Pages

Friday, March 3, 2023

ஜெயச்சந்திரன் 79 ❤️ மனதோடு இசை பாடி

 


தமிழ் மொழியை நேசிக்கின்ற மலையாள தேசத்துப் பாடகர், ஜெயசந்திரன், தமிழ் சினிமாவின் தனி அத்தியாயம். இசைஞானி இளையராஜா காலத்து ஜெயச்சந்திரன் அளவுக்கு அல்லது அதற்கும் மேலாக மற்றைய இசையமைப்பாளர்கள் அவருக்குக் கொடுத்த சாகித்தியங்களை உச்சி மேந்து கெளரவிப்பது தகும். அப்படியாகப்ப்பட்டவை ஒரு சிலவற்றோடு ஒரு கூட்டு.

தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த
சேதி என்னவோ.....❤️

மெல்லிசை மன்னரின் எண்பதுகளும் இன்னும் அதிகமாகக் கொண்டாடப்பட வேண்டியவை. அதுவும் அந்த ஆர்மோனியக்காரின் காதல் கதைக்குப் பொருத்தமான பண் அமைத்துப் பாடல்களில் கூட அந்த நிறத்தைக் கலவையாக்கிக் கொடுத்த அழகுணர்ச்சியைச் சிலாகித்துக் கொண்டே அந்த ஏழு நாட்கள் பாடல்களைக் கேட்க வேண்டும்.

பாலக்காட்டு மாதவன் என்ற பாக்யராஜ் மெட்டமைக்கும் தோற்றப்பாட்டிலேயே மெல்லிசை மன்னரை ஞாபகப்படுத்துவார்.
“கவிதை அரங்கேறும் நேரம் மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்” பாடலிலும் சரி,
“தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ” பாடலும் கூட ஆரம்பத்தில் கொடுக்கும் ஸ்வர ஆலாபனையில் அந்த இசையமைப்பாளனின் காதல் ஒட்டியிருக்கும்.
“ஸ்வர ராக” பாடலில் மலையாளமும், தமிழும் காதல் கொள்ளும் பாட்டு,இதுவும் தென்றலது பாடலும் கண்ணதாசன் கை வண்ணம். அது போல் குருவிக்கரம்பை சண்முகம் “கவிதை அரங்கேறும் நேரம் பாடலை எழுதியிருக்கிறார்.
“எண்ணி இருந்தது ஈடேற” பாடல் வைரமுத்துவை வைத்துப் படத்தின் வணிக சமரங்களுக்காகக் கொடுத்த குத்து வகையறாவோ என்று எண்ணிக் கொண்டே ரசித்தாலும் அதிலும் தன் முத்திரையைக் காட்டியிருப்பார் எம்.எஸ்.வி.
எண்பதுகளில் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனைக் கொண்டாட ஒரு சங்கராபரணத்தையும், இசைஞானி இளையராஜாவுக்கு சிந்து பைரவியுமாக அமைய,
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அந்த 7 நாட்கள் ஐ எழுதி வைக்கலாம் போல. அதுவும் ஜெயச்சந்திரனுக்கு வைதேகி காத்திருந்தாளுக்கு முன் வந்த ஒரு பொக்கிஷம் இது.
பின் வரும் வரிகளில் தபேலாவை வழித்து தாள லயம் கொண்டும் மெல்லிசை மன்னரின் முத்திரை இசை.

உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை
இன்று தங்கரதம் ஏறியது
உன்னைப் பார்த்து சொல்லும் வார்த்தை
இன்று கங்கையென மாறியது

https://www.youtube.com/watch?v=Yq5gHvy4aqU

ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்
கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள் 💕

