைப் பிரதிபலிக்கும் குரலாகவோ கொணர்ந்தளிக்கும் சிறப்பு எம்.எஸ்.விஸ்வநாதன் குரலுக்கு உண்டு.

"எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே" என்று சிவகாமியின் செல்வன் படத்தில் தன்னுடைய இசையிலாகட்டும், "உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா" என்று வெள்ளி விழா படத்தில் வி.குமாரின் இசையிலாகட்டும் "விடை கொடு எங்கள் நாடே" என்று கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலாகட்டும் மெல்லிசை மன்னரின் குரல் தன்னிசையில் மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களின் இசையிலும் தனித்துவமாக மிளிர்ந்திருக்கிறது இம்மாதிரியான அசரீரி என்று நான் முன்மொழிந்த பாடல்களில். இங்கே நான் கொடுத்தது சில உதாரணங்கள் தான்.
இந்தப் பாடல்களின் எம்.எஸ்.வி அவர்களின் குரலைத் தாண்டிய உணர்வு ரீதியான பந்தம் தான் நெருக்கமாக இருக்கும். அந்தந்தப் பாடல்களை அவர் கொடுத்த விதத்தை மீளவும் மனத்திரையில் அசை போட்டு உணர முடியும் இதை.

பிற இசைமைப்பாளர் இசையில் நிறையப் பாடிய இசையமைப்பாளர் என்று புகழ் வாய்த்த எம்.எஸ்.வியின் குரல் இளையராஜாவின் இந்த "எரிகனல் காற்றில்" பாடலாக வெளிப்படும் போது இன்றைய அவரின் இன்மையைப் பிரதிபலிக்கும் அசரீரிப் பாடலாகவே என் மனம் உள்ளார்த்தம் கொள்கிறது.

மெல்லிசை மாமன்னருக்கு என் இதய அஞ்சலிகள்
அந்தப் பாடலைக் கேட்க







புகைப்படம் நன்றி : மாலைமலர் 

Monday, July 13, 2015

கவிஞர் வைரமுத்துவுடன் சில இசையமைப்பாளர்கள்


இன்று கவிஞர் வைரமுத்து அவர்களின் பிறந்த தினம். அதையொட்டிய சிறப்புப் பகிர்வைக் கொடுக்க ரயில் பயண சிந்தனையில் தோன்றியது தான் இந்தப் பட்டியல். 

இளையராஜா இசையில் 
அவரின் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" அறிமுகப் பாடலைப் போன்று ஒவ்வொரு இசையமைப்பாளர் இசையிலும் இயற்கையை நேசிக்கும் பாடலைத் தான் முதலில் பட்டியல் போட எண்ணினேன். ஆனால் நேரம் போதாமையால் கொஞ்சம் பொதுவான பாடல் பட்டியலோடு சந்திக்கிறேன்.

இது ஒரு பொன்மாலைப் பொழுது - நிழல்கள் (இளையராஜா)

மேகமே மேகமே - பாலைவனச் சோலை
(சங்கர் கணேஷ்)

ஆவாரம் பூவு ஆறேழு நாளா - அச்சமில்லை அச்சமில்லை (வி.எஸ்.நரசிம்மன்)

ஆனந்த தாகம் - வா இந்தப் பக்கம் (ஷ்யாம்)

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே - வெளிச்சம் (மனோஜ் - கியான்)

சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே - அமரன் (ஆதித்யன்)

புல்வெளி புல்வெளி தன்னில் - ஆசை (தேவா)

தென்மேற்குப் பருவக்காற்று - கருத்தம்மா (ஏ.ஆர்.ரஹ்மான்)

இன்னிசை பாடி வரும் - துள்ளாத மனமும் துள்ளும் (எஸ்.ஏ.ராஜ்குமார்)

தாமரைப் பூவுக்கும் - பசும் பொன் (வித்யாசாகர்)

வானும் மண்ணும் ஒட்டிக் கொண்டதே - காதல் மன்னன் (பரத்வாஜ்)

மூங்கில் காடுகளே - சாமுராய் (ஹாரிஸ் ஜெயராஜ்)

பூவினைத் திறந்து கொண்டு - ஆனந்தத் தாண்டவம் (ஜி.வி.பிரகாஷ் குமார்)

