ஆகஸ்ட் 15. 1992
ரோஜா திரைப்படம் வெளிவருகிறது.
தமிழ்த் திரையிசையின் அடுத்த போக்கை அது தீர்மானிக்கப் போகிறது என்ற முடிவு ஏதும் அந்தச் சமயத்தில் தீர்மானிக்கப்படாத சூழலில், இயக்குநர் கே.பாலசந்தர் தன் கவிதாலயா நிறுவனத்துக்காக வெளியார் ஒருவரை வைத்து இயக்கும் இன்னொரு படம் என்ற கவனிப்பு , அதையெல்லாம் தாண்டி மணிரத்னம் என்ற நட்சத்திர இயக்குநரின் அடுத்த படம் என்ற ரீதியிலேயே பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணுகிறது.
இளையராஜாவை விட்டு விலகிய வைரமுத்துவுக்கு பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் என்ற ரீதியில் அப்போது கை கொடுத்தவை ஏவிஎம் நிறுவனமும், பாலசந்தரின் கவிதாலயாவும் தான். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் கே.பாலசந்தருக்கும் இளையராஜாவுக்கும் எழுந்த விரிசல், கவிதாலயா நிறுவனத்தோடு இளையராஜா இசையமைத்து (இதுவரை) வெளியான இறுதிப் படம் என்ற கணக்கில் பாலசந்தரின் சீடர் அமீர்ஜான் இயக்கிய "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை" படம் அமைந்து நிற்கிறது. மணிரத்னத்தை வைத்து கே.பாலசந்தர் படம் பண்ணுவோம் என்று தீர்மானித்த போது இளையராஜாவை விட்டு விலகி இன்னொரு இசையமைப்பாளரோடு சேரத் தயக்கம் காட்டினாராம் மணி ரத்னம் (ஆதாரம் Weekend with Star இல் சுஹாசினி). ஆனால் பாலசந்தரோ அது ஒத்துவராது என்று சொல்லி விட்டாராம். அந்த நேரத்தில் பாலசந்தரும் தான் இயக்கிய அழகன், வானமே எல்லை ஆகிய படங்களுக்கும், தன் சிஷ்யர் வஸந்த் இயக்க, கவிதாலயா சார்பில் தயாரித்த நீ பாதி நான் பாதி ஆகிய படங்களுக்கும் மரகதமணி (கீரவாணி) ஐயும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை படத்துக்கு தேவாவையும் ஒப்பந்தம் செய்து விட்டார். இவற்றில் "நீ பாதி நான் பாதி" படத்தைத் தவிர அனைத்துமே ஜனரஞ்ச ரீதியில் வெற்றி பெற்றவை. அதுவும் 1992 ஆம் ஆண்டில் பாலசந்தர் இயக்க மரகதமணி இசையமைத்த "வானமே எல்லை", சுரேஷ் கிருஷ்ணா இயக்க தேவா இசையமைத்த "அண்ணாமலை", மணிரத்னம் இயக்க ரஹ்மான் இசையமைத்த "ரோஜா" என்று மூன்று வெவ்வேறு இசையமைப்பாளர்களை வைத்து கவிதாலயா தயாரித்த படங்கள் சூப்பர் ஹிட். இது தமிழ்த் திரையுலகமே கண்டிராத புதுமையான, சவாலுக்கு முகம் கொடுத்த வெற்றி. ஏன் கவிதாலயா போன்ற தயாரிப்பு நிறுவனமே எதிர்காலத்திலும் கூட இப்படியொரு வெற்றியைக் கண்டதில்லை.
இசையமைப்பாளர் சேகர் மகன் என்ற முத்திரையைத் தாண்டித் தன் பதின்ம வயதுகளில் இளையராஜா, T.ராஜேந்தர், S.A.ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்களிடம் கீ போர்ட் கலைஞராக ஒரு பக்கம், விளம்பரப் படங்களுக்கு இசை, திரை சாரா இறை பக்தி, தனிப் பாடல்கள் என்று இசையமைப்பாளராகத் தன்னை நிலை நிறுத்தப் போராடிய ரஹ்மானுக்கு மணிரத்னம் அவர்களின் சகோதரி சாரதா அவர்களின் அறிமுகம் கிட்டவும், அந்த நேரத்தில் புது இசையமைப்பாளரைத் தேடிய மணிரத்னம் அவர்களிடம் ரஹ்மானைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது காலம்.
