Pages

Tuesday, April 30, 2013

"பின்னணி இசையின் பிதாமகன் இசைஞானி இளையராஜா"

"பின்னணி இசையின் பிதாமகன் இசைஞானி இளையராஜா" - கானா பிரபா மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ரசிகர் நெஞ்சகளில் தன் இசையால் வீற்றிருக்கும் இசைஞானி இளையராஜா சமீப ஆண்டுகளாக தமிழகத்திலும், அதைத்தாண்டித் தமிழர் வாழும் உலக நாடுகளிலும் இசை மேடை கட்டித் தான் இதுநாள் வரை சினிமாவில் அள்ளித்தந்த இசையின் தாற்பரியத்தைக் கண்ணெதிரே காட்டும் போதெல்லாம் நமக்கும் இந்த வாய்ப்புக் கிட்டாதா என்று ஏங்கிய நாட்கள் பல. இன்றைய காலகட்டத்தில் எல்லாமே சுருங்கிவிட்ட பிறகு, இசையையும் ஒரு கீபோர்ட்டில் அடக்கிவிட்டர்கள். ஆனால் வயலின் தொடங்கி ஒவ்வொரு வாத்தியத்துக்குமாக சாரி சாரியாகக் கலைஞர்களை மேடையில் நிரப்பி, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் வந்த தன் பாடல்களை மீண்டும் இசைக்கும் போது, மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு என்ற சொலவாடையையும் தாண்டி, ஒத்திசைவாக எல்லாக் கலைஞர்களும் பிசிறின்றி இசைக்கும் போது தொலைக்காட்சியில் பார்க்கும் போதே மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும்.

 அன்னக்கிளியில் தொடங்கிய சாம்ராஜ்ஜியம், தமிழ் கடந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக ஒரே சமயத்தில் இருந்தது ஒன்றும் அவ்வளவு இலேசுப்பட்ட காரியமல்ல. இதைத்தவிர ஹிந்தி, மராட்டி மொழி சார்ந்த படைப்பாளிகள் இவரைத் தேடி வந்து தம் படைப்புக்கு இசையால் சிறப்பும், பெருமையும் சேர்க்கவேண்டும் என்பது அன்று தொட்டு இன்றுவரை தொடர்கின்றது. ஒருமுறை ஆனந்த விகடனின் மதன் கேள்வி பதில்களில் "இளையராஜா அமர்ந்த சிம்மாசனத்தில் அவரைத் தவிர வேறு யாரும் அமரமுடியாது" என்று சொல்லியிருந்தார். மேம்போக்காக ஒரு படத்தில் வரும் நான்கோ ஐந்தோ பாடல்களின் ஹிட்டை வைத்துப் பார்க்கும் சராசரி ரசிகனுக்கு இதில் முரண்பட்ட கருத்து இருக்கலாம். ஆனால் ஆயிரமாயிரம் பாடல்களைக் கடந்து அந்தந்தப் படங்களிலே இசைஞானி இளையராஜா இழைத்த பின்னணி இசையை எடுத்து ஆராயப் போனால் வாழ்நாள் போதாது. அவ்வளவுக்கு தான் பணியாற்றிய ஒவ்வொரு படத்திலும் ஒரு இணை இயக்குனராக நின்று செயற்பட்டிருக்கிறார். இங்கேதான் இளையராஜாவுக்கும் மற்றைய இசையமைப்பாளர்களுக்குமான வேறுபாடு முன்வந்து நிற்கும். ஒரு படத்துக்கு இன்னென்ன ஒளிச்சேர்க்கை வேண்டும் என்றோ, உடை, அரங்க அமைப்பு, ஏன் பாடல்கள் வரை சுயமாகத் தீர்மானிக்கும் வல்லமை ஒரு தேர்ந்த இயக்குனருக்கு வாய்க்கலாம் ஆனால் அதையும் கடந்து ஒரு முழுப்படத்தின் எழுத்தோட்டத்தில் இருந்து முடிவுப்புள்ளி வரையான அசையும் பிம்பத்துக்கான ஓசையைப் பொருத்தி அந்த ஓசையால் உயிர்கொடுக்கும் பணி என்பதே ஒரு சராசரி இசையமைப்பாளனைத் தாண்டி இசைஞானியின் அதீத வல்லமையின் தாற்பரியத்தைக் காட்டும். எத்தனையோ இயக்குனர்களை நான் வானொலிப் பேட்டி கண்ட போது அவர்கள் பிரமித்துச் சொன்ன விஷயம் இது. நாட்கணக்காக ஸ்கிரிப்ட் எழுதி எடுத்த படத்துக்கு ஒரு சில மணி நேரத்திலேயே தேவையான இசையால் அந்தப் படத்தின் நிறத்தையே மாற்றி இன்னும் பல படி உயர்த்திக் காட்டியிருக்கிறார் இளையராஜா. இதையே ஒரு இசைமேடையில் பிரபல ஹிந்தி இயக்குனர் பால்கி தன்னுடையை "பா" படத்தின் காட்சியை, பின்னணி இசைக்கு முன்பாகவும், இசைக்குப் பின்பாகவுமாகச் செய்துகாட்டி, "இளையராஜாவின் பின்னணி இசைத் துணுக்குகளை வைத்துக் கொண்டே இன்னும் ஏராளம் பாடல்களை இசையமைக்கலாம்" என்று சிலாகித்திருந்தார். ஒரு குறிப்பிட்ட படத்தின் ஓரிரு பாடல்களில் இழையோடும் ஆதார சங்கீதத்தை வைத்தே வெவ்வேறு வாத்தியங்களால் வாசித்துப் பின்னணி இசை கொடுக்கும் மாமூல் இசையமைப்பாளர்களை அதிகம் காணலாம். ஆனால் படத்தின் பாடல்களை முன்னிறுத்தாத இசையை எடுத்துக் கொண்டு அந்தப் படத்துக்கான தீம் ஆகக் காட்டியிருக்கிறார் ராஜா, இதெல்லாம் முப்பது வருஷங்களுக்கு முன்பே, ஒரு படத்தின் கலைநுட்பம் பற்றி ரசிகர்களுக்கு அவ்வளவு ஈடுபாடில்லாத சூழலில் செய்து காட்டியிருக்கிறார். இன்றும் நிறம் மாறாத பூக்கள், ஜானி, முள்ளும் மலரும் போன்ற படங்களை எடுத்துப் போட்டுப் பார்த்தீர்களானால் அந்தத்தப் படங்களுக்குப் பின்னால் செய்து காட்டிய பின்னணி இசையின் மகத்துவம் புரியும்.ஒரு குறிப்பிட்ட இசை மெட்டை வைத்து காதல், சோகம், நகைச்சுவை, ஊடல், அழுகை என்று விதவிதமாக வித்தியாசமான வாத்தியங்களில் வேறுபடுத்திக் காட்டுவதில் ராஜா ராஜா தான்.