பர பர பறவை ஒன்று - நீர்ப்பறவை (ரகு நந்தன்) 

சர சர சாரக்காத்து - வாகை சூடவா  (ஜிப்ரான்) 

ஈரக்காத்தே நீ வீசு - இடம் பொருள் ஏவல் (யுவன் ஷங்கர் ராஜா)

பாடல்களின் திரட்டு இங்கே 



Sunday, July 12, 2015

பாகுபலி எப்பிடி எப்பிடி

சிட்னியில் பாகுபலி படம் காண்பிக்கப்படுகின்றது என்பதே இந்தப் படத்தின் பிரமாண்டத்தை மிஞ்சிய செய்தியாக எனக்குப் பட்டது. அதை விட ஆச்சரியம் படம் காண்பிக்கப்பட்ட ஒவ்வொரு திரையரங்கிலும் தலா இரண்டு அரங்கங்கள் ஒதுக்கியிருந்தார்கள். கடைசியா இன்னொரு ஆஆஹாஆஆச்சரியம் (உங்களுக்குப் பதிலா நானே கொட்டாவி விட்டேன்) இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு சிட்னியில் போடுவதற்கான எந்த ஆரவாரமும் தென்படவில்லை.

படத்தின் ஆரம்பக் காட்சியில் ராணி சிவகாமி தேவி (ரம்யா கிருஷ்ணன்) ஓஓஓஓடும் காட்சியிலேயே படத்தின் முழு ஓட்டமும் எப்படியிருக்கும் என்று அனுமானிக்க முடியும் என்றாலும் படத்தின் முடிவு வரை பார்வையாளனைக் கட்டிப் போடுவது இந்தப் படம் தன்னை விளம்பரப்படுத்திய பிரம்மாண்டம் தான்.

தெலுங்கில் இருந்து தமிழில் மொழி மாற்றும் படங்களின் பொதுவான குறை "தானாடா விட்டாலும் தன் தசை ஆடும்" 
ஐ மீன் பேசுபவரின் வாய் ஒருபக்கம் உச்சரிக்க வசனம் வேறொரு பக்கம் "இழி"படும். ஆனால் இந்தப் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அந்தக் குறையே இல்லாத பக்கா தமிழ்ப்படம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. 
ஆரம்பத்தில் இருந்து உன்னிப்பாக அவதானித்த விடயம் வசனப் பங்களிப்பு. மிக எளிமையாக, நிதானமாக, அழகு தமிழில் எல்லாத்தரப்பு ரசிகனையும் காப்பாற்றிய விதத்தில் வசனகர்த்தா மதன் கார்க்கிக்கு ஒரு சபாஷ். படம் முழுக்கத் தன் பணியைச் செவ்வனே செய்த திருப்தி அவருக்கும் கிட்டியிருக்கும்.
அந்த மகிழ்மதி தேசம் ஆகா என்னவொரு அழகான பெயர்.

இந்தப் படத்தின் நடிகர் தேர்வில் முந்திரிக் கொட்டையாய் நான் முன் மொழிவது ரம்யா கிருஷ்ணனைத் தான். ப்பாஆ என்னவொரு மிடுக்கு, தன்னுடைய பாத்திரமாகவே ஒன்றிப் போய் நடித்த வகையில் படையப்பா நீலாம்பரிக்கு அடுத்து பாகுபலி சிவகாமி தேவி இவரின் திரையுலக வாழ்வின் ஏட்டுச்சுவடியில் பொறிக்க வேண்டியது.
நாசரின் பாத்திரம் இன்னொரு இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியில் வந்த வில்லத்தனம். அவருக்கே அலுப்புத் தட்டியிருக்கும். சத்யராஜிற்கு கெளரவமான, பெருமைக்குரிய பாத்திரம். இவர்களை விட்டா ஆள் இல்லையா என்று கேட்ட மைசூர் சுரேஷ் ஐ கனவிலும் பொருத்திப் பார்க்க முடியாது.