"எனக்கு மரபு வழியான சினிமாப் பாடல்களுக்குள் நில்லாமல் அதையும் தாண்டி ஏதாவது பண்ணணும் அது திரையிசையைக் கடந்ததாகக் கூட இருக்கலாம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தேன்"
என்று ரஹ்மான் தன் அந்த ஆரம்ப காலத்தை நினைவுபடுத்தினார் அண்மையில்.
இசைஞானி இளையராஜாவோடு ஏற்பட்ட பிரிவுக்குப் பின் வைரமுத்து இணைந்து பணியாற்றிய இயக்குநர்களும் சரி இசையமைப்பாளர்களும் சரி வைரமுத்துவுக்கான இடத்தைக் குறித்த பாடல்களில் துலங்க வைத்ததன் நீட்சியே ரஹ்மான் வருகையிலும் நிகழ்ந்தது. ரோஜா பாடல்களில் "சின்னச் சின்ன ஆசை" பெற்ற பெருவாரியான வரவேற்பில் வைரமுத்துவின் பங்கு வெள்ளிடை மலை.
ஆனால் இங்கே ரஹ்மானுக்கும் வைரமுத்துவோடு சேர்ந்து வெற்றி கிட்டியது.
ரஹ்மானோடு வைரமுத்து இணைந்து பணியாற்றிய பாடல்களைப் பட்டியல்படுத்தினால் இந்தக் கூட்டணியின் சிறப்பும் தனித்துவமும் புரியும்.
எழுத்தாக்கம் கானா பிரபா
“ரோஜா” பாடல்களைப் பற்றிச் சிறு குறிப்பேனும் சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தில் பங்கேற்ற பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா போன்ற தேர்ந்த முன்னணிப் பாடகர்களோடு தன் திரையிசைப் பயணத்தில் புதுப் புதுக் குரல்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனைக் கிணங்க் ஏற்கனவே பாடி அதிகம் ஜனரஞ்சக வட்டத்தை எட்டாத உன்னி மேனன், சுஜாதா போன்றோரோடு வட நாட்டில் இருந்து ஹரிஹரன் ஐயும் இழுத்து வந்து தமிழில் கோலோச்ச வைக்கிறார்.
தன்னுடைய முதல் முயற்சியில் சம பங்காக இந்தக் கணக்கை வைத்து ரசிகர்களிடம் விட்டு விடுகிறார்.
மீரா படத்தில் இசைஞானி இளையராஜாவால் மின்மினி என்று பெயர் சூட்டப்பட்ட மினி ஜோசப் "சின்னச் சின்ன ஆசை" பாடலுக்கு முன்பே ராஜா இசையில் ஏராளம் பாடியிருந்தாலும் ரஹ்மானே அறிமுகப்படுத்தியது போன்றதொரு தோற்றப்பாட்டைக் கொடுத்தது. இதுவே அன்னக்கிளி வழியாக எஸ்.ஜானகிக்கும் நிகழ்ந்தது.
அதாவது "மீள நிறுவப்பட்ட" குரல்களாகத் தன் இசையில் பிரதிபலிப்பது.
