Pages

Thursday, March 31, 2022

நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு.....❤️❤️❤️

இந்தப் பாடலை இதுவரை கேட்காதவர்களோ அல்லது காலம் கடந்து மீண்டும் ஒருமுறை கேட்பவர்களோ ஆத்மார்த்தமாக உங்கள் காதுகளைக் கொடுத்துப் பாருங்கள் பிறகு தெரியும் சங்கதி. நாள் முழுக்க பல்லவியை முணுமுணுத்துக் கொண்டிருப்பீர்கள் அப்படியொரு அந்நியோன்யத்தை ஏற்பட்டுத்தும் பாட்டு இது.

இன்றைக்கு சூப்பர் சிங்கரில் வாண்டுகள் எல்லாம் இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் பாடும் போது உள்ளூர ஒரு உவகை எழுமல்லவா? ஆனால் தனது 14 வயதிலேயே “காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ” என்று ராஜா இசையில் கவிக்குயில் படத்துக்காகப் பாடிவிட்டார் சுஜாதா. 

“புது வெள்ளை மழை” பாடலோடு தன்னோடு இரண்டாவது சுற்றை ஆரம்பித்த பாடகி சுஜாதாவின் முதல் சுற்றில் இளையராஜா இசையில் பாடியளித்த பொக்கிஷப் பாடல்களில் ஒன்று தான் இந்த “நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்” பாட்டு. எழுபதுகளின் இறுதியில் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஜென்ஸி, சொர்ணலதா (இன்னொருவர்), பூரணி, இந்திரா என்று கட்டுக்கடாத அறிமுகப் பாடகிகள் போன்று சுஜாதாவுக்கும் பல நல்ல பாடல்கள் கிட்டின. “நீ இல்லாத போது” பாடலைக் கேட்கும் போது ஒரு அனுபவப்பட்ட பாடகி போல இணைந்து பாடும் மலேசியா வாசுதேவனுக்கு ஈடு கொடுத்துப் பாடியிருக்கிறார். இதைப் பாடிய போது அவருக்கு வயது பதினேழு. இந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்து கே.ஜே.ஜேசுதாஸுடன் வீரசிங்கம் மண்டபத்தில் பாடகியாகவும் மேடையேறினார்.

மலேசியா வாசுதேவன் அவர்களைப் பற்றி என்ன சொல்ல... இந்த மாதிரியான பாடலைக் கேட்கும் போதே “அலங்காரப் பொன்னூஞ்சலே” (சொன்னது நீ தானா), “நீங்காத எண்ணம் ஒன்று” (விடியும் வரை காத்திரு), “காலங்கள் மழைக்காலங்கள்” (இதயத்தில் ஒரு இடம்) என்று வரிசை கட்டி வந்து விடும் இவர் நினைப்போடு.

இந்த மாதிரி சாந்தமான பாவத்தோடு பாடும் பாடல்களில் வெகு அடக்கமாக, உணர்ச்சிப் பெருக்கோடு மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடுவதைக் கேட்பவர்களும் உணரக் கூடிய அளவுக்குக் கரைந்து பாடுவார்.

“எது வரையில் சுகமென அதை நான் காண்பேன்” என்று பயணிக்கும் இடங்களில் எல்லாம் மலேசியா முத்திரை இருக்கும்.

“நீ.....இல்லாத போது....ஏங்கும் நெஞ்சம்....” இப்படியானதொரு நீட்சியானதொரு சங்கதியைப் போட்டு பல்லவியிலேயே கேட்போரைக் கட்டிப் போடும் வித்தைக்கார ராஜாவின் இசையில் தவிர்க்கக் கூடாத பாட்டு இது. அந்தக் காலத்தில் தானே இயக்காமல் கதை, வசனம் என்று பாக்யராஜ் பங்களித்த படங்களில் ஒன்று இந்தப் பாட்டு இடம்பெற்ற “இளமை கோலம்”. இந்தப் பாடத்தில் “வச்ச பார்வை தீராதடி”, “ஶ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா” போன்ற தேனான பாட்டுகளும் உண்டு. பாடல்களை கவிஞர் கண்ணதாசனும், கங்கை அமரனும் எழுதியிருக்கிறார்கள்.  “நீ இல்லாத போது” பாடலை கங்கை அமரன் யாத்திருக்கிறார்.

நீ இல்லாத போது 

ஏங்கும் நெஞ்சம்

சொல்லாத கதை நூறு..

அது நில்லாத புது ஆறு

உன்னோடு தான் திருமணம் 

உறவினில் நறுமணம் 

ஒன்றாக வழி கூறு....

https://www.youtube.com/watch?v=-B1TVacqXdI 

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாடகி சுஜாதாவுக்கு

கானா பிரபா


Wednesday, March 30, 2022

💕🌸 என்ன வரம் வேண்டும் இந்த வரம் போதும் 🍀💕


“இங்கே இரண்டு ஜீவன் இணையும்

இன்பம் என்னும் மழையில் நனையும் 

ஓஓஓஓம்ம்ம்...... 

ஓஓஓஓம்ம்ம்......

துன்பம் என்னும் கனவு கலையும்

தூபம் போட்டு உறவு மலரும் 

தந்தோம் நல் வாழ்வு.......

தமிழ் மந்திர உச்சாடனம் முழங்குகிறது அந்தக் கூட்டுக்குரல்கள் எழுப்பும் சங்கமம்.

என்னவொரு அதீதமான படைப்பாக்க சிந்தனை இது. இந்த மாதிரியானதொரு மந்திர உச்சாடனம் போலே தூய உள்ளங்களின் சங்கமத்தை 

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் 

ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்

ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு 

ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

https://www.youtube.com/watch?v=HOFEt07NE-U

என்று வாலியார் துணையோடு சமைத்திருப்பார்.

அங்கே பட்டாம்பூச்சிகள் கிளப்பிவிட்ட கிளர்ச்சியில் இதயத் துடிப்பு “லப் டப் லப் டப்” “லப் டப் லப் டப்” என்று ஓசையெழுப்புவதைத் தாளக் கட்டில் கொணர்ந்து விடுவார் ராஜா.

இங்கே இந்தப் பாடலில்

“டுடுடு டுடு டும் டுடுடு டுடு டும்” 

என்று வரும் தாளக் கட்டு அந்த உள்ளக் கிளர்ச்சியின் இன்னொரு பரிமாணம். வார்த்தைகள் மெளனிக்கும் போது இசை வார்த்தையாகின்றது. அந்தப் பின்னணித் தாளலயத்தை ஹெட்போன் கொண்டு கேட்டுப் பருகுங்கள் உயர்ச்சி தெரியும்.

இளையராஜாவின் எண்பதுகளிலும் பிரபல பாடகர்களோடு சேர்ந்து சேர்ந்திசைக் குரல்கள் கொடுத்திருந்தாலும் அதிகம் விளைந்தது கோஷ்டி கானங்கள். ஆனால் தொண்ணூறுகளில் அவர் காதல் பாடல்களிலும் அதிகம் கூட்டிசைக்க வைத்திருக்கிறார்.

அப்படி அழகாகப் பிரசவித்தவைகளில்

“வந்தாள் வந்தாள் ராஜகுமாரி” எஸ்.என்.சுரேந்தர், அருண்மொழி, கூட்டிசைக்க மனோ, லேகா பாடிய வகையிலும், 

“என்ன வரம் வேண்டும்” பாடலிலும் அதே பாங்கில் எஸ்.என்.சுரேந்தர், அருண்மொழி, சிந்துதேவி கூட்டிசைக்க மனோ & லேகா பாடுகிறார்கள்.

சேர்ந்திசைக் குரல்களைத் தன் பாடல்களில் வெகு அற்புதமாகக் கையாண்டவர் இசைஞானி இளையராஜா. அதனால் தான் தேர்ந்தெடுத்த 500+ முத்துகளை வைத்து இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் என்ற போட்டியை ஏழு வருடங்களுக்கு முன் இணையத்தில் நடத்தியிருந்தேன். அதை மீண்டும் அடுத்த சுற்றில் இறக்கி விட்டிருக்கிறேன். அப்படி நான் பாடல்களைப் போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கும் போது ரொம்பவே ரசித்து ருசித்துப் பகிர்ந்தளித்த பாட்டு இது.

நந்தவனத் தேரு படம் என்றாலே முந்திக் கொண்டு "வெள்ளி நிலவே வெள்ளி நிலவே" பாடல் ஞாபகத்துக்கு வரும். "என்ன வரம் வேண்டும்" இந்தப் பாட்டு ஒப்பீட்டளவில் அதிக கவன ஈர்ப்பைப் பெறவில்லை. எப்படி அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் (ஒட்டு) மீசை வைத்துக் கொண்டு அதற்குப் பின் தன் ஆரம்ப காலப் படங்கள் சிலதில் தோல்வி கண்டாரோ அதே போல மீசை மழித்த கார்த்திக் ஐ மக்கள் தேரில் வைத்து அழகு பார்க்கவில்லை.