பிரபாஸ் நடித்து நான் பார்க்கும் முதல் படம் இது. ட்விட்டர் வாழ் பிரபாஸ் ரசிகைகள் தயவு செய்து இந்த வரியோடு என்னை block செய்ய வேண்டாம். மேற்கொண்டு படிக்கவும். 
பிரபாஸ் இற்குக் கிடைத்த வேடங்களை வெகு சிறப்பாகவே செய்திருக்கிறார். அந்த உடன் பிறவாச் சகோதரன் ராணா டகுபதி என்று படம் முடியும் போது போட்ட எழுத்தோட்டத்திலேயே அறிந்தேன். ஆனாலும் பாதகமில்லை.

அனுஷ்கா தலைவிரி முதுமைத் தோற்றத்தில் தோன்றும் காட்சியில் இருந்து கடைசி நிமிட் வரை தோ வருது இந்தா வந்து "குழலில்லை குழலில்லை தாஜ்ஜுமஹால் நிழலு" என்றொரு அழகுப் பதுமைக் குத்துப்பாட்டுக்குக் காத்திருந்து காத்திருந்து அவ்வ்வ் (மண்வாசனை காந்திமதி கணக்கா மண்ணை வாரி வீசிங்)

தமன்னா அழகு சாதனப் பொருள் என்பது உலகறிந்த விடயம் ஃபேர் அண்ட் லவ்லியை யாராச்சும் ஜண்டு பாம் ஆக நெத்தியில் பூசுவாங்களா இல்லை பூசுவாங்களா? தமன்னா கையை நீட்டி வீர வசனம் பேசும் போது ஐயோ இதென்ன தொங்கும் பூந்தோட்டம் என்று துடிக்கிறதே தெம்மாங்கு பாடி.

பாகுபலி முதற்பாதியில் கற்பனைக்கும் எட்டாத ஒரு சில காட்சிகளை வைத்து விட்டு இடைவேளைக்குப் பின்னர் வெகு சிரத்தையாகப் படமாக்கிய போது முன்னதிலும் கவனம் செலுத்தியிருக்கலாமே என்று தோன்றியது. பக்கத்தில் இருந்த என் இனிய தமிழ் மகன் யாரோ ஒருவர் தன் நண்பருக்கு "தோ பார்ரா குருவி விஜய் ரயில் பாய்ஞ்ச மாதிரி மலையைக் கடக்குறான்" போன்ற எள்ளலைத் தடுத்திருக்கலாம்.

முதல் பாடலைத் தவிர மற்ற இரண்டும் வேகத் தடை. காதல் பாடலையும் மன்னித்து விடலாம். ஆனால் அந்தக் குத்துப் பாட்டுத் தேவை இல்லை. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பரந்து விரிந்து சுழன்று எழும்பும் காமெராவோடு ஈடு கொடுக்க வேண்டும் என்று கொஞ்சம் வேகமாக முன்னால் ஓடி விட்டார் மரகதமணி. பின்னர் தான் திரும்பிப் பார்த்து ஒன்றாகப் பயணித்தது போல உணர்வு.

படத்தின் இடைவேளைக்குப் பின்னர் தான் உண்மையான பிரம்ம்ம்ம்மாண்டம். அடேங்கப்பா அந்தப் போர்க்களக் காட்சிகளிலெல்லாம் இருக்கையின் கால் பகுதிக்கு வந்து விட்டேன் என்றால் பார்த்துக்குங்க.

பிரம்மாண்ட்டம்யா என்னும் போதே கர்ணன் படம் எல்லாம் பார்த்த பரம்பரைடா என்று என் மனசாட்சி என்னைத் திட்டுகிறது. (காதல் கோட்டை மணிவண்ணன் குரலில்) வயசாகிப் போச்சேடா கலிய பெருமாள்.
இருந்தாலும் கடைசியில் போட்ட ஒரு முடிச்சால் 2016 இல் அடுத்த பாகுபலி வரும் வரை நம்பிக்கையை ஏற்படுத்திய விதத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி வெற்றி கண்டிருக்கிறார்.

மொத்தத்தில் "பாகுபலி" பலி எடுக்காத (தேன்) பாகு (சன் டிவி டாப் டென் மாதிரி நானும் சொல்லிட்டேனே யெப்பூடி)

Tuesday, July 7, 2015

#RajaChorusQuiz இனிதே நிறைந்த ஐநூறு


இன்றோடு இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் போட்டி நிகழ்ச்சி https://radiospathy.wordpress.com
தனது 500 வது போட்டியோடு இனிதே நிறைவை நாடுகின்றது.