சமீபத்தில் கைரளி மலையாளத் தொலைக்க்காட்சியில் வரும் கந்தர்வ சங்கீதம் என்ற இசை நிகழ்ச்சியில் இந்தப் படம் குறித்து, பாடகி பின்னி கிருஷ்ணகுமார் வழங்கிய பகிர்வு. இந்தப் படத்தை பாடகி பின்னி கிருஷ்ணகுமார் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அதில் வந்த முக்கிய பின்னணி இசையைக் கேட்டபோது இது என்ன ராகத்தின் வழிவந்தது என்று அவர் தேட, கிட்டியது "மாயா விநோதினி" என்ற ராகம். இந்தப் படத்தின் நாயகி அமலாவின் கதாபாத்திரத்தின் பெயரும் மாயா விநோதினி. பாருங்கள், எவ்வளவு நுணுக்கமாக இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை வைத்தே பின்னணி இசையைக் கொடுக்கவேண்டும் என்ற இசைஞானி இளையராஜாவின் உழைப்பு மெய்சிலிரிக்க வைத்தது இதைக் கேட்டபோது. ஒவ்வொரு படத்திலும் இயக்குனருக்குச் சரிசமமாக, அல்லது அதற்கும்மேலாக காட்சிகளுக்கு உயிர்கொடுத்ததில் ராஜாவின் பங்கு அளப்பரியது.

இதன்பிறகு கற்பூர முல்லை" திரைப்படத்தை எடுத்துப் போட்டுப் பார்த்தேன். ஒரு காட்சியோடு இழைந்த பின்னணி இசையில் அப்படியே கிறங்கிப் போய்விட்டேன். ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் எவ்வளவு தூரம் ஜீவ நாடியாக அமைகின்றார் என்பதற்கு, இங்கே நான் தரும் ஒரு சிறு பின்னணி இசைக்குளிகை ஒரு சான்று. முறை தவறிப் பிறந்த தன் மகளை ஏற்றுக் கொள்ள முடியாது மூடி மறைக்கும் சமூகத்தில் பிரபலமான தாயும், அதுவரை அவள் தான் தாய் என அறியாத மகளும் சந்தித்துக் கொள்கிறார்கள். தன்னை ஏற்கமறுக்கும் தாயைக் கண்டு மருகும் மகளின் மனக்குமுறலாக இங்கே இசை பிரவாகிக்கிறது, அதுவே மகள் பேச ஆரம்பிக்கும் போது தாயின் பக்கம் தாவி மிரட்சியோடு அலைபாய்கின்றது. இசைஞானி இளையராஜாவின் இத்தகு செல்வங்கள் எவ்வளவோ எண்ணற்ற படங்களில் பின்னணி இசையாக இறைந்து கிடக்கின்றன.

ராமராஜன் இயக்கிய படங்களில் இசைஞானி இளையராஜாவை இசையமைப்பாளராக்கியும் பாட்டுக்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார். ஆனால் இவரின் அடுத்த சுற்றில் நாயகன் ராமராஜன் என்ற கலைஞன் நீடித்து நிலைத்து நிற்க இளையராஜாவின் பங்கு பெரும்பங்கு என்பதைக் கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ராமராஜனின் படங்களில் ராஜாவின் பாடல்கள் விஷேசமாக இருக்கும், குறிப்பாக நகரம் சார்ந்த கதைக்களனைக் கொண்டு அமைந்த மோகன் படங்களில் ராஜா என்றும், கிராமம் சார்ந்த கதைக்களனைக் கொண்ட ராமராஜன் படங்களில் ராஜா என்றும் இரட்டை சவாரி ஆனால் இரண்டு நாயகர்களுக்குமே இந்த இசை தான் அவர்களின் கலையுலக வாழ்வை நீட்டித்து வைத்தது. எண்பதுகளிலே இந்த இரண்டு எல்லைகளையும் கவனித்துக் கொண்டது ராஜாவின் இசை.

