Pages

Thursday, July 27, 2023

❤️ சின்னக்குயில் சித்ரா 💚 44 வருஷப் பாட்டுக் குயிலுக்கு வயசு 60🌷


ஆயிரம் பூவும் உண்டு

அது மல்லிகையைப் போலாகுமா?

ஆயிரம் மொழிகள் உண்டு

அது செந்தமிழைப் போலாகுமா?

எத்தனை செல்வம் உண்டு

அவை அத்தனையும் நீயாகுமா?

https://youtu.be/FdoOZtuaEns

சின்னக்குயில் சித்ராவை  அணுக்கமாக நேசிக்க வைக்கும் ஒரு பாட்டு ஒன்று என் இலக்கியாவுக்கே நான் பாடுவது போலத் தொனிக்கும். 

இன்று பின்னணிப் பாடகி, சின்னக்குயில் சித்ராவின் 60 வது பிறந்த தினம். சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய், எண்ணற்ற பாடல்களால் நெருக்கமாய் இருப்பது. 

தமிழ்த் திரையிசையில் மிக நீட்சியான வரலாற்றைக் கொண்ட பாடகிகளில் சித்ராவுக்குப் பின் யாரும் அடையாளப்படவில்லை. இனியும் அது சாத்தியப்படாது.

பாட்டுப் போட்டிகளைப் பாருங்கள். புதிய பாடகர்களைத் தட்டிக் கொடுப்பது மட்டுமன்றி, நுணுக்கமான சங்கதிகளைக் காட்டி அவற்றில் கவனமெடுக்க வேண்டும் என்ற ஒரு குருவின் ஆத்மார்த்த அக்கறை சித்ராவின் தனித்துவம். எஸ்பிபி அருகே அமர்ந்து இவ்விதம் அவர் கொடுக்கும் கண்டிப்பைப் பார்த்து எஸ்பிபியே கலாட்டா பண்ணியதை அறிவீர்கள். 

காதலிக்கும் பருவத்தின் ஆரம்ப நாட்களைப் போலத் தொடர்ந்து வரும் காலங்கள் இருக்காது போல ஒரு சில பாடகர்களின் ஆரம்பகாலத்துப் பாடல்களைக் கேட்கும் சுகமே தனிதான்.

எஸ்.ஜானகியின் ஆரம்ப காலத்துப் பாடல்களில் "உள்ளம் தேடாதே என்று சொல்லுதே" (எதையும் தாங்கும் இதயம்), "மலரோடு விளையாடும் தென்றலே வாராய்" (தெய்வபலம்),எஸ்.பி.சைலஜாவின் அறிமுகக் குரலில் "சோலைக்குயிலே" (பொண்ணு ஊருக்கு புதுசு), "மலர்களில் ஆடும் இளமை புதுமையே" (கல்யாண ராமன்), சுஜாதா அறிமுகமான வேளை "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" (காயத்ரி) இப்படியாக இந்த முன்னணிப் பாடகர்களின் அன்றைய பின்னணிப் பாடல்களைக் கேட்பதே தனி சுகம்.

1984 ஆம் ஆண்டில் தமிழில் அறிமுகமாகிய சித்ராவின் ஆரம்ப காலப்படங்களில் குருவை மிஞ்சாத சிஷ்யை போல ஒரு அடக்கமான தொனியிலேயே அவரின் பாடல்கள் இருப்பது போலத் தென்படும். அந்த ஆரம்பப் பாடல்களைக் கேட்டாலே போதும் தானாக ஆண்டுக் கணக்கு வெளிவந்து விடும். வருஷங்கள் நான்கைக் கடந்த பின்னர் தான் ஒரு முதிர்ச்சியான தொனிக்கு அவரின் குரல் மாறிக் கொண்டது, அதாவது இன்றிருப்பதைப் போல.சித்ராவின் வருகை பூவே பூச்சூடவாவில் ஆரம்பிக்கிறது. அந்தக் காலத்து முன்னணி நாயகிகள் நதியா, ராதா, அம்பிகா, சுஹாசினி என்ற பட்டியலுக்குக் குரல் இசைத்தாலும் நடிகை ரேவதியின் குரலுக்கும் குணாம்சத்துக்கும் பொருந்தி வரக்கூடியாதான பாங்கில் அமைந்திருக்கின்றது. 

எங்களூரில் 80 களின் மையப்பகுதியில் வீடியோப் படப்பிடிப்புக்காரர்கள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருந்த வேளை அது. பெண் பூப்படைந்ததைக் கொண்டாடும் நாள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கல்யாணக் காட்சி என்று வீடியோக்காரருக்கும் புதுத் தொழில்கள் கிட்டிக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிறந்த நாள் விழாக்களை எடுக்கும் வீடியோக்காரருக்கு அந்தக் காட்சிகளுக்குப் பொருத்தமான பாடல்களையும் பின்னணியில் பொருத்த வேண்டிய சூழ்நிலை வரும்போது தவறாமல் பயன்படுத்தப்படும் பாடல்களில் ஒன்று டிசெம்பர் பூக்கள் படத்தில் வரும் "இந்த வெண்ணிலா என்று வந்தது எந்தன் பாடலை நின்று கேட்டது". சித்ராவின் ஆரம்பகாலக் குரலில் ஒன்று இது, இசைஞானி இளையராஜா இசையமைத்த பாட்டு. அளவான மேற்கத்தேய இசையும் சித்ராவின் அடக்கமான குரலும் சேர்ந்து இப்போது கேட்டாலும் அந்தப் பிறந்த நாள் வீடியோக்காலத்தைச் சுழற்றும். 

மனிதனின் மறுபக்கம் என்றொரு படம். இசைஞானி இளையராஜாவை எண்பதுகளில் அதிகளவில் பயன்படுத்திய இயக்குநர்களில் முதலிடத்தில் இருப்பவர் என்று சொல்லக்கூடிய கே.ரங்கராஜ் இயக்கத்தில் வந்த படம். இந்தப் படத்தில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றையும் எழுதத் தனித்தனிப் பதிவுகள் தேவை. அவ்வளவுக்கு வித்தியாசமான கலவையாக இருக்கும். அப்படியானதொரு பாடல் தான் சித்ராவின் குரலில் ஒலிக்கும் "சந்தோஷம் இன்று சந்தோஷம் இந்தப் பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்". ராஜாவுக்கே உரிய ஒழுங்குபடுத்தப்பட்ட வாத்தியக் கலவைகளின் நேர்த்தியான அணிவகுப்பில் இருக்கும் இசை, பாடலின் சரணத்திற்குப் பாயும் போது "மாலை சூடிடும் முன்னே இவள் காதல் நாயகி" என்று இன்னொரு தடத்துக்கு சித்ரா மாறுவார் அப்போது பின்னால் வரும் ட்ரம்ஸ் வாத்தியத்தின் தாளக்கட்டும் இலாவகமாக மாறி வளைந்து கொடுக்கும். பாட்டின் பின் பாதியிலும் "உன்னைக் கேட்கவே வந்தேன் ஒரு ஆசை வாசகம்" என்னும் இடத்திலும் முந்திய பாங்கில் இருக்கும். ஆர்ப்பாட்டமில்லாத அழகில் அளவான மேக்கப்பில் இருக்கும் காதலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சுகம் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.

இசைஞானி இளையராஜா இசையில் சின்னக்குயில் சித்ரா பாடிய 54 தனிப்பாடல்களின் திரட்டாக இங்கே பகிர்கிறேன்.

இவை தனித்தும் கூட்டுக் குரல்களோடும் சித்ராவால் பாடிச் சிறப்பிக்கப்பட்டவை. இயற்கை, அன்பு, காதல் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பாடல் தொகுப்பு இது.

இந்தப் பாடல்களில் சிறப்பாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இசைஞானி இளையராஜா இணைந்த மெல்லத் திறந்தது கதவு படப் பாடலும், அறுவடை நாள் படத்தில் ராஜாவே கூட்டுக் குரலாக இணைந்து பாடிய பாடலையும், சித்ரா பாடிய மலையாளப் பாடல்களில் என்னைக் கவர்ந்த, உள்ளத்துக்கு மிக நெருக்கமான மூன்று பாடல்களும் அணி செய்கின்றன.