இசைஞானி இளையராஜாவின் அள்ள அள்ளக் குறையாத இசைக் கடலில் எத்தனையோ முத்துகளைத் தேடியெடுக்கும் நல் வாய்ப்பு இந்தப் போட்டி வழியாக அமைந்தது.

இந்தப் போட்டிக்கு முன்னோடியாக அமைந்தது 2007 ஆம் ஆண்டில் எனது றேடியோஸ்பதி தளத்தின் வாயிலாகக் கொண்டு நடத்திய றேடியோஸ்புதிர் http://www.radiospathy.com/2007/10/blog-post.html

அந்தப் போட்டி அறுபது போட்டிகளைக் கடந்து, இளையராஜா மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களது போட்டிகளோடும் தொடர்ந்த நிலையில் இந்தப் போட்டியைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நடத்துவதற்கான உந்துதலாக நண்பர் ரெக்ஸ் அருள் நடத்திய போட்டி அமைந்தது.

இசைஞானியின் பாடல்களை வைத்துப் புதுமையானதொரு போட்டி வைக்க வேண்டும் என்று நினைத்த போது அவரின் பாடல்களில் தனித்துவமாக அமைந்த கோரஸ் குரல் ஓசையை வைத்துப் பண்ணலாமே என மனதில் திடீரென்று எண்ணம் உதித்தது.

"இரு விழியின் வழியே நீயா வந்து போனது"  (சிவா) பாடலோடு பெப்ரவரி 25 இந்தப் போட்டி ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் இருந்தே இந்தப் போட்டியில் தமிழில் இடம்பெறும் பாடல்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் எனது தேர்வு இன்னும் மட்டுப்படுத்தப்பட்டது.

நிதமும் சராசரியாக 50 பேர் அல்லது அதற்கும் மேலாகப் போட்டியில் பங்கெடுத்த சுற்றுகளும் இருந்தது இந்தப் போட்டியின் வெற்றி எனலாம்.

ஒவ்வொரு படத்திலும் கோரஸ் பாடல்கள் அமைவது அபூர்வம், சில சமயம் ஒரே படத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட கோரஸ் பாடல்களும் இருந்ததுண்டு. ஆரம்பத்தில் எனது மனதில் சட்டென்று தோன்றிய பாடல்களைக் கொடுத்து வந்தேன். பின்னர் கையிருப்பு வற்றிய போது தேடல் மிகவும் சவாலாக அமைந்தது.
குறிப்பாக பாடகர்/கவிஞர் சிறப்பு வாரம் அமையும் போது ஒவ்வொரு நாளும் குறித்த ஆளுமையின் வெவ்வேறு தன்மை பொருந்திய பாடலைத் தர வேண்டும் என்று தேடிய போது பெரும் சவாலாக அமைந்தது.
குறிப்பாக கவிஞர் வைரமுத்து வாரத்தில் ஒரேயொரு பாடலைத் தேர்ந்தெடுக்க 6 மணி நே வரை பிடித்தது.
ஒவ்வொரு வாரமும் சராசரியாக இரண்டு மணி நேர உழைப்பு இந்தப் போட்டிக்குத் தேவைப்படுகிறது.
வார இறுதியில் ஒரே தொனியில் அமையும் பாடல்களுக்கும் சிறப்புக் கவனம் தேவைப்பட்டது.

இலக்கியா பிறக்க முன்பும், பிறந்த அந்த நாளில் வைத்தியசாலையில் வைத்தே இந்தப் போட்டியை வெளியிட்ட நாட்களும் மறக்க முடியாது. வார இறுதியில் சில சமயம் இலக்கியாவை மடியில் வைத்துக் கொண்டு தான் பாடலைத் தேர்ந்தெடுப்பேன்.

இந்தப் போட்டிகளில் பங்கெடுத்த உங்களைக் கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு நூறு போட்டிகளிலும் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்ததோடு முதலில் தமிழில் பதிலளிக்கும் போட்டியாளருக்கு முதல்வர் என்ற சிறப்புப் பிரிவிலும் கெளரவம் வழங்கப்பட்டது.
கடந்த 400 வது போட்டியின் சுற்று மற்றும் இந்த 500 வது போட்டியின் சுற்று ஆகியவற்றுக்கான வெற்றியாளர் விபரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.

