Pages

Sunday, April 27, 2025

சிரித்துக் கொண்டே பாட்டுப் போட்ட இளையராஜா அதிர்ச்சியில் கே.பாலசந்தர்

சிரித்துக் கொண்டே பாட்டுப் போட்ட இளையராஜா

அதிர்ச்சியில் கே.பாலசந்தர்

இப்படித்தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். அப்படியொரு அசகாயச் செயலை விபரிக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

புன்னகை மன்னன் பாடல் பதிவுக்காக இயக்குநர் கே.பாலசந்தர் குழுவினர், இசைஞானி இளையராஜாவோடு ஐந்து நாட் பயணத் திட்டத்தில் மதுரைக்குப் போய் ஒரு ஓட்டலில் தங்குகிறார்கள். 

அன்று காலை வாக்கில் கே.பாலசந்தர் படத்தின் கதையைச் சொல்லி ஐந்து பாடல்களுக்கான காட்சியைச் சொல்லி விட்டு, இளையராஜாவிடமிருந்து விடைபெற்று காலை 9 மணிக்கு விடை பெறுகிறார்கள்.

காலை 11 மணி அளவில் இளையராஜாவிடமிருந்து அழைப்பு.

ஐந்து பாட்டுகளுக்கும் மெட்டுப் போட்டுக் காட்டி விடுகிறார்.

அன்று மதியமே வைரமுத்துவும் பாடல்களை முடித்து விடுகிறார்.

ஆறாவதாக மாமாவுக்குக் குடும்மா குடும்மா பாடலை மாலை நேரம் தயாராக்கி விடுகிறார் இசைஞானி.

ஐந்து நாள் வேலை ஒரு மணி நேரத்தில் ராஜா கணக்கில் முடித்து வைக்கப்படுகிறது. இவரைத்தான் காசுக்காக அலைபவர் என்று ஒரு கூட்டம் இன்னமும் சொல்லிக் கொண்டு திரிகிறது பாருங்கள்.

இன்று வரை இந்தப் பாடல்கள் கூட இந்த நிமிடம் போட்டது போல அத்துணை புத்துணர்ச்சி வேறு.

"என்ன சத்தம் இந்த நேரம்" பாடல் ஒலிப்பதிவில் எஸ்பிபி பாடத் தயாராகும் போது

"இதைத் தணிந்த குரலில் பாடுங்கள்" என்று வேண்டுகோள் வைக்கிறார் ராஜா.

இந்தப் பின்புலத்தை சுரேஷ் கிருஷ்ணா சொல்லி முடித்ததும்

இப்போது இந்தப் பாடலைக் கேட்கும் போது, அந்தக் காதலர்களுக்கே தன் ஓசை படாமல் அந்தப் பாடல் அவர்களைப் பற்றிப் பாடுவது போலவொரு மனவெழுச்சி எழுகிறது.

Touring Talkies இல் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் அனுபவத் தொடரைத் தவற விடாதீர்கள்.


https://www.youtube.com/watch?v=ZJB_sO_pjWA

Thursday, April 24, 2025

இளையராஜா இசையமைக்க ஜெயகாந்தன் பாட்டு எழுதினார் ✍️

புகழ் சேர்க்கும் புது வாழ்வு

புலர்கின்ற நேரமிது

நிகழ்காலக் கருவறையில் 

நம் எதிர்காலம் துயில்கின்றது

கருவழிக்கும் கலியிருளை

செங்கதிர் வந்து கிழிக்கிறது

கரு விழியே

கண் மலரே

கரு விழியே

கண் மலரே

கண் திறந்து 

காணாயோ…..

https://youtu.be/zT4KPjJfy8M?si=c7nUIs2lK5sCS35s

இப்படியாக ஒரு குறும்பாடலையும்

எத்தனை கோணம் எத்தனை பார்வை

https://youtu.be/sqKKG6Mojio?si=28akaPKFn-vorJnn

என்ற பொதுவுடமை பொருள் பொதிந்த பாடலையும் மலேசியா வாசுதேவன் பாடவும், இசைஞானி இளையராஜா இசையில் எழுதியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

“எத்தனை கோணம் எத்தனை பார்வை” படம் கூட முழுமையாக எடுக்கப்பட்டு இன்னும் வெளிவராமல் முடங்கியிருக்கிறது. அதன் பிரதி எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை என்றார் படத்தின் இயக்குநர்  B.லெனின்.