இப்போதெல்லாம் சூப்பர் சிங்கர் மேடைக்கென்றே எழுதி வைத்த பாடல்கள் என்ற பட்டியலில் தவிர்க்க முடியாதது “நந்தா என் நிலா நிலா நிலா” என்ற பாடல். அதுவும் எஸ்.பி.பிக்கு முன்னால் பாட வேண்டிய சூழல் வரும் போது போட்டியாளர் தன்னிடமிருந்து அத்தனை திறமைகளையும் கொட்டித் தீர்க்க முற்படுவார். ஆனால் இந்தப் பாடல் இடம் பெற்ற “நந்தா என் நிலா” திரைப்படத்தில் இன்னொரு அரிய முத்து “ஒரு காதல் சாம்ராஜ்ஜியம் கண்ணில் வரைந்தாள்” பாடல் இருப்பதை ஏனோ இசை மேடைகள் மறந்து விட்டன.
“நந்தா என் நிலா” படத்தின் மூலக்கதை புஷ்பா தங்கதுரை, தினமணி கதிரில் தொடராக வெளிவந்து பின் ஏ.ஜெகன்னாதன் இயக்கத்தின் படமான போதும் புஷ்பா தங்கதுரையே கதை, வசனத்தைக் கையாண்டிருக்கிறார். விஜயகுமார், படாபட் ஜெயலட்சுமி, சுமித்ரா நடித்தது.
தொண்ணூறுகளின் இறுதியில் பிரபலமாக இருந்த சன் டிவி "சப்தஸ்வரங்கள்" பாடற் போட்டி நிகழ்ச்சியின் வழியாகத் தான் V.தட்சணாமூர்த்தி என்ற இசையமைப்பாளரை அறிந்து கொண்டேன். அதற்கு முன்னர் அவரின் இசையில் வெளிவந்த ஓரிரு தமிழ்ப்படங்களில் குறிப்பாக "நந்தா என் நிலா" என்ற பாடலை இலங்கை வானொலி மூச்சு விடாமல் முன்னூறு தடவைக்கு மேல் அலுக்க அலுக்கப் போட்ட போதெல்லாம் கூட இந்த இசையமைப்பாளர் குறித்த தேடல் இருந்திருக்கவில்லை. எழுபதுகளின் இறுதியிலே வி.குமார், விஜயபாஸ்கர், ஷியாம் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் வந்த பல நல்ல பாடல்களை சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்தவையாக இருக்கும் என்று அதிகம் மெனக்கடவில்லை. அந்த வகையில் வி.தட்சணாமூர்த்தி அவர்களை சுவாமிகள் என்று விளித்து அவரின் பெருமைகளை சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரமணன் சிலாகித்தபோதுதான் அவர் மேல் வெளிச்சம் பட்டது எனக்கு. தமிழ்த்திரையுலகில் இரண்டு தட்சணாமூர்த்திகள் இருந்திருக்கிறார்கள், ஒருவர் எஸ்.தட்சணாமூர்த்தி இவர் அலிபாபாவும் 40 திருடர்களும்" போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர், பின்னவர் தான் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள். கொஞ்சக்காலம் எல்லாவற்றையும் உதறவிட்டு காசிக்குப் போய் சாமியாராக இருந்ததாக செய்திகளின் வாயிலாக அறிந்தேன்.
"நந்தா என் நிலா" படத்தில் வந்த பாடலான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய "நந்தா என் நிலா பாடலை விடவும் என்னை அதிகம் கவர்ந்ததென்னவோ ஜெயச்சந்திரன், டி.கே. கலா பாடியிருந்த "ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தேன்" என்ற பாடல் தான். அன்றைய சனிக்கிழமை இரவுப்பொழுதில் அதிகாலை ஒரு மணியைத் தொடும் போது வானொலி நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் என் தனிமையை விரட்டிப் பல தடவை சொந்தம் கொண்டாடிய பாடல் அது.

இசையமைப்பாளர் V.தட்சணாமூர்த்தி இசையில் நந்தா என் நிலா திரைப்படம் உருவான போது “ஒரு காதல் சாம்ராஜ்ஜியம் கண்ணில் வரைந்தாள்” என்ற ஜோடிப் பாடலை ஜெயச்சந்திரனும், T.K.கலாவும் பாடியிருக்கிறார்கள்.

“போய் வா நதியலையே”, “தாயிற் சிறந்த கோயிலுமில்லை” ஆகிய புகழ் பூத்த பாடல்களோடு “குளிச்சா குத்தாலம்”, “செங்காத்தே” ஆகியவற்றை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியவர் T.K.கலா.

ஜெயச்சந்திரனைப் பொறுத்தவரை அவரின் ஆரம்ப காலத்தில் அரவணைத்து வளர்த்த மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் போன்றே அப்போது மலையாளத்தின் உச்ச இசையமைப்பாளராக விளங்கிய V.தட்சணாமூர்த்தி அவர்களின் பார்வை பட்டு மலையாளத்தில் மட்டுமன்றித் தமிழிலும் “நந்தா என் நிலா” வழியாகப் பாடும் பேறு கிட்டியிருக்கிறது.

“ஒரு காதல் சாம்ராஜ்ஜியம் கண்ணில் வரைந்தாள்” பாடலின் வரிகளை விடுத்து அந்தப் பாடல் கொண்டிருக்கும் சந்தத்தை மட்டும் ஒரு முறை மனதில் மீட்டில் பாருங்கள். ஒரு வீச்சுக்குள் (range) நின்று மேலும் கீழுமாக ஜாலம் புரியும் அற்புதமான சாகித்தியம் அது. ஆண், பெண் பாடகருக்கான சங்கதியும் ஒரே மாதிரி இருக்கும். அது போலவே தேர்ந்தெடுத்த இந்தப் பாடகர்களும் கொஞ்சமும் தடம் மாறாமல் அதே போலக் கொடுத்திருப்பார்கள். ஆனால் T.K.கலா தன் முத்திரை உச்ச ஸ்தாயி வரை போய் வர, ஜெயச்சந்திரனோ அதிக கஷ்டப்படாமல் தன் எல்லையில் நின்று அடித்து ஆடுவார்.

