Pages

Wednesday, October 28, 2009

சிறப்பு நேயர் - யோகா (யோவாய்ஸ்)

இந்த வாரம் சிறப்பு நேயராக வருபவர் இலங்கையின் ஊட்டி என்று வர்ணிக்கக்கூடிய குளு குளு பிரதேசம் நுவரெலியாவில் இருந்து "யோ வாய்ஸ்" யோகா.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வலையுலகில் இருக்கும் யோகாவின் பதிவுகள் போலவே அவரது முத்தான ஐந்து ரசனைகளும் அமைந்திருக்கின்றன. தொடர்ந்து யோகா பேசுவதைக் கேட்போம்

எனது பாடல் ரசனை பொதுவாக மற்றவரோடு ஒத்து போவதில்லை. ஆனால் என்னை பொருத்தவரையில் ரொம்ப சந்தோஷமா பாட்டு கேட்பேன். ரொம்ப துக்கமா அதுக்கும் பாட்டு கேட்பேன். பாடல்கள் எனக்கு எபபோதும் உற்சாகம் தருபவை. ஏ.ஆர். ரகுமானின் தீவிர ரசிகன். ஏ.ஆருக்கு ஆஸ்கார் கிடைத்த அன்று நாங்கள் நண்பர்கள் விருந்து வைத்து கொண்டாடினோம். எனக்கு பிடித்த 5 பாடல்கள்.

01. விழிகளின் அருகினில் வானம் (படம் - அழகிய தீயே)


எனது மனநிலை எந்த நிலையிலிருந்தாலும் அதை சாந்தப்படுத்த கூடிய பாடல். இந்த பாடல் எனக்கு பிடித்தற்கு காரணம் இந்த பாடலில் சகலமும் பரிபுரணமாக இருப்பதனாலாகும். இசை, பாடல் வரிகள், குரல் என இந்த பாடலின் சிறப்பு சகலவற்றிலும் தங்கியுள்ளது. பாடல் வரிகள் வாலி என சில இணையதளங்களிலும் கவி வர்மன் சில இணையதளங்களிலும் உள்ளது.மிகவும் அழகான வர்ணனைகள், அதை அழகாக இசையமைத்தவர் ரமேஷ்விநாயகம்.
02. என்று உன்னைக் கண்டேனோ பெண்ணே (படம் - இதயமே இதயமே)


ஒரு டப்பிங் படத்தில் அமைந்திருந்தாலும் இந்த பாடல் மனதை ஈர்க்குமென்பதில் சந்தேகமேயில்லை. முக்காலா போன்ற பாடல்கள் பாடிய மனோவா இந்த மெல்லிய பாடலை பாடினார் என்பது ஆச்சர்யம். இந்த பாடலின் காணொளியை இதுவரை பார்த்ததில்லை. இப்போதும் இந்த பாடல் கேட்க வேண்டுமானால் வீட்டிலுள்ள டேப் ரெக்கார்டரில்தான் கேட்பேன். காரணம் இந்த பாடல் கேசட்டில்தான் என்னிடம் இருக்கிறது.03. புது வெள்ளை மழை (படம் ரோஜா)

ஏ.ஆர் இசையமைத்த முதல் படத்திலுள்ள பாடல். சுஜாதா, உன்னி மேனன் குரல்களும், அந்தகாலத்தில் மிகவும் வித்தியாசமான இசையையும் கொண்ட இந்த பாடல் என்னை ஈர்த்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் இதிலுள்ள கோரஸ். இப்பவும் வானொலியில் இந்த பாடல் போகும் போது இது போல் இன்னொரு பாடல் இல்லை என தோன்றும்.
04. இளைய நிலா பொழிகிறது (படம் - பயணங்கள் முடிவதில்லை)

இசைஞானியின் இசையில் எஸ்.பீ.பீ யின் காந்தக்குரலில் ஒலிக்கும் இந்தப்பாடல் கேட்க கேட்க சலிக்காத அவ்வளவு இனிமையான பாடல். இந்த பாடல் பிடிக்க இன்னொரு காரணம் எங்களது சீனியர் ஒருத்தர் பள்ளி நாட்களில் இந்த பாடலை தனது பொக்ஸ் கிட்டாரில் அழகாக வாசிப்பதும் ஆகும். இந்த பாடலை நடுராத்திரி தூக்கத்திலிருந்து என்னை எழுப்பி கேட்க சொன்னாலும் கேட்பேன். அவ்வளவுக்கு இந்த பாடலை நான் காதலிக்கிறேன்.05. வெள்ளைப்பூக்கள் (படம் - கன்னத்தில் முத்தமிட்டால்)