நாயகன், ஒரு படைப்பை நேர்மையாகக் கொடுக்கும் போது கிட்டும் அதீத கெளரவம் இந்தப் படத்துக்கும் கிட்டியிருக்கிறது. வெகுஜன அபிமானம் மட்டுமல்ல, Time சஞ்சிகையின் எல்லாக்காலத்திலும் கெளரவித்துக் கொண்டாடக்கூடிய 100 படங்களில் ஒன்று என்ற தனிச்சிறப்பையும் பெற்றிருக்கிறது. கமல்ஹாசன் இந்தப் படத்துக்கு முன்பே எத்தனையோ சோதனை முயற்சிகளின் மூலம் தன் பாத்திரப்படைப்பில் வித்தியாசத்தைக் காட்டமுனைந்திருந்தாலும், ஒரு பூரணத்துவம் என்பது இந்தப் படத்திலேயே கிட்டியிருக்கிறது. அதற்கு மணிரத்னம் என்ற சிறந்த நெறியாளரின் முக்கிய பங்கு கண்டிப்பாகப் பங்கு போட்டிருக்கிறது. கூடவே ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம். இவர்களோடு நம்ம இளையராஜா. பாத்திரங்க்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றை முழுமையாக நிரப்பித் தன் பங்கை நிறைவாகச் செய்து, அந்த வெற்றிப்புழகாங்கிதத்திலேயே நின்றுவிடாமல் அடுத்த படைப்புக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் இசைஞானியின் பங்கு இந்தப் படத்தின் ஆரம்ப நிமிடம் முதல் இறுதிச் சொட்டு வரை இசையால் இழைத்து இழைத்துப் பண்ணப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இதையெல்லாம் நுட்பமாகக் கேட்டிருந்திருக்க முடியாது. ஆனால் ராஜாவின் இசை காலம் கடந்தது என்பதற்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஒவ்வொரு காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் இசைத்துணுக்குகளாகக் கேட்டு அனுபவிக்கும் பாக்கியம் கிட்டியதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கமல்-மணிரத்னம்-இளையராஜா இந்தப் படத்தில் இணைந்தது போன்ற இன்னொரு வாய்ப்பு வந்தாலும் இந்தப் படம் கொடுத்த சிறப்பிற்கு நிகராக இருக்குமா என்பது ஐயமே. இசைஞானி இளையராஜாவின் எண்பதுகளின் முத்திரைகளில் "மெளன ராகம்" இசை ரசிகர்களுக்குப் பாடல்களிலும் சரி, கதையோடு பயணிக்கும் பின்னணி இசை என்று இரட்டைப் பெருவிருந்து கிடைத்த படங்களில் ஒன்று.

எண்பதுகளிலே உச்சத்தில் இருந்த இசைஞானியின் திறனுக்குத் தீனி கொடுத்த விதத்தில் சொற்பமே அமைந்து போன கதைக்களங்களில் இதுவுமொன்று. ராஜா ஐந்து பாட்டுக் கொடுத்தால் போதும் என்ற சினிமா வர்த்தகனிடம் இருந்து விலகி, ராஜாவின் இன்னொரு பரிமாணத்தையும் உள்வாங்கி அதைக் கொடுத்த வகையில் மணிரத்னத்துக்கும் அந்தப் பெருமை சென்று சேர்கின்றது. இசைஞானி இளையராஜாவோடு மணிரத்னம் இணைந்து கொண்ட அஞ்சலி, தளபதி போன்ற படங்களின் பின்னணி இசை பற்றிப் பேசப்போனால் ஒரு சில கட்டுரைகளில் முடக்கிப்போட முடியாத அளவுக்குச் சாகித்யம் நிரம்பியிருக்கும். "சிந்து பைரவி" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா என்ற அலை வந்தபோதும் பல்லாண்டுகாலமாக இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தவில்லை அல்லது கிட்டவில்லை. ஆனால் இந்த இரு இமயங்களும் இணைந்த படங்களிலேயே "சிந்து பைரவி" உச்சமாக அமைந்து விட்டது. சங்கராபரணம் அளவுக்கு எங்களாலும் கொடுக்க முடியும் என்று தமிழ்த்திரையுலகம் சிந்து பாடிய படம் இது கவிஞர் வைரமுத்துவின் பாடல்களோடு, மகாகவி சுப்ரமணியபாரதியார் பாடல்களும் தெலுங்குக் கீர்த்தனைகளுமாக ராஜபாட்டையோடு இருக்கும் இந்தப் படம் இசைஞானி இளையராஜாவுக்கு இரண்டாவது தேசிய விருதைக் கொடுத்து விருதுக்குப் பெருமை தேடிக் கொண்டது. பட்டமா, பாட்டா என்று மனதில் பட்டிமன்றம் போட்ட அந்தச் சின்னக்குயில் சித்ராவுக்கு சிறந்த பாட்டுக்குயில் என்று தேசிய விருதுப்பட்டம் கொடுத்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

 இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளிவந்திருந்தது இதயம், ஒரு வரியில் எழுதிவிடக்கூடிய கதைக்குப் பெரும் பலமாக இருந்தது இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை, சக பாடல்கள். கற்பகம் படத்தில் முழுமையாகப் பெண் குரலில் அமைந்த பாடல்களும் ஒருதலை ராகம் படத்தில் முழுமையாக ஆண்குரல்களில் அமைந்த பாடல்களும் இருந்தது போல இதயம் படத்திலும் முழுமையாக ஆண் குரல்களே பயன்படுத்தப்பட்டிருகின்றன (கோரஸ் விதிவிலக்கு). இதயமே இதயமே என்ற பாடலைப் பிறைசூடன் எழுத, மற்றைய அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பது கவிஞர் வாலி. வெள்ளிவிழாப் படமாக அமைந்த இதயம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இல்லாவிட்டால் படம் படுதோல்வி கண்டிருக்கும் என்பதை படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புக்கு முன்னதாக இயக்குனர் கதிர் கண்டிப்பாக உணர்ந்திருப்பார். படத்தின் எழுத்தோட்டம் முதல் இறுதிப்புள்ளி வரை இளையராஜாவின் இசையோட்டமே அடி நாதமாய் அமைந்திருக்கின்றது. இளையராஜாவின் இசையில் வெளிவந்த படங்களிலே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த "ஆண்பாவம்" முக்கியமானது. வழக்கமாக இப்படியான நகைச்சுவை கலந்த படத்துக்கு வயலின் போன்ற ஒற்றை வாத்தியத்தை வைத்தே பெரும்பாலும் இசையமைப்பாளர் தன் பின்னணி இசையை ஒப்பேற்றிவிடுவார். ஆனால் பாருங்கள் ஒவ்வொரு காட்சியிலும் இசைஞானி கொடுத்த தனித்துவமான இசைக்கலவை ஒவ்வொன்றும் கேட்கும் போது மனதில் புதுப்பூம்புனலை உருவாக்கும் வல்லமை கொண்டது. ஆண்பாவம் திரைப்படத்தின் பெரும்பலங்களில் ஒன்று இசை. இசைஞானி இளையாராஜா இசையில் முத்தான பாடல்களும், அழகான பின்னணி இசையும் இப்படத்துக்கு மேலும் மெருகூட்டியது. கொல்லங்குடி கருப்பாயியை வைத்து மூன்று பாடல்களைப் பாடவைத்தது ஒரு புதுமை. இன்றுவரை இப்படத்தின் பின்னணி இசையைப் பல ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதே இப்பின்னணி இசையின் சிறப்பாக இருக்கின்றது.

