Pages

Tuesday, September 27, 2011

எழுத்தாளர் ராஜேஷ்குமார் வானலையில் பேசுகிறார்

தமிழ் படைப்புலகில் ராஜேஷ்குமார் என்ற எழுத்தாளரைக் கடைக்கோடி வாசகனும் தெரிந்து வைக்குமளவுக்குப் பரவலாக அறிமுகமானவர் தன் எழுத்து மூலம். "க்ரைம் கதைகளின் மன்னன்" என்று சிறப்பிக்குமளவுக்கு இவரின் திகில் நாவல்கள் வாசகர்களிடையே பெருமதிப்புப் பெற்றவை. சின்னத்திரை வைரஸ் வராத காலகட்டத்திலும், செல்போன் செல்லரிக்காத யுகத்திலும் இவர் தான் நெடுந்தூர பஸ் பயணங்களிலும், ரயில் பயணங்களிலும் கூடவே தன் நாவல் மூலம் வந்து போகும் ஸ்நேகிதர். இன்றைக்குப் பாக்கெட் நாவல்கள் பொலிவிழந்து போனாலும் அவற்றை இன்னும் தாங்கிப்பிடிக்கும் எழுத்தாளர்கள் என்றவகையிலும், அந்தப் பாக்கெட் நாவல்களுக்கு முத்திரை கொடுக்கும் வகையிலும் ராஜேஷ்குமாரின் இடம் தனித்துவமானது.

நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்காக எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களைப் பேட்டி எடுக்க அணுகியபோது துளியும் பந்தா இன்றி உடனேயே "எப்பவேணாலும் பண்ணலாம் பிரபா" என்று முழுமனதோடு சம்மதித்துச் செய்தும் காட்டினார். இந்த வானொலிப்பேட்டியில் ராஜேஷ்குமாரின் எழுத்துலக அறிமுகத்தில் இருந்து இன்றுவரை அவர் கடந்து சென்ற எழுத்துலகத் தரிசனமாக அமைகின்றது. இதில் குறிப்பாக அவரின் துப்பறியும் நாவல்களை வாசித்த காவல்துறையில் இயங்குபவர் ஒரு கொலைக்கேஸ் இற்கு உதவ அழைத்தது, வேட்டையாடு விளையாடு சினிமா திருடிய தன் நாவல், கின்னஸ் சாதனைப் பயணத்தில் இவரின் எழுத்துக்கள் என்று மனம் திறந்து பேசுகின்றார். பேட்டியின் ஒருங்கமைப்பில் உதவிய அன்பின் ரேகா ராகவன் அவர்களுக்கும் எனது நன்றிகளை இந்த வேளை பகிர்கின்றேன்.

தொடர்ந்து எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் பேசுவதைக் கேட்போம்


Download பண்ணிக் கேட்க

Sunday, September 18, 2011

இசைஞானி - சத்யன் அந்திக்காடு கட்டிய "ஸ்நேக வீடு"


நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதாவது மாயக்கண்ணாடி பாடல் தொகுப்புக்குப் பிறகு சுடச்சுட வெளியாகியிருக்கும் ஒரு படத்தின் பாடல்கள் குறித்த என் பார்வையைப் பதிவாக்க ஆவல் கொண்டிருக்கிறேன். சொல்லப்போனால் இன்றைக்கு திரை இசை உலகம் இருக்கும் நிலையில் அதீத எதிர்பார்ப்பை வைத்து, ஒரு படத்தின் பாடல்கள் எப்போது வரும் என்று தேடவைத்த படங்களில் இதுதான் இப்போதைக்குத் தேறியிருக்கின்றது என்ற நிலை. அதற்குப் பல காரணங்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கிறேன்.

