Pages

Thursday, February 28, 2013

இன்னபிற பாடலாசிரியர்கள் 2 - புலவர் சிதம்பரநாதன் " ஏரிக்கரைப் பூங்காத்தே"

 கடந்த பதிவில் குறிப்பிட்டது போன்று தமிழ்த்திரையிசைப்பாடல்களில் பல்லாயிரம் நம் மனதில் இடம்பிடித்திருந்தாலும் அவற்றை ஆக்கிய பாடலாசிரியர் யார் போன்ற விபரங்கள் பலரை எட்டாதிருக்கும். அப்படியானதொரு அருமையான பாடல் தான் "ஏரிக்கரைப் பூங்காத்தே நீ போறவழி தென்கிழக்கோ". தூறல் நின்னு போச்சு படத்தில் வந்த இந்த இனிமையான பாடல் இசைஞானி இளையராஜா இசையில் புலவர் சிதம்பரநாதன் எழுதியது.
புலவர் சிதம்பரநாதனோடு கவிஞர்கள் வாலி, முத்துலிங்கம். வைரமுத்து, இயக்குனர் கங்கை அமரன் என்றே டைட்டில் கார்டில் போட்டு அவருமாக  பாடல்கள் எழுதிய இந்தப் படத்தில் எல்லாப்பாடல்களுமே முத்துக்கள்.

 புலவர் சிதம்பரநாதன் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்குப் பாடல்கள் எழுதியவர். கே.ஜே.ஜேசுதாஸ் பாக்யராஜுக்காகப் பாடி நிறைவில் முப்பது நொடிகள் முதியவருக்கான குரலாக ஜேசுதாஸ் மாறி எம்.என். நம்பியாருக்காகப் பாடியிருப்பார்.

ஏரிக்கரைப் பூங்காத்தே! நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு
ஏரிக்கரைப் பூங்காத்தே! நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு
ஏரிக்கரைப் பூங்காத்தே....

பாதமலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விரிச்சேன்
மயிலே
பாதமலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விரிச்சேன்
மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு கூடித்தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்தப் பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது

ஏரிக்கரைப் பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு
ஏரிக்கரைப் பூங்காத்தே....

ஓடிச் செல்லும் வான்மேகம் நெலவை மூடிக்கொள்ளப் பார்க்குதடி
அடியே
ஓடிச் செல்லும் வான்மேகம் நெலவை மூடிக்கொள்ளப் பார்க்குதடி
அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா ராகத்தில் சேரணும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும் வரை ரோசாவே  காத்திரு

ஏரிக்கரைப் பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு
 ஏரிக்கரைப் பூங்காத்தே.......நீ போற வழி....தென்கிழக்கோ
அட தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு
ஏரிக்கரைப் பூங்காத்தே


Tuesday, February 26, 2013

இன்னபிற பாடலாசிரியர்கள் 1 "காமராசன்" - கண்ணன் வந்து பாடுகின்றான்

 தமிழ்த்திரையிசையின் ஆரம்பகாலம் தொட்டு இன்று இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடலாசிரியர்கள் தம்மைப் பதிவு செய்திருக்கின்றார்கள். ஆனால் பரவலான வட்டத்தில் கண்ணதாசனையும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும், வைரமுத்துவையும், வாலியையும் தாண்டி எல்லாக் கவிஞர்களது பாடல்களையும் இன்ன இன்னார் தான் எழுதினார்கள் என்று யாரும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. அதற்குப் பல காரணங்கள், கண்ணதாசனும், வைரமுத்துவும், வாலியும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் தங்களின் பாடல்கள் பிறந்த கதையை எழுத்திலோ, பேச்சிலோ தொட்டுச் சென்றுவிடுவார்கள்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திரையிசைக்காலம் குறுகியது என்றாலும் அவரின் செழுமையான பங்களிப்பை இன்றைய சமுதாயமும் தெரிந்து கொள்ள ஓரளவேனும் உதவியது திண்டுக்கல் லியோனி போன்றோரின் ஜனரஞ்சகமான பாட்டு மன்றம் போன்றவையே என்றால் மிகையில்லை. ஒருமுறை வாலி எழுதிய பாடலை மனோரமா, கண்ணதாசன் எழுதியது என்று சிலாகிக்க வாலியே நொந்து போய் "அதை எழுதியது நாந்தானம்மா" என்றுமளவுக்கு நிலமை இருந்தது, பின்னாளில் வாலியின் ஆயிரம் பாடல்களில் கூட வாலி எழுதாததும் தவறுதலாக வந்தது காலம் செய்த கோலமடி. அந்தக்காலம் போல இந்தக்காலத்து இசைவட்டுக்களிலும் பெரும்பாலும் பாடலாசிரியர்கள் பெயர் போடாமை, தனித்துவமான பாடலாசிரியர்கள் இல்லாமல் எல்லாருமே கோரஸ் வரிக்காரர்களாக இயக்கும் சூழல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம்.