இதன் நீட்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் புதுக் குரல்களைத் தேடிய பயணம் என்றொரு பகிர்வை முன்னர் கொடுத்திருக்கிறேன். அதை வாசிக்க
http://www.radiospathy.com/2011/01/blog-post.html
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்கள் அதன் கதையமைப்பில் சோடை போனாலும் காட்சித் திறன் மிகுந்ததாக இருக்கும். அதற்கு அவருக்கு முதலில் வாய்த்த இயக்குநர் மணிரத்னம் மற்றும் விளம்பரப் பட உலக அனுபவம் உப காரணிகளாக இருக்கலாம். பின்னாளில் அதைத் தக்க வைக்க, சேர்ந்த ஷங்கர், கதிர் (ரகுமானின் நண்பர்), விளம்பரப் படங்களின் வழியாக வாய்த்த டெலிஃபோட்டோஸ் சுரேஷ் மேனன் (புதிய முகம்), ராஜீவ் மேனன் (மின்சாரக் கனவு) போன்ற சில உதாரணங்களை முன்னுறுத்தலாம்.
ரஹ்மானின் இசைப் பயணம் மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்துப் படைப்புகளை ஒப்புக் கொண்டதற்குத் தன்னுடைய இசை காட்சி வடிவம் பெறுவதன் பாங்கினாலான அவரின் மிகுந்த கரிசனையும், எதிர்பார்ப்பாகவும் அமையக் கூடும்.
இங்கே காட்சி வடிவம் எனும் போது சம காலத்த்தில் பிரபு தேவா அலையடித்தது ரஹ்மானுக்கு இன்னுமொரு வரப் பிரசாதம்.
எழுத்தாக்கம் கானா பிரபா
தேர்ந்தெடுத்துப் படம் பண்ணினாலும் வண்டிச்சோலை சின்ராசு, மனிதா மனிதா (தெலுங்கு), பரசுராம் போன்ற கரும்புள்ளிகளும் அவரை ஒட்டிக் கொண்டன. அதே போல் மரியாதை நிமித்தம் பாலசந்தருக்காக பார்த்தாலே பரவசம், பாரதிராஜாவுக்காக தாஜ்மஹால் ஆகியவை பண்ணியதும் ரஹ்மானுக்குக் கிடைத்த இக்கட்டுகள்.
கிழக்குச் சீமையிலே படம் ரஹ்மானுக்கான இன்னொரு பரிசோதனை முயற்சிக்கு உதவியது. கிராமச் சூழல் கொண்ட படத்துக்குத் தன் தனித்துவத்தை விடாது அதே சமயம் அந்தப் பாங்கிலேயே கொடுத்ததால் அது அங்கீகரிக்கப்பட்டது. கருத்தம்மாவும் அதே பாங்கில் இசை ரீதியாக வெற்றி பெற்ற படைப்பு.
எந்தவொரு உன்னதமான படைப்பாளியும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட மாட்டான். விரிந்த தன் தேடல்களைச் சமரசமில்லாமல் ரசிகர்களுக்கும் சுவைக்கக் கொடுப்பான். இளையராஜாவின் ஒவ்வொரு தசாப்தங்களிலும் இந்த அனுபவத்தைக் கண்டுணர்ந்திருக்கிறோம். பாடல்களே இல்லாமல் வரவிருந்த அலை பாயுதே படத்திற்குப் பாடல்கள் தேவை என்று வற்புறுத்தியவர் ரஹ்மான். அவர் நினைத்திருந்தால் அலை பாயுதே உடன் தேங்கியிருந்து அது போலவே இன்னும் சுட்டுக் கொண்டிருக்கலாம். அது போல் திரையிசை தாண்டி "வந்தே மாதரம்" போன்ற திரை சாரா இசைப் படைப்புகளிலும் தன் முயற்சியைக் குறைக்காது பெருக்கினார்.
தொண்ணூறுகளில் இளையராஜா மீண்டும் தராத அந்த எண்பதுகளின் இசையைத் தேவாவின் வழியாக ரசித்தது போல ரஹ்மானின் தொடர்ச்சியாகவே ஒரு இசைப் பட்டாளம் தமிழ்த் திரையிசையில் நீண்டு தொடர்கிறது.