சத்யன் அந்திக்காடு, மலையாள சினிமா உலகில் 31 ஆண்டுகளைக் கடந்து இன்னும் வெற்றிகரமான இயக்குனர். ஜனரஞ்சகம் மிகுந்த சினிமா என்றால் என்ன என்பதை இன்றளவும் மிகச்சரியாகப் புரிந்து கொண்டு இன்றுவரை அதை வெற்றிகரமாகப் பதிவாக்கி வருபவர். சத்யன் அந்திக்காடு இன் காலத்தில் வந்தவர்களும் சரி, அவருக்குப் பின்னால் வந்தவர்களும் சரி, ஆரம்பத்தில் நல்ல பல படைப்புக்களைத் தந்து ஒரு எல்லையில் தாமும் தடுமாறி மக்களையும் குழப்பி ஜனரஞ்சகக் கிரீடத்தைத் தொலைத்த இயக்குனர்கள் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் காணலாம். ஜி.வி.பிரகாஷ்குமார் வரை வித்தை பண்ணி வெற்றி தேடிப்பார்க்கும் இயக்குனர் இமயம் வரை இது தொடர்கிறது.
சாதாரண மனிதர்களின் உணர்வுகளின் பகிர்வாக, எளிமையான எல்லோருக்கும் புரியத்தக்க படைப்பாகக் கொடுத்து அழுத்தமான தீர்வையும் முன்வைக்கும் பாணி தான் சத்யன் அந்திகாடு அன்றிலிருந்து இன்றுவரை பிடிவாதமாகக் கைக்கொள்வது. அந்தப் பிடிவாதம் தான் அவருக்கான அங்கீகாரத்தை எப்போதும் கொடுத்து வருகின்றது.

அந்த வகையில் "ஸ்நேக வீடு" என்றதொரு மலையாளச் சித்திரம் திரைக்கு வரவிருக்கின்றது. இது சத்யன் அந்திக்காடு இன் 51 ஆவது படம்
"அம்முக்குட்டி அம்மாயுடே அஜயன்" என்ற பெயர் சூட்டப்பட்டுப் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் தான் "ஸ்நேக வீடு" ஆக மாறியிருக்கின்றது. மோகன்லால், ஷீலா, பத்மப்பிரியா உள்ளிட்ட கலைஞர்களோடு சத்யனின் படங்களில் பெரும்பாலும் விடாமல் வந்து போகும் இன்னசெண்ட், கே.பி.ஏ.சி.லலிதா, மம்முக்கோயாவும் இருக்கின்றார்கள்.

சத்யன் அந்திக்காட் உடன் இசைஞானி இளையராஜா இணைந்து இதுவரை கொடுத்த எட்டுப்படங்களையும் பார்த்திருக்கின்றேன். அதைப் பதிவாகவும் கொடுத்திருக்கின்றேன் இங்கே. மலையாள சினிமாவில் பாடல்கள் என்பது தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்லது அதற்கும் கீழே தான். இசையைச் சார்ந்து வெளிவரும் படங்கள் தவிர மற்றெல்லாப் படங்களில் ஒன்றோ இரண்டோ அதிக பட்சம் மூன்றோ தான் இருக்கும். படத்தின் முக்கிய திருப்பத்தில் ஒரு சோகச் சம்பவத்துக்கான குரலாக ஜேசுதாஸ் வந்து போவார். பாடல்களுக்கு ஒரு இசையமைப்பாளரும், பின்னணி இசைக்கு ராஜாமணி போன்ற மாமூல்களையும் வைத்து ஒப்பேற்றிவிடுவார்கள். இப்போது தமிழ் சினிமாவைக் காப்பியடித்துக் குட்டிச் சுவராகிக்கொண்டிருக்கும் மலையாள மசாலாக்கள் இங்கே விதிவிலக்கு.

ஆனால் சத்யன் அந்திக்காடு இதுவரை இசைஞானி இளையராஜாவோடு பணியாற்றிய அனைத்துப் படங்களிலும் பாடல்களுக்குக் கொடுத்திருக்கும் கெளரவம் என்பது இசைஞானி இளையராஜா மீதான காதலின் வெளிப்பாடாகவே பார்க்கமுடியும். இளையராஜா கொடுத்த மூன்று பாடல்களை வைத்துக்கொண்டாவது சத்யன் அவற்றைப் பொருத்தமான தருணங்களில் நுழைத்துக் காட்சியின் மீதான கெளரவத்தை அதிகப்படுத்திக் கொள்ளவைப்பார். எண்பதுகளில் பாரதிராஜா, மணிரத்னம் போன்றோர் செய்து காட்டிய வித்தை தான் இது. "ஸ்நேக வீடு" பாடல்கள் ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் வந்திருக்கின்றது, படம் இன்னும் வரவில்லை என்ற நிலையில் அந்தப் பாடல்கள் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைச் சொல்கிறேன்.