பகலான இரவோடு
அழகான மலரோடு
மனதோடு இசை பாடி
விதியோடு ஆடு......
ஒரு காதல் சாம்ராஜ்யம்
கண்ணில் வரைந்தாள்

https://www.youtube.com/watch?v=LDC8eQyP_wU

சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல்
ராஜாங்கமே என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே .. பேரின்பமே ❤️
ஜெயச்சந்திரனும் சரி சுசீலாவும் சரி அதிக நெகிழ்வுத் தன்மையோடு சாஸ்திரிய சங்கீதம் இல்லாது ஒரு இறுகிய குரலோடு பாடலைக் கையாண்டிருப்பார்கள். உதாரணத்துக்கு பாடலின் ஆரம்ப வரிகளான “சங்கீதமே என் தெய்வீகமே” ஐ ஒருமுறை இரை மீட்டிப் பாருங்கள். இதை இன்னும் நெகிழ்வுத் தன்மையோடும் பாடிக் காட்ட முடியும். ஆனால் முழுப் பாடலிலும் இசை ஆவர்த்தனங்களின் கோட்பாட்டோடு பயணிக்கும் பாங்கில் இந்தக் குரல்களும் இருக்கும். பாடலில் கோவையாக்கிய இசையில் நவ நாகரிகம் நேர்த்தியோடு மிளிரும். இந்தப் பாடலையெல்லாம் இசை மேடைகளில் பாடினால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்?
“காஷ்மீர் காதலி” பாடல்கள் ஜி.கே.வெங்கடேஷ் அவர்கள் தமிழி மீண்டும் விஸ்வரூபம் எடுத்துக் காட்டியது. அதில் இந்த “சங்கீதமே என் தெய்வீகமே” பாடல் ஜெயச்சந்திரனின் இசை வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு மைல்கல்.

சங்கீதமே....என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
என் ராஜாங்கமே.....
வானோரும் காணாத பேரின்பமே....
பேரின்பமே.....

https://youtu.be/iyln-hCzD2Y

முத்து ரதமோ முல்லைச் சாரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு.....❤💚

இந்த அழகான பாடலோடு இன்றைய மாலையில் மூழ்கியிருக்கிறேன். ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாட்டு ஜோடிக்கான இன்னொரு பொக்கிஷப் பாட்டு இது.
சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இசையில் "பொன்னகரம்" படத்தில் கவிஞர் சுல்த்தான் என்பவரின் வரிகளில் வந்த இந்தப் பாடலின் இசை இனிமை, வரிகளின் இனிமை இரண்டையும் சிலாகித்துக் கொண்டே இந்தப் பாட்டு ஜோடி பாடுவதில் கிறங்கி விடலாம்.
அந்தக் கிராமத்தில் ஒருகாலத்தில் அட்டூழியம் செய்த பண்ணையாரின் பிள்ளைகள் சரத்பாபு மற்றும் அவரது தங்கையும் வருகிறார்கள். ஆனால் அந்தப் பண்ணையாரின் பேரில் கடும் வெறுப்பில் இருக்கும் மக்களின் அபிமானத்தை அவர்கள் வென்றார்களா என்பதே இந்தப் படத்தின் கதை. இயக்குநர் மாதங்கன் இயக்கிய “பொன்னகரம்” படத்தில் இன்னொரு புகழ் பூத்த பாடலான “வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாரமடி” பாடலை கடந்த வாரம் பாடலாசிரியர் காமகோடியன் மறைந்த போது கொடுத்திருந்தேன்.
“முள்ளும் மலரும்” புகழ் சரத்பாபு & ஷோபா காதல் ஜோடிக்குத் தான் இந்த “முத்து ரதமோ” பாடல்.

பாடலைக் கேட்கும் போது அந்தக் கால இலங்கை வானொலி நினைவுகள் தட்டியெழுப்பும்.

