Pages

Thursday, September 8, 2016

இசைஞானி இளையராஜா இசையில் பாடகி ஆஷா போஸ்லே
எண்பதுகளின் இறுதிக் காற்பகுதியில் வட இந்தியாவில் கோலோச்சிய பாடகிகள் லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே சகோதரிகள் இளையராஜா இசையில் தமிழில் தொடர்ச்சியாகச் சில படங்களில் பாடிச் சிறப்பித்தனர். இந்த இருவர் பாடிய படங்கள் வெளிவந்த ஆண்டுகளும் சம காலத்தில் அமைந்திருந்தன.
இதற்கு முன்னர் ஐம்பதுகளில் "வானரதம்" படத்தில் லதா மங்கேஷ்கர் பாடியதும் பின்னர் மூன்று தசாப்தங்கள் கழித்துத் தமிழில் பாட வந்ததும் புதுமை. லதா மங்கேஷ்கர் குறித்த தனிப்பகிர்வில் அவரின் பாடல்களைப் பார்ப்போம். லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே தமிழில் பாடியதில் இது இன்னார் தான் என்ற அடையாளச் சிக்கலும் ஏற்படுவதுண்டு. தனிப்பட்ட ரீதியில் எனக்கு அழகான உச்சரிப்பு, மொழிச் சுத்தம் இவற்றில் சமரசமில்லாது பாடிய வட இந்தியப் பாடகிகளில் ஷ்ரேயா கொசல் அளவுக்கு யாரும் இலர். அதில் இந்தச் சகோதரிகளும் அடக்கம். ஆனால் என்ன மணி மணியான பாடல்கள் இவர்களுக்குக் கிடைத்ததால் அவற்றைத் தவிர்க்க முடியாது சமரசத்தோடு பருக வேண்டுமே நாம் 😂

 இன்று பாடகி ஆஷா போஸ்லேயின் பிறந்த தினத்தில் அவர் தமிழில், குறிப்பாக இளையராஜா இசையில் பாடிய பாடல்களைப் பார்ப்போம். தவிர எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் தங்கத்தின் தங்கம் படத்தில் "செவ்வந்திப் பூ மாலை கட்டு", தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் என்று மற்றைய இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியளித்தார்.

"செண்பகமே செண்பகமே தென் பொதிகைச் சந்தனமே" https://www.youtube.com/shared?ci=ikOwAVpUbpM என்று பட்டி தொட்டியெங்கும் முழங்கிய "எங்க ஊரு பாட்டுக்காரன்" பாடல் ஆஷா போஸ்லேவுக்குக் தமிழின் கடைக்கோடி ரசிகர்கள் வரை ஆஸ்தி சேர்த்தது. அந்தக் காலத்து றெக்கோர்டிங் பார்களில் இந்தப் பாடல் சுப்ரபாதம். இதையே மனோ, சுனந்தா சந்தோஷ மெட்டுகளிலும் பாடியிருப்பர்.

"எங்க ஊரு பாட்டுக்காரன்" வெற்றியைத் தொடர்ந்து கங்கை அமரன் இயக்கிக் கொடுத்த "சக்கரைப் பந்தல்" படம் எத்தனை பேருக்குத் தெரியும்? அப்போது வில்லனில் இருந்து நாயகனாகப் பதவி உயர்வு பெற்ற சரண்ராஜ் நாயகனாக நடித்தது. இந்தப் படத்தில் "மழை மேகம் மூடும் நேரம்" https://www.youtube.com/shared?ci=6ucvRMoMoCI என்ற அட்டகாஷ் பாட்டு ஆஷா போஸ்லேவுக்குக் கிட்டியது. ஆனால் அந்தப் படத்தின் மழுங்கிய வெற்றியால் இந்தப் பாடலும் பரவலாகப் போய்ச் சேராத குறை உண்டு.

சரண்ராஜ் மற்றும் ரேகா ஜோடி போட்ட "நான் சொன்னதே சட்டம்" படத்தில் இசைஞானி இளையராஜா கொடுத்ததனைத்தும் தவிர்க்க முடியாத அற்புதமான பாடல்கள். 
"அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன்" https://www.youtube.com/shared?ci=F0a39SR5m5U இதுதான் முதன் முதலில் தமிழ்த் திரையிசை ரசிகர்களை ஆட்கொண்ட பாட்டு. இப்போது கேட்டாலும் அதே புத்துணர்வு இருக்கும். இதே எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஆஷா போஸ்லே கூட்டு
"ஒரு தேவதை வந்தது" https://www.youtube.com/shared?ci=zFc0b_YViz0 கூட்டுக்குரல்கள் சங்கதியோடு கொடுத்த இந்தப் பாடல் பழைய காதல் நினைவுகளே கதவைத் திற என்ற ரீதியில் உள்ளத்து உணர்வுகளை உரசும் அழகான காதல் பாட்டு. ஆஷா போஸ்லே குரலுக்கு வெகுமதி கொடுத்து நோகாமல் அமைந்த மெட்டு.

