Pages

Wednesday, November 18, 2015

கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ

கஷ்டப்பட்டுப் பெறும் எதுவும் அதன் பெறுமதியை அவ்வளவு சுலபத்தில் இழப்பதில்லை. அது போலவே ஒரு காலத்தில் பாட்டுக் கேட்ட அனுபவங்களும். 90 ஆம் ஆண்டில் இருந்து ஈழத்தில் இருந்து பெயர்ந்த 1995 ஆம் ஆண்டு வரை முழுமையான மின்சாரம் இல்லாத போர்க் காலச் சூழல். மாலை ஆறு மணியானால் இருட்டுக் கட்ட, கை விளக்குத் தான் மொத்தக் குடும்பத்துக்கும் ஒளியூட்டும். அப்போதும் பாட்டுக் கேட்கும் ஆசை விட்டால் தானே. சைக்கிளில் பொருத்தியிருக்கும் டைனமோவில் இருந்து மின்சாரத்தை வானொலிப் பெட்டிக்குக் கடத்துவதற்காக சைக்கிளைத் திருப்பிக் கிடத்தி, அதன் மிதியடியை வலித்துச் சக்கரத்தை உருட்டி டைனமோவோடு உரசி, அது கடத்தும் மின்சாரத்தை வானொலிக்குப் பாய்ச்ச ஒரு வயர் இணைப்பைப் போட்டு, சக்கரத்தை ஒரு கையால் சுழற்றிச் சுழற்றிக் கை வலி தெரியாமல் மனசு நிறையக் கேட்ட காலம் அது. அப்போது வந்தது தான் "கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ" பாட்டு. அந்த நேரத்தில் எங்களைப் பொறுத்தவரை திரைகடல் ஓடித் திரவியம் பெற்ற நிலை.

"கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ" பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் தனித்துவமான குரலால், இன்னொரு பாடகரை உரிமை கொண்டாட முடியாத, அவருக்கேயானது. 
பல்லவி அடிகள் முடிவுறும் ஓகாரத்தை அவர் நோகாமல் நிறுத்தி மேவுவார். மூல அடிகள் வரும் இடத்தில் ஆர்மோனியம் பின்னணியில் வர, தாள லயத்தில் வில்லிசையைக் கொடுத்து சரணம் வரும் இடத்தின் பகுதிகளில் இன்னொரு வடிவத்திலும் மீண்டும் ஆர்மோனியம், வில்லிசை என மாறும் ஆனால் நெருடல் இருக்காது. அதுதான் இசைஞானியின் சாகித்தியம்.
இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்தின் முன்னிசையில் ஒலிக்கும் புல்லாங்குழல் நர்த்தனத்தையும் அதை ஆமோதித்குக் குதூகலிக்கும் கூட்டு வாத்திய ஆர்ப்பரிப்பையும் தீரா வெறியோடு கேட்கும் ஆவலில் திரும்பத் திரும்ப ஒலி நாடாவை முன்னோக்கி ஓட விட்டுக் கேட்ட காலங்களை நினைத்துச் சிரிக்கிறேன்.
அந்தப் புல்லாங்குழல் ஒலி அப்படியே அடுத்த சரணம் வரை குதூகலிக்கும். திரு.நெப்போலியன் அவர்களின் வாசிப்பு.

முதலாவது சரணத்தின் முன்னிசையில் இயங்கும் புல்லாங்குழல் இசை இன்னோர் நளினத்தை வெளிப்படுத்தியிருக்கும். தோல் வாத்தியங்களின் இரு வேறு பரிமாணம் வில்லிசைப் பானை மேளத்தின் ஒலியிலும், தபேலா ஒலியிலுமாக இந்தப்  பாடலில் பங்களித்திருக்கும்.

இதே காலகட்டத்தில் வந்த "ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது" பாடலிலும் சக்தியைப் போற்றிப் பாடும் தொனியில் அமைந்திருக்கும். 

தொண்ணூறுகளின் ஆரம்பம் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் ஒலித்தரத்தில் உச்சம் பெற்ற காலம். இந்தப் படத்தின் பாடல்களை குறிப்பாக "கலைவாணியோ" பாடலை எந்த டப்பா வானொலியில் கேட்டாலும் பட்டுச் சேலைப் பகட்டாக இருக்கும்.

