தமிழகத்தில் நான் முதன் முதலில் காலடி வைத்து இந்த ஆண்டோடு 20 ஆண்டுகள் நிறைவுறுகிறது. வேலை நிமித்தம் பெங்களூருக்கு வந்தவன், பெரியம்மா வீட்டையும் (!) எட்டிப் பார்ப்போம் என்று சென்னைக்கு வந்தேன்.
தேவி பாரடைஸ் சென்று “கன்னத்தில் முத்தமிட்டால்" பார்த்து விட்டுத் திரும்பியவன் முன்னால் ஒரு சிறு புத்தக அங்காடி கண்ணில் படவும், அங்கே தொங்கியிருந்ததில் ஒன்றை எடுத்தேன்.
அதுதான், ஆரூர்தாஸ் எழுதிய “சினிமா : நிஜமும் நிழலும்".
ஆகவே பெரியம்மா வீட்டுப் பரிசாக இன்னும் ஞாபகத்தில் நினைப்பூட்டிக் கொண்டிருப்பது இந்த நூல் தான். இதுவரை ஆரூர்தாஸ் அவர்களைச் சந்திக்கவே வாய்ப்பில்லாமல் போனவனுக்கு, அவரின் கையெழுத்தும் பொறிக்கப்பட்டதைப் பெற்றதைத் தான் ஒரு அதிசயமாக நினைத்துக் கொள்கிறேன்.
“சிற்றுளியும் மலையைப் பிளக்கும் !
சிறிய படமும் வசூலை அளக்கும்”
“விதி” படத்தின் விளம்பர வாசகம் கூட ஆரூர்தாஸின் கைவண்ணமே. அறிஞர் அண்ணாவின் “வேலைக்காரி”, கலைஞர் கருணாநிதியின் “பராசக்தி” படத்தின் நீதிமன்றக் காட்சிகள் எவ்வளவு தூரம் ரசிகர் மனதில் கோலோச்சினவோ அதுபோலவே, பராசக்திக்குப் பின் 32 ஆண்டுகளுக்குப் பிறகு “விதி” படத்தின் நீதிமன்றக் காட்சிகள்
ஆரூர்தாஸின் சிற்றுளியால் செதுக்க, பெரும் வசூல் மழையைக் கொட்டிய வெற்றிச் சித்திரம் ஆனது.
அந்தக் காலத்தில் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற படங்களின் வசன ஒலிப்பேழைகளுக்கு நிகராகச் சக்கை போடு போட்டது “விதி” படத்தில் ஆரூர்தாஸ் எழுதிய வசனங்களோடு மிளிர்ந்த ஒலிச்சித்திரம். இன்றும் நமக்கெல்லாம் அந்தப் படத்தின் வசனங்கள் மனப்பாடம் ஆகுமளவுக்குப் பதியம் போட்டது.
மொழி மாற்றுப் படங்களுக்கு வசனமெழுதித் தொடங்கிய இவரின் கலைப்பயணத்தில் தமிழில் நேரடி கதை, வசனகர்த்தா என்ற அந்தஸ்தைக் கொடுத்தது தேவரின் “வாழ வைத்த தெய்வம்”.
தொடர்ந்து நீண்ட நெடுங்காலம் அவரைக் கதை வசனகர்த்தாவாக வாழ வைத்தது. தேவரின் அன்புக்குரியவராக அங்கே தொடர்ந்தும் அவரின் பேனா இயங்கியது.
பின்னாளில் இது போலவே “விதி” பட வெற்றி தொடர்ந்தும் கே.பாலாஜியின் தயாரிப்பில் உருவான படங்களில் இவரை எழுத வைத்துச் சிறப்பித்தது.
கவியரசு கண்ணதாசனால் “பாசமலர்கள்” என்று சூட்டப்பட்டு, பீம்சிங்கால் “பாசமலர்” ஆக்கப்பட்டதில் வசனம் எழுதிய ஆரூர்தாஸ் அந்தப் படம் பெற்ற பெரும் புகழில் பங்கு போட்டுக் கொண்டார்.
