இன்று பின்னணிப் பாடகி சித்ராவின் பிறந்த நாள். ட்விட்டர் மூலம் ஞாபகப்படுத்திய நண்பர் சுரேஷுக்கு நன்றி. பாடகி சித்ராவுக்கு சிறப்பான பதிவு ஒன்று தயாரிக்க அவகாசம் கிட்டவில்லை. ஆனால் அவருக்கு வரமாகக் கிடைத்த ஒரு பாடலை மீண்டும் தந்து வாழ்த்துகின்றேன் உங்களோடு.
இந்தத் தகவல் 2007 ஆம் ஆண்டில் பாடகி சித்ரா சிட்னி வந்து இசை மழை பொழிந்த போது சொன்னது.இளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை. இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.
தெலுங்கில் "ஜல்லண்ட" என்றும் தமிழில் "ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்" என்றும் சித்ரா பாடும் அந்தப் பாட்டில் இசைஞானி இளையராஜாவே ஆர்மோனியம் வாசித்த பகுதி இதுதான்.
அந்த ஆர்மோனிய இசையுடன் சித்ரா பாடும் தெலுங்குப் பாடல் "ஜல்லண்ட"
அதே பாடல் தமிழில் "ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்"
சிறப்புப்பதிவில் போனஸ் பாடலாக றேடியோஸ்பதி நலன்விரும்பி (!) ஆயில்யன் விருப்பமாக, சின்னக் குயில் சித்ரா "பூவே பூச்சூடவா" திரைக்காகப் பாடும் "சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா"
Tuesday, July 27, 2010
Friday, July 23, 2010
தஞ்சைப் பெருங்கோயில் தரிசனம் - iTunes இல் அரங்கேறும் றேடியோஸ்பதி
சோழப்பேரரசு தன் உச்சத்தில் இருந்த காலத்தின் கல்வெட்டாய் கம்பீரமாய் இன்றும் திகழ்வது தஞ்சைப் பெருங்கோயில் என்று சிறப்பிக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம். ராஜராஜசோழ மன்னன் தன் காலத்தில் சமயத்தையும், கலையையும் எவ்வளவு உச்சமாக மதித்தான் என்பதற்குச் சான்றாக இன்றும் மிடுக்கோடு நிற்கின்றது இந்த இராஜராஜேஸ்வரம்.
இவ்வாலயம் எழுப்பி இந்த ஆண்டோடு ஆயிரம் ஆண்டுகள் கடக்கின்றது என்பது பெருமையோடு நினைவுகூர வைக்க வேண்டிய விடயம். இதுவரை என் இந்தியப்பயணங்களில் தஞ்சைப் பெருங்கோயிலைக் காண வாய்ப்புக் கிட்டவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. அதை ஓரளவு ஈடுகட்டும் விதத்தில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நான் படைக்கும் "அறிவுக்களஞ்சியம்" நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அறிவிப்பாள சகோதரி திருமதி சிவாஜினி சச்சிதானந்தாவை அழைத்து ஒரு சிறப்புப் படையலைப் படைத்திருந்தேன். இவர் தஞ்சைப் பெருங்கோயிலுக்குச் சென்ற அந்த அனுபவங்களை மிகவும் சுவையாகப் பகிர்ந்த போது இடையிடையே "ராஜ ராஜ சோழன்" படத்தில் வரும் இவ்வாலயத்தின் சிறப்பைக் கூறும் பாடல்களையும் கொடுத்து ஒரு சிறப்புப் பெட்டக நிகழ்ச்சியாக அமைத்தோம்.
இப்போதெல்லாம் Apple நிறுவன உற்பத்திகளை ஆளாளுக்கு iPhone, iPod, iPad ஆகப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கையில் றேடியோஸ்பதியின் அடுத்த பரிமாணமாக முதல் Podcast ஆக இந்த "தஞ்சைப் பெருங்கோயில் தரிசனம்" என்ற ஒலிப்பெட்டகத்தைத் தருவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். தொடர்ந்து இவ்வகையான சிறப்புப் பெட்டக நிகழ்ச்சிகள், கலைஞர்கள் பேட்டிகளும் வர இருக்கின்றன. தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி, Apple நிறுவனத்துக்கு ஒரு "ஓ".
இந்த ஒலிப்பகிர்வை itunes வழியாக நேரடியாகத் தரவிறக்கி உங்கள் ஒலிப்பெட்டியில் இணைக்க
http://itunes.apple.com/podcast/thanjai/id383047672
நேரடியாகக் கேட்க
தஞ்சைப் பெருங்கோயில் புகைப்படம் நன்றி: travel.webshots.com

Monday, July 19, 2010
ஜென்சி ஜோடி கட்டிய பாட்டுக்கள்
வார இறுதி கழிந்து வேலை வாரம் ஆரம்பிக்கும் நாள், மலையெனக் குவிந்த வேலைகளை முடித்து இன்றைய நாளுக்கு முடிவுகட்டி ரயிலில் ஏறுகின்றேன். வழக்கமாகப் படிக்கும் புத்தகத்தில் மனம் இலயிக்காமல், காதுக்குள் earphone ஐ மாட்டி விட்டு iPhone இன் இதயத்தை அழுத்திப் பாடல் தருவிக்கின்றேன். எடுத்த எடுப்பில் அதிரவைத்த புதுப்பாட்டு செவிப்பறையப் பதம் பார்த்து எரிச்சலூட்ட, மெல்ல ஒவ்வொரு பாட்டாக மாற்றிக் கொண்டே போகின்றேன். ஒன்றில் மட்டும் அப்படியே நிற்கின்றேன். மெல்லிய கிட்டார் இசை மீட்டிப் பார்க்க, புல்லாங்குழலும் கூட வருகின்றேன் என்று இணைய "மயிலே மயிலே உன் தோகை இங்கே" பாடல் ஒலிக்க ஆரம்பிக்கின்றது. பணியிடத்தில் இருந்து வீட்டுக்கு வர குறைந்தது 45 நிமிடத்துக்கு மேல் ஆகும். இந்தப் பாடலை எத்தனை தடவை கேட்டேன் என்று தெரியவில்லை. என் பக்கத்தில் யார் வந்து உட்காருகின்றார்கள், போகின்றார்கள் என்றெல்லாம் கணக்கெடுக்காமல் கனவுலகில் சஞ்சரிக்கின்றேன். ரயில் நிலையத்தில் இருந்து 15 நிமிட நடையிலும் கூடவே வருகின்றது அதே பாடல் திரும்பத் திரும்ப. எத்தனை தடவை கேட்டேன் என்று கணக்கே இல்லை. ஒரு வேலை நாளின் களைப்பையெல்லாம் களைய வைத்து தேனுண்ட களிப்பில் மனம் தத்தளிக்க கணினியின் முன் வந்து உட்காருகின்றேன். இன்று ஜென்சி தான் றேடியோஸ்பதியின் ஹீரோயின்.