எடுத்த எடுப்பிலேயே நான் கேட்ட முதற்பாட்டு கிட்டார் இசையை மீட்டிக் கொண்டே ஆரம்பிக்கும் "அம்ருதமாய் அபயமாய்" ஹரிஹரன் குரலில் வரும் இந்தப் பாட்டுத் தான் படத்திற்காகப் போட்டிருக்கும் மற்ற நான்கு மெட்டுக்களில் இருந்து முதல் இடத்தை மனசுக்குள் பிடிக்கின்றது. அருமையான மெலடி, கண்டிப்பாக சத்யன் இந்தப் பாடலைத் தன் வழக்கமான ஸ்நேகபூர்வமான காட்சி ஒன்றுக்குப் பயன்படுத்தவெண்ணி ராஜாவிடம் கேட்டு வாங்கியிருக்கவேண்டும். ஹரிஹரன் குரலைப் பழுது சொல்லும் யோக்கியதை எனக்கில்லை. ஆனால் சிலசமயம் தேர்ந்த ஆட்டக்காரர் கொடுக்கும் வழக்கமான சிக்ஸர்களை விட அதே ஆட்டத்தில் ஆடும் இன்னொரு இளம் வீரர் அடித்து ஆடும் ஆட்டம் வெகுவாகக் கவர்ந்து விடும். அப்படித்தான் இதே பாடலைப் பாடும் ராகுல் நம்பியாரின் குரலின் மீதான நேசம். இந்தப் பாடலை ஹரிஹரன் பாடும் போது ஊதித் தள்ளிவிடும் அனுபவம், ராகுல் நம்பியார் பாடும் போது இசைஞானி என்ற ஜாம்பவானிடம் பெற்ற மெட்டைத் தன்னளவில் உயர்த்திக்காட்ட வேண்டும் என்ற துடிப்பே அவரின் பாடலை மனதுக்கு நெருக்கமாக வைக்கின்றது. ராகுல் நம்பியார் ஏற்கனவே "ஸ்வப்னங்கள் கண்ணெழுதிய மல்ச கன்னிகே" என்ற பாக்ய தேவதா பாடலில் ராஜாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய பாடகர். அந்த நம்பிக்கையை நன்னம்பிக்கை ஆக்கிக் காட்டியிருக்கின்றார். இந்தப் பாடலில்.

அடுத்ததாக ஸ்நேக வீட்டில் என்னைக் கவர்வது வட இந்தியா மட்டுமல்ல தென்னிந்தியாவையும் கட்டிப்போட்டு வைத்திருக்கும் ஸ்ரேயா கொசல் பாடும் "ஆவணித்தும்பி" என்ற பாடல். கதாநாயகிக்காக ஒதுக்கி வைத்திருக்கும் பாடல் என்று எண்ணத் தோன்றும் இந்தப் பாடல் எடுப்பான, எளிமையான இசையோடு ஸ்ரேயா கொசலுக்காகவும் கேட்கக் கேட்கத் தோன்றும் மீண்டும் மீண்டும்.

"செங்கதிர்க்கையும் வீசிப் பொன்புலர்ப்பூங்காற்றே" என்ற பாடலையும் இரண்டாவதாகப் பிடித்துப் போன "ஆவணித் தும்பி" பாட்டுக்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் சித்ராவின் குரலைக் கேட்கும் போது இருக்கும் நேசமும் சேர்ந்துகொள்ளப் பாடல் மீதான காதலைப் பின்னாளில் இன்னும் அதிகப்படுத்தலாம்.