ஏ. ஆரின் இசையில் அவரே பாடிய பாடல். இந்தபாடல் எனக்கு பிடிக்க காரணம் பாடிய ஏ.ஆரின் குரல். ”முஸ்தபா முஸ்தபா”, ”அந்த அரபிக்கடலோரம்” பாடியவருக்கு இப்படி ஒரு பாடல் பாட முடியுமென நாங்கள் நினைத்திருக்கவில்லை. ஆஸ்கர் தமிழனின் குரலில் உள்ள பாடல்களில் எனக்கு என்றென்று் பிடித்த பாடல்.

நன்றி

யோகா (யோவாய்ஸ்)

Wednesday, October 21, 2009

மலேசியா வாசுதேவன் என்னும் பன்முகக் கலைஞன்

80களில் ரஜனி - கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் நடிப்புலகில் இருந்தது போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் - மலேசியா தேவன் குரல்களும் தனித்துவமாக முன்னணியில் இருந்த குரல்கள். கே.ஜே.ஜேசுதாஸ் தன் பாணியில் தனி ஆவர்த்தனம் கொடுத்துக் கொண்டிருக்க எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் ஆகிய இருவரும் வித்தியாசமான பாடல்களைக் கலந்து கட்டித் தந்து கொண்டிருந்தார்கள்.

ஒரு காலகட்டத்தில் ரி.எம்.செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது.

அத்தோடு சூப்பர் ஸ்டாராக அப்போது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு மலேசியா வாசுதேவன் குரல் தான் தொடர்ந்து பல்லாண்டு காலம் பாடல் கை கொடுத்தது.

நடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார். அதில் முத்தாய்ப்பாக இருப்பது முதல் வசந்தம் படத்தில் கவுண்டராக சத்தியராஜோடு மோதிய படம். அந்தப் படத்தில் சத்தியராஜாவுக்கு மனோ குரல் கொடுக்க, காட்சியில் நடித்ததோடு குரல் கொடுத்திருக்கும் மலேசியா வாசுதேவன் பாடும் அந்தப் பாடற்காட்சி "சும்மா தொடவும் மாட்டேன்"சாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம்.

1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குனராகவும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க "நீ சிரித்தால் தீபாவளி" படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சிட்னிக்கு இசை நிகழ்ச்சிக்காக வந்தபோது "நீ சிரித்தால் தீபாவளி" படத்தை ஞாபகப்படுத்திப் பேசினேன். "அந்தப் படத்தோட டிவிடி கிடைச்சா கொடுங்களேன்" என்றரே பார்க்கலாம். படம் இயக்கியவர் கையிலேயே அந்தப் படம் இல்லைப் போலும் ;)

நீ சிரித்தால் தீபாவளி படத்தில் இருந்து "சிந்து மணி புன்னகையில்" பாடலை வயலின் போன்ற வாத்தியக் கூட்டணியில் சோக மெட்டில் பாடுகின்றார் கே.ஜே.ஜேசுதாஸ்.நீ சிரித்தால் தீபாவளி படத்தில் இடம்பெற்ற முன்னர் கேட்ட அதே பாடலை ஜோடிப்பாடலாக சந்தோஷ மெட்டில் தருகின்றார்கள் மலேசியா வாசுதேவன், சித்ரா கூட்டணி. இந்த சந்தோஷ மெட்டு அதிகம் கேட்டிராத பாடலாக இருந்தாலும் பாடலுக்கு இசைஞானி இளையராஜா கொடுத்திருக்கும் மென்மையான மெட்டு இதமான தென்றலாக இருக்கின்றது.சாமந்திப் பூ படம் மலேசியா வாசுதேவன் இசையமைத்த படங்களில் ஒன்று. சிவகுமார், ஷோபா நடித்த இந்தப் படம் வருவதற்கு முன்னரே நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்ட துரதிஷ்டம் இப்படத்தோடு ஒட்டிக் கொண்டது. படத்தின் இறுதிக்காட்சியில் ஷோபாவின் நிஜ மரண ஊர்வலத்தையும் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்கள்