தமிழ்த் திரையிசையில் ஜென்சியின் பாடல்கள் அழுத்தமான முத்திரை பதித்த முத்துக்கள். அவை சொற்பமே என்றாலும் அன்றிலிருந்து இன்று வரை முதல் நாள் கேட்ட புத்துணர்வைக் கொடுக்க வல்லன. ஒரு வெகுளிப்பெண் காதல் மொழி பேசுமாற்போல இருக்கும் ஜென்சியின் குரலில் இருக்கும் அந்தக் கனிவு.
ஜென்சியின் பாடல்களை அணு அணுவாய் ரசித்துப் பதிவு போடவேண்டும் என்று நினைத்தே மூன்றாண்டுகள் றேடியோஸ்பதியை ஓட்டி விட்டேன். இன்று குறைந்த பட்சம் ஜென்சி பாடிய ஒரு சில ஜோடிப்பாடல்களையாவது தரவேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கின்றேன்.
"மயிலே மயிலே உன் தோகை இங்கே" இந்தப் பாடல் இடம்பெறும் "கடவுள் அமைத்த மேடை" 1979 ஆம் ஆண்டில் வந்த படம், 31 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த படத்தில் இப்படியொரு நவீனமான இசையைக் கேட்கும் போது இசைஞானியின் வல்லமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. கிட்டாரில் ஆரம்பித்து புல்லாங்குழல் கையேந்திப் பின் இடையிசையில் கிட்டார் மெல்ல வயலினுக்கு கையளிக்க கீபோர்ட் தானும் இருக்கிறேன் என்று காட்ட எல்லாமே நேர்த்தியான இசை அணிவகுப்புக்கள். இவற்ற்றுக்குப் பின்னால் ரிதம் போடும் மிருதங்கம் தனி ஆவர்த்தனமாக மேய்ந்துகொண்டிருக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனாயசமாகப் பாட, ஒன்றும் தெரியாத அப்பாவிப் பெண் கணக்காய் ஜென்சியின் குரல், கையில் இருக்கும் சொத்து பத்தை எல்லாம் எழுதி வைக்கத் தூண்டும்.
"காதல் ஓவியம் பாடும் காவியம்" இந்தப் பாட்டில் வரும் ஞானஸ்நானம் எடுக்கும் அந்தப் பெண் குழந்தை மேரி , அல்லது தீட்சை எடுக்கும் அந்த விச்சு என்ற பையன் வயசு தான் எனக்கு இந்த "அலைகள் ஓய்வதில்லை" படம் வந்தபோதும். காதல் பூக்க ஆரம்பிக்கும் பருவத்தில் தான் இந்தப் பாடலின் அதி உன்னத தத்துவத்தை உணர்ந்து நேசிக்கக் கற்றுக் கொண்டேன். காதலித்தால் ஒரு கிறீஸ்தவப் பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்ற அளவுக்கு இந்தப் பாடலின் மேல் ஓர் ஈர்ப்பு. பின்னாளில் காதலியாய் வரித்துக் கொண்டவளைக் கூட இந்தப் பாடலை வைத்துக் கற்பனை செய்யும் அளவுக்குத் தொடர்ந்தது. இசைஞானி இளையராஜாவுக்கு மாற்றாக எந்த ஒரு குரலையும் இப்பாட்டில் எப்படிப் பொருத்திப் பார்க்க முடியாதோ அதே அளவுக்கு ஜென்சியை விலக்கி இந்தப் பாடலை எந்தப் பாடகியைக் கொண்டும் ஈடு செய்து விட முடியாது.
"லாலாலலா லாலாலலா" இப்படி ஆரம்பிக்கும் போதே மனதில் ஊஞ்சலைக் கட்டி வைத்து காதலியை அதில் இருத்தி ஆட்டி வைக்கத் தோன்றும் "கீதா சங்கீதா" என்ற பாடலைக் கேட்ட கணத்தில். இசைஞானி இளையராஜாவுக்கு மலையாளக் குயில்கள் மீது ஏனோ தனிப்பிரியம். அதிலும் மென்மையான குரலில் ஒரு ராஜாங்கமே படைக்கும் ஜெயச்சந்திரனோடு ஜென்சியும் "அன்பே சங்கீதா" வாகச் சேர்ந்து கொண்டால் சொல்லவா வேண்டும். குறிப்பாக "கீதா" என ஜெயச்சந்திரன் விளிக்க "கண்ணா" எனவும் "சங்கீதா" எனும் போது "என் கண்ணாஆஆஆ" என சமநிலைப்படுத்தும் காதல் அலைவரிசை இருவரின் குரல்களில்
ஒரு பாடல் படத்தின் முகப்பு இசையில் இருந்து ஆரம்பித்து படம் முடியும் வரையும் தொடர்ந்த சிறப்பு "நிறம் மாறாத பூக்கள்" படத்துக்கும் சேரும். இந்தப் படத்தின் பின்னணி இசையை முன்னர் நான் றேடியோஸ்பதியில் தந்து விட்டு நானே அடிக்கடி கேட்டு ரசிக்கும் ஒலிக்குளிகை இது.
விஜயன் அறிமுகக் காட்சி, "ஆயிரம் மலர்களே மலருங்கள்" சிறு பகுதியோடு
தமிழ் தெரியாத பெண்ணும் ஆணும் காதலிக்கும் போது இளையராஜா கைகொடுத்தால் எப்படியிருக்கும். ப்ரியா படத்தில் வரும் "என்னுயிர் நீதானே" பாடல் அதற்கு விடை சொல்லும். கே.ஜே.ஜேசுதாஸ், ஜென்சி இன்னொரு சிறப்பான பாடல் ஜோடி ஆனால் இந்த ஜோடியின் குரல் அதிகம் ஒலிக்காததால் இழப்பு இசை ரசிகர்களாகிய எமக்குத் தான்.
ஜென்சியின் குரல் இன்னும் பதிவாகும்.