"என்ன வரம் வேண்டும் இந்த ஜென்மம் போதும்" இந்தப் பாடலின் சிறப்பு என்ன என்று பார்த்தால்,

"இங்கே இரண்டு ஜீவன் இணையும்" என்று 

கூட்டுக் குரல்கள் ஆரம்பித்து அப்படியே காதல் ஜோடிகளிடம் பாடலைப் பவ்யமாகச் சேர்த்து விட,

தொடரும் பாடலில் காதலனும் காதலியுமாய் மனோ மற்றும் லேகா பகிரும் காதல் மொழிகளுக்கு இடையே ஊடறுக்கும் இடையிசைச் சங்கீதத்தில் மட்டும் உறுத்தாது வந்து ஆமோதிக்குமாற் போல

"தனன நனனா ம்ம்ம்" என்று முதல் இடையிசை, இரண்டாவது சரணத்துக்கு முந்திய இடையிசையில் இன்னும் பலமாக

 "ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்" என்று கூட்டுக் குரல்கள்

அந்த சந்தோஷ கணங்களைக் குதூகலிப்பாய்ப் பகிரும்.

அந்தக் காட்சியமைப்போடு பொருந்தும் ஆரம்பக் குரலோசை அப்படியே தனிமையை விரட்டியடித்துச் சொந்தம் ஒன்று கிட்டியதன் ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாகப் பீறிடும்.

காட்சியின்பத்தில் கார்த்திக்கின் தோள் பற்றும் ஶ்ரீநிதியின் கை அரவணைப்பில் கண்மூடிப் பரவசமாகி அப்படியே பாடலுக்குள் போகும் கற்பனை ஆகா ஆகா 

இசைஞானி இளையராஜாவுக்குப் பல இயக்குநர்கள் பாட்டெழுதியிருக்கிறார்கள். ஆனால் ஆர்.வி உதயகுமார் அளவுக்கு அந்த இசையைப் பருகி, வரிகளால்  மகத்துவ மாலை சூடியிருக்கிறார்களா என்று எண்ண வைக்கும் பாட்டு இது. திருமணப் பாடல்களில் இந்தப் பாடலை மெல்லச் சேர்த்து விட்டால் எவ்வளவு அழகான வாழ்த்துப் பா ஆக அமையும், இல்லையா?

https://www.youtube.com/watch?v=Wefnnt1ntsA

கானா பிரபா

30.03.2022

Thursday, March 24, 2022

மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை ❤️

நேற்று முன்தினம் நித்திரைக்குப் போகும் முன் ஒரு பாடலின் சரணத்தில் ஒரு பகுதியை நினைப்பூட்டிக் கொண்டிருந்தது.

அது இதுதான்,

“பொன்னை வைத்த இடத்தினிலே

பூவை வைத்து பார்ப்பதற்கு

அண்ணனன்றி யாருமுண்டோ

பின்னும் ஒரு சொந்தமுண்டோ.....”

அப்படியே ஒரு இந்துஸ்தானி இசை விரிப்பில் மூழ்கிப் போனது மனசு. அதுவும் அப்படியே கொண்டு போய்

“அதன் பேர் பாசமொன்றோ” 

என்று எஸ்பிபி கொடுக்கும் போது என்னவொரு அழகானதொரு அமர்வு. 

அண்ணன் ஒரு கோவில் என்றால்

https://www.youtube.com/watch?v=2ibGFOOI2xM

இசைஞானி இளையராஜா வின் புதுவெள்ளம் இசைவெள்ளமாகப் பரவிய அந்த யுகத்திலும் வற்றாத ஊற்றாய் மெல்லிசை மன்னரின் பாடல்கள் இருந்தன என்பதற்கு “அண்ணன் ஒரு கோவில்” படமும் மாற்றுக் குறையாத தங்கம் எனலாம்.

“அண்ணன் ஒரு கோவில்” படத்தின் கன்னட மூலம் “தேவரக் கண்ணு” படத்திலும் இதே எஸ்பிபியும்,  பி.சுசீலாவும் “அண்ணன் ஒரு கோயில் என்றால்” பாடல் போனவே தனித்த பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். இசை T.G.லிங்கப்பா. இன்றும் கன்னடர்கள் போற்றிக் கொண்டாடும் சங்கீதமாக அந்த

“Ninna Neenu Maretharenu”

https://www.youtube.com/watch?v=__jBBtL32Fk

பாடல் விளங்குவதை யூடியூபில் உருகிக் காதலிக்கும் பின்னூட்டங்கள் வழி உறுதிப்படுத்திக் கொண்டேன். 

அதுவே மலையாளத்தில் “எல்லாம் நினைக்கு வேண்டி” என்று போன போது தட்சணாமூர்த்தி ஸ்வாமிகளின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸும், வாணி ஜெயராமுமாகப் பாடியிருக்கிறார்கள் இந்த அண்ணன், தங்கைப் பாடலை அவ்விதம் தனித்தனியாக.

நேற்று முதல் வேலையாக, வேலை முடிந்ததும் செய்த காரியம் “அண்ணன் ஒரு கோவில்” படத்தைப் பார்த்தது தான். சின்ன வயசில் எங்களூர் வாசிகசாலையில் “படக்காட்சி” என்று ஆள் நிரப்பி ஐம்பது சதத்துக்கோ, ஒரு ரூபாவுக்கோ தொலைக்காட்சி, டெக் சகிதம் படம் பார்த்த அந்தப் புதினத்தில் “அண்ணன் ஒரு கோவில்” ஒன்று. 

அந்த நேரம் “நாலு பக்கம் வேடருண்டு” பாடல் தான் புதுமையாக இருந்தது.

ஆனால் இலங்கை வானொலி பொங்கும் பூம்புனலாய் அதிகம் பிரபலப்படுத்தியது “மல்லிகை முல்லை” பாடலைத்தான்.

பல்லவியில் இரண்டே அடுக்குகளில் 

“மல்லிகை முல்லை

பொன்மொழி கிள்ளை” 

தொடங்கிவிட்டு ஒரு காரியம் செய்வார் கவியரசர் கண்ணதாசன்.

முதல் சரணத்தில் வைணவத்தையும், இரண்டாவது சரணத்தில் சைவத்தையும் அடையாளப்படுத்துவார் தன் உவமையில்.

எப்படி?

“சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம்” ஆண்டாளைக் கொண்டு வந்து

“சூடிக் கொடுத்தாள்

பாவை படித்தாள்

சுடராக எந்நாளும்

தமிழ் வானில் ஜொலித்தாள்

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்”

என்று ஆண்டாளின் திருப்பாவை ஈறாக உள்ளடக்கி ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று உவமைக் கலப்பு வைத்து விடுவார்.

அப்படியே அடுத்த சரணத்துக்குப் போய்

“தோகை மீனாள்

பூவை ஆனாள்

சொக்கேசன் துணையோடு

ஊர்கோலம் போனாள்”

மீனாட்சி, சொக்கநாதர் பந்தத்தைக் காட்டி மதங்கள் கூடும் ஒரு சித்திரைத் திருவிழாவாக்கிவிடுவார் கவியரசர்.

"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி"என்ற ஆண்டாள் பாசுரத்தோடே பி.சுசீலாம்மாவின் குரலோடு சிவாஜியின் தங்கை சுமித்திரா படத்தில் அறிமுகமாகுவார்.

இன்று பிறந்த நாட் காணும் பாட்டுத் திலகம் T.M.செளந்தராஜன் அவர்கள் நடிகர் திலகத்துக்குக் கொடுத்த பொக்கிஷப் பாடல்களில் தவிர்க்க முடியாததொன்று

மல்லிகை முல்லை

பொன் மொழி கிள்ளை

அன்புக்கோர் எல்லை

உன்னைப் போல் இல்லை

பொன் வண்ண ரதம் ஏறி

இம் மண்ணில் எங்கும் ஓடி

பொன் வண்ண ரதம் ஏறி

இம் மண்ணில் எங்கும் ஓடி

நல் அன்பு துணைத் தேடி நான் தருவேன்

https://www.youtube.com/watch?v=S_Xh-OAbeos

கானா பிரபா

Tuesday, March 22, 2022

இசையமைப்பாளர் காண்டீபன் விடை பெற்றார்

இசையமைப்பாளர் காண்டீபன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற அதிர்ச்சியான தகவலை இன்று காலை பாபு அண்ணா வழியாக அறிந்து வேதனை கொள்கிறேன். 