முதலில் "ஆகாயம் பூமி" என்ற பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் மலேசியா வாசுதேவன்.சாமந்திப் பூ படத்தில் இருந்து இன்னொரு தெரிவாக வரும் இனிமையான ஜோடிக்கானம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் கலக்கிய பாடல். "மாலை வேளை ரதிமாறன் வேலை" என்ற இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா இணைந்து பாடுகின்றார்கள்.மலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் "ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே" பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார். அதே போல திறமை என்ற படத்தில் உமாரமணனோடு பாடிய "இந்த அழகு தீபம்" பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார். இதோ அந்தப் பாடல்நிறைவாக வருவது, என் விருப்பப் பாடல் பட்டியலில் இருந்து இன்றுவரை விடுபடாத பாடலான என் ஜீவன் பாடுது படத்தில் வரும் "கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச" பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடுகின்றார் எஸ்.ஜானகி. இந்தப் பாடலும் பெரிய அளவில் பிரபலமாகாத ஆனால் மலேசியா வாசுதேவனுக்கே தனித்துவமான முத்திரைப்பாடலாக அமைந்து விட்டது

Tuesday, October 20, 2009

றேடியோஸ்புதிர் 46 - இயக்குனரான பாடகர்

இவர் இயக்குனராக எல்லாம் வருவார் என்று யார் நினைத்திருப்பார்கள்,80 களில் பிரபலமாக விளங்கிய பாடகர்களில் இவரும் ஒருவர். இந்தப் பாடகர் ஒரு படத்திற்கு இசையமைத்தும் இருக்கின்றார். அந்தப் படத்தில் நடித்த பிரபல நாயகி படம் முடிவதற்குள் இறந்தது துரதிஷ்டம் கூட. பாடகர், பின்னர் ஒரு படத்திற்கு இசை மட்டுமன்றி குணச்சித்திர வேடங்களில் கலக்கிய இவர் மகனும் தந்தை வழியொற்றி பாடகர், நடிகர், ஏன் இசையமைப்பாளராகக் கூட வந்திருக்கின்றார்.

மேலே கலவையாகவே உபகுறிப்புக்களைக் கொடுத்துவிட்டேன், இனிக் கேள்விக்கு வருகின்றேன். குறித்த அந்த 80களில் பிரபல பாடகராக இருந்தவர் ஒரு படத்திற்கு இயக்குனராகவும் இருந்திருக்கின்றார். அந்தப் படத்தின் தலைப்பு, நாயகன் படத்தில் வரும் பாடல்களில் ஒன்றின் ஆரம்ப வரிகளில் ஒளிந்திருக்கின்றது, அந்த ஆரம்ப வரிகளில் முதல் சொல்லை மட்டும் "நீ" ஆக்கினால் போதும் பதில் பொத்தென்று விழுந்து விடுமே. படம் பெயரையும் அந்தப் பாடகர் சக இயக்குனர் பெயரையும் கண்டு பிடியுங்களேன் ;)

Thursday, October 15, 2009

சிறப்பு நேயர் "கிருத்திகன் குமாரசாமி"

இந்த வார சிறப்பு நேயரைப் பார்ப்பதற்கு முன்னர், றேடியோஸ்பதி சிறப்பு நேயர் பகுதியில் உங்கள் ஆக்கமும் இடம்பெற விரும்பினால் முத்தான ஐந்து பாடல்களைத் தேர்வு செய்து அவை ஏன் உங்களை வசீகரித்தன, அல்லது அந்தப் பாடல்கள் நினைவுபடுத்தும் சுவையான சம்பவங்களைக் கோர்வையாக்கி என்ற மின்னஞ்சலுக்குத் தட்டிவிடுங்கள்.