ஒரு சாஸ்திரிய இசைப் பின்னணி கொண்ட கதை என்பதைப் பாடல்களைக் கேட்டமாத்திரம் அனுமானிக்க முடிந்தது. அதை உறுதிப்படுத்துமாற்போல இந்தப் படக் கதை பின்னாளில் வந்த “சிந்து பைரவி” ஐ ஒத்தது என்றார் லெனினின் சகோதரர் ஹிருதயநாத்.

விக்கிப்பீடியாவிலும் ஜெயகாந்தனின் “எத்தனை கோணம் எத்தனை பார்வை” என்ற நாவலில் இருந்து படமானது என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால் அந்த இரு தகவல்களுமே முற்றிலும் தவறானவை. லெனின் கொடுத்த ஒரு பேட்டியில் ஜெயகாந்தனின் “கரு” மற்றும் “காத்திருக்க ஒருத்தி” ஆகிய நாவல்களை இணைத்து எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்காகவே இந்த இரண்டு நாவல்களையும் படித்தேன். பின்னர் படத்தின் ஒளிப்படங்களோடு பொருத்திப் பார்த்த போது சரியாக ஊகிக்க முடிந்தது.

“கரு” கதையில் முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு பெண், திருமணம் முடித்ததுமே குழந்தைப் பேறு என்ற சம்பிரதாயத்தில் உழல விரும்பாதவள். அவளின் இணையாக வருபவன் ஆதரவின்றி அலைக்கழிந்து, மல்யுத்தம் கற்ற வீரன். அவனின் பின்னணி மற்றும் போட்டிக் குழுப் பெயர் எல்லாம் அச்சொட்டாக “சார்பாட்டா பரம்பரை” படத்திலும் வருகிறது. அந்தக் கதையின் நாயகர்களாக ஶ்ரீப்ரியா மற்றும் தியாகராஜனைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

இரண்டாவது கதை “காத்திருக்க ஒருத்தி”. திருமணமானதுமே இசைக் கலைஞனான தன் கணவனின் குடி, மாதுப் பழக்கத்தால் வெறுத்துப் போய் அவனை ஒதுக்கும் ஒரு பெண் பின்னர் தன் மகனின் திருமணத்தின் போது தன் கணவனை எதிர்கொள்ளும் கதை.

இந்தக் கதையில் இசைக் கலைஞனாக சாருஹாசனும், மகனாக சுரேஷ் மற்றும் சுரேஷின் காதலியாக நளினி ஆகத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

இந்த ஊகங்களைப் படத்தின் எல்பி ரெக்கார்ட்ஸ் காட்சிகள் நிரூபிக்கின்றன.

இயக்குநர் B.லெனினுடன் இதற்காகவே ஒரு பேட்டி செய்ய ஆவல். அவரின் தொடர்பிலக்கம் தேடுகிறேன். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

இன்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த தினம்.

கானா பிரபா

24.04.2025






Wednesday, April 23, 2025

இந்திரலோகத்துச் சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ ❤️❤️❤️

திரையிசைப் பாடல் போட்டிகளில் Retro round என்று வரும் போது மிகப் பெரிய ஏமாற்றம் எழுவதுண்டு. காரணம் T.ராஜேந்தர் என்ற மிக உன்னதமான ஆளுமையைக் கணக்கில் எடுக்காமல் பழகிப் போனதை வைத்தே ஆண்டாண்டு காலமாக ஜல்லி அடிக்கிறார்களே என்று.

இந்திரலோகத்துச் சுந்தரி பாடலைப் பொறுத்தவரை திரையிசையின்  எல்லாக் கூறுகளையும் கலந்து அடித்த அற்புதமான படையல்.