காண்டீபன் அவர்கள் குறித்து முன்னர் நான் எழுதிய இடுகை.

"இரவுகளை உறங்க வைக்கவே தாலாட்டு

கனவுகளைத் தொடங்கி வைக்கவே"

https://youtu.be/HDoJC18zN8Q

வானொலிகளாலேயே பிரபலப்படுத்தப்பட்டு மனசில் நிலைத்து நிற்கும் பாடல்களில், அதன் படமோ இசையமைப்பாளரோ அறிமுகமில்லாதிருப்பவையும் அடங்கும். அதில் ஒன்று தான் இந்த இரவுகளை உறங்க வைக்கவே தாலாட்டு பாடலும். இன்றும் கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இரவு நேர நிகழ்ச்சிகளின் நிலையக் குறியிசையாக இந்தப் பாட்டின் ஆரம்ப வரிகள் பயன்படுத்தப்படுகின்றன. "சித்திரமே நீ சொல்லடி" என்ற திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடலும் 

சொர்ணலதா பாடிய பாடலுமாக இரண்டு வடிவங்கள் உள்ளன. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் விஜய காண்டீபன். 

விஜய காண்டீபன் என்ற பெயரைக் கேட்டதும் இன்னொரு இசையமைப்பாளர் காண்டீபனும் நினைவுக்கு வருகிறார். அல்லது அவரே தான் பெயரை மாற்றியிருக்கக் கூடும். அந்த மற்றைய காண்டீபன் ஈழத்தில் பிறந்து "காவலுக்குக் கண்ணில்லை" என்ற ஆனந்த்பாபு நடித்த படத்தின் இசையமைப்பாளர் ஆனார். அவர் ஈழத்தவர் என்ற விபரம் தெரியாத சந்தர்ப்பத்தில் காவலுக்குக் கண்ணில்லை படத்தில் வரும் "பிகரு பிகரு" பாடலைக் கேட்ட போது ஏ.ஈ.மனோகரன் மீளப் பாடிய சிங்கள & தமிழ்ப் பாடலான "கிக்கிரி பலன" https://youtu.be/VL9fCV5Qb8U பாடலின் அப்பட்டமான சாயல் அடித்தது. மூலப் பாடலைப் பாடியவத் சிங்களத்தின் புகழ்பூத்த பாடகர் எம்.எஸ்.பெர்னாண்டோ அவர்கள். ஏ.ஈ.மனோகரன் சிட்னி வந்த போது இந்த ஒப்பீடை நான் வானொலிப் பேட்டியில் கேட்ட போது தான் காண்டீபனின் பின்னணியைச் சொன்னார்.

காவலுக்குக் கண்ணில்லை படத்தின் பாடல்கள்

தாயின் மடி தேடி

https://www.youtube.com/watch?v=0aWp_JdY1iA

ஓ அன்பே

https://www.youtube.com/watch?v=vDZ3sHh2kCM

பிகரு பிகரு

https://www.youtube.com/watch?v=bGFD0ikaIS8

தொடர்ந்து பாபு அண்ணா Babu Jayakanthan பகிர்ந்த குறிப்புகள்

இலங்கை வட மாகாணம் தென்மராட்சி நுணாவில் சாவச்சேரியை பிறப்பிடமாக கொண்டவர், இசையமைப்பாளர் கணபதிப்பிள்ளை சுதாகரன் என்ற “காண்டீபன்”. இவர் சென்னையில் 90 பகுதிகளில் SPB, சித்ரா, சுஜாதா, சொர்ணலதா போன்ற முன்னணி பாடகர்களை வைத்து தென்னிந்திய திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர். பிரித்தானியாவில் பல தென்மராட்சி நிகழ்வுகளுக்கு முன்னினின்று உதவி, தனது புற்று நோய் நோய் வாய்ப்பட்டு சொந்த ஊரில சிறிது காலம் வாழ்ந்து இனிதே இயற்கை எய்தினார்.