1. சின்னக்குயில் பாடும் பாட்டு (பூவே பூச்சூடவா)

2. இந்த வெண்ணிலா எங்கு வந்தது (டிசெம்பர் பூக்கள்)

3. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் (புன்னகை மன்னன்)

4. நானொரு சிந்து (சிந்து பைரவி)

5. தேவனின் கோயில் (அறுவடை நாள்)

6. ஆத்தாடி அம்மாடி பூ மெட்டு (இதயத்தைத் திருடாதே)

7. சொந்தம் வந்தது வந்தது (புதுப்பாட்டு)

8. ஹே சித்திரச் சிட்டுகள் (என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு)

9. சந்தோஷம் இன்று சந்தோஷம் (மனிதனின் மறுபக்கம்)

10. கொட்டிக் கிடக்குது செல்வங்கள் (தீர்த்தக் கரையினிலே)

11. நின்னுக்கோரி வர்ணம் (அக்னி நட்சத்திரம்)

12. ஒரு ராஜா வந்தானாம் (மெளனம் சம்மதம்)

13. மாமனுக்கும் மச்சானுக்கும் (அரங்கேற்ற வேளை)

14. உச்சிமலை மேகங்கள் (வெள்ளையத் தேவன்)

15. வண்ணப் பூங்காவனம் (ஈரமான ரோஜாவே)

16. வானம்பாடி பாடும் நேரம் ( சார் ஐ லவ் யூ)

17. மாலை சூடும் நேரம் (புதிய ராகம்)

18. தூளியிலே ஆட வந்த (சின்ன தம்பி)

19. கற்பூர முல்லை ஒன்று (கற்பூர முல்லை)

20. வந்ததே ஓ குங்குமம் (கிழக்கு வாசல்)

21. மன்னன் கூரைச் சேலை (சிறைச்சாலை)

22. புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் (ராமன் அப்துல்லா)

23. நல் அன்பே தான் தாயானது (கை வீசம்மா கை வீசு)

24. தென்மதுர சீமையிலே (தங்கமான ராசா)

25. காலை நேர ராகமே (ராசாவே உன்னை நம்பி)

26.யாரைக் கேட்டு (என் உயிர்க் கண்ணம்மா)

27. ஒரு கிளியின் தனிமையிலே (பூவிழி வாசலிலே)

28. ஒத்தையிலே நின்னதென்ன ( வனஜா கிரிஜா)

29. கொட்டிக் கிடக்கு குண்டு மல்லி (தாயம் ஒண்ணு)

30. குத்தம்மா நெல்லு குத்து (பாடு நிலாவே)

31. பொடி நடையாப் போறவரே (கடலோரக் கவிதைகள்)

32. இளமை ரதத்தில் (நினைக்கத் தெரிந்த மனமே)

33. பழைய கனவை (தாயம்மா)

34. மங்கலத்துக் குங்குமப் பொட்டு (சாமி போட்ட முடிச்சு)

35. உன்னை நானே அழைத்தேனே (சின்ன குயில் பாடுது)

36. காலம் இளவேனிற்காலம் (விடிஞ்சா கல்யாணம்)

36. காற்றோடு குழலின் நாதமே (கோடை மழை)

37. கண்ணே என் (கிராமத்து மின்னல்)

38. மழலை என்றும் (சேதுபதி IPS)

39. குன்றத்துக் கொன்றை (பழசி ராஜா)

40. உல்லாசப் பூங்காற்றே (கோலங்கள்)

41. துளியோ துளி (காத்திருக்க நேரமில்லை)

42. ஶ்ரீராமனே உன்னை (கண்களின் வார்த்தைகள்)

43. வண்ண நிலவே (பாடாத தேனீக்கள்)

44. நான் வண்ண நிலா (கட்டளை)

45. வா வாத்தியாரே (பரதன்)

46. திருடா திருடா (எனக்கு நானே நீதிபதி)

47. ஆயிரம் பூவும் உண்டு (பாச மழை)

48. மஞ்சள் நீராட்டு (இல்லம்)

49. சிட்டுப் போலே (இனிய உறவு பூத்தது)

50. எந்து பறஞ்ஞாலும் (அச்சுவிண்ட அம்மா - மலையாளம்)

51. புழயோரத்தில் (அதர்வம் - மலையாளம்)

52. குழலூதும் கண்ணனுக்கு ( எம்.எஸ்வி & இளையராஜா - மெல்லத் திறந்தது கதவு)

53. மத்தாப்பூ ஒரு பெண்ணா (மைக்கேல் மதன காமராஜன்)

54. செங்கதிர் கையும் வீசி (ஸ்னேக வீடு - மலையாளம்)

 “கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியே” என்று அவரே பாடும் பாடல் போல மணி மணியாய்ப் பல பாடல்கள் வந்து விழுகின்றன.

 தொடர்ந்து அவர் ஜோடி கட்டிய பாடல்கள்

1. கல்யாணத் தேனிலா - மெளனம் சம்மதம்

2. பூஜைக்கேற்ற பூவிது - நீதானா அந்தக் குயில்

3. மலரே பேசு மெளன மொழி - கீதாஞ்சலி

4. வா வா அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்

5. ஓ ப்ரியா ப்ரியா - இதயத்தைத் திருடாதே

6. மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

7. ஆத்தாடி ஏதோ ஆசைகள் - அன்புச் சின்னம்

8. காதல் ராகமும் கன்னித்தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ - இந்திரன் சந்திரன்

9. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்

10. வா வா வா கண்ணா வா - வேலைக்காரன்

11. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது - பணக்காரன்

12. மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா

13. அடிச்சேன் காதல் பரிசு - பொன்மனச் செல்வன்

14. நேத்து ஒருத்தரை ஒருத்தரு பார்த்தோம் - புதுப்பாட்டு

15. பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்

16. மாலைகள் இடம் மாறுது - டிசெம்பர் பூக்கள்

17. செம்பூவே பூவே - சிறைச்சாலை

18. தேகம் சிறகடிக்கும் ஹோய் - நானே ராஜா நானே மந்திரி

19. இந்த மான் உந்தன் சொந்த மான் - கரகாட்டக்காரன்

20. ஒரு நாள் நினைவிது பல நாள் கனவிது - திருப்புமுனை

21. சித்திரை மாதத்து நிலவு வருது - பாடு நிலாவே

22. சங்கத்தமிழ்க் கவியே - மனதில் உறுதி வேண்டும்

23. அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ - சிறையில் பூத்த சின்ன மலர் 

24. பொன்னெடுத்து வாறேன் வாறேன் - சாமி போட்ட முடிச்சு

25. கண்மணி கண்மணி - சத்யவான்

26. மலையோரம் மயிலே - ஒருவர் வாழும் ஆலயம்

27. நீ போகும் பாதையில் - கிராமத்து மின்னல்

28. கம்மாக்கரை ஓரம் - ராசாவே உன்ன நம்பி

29. ஓர் பூமாலை - இனிய உறவு பூத்தது

30. திருப்பாதம் பார்த்தேன் - மனித ஜாதி

31. இரு விழியின் வழியே - சிவா

32. சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி - என்னப் பெத்த ராசா

33. பூவும் தென்றல் காற்றும் - சின்னப்பதாஸ்

34. மாலை நிலவே - பொண்ணுக்கேத்த புருஷன்

35. குருவாயூரப்பா - புதுப் புது அர்த்தங்கள்

35. சொர்க்கத்தின் வாசற்படி - உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

36. ஊருக்குள்ள உன்னையும் பத்தி - நினைவுச் சின்னம்

37. அழகிய நதியென - பாட்டுக்கொரு தலைவன்

38. வெள்ளிக் கொலுசு மணி - பொங்கி வரும் காவேரி

39. ராஜனோடு ராணி வந்து - சதி லீலாவதி

40. ஹேய் ஒரு பூஞ்சோலை ஆளானதே - வாத்தியார் வீட்டுப் பிள்ளை

41. சோலை இளங்குயிலே - அண்ணனுக்கு ஜே

42. பூங்காற்றே இது போதும் - படிச்ச புள்ள

43. நானென்பது நீயல்லவோ - சூரசம்ஹாரம்

44. வா வா வஞ்சி இளமானே - குரு சிஷ்யன்

45. கரையோரக் காத்து - பகலில் பெளர்ணமி

46. இதழில் கதை எழுதும் - உன்னால் முடியும் தம்பி

47. விழியில் புதுக் கவிதை - தீர்த்தக் கரையினிலே

48. காதலா காதலா - தாய்க்கு ஒரு தாலாட்டு

49. குயிலே குயிலே - ஆண் பாவம்

50. சோலை இளங்குயில் - காவலுக்குக் கெட்டிக்காரன்

51. தென்றல் தான் திங்கள் தான் - கேளடி கண்மணி

52. சிந்துமணி புன்னகையில் - நீ சிரித்தால் தீபாவளி

53. ஆராரோ பாட்டுப் பாட - பொண்டாட்டி தேவை

54. மழை வருது மழை வருது - ராஜா கைய வெச்சா

55. தென்றல் வரும் தெரு - சிறையில் சில ராகங்கள்

56. ஒரு ஜீவன் அழைத்தது - கீதாஞ்சலி

57. நிக்கட்டுமா போகட்டுமா - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

58. நூறு நூறு முத்தம் - இந்திரன் சந்திரன்

59. என்னுயிரே வா - பூந்தோட்டக் காவல்காரன்

60. ஆலோலங்கிளித் தோப்பிலே - சிறைச்சாலை

61. கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும்

62. வைகாசி மாசத்துல - நினைவுச் சின்னம்

63. நீலக்குயிலே - சூரசம்ஹாரம்

64. ஜிங்கிடி ஜிங்கிடி - குரு சிஷ்யன்

65. கை பிடித்து கை அணைத்து - சிறையில் சில ராகங்கள்

66. அன்பே நீ என்ன - பாண்டியன்

67. ஊரோரமா ஆத்துப் பக்கம் - இதயக் கோவில்

68. ஓடைக்குயில் ஒரு பாட்டு - தாலாட்டு பாடவா

69. ஒரு ஆலம்பூவு இலந்தம் பூவைப் பார்த்ததுண்டா - புண்ணியவதி

70. நான் ஒன்று கேட்டால் தருவாயா - இளைய ராகம்

71. மதுர மரிக்கொழுந்து - எங்க ஊரு பாட்டுக்காரன்

72. வானத்துல வெள்ளிரதம் - எங்க ஊரு மாப்பிள்ளை

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சின்னக்குயில் சித்ராவுக்கு K S Chithra