Monday, July 12, 2010
ஷிவா (தெலுங்கு) - உதயம் (தமிழ்) : இசைத்தொகுப்பு
ஒரே ஆண்டில், ஐந்து மாத இடைவெளியில் ஒரு முழுமையான ஆர்ப்பாட்டமில்லாத காதல் படத்தைக் கொடுத்து விட்டு இன்னொரு பரிமாணத்தில் ஒரு முழு நீள அதிரடித்திரைப்படத்தைக் கொடுத்துத் தன் சினிமா பயணத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய பெருமை நாகார்ஜீனாவுக்கு வாய்த்தது. முன் சொன்ன காதல் படம் நாம் சிலவாரங்களுக்கு முன் றேடியோஸ்பதியில் பார்த்த கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே) , பின்னது முழு நீள அதிரடித் திரைப்படமாக வந்த ஷிவா என்ற தெலுங்குப்படம் தமிழில் "உதயம்" என்ற பெயரில் வெளியானது. 1989 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தப் புதுமைக்குப் பின் இளையராஜா, நாகார்ஜீனா ஆகிய அதே கூட்டணியோடு ஷிவா (உதயம்) படத்தில் இயக்குனர் ராம்கோபால் வர்மா, நாயகி அமலா, ஒளிப்பதிவாளர் கோபால் ரெட்டி இவர்களோடு பலரும் அறிந்திராத செய்தி இப்படத்தின் கதை உருவாக்கத்தில் ராம்கோபால்வர்மாவோடு இணைந்து பணியாற்றியவர் தெலுங்குப்படவுலகின் குணச்சித்ர நடிகர் தனிகலபரணி.
ராம்கோபால்வர்மா என்ற இயக்குனருக்குக் கிடைத்த அமர்க்களமான வெற்றியாக ஷிவா படத்தின் வெற்றி கணிக்கப்பட்டது, இந்த முதல்ப்பட வெற்றியே இவரைப் பின்னாளில், சில வருஷங்களுக்குப் பின் தெலுங்குத் திரையுலகில் இருந்து பெயர்த்து பாலிவூட் என்ற ஹிந்தித் திரையுலகில் வெற்றியோ தோல்வியோ ஆட்டம் காணாமல் இன்றுவரை தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக் கூடிய தெம்பைக் கொடுத்திருக்கும். கல்லூரியில் நிலவும் தாதாயிசம், அதைச் சுற்றிப் பின்னப்பட்ட வன்முறை நோக்கிய பயணமாக "ஷிவா" படத்தின் கதையை ஒற்றை வரியில் எழுதி முடித்து விடலாம். ஆனால் 21 வருஷங்களுக்குப் பின்னர் அந்தப் படத்தை இன்றும் பார்க்கும் போதும் துரத்திக் கொண்டு பறக்கும் ஒளிப்பதிவு, ஆரம்பத்தில் இருந்து தேர்ந்தெடுத்த கறுப்பினத் தடகள வீரனைப் போல விர்ரென்று பயணிக்கும் அதிரடி இசை, அலட்டல் இல்லாத காட்சியமைப்புக்கள் என்று விறுவிறுப்பு ரகம் தான்.
ஷிவா வை மீண்டும் 2006 ஆம் ஆண்டில் ஷிவா என மீண்டும் ஹிந்தியில் புத்தம்புதுக் கலைஞர்களைப் போட்டு எடுத்திருந்தாலும் அசலுக்குப் பக்கம் நெருங்கவே முடியவில்லை என்னதான் புதிய தொழில்நுட்பம் கலந்திருந்தாலும்.
ஒரு வன்முறைப்பின்னணி சார்ந்த இந்தப் படத்தின் காட்சியமைப்புக்களில் கொலை, மற்றும் சித்திரவதைக்காட்சிகளைப் பார்த்தால் ஒரு துளிகூட மிகைப்படுத்தல் இல்லாத தணிக்கைக்கு வேலை வைக்காத உறுத்தாத காட்சிகள். ஒரு சில கொலை நடக்கும் காட்சிகள் அப்படியே பார்வையாளன் முடிவுக்கே விட்டுவைக்கும் அளவுக்கு மெளனமாய் முற்றுப்புள்ளி வைத்து அடுத்த காட்சிக்குப் பயணித்து விடும்.
நாகார்ஜீனா, அமலா நிஜ வாழ்விலும் கைப்பிடிக்கும் வகையில் கட்டியம் கூறும் குறும்பான காட்சிகள், தவிர ஒரு சில கிளுகிளுப்பாடல்கள் தான் வேகத்தடை. தவிர, சுபலேகா சுதாகர் வகையறா நண்பர் கூட்டத்தோடு யதார்த்தமாய்ப் பயணிக்கும் கல்லூரிக் காட்சியமைப்புக்கள், கல்லூரி தாதாவாக வந்து நடித்துச் செல்லும் சக்ரவர்த்தி, பவானி என்ற பெரும் வில்லனாக அதே சமயம் வெற்றுச் சவாடல் வசனங்கள் இல்லாத அடக்கமாய் இருந்து தன் "காரியத்தை" முடிக்கும் ரகுவரன் ஆகிய கலைஞர்கள் தேர்விலும் இந்தப் படத்தின் வெற்றி தங்கியிருக்கின்றன.
ஷிவா என்ற தெலுங்குப் படம் அதே ஆண்டில் தமிழில் "உதயம்" என்று மொழிமாற்றப்பட்டுத் தமிழகத்திலும் பேராதரவைச் சந்தித்தது. சைக்கிள் செயினைக் கழற்றிச் சுழற்றி அடிக்கும் ஸ்டைல் பலரைக் கவர்ந்த ஒன்று. தெலுங்கில் 155 நாட்கள் ஓடிய இந்தப் படம் தேவி என்ற தியேட்டரில் 3 காட்சிகள் ஹவுஸ்புல்லாக 62 நாட்கள் ஓடியது இன்றுவரை சாதனையாகக் கொள்ளப்படுகின்றது. (மேலதிக தகவல் உதவி: நாகார்ஜீனா ரசிகர்கள் தளம், விக்கிபீடியா, போஸ்டர் நன்றி: நாகார்ஜீனா ரசிகர்கள் தளம்)
ஒரு பரபரப்பான படத்துக்குத் தேவையான முழுமையான உழைப்பை அள்ளிக் கொட்டியிருக்கின்றார் இசைஞானி இளையராஜா. படத்தின் ஆரம்பத்தில் இருந்து படம் முடிந்து இறுதியில் ஓடும் எழுத்தோட்டம் வரை பயணிக்கும் பின்னணி இசையில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே மெல்லிசை ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதைத் தவிர மற்றைய அனைத்துக் காட்சிகளுக்கான இசையுமே அதிரடி தான் என்பதை இங்கே நான் தரும் பின்னணி இசைக் கோர்வை மூலம் உணரலாம்.