சன் சிங்கர் நிகழ்ச்சி பார்ப்பதே கங்கை அமரன் எப்போதாவது சொல்லும் சின்னத் சின்னத் தகவல் சுவாரஸ்யங்களுக்காகத் தான். இந்த வார நிகழ்ச்சியை நேற்றிரவு பார்க்கும் போது "கலைவாணியோ" பாடலை ஒரு குட்டிப் பையன் பாடினார். இந்தப் பாட்டு இடம்பெற்ற வில்லுப்பாட்டுக்காரன் படத்தை இயக்கியதை விலாவாரியாகச் சொல்லாவிட்டாலும், வில்லுப்பாட்டு என்ற கலை வடிவத்தைச் சென்று பரப்பியதில் சுப்பு ஆறுமுகம் அவர்கள், அவருக்கும் முன்னோடியான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், என்.எஸ்.கேயின் உதவியாளராக இருந்த குலதெய்வம் ராஜகோபால் போன்றோரை நினைவு கூர்ந்தார். 

கரகாட்டக்காரன் படம் ஒரு வருடம் ஓடிச் சாதனை படைத்ததைத் தொடர்ந்து தமிழரின் தொல்லிசைக் கலை வில்லுப்பாட்டு என்ற இசை வடிவத்தை மையமாக வைத்து கங்கை அமரன் இயக்கிய படம். இடையில் வெவ்வேறு கருப் பொருளில் படங்களை எடுத்திருந்தார். இதே படத்தில் வரும் "தந்தேன் தந்தேன்" என்று மலேசியா வாசுதேவன் பாடும் பாட்டு சமீப வருடங்களாகத் தான் என்னைக் கட்டிப் போட்டிருக்கின்றது. அவ்வளவு தூரம் இதே படத்தில் வந்த "கலைவாணியோ ராணியோ" சந்தோஷம் மற்றும் சோகப் பாடல்கள் மற்றும் எஸ்.பி.பி & எஸ்.ஜானகி பாடிய "சோலை மலையோரம்" ஆகிய பாடல்களே போதும் எனுமளவுக்கு மீண்டும் மீண்டும் கேட்டவை.
கங்கை அமரன் புகழ்ந்தேற்றிய வில்லிசைக் கலைஞர் மற்றும் நடிகர் குலதெய்வம் ராஜகோபால் இந்தப் படத்தில் மனோவுடன் சேர்ந்து "தந்தனத்தோம் என்று சொல்லியே" பாடலில் ஆமாப் போட்டுப் பாடியிருப்பார்.
"பொன்னில் வானம் போட்டது கோலங்களே" என்று எஸ்.ஜானகி பாடும் பாடலைக் கேட்டுப் பாருங்கள். "காலைத் தென்றல் பாடி வரும் ராகம்" பாடலுக்கு நிகராகப் போற்றப்பட்டிருக்க வேண்டிய பாட்டு அது.
சித்ரா பாடும் சோகப் பாட்டு "வானம் என்னும்" ராஜாவின் கோரஸ் 500 போட்டியில் சேர்த்த பாட்டு.

"கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ" நேற்றுக் காலை வேலைக்குப் பயணிக்கும் போதும், வீடு திரும்பும் போதும் என் ரயில் பயணத்தில் இந்தப் பாடலை அளவு கணக்கில்லாமல் கேட்டாலும் அடங்க மறக்கும் மனம் இன்றும் தொடர்கிறது. தாய்ப் பசுவின் மடியில் இடித்து இடித்துக் குடிக்கும் கன்றின் நிலைக்கு ஒப்பானது இது.

http://www.youtube.com/watch?v=6S4se0nCIJ0&sns=em

காட்சியோடு ரசிக்க

 http://www.youtube.com/watch?v=IxWX0w4m6_g&sns=tw

Wednesday, November 11, 2015

படிக்காதவன் படம் வந்து முப்பது வருஷம்



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் படிக்காதவன் திரைப்படம் வெளிவந்து இன்றோடு 30 வருடங்கள் ஆகி விட்டதாக ட்விட்டரில் இழை ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. 11.11.1985 தீபாவளிக்கு வந்த ஒரு வெற்றிச் சித்திரம் இது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழ வைப்பேன் வரிசையில் படையப்பாவுக்கு முந்தி இணைந்த படம் இதுவாகும். இந்த நான்கு படங்களிலுமே சிவாஜி மற்றும் ரஜினி ஆகிய இரண்டு நட்சத்திரங்களின் தனித்துவம் பேணப்பட்டிருந்தாலும் படிக்காதவன் படம் ஒப்பீட்டளவில் சிவாஜி கணேசனுக்கு கெளரவ வேடத்தை அளித்த படம்.