கானா பிரபா

27.07.2023


Friday, July 21, 2023

எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே❤️



வெள்ளாப்பில் எழுந்து தோட்டத்துக்குப் போக வேண்டும். தோட்டத்துக் கிணத்தில் ஊறும் நீரை மொண்டு பாய்ச்சும் ஊசிலி மெஷினின் குழாய் வழியே பீறிட்டு வளையக் குழாயாய் வந்து வாய்க்கால் வழியாக வடிந்தோடும் நீரைப் பாத்தி கட்டி ஒவ்வொரு கன்றுக்கும் ஈரம் பாய்ச்ச வேண்டும். அப்படியே பொழுதெல்லாம் தோட்ட வேலை கழிய, மாலை நேரம் மேய்ச்சலுக்கு மாடு, கன்றை அவிழ்த்து வீதி வழியே நடத்திக் கொண்டு போய் இரை மீட்க வைத்து விட்டு நுரை தள்ளத் திரும்ப அழைத்து வந்து கட்டி விட்டுக் கோயிலுக்குக் கிளம்பல். 


கோயில் கிணற்றில் அள்ளித் தோய்ந்து விட்டு, கொண்டு போன வேட்டியை இறுகக் கட்டி விட்டு சாயரட்சை பூசை பார்த்து விட்டு அப்படியே தேர்முட்டியடியில் சாய்ந்தால் மேலே வானத்து நட்சத்திரங்கள் கண்ணடிக்கும். உரத்த குரலில் பாடத் தொடங்குவார். பக்க வாத்தியங்கள் ஏதுமின்றித் தன் தொடையே தாள வாத்தியமாக. இருட்டின் வெளிச்சத்திலே டியெம் செளந்தரராஜன் குரலைப் பிரதியெடுத்துப் பாடும் இம்மாதிரி அண்ணன்மார்களோடு 

அவர்களின் அன்றைய பகல் பொழுதுக் களைப்புகளெல்லாம் இரவில் தம் உரத்த குரலில் பாடும் பாடல்களால் கரைத்துக் கொண்டிருப்பார்கள். கையிலே பாட்டுப் புத்தகம் ஏதுமின்றி பொங்கும் பூம்புனலில் இருந்து இரவின் மடியில் வரை ஒலித்த பாடல்கள் எல்லாம் மனப்பாடம்.


அப்படியொரு அண்ணன் “நானொரு ராசியில்லா ராசா” என்று அழுதும், “நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு” என்று தத்துவம் பேசியும் பாடிப் பழகியவர் பாசப் பிணைப்பில் பாடிய “எந்தன் பொன் வண்ணமே” திரையிசைப் பாடல்கள் இம்மாதிரி உழைப்பாளிகளுக்குத் தான் உபயோகப்படுகின்றன. அதுவும் கிராமங்களில் மாடாய் மனிசராய் உழைக்கும் சனங்களின் ஆதார ஒலிகள் இவை. அதனால் தான் இன்று திரையிசைப்பாடல்கள் மேற்கத்தேய வரவுகளால் மாசு கண்டாலும் கிராமங்களில் அந்தப் பழைய யுகத்தின் மாசு படாப் பாடல்களோடே இன்னும் வாழ்கிறார்கள். 

எப்பேர்ப்பட்ட கலைஞனாக இருந்தாலும் சரி அவனுக்கு முந்திய தலைமுறையில் வாழ்ந்த துரோணாச்சாரியார்களின் பாதிப்பு அவன் படைப்பில் ஏதோவொரு இடத்தில் ஒட்டிக் கொண்டு விடும். இசைஞானி இளையராஜா ஆத்மார்த்தமாக நேசிக்கும் C.S.சுப்பராமன் அளவுக்குப் போகவில்லை. இளையராஜாவோடே சமீப காலம் வரை பயணித்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் தாக்கம் இளையராஜாவின் ஆரம்ப காலங்களில் ஒட்டியிருக்கும். அப்படியொன்று தான் இந்த “எந்தன் பொன் வண்ணமே”. 

பாடல் முழுக்க எம்.எஸ்.வி தனம் இருக்கும். பிந்திய சரணத்தின் மிதப்பில் வரும் வயலின் ஆர்ப்பரிப்பில் தான் ராஜ முத்திரை இருக்கும். மற்றப்படி திருநீற்றுப் பட்டை நீற்றாகத் துலங்கும் எம்.எஸ்.வி நெத்தி போல ஒரு நேர்த்தியான பாட்டு இது. 


T.M.செளந்தரராஜனின் குரலின் கனிவும், நெகிழ்வும் இந்தப் பாட்டை அப்படியே உருக்கிப் போட்டு விடும். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எத்தனையோ மாற்றுக் குரல்கள் பொருத்தலாம். ஆனால் மாசற்ற் குரலாய் அச்சொட்டாய்ப் பொருந்திப் போனவர் TMS.


கவியரசர் கண்ணதாசன் இந்த மாதிரி எத்தனை வடிவங்களில் நம்பிக்கை ஊட்டும் வரிகளை எழுதியிருப்பார்.


காலம் வரும் அந்த தெய்வம் வரும்

அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும் காலம்தனை நான் மாற வைப்பேன்

கண்ணே உனை நான் வாழ வைப்பேன்


“நான் வாழ வைப்பேன்” தலைப்பை இரகசியமாகச் செருகியிருப்பார் கவியரசர். அதுதான் அவர் முத்திரை.


https://youtu.be/4LflC5bkNSw


கானா பிரபா

Tuesday, July 18, 2023

காலந்தோறும் வாலி ❤️


“தாய் அழுதாளே
நீ வர
நீ அழுதாயே
தாய் வர”

தாய்மையின் இதய ஓலமாய் ஒரு பாட்டு
உணர்வோட்டம் மிக்கதொரு காட்சி,
உச்சபட்ட நடிகர்கள் எல்லாவற்றையும் மேவி ஈரடியில் அதை அப்படியே உயிரோட்டம் பொதிந்த வரிகளில் கொடுத்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார், அவர் தான் வாலி.

கவியரசு கண்ணதாசனிடம் படத்தின் கதையைச் சொல்லி விட்டால் போதும் அதை அப்படியே கிடைக்கும் ஒரு பாடலின் ஈரடிக்குள் அடக்கும் அற்புதன் என்று பலர் சம்பவ உதாரணங்களோடு சொல்லியிருக்கிறார்கள்.
வாலியாரின் பாட்டுக் கிடங்கினுள் இவ்விதம் ஏராளம் வைடூரியங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

தமிழ் சினிமாவில் “பாசாங்கு இல்லாத” என்ன தேவையோ அதை அப்படியே கொடுத்து விட்டுப் போகும் பாடலாசிரியர்களில் கவிஞர் வாலி முதன்மையானவர் என்பேன். அவர் தன் பாடல்களில் தன்னைப் பற்றிச் சிந்திப்பதை விட, அந்தப் பாடலை வாங்கப் போகும் நுகர்வோன் பக்கம் தான் அதிகம் சிந்திப்பார்.

“இட ஒதுக்கீடு உனக்காக
இடை செய்வது”

“உன்னில் உருவான ஆசைகள்
என் அன்பே
அந்த வெங்காய விலைப் போல இறங்காதது” (தத்தியாடுதோ)

என்று அந்தந்தக் காலகட்டத்துப் பேசுபொருளைக் காதல் பாடலில் கூடக் கொண்டு வந்து விடுவார்.

“அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலை ஏறிப் போகுது மார்க்கெட்டுல
விலை ஏறி போகுது மார்க்கெட்ல
என்னாட்டம் ஏழைங்க அத வாங்கித்
திங்கதான் துட்டில்ல
சாமி என் பாக்கெட்ல”

“கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடல மாடசாமி”க்குக் கூட அந்தச் சிறுவர்கள் வழியாக வேண்டுகோள் வைப்பார்.

தன் காலம் முடிவதற்கு முன்னர் கூட

“மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே”

என்று ஒரு குறும்(பு)ப் பா படைத்தவர்.

“ஓரிடத்தில் உருவாகி
வேறிடத்தில் விலை போகும்
கார்களைப் போல் பெண் இனமும்” (ராஜா கைய வச்சா)
என்று காருக்குப் பாட்டெழுதியவர்,

Net Cafe காலம் வந்த போது
“இதயம் திறந்து பறந்தோடி வா
இருக்கு Net Cafe விரைந்தோடி வா”

என்றும் கொடுத்தார் காலச் சக்கரத்தின் புள்ளியாய்..