கேரளத்தின் பெரும் எழுத்தாளர் M. T.வாசுதேவன் நாயர் எழுதிய கேரளவர்மா பழசிராஜா என்ற காவியத்தை இயக்கியவர் மலையாளத்தின் உச்ச இயக்குனர்களில் ஒருவரான ஹரிஹரன். இசையமைப்பை இசைஞானி இளையராஜா கவனித்துக் கொள்ள, ஒலிச்சேர்க்கையை ஆஸ்கார் விருதைக் கவர்ந்த ரசூல் பூக்குட்டி கவனித்துக் கொண்டார். 2009 ஆம் ஆண்டு தேசிய விருதுப்பட்டியலில் சிறந்த பின்னணி இசைக்காக இசைஞானி இளையராஜா, சிறந்த ஒலிச்சேர்க்கைக்காக ரசூல் பூக்குட்டி, சிறந்த துணை நடிகைக்கான தேர்வுக்குழுவின் சிறப்பு விருதாக பத்மப்பிரியா ஆகியோருக்கு இந்தப் படம் உச்ச விருதுகளைக் கொடுத்துக் கெளரவித்தது. பழசிராஜாவின் பின்னணி இசைக்கோர்ப்பில் ராஜாவின் இசையை Hungarian National Philharmonic இன் இசைவல்லுனர்கள் இசைய வைத்தார்கள். ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு ஏற்கனவே பட்ஜெட்டை மீறிய செலவாகிவிட்டது எனவே ஹங்கேரிய இசைக்குழுவை வைத்துப் பண்ணுவதைத் தவிர்த்து விடலாம் என்று இயக்குனர் வேண்டினாலும் ராஜா, "இந்தப் படத்தை இன்னொரு முறை எடுக்கப் போகிறீர்களா, இதிலேயே சிறப்பாகக் கொடுத்து விடுவோமே" என்று சொல்லிச் சம்மதிக்க வைத்தார். ராஜாவின் தளராத அந்த எண்ணம் தான் இப்படத்தின் பின்னணி இசையில் பெரும் உச்சத்தைக் காட்டியிருக்கிறது. இந்தியத் திரைவரலாற்றில் பின்னணி இசைக்கான முதல் தேசிய விருது கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பழசிராஜாவுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்குக் கிட்டியதும் அவரின் உயிர் ரசிகர்கள் எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. இந்த விருதை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தி இருந்தால் பின்னணி இசைக்கான தேசிய விருதுகளில் குறைந்த பட்சம் 20 ஐ ஆவது அள்ளியிருப்பார் எங்கள் ராகதேவன்.

பழசி(இளைய)ராஜாவுக்குக் கிட்டிய விருது கொடுத்த தெம்பில் அந்தப் படத்தை இயக்கிவிட்டுக் காத்திருந்தேன். இரை மீனுக்குக் காத்திருக்கும் கொக்குப் போல அவதானமாக இருந்தாலும் அவ்வளவு சுலபமான வேலையாக அது படவில்லை. காரணம், இசைஞானியின் மற்றைய படங்களில் பின்னணி இசைவரும் காட்சிக்கு மட்டும் தனியானதொரு வசன ஆதிக்கம் குறைவான அல்லது இல்லாத காட்சியமைப்பு இருக்குமாற்போல இந்தப் படத்தில் இல்லை. படம் தொடங்கி முடியும் வரை இண்டு இடுக்கெல்லாம் இசையை நுழைத்து இலாவகமாக சங்கமிக்க வைத்திருந்தார். இந்த இசையைக் கேட்கும் போது பழசிராஜா என்ற பெருங்காவியத்துக்கு இசைஞானியின் எல்லைகடந்த இசைக்கோர்ப்பு எவ்வளவு தூரம் பெரும் பலமாக இருக்கின்றது என்பதை உணரமுடிந்தது. காட்சிகளின் நுட்பத்தை உணர்ந்து ஒரு காட்சியிலேயே வரும் பலவிதமான உணர்வுக் கலவைகளையும், காட்சிகளின் வீரியத்தையும் பார்வையற்றவனின் மனக்கண்ணிலே கூடப் பிரகாசமாய்க் காட்டும் உயரிய சங்கீதமாக இந்த இசைக்கலவை விளங்கி நிற்கின்றது. பின்னணி இசையிலே இசைஞானியின் உச்சத்தைத் தொடுவதற்கு இனிமேல் தான் ஆண்டவன் கருணை கூர்ந்து யாரையாவது பிறப்பெடுக்க வைக்கவேண்டும் என்பது போன்றதான உணர்வலையை உண்டுபண்ணும் இசைஜாலத்தின் சங்கமம் இந்தப் படம். சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தும், வீரத்தில் வெகுண்டெழுந்தும், பலவீனப்பட்டு வீழும் போது முடங்கி முனகியும், பழசிராஜாவின் பெரும்பயணத்தில் அவருக்குத் துணையாக வந்த தளபதி இடைச்சேன குங்கன் போல இசைஞானி இளையராஜாவின் இசை வியாபித்து நிற்கின்றது.

 ஷிவா என்ற தெலுங்குப் படம் அதே ஆண்டில் தமிழில் "உதயம்" என்று மொழிமாற்றப்பட்டுத் தமிழகத்திலும் பேராதரவைச் சந்தித்தது. சைக்கிள் செயினைக் கழற்றிச் சுழற்றி அடிக்கும் ஸ்டைல் பலரைக் கவர்ந்த ஒன்று. தெலுங்கில் 155 நாட்கள் ஓடிய இந்தப் படம் தேவி என்ற தியேட்டரில் 3 காட்சிகள் ஹவுஸ்புல்லாக 62 நாட்கள் ஓடியது இன்றுவரை சாதனையாகக் கொள்ளப்படுகின்றது. ஒரு பரபரப்பான படத்துக்குத் தேவையான முழுமையான உழைப்பை அள்ளிக் கொட்டியிருக்கின்றார் இசைஞானி இளையராஜா. படத்தின் ஆரம்பத்தில் இருந்து படம் முடிந்து இறுதியில் ஓடும் எழுத்தோட்டம் வரை பயணிக்கும் பின்னணி இசையில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே மெல்லிசை ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதைத் தவிர மற்றைய அனைத்துக் காட்சிகளுக்கான இசையுமே அதிரடி தான். பாரதிராஜாக்கள் காலத்துக்குப் பின் தமிழ் சினிமாவில் இன்னொரு பரிமாணத்தை ஆரம்பித்த மணிரத்னத்தின் ஓவ்வொரு வெற்றிப்படமும் வித்தியாசமான களங்களை அன்று கொண்டிருந்தது. அந்த வகையில் முழுமையாக காதலை மையப்படுத்தியிருந்தது கீதாஞ்சலி என்ற தெலுங்குப்படம் இது இதயத்தைத் திருடாதே என்று தமிழில் மொழிமாற்றம் கண்டது. மணிரத்னம் என்ற கலைஞனின் உயிர் நாடியாக ஒளிப்பதிவாளர் பி.சி.சிறீராமும் , இசைஞானி இளையராஜாவும் படம் முழுதும் செயற்பட்டிருப்பது தெரிகின்றது.

எண்பதுகளில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த இசைஞானிக்கு கீதம், காதல், கிராமம் என்றிருந்தால் மனுஷர் அடிபின்னி விடுவார். அதைத் தான் இங்கேய்யும் காட்டியிருக்கின்றார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் முன்னர் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முரளியை வைத்து ஒரு படம் தயாரித்த போது அந்தப் படத்துக்கு கீதாஞ்சலி என்று பெயர் சூட்டியவர் இளையராஜா. சில வருஷங்களுக்குப் பின் அதே தலைப்பு தெலுங்குக்குப் போய் இன்னொரு கதையோடு வரும் போது அங்கேயும் தான் இசையமைப்பேன்னு எண்ணியிருப்பாரா என்ன? இன்னொரு விஷயம் இளையராஜாவின் பக்தி இசைத் தொகுப்பு ஒன்றுக்கும் பெயர் "கீதாஞ்சலி". இந்தப் படத்தில் வரும் ஆத்தாடி அம்மாடி பாட்டின் இடையில் வரும் ஆர்மோனிய இசையைத் தன் இசைக் குழுவில் இருந்தவர் சரிவர உள்வாங்காமல் இசையமைக்க, சலித்துப் போய் அந்த ஆர்மோனிய இசையைத் தானே இசையமைத்துப் பாட்டை உருவாக்கினார் இளையராஜா என்று இந்தப்பாடலைப்பாடிய பாடகி சித்ரா சிட்னி சொல்லியிருந்தார். ஆவாரம் பூ, படத்தின் ஆரம்ப இசையில் மிளிரும் புல்லாங்குழலும், கிட்டாரும், வயலினும் கொடுக்கும் சங்கதிகளும் சரி, படம் முடியும் வரை அந்தந்தக் காட்சிகளுக்கேற்ப ஆர்ப்பரித்தும், அடங்கியும், எழுந்தும், தொடரும் இசை என்னும் அந்த இன்ப வெள்ளம் இப்படம் முடிந்ததும் கூட அசை போட வைக்கின்றது.