இவர்களைத் தாண்டி, கங்கை அமரன், நா.காமராசன், பொன்னடியான், பிறைசூடன், முத்துலிங்கம் என்று எண்பதுகளிலும் பல பாடலாசிரியர்கள் இயங்கியிருக்கிறார்கள். இவர்களின் பாடல்களை அவ்வப்போது நினைவில் நிறுத்த ஒரு வாய்ப்பாக இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறேன்.
றேடியோஸ்பதியில் முன்னர் இவ்வாறு
கவிஞர் பொன்னடியானும் இசைஞானி இளையராஜாவும் என்றெல்லாம் கொடுத்திருந்தாலும் இந்தத் தொடரை நீட்டித்து வாழ்நாள் பூரா எழுதி வைக்கலாமே எனத் தோன்றியது, அதாவது 3665 நாட்களாவது ;-)

இணையத்தளங்களிலும் எழுந்தமானமாக வாலி, வைரமுத்து என்று பாடல்களுக்கு உரிமையை மணல் கொள்ளை ரேஞ்சில் அள்ளிக் கொடுத்துவிடுவார்கள், இந்த அவலத்தைக் கொஞ்சமேனும் குறைக்கவெண்ணியபோது எழுந்த சிந்தனையே இது.

இதற்குக் கால்கோளாக அமைந்தது நண்பர் என்.சொக்கன் நேற்று ட்விட்டரில் ஆயர்கள் மத்துச் சத்தம்போலவே, ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே! #NowPlaying முத்தச் சத்தத்துக்கு மத்து கடைகிற சத்தம் உவமை, வாவ்!யார் எழுதியது?
என்று எழுதியதையே கண்ணன் சுழியாக எடுத்துக் கொண்டு காமராசனில் இருந்து தொடங்குகின்றேன்.



"கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்" இந்தப் பாடல் ரெட்டைவால் குருவி படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் கவிஞர் நா.காமராசனால் எழுதப்பட்டது. படத்தின் இயக்கம், பாலுமகேந்திரா. படத்தில் நாயகி ராதிகா ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட்டதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. படப்பிடிப்பின் போது நடன இயக்குனர் இல்லாத சூழலில் நடிகை ராதிகாவே சமாளித்து பாடலின் இசைக்கேற்ப ஆட, படம் பிடிக்கப்பட்டதாம். ஆர்ப்பாட்டமின்றி இசைக்கருவிகள் அடக்கமாக ஒலிக்க, அதற்கு இசைவாக ராதிகா கொடுக்கும் நளினங்களே போதுமே.
இதோ பாடலாசிரியர் நா.காமராசனின் வரிகளில் "கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்" எஸ்.ஜானகி குரலில் உயிர்பெறுகிறது.


பாடல் வரிகள் இசையமுதம் தளம் வழியாக,

 கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
...

கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே
காதலென்னும்.. ஓ ஓ..
காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக் குயில் கொஞ்சுதம்மா
இவள் வண்ணங் கோடி.. சின்னந் தேடி
மின்னும் தோளில் கன்னங் கூட
சந்தம் பாடி.. சொந்தம் தேடி.. சொர்க்கங்கள் மலர்ந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
...

வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான்
கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள்
ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே
மாலை நிலா.. ஆ ஆ..
மாலை நிலா பூத்ததம்மா.. மௌன மொழி சொல்லுதம்மா
ஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில்
வண்டு பேசும்.. தென்றல் வீசும்
கண்ணன் பாட.. கண்கள் மூட.. கன்னங்கள் சிவந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
...





