Pages

Monday, December 8, 2025

பாடகர் கங்கை அமரன்

பண்பாடும் தாமரையே 

வா வா

இசையில் விளையும் 

தேமாங்கனி.....

இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இன்றைய தேதியில் வாழும் தமிழ்த் திரையிசைத் தகவல் பொக்கிஷமாக விளங்கும் கங்கை அமரன்.

பாடலாசிரியராக, இசையமைப்பாளராக, இயக்குநராக, தயாரிப்பாளராக அவரின் பன்முகப் பரிமாணத்தில் தவிர்க்க முடியாத இன்னொரு அங்கம் பாடகர் கங்கை அமரன்.

இசைஞானி இளையராஜாவின் பிஞ்சுக் குரல் போல அப்படியே இன்றுவரை தொனிக்கும் அமரனது குரல்.

அடிப்படையில் அவரே ஒரு இசையமைப்பாளராக இருப்பதால் ரொம்பவே கஷ்டப்பட்டு வார்த்தைகளை வளைக்காமல், வலிக்காமல் பாடிக் கொடுப்பார். 

தனக்குப் பிடித்த பாடகக் குரலாக கார்த்திக் ராஜா அடையாளப்படுத்தியது கங்கை அமரனைத்தான்.

“ஓட்டுக் கேட்டு வருவாங்கண்ணே” போன்ற பாடல்களில் இளையராஜா சகோதரர்கள் கூடப் பாடியதோடு,

"அண்ணன்மாரே தம்பிமாரே" (ஆனந்தக் கும்மி), உட்டாலக்கடி (மை டியர் மார்த்தாண்டன்) பாடல்களில் எஸ்பிபி குழுவினரோடு அதகளப்படுத்தியதோடு,

வாடி என் கப்பக்கிழங்கே போன்ற ஏராளமான குழுப்பாடல் வகையறாவிலும், 

வாடி என் பொண்டாட்டி நீதானே (வெள்ளை ரோஜா), மச்சான வச்சுக்கடி (நான் பாடும் பாடல்) போன்ற துள்ளிசையிலும், குரலை மாற்றிப் பரிமளித்த “குத்தாலத்தில் தண்ணி இல்லைன்னா” ( புதுப்பாட்டு),

ஏன் அவரே இசையமைத்த பிள்ளைக்காக படப்பாடலான “மழலையின் மொழியினில் அழகிய தமிழ் படித்தேன்” பாடல்கள் தோறும்  பரிமளித்தவர். பாடல் தொகுப்பு கானா பிரபா

கங்கை அமரனுக்குப் போய் சேரக் கூடாது என்று நினைத்த பாட்டு “தர்மம் வெல்லும்” படத்துக்காக எஸ்பிபி & சித்ரா ஆகியோர் பாடிய “தேவி தேவி நீ என் தேவி” ஐ படத்தில் ஏனோ மீளவும் கங்கை அமரனை வைத்துப் பாட வைத்தது ஏனோவென்று புரியவில்லை.

கங்கை அமரன் பாடிய காதல் பாடல்கள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்.

“சோலைப் புஷ்பங்களே” போன்ற புகழ்பூத்த பாடல்கள் கங்கை அமரன் பெயர் சொல்லும் என்றாலும்,

“பண்பாடும் தாமரையே”, மற்றும் “விழியே நலமா” போன்றவை அவரின் உன்னதங்கள் என்பேன்.

“மன்னன் கூறைச்சேலை” பாடலின் இடைக் குரலாக வந்து மயக்குற வைப்பார்.