இந்தியாவில் அகலத் திறந்து விடப்பட்ட தராளமயமாக்கல், திறந்த பொருளாதாரக் கொள்கை போன்றவை நுகர்வோரின் அடிப்படைப் பண்டங்களில் இலிருந்து பொழுது போக்குச் சந்தை வரை இலக்கு வைத்தது. இந்த நேரத்தில் ரஹ்மானின் வருகை முக்கியமாகப்படுகிறது. இசையுலகில் நவீனத்தின் புதிய கதவு திறந்து விடப்பட ரஹ்மான் முக்கிய காரணி ஆகின்றார். அதுவரை மேட்டுக்குடி மக்களை இலக்கு வைத்த மேற்கத்தேய இசையின் பரவல் ரஹ்மான் வழியாக அடித்தள மக்களுக்கும் சென்று சேருகிறது.
இதற்கு முந்திய காலகட்டத்தில் இளையராஜா இதையே மரபுரிமை வாய்ந்த இசையோடு கலந்த கலவையாகப் பிரிப்பேதுமின்றிக் கொடுத்ததால் அந்தப் பாணி அந்நியமாகப் படவில்லை.
சண்டையில் எதிரியின் போர்த் தந்திரோபாயங்களை நாளடைவில் கற்றுத் தேறுவது போல கலைத் துறையிலும் தன் முன்னோர்களால் எடுத்துச் செல்லப்பட்ட திரையிசையைத் தான் கையில் எடுத்த பின் அந்தப் பழைய முன் அனுபவங்களை வைத்துப் படிப்பினைகளைப் தன் இசைத் தொழிலின் பாடங்களாக்கினார். அதுவே அன்று தொட்டு இன்று வரை தன் பாடல்களுக்கான காப்புரிமத்தைக் கையில் வைத்துக் கொண்டு முறையாகக் கையாள்வது, தன்னுடைய படைப்புக்கான சந்தை மதிப்பை அதிகப்படுத்தும் விளம்பர உத்திகளை மேற்கொள்ளக் கூடிய, வர்த்தக உலகத்துக்கான தன் பிரதிநிதிகளைக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தது, பாடல்களில் மேம்பட்ட, உச்ச ஒலித்தரம், இன்றைய iTunes உலகில் கூடச் சுடச் சுடத் தன் படைப்புகளை கடைக்கோடி நுகர்வோர் வரை எட்டச் செய்வது என்று வர்த்தக ரீதியிலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கான பரிமாணம் தனித்துவமாகவும், ஸ்திரத்தன்மையோடும் தொடர்கிறது. ஒரு படைப்பாளி சறுக்குவது இந்த இடத்தில் தான். ஆனால் ரஹ்மான் அந்த விஷயத்தில் தக்கோரைத் தன்னகத்தே வைத்துக் கொண்டது வெற்றியைச் சுலபமாக்கியது.
எழுத்தாக்கம் கானா பிரபா
எழுபதுகளில் திரைசையை அதிகம் சுவாசித்த ரசிகர்களைக் கேட்டுப்பாருங்கள், தமிழ் சினிமா இசையை விட அதிகம் அவர்கள் சிலாகிப்பது ஹிந்திப் பாடல்களைத் தான். இளையராஜாவின் வருகை அன்றைய தமிழ் ரசிகர்களை ஹிந்தி இசை கேட்கும் மரபில் இருந்து பெருவாரியாக விடுவித்துக் கொண்டது. கிராமியமும் மேற்கத்தேயமும் கலந்த ராஜாவின் புது இசை மொழியை ரசிகர்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து மொழி பேதம் பாராது நல்லிசையைக் கேட்கும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கத் தான் செய்கிறது
இளையராஜா என்ற ஜாம்பவானால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த அளவுக்கு ஹிந்தியில் நேரடியாக அவர் காலூன்றிய போது தொடர்ச்சித் தன்மை இருக்கவில்லை.
பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் மட்டுமன்றி வட நாட்டின் பெரும் இயக்குநர்கள் ராஜாவின் இசையைப் பயன்படுத்திய போதும் இந்த நிலை தான் இருந்தது. ராஜாவின் திறமையை வடநாடு அங்கீகரித்தாலும் கூட முழுமையானதொரு ரசிகர் வட்டம் கிடைக்காததற்கு என்ன காரணம். அதற்குப் பதில் சொல்வது போல அமைந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் வருகையும் அவர் ஹிந்தித் திரையுலகில் நிலைநாட்டிய வெற்றிக் கொடியும்.