ரஜினிகாந்த் உடன் பயணிக்கும் காருக்கு லஷ்மி என்று பெயரிட்டிருப்பார். இந்தப் படம் வந்ததில் இருந்து இன்று வரை நடைமுறை வாழ்க்கையில் நம்மவர் சிலர் லஷ்மி என்று தமது வாகனத்தை அடைமொழியிட்டு வேடிக்கையாக அழைப்பதன் நதிமூலம்/ரிஷிமூலம் இது.

எண்பதுகளின் ரஜினிகாந்த் படமென்றாலே கண்ணை மூடிக் கொண்டு எஸ்.பி.முத்துராமன் தானே இயக்கம் என்று சொல்ல முன்பு இன்னொரு பக்கம் ரஜினிகாந்த் இற்கு நட்சத்திரப் படங்களை அளித்த வகையில் இயக்குநர் ராஜசேகரும் குறிப்பிடத்தக்கவர். முழு நீள மசாலா சண்டைப் படங்கள் மட்டுமன்றி கதையம்சம் பொருந்திய குடும்பப் படங்களையும் ராஜசேகர் கொடுத்திருந்தாலும் "மலையூர் மம்பட்டியான்" இவரை நட்சத்திர இயக்குநர் அந்தஸ்த்துக்கு உயர்த்தியது. இதுவே பின்னர் ரஜினிகாந்த் படங்களுக்கான இயக்குநர் தேர்வில் இவரையும் சேர்த்துக் கொள்ள ஒரு காரணியாக இருக்கலாம்.
 படிக்காதவன், மாவீரன், மாப்பிள்ளை வரிசையில் தர்மதுரை படம் இயக்குநர்  ராஜசேகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்திருந்தது. தர்மதுரை படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே இயக்குநர் ராஜசேகர் இறந்ததும் மறக்க முடியாத வரலாறு.
இந்தக் கூட்டணியில் அமைந்த படங்கள் அனைத்துக்கும் இசைஞானி இளையராஜா இசை.

இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் முத்துகள் என்று சொல்லவா வேண்டும். கவிஞர் வாலி, கங்கை அமரன், வைரமுத்து வரிகளில் அமைந்தவை.
ரஜினிகாந்த் இற்கு ஆரம்ப காலத்தில் அதிக பாடல்களைப் பாடிய மலேசியா வாசுதேவன் இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் பாடிய பெருமையைய் பெறுகிறார்.
ஒரே படத்தில் நாயகனுக்கான குரலாக கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகிய மூன்று பெரும் பாடகர்களும் பாடிய வகையில் இன்னொரு சிறப்பு.

"ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி" விரக்தியுன் விளம்பில் இருந்த அந்தக் காலத்து இளைஞரின் தேசிய கீதம்.
இந்தப் பாடலின் வெற்றி பின்னர் "சம்சாரம் அது மின்சாரம்" படத்தில் "ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா" என்று சங்கர் கணேஷ் கூட்டணியும் ஆசையோடு எடுத்தாண்டது.
நாயகனுக்கான ஸ்துதிப் பாடல்கள் "ராஜாவுக்கு ராஜா", "சொல்லி அடிப்பேனடி" இரண்டும் தலா எஸ்.பி.பி, மலேசியா என்று தத்தமது பாணியில் சாரம் கெடாது கொடுத்த துள்ளிசை.
"ஒரு கூட்டுக் கிளியாக" மலேசியா வாசுதேவன் பாடும் போது டி.எம்.செளந்தரராஜனின் இளவலாகக் குரல் விளங்கும்.

"சோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு" எஸ்.பி.பி & எஸ்.ஜானகி பாடும் போது அப்படியே என்னை மண் வாசனை படத்தின் "ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலை" பாட்டுக்கு இழுத்து விடும்.

"சோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு 
  சொந்தக் கிளியே நீ வந்து நில்லு
  கன்னிக் கிளி தான் காத்துக் கெடக்கு கண்ணுறங்காம 
பட்டுக் கிளி இதைக் கட்டிக் கொள்ளு
தொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு"
என்று எஸ்.ஜானகி ஆலாபனை கொடுத்து நிறுத்துகையில் ஆர்ப்பரிப்போடு வரும் இசை தான் எண்பதுகளின் பிரமாண்டத்தின் அறை கூவல்.
இப்படியான நிஜமான வெற்றியை இனிமேல் காணுமோ இந்தத் திரையுலகு.