கவி வானின் நட்சத்திரம் ஐயா காமராசன் அவர்கள் காலமான செய்தியை இன்றைய காலை துயிர் பகிர்ந்தது. கவிஞர் முத்துலிங்கம் அவர்களோடு ஒரு நீண்ட வானொலிப் பேட்டியை எடுத்த பின் காமராசன் அவர்களையே மனதில் நினைத்து வைத்திருந்தேன். ஆனால் சந்தர்ப்பங்கள் தடையாக இருக்க, சமீபத்தில் குமுதம் இதழில் அவர் கொடுத்த பேட்டி மீண்டும் என்னுள் அவரோடு பேச வேண்டும், ஒலிப் பேட்டி கண்டு ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. ஆனால் அது மீளா இருப்பாக இன்று முற்றுப்புள்ளி வைத்தது.
கவிஞர் காமராசன் அவர்களின் பாடல்களில் ஐயா வாழ்ந்து கொண்டிருப்பார்.
நக்கீரன் இதழுக்காக செப்டெம்பர் 1, 2013 இல் காமராசன் அவர்கள் வழங்கிய பேட்டியை நன்றியோடு இங்கு மறு பதிப்புச் செய்கிறேன்.
புதுக்கவிதை உலகின் பிதாமகன்களில் தலையாயவர் கவியரசர் நா. காமராசன். இவர் வசீகர வார்த்தைகளால் கவிவானை அளந்த ராஜாளிப் பறவை. மாணவப் பருவத்திலேயே மரபுக்கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர், அறுபதுகளின் இறுதியில் புதுக்கவிதையின் காதலர் ஆனார். இவரது பிரவேசத்திற்குப் பிறகு புதுக்கவிதை உலகம் கம்பீரம் அடைந்தது.
1971-ல் நூல் வடிவம் தரித்த "கருப்பு மலர்கள்'
கவிதை நூல் தொடங்கி, "கிறுக்கன்', "நாவல்பழம்',
"மகா காவியம்', "சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி', "தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும்', "சூரியகாந்தி', "சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்', "ஆப்பிள் கனவு' உள்ளிட்ட முப்பதுக்கும் அதிகமான தொகுப்புகள் இவரது விரல்களில் இருந்து வீரியமாய் மலர்ந்திருக் கின்றன.
1965-களில் தீவிரம் கொண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், முக்கியமான மாணவத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்து, சட்ட எரிப்புக்காகச் சிறை சென்றவர். சாதனைச் சிகரங்கள் பல கண்ட கவியரசர் நா. காமராசனை, "இனிய உதயத்'திற்காக சந்தித்தபோது, நமது கேள்விகளை உற்சாகமாகவே எதிர்கொண்டார். நா.கா.வால் பேச முடியவில்லை. முன்புபோல் அவரால் எழுத முடியவில்லை என்பது போன்ற வதந்திகளை குப்பைக் கூடைக்கு அனுப்பியது அவரது நேர்காணல். எல்லாவற்றையும்விட "இனிய உதயம்' வாசகர்களுக்காக அவர் சுடச்சுட மரபில் ஒரு விருத்தக் கவிதை யையும் கொடுத்து, தனக்கு இன்னும் முதுமை வரவில்லை என்று நிரூபித்து நெகிழவைத்தார். கவியரசர் நா. காமராசனுடனான இலக்கிய நேர்காணல் இதோ...
நீங்கள் கடந்துவந்த பாதை மனநிறைவைத் தருகிறதா?
ஆம்; இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பல சோதனைகளைக் கடந்து வெற்றி பெற்றிருக்கிறேன். யாருடைய உதவியும் இல்லாமல் மிகச்சிறிய வயதிலேயே தனியாக உழைத்து அரசியல், இலக்கியப் பணிகளை ஆரம்பித்தேன்; அதில் வெற்றியும் பெற்றேன். என் வாழ்க்கை மிகத் திருப்தியாக இருக்கிறது. நான் மனநிறைவோடுதான் இருக்கிறேன்.
உங்கள் இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்?
என் இளமைக்காலம் உழைக்கும் வர்க்கத்தின் செயல்களின்மீது காதல் கொண்டதாக இருந்தது. "தமிழ், தமிழ்' என்ற உணர்வே மேலோங்கி நின்றது.