“உனது பார்வை எனது பாடல்
தினமும் நான் பாட
நினைவில் கனவில் சுகமோ
உலக நிலையை மறந்து கொஞ்சம்
விண்ணில் நான் ஆட
அமுதக் கனிகள் தருமோ”

சரணத்தில் என்னவொரு அற்புதமான ஆவர்த்தனம் ஆகா

https://www.youtube.com/watch?v=rYxyKoVM5h0

தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது ❤💚

ஒரு நல்ல பாடலாசிரியர் மட்டுமல்ல, சந்தம் தரும் இன்னிசை பிறப்பிக்கும் நல்லதொரு இசையமைப்பாளர் என்றும் நிரூபித்த கங்கை அமரன் அவர்களின் இசை வண்ணத்தில் பிறந்த இப்பாடல் “கனவுகள் கற்பனைகள்” படத்துக்காக உருவானது. பாடலின் ஆரம்ப அடிகளைப் படித்தவுடனேயே இலங்கை வானொலிக்காலத்துக்கு அழைத்துப் போய் விடுமே.
தானே ஒரு நல்ல பாடலாசிரியராக இருந்தும், இங்கே துள்ளிக் குதிக்கும் வரிகளை வாங்கியிருக்கிறார் பாவண்ணனிடமிருந்து கங்கை அமரன்.

“கலை அன்னம் பல வண்ணம் கொண்டது
மண்ணும் புது பொன்னில் நின்றது
இன்னும் எனை பின்னிக் கொண்டது
கன்னி பெண்ணே..
இரு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
சின்ன பெண்ணே”

சாதாரணமாகப் படித்தாலேயே லகர, ழகரக் குழப்பம் எழும் வரிகளை அனாயாசமாகக் கையாண்டு ஒரு விருந்து படைத்திருப்பார் ஜெயச்சந்திரன். தன் தாய்மொழியை மட்டுமல்ல தான் வரித்த கலைமொழியிலும் மொழிச்சுத்தம் பேணும் நற்பண்பாளர் இவர்.

எண்ணங்களே தேன் அள்ளுங்களேன்
பொன் வண்டாகி நாதம்
கொஞ்சம் சொல்லுங்களேன்

https://www.youtube.com/watch?v=OxfIx-zkfFk

“ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடையானவள்
நனைகின்றதே கண்களே... ❤💚”

ஜெயசந்திரன் & வாணி ஜெயராம் ஜோடி என்பது ஒவ்வொரு இசையமைப்பாளர் இசையிலும் மிளிர்ந்த சோடை போகாத அற்புதக் கூட்டணி. இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் ஜெயச்சந்திரன் தனி அத்தியாயம் என்றால், ஜெயேட்டன் & வாணிம்மா கூட்டணியின் “இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே” முத்தாய்ப்பாக வந்து நிற்கும்.
இந்தப் பதிவையும் அப்படியே கொடுக்கவிருந்தேன்.

ஆனாலும் பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களில் ஜெயச்சந்திரன் என்று மாற்றிக் கொண்டாலும் இங்கேயும் வந்து சேர்ந்து கொண்டார்கள். சந்திரபோஸ் இசையில், மு.மேத்தா வரிகளில் “கை நாட்டு” படத்தில் இடம்பிடித்த இந்தப் பாடலை ஜெயச்சந்திரனுக்கான நினைவுபடுத்திய போது கேட்கவும் நெகிழ்வாக இருந்தது.

https://www.youtube.com/watch?v=q49uORh5fzE

“சின்ன பூவே மெல்லப் பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
வண்ணப் பூ விழி பார்த்ததும்
பூவினம் நாணுது ❤💚”

இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இன்னிசைத் திறவுகோலாய் அமைந்த படத்தின் முகப்பு வரிகளோடமைந்த பாடலில் இணைந்த ஜெயச்சந்திரன் அவர்கள், பாடல் ஒலிப்பதிவில் தாமதம் எழுந்த போது கொஞ்சம் சங்கோஜப்பட்டாராம், ஆனால் அந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் திரட்டியிருந்த வாத்தியக் கூட்டணியைப் பார்த்து மிரண்டு விட்டாராம், ஒரு புத்தம் புது இசையமைப்பாளரின் முதல் படத்துக்கு ராஜ பேரிகையாக அமைந்த இசை வெள்ளத்தில் மிதந்து பாடிய ஜெயச்சந்திரனின் பாராட்டும் கூடவே கிடைத்ததாம்.

இந்தப் பாடலை இப்போது கேட்டால் அந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் கூடவே இருக்கும் பிரமிப்பு எழும். ஜெயச்சந்திரன் அவர்களுக்குக் கிடைத்த எண்பதுகளின் பொக்கிஷங்களில் இதுவுமொன்று.

“வாலிபச் சோலையின் வாசமே
எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே
ஆனந்த சங்கம சந்தமே”

https://www.youtube.com/watch?v=lHec6KZVs4E

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜெயேட்டன்

கானா பிரபா
02.03.2023

0 comments: