Pages

Friday, April 28, 2017

வினுச்சக்ரவர்த்தி



தமிழ் சினிமாவின் முகங்களில் ஒன்றை இழந்து விட்டோம் என்று நடிகை காந்திமதி இறந்த போது குறிப்பிட்டேன். அதையே நடிகர் வினுச்சக்ரவர்த்தி இழப்பிலும் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு நமது கிராமியச் சூழலில் வாழ்ந்து பழகியவர் போன்ற முக வெட்டும் குணாதிசியமும் கொண்டவர். பட்டைத் திருநீறும், குங்குமமும் முகத்தில் மிளிர, வேட்டி சட்டையும் கொண்ட அவரின் உருவ அமைப்பு மேலும் அதைப் பலமாக்கும்.
"டேய் சின்னவனே" "ஆங்" , "களுத" இப்படியான சின்னச் சின்ன வசன வெளிப்பாட்டிலும் தன் முத்திரைச் சிரிப்பிலும் கெத்தாகத் தனக்கான ஆளுமையை உருவாக்கியவர்.
வினுச்சக்ரவர்த்தி என்றால் "ரோஜாப்பூ ரவிக்கைக்காரி" பட சர்ச்சையும் வந்து விடும்.
இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று அவர் உரிமை கோர இன்னொரு பக்கம் நடிகர் விஜய் கிருஷ்ணராஜ் தானே உரிமையாளர் எனவும் பேட்டிகள் வந்ததுண்டு. இருவருக்குமே ரோஜாப்பூ ரவிக்கைக்காரி தான் முதல் படம். படத்தின் எழுத்தோட்டத்தில் மூலக்கதை ஆவனஹள்ளி ஶ்ரீகிருஷ்ணா எனவும், திரைக்கதை, வசனம் கிருஷ்ணா (விஜய்கிருஷ்ணராஜ்) என்றே வந்திருக்கும். நடிகர் குழுவில் அறிமுகத்தில் வினு என்ற வினுச்சக்ரவர்த்தி காணப்படுகிறார்.
இந்தக் கதையின் நதிமூலத்தைத் தேடினால் ஒரு சுவாரஸ்யமான கதை கிடைக்கிறது. நடிகர் சிவகுமாரின் நூறாவது படமாக முதலில் வினுச்சக்ரவர்த்தி கதை எழுதிய வண்டிச்சக்கரம் படமே அமைய இருந்ததாம். இந்தப் படத்துக்காக மைசூருக்குப் படப்பிடிப்பு வேலைகளுக்குப் போன போது "பரசங்கத கெண்டே திம்மா" என்ற கன்னடப்படத்தைப் பார்த்து தமிழுக்கு ஏற்றாற் போல ரோசாப்பூ ரவிக்கைக்காரி ஆக்கினார்களாம்.
தகவல் உதவி http://andhimazhai.com/news/view/sivakumar-29-04-2015.html
கன்னடப்பட இயக்குநர் புட்டன்ன கனகல் இன் உதவியாளராக இருந்தவர் வினுச்சக்ரவர்த்தி.
வண்டிச்சக்கரம் மூலம் கதாசிரியராகவும், சில்க் ஸ்மிதாவையும் அறிமுகப்படுத்தியவராகவும் இருந்தார்.
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தாலும் வினுச்சக்ரவர்த்தியின் உண்மையான நடிப்புப் பரிமாணத்துக்குத் தீனி கொடுத்தவை ஒரு சிலவே. ஆரம்ப காலத்தில் அவர் நடித்த "கோபுரங்கள் சாய்வதில்லை" அப்பன் பாத்திரம் இன்றும் மறக்க முடியாது. பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களிலேயே அமுக்கப்பட்டார். ஜனரஞ்சகப் படைப்புகளில் அண்ணாமலை படத்தில் நல்ல குணம் கொண்ட எம்.எல்.ஏ ஆக வந்து ரசிகர் மனதில் இடம் பிடித்தார்.
சின்னத்தாயி படத்திலும் ஒரு சிறப்பு வேடம் கிட்டியது இவருக்கு https://youtu.be/U--iPe2s6vI
தான் இயக்குநர் ஆக வேண்டிய கனவில் இருப்பதாகச் சொன்னவர் அந்த வாய்ப்பே இல்லாமல் போய்ச் சேர்ந்து விட்டார்.