அதோடு உலகப் பார்வையும் பெற்றேன். வாழ்க்கையை அனுபவித்து ஆராய்ந்து ஏற்றுக்கொண்டேன். பல கவிதை நூல்களைப் படித்தபோது நானே கவிஞனாக உருவானேன். எப்படியும் முதல் இடத்தைப் பெறவேண்டுமென்று உழைத்தேன்.
கல்லூரிக் காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றதை நினைத்தால் எப்படி இருக்கிறது?
அது ஒரு பொற்காலம். என் நாட்டின் தலை யெழுத்தை உருவாக்குகின்ற தலைவனாக உருவாக வேண்டுமென்ற எண்ணம் என்னுள் மிக ஆழமாக ஏற்பட்டது. அடிப்படையை பலமாக்கிக்கொண்டு படிப்படியாக லட்சிய மாளிகையை எழுப்பினேன்.
மிகப்பெரிய தமிழ் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்திய ஒருவன் என்கிற ஆழ்ந்த மனமகிழ்ச்சி இப்போது நினைத்தாலும் எனக்குள் உண்டு.
கவிதை எழுதவேண்டுமென்ற தாக்கம் உங்களுக்கு யாரால் ஏற்பட்டது?
உண்மையைச் சொன்னால் லா.ச. ராமமிர்தம் என்கிற மிகப்பெரிய எழுத்தாளரால் ஏற்பட்டது. தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கவிக்கோலங்களை வரைந்தவர் அவர் என்பதில் பலருக்கு ஐயமில்லை. ஆகவே அவருடைய எழுத்துகளும் கவிதை எழுத ஒரு தூண்டுகோலாக இருந்தது.
உங்களை அதிகம் பாதித்த கவிஞர்கள் யார்?
இளங்கோ அடிகளும் கம்பரும்தான். இளங்கோ அடிகள்மீது மரியாதையும், கம்பன்மீது பிரியமும் ஏற்பட்டது. தமிழ் தேசியத்தை உருவாக்கியவர் இளங்கோ; கவிதைத் தாக்கத்தை உருவாக்கியவர் கம்பன். 20-ஆம் நூற்றாண்டில் என்னை பாதித்த கவிஞர்களுள் உவமைக் கவிஞர் சுரதாவும் ஒருவர். அவர் சிந்தித்து எழுதுவார். அவருடைய உவமைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் ஒளியின் கவிதைகள் சந்தத்தில் என்னை பாதித்து இருக்கின்றது.
நீங்கள் தமிழில் சிகரம் தொடும் கவிஞர்களில் ஒருவராக வருவீர்கள் என்று சின்ன வயதில் நினைத்துப் பார்த்ததுண்டா?
நிச்சயமாக உண்டு. உலக அளவில் பெயர் வரவேண்டும் என்று ஆரம்பத்திலேயே விரும்ப ஆரம்பித்தேன். கல்லூரிக் காலங்களில் "கலில் ஜிப்ரான்' கவிதைகள் மட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக அவரின் "முறிந்த சிறகுகள்' (BROKEN WINGS) என்கிற புத்தகம் எனது வேதப்புத்தகம். தமிழை உயர்த்திய பல சான்றோர்களில் நானும் ஒருவனாக இருக்கவேண்டும் என்று என் சின்ன வயதிலேயே பொன்கனவு கண்டவன் நான்.
அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி உங்கள் மதிப்பீடு என்ன?
அறிஞர், தமிழ் உணர்வை ஊட்டியவர் அண்ணா. அதைச் செயல்படுத்தியவர் கலைஞர்தான். எதிலும் முதல்வராக வரவேண்டுமென்ற தகுதி உள்ளவர். எம்.ஜி.ஆர். நல்ல மனிதர், பலருக்கு உதவி செய்தவர். ஏழைகள் உயரவேண்டுமென்று மனதார நினைத் தவர். ஜெயலலிதா அறிவாற்றல்மிக்கவர்; துணிச்சல் நிறைந்தவர்.
உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்குமிடையில் மறக்க முடியாத அனுபவம் உண்டா?