இளையராஜாவின் பல நல்ல இசை கொண்ட படங்களின் பாடல்களின் ஒலிப்பதிவு வெகு சுமாராய் கூட இருந்ததுண்டு. ஆனால் இந்தப் படத்தின் பாடல்களை சீடியிலும் சரி, படத்தினைப் பார்க்கும் போது வரும் போதும் சரி மிகத் துல்லியமாக வாத்தியங்களின் வேறுபாட்டையும் அவற்றின் சிறப்பான ஒலிநயத்தையும் காட்டி நிற்கின்றன. தனிமை, மையல், காதல், சோகம் என்று விதவிதமான இசைப்படையலாக அமைந்து நிற்கின்றது "ஆவாரம்பூ" பாடல்களின் அணி "முதல் மரியாதை" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா உலக ரசிகர்களால் மரியாதைக்குரிய படமாகப் போற்றப்படுகின்றது. 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, தீபன், ரஞ்சனி ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தனர். 1986 ஆம் ஆண்டில் தேசிய விருதாக வெள்ளித் தாமரை விருது சிறந்த பாடலாசிரியர் வைரமுத்துவுக்கும், சிறந்த பிராந்திய மொழித் திரைப்படமாக இப்படத்தின் தயாரிப்பாளர் பாரதிராஜாவுக்கும் கிடைத்திருந்தது. ஆரோக்கியமான கூட்டணியும், கதைக்களனும் இருந்தால் ராஜாவுக்கு தனி களையே வந்து விடும். அதுவும் தன் நண்பனின் உயிர்த்துடிப்புள்ள படைப்பு, கூடவே வைர வரிகள் என்று இருக்கும் போது ராஜா மட்டும் ஓய்ந்து விடுவாரா? முதல் மரியாதை போன்ற உயரிய படைப்பில் சிவாஜி, ராதா, பாரதிராஜா, ஆர்.செல்வராஜ், வைரமுத்து என்று அவரவர் பங்கைச் செய்து தனித்தன்மையோடு இருந்தது போல ராஜாவின் இசையிலும் தனித்துவம் இருக்கின்றது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. பின்னணி இசையைப் பொறுத்தவரை குயிலோசை, குழலோசை படமெங்கும் ஆங்காங்கே தூவ மற்றைய கிராமிய வாத்திய இசையும் கலக்கின்றது. ஏ கிளியிருக்கு, அந்த நிலாவத்தான் போன்ற பாடல்களுக்கு ராஜாவின் குரல் தான் பொருத்தமானது, அது போல் பூங்காத்து திரும்புமா, வெட்டி வேரு வாசம் போன்ற பாடல்களுக்கு மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி போன்றவர்களால் தான் கிராமியத்தனத்தை பாடல்களில் கொண்டுவர முடியும். அதையே உய்த்துணர்ந்து ராஜா கொடுத்திருக்கின்றார். இதே ஆண்டில் சிறந்த இசையமைப்பாளருக்காக "சிந்து பைரவி" திரைக்காக தேசிய விருது பெற்ற இளையராஜா முதல்மரியாதை திரைப்படத்துக்கும் போனசாக பெற்றிருக்கவேண்டும். கடலோரக்கவிதை படத்தை ஓடவிட்டு இறுதிக்காட்சியை ஒரு முறை கவனித்துப் பாருங்கள், கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக எந்தவிதமான வசனங்களும் இல்லாமல் வெறும் இசைக்கலவையோடு மட்டுமே பின்னப்பட்டு, வாத்தியக் கலவைகளின் நர்த்தனம் அழகிய பிரவாகமாகப் பெருக்கெடுக்கின்றது. அடி ஆத்தாடி பாடலின் இன்னொரு வாத்தியக் கோர்வையும் கலந்து இங்கே வயலின் உட்பட பல வாத்தியங்களில் அந்த மெட்டு இசைக்கப்படுகின்றது.

 பிறவிப்பிணி என்னும் தளையால் கட்டுண்ட ஆன்மா இறைபதம் நாடி இறைமேல் பற்று வைத்து முத்தி நிலையை அடைதல் என்னும் உட்பொருளோடு அமைகின்றது குணா படத்தின் உட்பொருள், இப்படியான படங்களில் ராஜாவின் தேவை எவ்வளவு தூரம் பொருந்தியிருக்கிறது என்பதை "பார்த்தவிழி பார்த்தபடி பார்த்து இருக்க" பாடலில் இருந்து படத்தின் இறுதிக்காட்சியில் குணா, அபிராமி மலையுச்சியிலிருந்து பாய்ந்து தம்மை மாய்த்து கூடு விலகல் வரை உணர்த்தப்படும். இதே மாதிரியான கமல் - ராஜா அலைவரிசையின் ஒத்திசைவு ராஜபார்வை, விருமாண்டி, ஹேராம் என்று பட்டியல் நீளும்.

"ஒரு நல்ல வாகான, சிற்பவேலைப்பாட்டுக்கேற்ற பாறை ஒரு சிற்பிக்குக் கிடைக்கிறது. பிறகு அவர் அந்தப் பாறையைக் கொண்டு அழகிய ஒரு சிலையை வடிப்பதற்காக அந்தப் பாறையின் தேவையற்ற பகுதிகளைக் களைந்து விட்டு, தனது கற்பனையால் கைவண்ணத்தால் அந்தப் பாறையை உருமாற்றி எல்லோரும் பாராட்டும் அழகிய சிலையாக எப்படி வடிவமைக்கிறார். அப்படிதான் ஒரு நாவலைத் திரைப்படம் ஆக்கும் கலையும்" இப்படிச் சொல்கிறார் சினிமாவும் நானும் என்னும் தனது நூலில் இயக்குனர் மகேந்திரன். முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சரத்பாபு, ஷோபா, படாபட் ஜெயலஷ்மி போன்றோரின் நடிப்பில் வெளிவந்தது. ஒளிப்பதிவு பாலுமகேந்திரா. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரனின் முதல் திரைப்படம். கமல்ஹாசனின் பரிந்துரையில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டதாகச் சொல்லும் மகேந்திரன் படத்தின் பின்னணி இசையின் முக்கியத்துவம் கருதி இளையராஜாவை ஒப்பந்தம் செய்ததாக சொல்கிறார். படத்தை ரீரிக்கார்டிங் செய்வதற்கு முன்னர் பார்த்த தயாரிப்பாளர் வேணுச்செட்டியார் "அடப்பாவி என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுட்டியே, படத்துல வசனமே இல்ல" என்று திட்டித் தீர்த்தாராம். ஓடாத படத்துக்கு விளம்பரம் தேவை இல்லை என்றும் ஒதுங்கிவிட்டாராம். படம் நூறு நாள் கண்டபோது blank cheque கை எடுத்து வந்து "மகேந்திரா,என்னை மன்னிச்சுக்கோ" என்றபோது அன்பாக மறுத்துவிட்டாராம் மகேந்திரன். இளையராஜா தன் முதன்முறையாக தன் பின்னணி இசையின் ஆழமான ஞானத்தை வெளிப்படுத்திய படம் "முள்ளும் மலரும்" என்கிறார் மகேந்திரன். தன் காலத்தைத் தாண்டிச் சிந்தித்துப் படைப்பாற்றல் பண்ணியவர்கள் காலம் கடந்துதான் இன்னும் அதிகம் பேசப்படுவார்கள். அதை இளையராஜாவின் இசையாற்றலுக்கும் பொருத்திப்பார்க்க முடியும்.