மீண்டும் ராகுல் நம்பியார் இம்முறை ஸ்வேதாவோடு கூட்டணி கட்டிப் பாடும் "சந்த்ர விம்பத்தின்" பாடல் மலையாளத்துக்கே உரித்தான எளிமையும் தமிழ்த் திரையிசைக்கு அந்நியமான மெட்டாகவும் பதிகின்றது. காட்சியோடு பார்க்கும் போது பிடிக்கலாம் போலப்படுகின்றது. ஏனென்றால் இதே மாதிரி பாக்ய தேவதா படத்தில் வந்த, கார்த்திக் பாடும் பாடலான "ஆழித் திரதன்னில் வீழ்ன்னாலும் " என்ற பாடலும் எனக்குக் கேட்டமாத்திரத்தில் அதிகம் ஒட்டிக்கொள்ளவில்லை. படத்தின் காட்சியோடு சேர்த்துப் பார்த்தபின் தவிர்க்க முடியாத பாட்டாகி விட்டது. பாடகி மஞ்சரிக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு வழங்கப்படாதது பெரிய ஆறுதல்.

மலையாளம் புரியாத மொழி என்பதை விடத் தேடிப்புரிந்து போற்றும் மொழியாக அமைய சத்யனின் படங்களும் ஒரு காரணம் என்னளவில். சத்யன் - இளையராஜா படங்களில் அமைந்த பாடலாசிரியர்களில் ஆரம்பத்தில் கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரியை வைத்தும் பின்னிரண்டு படங்களில் வயலார் சரத் சந்திர வர்மாவையும் பாடலாசிரியர்களாக வரித்துக் கொண்டலும், எனக்கென்னமோ, வைரமுத்து - ராஜா கூட்டணி போல எண்ணிப்பார்க்க வைக்கும் கிரிஷ் புத்தன்சேரி - ராஜா என்ற கெமிஸ்ட்ரி இன்னும் வெகுவாகப் பிடிக்கும். அச்சுவிண்டே அம்மா படத்தில் வரும் ஒரு முக்கிய திருப்புமுனையில் ஒரு பாடல் அதில் எந்த வித வார்த்தை ஜாலங்களும் இன்றி "எந்து பறஞ்சாலும் நீ எந்தேதல்லே வாவே" என்ற சாதாரண வரிகளுக்குக் கிடைக்கும் அழுத்தம் போல இன்னும் பல உதாரணங்கள் கிரிஷ் புத்தன்சேரியும் ராஜாவும் கூட்டணி கட்டி மெட்டுக்கட்டிப் போட்ட பாட்டுக்களில் கிட்டும்.இன்னொன்று, மனசினக்கரே படத்தில் வரும்"மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா". ஆனால் கிரிஷ் புத்தன்சேரி இரண்டு வருஷங்களுக்கு முன்னால் காலமாகிவிட்டார் என்ற துயரமும் இங்கே பதிவாக்க வேண்டும். பின்னொரு நாளில் இவ்விருவர் கூட்டணி குறித்து விலாவாரியாக அலசலாம்.

சத்யன் அந்திக்காடு - இசைஞானி இளையராஜாவின் கத தொடருன்னு , ஸ்நேக வீட்டிலும் கூட.

"அச்சுவிண்டே அம்மா" படத்துக்காக "எந்து பறஞ்சாலும்" பாட்டைப் பெற்ற அனுபவத்தைச் சொல்கிறார் சத்யன் அந்திக்காடு, கூடவே ராஜா மெட்டுப் போட, சித்ரா பாடுகிறார்.