அதில் மேற்கத்தேயமும் இருக்கும் அப்படியே கொண்டு போய் சாஸ்திரிய சங்கீதத்திலும் கலந்து விட்டு மீளவும் மேற்கத்தேயத்தில் முக்குளிக்கும்.

டி.ஆர் முத்திரையாக அந்த ட்ரம்ஸ் தாள லயத்தில் பாடல் தொடங்கும் ஆனால் திருப்பமாக பி.எஸ்.சசிரேகா வந்து

ஏலேலம்பர ஏலேலம்பர 

ஏலேலம்பர ஹோய்…

என்று ஒரு தெம்மாங்கு நிரவலைக் கொடுத்து விட்டு எஸ்பிபிக்கு வழிவிடுவார்.

வருபவர் ஆர்ப்பாட்டமாக வருகிறாரா பாருங்கள்?

மிகவும் தணிந்த குரலில் 

இந்திரலோகத்துச் சுந்தரி 

ராத்திரிக் கனவில் வந்தாளோ?...

என்று காதல் ரசம் சொட்டுவார் அந்த ராட்சசன். எந்த இடத்தில் எது தேவை என்றுணர்ந்தவர் அல்லவா?

அவர் குரல் கொடுக்கும் போது பின்னணியில் மின்மினி போல மினி மறையும் இசைக் கீற்றைக் கொடுப்பார் டி.ஆர்.

இங்கே பாருங்கள்

தென்றல் அதன் விலாசத்தை

தம் தோற்றமதில் பெற்று வந்தவள்

மின்னலதன் உற்பத்தியை

அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்

முகத்தைத் தாமரையாய்

நினைத்து மொய்த்த வண்டு

ஏமாந்த கதைதான் கண்கள்

சிந்து பைரவியியை சிந்தும் பைங்கிளியின்

குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்..

பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்

அதில் பரதமும் படிக்குது அபிநயம்

அப்படியே இன்னொரு திசையில் பரத  நாட்டியத்துக்குள் கொண்டு போய் விடும் இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் துணைக்கழைப்பது மிக அற்புதமாகக் கவி வல்லமை காட்டவல்ல பாடலாசிரியர் டி.ராஜேந்தரை. அடுத்த சரணத்திலும் இன்னொரு குட்டி பரதநாட்டிய அரங்குக்கு வழி சமைப்பார்.

இந்த மாதிரி fusion அலங்காரத்துக்கு வீணை, புல்லாங்குழல், தபேலா எவ்வளவு அழகாக நயம் செய்கிறது பாருங்கள்.

டி.ராஜேந்தரின் உவமைச் சிறப்பு என்றொரு ஆராய்ச்சி நூல் எழுதினால் இந்தப் பாடல் சிகரமாக நிற்கும்.

லாலால லா லாலால லா

இந்திரலோகத்துச் சுந்தரி ராத்திரிக் கனவினில் வந்தேனோ

கொஞ்சமே வந்தாலும் கொஞ்சும் குரலில் அள்ளிச் செல்வார் சசிரேகா. அங்கேயும் ம்ம்ம் ம்ம் கொட்டி அரவணைப்பார் எஸ்பிபி.

உயிருள்ள வரை உஷா படத்தில் இருந்து தான் ஒரு கச்சிதமான அரங்க அமைப்பை உருவாக்கிப் பாடலைப் பதிவாக்க வேண்டும் என்ற முறைமையை டி.ராஜேந்தர் கொண்டு வந்தார். அதற்கு மிக முக்கிய காரணம் படத்தைத் தயாரித்த பிலிம்கோ நிறுவனத்தில் அப்போது இயங்கிய தயாரிப்பு நிர்வாகி எம்.கபார் இந்த வேண்டுகோளை அவரிடம் வைத்ததாக சாய் வித் சித்ராவில் குறிப்பிட்டிருப்பார். 

ஆனால் அதை வைத்துக் கொண்டு பின்னாளில் அரங்க அமைப்பிலும் ராஜேந்தர் புதுமை காட்டியது அவரின் பன்முகத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அலையிலோ அல்லது இசைஞானி இளையராஜாவின் அலையிலோ சிக்காது தனக்கென ஒரு இசை அலையை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ராஜேந்தர். 45 வருடங்களுக்கு முன்னர் எழுந்த அந்த அலை இன்றும் கூலி வரை தேவையாக இருக்கிறது. அதுதான் T.ராஜேந்தர் மகத்துவம்.