அந்த வகையில் இங்கே நான் பகிர்ந்திருக்கும் இசைஞானி இளையராஜா இசையில் கங்கை அமரன் பாடிய ஜோடிப் பாடல்கள் சொல்லும்

அவரின் பாட்டுத்திறன் குறித்து

1. சோலைப் புஷ்பங்களே – இங்கேயும் ஒரு கங்கை

https://www.youtube.com/watch?v=01EzymmWxtU

2. இரு பாதம் பார்த்தேன் – மனித ஜாதி

https://www.youtube.com/watch?v=olgPSEWbJdw

3. புதுசு புதுசு – மனித ஜாதி

https://www.youtube.com/watch?v=p3EB8KlessI

4. தெற்குத்தெரு மச்சானே – இங்கேயும் ஒரு கங்கை

https://www.youtube.com/watch?v=9mARPaSy5Ak

5. பூஜைக்கேத்த பூவிது – நீதானா அந்தக் குயில்

https://www.youtube.com/watch?v=sA22pnpNQoI

6. பண்பாடும் தாமரையே வா – நீ தொடும் போது

https://www.youtube.com/watch?v=czhBDXYhsPk

7. மன்னன் கூறைச் சேலை – சிறைச்சாலை

https://www.youtube.com/watch?v=MOG7TxoEXyA

8. விழியே நலமா உனை நான் கேட்கிறேன் – தூரத்துப் பச்சை

https://www.youtube.com/watch?v=f6B1yva1RU0

9. சாமியை வேண்டிக்கிட்டு – கவிதை பாடும் அலைகள்

https://www.youtube.com/watch?v=c-9d3iUCou4

10. சொல்லிக் கொடு சொல்லிக்கொடு – கேள்வியும் நானே பதிலும் 

நானே

https://www.youtube.com/watch?v=JLqfdTq3a48


அடி குயில்கள் வாழும் நாள் வந்தால்

அடி குலவைச்சத்தம் கேட்காதா

உன் தவிக்கும் துயரம் தீர்க்கத்தான்

அவன் காலடிச்சத்தம் கேட்காதா…


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 

கங்கை அமரன் அவர்களுக்கு !


கானா பிரபா

08.12.2025

Sunday, December 7, 2025

வா சகி வாசகி வள்ளுவன் வாசுகி

ஒரு பாடகரே பாடலாசிரியராகி இன்னொரு பாடகரின் பாட்டுப் பயணத்தின் திறவுகோலான புதுமையையும் தமிழ் சினிமா கண்டிருந்தது. 

வா சகி வாசகி

வள்ளுவன் வாசுகி


பாடலை எழுதியவர் புல்லாங்குழல் வாத்திய விற்பன்னர் சக பாடகர் நெப்போலியன் என்ற அருண்மொழி.

பாடலைப் பாடியளித்துத் தன் பாட்டுப் பயணத்தைத் தொடங்கியவர்

இன்றைய பிறந்த நாள் நாயகர்

ஹரிஷ் ராகவேந்திரா.


“சிறகே இல்லாத பூங்குருவி 

 ஒன்று வானத்தில் பாரக்கிறது”

சோகம் பொழியும் இந்தப் பாடல்தான் ஹரிஷுக்கு முதல் வாய்ப்பு.

தாலி புதுசு படத்திக்காக தெலுங்கின் புகழ்பூத்த இசையமைப்பாளர் சோமன் ராஜூ இசையளித்தது.

இந்த மாதிரி ஒரு அபசகுனமாக எழும் பாடல் வாய்ப்பு எஸ்.ஜானகிக்கும் வாய்த்தது “விதியின் விளையாட்டு” படத்தில் “என் ஆசை பாழானது ஏனோ” என்று தான் தொடங்கினார். 

அந்தப் படம் வெளிவரவில்லை.


அது போலவே ஒரு நல்ல முகவரியை அளித்து, தாலி புதுசு படத்துக்கு முன்பே வித்யாசாகர் இசையில் அற்புதமான அந்த “வா சகி” பாடல் அரசியல் படத்துக்காகப் பாடி முந்தி வெளியீடு கண்டது.


ஹரிஷ் ராகவேந்திராவோடு கூடப் பாடிய உமா ரமணன் ராசிக் கணக்கும் அப்படி.