ஷிவா என்ற தெலுங்குப் பையனின் அட்டகாசமான உதயம் அடுத்து உங்கள் செவிகளில் இசையாக
படத்தின் மூல இசை
படத்தின் நிறைவு இசை
இன்னொரு மிரட்டும் இசை
படத்தின் முகப்பு இசையோடு நாகார்ஜீனா அறிமுகம்
கல்லூரி தாதா சக்ரவர்த்தி பின்புலம்
நாகார்ஜீனா நண்பன் தாக்கப்பட்டு உயிரிழந்த பின்
பாவானி என்ற ரகுவரன் அறிமுகம் மிரட்டல் இசையோடு
தாதாக்களுடன் மோதும் ஒரு காட்சி
இன்னொரு ஓட்டம் தாதாக்களிடம் இருந்து தப்பி
ஒரு சண்டைக்காட்சிக்குப் பின்னான இசை
மழையில் வில்லன்களுடன் ஒரு சந்திப்பு
இன்னொரு கொலை
குழந்தை இறப்பும், அதைத் தொடர்ந்து பவானி வேட்டையில் ஷிவாவும்
வில்லன் பவானி (ரகுவரன்) ஐ ஷிவா (நாகார்ஜீனா) வேட்டையாடும் இறுதிக் காட்சி
சரி இனி தமிழில் இப்படம் "உதயம்" ஆக மொழிமாற்றப்பட்டு வந்த போது இடம்பெற்ற பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்
"பாட்டனி பாடம்" எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா குழுவினர்
"ஆடல்களோ பாடல்களோ" எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
"இது நீயும் நானும் கதைபேசும் வேளை தானோ" எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
"கிஸ் மீ" எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.எஸ்.சித்ரா
"அச்சச்சோ பெண்மை" எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.எஸ்.சித்ரா
Saturday, July 10, 2010
றேடியோஸ்புதிர் 57 - தியேட்டர் பெயரையே படத்துக்கும் வச்சாச்சு
தெலுங்கில் அதிரடியாய் வந்த திரைப்படங்களில் இந்தப் படத்துக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. இந்தப் படத்தின் நாயகனுக்கும் சரி, வில்லனுக்கும் சரி பெரும் திருப்புமுனையாக அமைந்து விட்ட படம் இது. படம் கொடுத்த பெரு வெற்றி அப்படியே இயக்குனருக்கும் பெரும் அங்கீகாரம் கொடுத்து விட்டது. இவர்கள் எல்லோருக்கும் மேல் இந்தப் படத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி அடி பின்னிவிட்டார் இசைஞானி. இல்லாவிட்டால் 21 வருஷங்களுக்குப் பின்னர் பின்னணி இசையை ஞாபகம் வைத்து அதை நேயர் விருப்பமாக ஒரு சகோதரி கேட்கும் அளவுக்குப் பிரபலமாக இருக்கிறதே.
தமிழிலும் இந்தப் படம் மொழி தாவியது. ஆனால் ஏற்கனவே இந்தப் படத்தின் தெலுங்கு மூலப் பெயரில் ஒரு தமிழ்ப்படம் வந்திருந்தது. எனவே ஒரு தியேட்டரின் பெயரே படத்தின் பெயராக வைக்கப்பட்டது.
கல்லூரிக்குள் படிப்பு இருக்கலாம் வன்முறை இருக்கலாமோ? ஆனால் படம் வந்த நேரம் Botany class இற்குக் கட் அடித்து விட்டுத் தியேட்டர் பக்கம் போனவர்களும் உண்டாம் ;)
இதுவரை கேட்டது போதும், எங்கே சமர்த்தா அந்தப் படம் பெயர் சொல்லுங்கள் பார்க்கலாம் , தெலுங்கு, தமிழ் இரண்டில் ஏதாவது ஒரு தலைப்பு அல்லது இரண்டும் சொன்னால் போனஸ்.
துக்கடாவாக படத்தின் அதிரடி இசை ஒன்றைத் தருகின்றேன், இரண்டு நாட்களுக்குள் மேலும் சில அதிரடி இசைக்குளிகைகள் தொகுப்பாக வரும் ;)
கேட்ட கேள்விக்குச் சரியான பதில்:
தெலுங்கு: ஷிவா
தமிழ்: உதயம்
இயக்கம்: ராம்கோபால்வர்மா
வில்லன்கள்: ரகுவரன், சக்ரவர்த்தி

Sunday, July 4, 2010
சிட்னியில் ஒளிர்ந்த "வைர(த்தில்) முத்து(க்கள்)
திரையிசைக்கவிஞர்கள் கறிவேப்பிலையாய்ப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டு வந்து காட்டியவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவருக்கு முன்னான காலகட்டத்தின் சகாப்தங்களான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன் போன்ற ஆளுமைகள் தமிழ்த்திரையிசைப் பாடல்களின் தனித்துவங்களாக இருந்தாலும், கவிஞர் வைரமுத்து அவர்கள் பாடலாசிரியர்களுக்கான தனித்துவம் என்ற விஷயத்தில் முன்சொன்னது போல நட்சத்திர முத்திரையைப் பதித்திருக்கின்றார். அந்த வகையில் ஒரு பாடலாசிரியரை முன்வைத்து அவுஸ்திரேலியாவில் நடக்கும் முதல் கலை நிகழ்ச்சியாக அமைந்தது சரிண்டா வழங்கிய "வைரத்தில் முத்துக்கள்". இந்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை யூலை 4 ஆம் திகதி சிட்னி நகரமண்டபத்தில் இரவு 7.30 முதல் இரவு 10.30 வரை நடந்தது. கவிஞர் வைரமுத்துவோடு பாடகர்கள் மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா (சுஜாதா மகள்) ஆகியோரோடு நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் இணைந்து இந்த "வைரத்தில் முத்துக்கள்" நிகழ்ச்சியைப் படைத்திருந்தனர்.
ஓவ்வொரு திரையிசைப்பாடல்கள் பிரசவிக்கும் போதும் அதன் பின் சுவையான ஒரு சம்பவம் ஒட்டிக்கொண்டிருக்கும். அதைத் தன் பாணியிலே வைரமுத்து அவர்கள் விவரித்து தருவது தனித்துவமானது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றதற்கும் முதற்காரணம் "வைரமுத்து"வே தான். "நேற்றுப் போட்ட கோலம்" என்ற நூலில் தன் திரையிசைப்பாடல்கள் பிறந்த கதையைக் கவிதையாக வர்ணித்து எழுதியதைப் பலமுறை ரசித்திருக்கின்றேன். அந்த சுகானுபவம் நேரிலே கிட்டவெண்ணி நிகழ்ச்சிக்குப் படையெடுத்தேன்.
