Pages

Wednesday, February 21, 2024

இலங்கை இந்திய வானொலிகளில் கோலோச்சிய குரலோன் பினாகா கீத்மாலா" புகழ் அமீன் சயானி விடை பெற்றார்


றேடியோ சிலோன் காலத்து வானொலி உலகின் பொற்கால நாயகர்களில் ஒருவர் அமீன் சயானி தனது 91 வது வயதில் பெப்ரவரி 20 ஆம் திகதி விடைபெற்றிருக்கிறார்.

1952 ஆம் ஆண்டு தொடங்கி இலங்கை வானொலியிலும், பின்னர் 1989 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை இந்திய வானொலியின் "விவித் பாரதி" வர்த்தக ஒலிபரப்பிலும் இந்த பினாகா கீத்மாலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிப் பெரும் புகழோடு விளங்கியவர்.

வாராந்தம் தலை சிறந்த பத்து ஹிந்திப் பாடல்களின் அணிவகுப்பாக அமைந்த அந்த நிகழ்ச்சியைத் தமிழில் இசை அணித்தேர்வு என்று இலங்கை வானொலியும் அமைத்திருந்தது.பினாகா கீத்மாலாவுக்கு மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். 






வாணி ஜெயராம் அவர்களை நான் பேட்டி கண்ட போது,

தான் ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும் என்ற இலட்சியத்துக்குக் காரணமாக அமைந்த தன் இளம் பிராயத்தில் றேடியோ சிலோன் இல் புதன் கிழமைகள் தோறும் ஒலிபரப்பான ஹிந்திப் பாடல்கள் பினாகா கீத் மாலா நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் பின்னர் தன் ஹிந்திப் பாடலான போலாரே பாடல் 16 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஒலிபரப்பானதும் கனவு பலித்ததும், தமிழ்ப் பாடல்களை றேடியோ சிலோன் கவி நயத்தோடு தொகுத்து அளித்ததை நெகிழ்வோடு பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"சகோதர சகோதரிகளே!" என்று விளித்துத் தன் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் அமீர் சஹானி 54,000 க்கும் மேற்பட்ட வானொலிப் படைப்புகள் செய்த அசுர சாதனையாளர். 

கானா பிரபா

21.02.2024

Tuesday, February 20, 2024

சின்னப்பொண்ணு சின்னப்பொண்ணு கண்ணுக்குள்ள என்ன கண்ணு….


நிலை தளர்ந்து அப்படியே உடைந்து சரியும் நிலையை அப்படியே மனக்கண் முன்னே கொண்டு வர முடியுமானால் அந்த உணர்வைப் பிரதிபலிக்கக் கூடிய அரிய பாட்டு இது.

மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி & வாணி ஜெயராம் என்று மூன்று குரல்களின் சோகப் பிரதிபலிப்பு ஒரே அலைவரிசையில் இருக்கும்.

அதெப்படி மூன்றுமே ஒன்றாகி ஒரே உணர்வைக் கொடுக்கிறது என்ற ஆச்சரியம் மேலிடும்.

பாடல் வரிகளை மறந்து “சின்னப்பொண்ணு” “சின்னப்பொண்ணு”  என்று அந்த மெட்டில் உட்காரும்படி பாடிப் பார்த்தால் கூடப் பொருந்திப் போகும் நெளிவு சுழிவு இருக்கும்.

விழுந்து கிடக்கும் பிரபுவை எழுப்ப எஸ்.ஜானகியின்  ஆலாபனை காதலிக்குப் (பல்லவி) போய்ச் சேர, அதை முந்திக் கொண்டு கட்டிய மனைவி (ராசி) ஓடி வரும் போது தோதாக வாணி ஜெயராமின் ஆலாபனை வரும் பாருங்கள். இந்த இடத்தில் நிறுத்தி விட்டு அந்தக் காட்சியை ஒருமுறை பாருங்கள் இந்த இசைக்குக் காட்சி கொடுத்த மரியாதை புரியும்.

எத்தனையோ பிறப்பில் வாழ்ந்து கழித்து விட்டோம் இப்பிறப்பில் ஏனிந்தப் பிரிவினை என்று நொந்து கொள்ளும் காதலி, 

கொண்டவன் வேதனையைக் கண்டு மருகும் மனைவி,

இருவருக்கும் நடுவில் மலேசியா வாசுதேவனின் தளர் நடையில் எழும் சோக ராகமாய் அமைந்திருக்கும்.