“பூங்கதவே தாழ் திறவாய்” பாடல் தான் தாமதமாக வந்து தீபன் சக்ரவர்த்திக்குப் புகழ் அளித்தது போலவே இங்கும் நடந்தது. இன்னும் சொல்லப் போனால்

விஜய் என்ற பெயரில் வந்த உன்னிமேனனோடு உமாரணன் ஜோடி சேர்ந்த “பொன்மானே கோபம் ஏனோ” கூடச் சேர்த்தி.


இந்த ஜோடி சில வருடங்களுக்குப் பின் 

“கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு” பாடலிலும் இணைந்து வசீகரித்தார்கள்.


வா சகி

வாசகி

வள்ளுவன் வாசுகி


என்று எடுத்த எடுப்பிலேயே சினிமா இலக்கணத்தில் குழைத்து வார்த்தை விளையாட்டுக் காட்டியவர்


இந்த குளமெங்கும் 

பொங்கும் அலை இங்கு 

“கல்லை எறிந்தவன் நீ”


“ஒரு கள்ளம் புரிந்தவள் நீ”


என்று பாட்டு நெடுக வார்த்தை ஜாலம் காட்டுவார் பாடலாசிரியர் அருண்மொழி.


ஒரு புதுப் பாடலை எடுத்து அதிகபட்சமாக அழகுபடுத்தித் தருவார் ஹரிஷ். கூடப் பாடியவர் உச்ச ஸ்தாயியில் நின்று சிக்சர் அடிக்கும் போது கவனமாக வாங்கி தாழ் பரப்பில் நின்று விளையாடுவார்.

அதனால் தான் முப்பது வருடங்களைத் தொடப் போகும் தன் பாட்டுப் பயணத்திலும் 


தென்றல் நிலவோடு சேர்ந்து 

கருவான இளைய மகரந்தமாய்

விளங்குகிறார் எங்கள் ஹரிஷ் ராகவேந்திரா.


கானா பிரபா

06.12.2025

Thursday, December 4, 2025

ஏவிஎம் சரவணன்

ஒரு தயாரிப்பாளருக்கும், முதலீட்டாளருக்கும் நிறைய வேற்றுமை உண்டு என்பதை அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிறுவியது AVM நிறுவனம். 

அதன் ஆரம்ப காலத்தில் திருப்தி தராத முழு நீளக் காட்சிகளையே தூக்கி விட்டு மீண்டும் படப்பிடிப்பை நடத்துவாராம் ஏவி மெய்யப்பச் செட்டியார்.

நாயகனையே மாற்றி எடுத்த வரலாறும் உண்டு. அந்த நாள் படத்தில் முதலில் ஒப்பந்தமானவர் கல்கத்தா விஸ்வநாதன்.

எடுத்தவரைக்கும் அப்படியே தூக்கிப் போட்டு விட்டு சிவாஜி கணேசனை நாயகனாக்கி மீள எடுத்தாராம் மெய்யப்பச் செட்டியார்.

அவர் வழியில் வந்ததாலே என்னவோ தந்தையின் சர்வ லட்சணங்களும் கொண்டதால் தான் ஏவிஎம் சரணவன் முரட்டுக் காளைக்குப் பின் அடித்து ஆட முடிந்தது.

ஏற்கனவே எடுக்கப்பட்டு ஓடாத “உறவுக்குக் கை கொடுப்போம்” படத்தின் கதையை விசு கொண்டு வரவும், அதில் மனோரமா பாத்திரத்தை உருவாக்க வைத்து “சம்சாரம் அது மின்சாரம்” படத்தை வெற்றிப்படமாக்கியது அவரின் ஆளுமைத் திறன்.

மதுவின் தீமையை மையப்படுத்தி சிவசங்கரி எழுதிய “ஒரு மனிதனின் கதை” நாவலை தொலைக்காட்சித் தொடராக்கி பின்னர் தியாகு என்று படமாக்கியதும் அவரின் தொழில் விற்பன்னம்.

பாராட்டுவதில் கஞ்சத்தனமே பார்க்க மாட்டார். ஏவிஎம் 60 சினிமா என்ற தனது நூலின் கடைசிப் பாகத்தில் அந்த நிறுவனத்தில் வேலை செய்தவரிடம் கற்றுக் கொண்ட அனுபவப் பாடத்தோடு முடித்திருப்பார்.