Thursday, February 21, 2013

இயக்குனர்: கங்கைஅமரன் - நாயகன்: ராமராஜன் - இசை: இளையராஜா

 சினிமாத்துறையில் உச்சத்துக்கு வருவது சுலபமில்லை, அப்படியே வந்தாலும் அதைத் தொடர்ந்து சில வருஷங்கள் தக்க வைத்துக் கொள்வது என்பதும் சவாலான காரியம். இதையெல்லாம் தாண்டித் தங்களது தனித்துவத்தினால் முன்னேறி நின்று நிலைத்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் வெற்றிச் செய்திக்குப் பின்னால் பல இரகசியங்கள் இருக்கும், திறமையானதொரு இயக்குனரின் நெறிப்படுத்தலில் வளர்ந்தவர்கள், தமக்கு ஏற்ற பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அவற்றில் தம்மை நிரூபித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் நடிகர் ராமராஜன் எண்பதுகளின் மிக முக்கியமானதொரு நாயகனாகக் கொள்ளப்படுகின்றார்.

சினிமாவை வணிக சினிமா, வணிகம் சாரா சினிமா என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லாமே வணிக சினிமா தான், போட்ட முதலுக்கு மேல் இலாபம் வரவேண்டும் என்று தானே எல்லாத் தயாரிப்பாளரும் படத்தயாரிப்பில் இறங்குவார்கள்? ராமராஜனைப் பொறுத்தவரை எண்பதுகளில் ரஜினி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் ஒரு பக்கம் கொடிகட்டிப் பறக்க, இவரோ மாமூல் கதையம்சம் கொண்ட, அதிக சவால் இல்லாத பாத்திரங்களில் தன்னை வெளிப்படுத்தித் தானும் ஒரு முக்கியமான குதிரை என்று நிரூபித்தவர். ஆரம்பத்தில் தியேட்டரில் வேலை செய்தும், பின்னாளில் இராம. நாராயணனிடம் உதவி இயக்குனராக இருந்தும், பின்னர் தானே இயக்குனராக மாறியதும் என்று இவரின் பாதையே சற்று வித்தியாசமாகத் தான் ஆரம்பித்தது. ராமராஜனுக்கு "நம்ம ஊரு நல்ல ஊரு" திரைப்படத்தின் மூலம் அரிதாரம் பூசவைத்து நாயகனாக்கிய இயக்குனர் வி.அழகப்பனை நன்றியோடு இன்றும் நினைவுகூருவார். அந்தப்படத்தின் வெற்றியே அவரைத் தொடர்ந்தும் கதாநாயகனாக்கி இருத்தியது.  கங்கை அமரனே இந்தப்படத்தின் இசையமைப்பாளர்.

ராமராஜன் இயக்கிய படங்களில் இசைஞானி இளையராஜாவை இசையமைப்பாளராக்கியும் பாட்டுக்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார். ஆனால் இவரின் அடுத்த சுற்றில் நாயகன் ராமராஜன் என்ற கலைஞன் நீடித்து நிலைத்து நிற்க இளையராஜாவின் பங்கு பெரும்பங்கு என்பதைக் கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ராமராஜனின் படங்களில் ராஜாவின் பாடல்கள் விஷேசமாக இருக்கும், குறிப்பாக நகரம் சார்ந்த கதைக்களனைக் கொண்டு அமைந்த மோகன் படங்களில் ராஜா என்றும், கிராமம் சார்ந்த கதைக்களனைக் கொண்ட ராமராஜன் படங்களில் ராஜா என்றும் இரட்டை சவாரி ஆனால் இரண்டு நாயகர்களுக்குமே இந்த இசை தான் அவர்களின் கலையுலக வாழ்வை நீட்டித்து வைத்தது.  கே.எஸ்.ரவிக்குமார் வகையறா உருவாக்கி வைத்த ஆண்டான் அடிமைச் சமுதாயம் சார்ந்த நாட்டமைக் கதைகளல்ல ராமராஜன் படத்தின் கதைகள், குடும்ப உறவுகளுக்குள் நிகழும் இயல்பான சிக்கல்களை வைத்துப் பாட்டாலே பின்னிப்பிணைத்து வெற்றிகரமான படைப்பாக்கி விடுவார். ராமராஜனின் சினிமாக்காலம் என்பது தனியே ஆராயப்படவேண்டியது என்று மனசுக்குள் வைத்திருக்கிறெஎன். இங்கே நான் கொடுக்கவிருப்பது, ராமராஜன் என்றதொரு வெற்றிகரமான நாயனோடு கூட்டுச் சேர்ந்த இயக்குனர் கங்கை அமரன், இசைஞானி இளையராஜாவும் சேர்ந்த திரைக்காவியங்கள் குறித்த பார்வை.