எம்.ஜி.ஆரின் நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. நேரு, தாகூர் எழுதிய புத்தகங்களோடு எனது "கறுப்பு மலர்கள்' புத்தகத்தையும் வைத்திருந்தார். அதை என்னால் மறக்கமுடியாது. எனது புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு என்னை அழைத்து பாடல் எழுதச் சொன்னவர். எல்லாக் கவிஞர்கள் எழுதும் பாடல்களையும் அவர் பார்த்து சில திருத்தங்கள் செய்வார் என்று கூறுவார்கள். ஆனால் என்னுடைய பாடல்களை அவர் பார்த்துவிட்டு எம்.எஸ்.வி அண்ணனிடம் மெட்டு அமைக்கச் சொல்லுவார். "ஊருக்கு உழைப்பவன்' படத்தில் வரும் "இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்' என்ற என்னுடைய பாடலை எம்.எஸ்.வி ஏற்றுக்கொள்ள மறுத்தார். உடனே எம்.ஜி.ஆர் தலையிட்டு "காமராசன் எழுதியதை நீங்கள் மெட்டுப்போட வேண்டும்' என்று கட்டளையிட்டார். அதை இன்றும் என்னால் மறக்கவே முடியாது.
உங்கள் திரையுலகப் பயணம் எப்படி? யாரால் நடந்தது?
என்னுடைய திரையுலகப் பயணம் எம்.ஜி.ஆரால் தான் நடந்தது. அது எனது பாக்கியம். அதோடு ஆர்.எம். வீரப்பன் அண்ணன் பெயரையும் குறிப்பிடவேண்டும். எனது "கறுப்பு மலர்கள்' புத்தகத்தை எம்.ஜி.ஆரிடம் படிக்கக் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு திடீரென்று ஒருநாள் பாடல் எழுதச் சொன்னார். "கனவுகளே, ஆயிரம் கனவுகளே' என்ற எனது முதல் பாடல் எம்.ஜி.ஆருக்கு எழுதினேன். அதேபோல அண்ணன் ஆர்.எம். வீரப்பன் சத்யா மூவிஸின் எல்லா படங்களிலும் எனக்கு பாடல் எழுத வாய்ப்பளித்தார். அதை என்னால் என்றும் மறக்கமுடியாது.
நீங்கள் எழுதிய திரைப்பாடல்களில் உங்கள் மனதை அதிகம் கவர்ந்த பாடல்கள் எவை?
"இரவு பாடகன் ஒருவன் வந்தான்' என்ற பாடலும், "போய்வா நதி அலையே' என்ற பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். வெள்ளை ரோஜாவில் "ஓ! மானே, மானே' என்ற பாடலும், "உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது' என்ற "தங்க ரங்கன்' படத்தில் வரும் பாடலும் மிகவும் பிடித்த பாடல்களாகும்.
"சந்ததிப் பிழைகள்' என்று திருநங்கைகளுக்காக முதன்முதலில் அக்கறையோடு குரல்கொடுத்த கவிஞர் நீங்கள். அவர்கள் இப்போது தங்கள் உரிமைகளை சமூகத்தில் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
நான் திருநங்கைகளுக்காக எழுபதுகளில் குரல் கொடுத்தேன். என்னுடைய எழுத்துக்களில் எழுதியது இன்று ஓரளவு நடந்துவிட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசு நினைத்தால் சமூகத்தில் திருநங்கைகளுக்கு இன்னும் சிறந்த இடமும், மரியாதையும் அவர்களுக்குக் கிடைக்கச் செய்ய முடியும்.
உங்கள் கவிதைகளில் அழகியல் சார்ந்த உருவகங்கள் கொடிகட்டிப் பறக்கிறதே?
உருவகம் என்பது இன்றைக்கும் புதுக்கவிதையில் தவிர்க்க முடியாத ஒரு கூறு. உருவகங்களின்மீது கட்டி எழுப்பப்படும் ஒரு கவிதையை வாசித்து அனுபவம் பெறும்போது, அது நம் மனதில் போய் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொள்கிறது. எனக்கு உருவகங்கள்மீது காதல் ஏற்படுவதற்கு ஒரே காரணம் கேரளக்கவி வயலார் ராமவர்மாதான். அவர் ஒரு சிறந்த திரைப்பாடலாசிரியரும்கூட. அவரைப்போல உருவகங்களைக் கையாளுவதிலும், அவற்றை உருவாக்குவதிலும் தனித்துவம் கொண்டவர்கள் என்று இந்தியாவிலேயே யாருமில்லை. கம்யூனிஸக் கருத்துக்களை மாபெரும் உருவக வரைபடத்தில் அவர் ஏற்றிச் சொன்னதை இப்போது நினைத்தாலும் சிலிலிர்க்கிறது.