நிகழ்ச்சி ஆரம்பமானது, தன் அக்மார்க் தும்பைப்பூ வெள்ளை உடைக்குள் கறுப்பு வைரம் மேடையில் தோன்றப் பார்வையாளர் கூட்டம் ஆரவாரித்ததில் இருந்தே என்னைப் போலவே இன்னொரு கூட்டமும் அங்கே வந்திருந்ததைக் கைதட்டிக் காட்டியது. முதற்பாடல் நிழல்கள் படத்தின் தன் முதற்பிரசவமான "இது ஒரு பொன்மாலைப்பொழுது" பாடல் பிறந்த கதையைச் சொன்னார். மார்ச் 10 ஆம் திகதி இயக்குனர் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா ஆகியோரோடு இந்தப் பாடலை எழுதும்போது மனைவி பொன்மணி வைரமுத்து தன் முதற்பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த நாள் முப்பது நிமிடத்தில் இட்டுக்கட்டிய அந்தப் பாடலின் நினைவை 30 வருசங்களுக்குப் பின் மேடையில் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஏற்கனவே கேட்ட விஷயம் என்றாலும் ஒரு மெய்சிலிர்ப்பான அனுபவம். தன் முதற் பாடல் எழுதி முடிந்ததும் இளையராஜா, வைரமுத்துவின் முகவரியை வாங்கி வைத்தபோது "அட இந்தக் கருவாயன் லேசில் இப்படியெல்லாம் செய்ய மாட்டானே" என்று வைரமுத்துவிடம் சொல்லியதைச் சிரித்துக் கொண்டே சொன்னவர் "யாரை யார் கருவாயன் என்று சொல்லுகிறார்" நாம் மூன்றுபேருமே இந்த விஷயத்தில் ஒற்றுமையானவர்கள் ஆச்சே, வைகை ஆத்துத் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்களல்லவா நாம் மூவரும்" என்று அவர் சொன்ன கணம், பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்துவின் அந்தப் பொற்காலம் நினைவுக்கு வந்து ஏங்க வைத்தது. இந்தப் பாடலை மனோ பாடி முடிந்ததும். இந்தப் பாடலுக்காக விடுபட்ட சரணத்தை இங்கே தருகின்றேன் என்று சொல்லியதும், மனோ "இரவும் பகலும் யாசிக்கிறேன்" என்று தொடர்ந்தார் அந்தக் கேட்காத கவிவரிகளை.
பாடகர் மனோவைப் பொறுத்தவரை ராஜா வைரமுத்துவோடு உரசிக்கொண்ட எண்பதுகளின் அந்த நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ராஜாவின் வளர்ப்பு மகனாகச் சீராட்டப்பட்டவர் பாட்டுலகில். எனவே வைரமுத்துவின் வரிகளில் மனோவுக்கான தனி அங்கீகாரம் பெற்ற பாடல் ஒன்றுமே இல்லை என்றே சொல்லி விடலாம். பின்னர் ரஹ்மானின் சகாப்தம் மலர்ந்த போதுதான் மனோவுக்கும் வைரமுத்துவுக்குமான கூட்டணி என்பது ஓரளவு சொல்லத் தக்கதாக இருந்தது. எனவே வைரமுத்துவை முன்வைத்து நடந்த இந்த நிகழ்ச்சியில் மனோ, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நகலாகவே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம், குறிப்பாக இசைஞானியின் பாடல்கள் என்று வந்த போது. அந்த வகையில் மூன்று மணி நேர இசைவிருந்தில் இரண்டே இரண்டு இளையராஜா பாடல்கள் தான் கிட்டியது. இதுவே வைரமுத்து, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் கூடவே சித்ரா என்று கூட்டணி வைத்துக் கச்சேரி பண்ணியிருந்தால் எந்திரன் அளவுக்கு எகிறியிருக்கும்.
உன்னிகிருஷ்ணன் முதல் நாள் வெள்ளிக்கிழமை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நடத்திய "தித்திக்கும் வெள்ளி" வானொலி நிகழ்ச்சிக்கு நேராகக் கலையகம் வந்து பேட்டி தந்தவர். அந்தப் பேட்டியைக் கேட்க
சிட்னிக்குளிர் உன்னிகிருஷ்ணனின் எதிரியாக அமைந்து அவரின் குரல்வளையை நெரித்ததை முதல் நாள் பேட்டி எடுத்த போதே உணர்ந்தேன். அது நிகழ்ச்சி நடந்த போதும் தொடர்ந்தது துரதிஷ்டம். "என்னவளே அடி என்னவளே", "பூவுக்குள் ஒளிந்திருக்கும்" (ஸ்வேதாவோடு) போன்ற தன் பாடல்களைத் தந்ததோடு சிவாஜி படத்தில் உதித் நாராயணன் குரலுக்காக இவர் மேடையில் பாடிய "சஹானா சாரல் தூவுதோ" என்ற பாடலை எடுத்தது பெரிய ரிஸ்காக அமைந்து விட்டது. சென்னையில் பாடினால் மும்பையில் எதிரொலிக்கும் உச்சஸ்தாயி உதித் இன் குரலில் உன்னி மேலே சென்ற போது குரல்வளையை இன்னும் இறுக நெரித்து இயற்கை சதி செய்தது. வெகு லாவகமாகப் பாடித் தேசிய விருதைக் கைப்பற்றிக் கொண்ட "உயிரும் நீயே உடலும் நீயே" பாடலைக் கொடுத்துக் கொள்ளை கொண்டிருக்கலாமே.
ஆந்திரா தமிழ் நாட்டுக்கு இரு மருமகள்களைத் தந்தது, ஒருவர் பி.சி.சுசீலா, மற்றவர் ஜானகி. அதேபோல் கேரளம் இரு மருமகள்களைத் தந்தது, ஒருவர் சித்ரா மற்றவர் சுஜாதா என்ற வைரமுத்துவின் அறிமுகத்தோடு சுஜாதா தோன்றினார்.