இசைஞானி குறித்து சத்யன் அந்திக்காடு சொல்கிறார் இப்படி

Wednesday, September 7, 2011

பாடகர் ஜாலி ஏப்ரஹாம் பேசுகிறார்


கே.ஜே.ஜேசுதாஸில் இருந்து கேரளத்தில் இருந்து தமிழ்த்திரையுலகில் கோலோச்சிய பாடகர்கள் எழுபதுக்குப் பின்னாலும் எண்பதுகளிலும் கணிசமாகவே இயங்கிவந்தார்கள். இவர்களில் பாடகிகள் ஒருபக்கம் இருக்க, பாடகர்களை எடுத்துக் கொண்டால் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், உன்னிமேனன், கிருஷ்ணச்சந்தர் இவர்களோடு ஜாலி ஏப்ரஹாமின் பாடும் தொனி ஒரே அலைவரிசையில் இருப்பதை ஏனோ உணரமுடியும். அதிலும் "உறவுகள் தொடர்கதை" போன்ற பாடல்களில் ஜெயச்சந்திரனா, ஜேசுதாஸா என்ற குழப்பத்தில் ஒரு சில ரசிகர்கள் என்னோடு தர்க்கம் புரிந்தும் இருக்கிறார்கள்.
அதே குழப்பத்தின் ஒரு படியாக ஜாலி ஏப்ரஹாம் இசைஞானி இளையராஜாவுக்காக முதலில் பாடிய "அடடா அங்கு விளையாடும் புள்ளி மானே" (மாயாபஜார் 1995) பாடலை ஜேசுதாஸ் பாடியதாக இசைத்தட்டுக்களுமே வெளியிட்டுத் தம் ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜாலி ஏப்ரஹாம் சிட்னி வருகின்றார் அறிந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ஜாலி ஏப்ரஹாமை வானொலிக் கலையகத்துக்கு அழைத்துவரக் கேட்டேன்.

என் சின்ன வயசில் இலங்கை வானொலியின் "பொங்கும் பூம்புனல்" நிகழ்ச்சியில் அடியேனைப் பாரம்மா என்று காலையில் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் பல வருஷங்கள் கழிந்த நிலையில் என் முன்னே வானொலிப் பேட்டிக்கு வந்திருக்கின்றார் என்ற பெருமிதத்தோடு ஜாலி ஏப்ரஹாமுடன் பேட்டியை ஆரம்பித்தேன். தான் பாட வந்த கதையில் இருந்து, தன் இறுதிப்பாடலான ஒரு சின்ன மணிக்குயிலு (கட்டப்பஞ்சாயத்து) பாடலோடு திரையிசைப்பாடலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கிறீஸ்தவ மதத் தொண்டுக்காகத் தன்னை அர்ப்பணித்தது வரையான தன் இசைவாழ்வில் மைல்கல்லாய் அமைந்த பாடல்களைப் பாடிக்கொண்டே தன் வாழ்வின் சுவையான அம்சங்களைப் பகிர்ந்து கொண்டே 30 நிமிடங்கள் கடந்து பயணித்தது அவர் பேட்டி.

பேட்டி முடிந்தபின் "காஷுவலாக பேட்டி அமைஞ்சிருக்கு, ரொம்ப நல்லா இருக்கு"என்று அவர் திருப்தியோடு சொல்லிக் கொண்டே ஆசையாகத் தன் காமராவிலும் எங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டார். கூடவே தன் இரண்டு பாடல் இசைத்தட்டுக்களை அன்பளித்தார்.
ஜாலி ஏப்ரஹாம், நான் வானொலிப் பேட்டி கண்ட கலைஞர்களில் இன்னொரு பண்பட்ட மனிதர்.

பேட்டியைக் கேட்க



Download பண்ணிக் கேட்க


ஜாலி ஏப்ரஹாம் பாடிய சில திரையிசைப்பாடல்கள்

அடியேனைப்பாரம்மா - படம்: வணக்கத்துக்குரிய காதலியே, இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்


அடடா அங்கு விளையாடும் புள்ளிமானே - படம்: மாயாபஜார் 1995, இசை: இளையராஜா


அட மன்மதன் ரட்சிக்கணும் - படம்: ஒருதலை ராகம் இசை: டி.ராஜேந்தர்


ஒரு சின்னமணிக்குயிலு சிந்து படிக்குதடி (பவதாரணியோடு) - படம்: கட்டப்பஞ்சாயத்து இசை:இளையராஜா