நான் உருவகங்களை அதிகம் பயன்படுத்தியதற்கு ராமவர்மா முக்கிய பாதிப்பாக அமைந்துபோனார்.
அதேபோல எங்களுக்கு தமிழண்ணல் என்றொரு ஆசிரியர் இருந்தார். தமிழ் மரபுச்சொற்கள், பழ மொழிகள் போன்றவற்றில் கொட்டிக் கிடக்கும் உருவகங்களைப் பற்றி எங்களுக்கு பாடப் பகுதி என்றில்லாமல், தனிப்பட்ட முறையில் சொல்லிலிக் கொடுத்தார். எனது கவிதை மொழியின் வளர்ச்சியில் அவருக்கும் பங்குண்டு.
புதுக்கவிதையில் சிலேடையை முயன்று பார்த்தவர் நீங்கள். ஆனால் இன்று நவீன புதுக் கவிதையில் சிலேடையின் இடத்தை படிமம் எடுத்துக்கொண்டு விட்டது. உண்மையில் சிலேடை புதுக்கவிதையோடு அல்லது நவீன கவிதையோடு ஒட்டாத ஒரு விஷயமா?
சிலேடை என்பது கவித்துவத்தின் உச்சத்தில் தோன்றும் ஓர் உத்தி. சிலேடை எனும் இலக்கிய அலங்காரத்தை நகைச்சுவையின் ராணி என்றே சொல்லிலிவிடலாம். அதே நேரம் சிலேடையை மட்டும் இன்னொரு மொழிக்கு மொழிபெயர்த்துவிட முடியாது. இதுதான் சிலேடையின் தனிச்சிறப்பு.இடைக்கால இலக்கியத்தில் கவி காளமேகத்தின் பங்களிப்பு இன்று வரை பிரமிப்பானது. பிறகு பல்வேறு கவிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். இன்றைய நவீனயுகத்தில் எனக்குத் தெரிந்து அப்துல் ரகுமான் சிலேடைக்கு முயன்றிருக்கிறார். இவருக்கு முன்பு எழுதிய கி.வா. ஜகந்நாதனும் எழுதியிருக்கிறார். எனது பங்கு என்பது மிகச் சிறியது. இன்றைய இளைய தலைமுறைக்கு சுட்டுப் போட்டாலும் சிலேடை புனைவது சாத்தியமில்லை.
உங்களால் மறக்கமுடியாத நபர் யார்? ஏன்?
என்னால் மறக்க முடியாத நண்பர்கள் என்றால் என்னுடன் மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த எனது நண்பர்- முன்னாள் சபாநாயகர் மறைந்த கா. காளிமுத்துவும், எனது அன்புத்தம்பி பா. தங்கவேலு (பி.ஈ.)யும்தான். டி.என்.ஹெச்.பி.யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டார். இப்போதும் என்கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை. இவர்களைத் தான் அண்ணன், தம்பிகளாக நினைப்பேன்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவான் என் தம்பி தங்கவேலு.
என் நண்பர் காளிமுத்து, "சென்னையில் நமக்கென்று ஒரு பெரிய இடம், வாய்ப்பு கிடைத்தால் இருப்போம். இல்லையென்றால் மதுரைக்கு ஓடிவிடுவோம்' என்று அடிக்கடி சென்னைக்கு வந்த ஆரம்பத்தில் கூறுவார்.
நீங்கள் எழுத நினைத்து, எழுதமுடியாமல் இருக்கும் படைப்பு எது?
நான் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளேன். கவிதை, கட்டுரை, நாடகங்கள் என 32 புத்தகங்கள் எழுதி யுள்ளேன். ரொம்ப வருடங்களாகவே ஒரு காவியம் எழுதவேண்டுமென்ற ஆசை எனக்குள் இருக்கிறது. ஆனால் ஏனோ எழுத முடியாமல் தள்ளிப்போகிறது. நான் எழுத நினைக்கும் காவியத்துக்கு "மூன்றாவது உலகம்' என்று எப்போதோ பெயர் வைத்துவிட்டேன். எழுத வேண்டும்; எழுதுவேன்.
உங்கள் கவிதைக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. அவர்களைப் பற்றி சொல்லுங்கள்?