வாலிடா 😀 இப்போ இருந்தாலும் தக்காளிக்கு ஒரு பஞ்ச் போட்டிருப்பார்.

இவ்விதம் அந்தந்த நிகழ்வுகளின் காலக் கணக்கைத் தன் கவியில் நிரப்பியவர்.

“நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே”

இன்று அதிகாலைப் பனிக்குளிரைக் கிழித்துக் கொண்டு காரில் உட்கார்ந்த போது எழுமாற்றாக வந்து குதித்தது இந்தப் பாட்டு. சிலரை நினைக்கும் போதோ அல்லது அவர்களை நினைப்பூட்டவோ பாடல்களும் தூண்டுகோலாகின்றன. இன்று கவிஞர் வாலியின் நினைவு நாள் அவர் எழுதிய பாடல் முக விசேடம்.

கவிஞர் வாலியை ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,
தான் ஒரு படைப்பாளி நான் என்னுடைய நிலையில் இறங்கி வரமாட்டேன் என்று வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்துக் கொண்டு இலக்கிய கர்த்தாவாக மட்டுமே தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவே இல்லை. ஒரு படத்தின் காட்சிச் சூழலுக்கான பாடல் எவ்வளவு பாமரத்தனமாக இருக்குமோ அவ்வளவுக்குக் கீழிறங்கி அடித்து ஆடுவார், அதே சமயம் கருத்தாழம் என்றால் கண்ணும் கருத்துமாக வரிகளைப் பூட்டுவார்.

அதனால் தான், சாஸ்திர சம்பிரதாயங்களால் மூடிக் கட்டபட்டவளுக்கு வாழ்வு கொடுக்கும் சூழலில் எழும் “நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தை இல்லையே”
பாடலும் பிடிக்கும்,

அதே சமயம் பிரபல பாட்டுக்காரி ரோட்டோர ரோமியோக்களுடன் பாடும்

“சின்ன ராசாவே.....
சித்தெறும்பு என்னைக் கடிக்குது”

பாட்டும் பிடிக்கும் இரண்டுமே வாலி தான் இந்த இரண்டிலுமே மெட்டுக்குக் கட்டினாலும் தாளம் தப்பாத வரிகளைப் பொருத்தமாக இட்டுக் கட்டியிருப்பார்.

“அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே வந்ததே
நண்பனே.....”

என்று 68 இல் “உயர்ந்த மனிதன்” படத்தில் மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.விஸ்வநாதனுக்குக் கொடுத்தவர் தான்,

“நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா.....”

என்று 38 வருடங்கள் கழித்து “சில்லுனு ஒரு காதல்” இற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கொடுக்க முடிந்தது. மற்றைய இசையமைப்பாளர்களையும் மனுஷர் விட்டு வைத்தாரா என்ன “பதினெட்டு வயசு இளமொட்டு மனசு ஏங்குது பாய் போட”, “எப்படி எப்படி சமைஞ்சது எப்படி” என்று விரகதாபப் பாடல்களையே துள்ளிசையிலும் தன் வரிகளால் இனம் பிரித்தார்.
“டாலாக்கு டோல் டப்பி மா” என்று புதுப் புதுச் சொற்களை ஜில்பான்சி மொழியில் 😀 போடுவது வாலியின் பண்பு.

ஒரு மனிதன் காலா காலாத்துக்கும் தன் மனசை இளமையாக வைத்துக் கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும்.
எப்படி ஒரு அழுத்தமான சூழலில் ரஜினியின் படமொன்றைத் தேடி எடுத்துப் பார்க்கத் தோன்றுகிறதோ அது போலவே எண்ணற்ற ஜாலியான வாலியின் பாடல்களும். “ஜானகி அம்மா பாடுறதைப் பார்” என்று எப்படி அவரை ஒரு முன்னுதாரணமாகச் சித்ராவுக்கு இளையராஜாவால் அடையாளப்படுத்த முடிந்ததோ அது போலவே ஆர்.வி.உதயகுமார் எழுதிய பாடல்களைப் பட்டி டிங்கரிங் செய்ய வாலியே தேவைப்பட்டார். இயக்குநர் கதிர் - இளையராஜா கூட்டணியில் இருந்து இயக்குநர் கதிர் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி வந்த போதும் வாலியே தொடர்ந்தார். அதனால் தான் நமக்கும்

“யாப்போடு சேராதோ
பாட்டு தமிழ்ப் பாட்டு
தோப்போடு சேராதோ
காற்று பனிக்காற்று....”

என்று இதயத்திலும்

“ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீ தான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..”

என்று காதல் தேசத்திலுமாகக் கிட்டியது.

“அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளை இது
உன்னருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது
காயத்ரி மந்திரத்தை
உச்சரிககும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா”

தாம்பத்திய பந்தத்தை அழகு மொழியில் வடித்தெடுத்த “கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை” ஆக்கித் தொடர்ந்த கவிஞர் வாலி - இசைஞானி இளையராஜா எனும் பந்தம், முரண்பட்ட மனங்களின் மணமேடையை

“தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?”

என்று மெளன ராகத்தில் கேள்வி எழுப்புகிறது. அதுவே இன்னும் கடந்த நிலையில்

“நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்…”

எனத் தத்துவ விசாரம் கற்பிக்கிறது.

“மொத்தத்தில் வந்து கூடும்
பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே”
என்று சரணத்தில் தத்துவத்தைக் கலந்தெழுதும் வாலி இதெல்லாம் நான் சொல்லவில்லை முன்பே எழுதி வைத்தது தான் என்பது போல “எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப் பார்த்து” என்கிறார் முகப்புப் பல்லவியில்.

அபூர்வ சகோதரர்கள், தளபதி, மீரா, கிளிப்பேச்சு கேட்கவா, வருஷம் 16, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, மகுடம், அக்னி நட்சத்திரம், மெளன ராகம், தாலாட்டுக் கேட்குதம்மா, ராசா மகன், மாமியார் வீடு என்று இளையராஜா இசையில்
முழுப் பாடல்களையும் ஒரே படத்தில் எழுத வைத்த சிறப்பை வைத்தே தனி ஆவர்த்தனம் வைக்கலாம்.

எண்பதுகளிலே பிற இசையமைப்பாளர்கள் எனும் போது வைரமுத்து தான் இதற்கும் பாட்டெழுதியிருப்பாரோ என்று எழுமாற்றாக மனதில் பதிந்த பாடல்கள் பலவற்றில் வாலியின் கைவண்ணமே இருக்கின்றது. குறிப்பாக “அண்ணா நகர் முதல் தெரு” படத்தில் வரும் “மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு” இசையமைப்பாளர் சந்திரபோஸின் இசைப் பயணத்தில் தலையாய நட்சத்திரப் பாடல் இதுவென்றால் மிகையில்லை.
“உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே”
இதை வெறும் வார்த்தைப் பிரயோகமாகப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றும் ஆனால் இசை கூட்டி ரசித்தால் அசாதாரணம் காட்டும்.

இதைத்தான் இசைஞானி இளையராஜாவும்
“நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்” (சுந்தரி கண்ணால் ஒரு சேதி) வரிகளை உதாரணம் காட்டி இந்தச் சாதாராண வரிகள் எப்படி அசாதாரண வடிவம் பெறும் என்பது கவிஞர் வாலிக்குத் தெரியும் என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

அதே சமயம்
“நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா” (முன்பே வா என் அன்பே வா) என்று விண்ணை முட்டும் கற்பனைக்கும்
சென்று விடுவார் வாலியவர்கள்.

“மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ”
இந்தப் பாடலைக் கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவுக்காக வாலி எழுதிச் சமைத்ததை அறிந்து எம்.ஜி.ஆர் கூப்பிட்டு “ஓ அப்படியா” என்று தன் பாணியில் (!) விசாரித்ததாகச் சொல்வார்கள்.

“அந்தப் பக்கம் தினமும் அடிக்கும் காத்து
இந்தப் பக்கம் திரும்பும் ஒரு நாள் பாத்து”
என்று “போடு தாளம் போடு” புது வசந்தம் பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய் அந்தக் காலத்து இளையராஜாவின் ஏக போக இசை சாம்ராஜ்ஜியத்தையும் உரசிப் பார்க்கிறார்.

“சில நேரம் ஏதோதோ நடக்கும்” என்றொரு பாடல் வித்யசாகரின் ஆரம்ப காலத்துத் திரைப்படமான “பூமனம்”இற்கான வாலி எழுதியது. இதுவுமொரு தத்துவப் பாடல் தான். இன்னொரு சிறப்பென்னவென்றால் பாடியது பழம் பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஶ்ரீனிவாஸ்.

தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு நிலவியதை அவ்வளவு தூரம் மக்கள் மறந்து விடவில்லை.
வாலியின் பேனா எழுதுகிறது இப்படி
“மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே” எவ்வளவு காலச் சூழலுக்கேற்ற குறும்புத்தனமும் அதே சமயம் காட்சிச் சூழலுக்கு அதைப் பொருத்தும் வல்லமையும் இருக்கிறது பாருங்கள், அதான் வாலி. ஒரு செயற்கை ஒளியை “வெளிச்சப் பூ” என்ற கற்பனையில் வடித்த அவர் திறனை என்னவென்று சொல்ல.
இப்ப்டியாகப்பட்டவர் அதே படத்தில் “எதிர் நீச்சலடி” என்று துள்ளிசை ஆட்டம் போட்ட போது அவருக்கு வயசு 81. இந்த உலகை விட்டு அவர் பிரிந்த அதே ஆண்டு தான்.
இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் இன்னொன்று. வாலியின் ஆத்ம நண்பர் நாகேஷ் இற்குத் திருப்பு முனையாக அமைந்த எதிர் நீச்சல் படத்தின் அனைத்துப் பாடல்களும் வி.குமார் இசையில் வாலியின் கை வண்ணமே. அந்தக் காலகட்டத்தில் கே.பாலசந்தருக்கு எதிர் நீச்சலைத் தொடர்ந்து பூவா தலையா, இரு கோடுகள் என்று தொடர்ச்சியாக அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வாலியே.

“முத்து நகையே முழு நிலவே” பாடலையோ “கண்ணுல பால ஊத்த வந்த கண்ணம்மா” பாடலையோ கேட்கும் போது அடடா கங்கை அமரன் போலிருக்கிறதே என்றால் அங்கே கிராமியத் தெம்மாங்குக்கும் பாட்டுக் கட்டியது வாலியே. தேவாவின் இசையில் “சாமுண்டி” படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
“மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டு ஒன்னு வைச்சுக்கம்மா
வெள்ளைகல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா”
சாமுண்டி வழியாக இன்றும் கிராமங்களில் துலங்குகிறார் வாலி.

கவிஞர் வாலியின் வரிகளை நுனிப் புல் மேய்ந்து இலக்கியத் தராதரம் பேசும் அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளின் திரைத்துறையைப் பங்கு போட்ட வாலியாரின் அர்த்தம் நிறைந்த வரிகளைத் தேடுவதில்லை அல்லது கண்ணதாசன் கணக்கில் போட்டு விடுவார்கள்.
இன்னொரு பரிமாணமும் இருக்கிறது அது எளிமையான சொற்களின் கட்டு. இதைக்கூட விமர்சன நோக்கில் எடுத்து ஆய்வார்கள். ஆனால் ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்லும் திறன் கூடப் படைபிலக்கியத்தின் சிறப்பு அல்லது படைப்பவனின் வல்லமை என்றே கொள்ள வேண்டும்.

தாம் படைத்த இலக்கியங்களிலே தம் வாழ்வையும் காட்டியவர்கள் உண்டு. கவிஞர் வாலியின் பாடல்களில் அப்படியே நம்முடைய வாழ்க்கையிலும் பங்கு போட்டு வைத்திருக்கிறது. நம் காலத்து இசையமைப்பாளர்களோடு வாழ்ந்த வரிகள் ஒரு பக்கமிருக்க, கொண்டாடி மகிழத் தான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்லிப் போகின்றன அவை. அப்படியே வாழ்ந்து விட்டும் போனார் நம் கவிஞர் வாலி.

"அவ்வளவு பெரிய மூளை என்னடா காணாமப் போச்சே"
கவிஞர் வாலி இறந்த போது ஏங்கினாராம் தங்கர் பச்சான். அந்த வலி இன்னும் நம்முள் புதைந்துள்ளது.

❤️ கவிஞர் வாலி நினைவு நாள்

கானா பிரபா
18.07.2023

Wednesday, July 12, 2023

திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர் ❤️✍🏻



“நடிகர் ஜெய்சங்கரிடம் இவ்வளவு சீக்கிரமாக இந்த உலகத்தை விட்டுப் போக அப்படியென்ன உங்களுக்கு அவசரம்?”

 

என்ற கேள்வியைக் கேட்பேன் என்றார் சித்ரா லட்சுமணன் Chithra Lakshmanan அவர்கள்,


சமீபத்தில் Touring Talkies இல் வரும் கேள்வி பதிலில் ஒரு நேயர்

கேட்ட “இந்த உலகத்தை விட்டு மறைந்த யாராவது ஒருவரைப் பேட்டி எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?”

என்ற கேள்விக்கு.

சித்ரா சாரின் அந்த ஜெய்சங்கருக்கான கேள்வி அல்லது நேயருக்கான பதிலுக்குள் அடங்கியிருக்கிறது இன்றும் ஜெய்சங்கரை நேசிக்கும் ஆயிரக்கணக்கான உள்ளங்களின் கிடக்கை.

 

இந்த வார இறுதியில் இனியன் கிருபாகரன் Iniyan Kirubakar எழுதிய “திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர்" என்ற நூலை வாசிக்கத் தொடங்கினேன்.

முதலில் எடுத்த எடுப்பில்

 

“ஹாய் எனது அன்பு ரசிகர்களே!” என்று ஜெய்சங்கர் 1967 ஏப்ரல் மாதப் பொம்மை இதழில் எழுதிய கடிதத்தைப் படித்து விட்டு அதே சூட்டோடு நடிகர் சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்று முன்பாதியில் இருந்த ஒவ்வொருவரும் ஜெய்சங்கர் என்ற மனிதாபிமானி மேல் கொண்ட காதலை சம்பவ, வரலாற்று உதாரணங்களோடு பேசியதைப் படிக்கத் தொடங்கியவன் அப்படியே புத்தகத்தின் பின் பக்கம் போய், இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு, இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், சோ, இயக்குநர் முக்தா சீனிவாசன், எஸ்.வி.சேகர், ஸ்டில்ஸ் ரவி, ஜெய்சங்கரின் உதவியாளர் ராஜாராம், ஆர்.கே.கணேஷ் (ஜெய்சங்கர் ரசிகர் மன்றத் தலைவர்) என்று ஒவ்வொருவராக பேச அழைத்தேன், அதாவது படிக்க ஆரம்பித்தேன். கண்கள் பனிக்க ஆரம்பித்தது, ஒவ்வொருவர் சொல்லும் “ஜெய்சங்கர் என்ற மனிதநேயரின் கதை” கேட்டு.

 

நள்ளிரவைக் கடந்து என் வாசிப்புப் போய்க் கொண்டிருந்தது. அந்த இடத்தில் நிறுத்தி விட்டு, புத்தகத்தில் இருந்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தேன், அது நூலாசிரியர் இனியன் கிருபாகரனுக்குப் போனது.

“முதலில் இப்படியொரு நூலைக் கொண்டு வந்தமைக்கு உங்களுக்குப் பாராட்டுகள்” என்று நான் சொன்னதுமே அகமகிழ்வுடன்

“நீங்க ஜெய்சங்கர் சார் ரசிகரா? “ என்று கேட்டார்.

 

“ நான் அவரின் ரசிகர் என்பதை விட சித்ரா லட்சுமணன் அவர்களின் டூரிங் டாக்கீஸ் வழியாக அவரும், அவரிடம் நிகழ்ச்சிக்கு வந்து போன விருந்தினர்களும் ஜெய்சங்கரின் மனித நேயம் குறித்துச் சம்பவ உதாரணங்களோடு பேசியதை எல்லாம் கேட்டு அவர் மீதான மதிப்பு உயர்ந்து விட்டது, இப்போது உங்கள் புத்தகமும் சேர்ந்து இன்னும் அவரை உயர வைத்து விட்டது” என்றவன் மேற்கொண்டு இந்தப் புத்தக வடிவமைப்பில் எடுத்துக் கொண்ட சிரத்தையை விலாவாரியாகச் சொன்னதும் இன்ப அதிர்ச்சியோடு ஏற்றுக் கொண்டார் நூலாசிரியர் இனியன்.

 

 

நான் அவருக்குச் சொன்னது போலவே சாய் வித் சித்ரா தொடர்களின் வழியாகத் தான் ஜெய்சங்கர், விஜயகாந்த் ஆகிய ஆளுமைகளின் நிஜ பிம்பம் மலையளவாக உயர்ந்தது. சித்ரா லட்சுமணன் அவர்கள் தன் பார்வையில் “பஞ்சு அருணாசலம்” நூலை எழுதியது போல ஜெய்சங்கருக்கும் ஒரு நூல் கொண்டு வர வேண்டும் என்ற ஆசை என்னுள் இருக்கிறது. அவரின் சினிமா இதழில் கூட ஜெய்சங்கர் தொடர் பேட்டி ஒன்றைக் கொடுத்ததையும் முன்னர் சொல்லி இருந்தார்.