ரதி என்பேன் மதி என்பேன்

கிளி என்பேன் நீ வா

உடல் என்பேன் உயிர் என்பேன்

உறவென்பேன் நீ வா

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி

கனவினில் வந்தாளோ

https://www.youtube.com/watch?v=IKwv5pL0oo4

கானா பிரபா

22.04.2025


Friday, April 11, 2025

என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே….


என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழிப் பார்வையிலே….

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி கூட்டணியில் “வெண்ணிற ஆடை” படத்தில் உருவான அந்தப் பாடலை பியானோவில் வாசித்துக் காட்டுகிறார் ராஜா.

அடேயப்பா பியானோ வாசிப்புக்குண்டான அத்தனை இலக்கணங்களையும் இந்தப் பாடல் சொல்லிக் காட்டுகிறதே என்று ஆச்சரியப்பட்டுப் போனாராம் தன்ராஜ் மாஸ்டர்.

அதுவரை தன்ராஜ் மாஸ்டரின் இசைப் பட்டறையில் சினிமாப் பாடலை எடுத்துப் பயிற்சி எடுப்பது வழக்கம் இல்லை என்பதால் சக இசை மாணவர்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்களாம்.

மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் போலவே, நாடகச் சூழல் அனுபவத்தால் இசையை வளர்த்துக் கொண்டவர் ராஜா. தன் முன்னோர்கள் தன்னுடைய இசை வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் கட்டை விரல் கேட்காத துரோணாச்சாரியார்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவோர் உதாரணம்.

ஓய்வு இடைவேளைகளில் தன்னோடு சினிமாவில் வாசித்த சக கலைஞர்களிடம் Trinity College தேர்வுக்காக ஒவ்வொரு notes ஐயிம் வாசிக்கக் கேட்டுப் பயிற்சி எடுத்துக் கொண்ட தேடல் எல்லாம் தான் பின்னாளில் அசுர விளைச்சலாகி இருக்கிறது.

என் பால்ய வயதில் யாழோசை கண்ணன் என்ற இசை விற்பன்னர் கீபோர்ட் வாசிப்புப் பயிற்சிக்கு இசைஞானியின் நிலவு தூங்கும் நேரம் பாடலையே பால பாடமாக வைத்ததைச் சொல்லி இருந்தேன். இதெல்லாம் தொட்டுத் தொடரும் பந்தம்.

“நீங்க கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டது அறுபதுகளுக்குப் பின்னால் தானே?”

என்று புதிய தலைமுறை வழி சமஸ் கேட்ட கேள்விக்கு,

“இன்னும் கத்துக்கிட்டுத்தான் இருக்கேன்”

என்கிறார் இந்த 82 வயதுப் பையன் 😊😍❤️

கானா பிரபா

மலையோரம் வீசும் காத்து

மலையோரம் வீசும் காத்து

மனசோடு படும் பாட்டு 

கேக்குதா….கேக்குதா….❤️

சோகப் பாடல் என்றாலும் தலைமுறை தாண்டி சாகாவரம் பெற்ற பாட்டு. அதனால் தான் ஈராயிர யுக இசை மேடைகளிலும் தவிர்க்க முடியாமல் வீற்றிருக்கின்றது.

இந்தப் பாடல் படமானதே சுவாரஸ்யமான விடயம் தான். அடுத்த நாள் பாடல் காட்சியைப் படமாக்க வேண்டும். ஆனால் இன்னும் கைவசம் பாடல் இல்லையே என்று “பாடு நிலாவே” இயக்குநர் கே.ரங்கராஜ் வேண்டியழைக்க, பாடல் காட்சி படமாக்கும் இடத்துக்கே இரவோடிரவாக இந்தப் பாடல் வந்து சேர்ந்ததாம். 