சரி, இந்த வாரம் வந்து கலக்கும் சிறப்பு நேயரைப் பார்ப்போம்.
வலையுலகின் புதுவரவாக ஈழத்து உறவான கிருத்திகன் குமாரசாமி இந்த வார சிறப்பு நேயராக வந்திருக்கின்றார். ஈழத்தின் பண்பாட்டுக் கோலங்களில் இருந்து தான் வாழும் நாடு, தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளைப் பதிவாக்கும் கிருத்திகனின் பதிவுகள் தனித்துவமானவை. தொடர்ந்தும் இவர் வலையுலகில் நீடித்து நின்று தன் எண்ணப் பகிர்வுகளை வழங்க வெண்டும். முத்தான ஐந்து பாடல்களாக இவர் எடுத்தவை அனைத்துமே 80களில், இவருடைய காலத்துக்கு முற்பட்டவை. ஆனால் அவற்றை எவ்வளவு தூரம் ரசித்து அனுபவித்திருக்கின்றார். என்று பாருங்களேன். தொடர்ந்து கிருத்திகன் பேசுவார்.


எல்லோருக்கும் பிடித்த பாடல்கள்தான், ஆனால் சில வித்தியாசமான காரணங்களுக்காக சில பாடல்களைத் தெரிந்து வரிசைப்படுத்தி இருக்கிறேன்.

1. நீல வான ஓடையில்.... (வாழ்வே மாயம்)
இந்தப் பாடலைப் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியமே பல இடங்களில் ஒப்புக் கொண்டிருக்கிறார் இன்றைக்கும் இந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் குலாம் நபி ஷேக் என்பவரின் கசல் (இதுவும் பாலா சொல்லித்தான் தெரியும்) அடிப்படையில் உருவான humming வரும்போதே கைதட்டல் கிடைக்கும் பாடல் இது. இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா? 2004ல் ஜெயா ரி.வி.யில் 'கலக்கப்போவது கமல்' என்ற நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. சொல்லித்தான் தெரியும் இந்தப் பாடலுக்கு இசையமைத்தது கங்கை அமரன் என்று. அதுவரை இளையராஜா என்றே நம்பி வந்தேன். தொலைக்காட்சியில் பாடல்கள் போடும்போது கூட இளையராஜா என்றே போடுவார்கள். இப்போதுகூட கங்கை அமரனையும் இந்தப் பாடலையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை.2. விழிகள் மேடையாம்...(கிளிஞ்சல்கள்)
இந்தப் பாடல் ஏன் பிடிக்கும் என்று காரணம் சொல்ல முடியவில்லை. எங்களூர் கல்யாண வீட்டு வீடியோக்கள் போல் படமாக்கப்பட்டிருப்பதாலா? இசையாலா? அல்லது கிளிஞ்சல்கள் என்ற படத்தின் பாதிப்பாலா? இல்லையென்றால் பாடல் வரிகளாலா? எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து கட்டி ரசிக்க வைக்கின்ற பாடல். முக்கியமாக ஜானகி மற்றும் Dr.கல்யாண் பாடிய இந்தப் பாடலை எழுதி இசையமைத்தது இன்றைக்கு தன்னாலும் , மகனாலும் ‘காமெடி பீஸ்' ஆகிவிட்ட விஜய. T. ராஜேந்தர் என்பது எனக்கு ஒரு போது பேரதிர்ச்சி.
3. பன்னீரில் நனைந்த பூக்கள்...(உயிரே உனக்காக)
அடிக்கடி கேட்ட பாடல்தான். வரிகள் யாருடையவை என்று தெரியாது.. ஆனால் ஏனோ இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கும். ஆரம்பகாலங்களில் இதுவும் ராஜாவின் கொடை என்பதாக நினைத்ததுண்டு. ஆனால் சமீபகாலமாக கொஞ்சம் எங்களுக்கு அன்னியப்பட்ட இசையாக இருக்க இணையத்தில் தேடிப் பார்த்தபோது தெரியவந்தது, இந்தப் பாட்டை உருவாக்கியவர்கள் லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் இரட்டையர்கள் என்று. முக்கியமாக பாடல் தொடங்கக்கு முன்னர் வருகிற அந்த இசை ஏதோ நினைவுகளை மீட்டுத்தரும்4. தாழம்பூ தலைமுடித்து... (தேவராகம்)
இந்தப் பாட்டு அடிக்கடி எங்களூர் கல்யாண வீடியோக்களில் கேட்ட பாட்டு... என்ன படம், யார் இசை என்று தேடித்தேடி அலுத்து சமீபத்தில் தற்செயலாக மலையாளத்தில் இருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்டு வந்த இந்தப் படத்தைப் பார்க்கக் கிடைத்தது. அர்விந்த்சாமி, ஸ்ரீதேவி நடித்த படம். ஸ்ரீதேவி தேவதை மாதிரி இருப்பார்கள். இளையராஜா என்ற இசை ராட்சசனுக்கு அடிக்கடி சமர்ப்பிக்கப்படும் பாடல், இருந்தாலும் இதற்கும் ராஜாவுக்கும் சம்பந்தமில்லை. பாடல் எழுதியது வைரமுத்து, வருடம் 1996... இசையமைத்தது மரகத மணி என்றறியப்பட்ட மரகதமணி கீரவாணி அவர்கள்.5. அந்தி நேரத் தென்றல் காற்று... (இணைந்த கைகள்)
ஆபாவாணன் என்று ஒருவர் கொஞ்சக் காலம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதிப் படம் எடுத்தார் ஞாபகம் இருக்கிறதா. அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் மனோஜ் கியான் போட்ட பாடல் இது. ரயில் ஒன்றில் வருவதாக வரும் இந்தப் பாடல் சில ஞாபகங்களைக் கிளறிவிட்டுப் போகும். எஸ்.பி. பாலாவும் ஜெயச்சந்திரனும் பாடிய பாடல் இது. இதே மனோஜ் கியான் உருவாக்கியவைதான் தோல்வி நிலையென நினைத்தால், செந்தூரப் பூவே நீயும் தேன் சிந்த வா, மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா போன்ற பாடல்கள்.பாடல்களாலேயே படங்கள் ஓடிய அந்தக் காலத்தில் வந்த பாடல்களை இளையராஜா பாடல்கள், மோகன் பாடல்கள், கார்த்திக் பாடல்கள், கமல் பாடல்கள் வழமையாகப் பிரிப்பது போல் பிரிக்காமல் கொஞ்சம் வித்தியாசமான தேர்வுகளை உள்ளடக்க முயன்றிருக்கிறேன். இளையராஜா என்னும் இசைச் சூறாவளியால் அடித்து ஒதுக்கப்பட்ட சில இசையமைப்பாளர்களின் பாடல்கள் இவை.