 

விஜயகாந்த் குறித்த தொடரை நான் எழுதும் போது குறிப்பிட்டிருந்த ஒரு தகவல், “என்ன ஆச்சரியம் விஜயகாந்த் தொடர்ந்து தன் படங்களில் ஜெய்சங்கரை வைத்திருக்கிறாரே” என்று. ஜெய்சங்கருக்குப் பின் வந்த தன் வலது கை கொடுப்பதை இடது அறியா மாமனிதர் விஜயகாந்துக்கும் அவருக்குமான பந்தம் கூட இப்படியாகப் பிணைக்கத் தோன்றியதோ என்றெண்ணினேன்.


ஊமை விழிகள் படத்தில் தான் நடிக்கச் சம்மதித்ததோடு ஶ்ரீவித்யாவையும் இணைந்து நடிக்க அழைத்தவர் ஜெய்சங்கர் தான். இவ்விதம் புதியவர்களைக் கை தூக்கி விடும் பண்பு நிறைந்தவர்.

 

“திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர்” என்ற வரலாற்று ஆவண நூல் வெறும் சினிமாக்காரராகத் தொழில் நடித்த மனிதரின் சுய விளம்பரப் படம் அல்ல, இதைப் படித்துக் கொண்டு போகும் போது இப்படியொரு வணிகச் சந்தையில் இப்படி ஒரு மனிதரா என்ற வியப்பே மேலோங்கிக் கொண்டு போனது ஒவ்வொரு பக்கங்களையும் புரட்டிக் கொண்டு போகும் போது.

 

இறுதியில் ஜெய்சங்கர் நடித்த 347 படங்களின் பட்டியலை இயக்குநர், வெளியிட்ட தேதி, மாதம், ஆண்டு ஈறாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்.

நிறைய அரிய படங்கள் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே போகும் போது கண்களை நிறைக்கின்றன. புத்தக வடிவமைப்பைப் பொறுத்தவரை எழுத்துப் பிழை இல்லாத, நேர்த்தியான எழுத்துருக்களோடு, அட்டைப் படத்தை அள்ளியெடுத்து முத்தம் வைக்கக் கூடிய அளவு வடிவமைப்போடு கச்சிதமாக வந்திருக்கிறது.

இதற்குப் பின்னால் இனியன் கிருபாகரனின் உழைப்பு மின்னுகிறது.

 

 

சிவகுமார், கமல்ஹாசன் ஆகியோர் ஆரம்ப காலகட்டத்தில் சந்தித்த சவால்களின் போது ஜெய்சங்கர் வழிகாட்டிய விதம் நெகிழ வைக்கும்.

அதுவும் கமல்ஹாசன் இவ்வளவு நீளமாக, விலாவாரியாக ஜெய்சங்கர் நட்பைப் பதிவு செய்திருப்பது இன்ப ஆச்சரியம்.


தான் உதவி செய்யும் கருணை இல்லங்களுக்கு பத்திரிகையாளர் வரக்கூடாது என்ற கட்டளை போடும் ஜெய்சங்கர், சக கலைஞர்களைக் கெளரவிக்கும் நிகழ்வுகளைக் கருணை இல்லங்களில் நடத்தி சொல்லாத செய்திகளைச் சொல்ல வைத்து அறப்பணிகளுக்கு வழி கோலுவாராம்.

 

கூத்தபிரானின் நாடகங்களில் தோன்றி, “சினிமா ஆசையை விட்டுவிடு” என்ற சோவின் அறிவுரையையும் ஒரு பக்கக் காதில் போட்டு முட்டி மோதித் திரையுலகம் வந்தவருக்குப் பறி போன வாய்ப்பும், இன்னொரு பக்கம் வழி காட்டிய “இரவும் பகலும்” தொடங்கி “ஜெய்” சங்கர் ஆனவர்,  தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஆன கதைக்குப் பாய்ந்து, எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஒரு ஆக்க்ஷன் நாயகன் என்ற உயர்விலும் சந்தித்த சாதனைகளும், சோதனைகளுமாகப் பயணிக்கிறது இந்த நூல்.


முதல் அத்தியாயத்தில் கதாநாயக வாய்ப்புத் தேடுவதோடு தொடங்கி அடுத்தடுத்த அத்தியாயங்கள் முன்னோக்கி சங்கர் என்ற இளைஞனின் வாழ்க்கையை அலசும் எழுத்தாடல் மிகச் சிறப்பு.


ஜெய் என்ற கதாநாயகன் கருணையாளன் ஆன கதையும் இருக்கிறது. டி.ஆர்.பாப்பா இக்கட்டில் இருந்த போது ஜெய் செய்த உதவியைப் படிக்கும் போது கண்கள் நிறைகின்றன. ஜெய்சங்கர் வாழ்வில் முக்கிய இயக்குநர்கள், படங்கள், எம்.ஜி.ஆர், சிவாஜி என்று வரலாற்றுப் பின்னாணியோடு சுவையாக நகர்த்துகிறார் எழுத்தாளர். ஜெய்சங்கரின் மிக முக்கிய இயக்கு நர் கர்ணன் குறித்து இன்னும் விலாவாரியாகப் பதிவு செய்யலாம். இந்த நூல் இன்னொரு பாகம் போடும் போது இன்னொரு மடங்கு வரலாற்றைப் பதிப்பிக்க முடியும் அவ்வளவுக்கு இந்த நூலே அடியெடுத்துக் கொடுக்கிறது.

 

ஜெய்சங்கரின் சினிமா ஓட்டத்தோடு, அரசியல் சூழலுக்குள் அவர் அடியெடுக்க வேண்டுமா என்ற இக்கட்டான நிலையையும்,

உச்ச நாயகனாகப் போய்க் கொண்டிருந்தவர்

“முரட்டுக் காளை” வில்லனாகும் முடிவை எடுத்துக் கொண்டதில் இருந்து அவரின் இறுதிச் சுற்று வரை அலசுகிறது.

 


“அங்கிருந்து சரியான அழைப்பு இல்லாமல் போலி அழைப்பில் போய் விட்டார் என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது”


ஜெய்சங்கர் மறைவில் இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த் சொன்னார் இப்படி.


“விதி” பட வில்லன் வக்கீல் டைகர் தயாநிதி மேல் அப்போது கடுப்பில் இருந்தேன் நான்.


ஜெய்சங்கர் அடுத்த ஆட்டத்தில் வில்லனாகவும், குணச்சித்திரனாகவும் கலந்து கட்டி ஆடினாலும் 80ஸ் கிட்ஸ் இற்குக்குக் கூட அவரின் முழு ஆளுமையின் பரிமாணம் விளங்கவில்லை. அதையெல்லாம் இந்த நூல் மாற்றிக் கழுவி விடும்.


 ஜெய்சங்கரின் நூறாவது படம் “இதயம் பார்க்கிறது”. இந்தப் படத்தில் விழிப் புலன் இழந்தவராக அவர் நடித்ததும், தன் மகன் விஜயசங்கரை கண் வைத்தியம் படிக்க வைத்து இன்று புகழ்பூத்த கண் மருத்துவராகவும் உருவாக்கியிருப்பது நடமாடும் வரலாறு.


ஜெய்சங்கரின் முதற் பட வாய்ப்புக்கு வழிகாட்டியவர் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. அந்த முதற் படமான “இரவும் பகலும்” இசை கூட அவரே.


இந்தப் புத்தகம் கொடுத்த சூட்டோடு அப்படியே “இதயம் பார்க்கிறது” படத்தை ஓடவிட்டேன். இசை டி.ஆர்.பாப்பா என்று தெறித்தது எழுத்தோட்டத்தில். தன் நூறாவது படத்தில், தன் திரையுலகக் கதவைத் திறந்து விட்டவருக்கு ஜெய்சங்கர் சொல்லாமல் செய்த மரியாதையோ என்று என் சிந்தையில் எழுந்தது.

ஒரு பெருமூச்சோடு புத்தகத்தை மூடவும்

 

“இவன்

கண்தான்

சின்னது:

பார்வை

மிகப் பெரியது !”

 

என்று வாலி எழுதிய ஜெய்சங்கருக்கான நீள் கவிதை பின்னட்டையில் மின்னிக் கொண்டிருந்தது.

 

“ஹாய்” 

என்று ஜெய்சங்கர் கூப்பிடுமாற் போலொரு அசரீரி மனதில் எழுகிறது.


இன்று ஜெய்சங்கரின் 85 வது பிறந்த நாள் ❤️

 

கானா பிரபா

12.07.2023

 

திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர்(ஆசிரியர் : இனியன் கிருபாகரன்)

டிஸ்கவரி புக் பேலஸ் இல் வாங்கினேன். தவறாமல் நீங்களும் வாங்கிப் படிக்க வேண்டிய பொக்கிஷம்.