அதில் சுயபச்சாதாபம் இல்லாதிருக்கும்.

கங்கை அமரனின் பாடல் வரிகள் இந்தச் சூழலுக்கு நியாயம் செய்திருக்க, அண்ணனின் இசை மெல்லிய நீரோடை போலப் பின்னணியில் ஓடும். சிவாஜி புரடெக்ஸன்ஸ் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த முதல் படம் அறுவடை நாள் தொடர்ந்த ஆனந்த் ஆகிய இரு படங்களுக்கும் கங்கை அமரன் தான் முழுப் பாடல்களும்.

மலேசியா வாசுதேவனைக் கொண்டாடும் போது இம்மாதிரியான பாடல்களையும் தேடி எடுத்துச் சிலாகிக்க வேண்டும். அவர் உயிர்ப்புடன் இருப்பார்.

சின்னப்பொண்ணு சின்னப்பொண்ணு

கண்ணுக்குள்ள என்ன கண்ணு….

https://youtu.be/dNcsEuZQyqw?si=CHXRvg5iOaH7Tiw0

மலேசியா வாசுதேவன் நினைவில் 

(20 பெப்ரவரி 2011)

கானா பிரபா


Wednesday, February 7, 2024

இசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த் விடை பெற்றார் 🙏



“வா வா என் இதயமே...

என் ஆகாயமே...

உன்னை நாளும் பிரியுமோ 

இப் பூமேகமே....


https://youtu.be/sW_stgFQ4SY


பாடலைக் கேட்ட மாத்திரத்தில் பாடலின் உணர்வுக்குள் ஐக்கியமாகி, இந்த அற்புதமான இசையமைப்பைக் கொண்டாடவும் செய்யும் மனது. 


“தேவ லோக பாரிஜாதம்

மண்ணில் வீழ்தல் என்ன ஞாயம்.....”

என்ற கணங்களில் உதாராக, விரக்தியின் வெளிப்பாட்டோடு தன் ஸ்டைலான வார்த்தைப் பிரயோகத்தைக் காட்டும் ரஜினி தான் ஞாபகத்துக்கு வரும் அளவுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் நியாயம் செய்திருப்பார்.

“ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் 

ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் நியாபகம் 

உறங்காமல் இருக்கின்றது


இந்தப் பாடல் எண்பதுகளின் இளசுகளின் காதல் தேசிய கீதம் என்றால், இதன் சோக வடிவில் எஸ்.பி.பி காட்டும் நளினங்களையும் ஆங்கில வார்த்தைப் பிரயோகத்தையும், “நான் யாருக்கும் அடிமை இல்ல” என்ற அந்தத் தெனாவெட்டையும் பிரதி பண்ணி நடித்த வாண்டுகளில் நானும் அடக்கம். 


யப்பா என்னமா இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்று உச் கொட்டி 

“நான் அடிமை இல்லை” படப் பாடல்களை

ரசித்துக் கேட்கும் ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். 

அதுவும் “வா வா இதயமே” பாடலைக் கேட்கும் போதெல்லாம் “என்னதான் சுகமோ நெஞ்சிலே” (மாப்பிள்ளை) பாடலுக்குள் என்னை இழுத்துப் போய் விடும்.


ஜூட் மேத்யூ என்பவரை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் விஜய் ஆனந்த் அல்லது விஜயானந்த் என்று சொன்னால் எண்பதுகளின் திரையிசைப் பிரியர்கள் சட்டென்று இனம் கண்டு கொள்வார்கள்.


‪இளையராஜா, கங்கை அமரன், ஹம்சலேகா போலவே சினிமாவுக்காகப் பெயர் மாற்றியவர் இவர்.‬


இசைஞானி இளையராஜாவின் தனி ராஜ்ஜியமாக எண்பதுகள் திகழ்ந்து கொண்டிருக்க ஆங்காங்கே உள்ளிருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் இசையமைப்பாளர்கள் பலர் வந்து உரசிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் ரசிகர்களின் தாராள மனசு, என்ன நல்ல பாட்டாக இருந்தாலும் அது யார் கொடுத்தாலும் அது இளையராஜா போட்டதாகவே கண்ணை மூடிக் கொண்டு வரவில் வைத்து விடுவார்கள்.