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது ஐந்து முறை கிடைத்த போதும் அந்தப் பாடல்களுக்குத் தேசிய விருது கிட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்தப் பாடலுக்கு எதிர்பார்த்தேன் ஆனால் கிட்டவில்லை, விருது என்பதே எதிர்பாரால் கிடைக்க வேண்டியது தானே என்று சொல்ல சுஜாதா பாடிய பாடல் "காற்றின் மொழி ஒலியா இசையா " என்று சுஜாதா பாடி அந்தப் பாடலை முடிக்கும் நிமிடத்துளிகள் வரை சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கி ஒன்றித்தது அந்தப் பாடலை அவர் கொடுத்த அந்தத் தெய்வீகக் குரலில். சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்தப் பாடலை ஶ்ரீலேகா பார்த்தசாரதி ஒரு இசை நிகழ்ச்சியில் பாடி, வாழைத்தோப்புக்குள் யானை புகுந்த கதையாய் துவம்சம் பண்ணியிருந்தார். அந்த வலிக்கு ஒத்தடமாக அமைந்தது சுஜாதாவின் இந்த அட்சர சுத்த அக்க்ஷய திருதைத் தங்கக் குரல். சுஜாதாவுக்குப் பின் வந்த சித்ராவுக்குக் கூட இப்போதெல்லாம் மேடைக்கச்சேரி செய்யும் போது உச்சஸ்தாயியில் ஒரு பாடலைக் கொண்டு போகும் போது, லிப்ட் இயங்காத நேரம் பாத்து பத்து மாடிக்கு ஏறிய களைப்பு வருவதைப் பார்க்கலாம். ஆனால் சுஜாதா இந்த விஷயத்தில் வெகு லாவகமாக ஸ்கோர் செய்து ஆட்டத்தில் இருக்கிறார். தன் சுத்தத்தமிழுக்கு ஆசான் வைரமுத்து என்றார் சுஜாதா.
பாடகி சுஜாதாவுக்கும் , அவர் மகள் ஸ்வேதாவுக்கும் வயசில் தான் வித்தியாசம், வாய்சில் அல்ல என்ற வைரமுத்துவின் கூற்றைப் பலமடங்கு நிரூபித்தது சுஜாதாவின் குரல்.
பாடகி சுஜாதா சிட்னியில் இறங்கும் நேரம் பார்த்து திரையிசையின் பெரும் பிதாமகர்களில் யாராவது இறப்பது ஒரு வாடிக்கையாக விட்டதோ என்று நினைக்கத் தோன்றியது. கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதி சுஜாதா இங்கே வந்து வானொலியில் பேட்டி கொடுத்த நேரம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் இறந்த சேதியைச் சொன்னேன் அவருக்கு. அந்த நேரம் அவர் அதிர்ச்சி கலந்த கவலையோடு "மகாதேவன் மாமா" என்று உருகி, மகாதேவனின் பெருமையைச் சிலாக்கித்திருந்தார். மீண்டும் இந்த முறை அவர் வந்த நேரம் இன்னொரு இசையமையாளரின் இறப்புச் செய்தியும் வந்தது. மலையாள சினிமாவின் சாகித்யங்களில் ஒருவரான எம்.ஜி.ராதாகிருஷ்ணன் கடந்த ஜீன் 2 ஆம் திகதி இறந்த சேதி வந்தது. இரண்டுமே வெள்ளிக்கிழமைகள். மலையாள இசையின் ஆளுமை எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மறைவுக்கு இந்த வேளை என் இரங்கல்களைப் பதிவு செய்கின்றேன்.
எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மலையாள சினிமாவின் தனித்துவம் மிக்க இசையமைப்பாளராக விளங்கி வந்திருக்கின்றார். கே.ஜே.ஜேசுதாசின் சக பாடகி சுஜாதாவை முதன்முதலில் தனிப்பாடல் ஆல்பம் மூலமாகவும் , சித்ராவை திரையிசைப்பாடகியாகவும் அறிமுகப்படுத்தியவரே இவரே. கமலா சுரையாவின் கவிதைகளை "சுரையா பாடுன்னு என்ற இசை அல்பமாக ஆக்கியிருக்கின்றார். தலைசிறந்த இயக்குனர் அரவிந்தனின் அரவிந்தனின் 'தம்ப்' ஆர்ட் பிலிம் மூலம் இசையமைப்பாளர், ஆல் இந்தியா ரேடியோவில் தம்புரா கலைஞராக மாதச் சம்பளத்தில் சேர்ந்து வாய்ப்பாட்டு கிளாஸ் திருவனந்தை வானொலியில் நடத்தியது மூலம் பிரபலம், மனைவி பத்மஜா மலையாளத்தில் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர், இவரின் சகோதரர் எம்.ஜி.ஶ்ரீகுமார் பிரல பின்னணிப்பாடகர்.(தகவல் குறிப்புக்கள் ஆதாரம் விக்கிபீடியா, இரா.முருகன்). அத்தோடு தமிழில் சந்திரமுகியாகக் குதறப்பட்ட மணிசித்ரதாளு மலையாளப்படத்தில் இவர் வழங்கிய இசை அந்தப் படத்தின் அடிநாதமாக விளங்கியதைப் படத்தைப் பார்க்கும் போதே அனுபவித்திருக்கின்றேன். குறிப்பாக மணிச்சித்ரதாளுவில் வரும் தமிழ்ப்பாடலான "ஒருமுறை வந்து பார்ப்பாயா" என்ற கே.எஸ்.சித்ரா, கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் உட்பட இந்தப் படத்தில் வந்த மற்றைய பாடல்களும். இவரின் இசையை நான் எல்.வைத்யநாதனின் இசை வரிசையில் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.
மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் தோட்டத்தில் இருந்த பாலசந்தரின் அலுவலகத்துக்கு ஒருமுறை வைரமுத்துவை அழைத்து புதுசா ஒரு பையன் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறான், வந்து பாருங்கள் என்று பாலசந்தர் அழைத்தபோது அங்கே ஜமுக்காளம் விரித்துத் தரையில் கீபோர்டுடன் உட்கார்ந்திருந்த திலீப் என்ற பையன் பின்னாளில் ரஹ்மான் என்ற ஆஸ்கார் நாயகனாக வந்த நினைவைப் பகிர்ந்து கொண்ட வைரமுத்து, "சின்னச் சின்ன ஆசை" என்ற ரோஜா பாடலைக் கேட்டு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த ஒரு தமிழர் கடிதம் எழுதிய போது தன்னோடு இருக்கும் மற்ற மொழிக்கார சகாக்கள் இந்தப் பாடலின் ஹிந்தி வடிவத்தை விடத் தமிழைத்தான் விரும்பிக் கேட்கிறார்கள் என்று சொல்லி நெகிழ வைத்தார். ஸ்வேதா அந்தப் பாடலைப் பாடிய போது அச்சொட்டாக மின்மினியின் குரல் தான். இந்த ஸ்வேதா இன்னும் ஆறுமாதங்களில் திருமண பந்தத்தில் இணைகிறார் என்றவாறே வைரமுத்து "மணமகளே மருமகளே வா வா" என்று குறும்பாகப் பாடிய போது ஸ்வேதா முகத்தில் அவர் அம்மா அடிக்கடி காட்டும் வெட்கம். பத்து வருசங்களுக்கு முன் அம்மாவோடு சிட்னி வந்திருக்கேன் ஆனா அப்போது நான் மீண்டும் இங்கே ஒரு பாடகியாக வருவேன்னு நினைச்சுப் பார்க்கலை என்று ஸ்வேதா நெகிழ்ந்தார். அது மட்டுமே அவர் பேசிய முதலும் கடைசியுமான வார்த்தைகள்.