Thursday, July 6, 2023

❤️ இசையமைப்பாளர் சிவாஜிராஜா ❤️ இசையில் பாடகராக அறிமுகமான நடிகர் கார்த்திக் 🎸


எண்பதுகளில் தோன்றிய இசை நட்சத்திரம் சிவாஜி ராஜா அவர்களது பேட்டியின் இரண்டாம் பாகத்தில் அவர் தெலுங்குத் திரையுலகில் சாதித்த படைப்புகள் குறித்த விலாவாரியான பகிர்வோடு, 

நடிகர் கார்த்திக்கைப் பாடகராக அறிமுகப்படுத்திய தருணம்,

நடிகர் சுரேஷின் மனைவி மற்றும் நடிகை அனிதாவைப் பாடகியாக்கிய அறிமுகம் இவற்றோடு,

திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற ஆளுமைகளோடு பழகக் கிடைத்த வாய்ப்பு

மற்றும்,

“எனக்கு ஒரு கண் இளையராஜா இன்னொரு கண் சிவாஜிராஜா” என்று தன் குரு நாதர் ஜி.கே.வெங்கடேஷ் தன்னை இறுதியாகச் சந்தித்தத்தைத் சொல்லி நெகிழும் தருணத்தோடு பதிவாகிறது.






பேட்டியைக் கேட்க

https://www.youtube.com/watch?v=pffmr072UJE

சிவாஜிராஜா என்ற பண்பட்ட இசை ஆளுமையைச் சந்தித்ததை என் வாழ்நாள் நிறைவுகளில் ஒன்றாக நினைக்கிறேன்.

கானா பிரபா

Wednesday, July 5, 2023

எம்.எஸ்.வி இசையில் அறிமுகப் பாடகர் , இசையமைப்பாளர் சிவாஜிராஜா பேசுகிறார்

“சின்னச் சின்ன மேகம்
என்னைத் தொட்டுப் போகும்
நினைவுகள் பூவாகும்
கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்....”

எண்பதுகளின் புகழ்பூத்த “காற்றுக்கென்ன வேலி" பாடல் வழியே
இன்றும் நம் எல்லோர் மனதில் வீற்றிருக்கும் இசையமைப்பாளர் சிவாஜிராஜா அவர்களைப் பல்லாண்டுத் தேடல்களுக்குப் பின்
வானலையில் சந்தித்தேன்.






அகமகிழ்வோடு தான் திரையிசைத் துறைக்கு வந்த அனுபவத்தை
இந்தப் பேட்டியின் முதற் பாகத்தில் பகிர்ந்து கொள்கின்றார்.

கண்ணதாசன் மகனின் நட்புக் கிடைத்ததால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடகராக அறிமுகம்,

தன் குரு நாதர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவி இசையமைப்பாளராக இருந்த போது கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்த கதை,

“அன்னக்கிளி" தயாரிப்பாளர்களாலேயே இன்னொரு ராஜாவாக சிவாஜிராஜா இசையமைப்பாளர் ஆன கதை,

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் முதன் முதலில் இரட்டை வேடமேடற்ற ராமன் ஶ்ரீராமன்,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பர்கள் தயாரித்த “சித்திரமே சித்திரமே” படங்களுக்கு இசையமைத்தது உட்பட இன்னும் பல அரிய தகவல்களோடு இப்பேட்டியின் முதற் பாகத்தைப் பகிர்கிறேன்.







பேட்டியைக் கேட்க

https://www.youtube.com/watch?v=b5ET4pw4a4Y

கானா பிரபா

#SivajiRaja #MSV #MSViswanathan #GKVenkatesh

Tuesday, July 4, 2023

❤️ M.M.கீரவாணி (எ) மரகதமணி ❤️ தமிழுக்குப் பாய்ந்த தெலுங்கிசை 🎸🪗

மோகன ராகம் பாடும் 

இளங்குயில் நானெல்லோ......

குயிலு பாடும் 

பாட்டுக்குப் பல்லவி நானெல்லோ.....

https://www.youtube.com/watch?v=9fLEPI5bmT4

அக்மார்க் ஆந்திர மசாலா வீசும் பாட்டு, அந்த மெட்டின் மேல் உட்காரும் வரிகளே கொஞ்சம் அசூசையாக நகரும்.

இந்த மாதிரி மொழி மாற்றுப் பாடல்கள் தமிழில் ஏராளம் குவிந்து கிடந்தாலும் இன்றைய நாள் பிறந்த நாள் நாயகர் “ஆஸ்கார்” அள்ளிய விருதாளர் M.M.கீரவாணி என்ற மரகதமணி என்ற M.M.கரீம் என்ற இசையமைப்பாளர்களின் மொழி மாற்றுப் பாடல்களைத் தூக்கி வந்து படைக்கிறேன்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த படங்களில் விசேஷமாகக் கவனிக்கப்பட்டதொன்று "அஸ்வினி".

தடகள விளையாட்டு வீராங்கனை அஸ்வினி நாச்சப்பா நாயகியாக நடித்த அந்தப் படம் வெற்றி பெற்றது ஒரு புதிய சாதனை. ஏனெனில் விளையாட்டுத் துறையும் கலைத்துறையும் இரு வேறு கோணங்களில் இயங்குபவை.  என்னதான் விளையாட்டை மையப்படுத்திய கதையாக இருந்தாலும் இந்தப் படத்தின் வெற்றி தொடர்ச்சியாக அஸ்வினியை அதிரடி நாயகியாக்கி அழகு பார்த்தது.

தெலுங்குத் திரையுலகில் தமிழகத்தில் இருந்து படையெடுத்த மெளலி அவர்கள் இயக்கிய படமிது.  

அஸ்வினியில் தோன்றிய “மோகன ராகம்”

எம்.எம்.கீரவாணி என்ற மரகதமணி வழக்கம் போலத் தன் ஜோடிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ராவுடன் கொடுத்த இந்தப் பாட்டு வந்த காலம் தொட்டு என் உயிரோடு ஒன்று கலந்தது. 

அஸ்வினி படத்தின் தமிழ்ப் பதிப்புப் பாடல்களைக் கேட்க

https://www.youtube.com/watch?v=loaGMD8FqY0

கன்னட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மன்னன் படத்தின் நதிமூலம் கன்னட சூப்பர் ராஜ்குமாரின் "அனுராக அரலிது" அந்தப் படம் அப்படியே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் "கரண மொகுடு"  (புத்திசாலிக் கணவன்) ஆனது. தெலுங்குத் திரையுலக வெற்றிகளை முப்பது வருடத்துக்கு முன் வெறியோடு அடித்துப் புரட்டிப் போட்ட வெற்றியைக் கொடுத்தது அது. படத்தைப் பார்த்தால் தெலுங்குக்கே பண்ணியது போன்ற செம விறுவிறுப்பு.

தெலுங்கில் கீரவாணி தான் இசை, அந்தப் படத்தில் வரும் "பங்காரு கோடி பெட்டா" பாட்டு இன்று வரை பால்குடி வரை எழுந்து ஆட்டம் போட வைக்கும் கும்மாங்குத்துப் பாட்டு.

ஆனால் "தப்புப் பண்ணீட்டீங்கண்ணே தப்புப் பண்ணிட்டீங்கண்ணே" என்று கதற வைத்தார் இந்தக் கீரவாணி, இதே பாடலைத் தமிழுக்குக் கொண்டு வந்த போது.

கல் நாயக் படத்தை ரகுமான், சுகன்யா (விளங்குமா) ஜோடியோடு தமிழில் "ஹீரோ" என்று எடுக்கும் போதே அது வில்லன் ஆகிப் பழி வாங்கி விட்டது வசூலில். 

இந்தப் படத்தில் "பங்காரு கோடி பெட்டா" 

https://www.youtube.com/watch?v=hxvUiz6s4Gk 

பாட்டை 

"கண்ணாடி பார்க்க வந்தேன் உன் கண்ணிரண்டில்" 

https://www.youtube.com/watch?v=3beWhfHOQ0E  

என்று தெலுங்கில் பாடிய அதே எஸ்.பி.பி & சித்ரா ஜோடி கட்டிக் கலக்கியிருப்பார்கள்.

தெலுங்கில் வெற்றிப்படமாக அமைந்த டாக்டர் ராஜசேகரின் நடிப்பில் வந்த திரைப்படமான "அல்லாரி பிரியுடு" , தமிழில் "யாருக்கு மாப்பிள்ளை யாரோ" என்று மொழிமாற்றப்பட்டபோது அருமையான பாடல்களை இவர் தமிழில் மொழிமாற்றித் தந்திருந்தார். 

இலங்கையில் பண்பலை வானொலிகளின் ஆரம்ப காலத்தில் அவற்றுக்குத் தீனி கொடுத்த பாடல்கள் இந்தப் படத்தில் இருந்து தான். பின்னாளில் என் வானொலி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி நான் ஒலிபரப்பினேன். அந்த வகையில்

"அன்னமா உன் பேர் என்பது அன்னமா" 

https://www.youtube.com/watch?v=YNCkXQtmaNw

அட்டகாஷ் காதல் பாட்டு எஸ்.பி.பி அதைச் சந்தோஷத்திலும் சோகத்திலுமாகத் தனித்தனி வடிவத்தில் கொடுத்திருப்பார்.

"ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே" 

https://www.youtube.com/watch?v=ToFO_966wqw

தமிழிலும் தெலுங்கிலும் காதலர்கள் நெஞ்சில் ஹிட் அடிச்ச எஸ்.பி.பி & சித்ரா ஜோடிப் பாட்டு.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "அன்னமா! உன் பேர் என்பது அன்னமா?" மரகதமணி/M.M. கீரவாணி இசையமைத்த பாடல்களிலேயே எனக்குப் பிடித்தமான பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது இதுவே.

ஶ்ரீதேவியை மீள அடையாளப்படுத்த, அர்விந்த்சாமியுடன் அவர் நடிக்க மலையாளத்தின் மகோன்னத இயக்குநர் பரதன் இயக்கிய படம் “தேவ ராகம்”. அங்கேயும் இணை பிரியாக் கூட்டாக எஸ்பிபி & சித்ரா “ய ய யா யாதவா உன்னை அறிவேன்” பாடினார்கள்.

ஒரு மாறுதலுக்காக சுஜாதாவோடு எஸ்பிபி பாடிய “சின்னச் சின்ன மேகம்” பாடலும் அங்கே சேர்ந்து கொண்டது.

இங்கே ஶ்ரீதேவியைப் பற்றிய பேச்சு வரும் போது, அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாட்டு என்ற புகழைத் தெலுங்கு தேசத்தவர் கொண்டாடிக் கொண்டிருக்கும் பாட்டு “கோ அந்தே கோடி” https://www.youtube.com/watch?v=ZnfkBgf5Ye0 

ஷண ஷணம் என்ற படத்தில் எம்.எம்.கீரவாணி இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு இந்தப் பாடலை ஶ்ரீதேவி பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீரவாணியை ஒரு மிகப் பெரிய இசையமைப்பாளராக உயர்த்தியது இந்தப் படத்தை இயக்கியவர் ஶ்ரீதேவி வெறியர் ராம் கோபால் வர்மா. இந்தப் படத்தில் ஒரு பாட்டு மனோவுக்குச் சேர மீதி எஸ்பிபிக்காக. 

ஸாமு ராத்திரி 

https://www.youtube.com/watch?v=4n9MM7ooKSs

பாடல் தெலுங்கு தேசத்தவரின் மறக்க முடியாத மெல்லிசையாக இன்று வரை விளங்க, கீரவாணிக்கும் அப்போது பிலிம்பேர் சிறந்த இசையமைப்பாளர் விருது கொடுத்துக் கெளரவித்தது.

“என்னமோ நடக்குது” என்று தமிழில் மொழி மாற்றம் கண்டு இவ்வகை அரிய பாடல்களை ரசிக்கும் இசை ரசிகர்களுக்குத் தீனி போட்டது.

என்னமோ நடக்குது பாடல்களைக் கேட்க

https://www.youtube.com/watch?v=dRT4kOfPnjk

இப்படியாகத் தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களோடு கீரவாணி போட்ட கூட்டில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் காந்தமாக ஒட்டிக் கொண்டு தொடர்ந்தார்.

தெலுங்கு நடிகர் ஶ்ரீகாந்தின் “பெல்லி சந்தடி” என்ற வெற்றிப் படம் கூடவே கீரவாணிக்கு பிலிம்பேர் விருதையும் சிறந்த இசையமைப்பாளர் என்ற பிரிவில் கொடுத்து அழகு பார்க்க, இந்தப் படம் தமிழில் நினைத்தேன் வந்தாய் ஆக விஜய் நடிப்பில் உருவான போது “பொட்டு வைத்துப் பூமுடிக்கும் நிலா” பாடலின் மூலப் பாட்டு கிலா கிலா கிலா https://www.youtube.com/watch?v=sI6_5ie7jwU மற்றும் “ஹிருதயமனே” https://www.youtube.com/watch?v=n3XrtX7ZETc உனை நினைத்து நான் எனை மறப்பது பாடலும் அப்படியே தமிழாகிய போது எஸ்.பி.பாலசுப்ரமணியமும், சித்ராவும் கூட அப்படியே வந்தனர்.

பெல்லி சந்தடி படத்தின் பெரு வெற்றிக்குத் துணை போன பாடல்களில் முக்கியமானவற்றை அப்படியே அல்லது சிறிய மாற்றம் செய்து தமிழில் தேவாவை வைத்துக் கொடுத்தற்குப் பதில் மூல இசையமைப்பாளர் கீரவாணியையே இங்கும் இசைக்கப் பணித்திருந்தால் விஜய் இன் திரைப் பயணத்தில் வெற்றிக் கூட்டணிகளில் ஒருவர் என்று அடையாளப்பட்டிருப்பார். 

பெல்லி சந்தடி பாடல்கள்

https://www.youtube.com/watch?v=yTDiiTPYoTI

ஶ்ரீகாந்த் வரிசையில் ஜெகபதிபாபுவுக்கும் அடையாளம் சேர்த்த “அல்லாரி பிரேமிகுடு” (தமிழில் போக்கிரிக் காதலன்) படத்திலும் கீரவாணி & எஸ்பிபி இசை மழை தான். இதில் இடம் ஆறு பாட்டும் எஸ்பிபி & சித்ரா ஜோடிக் குரல்கள்.

கே.வி.மகாதேவன், இளையராஜா போன்ற மகோன்னதம் கொண்ட இசையமைப்பாளர்களோடு இணைந்த கே.விஸ்வநாத் அவர்களது பயணத்தில் கீரவாணியும் சேர்ந்து கொள்கிறார். மீண்டும் கமல்ஹாசனோடு சேரும் விஸ்வநாத் கூட்டணியில் ஏழு பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களே பாடுகிறார். கூடவே இந்தப் படத்தின் தயாரிப்பாளராகவும் அவரே விளங்கினார் என்பது மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது. தன் சகோதரி எஸ்.பி.சைலஜா, மகள் பல்லவி ஆகியோரோடும் கூடச் சேர்ந்து பாடிய இசை வேள்வியாக “சுப சங்கல்பம்” அமைகின்றது. 

“நருடி ப்ரதுக்கு நடனா” https://www.youtube.com/watch?v=cRSxytPyi-w பாடல் 

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா என்ற சாகர சங்கமம் (சலங்கை ஒலி) பாடலின் அடியொற்றி அமைய,

“சீதம்மா அந்தாலு” பாடல் ஆகப் பெரிய ரசிக அங்கீகாரத்தைக் கொடுக்கின்றது.

தமிழில் இதை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கமல்ஹாசனே “பாசவலை” என்ற பெயரிலும் வெளியிடுகின்றார். சிறந்த பாடகிக்கான நந்தி விருதை சைலஜாவுக்குக் கொடுத்ததோடு, பிலிம்பேரின் சிறந்த இயக்குநர் கே.விஸ்வநாத், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இவர்களோடு எம்.எம்.கீரவாணி சிறந்த இசையமைப்பாளர் விருதையும் அள்ளுகின்றார். 

சுப சங்கல்பம் பாடல்கள்

https://www.youtube.com/watch?v=rSBL-n_1jW0

இன்னும் சில மொழி தாவியவை

அர்விந்த்சாமி & நக்மா நடிப்பில்  “மெளன யுத்தம்” 

https://www.youtube.com/watch?v=ZlJvxI102-k

நாகார்ஜூவையும் விட்டு வைக்கவில்லை எம்.எம்.கீரவாணி அலை.

கிரிமினல் என்ற பெயரில் தெலுங்கு, ஹிந்தியில் சம காலத்தில் பிரபல பாலிவூட் இயக்குநர் மகேஷ் பட் இயக்கிய திரைப்படத்தில் எஸ்பிபி & சித்ரா பாடும் “தெலுசா மனசா” https://www.youtube.com/watch?v=_8gBbOdQ2Jw பாடல் இன்றைய இசை மேடைகள் வரை பின்னணி இசை நாதமாய் விளங்குகின்றது.

இந்தப் படம் பின்னர் தமிழுக்கும் “எல்லாமே என் காதலி” ஆகியது.

“உயிரே உயிரே” பாடலெல்லாம் மறக்க முடியுமா?

இதோ அனைத்துப் பாடல்களையும் கேட்க

https://www.youtube.com/watch?v=J-O-OoPKYQo

தமிழில் இசைஞானி இளையராஜாவுக்குப் பின் தொண்ணூறுகளில் எழுந்த அடுத்த கட்ட இசையமைப்பாளர்கள் போன்றே தெலுங்குச் சூழலிலும் புதிய புதிய இசையமைப்பாளர்கள் உருவெடுத்தனர். இவர்களில் தமிழில் மரகதமணி ஆகவும், தெலுங்கில் எம்.எம்.கீரவாணியாகவும் சம காலத்தில் இசை ரசிகர்களை ஆட்கொண்ட இவரது இசைப் பயணத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் எவ்வளவு தூரம் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்து காணப்படுகின்றார் என்பதும், கீரவாணி எஸ்பிபிக்கான பொன் விழா ஆண்டுப் புகழ்ப் பாடலை எழுதிப் பாடிய பான்மையில் தெரிந்து கொள்ளலாம்.

கானா பிரபா

#MMKeeravani #Maragathamani