ரோஜா படத்தின் இசையை ஹிந்திக்கு கொண்டு போனதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று மணிரத்னத்தின் தேசியம் தழுவிய பொதுவான ஒரு கதைக்கருவாக அமைந்தது. அந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றியோடு ரஹ்மானின் இசைக்கும் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பம்பாய் படம் கூட முன்னையதை ஒத்ததே. ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முழுமனதாக அங்கீகரிக்கத் தொடங்கியது ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் வெளியான "ரங்கீலா". ஒரு சுமாரான கதையை வைத்துக் கொண்டு இசையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் நிஜ ஹீரோ. ரஹ்மானின் வருகையில் மிக முக்கியமாக இருந்தது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இசை, அதை ரங்கீலா தாராளமாகவே படைத்தது. எம் டிவி போன்ற இசை ஊடகங்கள் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமான காலகட்டத்தில் "ரங்கீலா"வின் வருகை முக்கியமானதொன்றாக அமைகின்றது. இங்கே ரஹ்மான் ஹிந்தி ரசிகர்களைக் வசீகரிக்கப் பயன்படுத்திய ஆயுதம் உயர் தொழில்நுட்பத்தில் வழங்கிய மேற்கத்தேய இசைக் கோர்ப்பு, இதன் மூலம் வட நாட்டின் மேல் தட்டு ரசிகர்களைக் கவர்ந்து கொண்டார்.
அடுத்து ராஜாவால் அதிகம் தொட்டுப் பார்க்காத ரஹ்மானால் பரவலாகப் பரீட்சித்துப் பார்த்து வெற்றியடைந்த விஷயம் "ஹிந்துஸ்தானி" இசை. வடநாட்டு ரசிகர்களில் மேற்கத்தேய இசையை நுகர்வோருக்கு சமானமாக இருப்போர் இந்த ஹிந்துஸ்தானி சார்ந்த ரசிகர்கள். இந்த விஷயத்தில் ரஹ்மானின் பல பாடல்களை உதாரணம் காட்ட முடியும். கஸல் மரபு சார்ந்த மெட்டுக்களோடு பொருத்தமான வடநாட்டுப் பாடகர்களை அவர் உள்வாங்கிக் கொண்டார். அத்தோடு ஹிந்துஸ்தானி இசையில் பயன்படுத்தப்படும் வாத்தியக் கருவிகளை நுட்பமாகவும், நளினமாகவும் பயன்படுத்திக் கொண்டார். ஜோதா அக்பர் போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டால் அவற்றின் சிறப்புப் புரியும். ஆகவே ரஹ்மானின் ஹிந்தித் திரையுலக வெற்றிக்கு இன்னொரு காரணம் வடநாட்டு இசைமரபினை அதிகம் உள்வாங்கி மெட்டமைத்ததே.
1947 Earth. இந்திய பாகிஸ்தான் பிரிவினையோடு சம்பந்தப்படுத்தியதாக இப்படத்தின் கதைக்கரு அமைகின்றது. தீபா மேத்தா போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்திய இயக்குநரோடு ரஹ்மான் சேர்ந்ததும் அவரின் பிற்கால சர்வதேச அங்கீகாரங்களுக்கு இலகுவாகிப் போனதொன்று.
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் பட்டியலாக தீபா மேத்தா இயக்கிய இரண்டாவது படம் இது. முன்னையது Fire. தனது முன்னைய படமான Fire இல் ரஹ்மானோடு கூட்டணி போட ஆரம்பித்தார் தீபா மேத்தா. Fire படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை பம்பாய் படத்தில் நவீனின் புல்லாங்குழலோடு அமையும் இசைக்கோர்வையை மீண்டும் ரஹ்மான் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தார். ஆனால் 1947 Earth படத்தைப் பொறுத்தவரை முழுமையாக புத்தம் புது மெட்டுக்களையும் இசைக்கலவையையும் உருவாக்கியிருந்தார் ரஹ்மான். இதில் ஏழு பாடல்களும் இரண்டு பின்னணி இசைக் கலவையும் அமைந்திருக்கின்றன.
இன்றும் மலையாளிகளைக் கேட்டுப் பாருங்கள் "யோதா" (தமிழில் அசோகன்) தான் நம்மட ரெஹ்மான் இசையமைச்சது என்று பீற்றுவார்கள். வெளியீட்டில் ரோஜாவுக்கு அடுத்து வந்த படம் அது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னக மொழிப் பிராந்தியப் படங்களில் இளையராஜா தக்க வைத்திருந்த கோட்டையை அந்தந்த மொழிகளில் இசையமைத்து வெற்றியைச் சம்பாதிக்க முடியாவிட்டாலும் இன்று இந்திய அளவில் ரஹ்மானுக்கான ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தியது அவரின் ஹிந்திப் பிரவேசமே.
ரஹ்மானின் ஹிந்திப் பிரவேசம் அதைத் தொடர்ந்து தீபா மேத்தா போன்றவர்களால் உலக அரங்குக்கு எடுத்துச் செல்லப்படுதல், அதனைத் தொடர்ந்து Bombay Dreams என்ற மேடை இசை நாடகம், Slumdog Millionaire திரைப்படம் வழியாக இரண்டு Oscar விருதுகள், மற்றும் இசைக்கான Grammy விருதுகள் இரண்டு என்று நிகழ்த்தப்பட்ட வரலாறுக்கு முந்திய தொண்ணூறுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்ததற்கான தாமதமான அங்கீகாரங்களாகவே இவை எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும். அந்த அளவுக்கு அவர் ஏற்கனவே இசையுலகில் புதுமையை நிகழ்த்திக் காட்டி விட்டார்.
தமிழ் திரையிசையின் மூன்று முக்கிய இசை ஆளுமைகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான் ஆகியோரைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கான மாற்றத்துக்கான இசை இனி எங்கியிருந்து, யாரால் எடுத்து வரப்படப் போகிறது என்றதொரு கால கட்டத்தை நெருங்கும் இவ்வேளை, ரஹ்மான் இசைத்துறையில் நிகழ்த்திக் காட்டிய தேடல்களை மீறியதொரு வரப் போகும் படைப்பாளி எவ்விதமான ஆளுமை செலுத்தப் போகிறார் என்ற கேள்விக்கு விடை தெரியாதவொரு குழப்பமே தற்போது இசைத்துறையில் நிலவும் கூட்டணி ஆட்சியில் தொடர்கின்றது.
1968 இல் வெளிவந்த “கருத்த பெளர்ணமி" பட இசையமைப்பு வேலைகளில் தனக்கு ஒரு துணை இசையமைப்பாளர் தேவை என்று தன் குரு தேவராஜன் மாஸ்டரிடம் வேண்டுகோள் வைக்கிறார் அந்தப் படத்தின் இசையமைப்பாளர் அர்ஜீனன் மாஸ்டர்.
தேவராஜன் மாஸ்டர் காட்டியவர் ஆர்.கே.சேகர், அன்று தொடங்கிய பயணம் அர்ஜீனன் மாஸ்டரிடம் தன் சடுதியான மரணம் வரை உதவுகின்ற இசையமைப்பாளராக ஆர்.கே.சேகர். அந்தக் காலகட்டங்களில் குட்டிப் பையன் திலீப் இவர்களின் இசையமைப்பு இடைவேளைகளில் ஆர்மோனியத்தை வைத்து வாசிப்பதைக் கடைக்கண்ணால் பார்த்து மனதில் பதிய வைக்கிறார் அர்ஜீனன் மாஸ்டர்.