"வேற்றுமொழிப்பாடகர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடலாமா" என்று என்னிடம் கேட்ட போது, தமிழைச் சிதைக்காதவரை யாரும் அதைச் செய்யலாம். செளராஷ்டிரர் செளந்தரராஜன், கன்னடர் ஶ்ரீனிவாஸ் தொட்டு பல உதாரணங்களைச் சொன்ன வைரமுத்து தமிழ்ப்பாடல்களைப் பாடிய பெரும்பான்மை வேற்றுமொழிப்பாடகர்கள் தான் அதைச் சிதையாமல் பாடியிருக்கின்றார்கள் என்றவாறே பாடகர் உதித் நாராயணன் ஈஸ்வரா என்ற பாடலில் "பிரியமான பெண்ணை ரசிக்கலாம்" என்பதை "பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்" என்று மாற்றிப் பாடிய அந்த நிகழ்வைச் சொன்ன போது அரங்கம் சிரிப்பு மழையில் அதிர்ந்தது. எட்டு நிமிடங்கள் மட்டுமே எழுத நேரம் பிடித்தது என்று பாட்ஷா பாடலான "ரா ரா ராமையா" பாடலைச் சொல்லிவிட்டு, இரண்டு நாள் இடைவெளியில் காதல் ஓவியம் படத்தில் பாடலான "சங்கீதஜாதி முல்லை" பாடலை இரவோடிரவாக இளையராஜா விட்டுக் கதவைத் தட்டி, லுங்கி கட்டிய ராஜா ஆர்மோனியம் வாசிக்க மெட்டமைத்துக் கண்ணீர் விட்டுப் பின் விநியோகஸ்கர்கள் படத்தின் தோல்வியால் கண்ணீர் விட்ட கதையைச் சொன்னார். அந்தப் பாடலை மனோ பிரதிக் குரலெடுத்துப் பாடினார்.
ராக்கமா கையத் தட்டு பாடல் போல ரஹ்மான் தன் பங்குக்குத் தந்த திருடா திருடா பட "வீரபாண்டிக் கோட்டையிலே" பாடலின் மூல வடிவில் மனோ, உன்னிமேனன், சித்ரா ஆகியோர் பாடியிருப்பார்கள். அதே பாடலை மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா பாடியது சிறப்பாக இருந்தது. பாடி முடிந்ததும் முதல் தடவையா முயற்சி பண்ணியிருந்தேன் என்று மூச்சு வாங்கியவாறே சிரித்தார்.
"வைரமுத்துவின் ரசிகை" என்ற நகைச்சுவை நாடகத்தை விவேக் தன் பரிவாரங்களான செல் முருகன், சுஹாசினி ஆகியோருடன் நான்கு பாடல்களுக்கு இடையில் என்று பாகங்களாகக் கொடுத்திருந்தார். வைரமுத்து போல நடித்து காதலிக்கும் ஆண்மகனாக விவேக். முடிவில் வைரமுத்துவே தோன்றி "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம்" ஆனால் காதலுக்கு ஒரு பொய்யும் சொல்லக்கூடாது என்று முத்தாய்ப்பாய் முடித்தார். அளவான நகைச்சுவை என்பதால் ரசிக்க முடிந்தது.
செம்மொழி மாநாட்டில் பேச வந்த கலிபோர்னிய நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட், கி.பி இரண்டாம் நூற்றாண்டில் புழங்கிய சொற்களையும் இன்றும் காத்துப் பேசிவரும் மொழி தமிழ்மொழி என்று சிலாகித்ததைச் சொல்லி மகிழ்ந்த வைரமுத்து பாரிமன்னனின் மகளிர் பாடும் சங்கத்துப் பாடலை ஆதாரமாகக் கொண்டு எழுதிய "நறுமுகையே நறுமுகையே" பாடலைச் சொல்ல, உன்னிகிருஷ்ணனோடு ஸ்வேதா பாடினார்.
கொச்சி தாஜ் ஹோட்டலில் முத்து பாடல்பதிவு இடம்பெற்ற சமயம் நெப்போலியின் கடைசி ஆசையினை ரஜினிக்குச் சொன்ன போது கேட்டு வியந்த அவர் ஏதாவது ஒரு பாடலில் புகுத்தவேண்டும் என்று ஆசை கொண்ட போது எழுதியது தான் "மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை" என்ற "ஒருவன் ஒருவன் முதலாளி" பாடல் என்றார். முத்து படத்தில் இருந்து இன்னொரு முத்தாக மனோ, சுஜாதா பாடிய "தில்லானா தில்லானா" பாடலை ரஜினி போல ஆடிக்கொண்டே மனோ பாட , மீண்டும் சுஜாதாவின் முகம் வெட்கத்தால் நிரம்பியது.
திருவனந்தபுரத்தில் இருந்து ஒரு இசைக்குழு ஒன்று பக்கவாத்தியமாக வந்தாலும் பெரும்பாலான பாடல்களுக்குப் கரோக்கி இசை தான் என்பதை உன்னிப்பாகப்பார்த்தாலே தெரியும். ஆனால் சேட்டன்கள் நீண்ட நேரமாக "நல்லவங்க மாதிரியே வாசிச்சு நடிச்சாங்க" . ஏதோ ஒரு பாடலில் புல்லாங்குழல் ஸ்கோர் செய்யும் நேரம் முடிந்தும் புல்லாங்குழலை வச்சு பாவ்லா பண்ணி வாசிச்சுக் கொண்டிருந்தார் சேட்டன்.