Wednesday, April 26, 2017

என்.கே.விஸ்வநாதன் இழப்பில் சில நினைவுகள் 🎬

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர்


தன்னுடைய பெரியப்பா என்.கே.விஸ்வநாதன் காலமானதாக நண்பர் Ars Senthilarasu பகிர்ந்திருந்த அஞ்சலி இடுகையைக் காலை காண நேரிட்டது.

என்.கே.விஸ்வநாதன் நான்கு தசாப்தங்கள் திரையுலகில் ஒளிப்பதிவாளராக, இயக்குநராக அறியப்பட்டவர்.
எண்பதுகளின் திரைப்பிரியர்களுக்கு குறிப்பாக இராம.நாராயணன் படங்கள் பலவற்றின் வழியாக இவரை அறிந்திருப்பார். இராம நாராயணன் படங்களில் தந்திரக் காட்சிகள், இரட்டை வேடக் காட்சிகளை எல்லாம் இன்றைய தொழில் நுட்ப உள்வாங்கல் இல்லாத காலத்தில் இருந்தே தன்னுடைய ஒளிப்பதிவு வித்தையால் காட்சி வடிவம் எடுப்பவர் என்ற பெருமையைத் தன்னகத்தே கொண்டவர்.

இவர் இயக்குநராக ஒரே ஆண்டில் இரு படங்களினூடாக அறிமுகமானர். ஆபாவாணனின் பிரமாண்டப் படைப்பான "இணைந்த கைகள்" படம் அதிலொன்று. இந்தப் பட அனுபவம் குறித்து நான் ஆபாவாணனோடு எடுத்த வானொலிப் பேட்டியில்
http://www.radiospathy.com/2012/06/blog-post.html
அதே 1990 ஆம் ஆண்டில் இன்னொரு மாறுபட்ட படம் "பெரிய வீட்டுப் பண்ணக்காரன்" ஐ இயக்கினார். இது சங்கிலி முருகன் தயாரிப்பு.
சங்கிலி முருகன் படங்களில் பாண்டி நாட்டுத் தங்கம், எங்க ஊரு காவக்காரன் போன்றவை T.P.கஜேந்திரன் இயக்கியவை. கங்கை அமரன் இயக்கம் ஏனோ அந்தப் படங்களில் இல்லை. கங்கை அமரன் இயக்கிய படங்களாகவே இன்று பலர் அவற்றைக் கருதுகிறார்கள். இவற்றோடு சங்கிலி முருகன் தயாரித்து என்.கே.விஸ்வநாதன் இயக்கிய பெரிய வீட்டுப் பண்ணக்காரன், நாடோடிப் பாட்டுக்காரன் போன்றவையும் அடங்கும். இவற்றுக்கு இளையராஜா இசை, சங்கிலி முருகன் தயாரிப்பு என்பதால் கங்கை அமரன் இயக்கம் என்ற எடுகோள் தோன்றியிருக்கும்.

கதை,இன்ன பிற அம்சங்கள் ஏற்பாடு செய்யாமலேயே நடிகர் விஜய்காந்துக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்து சங்கிலி முருகன் ஒப்பந்தம் செய்த படம் "பெரிய மருது". அந்த 1994 ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபா என்பது இன்றைக்குப் பல கோடி பெறும். அப்போது அது பரபரப்பான செய்தி.
அந்தப் படத்தின் இயக்கமும் என்.கே.விஸ்வநாதன் தான். சங்கிலி முருகன் தயாரித்த முதல் படம் "கரிமேடு கருவாயன்" பட நாயகன் விஜய்காந்த் அப்போது பணம் வாங்காமல் நடித்ததற்காக நன்றிக் கடனாக இருக்கக் கூடும்.

என்.கே.விஸ்வநாதன் எண்பதுகள், தொண்ணூறுகளில் ஏராளம் படங்களுக்கு ஒளிப்பதிவாளர், இன்னும் பல படங்களுக்கு இயக்குநராக இருந்துள்ளார். அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

Tuesday, April 25, 2017

வைரவிழாப் பாடகி எஸ்.ஜானகி எனும் பாட்டுப் பல்கலைக் கழகம் 💚🎤💐




தன்னுடைய இசை வாழ்வில் அறுபதாண்டைத் தொட்டு நிற்கும், திரையிசை கண்ட உன்னதமான ஆளுமைகளில் எஸ்.ஜானகி ஒரு பாட்டுப் பல்கலைக் கழகம். "எஸ்.ஜானகி அளவுக்கு பாடல் தாங்கியிருக்கும் உணர்வை வெளிப்படுத்த இந்தியாவிலேயே யாரும் இல்லை" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குறிப்பிடுவது வெறும் புகழ்ச்சி மாலை அல்ல என்பதை எம் போன்ற கடைக் கோடி ரசிகனும் உணர்ந்து நிற்பான்.
பாடகி சித்ராவின் ஆரம்ப காலத்தில் ஜானகி அம்மாவின் பாட்டைக் கேளு அவங்க ஒரு பாடலை எவ்வளவு தூரம் நியாயம் செய்து பாடியிருக்காங்க என்று இளையராஜா கை காட்டிய போது அங்கே நடமாடும் பாட்டுப் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்து காட்டுகிறார்.

திரையிசைப் பாடல் என்பது வெறுமனே சங்கீத சாகித்தியத்தின் திரட்டு அல்ல அது பாத்திரத்தின் பண்பை, காட்சிச் சூழலின் அனுபவத்தைக் இசைக் கூட்டில் குரல் வழியே கடத்துவது. அங்கே ஒட்டுமொத்த பாடலுமல்ல ஒவ்வொரு வரிகளுக்குமே உணர்வு பேதம் கற்பித்துக் கொண்டு வர வேண்டும் என்ற நுட்பத்தைப் போதித்தவர்கள் திரையிசையில் ஒரு சிலரே. அங்கு எஸ்.ஜானகி அம்மாவின் பங்கு அளப்பரியது.

ஒரு சாதாரண அல்லது அமைதியாகப் போகும் பாட்டின் உணர்ச்சியை நம்முள் அசுரத்தனமாக ஊடுருவி இறக்கி விடுகிறது எஸ்.ஜானகியின் குரல்.
"ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க" ஒலிக்கையில் தனிமையின் குரலாகவும் "சின்னச் சின்ன வண்ணக் குயில்" பாடும் போது குதூகத்தின் வெளிப்பாடாகவும் மனது மொழி பெயர்க்கும் போது எஸ்.ஜானகி ஒரு பெண்ணின் உணர்வாக மட்டும் அடையாளம் இல்லாது ஆணின் மனோபாவங்களின் மொழியாகவும் அடையாளப்படுத்தப்படுகிறார்.
அதனால் தான் அந்தந்த மன நிலைகளுக்குத் தோதாகச் சவாரி செய்யப் பாட்டு வாகனம் தேடும் போது அது எஸ்.ஜானகி ஓட்டும் குதிரையிலும் சுகமாகச் சவாரி செய்கிறது.

ஒரு பாடலுக்குக் கொடுக்கும் உச்ச பட்ச நேர்த்தியையும், உருவாக்கத்தையும் வைத்து
எப்படி இசைஞானி இளையராஜாவை ஒரு இசையமைப்பாளர் என்ற எல்லை கடந்து இயக்குநர் என்ற நிலையில் வைத்துப் பார்க்க முடிகிறதோ அது போல எஸ்.ஜானகி ஒவ்வொரு பாடலையும் கையாளும் விதத்தில் இசையமைப்பாளராகவே மிளிர்கிறார்.
மெல்லிசை மன்னர் காலத்தில் T.M.செளந்தரராஜன், P.சுசீலா என்று அமைந்ததோ அது போல் இசைஞானி இளையராஜா காலத்தில் எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று பரிணமித்தது.
இவர்கள் காலத்தில் நாமெல்லாம் இருப்பது பெருமை என்ற நினைப்பு வரும் போது கண்டிப்பாக இவர்களும் இருப்பர்.

"மம்மி பேரு மாரி" https://youtu.be/pwbekjLgZWg (நெஞ்சத்தைக் கிள்ளாதே) என்று விடலைப் பையனாகவும், "கண்ணா நீ எங்கே" https://youtu.be/HFDzZBCT0OI (ருசி கண்ட பூனை) என்று குழந்தையாகவும், "போடா போடா பொக்கை" https://youtu.be/BpaHQVXD62g (உதிரிப் பூக்கள்) என்று கிழவியாகவும் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை கற்றவர்.