அவர் சினிமா உலகுக்கு வந்த காலம் தொட்டு இன்று வரை கொடுத்த இசை நுணுக்கங்களை உள்வாங்கும் பக்குவம் எவ்வளவு தூரம் அந்தந்தக் காலகட்டத்து ரசிகர்களுக்கு இருந்திருக்கின்றது என்பது கேள்விக்குரியதொன்று. ஆயிரமாயிரம் பாடல்களால் வசீகரித்த இந்த இசையமைப்பாளனின் முழுமையான பக்கம், பல நூறு படங்களுக்கு இவர் கொடுத்த பின்னணி இசையை விலாவாரியாக எடுத்து ஆராயும் போதுதான் புலனாகும். ஆனால் அதெல்லாம் அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன? அவரோடு பணியாற்றிய இயக்குனர்களுக்கே இளையராஜா தம் படைப்புக்களுக்குக் கொடுத்த சங்கதிகளைப் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருக்க, இவற்றையெல்லாம் ஒன்று திரட்டி இசை ஆவணங்களாகக் கொடுக்கும் நாள் எந்நாளோ என்ற ஏக்கம் அடிமனதில் தானாக வரும். இசைஞானி இளையராஜா காலத்தில் நாம் வாழ்வது என்பது பெருமை அல்ல, தவப்பேறு. இந்தக் கட்டுரை வரும் மே மாதம் 11 ஆம் திகதி சிட்னியிலும், மே மாதம் 12 ஆம் திகதி மெல்பனிலும் இன்னிசை விருந்து படைக்கவிருக்கும் இசைஞானி இளையராஜாவை வரவேற்கும் வண்ணம் தென்றல் ஆஸ்திரேலியா சஞ்சிகையின் சிறப்பு இதழுக்காக எழுதப்பட்டது. இணையத்தில் இந்தக் கட்டுரையை பக்கம் 11, 12, 13 இல் காணலாம். றேடியோஸ்பதி சார்பில் வழங்கிய வாழ்த்து பக்கம் 6 இல் காணலாம். http://thenral.com.au/wp-content/Epaper/april2013/index.html

Thursday, April 11, 2013

றேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் "என்ன தமிழ்ப்பாட்டு"


வணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று வித்தியாசமாக, தெலுங்கில் இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களைக் கொடுக்கிறேன். இந்தப்பாடல்களின் மெட்டுக்களில் இளையராஜா இசைமைத்த தமிழ் வடிவப்பாடல்களை நீங்கள் குறிப்பிடவேண்டும், இந்தத் தமிழ்ப்பாடல்கள் எல்லாமே தெலுங்கிலிருந்து நேரடியாக வெளிவந்த படங்களின் டப்பிங் படங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்தப் பாடல்கள், கேட்டு, பார்த்து, யோசித்துப் பதிலோடு வாருங்கள். போட்டி இத்தோடு முடிந்தது இதோ அந்தத் தமிழ்ப்பாடல்கல 1. Vennello Godaari Andam - Sitara இந்தப் பாடலின் தமிழ் வடிவம், நிழல்கள் படத்திற்காக எஸ்.ஜானகி பாடிய "தூரத்தில் நான் கண்ட உன் முகம்" படத்தில் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 2. Ilalo Kalise - Anveshana இந்தப் பாடல் அன்பின் முகவரி படத்திற்காக "உயிரே உறவே" எனத் தமிழில் வந்திருக்கிறது, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடியிருக்கிறார்கள். தெலுங்கிலிருந்து மொழிமாற்றப்பட்ட காதல் கீதம் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட "வாழ்வா சாவா" எனவும் வந்திருக்கிறது 3. Ee Chaitra Veena -Preminchu Pelladu இந்தப்பாடல் "ஆனந்தக் கும்மி" படத்திற்காக "ஓ வெண்ணிலா" எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குரல்களில் 4. Maata Raani - Maharshi செண்பகமே செண்பகமே படத்தில் வரும் "மஞ்சப்பொடி தேய்க்கையிலே" எஸ்.பி.பாலசுப்ரமணியம் 5. Chukkalu Themanna - Vidudala காற்றினிலே வரும் கீதம் படத்திற்காக ஜெயச்சந்திரன் குரலில் "சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்"