கிருத்திகன்.

Thursday, October 8, 2009

சிறப்பு நேயர் "சின்ன அம்மிணி"


இந்த வாரம் றேடியோஸ்பதி சிறப்பு நேயராக அமர்க்களப்படுத்த இருப்பவர் நாம் வாழும் எங்கள் கங்காரு தேசத்தில் இருந்து "சின்ன அம்மிணி" என்பதில் பெருமையடைகிறோம். கிவி தேசம் நியூசிலாந்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்த சின்ன அம்மணி தொடர்ந்தும் இடைவிடாது பதிவுலகில் இடைவிடாத பதிவுப்பணியை ஆற்றி வருபவர் என்று நான் உங்களுக்குச் சொல்லத்தேவையில்லை. ஆனால் அவுஸ்திரேலியாவில் ஆரம்பத்தில் சுனாமியாக வந்த வலைப்பதிவர்கள், பதிவுகள் ஓய்ந்து போன நிலையில் தொடர்ந்து எழுதி வரும் வரும் விரல் விட்டு எண்ணக் கூடிய பதிவர்களில் சின்ன அம்மிணி இருப்பதை இங்கே சொல்லி வைக்க வேண்டும்.

நாட்டு நடப்பு, நகைச்சுவை, சினிமா, சமூகம் என்று கலக்கும் சின்ன அம்மணியின் நகைச்சுவைக் கலக்கலுக்கு லேட்டஸ்ட் உதாரணம் அவர் படைத்த "நீதிபதி" விமர்சனம்.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் கலக்கிய இனிய மெல்லிசை மெட்டுக்கள் சின்ன அம்மணியின் தேர்வாக முத்தான ஐந்து பாடல்களாக வந்து உங்களுக்கு இன்னிசை விருந்து படைக்க இருக்கின்றன. கேட்டு மகிழுங்கள்.

1. நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே.