மெல்லிசை மன்னர் காலத்தில் ஜி.கே.வெங்கடேஷ், ராஜன் நாகேந்திரா, விஜய பாஸ்கர் போல ராஜா காலத்தில் விஜயானந்த், மற்றும் ஹம்சலேகா ஆகிய கன்னடப் பட உலகில் கோலோச்சிய இசையமைப்பாளர்கள் வந்தார்கள்.


அப்படி வந்தவர் தான் விஜய் ஆனந்த். ஆனால் இவரைச் சில படங்களில் விஜய் ஆனந்த் என்றும் வேறு படங்களில் விஜயனந்த் என்றும் போட்டுக் குழப்பி விட்டார்கள்.


இந்த விஜயானந்த் ஐப் பரவலாக அறிமுகப்படுத்தியது “நான் அடிமை இல்லை”.

ஹிந்தியிலிருந்து கன்னடத்துக்குப் போய் அங்கு விஷ்ணுவர்த்தன் நடித்த 

Nee Bareda Kadambari

படத்தை இயக்கிய துவாரகீஷ் அப்படியே கதையோடு அதே படத்தின் இசையமைப்பாளர் விஜயானந்தையும், ரஜினியின் கால்ஜீட்டையிம் வைத்து இந்தப் படத்தை இயக்கினார்.

ஏற்கனவே கன்னடத்தில் கொடுத்த பாட்டு

“ஒரு ஜீவன் தான்” பாடலின் மூலம் “நீ மீட்டிடா” (சந்தோஷம்) 


https://youtu.be/XdrL41v2hms?si=cLn0LalQWxEwUqcm


சோகம்


https://youtu.be/fHTr_wY-s8Q?si=LoqydbsRUoiP_qpL


 என்று தமிழுக்கும் வருகிறது. அத்தோடு புதிதாகவும் “வா வா இதயமே” பாடலோடு இன்னொரு அற்புதமான பாடலான

தேவி தேவி 


https://youtu.be/uHNR2d--vAE


பாடலையும் கொடுத்தார் விஜயானந்த்.


போனாப் போகுது புடவை பறக்குது என்ற சில்மிஷப் பாடலும் ரசிக்க வைக்கும்.


“நான் அடிமை இல்லை” பாடல்களைக் கேட்க


https://youtu.be/aLYD-SFxNN4


பெரும்பாலும் விசு இயக்கிய படங்களில் இசை என்பது கோதாவரி கோட்டைக் கிழிடி என்று ஒட்டாமல் ஒப்புக்குச் சப்பாணியாக இருக்கும். 

ஆனானப்பட்ட இளையராஜாவோடு இணைந்த கெட்டி மேளம் படப் பாடல்களே பெட்டிக்குள் போனவை.

ஆனால் அதிசயமாக விசு பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பயணித்திருக்கிறார். அதில் இந்த விஜய் ஆனந்தும் ஒருவர் என்பது இன்ப ஆச்சரியம். குறிப்பாக ஊருக்கு உபதேசம், வாய்ச் சொல்லில் வீரனடி,

நாணயம் இல்லாத நாணயம், காவலன் அவன் கோவலன் ஆகிய படங்களுக்கு விஜய் ஆனந்த் தான் இசை. அதிலும் நாணயம் இல்லாத நாணயம் படத்தில் 

அழகே நீ பிறந்து இவளிடம் தானோ


https://youtu.be/DRNGfHcmafo


என்ற அட்டகாசமான பாடலையும் கொடுத்திருக்கிறார். விசு கொஞ்சம் விரசத்தை அதிகப்படியாகப் போட்டு எடுத்த

காவலன் அவன் கோவலன் படத்தில் வரும்

சிட்டான் சிட்டான் குருவி 


https://youtu.be/cfN3IyOztqM


அற்புதமான பாட்டு. இந்தப் பாட்டு விஜய் ஆனந்தின் சாகித்தியத்தைப் பறை சாற்றும் இன்னொரு இனிய மெட்டு.