"லல்லி லலிலலோ" என்ற ஆலாபனையோடு மச்சானைப் பார்த்தீங்களா பாடலை நினைத்தாலேயே உச்சந்தலை உறைந்து போனதொரு உணர்வு கிட்டும் எனக்கு.

எந்த ஒரு துறையிலும் இறங்கியவர்கள் அப்படியே மாற்றமின்றி அதன் போக்கில் வாழ்ந்தவர்கள் அப்படியேதானிருக்கிறார்கள், அதையும் தாண்டிக் கடந்து சிந்தனையைச் செயல்படுத்தியவர்கள் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். எஸ்.ஜானகியின் இந்த அறுபதாண்டு இசை வாழ்வு அவரைச் சாதனையாளராக முன்னுறுத்துகிறது. தனக்கு வாய்ந்த அழகிய குரல் என்பது அதன் இனிமையைச் சுவைக்க அல்ல அனுபவிக்கவென்று குரல் பேதங்களில் வெளிப்படுத்தும் உணர்வின் வழி நிரூபித்துக் காட்டியவர்.

எமக்கெல்லாம் இசையரசி பி.சுசீலா அம்மாவின் பாட்டு அன்னையின் குரல் என்றால் பாட்டுக் குயில் எஸ்.ஜானகியின் ஓசை தோழியின் குரலாக நிற்கின்றது.

எஸ்.ஜானகியின் தனிப் பாடல்கள் குறித்து நான் எழுதியதில் சில

பாடல் சிலாகிப்புகள்

காற்றில் எந்தன் கீதம்
https://www.facebook.com/kana.praba/posts/10206112214709720

கண்ணா நீ எங்கே
http://www.radiospathy.com/2016/06/blog-post.html

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
http://www.radiospathy.com/2014/11/blog-post.html

ராதா அழைக்கிறாள்
https://www.facebook.com/kana.praba/posts/10208646658469230

புத்தம் புதுக் காலை
http://www.radiospathy.com/2014/11/blog-post_11.html

வசந்த காலக் கோலங்கள்
https://www.facebook.com/kana.praba/posts/10210837822606964

எஸ்.ஜானகி தனிப்பாடல் திரட்டு 78
http://www.radiospathy.com/2016/04/blog-post_23.html
tag

Thursday, April 20, 2017

உதய கீதம் பின்னணி இசைத் தொகுப்பு

☘️🌹 இசைஞானி இளையராஜாவின் 300 வது படம் 🌹☘️
🎸 உதய கீதம் 🎺 பின்னணி இசைத் தொகுப்பு 🎻

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு முழு நீளத் திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைப் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
றேடியோஸ்பதி http://www.radiospathy.com/ என்ற என்னுடைய இசை ரசனைப் பதிவுத் தளத்தின் பத்தாண்டு கடந்த பயணத்தில் இதுவரை 526 இடுகைகளைப் பகிர்ந்துள்ளேன். இவற்றில் பின்னணி இசைத் தொகுப்பு, பாடல் ரசனை, சிறப்பு நேயர், கலைஞர்களின் ஒலிப் பேட்டிகள், பல்வேறு இசையமைப்பாளர்களின் சிறப்புத் தொகுப்புகள் அமைந்துள்ளன.

இந்தப் பத்தாண்டுப் பயணத்தின் சிறப்புப் பகிர்வாக இசைஞானி இளையராஜாவின் 300 வது படமாக அமைந்த, வெளிவந்து 32 ஆண்டுகளைத் தொட்டிருக்கும்
 "உதய கீதம்"திரைப்படத்தின் முழு நீளப் பின்னணி இசையைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இசைஞானி இளையராஜாவின் தேனிசை தடவிய முத்தான பாடல்கள், எண்பதுகளின் வசூல் தயாரிப்பாளர் கோவைத் தம்பி, நடிகர் மோகன் இவர்களோடு ராஜாவின் இசையில் ஜனரஞ்சக வெற்றிகளைக் குவித்த கே.ரங்கராஜ் இயக்கம் சேர்ந்த வெற்றிக் கூட்டணி இது.

இதோ தொடர்ந்து உதய கீதம் படத்தின் பின்னணி இசையை அனுபவியுங்கள்.

YouTube வழி
https://youtu.be/dIIsYARF65E

Mixcloud வழி
https://www.mixcloud.com/kana-praba/udhaya-geetham-bgm/