“என் படங்கள்லே டைரக்டர் மாறுவாரு, மத்தவங்கள்ளாம் மாறுவாங்க, ஆனா ரெண்டே ரெழ்ண்டு பேர் மட்டும் எப்பவும் மாற மாட்டாங்க, ஒருத்தர் சிவாஜி கணேசன் இன்னொருத்தர் ஆரூர்தாஸ்” என்று சொன்னவர்கள் தயாரிப்பாளர்கள் சந்தானம் மற்றும் வி.சி.சுப்புராமன். அதன்படியே பாசமலர், அன்னை இல்லம், அன்பளிப்பு என்று சந்தானம் தயாரித்தவைகளிலும், வி.சி.சுப்புராமனின் பார் மகளே பார், தேனும் பாலும் படங்களிலும் சிவாஜியும்,ஆரூர்தாசும் தான்.
ஜெமினி கணேசனுக்கு அடையாளத்தை நிறுவிய “வாழ வைத்த தெய்வம்” வசனகர்த்தாவை சிவாஜிக்கு ஜெமினியே அறிமுகப்படுத்தியதால் தான் 29 படங்களில் எழுதியிருக்கிறேன் என்று நன்றி பாராட்டியிருக்கிறார் ஆரூதாஸ்.
இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆருக்காக, தாய் சொல்லைத் தட்டாதே, குடும்பத் தலைவன், அன்பே வா, பெற்றால் தான் பிள்ளையா, தனிப்பிறவி உட்பட ஒரு தொகைப் படங்களிலுமாக இரண்டு முன்னணி நட்சத்திரங்களுக்குச் சமகாலத்தில் வசனகர்த்தாவாகப் பரபரப்பாக இயங்கியவர்.
அதுபோலவே தேவர் பிலிம்ஸ், ஏவிஎம் என்று முன்னணி நிறுவனங்களின் முக்கிய வசனகர்த்தா. சிவாஜி பிலிம்ஸின் முதல் வித்தான “புதிய பறவை” படத்துக்கும் சிவாஜியே விரும்பி அமர்த்தப்பட்டவர், கடைசிக் காட்சியில்
“பெண்மையே நீ வாழ்க!
உள்ளமே உனக்கு நன்றி”
என்று முத்தாய்ப்பாக முடிக்க வேண்டும் என்று சொல்லி மீண்டும் காட்சியமைக்க வைத்தவர் ஆரூர்தாஸ்.
தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட “பூ ஒன்று புயலானது” (விஜயசாந்தியை உச்சாணிக் கொம்பில் ஏற்றிய படம்) படத்தில் ஆரூர்தாஸ் எழுதிய வசனங்கள் ஆனந்த விகடனில் வாரா வாரம் பிரசுரமானது.
“நாட்டிய தாரா” மொழி மாற்றுப் படத்தோடு தொடங்கியவருக்கு அவரின் இன்னொரு சுற்றாக மொழிமாற்றுப் படங்கள் வெற்றியைக் குவித்தன. மை டியர் குட்டிச்சாத்தான், வைஜெயந்தி ஐ.பி.எஸ், இதுதாண்டா போலீஸ், அம்மன் உள்ளிட்ட படங்களின் வெற்றியில் ஆரூர்தாசின் வசனமும் முக்கிய நாயகன்.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றுப் படங்கள் கொட்டிக் கொண்டிருந்தன. ஒரு பக்கம் மருதபரணி இன்னொரு பக்கம் ஆரூர்தாஸ் என்று பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள் அப்போது.
Touring Talkies இல் அடிக்கடி வந்த கேள்விகளில் ஒன்று சித்ரா சாரை ஆரூர்தாஸைப் பேட்டி எடுக்கும் படி கேட்பார்கள். முன்பு கொரோனா, பின்னர் சில மாதங்களுக்கு முன் ஆரூர்தாஸின் மனைவியார் இறந்த காரணத்தால் அந்தப் பேட்டி நமக்கெல்லாம் கிடைக்கும் வாய்ப்பே இல்லாமல் போனது ஆரூர்தாஸ் என்ற திரையுலக வசன “கர்த்தா”வின் நினைவுகளை அவரின் நீண்ட நெடிய பேட்டியாகப் பதியாமலேயே போய் விட்டது.
ஆரூர்தாஸ் என்ற கதை வசனகர்த்தா,
தமிழ்த் திரையுலகம் செழிப்பான உரையாடல் வளத்தோடு வாழ்ந்தது என்பதன் சாட்சியம், ஏசுவின் திருவடிகளைச் சேர்ந்தார்.
கானா பிரபா
21.11.2022
உசாத்துணை நன்றி : சினிமா : நிஜமும் நிழலும் - ஆரூர்தாஸ்