உமாரமணன், இளையராஜா பாடின பாட்டு. நில்லாமல் பதில் சொல்லாமல் அன்பேன்னு பாடும் உமா ரமணன் குரல் அருமை. பாட்டு பாடவா படம் வெளிவந்தபோது நான் ஈரோடில் பணியில் இருந்தேன். என் மேலதிகாரி ஒரு ஒரியாக்காரர். 'கொஞ்சம் கொஞ்சம்' தமிழ் பேசவும் படிக்கவும் தொடங்கியிருந்தார். தமிழின் சுலப எழுத்துக்களான ப,வ,ட மட்டுமே வைத்து வந்த இந்தப்படப்பெயரை படிக்கச்சொன்னதும் பட்டு புடவா என்று படித்தார். நான் விழுந்து விழுந்து சிரித்து வயறு வலித்தது. இந்தப்படத்தில் வந்த 'வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறாள்' எனக்கு பிடித்தமான மற்றொரு பாடல்.
2. இசையில் தொடங்குதம்மா

இந்தப்பாட்டு Full of Music. டம் டம்னு தொடங்கற இசை ஆகட்டும். பின்னாடி இந்துஸ்தானில அருவி மாதிரி இசை கொட்டும் குரல் கொண்ட அஜய் சக்ரபர்த்தி ஆகட்டும். So rich in Music. இளையராஜாவோட இசையில் இன்னொரு காவியம். இந்தப்படம் நியூஸியில் நான் திரையங்கில் பார்த்த படம். சென்சார் செய்யப்படாத காட்சிகளோடு பார்த்தேன். பின்னர் குறுந்தகட்டில் மீண்டும் பார்க்க நேர்ந்தபோது பல காட்சிகள் வெட்டப்பட்டிருந்தது. முழு படம் பார்த்த உணர்வை அது தரவில்லை. ராஜாவின் இசையில் கமல் பாடிய பாடல்களில் அவருக்கு தோதான குரல் ஜானகிதான். அதற்குப்பின் கமல் குரலுக்கு இசைந்த பெண்குரல்கள் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன். சுந்தரி நீயும், கண்மணி அன்போடு போன்ற பாடல்கள். மற்ற பாடல்கள் யாருக்காவது நினைவு வந்தால் பின்னூட்டம் போடுங்க.
3. காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு, வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா

சேரன் பாண்டியன் படத்தில தேன் குரலில் ஸ்வர்ணலதா பாடும் பாட்டு. என்னோட பேவரைட்களுல் ஒண்ணு. இசை செளந்தர்யன். கேக்க சலிக்காத பாட்டு. பாடல் பிடிக்க காரணம் ஸ்வர்ணலதா. பாடல்களுக்கு அழகு சேர்க்கும் குரல் இவருக்கு. லதா மங்கேஷ்கர் மாதிரி. படம் கிடைத்தால் மறுபடியும் பார்க்கவேண்டும்.

வந்ததா வந்ததான்னு கேட்டுக்கிட்டே ஷிரிஜாவை சுத்தி ஸ்டைலா ஆனந்த்பாபு நடப்பார். அழகா இருக்கும். (கானா - ஒளிப்படம் கிடைச்சா போடுங்க)
4. நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பாத்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல்ல.

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடிங்கி போன பின்னும் இப்படி போகும்
யேசுதாஸ் , ஸ்வர்ணலதா - படம் சின்னத்தாயி . மறுபடியும் இளையராஜா, ஸ்வர்ணலதா. இந்தப்பாட்டு கேட்கும்போது 'கூண்டுக்குள்ள உன்னைவச்சு கூடி நின்ன ஓரை விட்டு ' பாடல் நினைவுக்கு வரும். ஒரே ராகமாய் இருக்குமோ.

இந்தப்பாட்டு அவ்வளவா பிரபலமாகலை. ஆனா பாடகர்கள் இரண்டு பேரும் பாடியிருக்கறதை கேளுங்க. சொக்கிப்போயிடுவீங்க.5. சோலைகள் எல்லாம் பூக்களைத்தூவ சுகம் சுகம் ஆஅ..
குயில்களின் கூட்டம் பாக்களைப்பாட இதம் இதம் ஆஅ
காதல் ஊர்வலம் இங்கே


இசை டி.ராஜேந்தர். படம் - பூக்களைத்தான் பறிக்காதீங்க - எஸ் பிபி, சித்ரா

இந்தப்படத்துல அத்தனை பாடல்களும் சூப்பர். இந்தப்படம் திரையரங்கள் அண்டை வீட்டுக்காரர்களுடன் பார்த்தேன் - நதியாவுக்காக. படம் ஓடவில்லை. ஆனால் பாடல்கள் அனைத்தும் அருமை.