இசைஞானியின் அசுர வேகம் சொல்லத் தேவை இல்லை. கூடவே சூழலை உணர்ந்து ஒரே டேக்கில் பாடிக் கொடுத்து விடும் சூப்பர் சொனிக் வேகம் பாடும் நிலாவிடம்.

கூடவே வாலியும் இருக்கிறாரே. இப்படியாக ஆச்சரியப் பட எதுவும் இல்லாத அசுரர்களின் விளைச்சல் இது என்றாலும் ஆச்சரியப்பட்டுப் போனது தான் கதை.

அதாவது பாடல் வந்து சேர்ந்து ஐந்து மணி நேரத்திலேயே ஒரே மூச்சில் படமாக்கி விட்டாராம் இயக்குநர். 

இப்போது போய் பாடல் காட்சியைப் பாருங்கள். ஏதோ வருஷக் கணக்காகப் புழங்கிய பாடல் போல மோகனின் வாயசைப்பு அச்சொட்டாக அந்த எஸ்பிபியே தான்.

https://youtu.be/BgbafEuP8RE?si=nBh7N_G0EuByzCwL

தொழில் நுட்பம் இன்று போல் வளராத காலத்தில் இப்பேர்ப்பட்ட ஆச்சரியங்கள் எல்லாம் விளைந்து விட்டது.

இந்தப் பாடலை முதலில் மனோ பாட இருந்தாராம்.

மலையோரம் வீசும் காத்து என்று விட்டு கடலோரம் ஏன் படமாக்கி இருக்கிறார்கள் என்று படம் வந்த போது யாரும் கேட்கவில்லை. ஆனால் அப்படியொரு உரையாடல் பாடல் காட்சியைப் பார்த்த போது எழுந்ததாம்.

மலையோரம் வீசும் காத்து

மனசோடு பாடும் பாட்டு

கேக்குதா... கேக்குதா...❤️

✍️ கானா பிரபா


Friday, April 4, 2025

இளையராஜாவின் அம்மா


"போட்டோ எடுத்த அந்த நொடியில் இருந்தது அந்தம்மா தானே?

அப்ப அந்த நொடி உண்மைன்னா 

அந்த போட்டோ உண்மை தானே? 

போட்டோ அம்மா தானே?"

தந்தி தொலைக்காட்சிப் பேட்டியில் இசைஞானி இளையராஜா இந்தக் கருத்தைப் பகிர்ந்த போது நெக்குருகி விட்டேன்.

 நாம் எத்தனை வயசு கடந்தாலும் அம்மாவுக்குச் செல்லப் பிள்ளை தான். அந்தப் பிரியமும், செல்லமும் என்றென்றைக்கும் மாறாதாது.

தன் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் போது தங்களுக்கு டாட்டா காட்டி விட்டுப் போவதைப் பார்த்த இளையராஜா அம்மா தனக்கு டாட்டா இல்லையா என்று கேட்டாராம்.

"அம்மா நான் உங்களுக்குச் சொல்றேன்" என்றுவிட்டு அன்று முதல் தான் ஒலிப்பதிவு கூடம் கிளம்பும் போது தன் தாயாருக்கு டாட்டா காட்டி விட்டுத்தான் போவாராம் ராஜா.

1989 இல் தன் தாயார் இவ்வுலகை விட்டு நீங்கிய போதும் இன்று வரை தன் அம்மா படத்துக்கு டாட்டா காட்டி விட்டுத்தான் போவாராம் ராஜா.

ராஜாவின் குழந்தை உள்ளத்துக்கு ஒரு வாழ்வியல் எடுத்துக்காட்டு.

எங்கள் அப்பா எங்களை விட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் நெருங்கினாலும் இன்னமும் அவர் ஊரில் இருப்பதாகவே நினைத்துக் கொள்வேன்.

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் 

நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" 

என்று அப்பா தொலைபேசும் போது அடிக்கடி சொல்வது இன்னமும் என் காதிலும், நெஞ்சிலும் பத்திரமாக இருக்கிறது.

தாய் போல யார் வந்தாலுமே

உன் தாயைப் போலே அது ஆகாது ❤️