எம்.பி.ஶ்ரீனிவாசன் மற்றும் தட்சணாமூர்த்தி சுவாமிகள், அர்ஜீனன் மாஸ்டர் ஆகியோருடன் இசைக் கூட்டுச் சேர்ந்த
ஆர்.கே.சேகர் அவர்கள் தனியாகவும் இசையமைப்பாளராக இயங்கியிருக்கிறார். இவரின் இறுதித் திரைப்படமான “சோட்டனிக்கார அம்மா” என்ற படத்துக்கு இசையமைக்கும் போது நலிவுற்ற இவரை அப்போது கூட இருந்து பார்த்தவரும் அர்ஜீனன் மாஸ்டர் தான்.
ஆர்கே சேகர் 1976 ஆம் ஆண்டில் இவ்வுலகை விட்டு நீங்கும் போது
ஆர்கே சேகரின் மூத்த வாரிசு திலீப்புக்கு வயசு ஒன்பது.
திலீப்பின் அம்மா தன் மகனை இசையுலகத்துக்கு அறிமுகப்படுத்துமாறு அர்ஜீனன் மாஸ்டரிடம் கேட்டுக் கொள்கின்றார்.
1981 இல் “ஈரநாட்டின் மண்ணில் நின்னும் உணர்நெனித்திடும்” படத்துக்காக திலீப்பை கீபோர்ட் வாசிக்க அமர்த்துகின்றார் அர்ஜீனன் மாஸ்டர். அப்போது திலீப்புக்கு வெறும் 13 வயசு தான். தொடர்ந்து திலீப் என்ற அந்தச் சிறுவன் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெரும் இசையாளுமையாக வளர்வதற்கு முன் தினக் காலங்களில் அர்ஜீனன் மாஸ்டரின் அரவணைப்பு பெரும் பலமாக அமைந்திருக்கின்றது.
சேகர் என்ற ஆளுமை மிக்க ஒரு இசையமைப்பாளரின் மனைவியாக இருந்து,
இள வயதிலேயே கணவனை இழந்து தனியன் ஆகித் தன் குழந்தைகளை வளர்த்து,
தன் மகனின் இசைக்கனவை மெய்ப்படுத்திய வகையில் தாய் என்ற் ஸ்தானம் கடந்த பெருந்தகை.
He died when I was just nine years old. Till five years after my father died, my mother would rent out his musical instruments to run the house after which she was advised to sell the equipment and live with the interest, but she refused saying, No, I have my son. He will take care.She has music instincts. Spiritually she is much higher than me in the way she thinks and takes decisions. For instance, her decision of making me take up music. She made me leave school in Class XI and take up music and it was her conviction that music is the line for me. - Times of India பேட்டியில் (2017) ஏ.ஆர்.ரஹ்மான் தன் தாயைப் பற்றி.
ஏ.ஆர்.ரஹ்மான் வெறும் இந்தியத் திரையிசையின் போக்கை நிறுவியவர், அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனவர் என்ற அளவில் மட்டுமே பேசு பொருளாக இருக்கக் கூடாது.
அந்தச் சாதனையாளன் தன் 9 வயதில் தந்தையை இழந்த போதும், இசையைத் தன் வாழ்வியல் கருவியாகக் கொண்டு புதிய புதிய தேடல்களைத் தேடிப் பறந்த இசைப் பறவையாக, நம்பிக்கையை விதைத்த ஒரு ஆளுமையாகக் கொள்ளப்பட வேண்டியவர்.
“என் முன் இரண்டு தெரிவுகள் இருந்தன.
ஒன்று வெறுப்பு இன்னொன்று அன்பு
அவற்றில் நான் தேர்ந்தெடுத்தது அன்பின் பாதையைத் தேர்ந்தெடுத்தேன் நான் இங்கே இருக்கிறேன்”
https://www.youtube.com/watch?v=cnBFDTSIj2U
ஏ.ஆர்.ரஹ்மான் (81st Oscar விருது விழா 2009)
கல்லொன்று
தடை செய்த போதும்
புல்லொன்று புதுவேர்கள் போடும்
சந்தோஷக் கண்ணீரே! ❤️
கானா பிரபா
15.08.2022