Monday, April 1, 2013

"கற்பூரமுல்லை" பின்னணி இசைத்தொகுப்பு

கற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில் கதை, இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தின் வசனங்களை வழக்கம் போல பாசிலின் தமிழ்ப்படங்களைக் கவனித்துக் கொள்ளும் கோகுல் கிருஷ்ணா வழங்கியிருந்தார். அமலா, ஶ்ரீவித்யா, ராஜா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம், எண்டே சூர்ய புத்ரிக்கு என்ற பெயரில் மலையாளத்த்திலும் வெளிவந்திருந்தது. மலையாளத்தில் நாயகன் ராஜாவுக்குப் பதில் சுரேஷ் கோபி. வழக்கமாக பாசிலின் மலையாளப்படங்கள் அவரால் தமிழுக்கு மீள இயக்கப்படும் போது மூலப்படத்தின் இசை வேறு ஒரு இசையமைப்பாளராக இருக்கும். விதிவிலக்கான ஒரு சில படங்கள் வரிசையில் கற்பூர முல்லையும் சேர்த்தி. இரண்டு படங்களின் இசையும் இசைஞானி இளையராஜாவே. கற்பூரமுல்லை படத்தின் பின்னணி இசையைக் கொடுக்கவேண்டும் என்று நான் எண்ணியிருந்தாலும் அதை உடனடியாக அமல்படுத்தவேண்டிய அவாவை உண்டு பண்ணியது, சமீபத்தில் கைரளி மலையாளத் தொலைக்க்காட்சியில் வரும் கந்தர்வ சங்கீதம் என்ற இசை நிகழ்ச்சியில் இந்தப் படம் குறித்து, பாடகி பின்னி கிருஷ்ணகுமார் வழங்கிய பகிர்வு. இந்தப் படத்தை பாடகி பின்னி கிருஷ்ணகுமார் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அதில் வந்த முக்கிய பின்னணி இசையைக் கேட்டபோது இது என்ன ராகத்தின் வழிவந்தது என்று அவர் தேட, கிட்டியது "மாயா விநோதினி" என்ற ராகம். இந்தப் படத்தின் நாயகி அமலாவின் கதாபாத்திரத்தின் பெயரும் மாயா விநோதினி. எவ்வளவு நுணுக்கமாக இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை வைத்தே பின்னணி இசையைக் கொடுக்கவேண்டும் என்ற இசைஞானி இளையராஜாவின் உழைப்பு மெய்சிலிரிக்க வைத்தது இதைக் கேட்டபோது. ஒவ்வொரு படத்திலும் இயக்குனருக்குச் சரிசமமாக, அல்லது அதற்கும்மேலாக காட்சிகளுக்கு உயிர்கொடுத்ததில் ராஜாவின் பங்கு அளப்பரியது. இயக்குனர் பால்கி சொன்னது போல, அந்தப் பின்னணி இசையே ஏராளம் பாடல்களைப் பிரசவிக்கும் வல்லமை கொண்டன. அதுதான் ராஜா. பாடகி பின்னி கிருஷ்ணகுமார் சொன்ன "எண்டே சூர்ய புத்ரிக்கு" (கற்பூரமுல்லை) பின்னணி இசை குறித்த பகிர்வு வீடியோ இது.
கற்பூர முல்லை" திரைப்படத்தின் பின்னணி இசையைத் தொகுத்துக் கொண்டிருந்தபோது ஒரு காட்சியோடு இழைந்த பின்னணி இசையில் அப்படியே கிறங்கிப் போய்விட்டேன். ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் எவ்வளவு தூரம் ஜீவ நாடியாக அமைகின்றார் என்பதற்கு, இங்கே நான் தரும் ஒரு சிறு பின்னணி இசைக்குளிகை ஒரு சான்று. முறை தவறிப் பிறந்த தன் மகளை ஏற்றுக் கொள்ள முடியாது மூடி மறைக்கும் சமூகத்தில் பிரபலமான தாயும், அதுவரை அவள் தான் தாய் என அறியாத மகளும் சந்தித்துக் கொள்கிறார்கள். தன்னை ஏற்கமறுக்கும் தாயைக் கண்டு மருகும் மகளின் மனக்குமுறலாக இங்கே இசை பிரவாகிக்கிறது, அதுவே மகள் பேச ஆரம்பிக்கும் போது தாயின் பக்கம் தாவி மிரட்சியோடு அலைபாய்கின்றது. https://soundcloud.com/kanapraba/katpoora-mullai-bgm இசைஞானி இளையராஜாவின் இத்தகு செல்வங்கள் எவ்வளவோ எண்ணற்ற படங்களில் பின்னணி இசையாக இறைந்து கிடக்கின்றன. தொடர்ந்து கற்பூர முல்லை திரைப்படத்தின் முழுமையான பின்னணி இசையைக் கேட்டு மகிழுங்கள். 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கற்பூர முல்லை திரைப்படத்தின் முகப்பு இசை 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாயா விநோதினி (அமலா) தன் பெற்றோர் யாரென்று தெரியாத விரக்தியில், கல்லூரில் மேல் மாடியிலிருந்து தற்கொலை முயற்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாயா விநோதினி (அமலா)வைக் காப்பாற்ற வைத்தியசாலையில் டாக்டர் ராஜா முயற்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாயா விநோதினி (அமலா)வை முதன்முதலில் சந்திக்கும் தாய் ஶ்ரீவித்யா 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாயா விநோதினி (அமலா) தொலைபேசியில் தாய் ஶ்ரீவித்யாவை அழைத்துத் தன்னை அறிமுகப்படுத்தும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 தன் தாய் தன்னை ஏற்க மறுத்த கவலையில் மாயா விநோதினி (அமலா) 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ஶ்ரீவித்யா, மாயா விநோதினியிடம் தன்னைத் தாயாக ஏற்க வேண்டாம் என்று மறுக்கும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ஶ்ரீவித்யா சதிகாரர்களால் கொல்லப்படுதல் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 தன் தாய் ஶ்ரீவித்யாவைக் கொன்றவர்களை மாயா விநோதினி (அமலா) பழிவாங்கும் காட்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாயா விநோதினி (அமலா) இறுதிக்காட்சியில் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கற்பூரமுல்லை திரைப்படத்தின் பாடல்கள் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கற்பூர முல்லை ஒன்று < 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பூங்காவியம் பேசும் ஓவியம் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பூங்காவியம் பேசும் ஓவியம் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ஶ்ரீ சிவ சுத 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வாம்மா வா 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000