இன்றைக்கும் கிராமியப்படங்கள் வந்து கொண்டு தானிருக்கின்றன, ஆனால் கிராமியம் என்றாலே "செண்பகமே செண்பகமே" என்று முணுமுணுக்கும் எண்பதுகளின் திரைப்பிரியர்களைத் தாண்டி எல்லார் மனசலும் இருக்கிறான் "எங்க ஊரு பாட்டுக்காரன்" . கோழி கூவுது படத்தின் பெரு வெற்றியை கங்கை அமரனாலேயே ஜீரணிக்க முடியாமல் தடுமாறித் தோல்விப்படங்களாகக் கொடுத்தவருக்கு பாட்டுக்காரன் மீண்டும் கைதூக்கி உயர்த்தி விட்டான். பிரபல தயாரிப்பாளர் சங்கிலி முருகன் தயாரிப்பில் வந்த அந்தப் படத்தில் ராமராஜனோடு ரேகா, நிஷாந்தி (அறிமுகம்) என்று ஜோடிகள், மொத்தம் எட்டுப்பாடல்கள், அத்தனையும் முத்துக்கள். கங்கை அமரனே பாடல்களை எழுதி அண்ணனிடம் கொடுக்க, அந்தநாள் நாடகக்காரர் சங்கிலி முருகனின் பழைய நட்பும் சேர்ந்து கொள்ள ராஜா குஷியாகிப் போட்ட பாடல்கள் இன்றும் தேன், " பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு ... பட்டுன்னு சேலையை கட்டி எட்டு வச்சு நடந்துகிட்ட"