அவர்கள் அனைவரும் நல்ல கருத்து உள்ளவர்கள். சிலர் கம்யூனிசக் கருத்து உள்ளவர்கள். அவர்களுக்கெல்லாம் தமிழ்ப்பற்றும் நிறைய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் கைதி என்று அழைக்கப்படுகின்ற எனது நண்பர் கவிஞர் கை. திருநாவுக்கரசுவைத்தான் குறிப்பிட வேண்டும். ஒருநாள் முழுக்க விடிய, விடிய என் கவிதைகளைப்பற்றி ரசித்து, ரசித்துப் பேசியவர். இதேபோல கவிஞர் மயிலாடுதுறை இனியன் என்ற நண்பர் கடிதம் மூலம் எனது கவிதைகள் பற்றி அவ்வப்போது அக்கறையோடு எழுதுவார். ஆதிவேலு என்ற நண்பர் அடிக்கடி தொடர்புகொண்டு விமர்சிப்பார். உசிலம்பட்டி கவிஞர் தமிழ்தாசன் என்ற நண்பர் தொலைபேசியில் அடிக்கடி இன்றுவரை என் எழுத்துக்களையும் நலத்தையும் விசாரிப்பார். இப்படி பல பேர்கள் உள்ளனர். தண்டையார் பேட்டை ரமணன் என்கிற நண்பர் என் பாடல்களை எல்லாம் விமர்சித்துக் கொண்டுதானிருக்கிறார். பி. மீனாட்சிபுரம் ராஜா என்ற மகாராஜன்- என் இளவல் மிகச்சிறிய வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்து, என்னோடு போனவருடம்வரை கூட இருந்துவிட்டு இப்போது இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். அது எனக்கு மிகுந்த கவலையையும், துக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது. அவன் ஆத்மா என்னையே நினைத்து இருக்கும். இப்படி என் பாட்டையும், என் கவிதைகளையும் ரசித்த கூட்டம் நான் என்ன செய்து கொண்டுள்ளேன் என்று ஒவ்வொரு நாளும் அக்கறையோடும் அன்போடும் விசாரித்துக்கொண்டும் இருக்கிறது. என்மீது அன்புகொண்ட என் அன்பு ரசிகர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாகவே இருப்பேன்.
கவிதை எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது?
கவிதை என்பது மரபுக் கவிதையும் புதுக்கவிதையும் சரிசமமாக கலந்து இருக்கவேண்டும். காலமாற்றங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரே வரியில் சொன்னால் கம்பனின் கற்பனையும், பாரதிதாசனின் உணர்ச்சியும் சேர்ந்து இருக்கவேண்டும். வெறும் ஏட்டுச் சுரைக் காயாக இருக்கக்கூடாது. கருத்து இல்லாமல் இருக்கக் கூடாது. சமூகத்தில் நடக்கும் அவலங்களைச் சுட்டிக்காட்டி, உண்மையான நீதியையும் குறிப்பிட வேண்டும்.
மொத்தத்தில் வாசகர்களைக் கவர்ந்து இழுக்க வேண்டும்.
நீங்கள் நேசிப்பது?
திராவிடத்தை மிகவும் நேசிக்கிறேன்.
நீங்கள் வெறுப்பது?
செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடுகளை.
நீங்கள் ரசிப்பது?
தமிழை மட்டும். என் உயிர் உள்ளவரை ரசிப்பேன். ஏனென்றால் என் உயிரே தமிழ்தான்.
உங்கள் உடலுக்கு என்ன பிரச்சினை? என்ன மருத்துவம் எடுத்துக் கொள்கிறீர்கள்?
என் உடலுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாருக்கும் ஏற்படும் வயதுக்கோளாறுதான். எனக்கு ரொம்ப வருடங்களாக ஆஸ்துமா தொந்தரவு உண்டு. அவ்வப்போது அவதிப்படுகின்றேன். சர்க்கரையும் உண்டு. அதற்குரிய மருந்தை மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக்கொண்டு, வீட்டில் எழுதிக்கொண்டும் ஓய்வு எடுத்தபடியும் இருக்கிறேன். எங்கேயும் அதிகம் செல்வதில்லை. முக்கியமான விழாக்களில் கலந்து கொள்வேன்.
இன்றைய நவீனத் தமிழ்க் கவிதையில் யாரை அறிந்திருக்கிறீர்கள்? புதிய கவிஞர்களின் கவிதை களை வாசிப்பதுண்டா?