இத்தனை நாட்களும் தொடர்ந்து இந்தப் போட்டியில் பயணித்த உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அடுத்த போட்டி எப்போது, எப்படி அமையும்
என்ற தீர்க்கமான முடிவை எடுத்த பின்னர் இன்னொரு வெற்றிகரமான பயணத்தில் சந்திப்போம்.
அதுவரை நன்றி வணக்கம் 🙏

Thursday, July 2, 2015

தமிழ் திரையிசையில் குளிரும் பனியும்


சிட்னியில் குளிரோ குளிர் இதைச் சொன்னால் கனடாக்காரர் கொக்கட்டம் விட்டுச் சிரிப்பார்கள். ஆனாலும் நம்புங்க மக்கா நம்புங்க 😀
இன்று காலை வேலைக்குப் போக முன்னர் என் லஷ்மியை அதான் கார் ஐ எட்டிப் பார்த்தால் பின் கண்ணாடி பூராவும் மீன் செதில் போல பனிக்கட்டித் துகள்கள். அவை எல்லாவற்றையும் வழித்துத் துடைத்து விட்டு ரயிலேறினேன் வேலைக்குப் போக.

எங்க ஊரு பாட்டுக்காரன் கண்ட நேரமெல்லாம் சங்கதி தேடி சங்கதி போட்டுப் பாடுமாற் போல எனக்கும் இந்தப் பனி மேல் ஒரு பனி வந்து (ஈழத்தில் உனக்கென்ன பனியோ என்று கேட்டால் உனக்கென்ன பைத்தியமா என்று அர்த்தமுங்கோ) பனிக்குளிரை வைத்து வந்த பாடல்களை தேடு என்று மூளைக்குக் கட்டளை போட்டேன். 
சும்மாவே பட்டென்றால் குதியன் குத்தும் என்ர மூளை இந்த விளையாட்டுக்கு நான் ரெடி என்று நாள் முழுக்கப் போட்ட பட்டியல் தான் இது.

இளையராஜா இசையில் 
1. பனி விழும் மலர்வனம் - நினைவெல்லாம் நித்யா
2. பனி விழும் இரவு - மெளன ராகம்
3. இளம்பனித் துளி விழும் நேரம் - ஆராதனை
4. அடிக்குது குளிரு - மன்னன்
5. பனி விழும் மாலையில் - மீரா
6. பனிமழை விழும் - எனக்காகக் காத்திரு
7. ஊட்டிக் குளிரு அம்மாடி - ஆயிரம் நிலவே வா
8. காலைப் பனியில் ஆடும் மலர்கள் - காயத்ரி
9. பனி விழும் பூ நிலவில் - தைப்பொங்கல்
10. சிலு சிலுவெனக் குளிர் அடிக்குது - ராஜாதி ராஜா

பிற இசையமைப்பாளர்கள்

11. புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை - அன்பே வா (எம்.எஸ்.விஸ்வநாதன்)
12. புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது - ரோஜா (ஏ.ஆர்.ரஹ்மான்)
13. பனித்துளி பனித்துளி  - கண்ட நாள் முதல் (யுவன் ஷங்கர் ராஜா)
14. பனிக்காற்றே பனிக்காற்றே - ரன் (வித்யாசகர்)
15. முன் பனியா - நந்தா (யுவன் ஷங்கர் ராஜா)
16. பனி இல்லாத மார்கழியா - ஆனந்த ஜோதி (விஸ்வநாதன் ராமமூர்த்தி)
17. பெளர்ணமி நிலவில் பனி விழும் நிலவில் - கன்னிப் பெண் (எம்.எஸ்.விஸ்வநாதன்)
18. அனல் மேலே பனித்துளி - வாரணம் ஆயிரம் (ஹாரிஸ் ஜெயராஜ்)
19. பனி படர்ந்த மலையின் மேலே - ரத்தத் திலகம் (கே.வி.மகாதேவன்)
20. வெள்ளிப் பனிமலை மீது - கப்பலோட்டிய தமிழன் (ஜி.ராமநாதன்)