“காற்றும் இவனுக்குக் கட்டுப்படும்
இவன் செப்படி வித்தைக்காரன்
தரை வேண்டாம் என்றான்
தலை கீழாய் நின்றான்”
வாணியம்மா தொடங்க,
“தொண்டு கிழங்களும்
கண்டு பயப்படும் காரியம் கற்று வைத்தான் கடல் பாலாய் மாறும்”
என்றொரு பிஞ்சுக் குரல் பின்னால் வரும். யாரடா இது என்று அறியாப் பருவத்தில் அதிசயித்ததுண்டு. அந்தக் காலத்தில் உள்ளூர் தொலைக்காட்சி ஒலிபரப்பில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலாக வந்து போன அந்தப் பாட்டு
“செல்லக் குழந்தைகளே
சிந்தும் வசந்தங்களே”
https://youtu.be/4DLmmQ7Fr8Q
அப்படி அதிசயத்த அந்தக் குரல் சுஜாதாவுடையது.
எழுபதுகளில் இளையராஜாவிடமும்,
தொண்ணூறுகளில் ரஹ்மானிடமுமாக
தமிழில் இரு பிறவி எடுத்த குரல்.
பாடகி சித்ரா போலவே சுஜாதாவின் அந்தப் பிஞ்சுக் குரல் மீது அளவற்ற் பிரியம் எனக்கு.
இன்றைக்கு சூப்பர் சிங்கரில் வாண்டுகள் எல்லாம் இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் பாடும் போது உள்ளூர ஒரு உவகை எழுமல்லவா? ஆனால் தனது 14 வயதிலேயே “காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ” என்று ராஜா இசையில் கவிக்குயில் படத்துக்காகப் பாடிவிட்டார் சுஜாதா.
மலையாளத்தில் பாட வந்த போது அவருக்கு வெறும் 12 வயதே தான்.
தமிழ் சினிமாவில் பெண் குரல்களில் தனித்துவமாக மிளிரும் குரல் சுஜாதாவினுடையது.
அப்படியே மை டியர் குட்டிச்சாத்தானை மலையாளத்திலும் கேட்டு விட்டு வாருங்கள். அங்கே ஜானகி என்ற ராட்சசியும், எஸ்.பி.சைலஜாவுமாக
ஆலிப் பழம் பெருக்கான்
https://youtu.be/wOraNbudSPY
எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களைப் படமாக்கும் சீசனாக எழுபதுகளின் இறுதிப்பகுதி இருந்தது. அதில் முதல் முயற்சியாக அமைந்தது "காயத்ரி" என்ற திரைப்படம். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வில்லனாகவும், எதிர் மறை நாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்திய படங்களில் காயத்ரியும் ஒன்று.
1977 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தில் வந்த ஒரு இனிய பாடல் "காலைப்பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள்" அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமான மசாலாத் திரைக்கதைகளை மட்டுமல்ல, இனிய பாடல்கள் பலவற்றுக்கும் திரையிசைக்கவிஞராக இருந்து சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம். கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அனுபவம் இந்தத் திரையிசைக் கவிதைக்கு உதவி புரிந்திருக்கின்றது.