"புத்தம் புது பூமி வேண்டும்" பாடலை மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா ஆகியோர் பாட நிறைவாகியது நிகழ்ச்சி. இதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள் தமிழர்களை மட்டும் இல்லாது பொத்தம் பொதுவாக விளம்பரப்படுத்துவதால், ஓவ்வொரு பாடலுக்கும் இடையில் "தமிழ் பாட்டு பாடுக", "கன்னட சாங் பிளீஸ்", "மலையாளம் ஒன்னு", "தெலுகு நம்பர் பிளீஸ்" என்றெல்லாம் கூக்குரல் வரும் ஆனால் இந்த நிகழ்ச்சியில் அந்தப் பிரச்சனை இல்லை. இருந்தாலும் நிகழ்ச்சி ஓய்ந்து விட்டது என்றதும் மேல்மாடியில் இருந்த சேட்டன்ஸ் & சேச்சிஸ் மலையாளம் மலையாளம் என்று கத்த சுஜாதா, ஸ்வேதா கடலினக்கரை போனோரே பாடலில் இருந்து சமீபத்தைய வரவு கோலக்குயில் கேட்டோ பாடல்களைத் துண்டு துண்டாகப் பாடி நிறைத்தார்கள். குறிப்பாக ஸ்வேதாவுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்த நைவேத்யம் திரைப்படப்பாடல் "கோலக்குயில் கேட்டோ ராதே என் ராதே" பாடலை அவர் அம்மா சுஜாதா பாடியது வல்லிய சுகமானு.
வைரமுத்து என்ற சகாப்தம் தமிழ்த்திரையிசையின் முக்கியமான சகாப்தங்களான இளையராஜா, ரஹ்மான் போன்ற ஆளுமைகளோடு இணைந்த காலங்கள் தனித்துவமானவை. அதை ஒரே நிகழ்ச்சியில் கொடுப்பதென்பது மகா கஷ்டம். இருந்த போதும் முன் சொன்னது போல இந்தப் பாடல்களுக்குப் பின்னால் அணி செய்த ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா போன்றோரோடு இணைந்து இந்த நிகழ்ச்சியைப் படைத்தால் அந்த நிகழ்ச்சியின் வடிவமே இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கும் . கூடவே இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் வைரமுத்து அவர்கள் ஒவ்வொரு பாடல்களுக்கும் கொடுத்த விளக்கம் என்பது விலாவாரியாக சுவையாக இருந்து ஒருகட்டத்தில் சுருங்கி பின் நேரப்பற்றாக்குறையால் விளக்கங்களே இல்லாத வெறும் பாடல்களாக இருந்தது பெரும் குறை. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் படைத்த பாடல்கள் பிறந்த கதைகளைக் கேட்டாலும் மீண்டும் சலிப்புத் தட்டாவிட்டாலும் இதை விட இன்னும் பல அனுபவங்களை வேறு பாடல்களோடு கேட்க வேண்டும் என்ற ஆசையும் வருகின்றது. இதை விட முக்கியமாக, ராஜாவோடு முரண்பட்டு இருந்த காலத்தில் தன் இருண்ட காலத்தில் வெளிச்சமாய் மாற்றிக்காட்டிய முக்கியமான பாடல்களை வைரமுத்து அந்தக் காலகட்டத்து இசையமைப்பாளர்கள் சந்திரபோஸ் மற்றும் சங்கர் கணேஷ் போன்றோருடன் பணியாற்றிய போது ஏற்பட்ட பாடல் பிரசவ அனுபவங்கள் மேடைகளில் பதியப்படாதவை. அவை அரங்கேற வேண்டும் என்ற தீரா ஆசை இருந்தாலும் அந்தப் பாடல்களை ரசித்துக் கேட்கும் கூட்டம் எவ்வளவு தூரம் இந்த டிஜிட்டல் யுகத்தில் இருக்கும் என்பதும் கேள்விக்குறி.
இவையெல்லாம் கடந்து "வைரத்தில் முத்துக்கள்" நம் மனதில் இடம்பிடித்த சுகானுபவம்.
Labels:
இளையராஜா,
ஏ.ஆர்.ரஹ்மான்,
நிகழ்வு,
பிறஇசையமைப்பாளர்,
விமர்சனம்
Friday, July 2, 2010
இளையராஜா இசையமைப்பதைக் கேளுங்கள்
இளையராஜாவின் பாடல்கள் நண்பர் ரவிசங்கர் ஆனந்த் போன்ற இனிய நட்புக்களைத் தந்திருக்கின்றது. அந்தவகையில் அவர் தந்த ஒரு அரிய பொக்கிஷத்தை இங்கே தருகின்றேன்.
ஒரே முத்தம் திரைப்படம் ஜெய்கணேஷ், சுமித்திரா நடிக்க இசைஞானி இளையராஜா இசையில் 1980 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "பாவையர்கள் மான் போலே" என்ற பாடலை இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைக்கும் போது ஒலிப்பதிவுக்கூடத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த ஒலிப்பதிவையே பகிர்கின்றேன். இன்றைக்கு எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்து வெட்டி ஒட்டி நகாசு வேலை எல்லாம் பண்ணிப் பார்த்து உருவாக்கும் நிலமை இருக்கின்றது. ஆனால் 30 வருஷங்களுக்கு முன் பாடகர்கள், இசை ஆவர்த்தனம் எல்லாம் ஒருசேரக் குழுமினால் தான் ஒரு பாடல் பிரசவிக்கும் என்ற நிலை. அந்தப் பழைய நினைவுகளை இந்த ஒலிப்பதிவு சாட்சியம் பகிர்கின்றது.
இந்த ஒலிப்பதிவை ரவிசங்கர் ஆனந்த் இன் நண்பர் சிங்கப்பூர் அலெக்ஸ் அவர்கள் வைத்திருந்த ஒலிக்களஞ்சியத்தில் இருந்து பெற்றராம். இருவருக்கும் நன்றிகளை இதேவேளை தெரிவித்துக் கொண்டு தொடர்ந்து அந்த ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ அழைக்கின்றேன்.
"பாவையர்கள் மான் போலே" என்ற அந்தப் பாடல் உருவான போது செய்த இசை ஒத்திகை
"பாவையர்கள் மான் போலே" பாடல் முழுமையாகப் பிரசவித்த போது
முன் சொன்ன பாடலைப் பலருக்குத் தெரியவிட்டாலும் இதே படத்தில் வந்த, ஜெயச்சந்திரன் பாடும் "ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா" நிறையப்பேருக்குப் பரிச்சயம். அந்தப் பாடலைக் கேட்க

Subscribe to:
Posts (Atom)