அப்துல்ரகுமான், இன்குலாப் இரண்டுபேரையும் ஆளுமையான கவிஞர்கள் என்று ஏற்றுக்கொள்வேன். இன்று எழுதிக்கொண்டிருக்கிற இளம் கவிஞர்கள் பலரும் அரை வேக்காடுகள். இரண்டாயிரமாண்டு தமிழ்க் கவிதை நெடுங்கணக்கில் எத்தனை நூல்கள் இருக்கின்றன என்பதைக்கூட அறியாத அரிச்சுவடிக் கவிஞர்கள்.
இவர்கள் எழுதுகிற கவிதைகளால் அச்சகம் நடத்துகிறவர்களுக்குத்தான் லாபமே தவிர, தமிழ் மொழிக்கோ கவிதையை நேசித்து வாசிக்கத் துடிப்பவனுக்கோ லாபமல்ல. குறிப்பாக நவீன கவிதை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. குழப்பம்தான் நவீன கவிதை. நவீன கவிதைகளுக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒருபோதும் இடம் கிடைக்காது என்பது என் கணிப்பு. காலம் இதை உறுதி செய்யும். காமராசன் சரியாகச் சொன்னான் என்று வரும் தலைமுறையினர் என்னைப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அப்படியானால் இன்றைய தமிழ்க்கவிதைத் துறைக்குத் தேவைப்படும் மாற்றம் என்று எதைச் சொல்வீர்கள்?
நாம் அடுத்துவரும் ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மரபுக் கவிதையின் பக்கம் திரும்பிவிடுவதன் மூலம் தமிழ்க் கவிதைக்கு மீண்டும் உயிரூட்ட முடியும் என்று நினைக்கிறேன். காரணம் கம்பனின் ஆளுமை இன்னும் உயிர்ப்புடன் இருப்பது அவன் படைத்த மரபில்தான். நானும் இப்போது மரபுக்குத் திரும்பியிருக்கிறேன். பெரியாரின் வாழ்க்கையை "பெரியார் காவிய'மாக மரபுக்கவிதையில் புனைந்து முடித்துவிட்டேன்.
இந்த தமிழ்ச் சமூகத்திடமிருந்து நீங்கள் எதிர் பார்ப்பது என்ன?
நம் தமிழ்ச் சமூகம் உலகில் முதலிடம் பெறவேண்டும்; இழந்த பெருமையை மீட்க வேண்டும்.
புதிய பெருமைகளை ஏற்றவேண்டும்; ஏற்றுக்கொள்ள வும் வேண்டும். தமிழ் என்றால் தமிழ்தான், அதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை. உலகமெல்லாம் பொதுவுடைமை ஆகவேண்டும். உள்ளத்தை தமிழ்தான் ஆளவேண்டும் என்பதை எதிர்பார்க்கிறேன்.
தமிழ்க் கவிதையுலகின் முன்னோடிக் கவிஞர்களில் முக்கியமானவர் நீங்கள். "இனிய உதயம்' வாசகர்களுக்காக ஒரு சின்னக் கவிதை தர முடியுமா?
என்றென்றும் இங்கேதான் மாற்றம் வேண்டும்
என்னாலும் இந்நாட்டில் வெளிச்சம் வேண்டும்
விவசாயம் தலைமைதாங்கி வளர வேண்டும்
விண்வெளியை இந்தியாவே ஆள வேண்டும்.
எழுத்தாளர் அனைவருமே உள்ள மட்டும்
எந்நாளும் உண்மைகளைச் சொல்ல வேண்டும்
பழுத்ததமிழ் முதல்இடத்தை வகிக்க வேண்டும்
பலமொழிகள் அதற்கிணையாய் இருக்கவேண்டும்.
உலகங்கள் எல்லாமே ஒன்றே என்று
உரத்த குரல் எழுப்புகிற நாடு ஒன்று
நம் நாடு அதுதானே தமிழ்நாடாகும்!
நாடெல்லாம் பொதுவுடைமை பரவவேண்டும்
அறிவெல்லாம் வளரட்டும், பசி ஒழியட்டும்.
நாடெல்லாம் வீடெல்லாம், ஊரெல்லாமும்
நல் உதயம் வாசகர்கள் பெருக வேண்டும்.