அந்தவகையில் அமைந்தது தான் "காலைப்பனியில் ஆடும் மலர்கள்"
https://youtu.be/NPSqeBLBt4E
என்ற இந்தப் பாடல். மணமாகிப் புகுந்த வீடு போன அந்தப் பெண் அந்த மலர்ச்சியில் பாடும் சூழ்நிலைக்குப் பொருந்தும் வரிகளுக்குத் துணையாக மெல்லிசையாக இழைத்திருக்கின்றார் ராஜா. ஒரு காலைச் சூழ்நிலைக்குப் பொருந்தும் இதமான இசையாக கையாண்டிருக்கும் கருவிகளும் துணை போயிருக்கின்றன. ஆரம்பத்தில் மெல்லிய ஹம் கொடுத்து ஆரம்பிக்கும் சுஜாதாவின் குரல் கூட கள்ளங்கபடமில்லாத் தொனியோடு இருக்கின்றது. பாடலின் இடையிலும் லலலலா, இம்ஹிம் இம்ஹிம் என்று சங்கதிகளைக் குரலிசையாக ஹம் ஐ லாவகமாகச் செருகியிருப்பது சிறப்பு. ஒரு திகில்ப்படத்துக்கு இப்படியான பாடலை லாவகமாகப் பொருத்தமான இடத்தில் சேர்ப்பது ஒரு சவால். அதில் வெற்றி கண்டிருக்கின்றார்கள் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம், பாடகி சுஜாதா கூடவே இசைஞானி இளையராஜா
ஒரே ஆண்டில் ராஜா இசையில் இரண்டு ஹிட் பாடல்களைக் கொடுத்து விட்டு இடையில் காணாமல் போய் பின்னர் ஒரு தசாப்தம் கழித்து (இடையில் தமிழில் ஒரு சில வாய்ப்புக்கள் கிட்டினாலும் பிரபலமாகவில்லை) இன்னொரு புதிய பாணி இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான் இசையில் தமிழில் மறு அறிமுகமாகும் வாய்ப்பு அல்லது பெருமை சுஜாதாவைச் சேரும். பாடகி சுஜாதா 1977 இல் இளையராஜா இசையில் முன்னர் பார்த்த காயத்ரி பாடத்தில் பாடுவதற்கு முன்னதாக அவருக்கு வாய்த்தது "கவிக்குயில்" வாய்ப்பு. பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.ஜானகி போன்ற ஜாம்பவான்களோடு சுஜாதாவின் குரலைத் தனித்துவமாக்கியது "காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ" இங்கேயும் பஞ்சு அருணாசலம் தான் துணை போயிருக்கின்றார். பதின்மவயதுப் பாடகியாக ஜேசுதாசின் வழிகாட்டலில் இளையராஜாவிடம் அறிமுகம் கிட்டிய சுஜாதா பாடிய "காதல் ஓவியம் கண்டேன்" பாடல் ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலியில் மகா மெகா ஹிட் பாடலாகப் பலகாலம் ஒலித்தது இன்னும் ஓயவில்லை. அந்தப் பெருமையில் 1980 ஆம் ஆண்டு கே.ஜே.ஜேசுதாஸ் யாழ்ப்பாணம் வந்தபோது வீரசிங்கம் மண்டபத்தில் இரட்டைச் சடை போட்ட சுஜாதா என்ற இந்தச் சிறுமியும் கூடவே வந்து பாடிய இந்தப் பாடலின் அந்தப் பசுமை நினைவுகளை இன்றும் அந்த வீடியோ கசட்டில் போட்டு இரை மீட்கின்றேன்.
"காதல் ஓவியம் கண்டேன் கனவோ"
https://youtu.be/8jsH1QKn-Ao
45 வருஷங்கள் கழிந்த நிலையில் இன்றைய இளம் நாயகிக்குக் கூடப் பொருந்திப் பார்க்கக் கூடிய அதே புத்துணர்வைத் தன் இசையாலும் குரலினிமையாலும் நிரப்பிய பாடல். இந்தப் பாடலிலும் சுஜாதாவுக்குச் சுதந்திரமான துள்ளல்களை வெகு இலாவகமாக்கி அடக்கி விட்டிருக்கின்றது.
மேற்குறித்த இரண்டு பாடல்களுமே சுஜாதா ஒரே ஆண்டில் பாடிய வண்ணம் "கா" என்ற அடியில் வருவது இன்னொரு சிறப்பு.
சில பாடல்கள் பெண்களுக்கே உரித்தான, பெண்ணின் உணர்வுகளின் அடி நாதமாக விளங்கினாலும் அந்தப் பாடல்களை பொதுவானதொரு உணர்ச்சிப் பிரவாகமாக எல்லோராலும் ரசிக்கத்தக்கதாக மாறிக் கேட்டு ரசிக்க வைக்கும், எவ்வளவு தரம் கேட்டாலும் அவை திகட்டாது என்பதற்கு இந்த இரண்டு பாடல்களுமே சாட்சி.
ஜானி படத்தின் “ஒரு இனிய மனது” https://youtu.be/26nyoGoIxFs கூட சுஜாதாவின் கணக்கில் சேர்க்க வேண்டிய அற்புதம். எல்பியில் ஜென்சி ஆக்கி இருப்பார்கள்.
“நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு.....”
https://youtu.be/S1ScCPcqhzU
இந்தப் பாடலை இதுவரை கேட்காதவர்களோ அல்லது காலம் கடந்து மீண்டும் ஒருமுறை கேட்பவர்களோ ஆத்மார்த்தமாக உங்கள் காதுகளைக் கொடுத்துப் பாருங்கள் பிறகு தெரியும் சங்கதி. நாள் முழுக்க பல்லவியை முணுமுணுத்துக் கொண்டிருப்பீர்கள் அப்படியொரு அந்நியோன்யத்தை ஏற்பட்டுத்தும் பாட்டு இது.
அந்தக் காலத்தில் தானே இயக்காமல் கதை, வசனம் என்று பாக்யராஜ் பங்களித்த படங்களில் ஒன்று இந்தப் பாட்டு இடம்பெற்ற “இளமை கோலம்”. இந்தப் பாடத்தில் “வச்ச பார்வை தீராதடி”, “ஶ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா” போன்ற தேனான பாட்டுகளும் உண்டு. பாடல்களை கவிஞர் கண்ணதாசனும், கங்கை அமரனும் எழுதியிருக்கிறார்கள். “நீ இல்லாத போது” பாடலை கங்கை அமரன் யாத்திருக்கிறார்.
“புது வெள்ளை மழை” பாடலோடு தன்னோடு இரண்டாவது சுற்றை ஆரம்பித்த பாடகி சுஜாதாவின் முதல் சுற்றில் இளையராஜா இசையில் பாடியளித்த பொக்கிஷப் பாடல்களில் ஒன்று தான் இந்த “நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்” பாட்டு. எழுபதுகளின் இறுதியில் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஜென்ஸி, சொர்ணலதா (இன்னொருவர்), பூரணி, இந்திரா என்று கட்டுக்கடாத அறிமுகப் பாடகிகள் போன்று சுஜாதாவுக்கும் பல நல்ல பாடல்கள் கிட்டின. “நீ இல்லாத போது” பாடலைக் கேட்கும் போது ஒரு அனுபவப்பட்ட பாடகி போல இணைந்து பாடும் மலேசியா வாசுதேவனுக்கு ஈடு கொடுத்துப் பாடியிருக்கிறார். இதைப் பாடிய போது அவருக்கு வயது பதினேழு.
மலேசியா வாசுதேவன் அவர்களைப் பற்றி என்ன சொல்ல... இந்த மாதிரியான பாடலைக் கேட்கும் போதே “அலங்காரப் பொன்னூஞ்சலே” (சொன்னது நீ தானா), “நீங்காத எண்ணம் ஒன்று” (விடியும் வரை காத்திரு), “காலங்கள் மழைக்காலங்கள்” (இதயத்தில் ஒரு இடம்) என்று வரிசை கட்டி வந்து விடும் இவர் நினைப்போடு.
இந்த மாதிரி சாந்தமான பாவத்தோடு பாடும் பாடல்களில் வெகு அடக்கமாக, உணர்ச்சிப் பெருக்கோடு மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடுவதைக் கேட்பவர்களும் உணரக் கூடிய அளவுக்குக் கரைந்து பாடுவார்.
“எது வரையில் சுகமென அதை நான் காண்பேன்” என்று பயணிக்கும் இடங்களில் எல்லாம் மலேசியா முத்திரை இருக்கும்.
“நீ.....இல்லாத போது....ஏங்கும் நெஞ்சம்....” இப்படியானதொரு நீட்சியானதொரு சங்கதியைப் போட்டு பல்லவியிலேயே கேட்போரைக் கட்டிப் போடும் வித்தைக்கார ராஜாவின் இசையில் தவிர்க்கக் கூடாத பாட்டு இது.
இங்கு நாம் பாடுவோம்
புது கீதாஞ்சாலி
அலை நான்கு விளையாடும்
கவி பாடி
https://youtu.be/4DLmmQ7Fr8Q
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாடகி சுஜாதாவுக்கு
கானா பிரபா