“மாநகர காவல்” படப்பிடிப்பில் இரண்டு நாட்கள் இரவு, பகலாக தொடர்ச்சியாக கேப்டன் நடித்துக் கொடுத்ததை எத்தனை முறை சொல்லி இருப்பார்.

இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தரின் ஆத்ம நண்பராக, அவர் உயர்வில் அழகு பார்த்தவர் ஏவிஎம் சரவணன்.

தன்னோடு கூடவே இருக்க வேண்டும் என்று படம் இயக்காத காலத்திலும் எஸ்.பி,முத்துராமனுக்கு ஒரு அறை ஒதுக்கினார். அவருக்குத் தனிமை வரக்கூடாது என்று ஏற்பாடு செய்தவர் இயக்குநர் வி.சி.குகநாதன்.

ஜெமினி படத்தின் பெரு வெற்றிக்கு சரவணன் போட்ட கணக்குத்தான் “ஓ போடு” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் இயக்குநர் சரண்.

சூப்பர் ஸ்டாருக்கு எந்த இசையமைப்பாளரும் போதுமென்று நிறுவியவர். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா பாடல் சந்திரபோஸ் இசையில் அழியா அடையாளமாகி விட்டது. 

இன்று உலகம் முழுக்க சாய் வித் சித்ரா பேட்டிகளைப் பேசிக் கொண்டிருக்கிறோம்.  அதன் தொடக்க நிகழ்ச்சியில் பேட்டிக்கு வந்த ஏவிஎம் சரவணன் ராசி நல்ல ராசி. 

ஏவிஎம் குமரன் இசைஞானம் மிக்கவர். அவரின் அனுபவங்களைக் கேட்டறிந்திருக்கிறோம். ஆனால் ஏவிஎம் சரவணனும் இலேசுப்பட்டவர் இல்லை. 

ஏவிஎம் தயாரிப்பில் “அம்மா” திரைப்படம் இயக்குநர் ராஜசேகரின் இயக்கத்தில், சங்கர் - கணேஷ் இசையமைப்பில், இசையரசி சுசீலா பாட, வைரமுத்து வரிகளில் 

“பூ முகம் சிவக்க

 சோகம் என்ன நானிருக்க”

https://m.youtube.com/watch?v=GM7Z3q8N9dc

என்ற பாடல் பதிவாகிறது.

ஒலிப்பதிவை இடை நிறுத்துகிறார் சரவணன்.  எல்லோருக்கும் இனம் புரியாத ஐயம். அப்போது அவர் சொன்னாராம்

சரணத்தில் வரும்

“இந்த இரவு விடிந்து விட வேண்டும்

இல்லை பருவம் கரைந்து விட வேண்டும்”

என்ற வரிகள் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் எனவே அதற்கு இசை கொடுக்காமல் ஒலிப்பதிவு செய்யுங்கள் என்றாராம்.

https://m.youtube.com/watch?v=yaBC_hsOLjc

ஏவிஎம் சரவணனின் இசையறிவுக்கும், தன் தயாரிப்பில் இருக்கும் ஒவ்வொரு அசைவுக்கும் இருக்க வேண்டிய நுணுக்கத்துக்கும் இதுவொரு எடுத்துக்காட்டு.

“முயற்சி திருவினையாக்கும்”

இது ஏவிஎம் இன் தாரக மந்திரம்

“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”

அது ஏவிஎம் சரவணன் தலைமேற்கொண்ட மந்திரம்

ஏவிஎம் இன் காலம் என்று உண்டு 

அதில் ஏவிஎம் 2.0 என்றால் ஏவிஎம் சரவணன் தான். 


டிசெம்பர் 3 அவரின் பிறந்த நாள்

டிசெம்பர் 4 அவரின் பிரிந்த நாள்


எழுத்தாக்கம் : கானா பிரபா

04.12.2025