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் வெற்றியால் எங்க ஊரு காவக்காரன் படத்தை சங்கிலி முருகன் எடுத்திருந்தாலும் ஏனோ கங்கை அமரன் இல்லை டி.பி.கஜேந்திரனே இயக்கம். "செண்பகமே செண்பகமே" பாடல் பாடாத தமிழ் பேசும் ஊர்களே இல்லை என்றாகிவிட்ட பின்னர் அதே தலைப்பில் மீண்டும் கங்கை அமரன், ராமராஜன் இணைந்த படம். "வெளுத்துக் கட்டிக்கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி" என்று பாடலை எழுதி அண்ணன் இளையராஜா ஆரம்பிக்க, தம்பி கங்கை அமரன் மிச்சப்பாடல்களைக் கவனித்துக் கொண்டார். மஞ்சப்பொடி தேய்க்கையிலே பாட்டின் மெட்டு தெலுங்கும் தாவியது, எல்லாப்பாடல்களிலும் உச்சம் "வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்ட வச்சுப்புட்டா" தமிழ் சினிமாவில் ஓராயிரம் படங்கள் வந்திருக்கலாம், இதில் சில நூறை உச்சம் என்று கொண்டாடவும் செய்யலாம் ஆனால் ஏனோ எனக்கு "கரகாட்டக்காரன்" போன்ற படங்கள் கொடுக்கும் போதை ஏனென்று புரியாத புதிர். படத்தின் வீசிடி வாங்கி அதுவும் தீராமல் ஒரிஜினல் டிவிடி வாங்கி, இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் பிலிம் சுருள் கிடைத்தால் கூட வாங்கிச் சொந்தம் கொண்டாத் தோன்றுமளவுக்குப் பித்துப் பிடிக்க வைத்தது.  படத்தின் பின்னணி இசையை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிய பின்னரும் தீரவில்லை இந்தப் படம் மீது கொண்ட மோகம். ஒருமுறை கனவில் கூட ஏதோ ஒரு ஊர்க்கொட்டகையில் கரகாட்டக்காரன் படம் பார்ப்பது போலக் கண்டு அடுத்த நாள் என்னையே நொந்துகொண்டேன் ;-) இத்தனைக்கும் தில்லானா மோகனாம்பாளின் கொள்ளுப்பேத்தி கதை ஆனால் எல்லாமே அளவாகப் போட்டுச் சமைத்த அறுசுவை அரசு நடராசன் கைப்பதம். இந்தப் படம் ஒரு வருடம் ஓடியதில் வியப்பில்லை, ரசிகனுக்கு என்ன வேண்டும் என்று அவனுக்குத் தெரியும்.   "மோகம் தான் சிந்தும் தேகம் தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்"  "எங்க ஊரு பாட்டுக்காரன்" வெற்றியால் அந்தப் படத்தின் "செண்பகமே செண்பகமே" பாடலை எடுத்துத் தலைப்பாக்கி வெற்றி கண்ட கங்கை அமரனுக்கு "கரகாட்டக்காரன்" கொடுத்த தாறுமாறு வெற்றியால் அந்தப் படத்தில் இடம்பெற்ற "ஊரு விட்டு ஊரு வந்து" பாடலின் தலைப்பை எடுத்து இயக்கிய படம் வெற்றிகரமானதாக அமையவில்லை. அண்ணன் என்னதான் பாடல்களில் சோடை போகாவிட்டாலும் தம்பிக்கோ கவுண்டர், செந்திலை வைத்து பேயாட்டம் ஆடலாம் என்று விளையாடிவிட்டார். ராமராஜன், கெளதமி என்ற வெற்றிக்கூட்டணிக்கும் ஒரு சறுக்கலான படம்.  கங்கை அமரனின் புதல்வர் இயக்கிய "கோவா" படம் போலத்தான் இந்தப் படம் தந்தைக்கு. ஆனாலும் என்ன இந்தப் படத்தில் வரும் " சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா" புலம்பெயர் தமிழருக்கு இன்னொரு தேசிய கீதம், எனக்கோ கடந்த பன்னிரண்டு ஆண்டுகளைக் கடந்து என் வானொலி நிகழ்ச்சியின் முகப்புப் பாடல் என்ற கெளரவம். "தானா வந்த சந்தனமே" எப்போது கேட்டாலும் தேனா இனிக்குமெல்லோ "கொத்து மல்லி கொண்டையில் ஆட குளிர்ப்பார்வை வண்டுகள் ஆட புத்தம் புது செண்டுகள் ஆட புது தாகம் தோணுமே"   "பொண்ணுக்கேத்த புருஷன்" இந்தப் படத்தின் பெயரை இப்போதுதான் கேள்விப்படுபவர்கள் இருக்குமளவுக்கு அதிக பிரபலமில்லாத படம் ஆனால் பிரபலங்கள் சேர்ந்த படம். மீண்டும் ராமராஜன், கெளதமி, கங்கை அமரன், இளையராஜா.  "சாதி பேதமின்றி சண்டை சிறு பூசலின்றி சகலரும் செல்லும் சினிமா" பாடல் தமிழ் சினிமாவை ஆராதிக்கும் பாடல்.  "மாலை நிலவே மன்மதன் கண்படும் அழகே" சென்னை வானொலியின் அந்தக்காலத்து நேயர் விருப்பத்தில் கட்டுண்டோருக்குப் புரியும் சிறப்பான பாடல்         கரகாட்டக்காரனுக்குப் பிறகு எடுத்ததெல்லாம் ஏனோதானோவென்றும் ஓரளவு வெற்றியும் என்று ஓடியபோது மீண்டும் ஒரு காரனோடு வந்தார் கங்கை அமரன், இம்முறை "வில்லுப்பாட்டுக்காரன்" கங்கை அமரன் இன்ன பிற பாடல்களோடு "சோலைமலையோரம் கோலக்குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேக்கலையோ" மனசை நிறைக்க, அதற்குச் சரிசமமாக வாலி எழுதிய "கலைவாணியோ ராணியோ பாடல்" போட்டி போட்டு இடம் பிடித்தது. வில்லுப்பாட்டுக்காரன் பாடல்களை மட்டும் நன்றாகப் பாடினான்.         கங்கை அமரனுக்கும் ராமராஜனுக்கும் சொல்லிவைத்தாற் போல நேரம் சரியில்லை, கூடவே தமிழ் சினிமாவின் போக்கும் இன்னொரு திசைக்கு மாறிவிட, இந்த பார்முலா படங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் தெம்மாங்கு பாட்டுக்காரன். நீண்ட காலம் இழுபறிப்பட்டு வெளிவந்த படம் (தணிக்கைக்குப் போக முன்னரே என்பதைக் கவனிக்க)  . கங்கை அமரன், இளையராஜா, பாவலர் வரதராஜன் சகோதரர்களின் பாடல்கள் இடம்பெற்ற படம் என்ற தனித்துவம் கூடத் தெரியாமல் போய்விட்டது.