"கண்ணுக்கொரு வண்ணக்கிளி" படம் வெளிவராமல் போன துரதிஷ்டசாலி. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கொண்ட இசைத் தட்டைத் தேடிப் பெற்றது மறக்க முடியாதது. இதற்காக விசேட பதிவும் இங்கே எழுதியிருக்கிறேன். http://www.radiospathy.com/2012/07/blog-post.html
லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே ஒரே படத்தில் பாடிய சிறப்புக் கொண்டது. "உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்" மூன்று வடிவத்தில் எஸ்.பி.பி & ஆஷா போஸ்லே பாடியது இன்னொரு தேவதை வந்தது போன்றதொரு சுகம்.

"ஓ பட்டர்ஃப்ளை ஓ பட்டர்ஃப்ளை" https://youtu.be/qDJVdY8Kx8E பாடல் ஆஷா போஸ்லேக்குத் தமிழில் இன்னுமொரு உச்சம் கொடுத்த பாட்டு. பட்டர் மாதிரி வழிந்தோடும் வரிகளை பட்ட்டர்ர்ர் என்று பகிர்ந்திருப்பார்.
ஒளிப்பதிவாளர் ஶ்ரீராம் இயக்குநராக  அவதாரமெடுத்த மீரா படத்தில் இந்தப் பாட்டோடு இன்னும் இரண்டு பாடல்களையும் பாடியிருக்கிறார். அதில் ஒன்று எஸ்.பி.பி "பனி விழும் மாலையில்" https://youtu.be/t1RfO10sCac என்று பாடிக் கொண்டே போக இவர் ஆமோதிப்புக் குரலைப் பாடல் நெடுகக் கொடுப்பார்.
இன்னொன்று இதுவரை தமிழில் அவர் கொடுத்திராத பாணியில் போதைக் கிறங்கலோடு "பழைய விலங்கு உடைந்ததா" https://youtu.be/f6Vwrv2u6O8 என்று அமைந்திருக்கும்.

பழைய விலங்கு உடைந்ததா என்று ஆஷா போஸ்லேவுக்குக் கிட்டிய அந்தப் புதுமையான பாடலை ஒப்பீட்டளவில் ஓ பட்டர் ஃப்ளை அளவுக்கு ரசிக்காத ரசிகர்கள், பின்னர் இதே மாதிரி அமைந்த
இன்னொரு பாட்டைக் கொண்டாடினார்கள். அதுதான் சேதுபதி ஐ.பி.எஸ் படத்தில் வரும்
"சாத்து நடை சாத்து" https://youtu.be/sbpikAoMeZs இந்தப் பாட்டு ஆஷா போஸ்லேக்கு மட்டுமல்ல உஷா உதூப் இற்குக் கிடைத்திருந்தாலும் பின்னியிருப்பார். அந்த கோரஸ் குரல்கள் கொடுக்கும் ஜும் ஜக்கு ஜும் ஜக்கு ஜக்கு :-) 
பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்கிய "புதுப்பாட்டு" படத்தில் இளையராஜாவோடு ஜோடி க்ஃட்டிப் பாடிய "எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நெனக்கிறே" https://youtu.be/ZY9gHT8s5RU பாடலும் இவரைக் கவனிக்க வைத்தது.

"நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி நமைச் சேர்த்த உறவுக்கொரு நன்றி" https://youtu.be/dmAqcdyY14s
இசைஞானி இளையராஜாவின் இசையில் ஆஷா போஸ்லேவுக்கு முத்தாய்ப்பாய் அமைந்த பாட்டு. ஹரிஹரனின் கூட்டும் கச்சிதமான பாட்டு ஜோடியாக அமைந்து சிறப்பிக்கும். 

கடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றின் நடுவராக வந்திருந்த ஆஷா போஸ்லேவுக்கு இளையராஜா பூச்செண்டு அனுப்பி கார்த்திக் ராஜா வழியாகக் கனம் பண்ணியிருந்தார். லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே சகோதரிகளுக்குத் தமிழகத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தினரோடு இருக்கும் பந்தம் போலவே இசைஞானி இளையராஜாவிடத்தும் என்பதை மீள நிரூபித்தது அந்த நிகழ்வு.