இந்தப் படத்தைப் பாதி கடக்கும் போது ஒருவர் மீது பெரும் எரிச்சல் வந்தது.
அவர் வேறு யாருமல்ல குரு சோமசுந்தரம் தான்.
அந்தக் கடுப்பு குரு சோமசுந்தரம் என்ற நடிகன் மீதல்ல, அவர் ஏற்றிருந்தது “சிபு” என்ற அந்தப் பாத்திரம் மீது. அந்த அளவுக்கு பார்வையாளனுக்கு வெறுப்பை அள்ளி விதைக்கக் கூடிய, போகிற போக்கில் அள்ளி வீசி விட்டுப் போகும் யதாத்த நாயகனாக மிளிர்ந்தார்.
அதே சமயம், அந்த சுய நிலை பிறழ்ந்த சிபுவுக்குள் இருக்கும் ஒரு காதல், அதை அப்படியே மெல்ல மெல்ல விரித்துக் காட்டும் பாங்கு என்று சினிமாத்தனமே இல்லாத உணர்வோட்டம்.
அதுவும் ஒரு பக்கம் ஊரே திரண்டு வந்து சிபுவை அழிக்க நினைக்கும் போது, தன் காதலி இப்போதாவது தன் தூய அன்பைக் கண்டுணர்ந்தாளே என்ற பெருமிதத்தில் அவளின் கையை வாஞ்சையோடு அள்ளி முகத்தில் ஒற்றிக் கொஞ்சி உடைந்துருகும் கணத்தில் அப்படியே தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார் படத்தின் எல்லாக் கதாபாத்திரங்களையும். இந்தப் படத்தின் நிஜ நாயகன் இவரே.
ஏமாற்றம் எழும் போது தன் உதட்டைப் பிரித்து வெற்றுச் சிரிப்பால் காட்டி விட்டு நடத்தும் ஊழித் தாண்டவம் இருக்கே அப்பப்பா....இயக்குநர் ராஜூ முருகன் “ஜோக்கர்” படத்தின் கதையை குரு சோமசுந்தரத்திடம் போகிற போக்கில் சொன்ன போது,
“ஏன் என்னையே நாயகனாக்கி விடுங்களேன்” என்று கேட்டாராம்.
அவ்வளவு தன்னம்பிக்கை கொண்ட ஒரு நடிகன்.
தலைவாசல் விஜய், பசுபதி என்று நம் சமகாலத்துக் குணச்சித்திரங்களை மலையாள உலகம் சுவீகரித்து வெகு அழகான பாத்திரங்களை எல்லாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த வரவுகளில் சமீபத்தில் குரு சோமசுந்தரத்தை அள்ளிக் கொண்டு போய் விட்டார்கள்.
அந்த வகையில் தமிழர்கள் ஏமாளிகள் தான்.
“மின்னல் முரளி” படம் ஒரு அமானுஷ்ய சக்தியை மையப்படுத்திய சாகச நாயகன், வில்லன் என்ற கதைக் கோட்டில் இருந்தாலும், இதனை இந்தியச் சூழலுக்கு குறிப்பாக தென்னிந்தியச் சுழலுக்கான ஒரு எளிமையான கதையோட்டத்தில் கொடுத்த விதத்திலும் சேட்டன்கள் அடிப்பொளி ஆக்கி விட்டார்கள்.
இன்று கனவு நாயகனாக நவ நாகரிகத்தில் மிளிரும் டோவினோ தாமஸ் ஐக் கூட ஒரு சாதாப் பேர்வழி ஆக்கி, அவர் பின்னால் சுற்றும் காதலி, கைகொடுக்கும் கராத்தே பெண்மணி என்று யாருக்குமே சினிமாத்தனம் பொருந்திய அழகில்லை. எல்லோருமே இயல்பான கிராமத்தான்கள்.
ஏன் சுசின் ஷியாமின் இசை கூட ஒரு தளர்ந்த கிட்டாரிசையும், மெல்லிய ஆவர்த்தனங்களுமாகத் தான் பல இடங்களில். முக்கிய காட்சிகளில் கூட இசையில் பிரமாண்டம் அதி உச்சமாகத் தொனிக்கவில்லை. ஆனால் அதுதான் இந்த எளிய சினிமாவின் அணிகலனாக அமைந்திருக்கின்றது.
படத்தின் எல்லாப் பாத்திரங்களுமே அஞ்சு வர்க்கீஸ் உட்பட, அவரவர் எல்லையில் இருந்து சிறப்பாகப் பண்ணியிருந்தாலும் அந்த சகோதரி மகன் குண்டுக் கண்ணாடி சகிதம் தன் மாமனின் அமானுஷ்ய சக்தியை அறிந்த ஒரேயொருவனாகக் கொடுப்புக்குள் சிரிப்பும், திகில் காட்டும் முகமுமாக நவரசச் சிறுவன்.
“ஆண்டவர் நம்மை நோக்கி வருவார்” என்று போதனை செய்யும் அந்த செபக் கூட்டத்தின் சுவரை உடைத்துக் கொண்டு பாயும் மின்னல் முரளி, “என் மூஞ்சில குத்திய அவன் மூஞ்சியைப் பதம் பார்க்காம விடமாட்டேன்” என்ற சபதம் வைக்கும் கராத்தேப் பெண்மணி “ப்ரூஸ்லீ பிஜி” மின்னல் முரளியை அடையாளம் கண்டு அவனுக்குக் குத்து விட்டுத் தன் சபதத்தை நிறைவேற்றிய பின்னர் தான் அவனிடம் காது கொடுத்துக் கேட்பது என்று சின்னச் சின்ன நுணுக்கமான எள்ளல்கள் படம் முழுக்க.
தொண்ணூறுகளில் மலையாள சினிமா உலகின் ஜனகராஜ் தனமான ஹாஸ்ய நாயகன் ஹரிஶ்ரீ அசோகன் இங்கே ஒரு அனுதாபத்தை அள்ளிப் போகும் வறிய அண்ணனாக. அந்தத் தொங்கும் கண்களின் பரிதவிப்பிலேயே மனுஷன் ஒரு தேசிய விருதுக்கான உச்சத்தைத் தொட்டு நிற்கிறாரே?
தம் பழைய காதலர்களின் திருமணத்துக்குப் போகாவிட்டால் நமக்குப் பொறாமை என்று ஊர் சொல்லும் என்று கல்யாணத்துக்குக் கிளம்புவது, அந்தப் புறக் கிராமத்தின் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் எளிமை, ஒரு சூப்பர் ஹீரோ கதையிலும் கையில் கிடைத்த லுங்கியையோ, வேட்டியையோ முகத்தில் புதைத்து விட்டு உருமாற்றிப் பயணிக்கும் மின்னல் “முரளிகள்” என்று செதுக்கியிருக்கிறார்கள்.
படத்தின் தொடக்கத்தையும், முடிவையும் தீயோடு முடிச்சுப் போட்டு அலுப்புத்தட்டாது பயணிக்கும் விறுவிறு திரைக்கதை வேறு.
ஒரு சூப்பர் ஹீரோ பின்னணியில் உணர்ச்சிபூர்வமான காதல் கதையையும், வாழத் துடிக்கும் இளைஞனின் போராட்டத்தையும் அழகாக முடிச்சுப் போட்டு மோத விட்ட விதத்தில் “மின்னல் முரளி”களுக்கு ஏராளம் நட்சத்திரங்களை அள்ளி வீசலாம்.
கானா பிரபா
30.12.2021