அந்தக் காலத்தில் விஜிபி போன்ற நிறுவனங்கள் தான் புத்தம் புதுப் படங்களின் வீடியோப் பிரதிகளை வெளியிடும். அப்போது 

ஒரு படத்தின் பின்னால் வரப் போகும் புதுப் படங்களின் முன்னோட்டத்தில் 

“வெற்றி” என்ற சொல் வந்து இன்னொரு “வெற்றி” என்ற சொல் கீழே போட்டு இரண்டுக்கும் இடையில் “மேல்” என்ற சொல்லோடு அறிமுகமான “வெற்றி மேல் வெற்றி” பெரியதொரு எதிர்பார்ப்பைக் கிளப்பியது. பிரபு, சீதா நடித்த அந்தப் 

படத்தின் காட்சியமைப்பு, ஒளிப்பதிவு வழியான உருவாக்கத்திலும் புதுமையாக இருந்தாலும் படம் எடுபடவில்லை. அந்தப் படத்திலும் விஜய் ஆனந்த் தான் இசை. அதில் வரும் ஜேசுதாஸ் பாடிய கண்ணான கண்மணியே

https://youtu.be/wIMGDc3bEgc


அதிகம் விரும்பிக் கேட்கும் சோக கீதமானது.


எண்பதுகளில் கை கொள்ளும் அளவு தமிழ்ப் படங்கள் இசைத்தாலும் மறக்க முடியாத “நான் அடிமை இல்லை” பாடல்களால் காலத்துக்கும் நினைப்பில் இருப்பார் விஜயானந்த் என்ற விஜய் ஆனந்த்.


கானா பிரபா

07.02.2024

Friday, February 2, 2024

தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ ❤️🙏

“திருவாசகத்துக்கு உருகாதார் 

ஒரு வாசகத்துக்கும் உருகார்"

என்னும் வாக்குக்கேற்ப, மணிவாசகர் தில்லையிலே “திருக்கோத்தும்பி” ஐ அருளிச் செய்தார்.

“பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த

நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்

மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்

சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ”

https://www.youtube.com/watch?v=-P2pdcmNRTY

அரச வண்டே! 

பூ ஏறு கோனும் - தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரமனும், புரந்தரனும் - இந்திரனும், பொற்பு அமைந்த - அழகு அமைந்த, நா ஏறு செல்வியும் - பிரமனது நாவில் தங்கிய கலைமகளும், நாரணனும் - திருமாலும், நான்மறையும் - நான்கு வேதங்களும், மாவேறு சோதியும் - பெருமை மிகுந்த ஒளி வடிவினனாகிய உருத்திரனும், வானவரும் - மற்றுமுள்ள தேவர்களும், தாம் அறியா - தாம் அறியாவொண்ணாத, சே ஏறு சேவடிக்கே - இடப வாகனத்தில் ஏறுகின்ற சிவபெருமானுடைய 

திருவடிக் கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக. 

(பொருள் விளக்கம் நன்றி : தமிழ் இணையப் பல்கலைக்கழகம்)

என்ற பொருட்படும் அந்தப் பாடலோடு தொடரும் “திருகோத்தும்பி”

ஐத் தன் திருவாசக இசைப் பாடல்களில் பயன்படுத்திய போது தன் மகள் பவதாரிணியை இணைத்துப் பாடவைத்திருக்கிறார்.



இசைஞானி இளையராஜாவின் பக்தி இசை இலக்கியங்களான “அம்மா பாமாலை”, ரமண மாலை (ஆராவமுதே) ஆகியவற்றில் தன் செல்வமகள் பவதாரிணிக்கும் பாடல்களைப் பகிர்ந்தளித்து வழங்கியவர் தன் ஆன்மிக இசைப் பயணத்தில் கூடவே வைத்திருந்தார்.

முறையே தன் திருவாசக இசைப் பணியில் சரியாக இருபது வருடங்களுக்கு முன், சிவனோடு ஐக்கியம் கொள்ள வைக்கும் பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாட வைத்தன் பொருளை பவதாரிணியின் இன்மையோடு பொருத்திப் பார்த்து உணர்வு வசப்பட்ட நிலையில் இருக்கின்றேன்.

“தாயான இறைவன்” எனும் ஈசன் திருவடிகே அழைத்துப் போகும் அந்தப் பாடல் பவதாரிணியின் ஆன்ம ஈடத்துக்குப் போய்ச் சேரட்டும். 

(அறிவுச் சமூகம் - இசை ஆய்வு நடுவகம் ஒருங்கிணைப்பில் தமிழிசைத் தென்றல் பவதாரிணி நினைவேந்தலில் நான் பகிர்ந்த அஞ்சலிப் பகிர்வின் ஒரு பகுதி இது)

கானா பிரபா

02.02.2024

பவதாரிணி ஒளிப்படம் நன்றி : மு.உதயா