காவலுக்கு கண்ணில்லை திரைப்படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான என் நீண்ட நாள் இசை நண்பன்  (காண்டீபன்) Sutha . இலங்கை வந்த போது இவரின் இசையில் 20 பாடல்களுக்கு மேல் வாசித்து பணி புரிந்த  காலம்  நீங்காத நினைவுகள்  கடந்த வாரம்  வரை தொடர்பில் இருந்தார் .நேற்று முன்தினம் இவ்வுலகை விட்டு போவார் என நினைத்திருக்கவில்லை .இன்னும் சாதிக்க வேண்டும் என்ற கனவு அவரிடம் பேசும் போது அறிந்து கொண்டேன். என் Pop பாடல்கள் அவருக்கு மிகவும் பிடிக்கும். அன்பு நண்பனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அவர் இசையமைத்த பாடல்களில் எனக்கு பிடித்த பாடல் இது. 

https://youtu.be/PfXBNprVCLI

கானா பிரபா

22.03.2022


Sunday, March 20, 2022

கவிஞர் முத்துலிங்கம் 80 💚❤️

இன்று தமிழ்த் திரையிசையின் செழுமையான பாடல் பயிர்களை விளைவித்த கவிஞர் முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு அகவை 80. திரையிசைப் பாடலாசிரியராக ஐம்பது ஆண்டுகளைத் தொடுகின்ற அவரது பாட்டு ஓட்டத்தில் கிடைத்த ஒவ்வொரு துளிகளும் நமக்குப் பெறுமதியான பாடல்களாக ஏந்த முடிந்தது. 

ஒரு காலத்தில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வருவதற்கு முன்னர் வானொலி உரையாடல் நிகழ்ச்சிகளில் நேயராக நான் பங்கு பெறும் போதெல்லாம் ஏதோ ஒரு பாட்டு எப்படி உருவானது என்று குறித்த பாட்டின் பின்புலம் குறித்து எனக்குத் தெரிந்த செய்திகளைப் பகிர்வேன். பின்னர் என் வானொலி நிகழ்ச்சியாக அமைந்ததும் "பாடல் பிறந்த கதை" தான்.

கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் பாடல் பிறந்த கதை என்ற நூலை 2011 இல் சிங்கப்பூர் சென்றிருந்த போது வாங்கி ஒரே மூச்சில் வாசித்திருந்தேன். அந்த நூலில் வெறுமனே அவரின் திரையுலக அனுபவங்கள் மாத்திரமன்றி அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரையான திரையிசைக் கவிஞர்களின் வாழ்வில் நடந்த சில சுவையான அனுபவங்களையும் அதில் சொல்லியிருந்தார். அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் "முத்து மணி மாலை" என்னும் புதிய நிகழ்ச்சியைப் படைக்கவெண்ணி அதில் ஒரு பகுதியாக பல வருஷங்களுக்குப் பின் "பாடல் பிறந்த கதை" என்ற அம்சத்தையும் சேர்த்தேன். அப்போது முதலில் நினைவுக்கு வந்தவர் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள். அவரை அழைத்தபோது மறுப்பேதும் இன்றி ஒரு சில நாட்களில் வானொலி நேர்காணலைச் செய்வதற்கு இணங்கினார். கவிஞர் முத்துலிங்கத்தில் தமிழ் மீதான காதல், திரையுலகிற்கு அவர் வந்த சூழ்நிலையில் ஆரம்பித்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தொட்டு விருமாண்டி கமல்ஹாசன் ஈறாகப் பாடல்கள் பிறந்த கதைகளை 50 நிமிடங்களுக்கு மேல் ஒரு அழகிய தமிழ் விருந்தைத் தந்தார். அதைப் பாகங்களாக ஒலிவடிவில் தருவேன். இப்போது அந்தப் பேட்டியில் இருந்து ஆரம்பப் பகுதியை எழுத்தில் தருகிறேன்.

வணக்கம் கவிஞர் முத்துலிங்கம் அவர்களே

வணக்கம் ஐயா

ஒரு பாடலாசிரியராக அன்றும் இன்றும் பிரபல்யத்தோடு விளங்கும் நீங்கள் சென்னையில் வந்து இந்த இடத்தைப் பிடிப்பதற்கு முன் உங்கள் இளமைப்பிராயம், குறிப்பாக தமிழ் மீதான காதல் உங்களுக்கு எப்படி வந்ததென்று சொல்லுங்களேன்.

தமிழ் நாட்டில் என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கடம்பன்குடி என்கின்ற கிராமம். சொந்தத் தொழில் விவசாயம் தான். சிவகங்கை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தேன். படிக்கும் போதே தமிழ் மீதான ஆர்வத்தினால் இலக்கண இலக்கியங்களை எல்லாம் கற்றுக்கொண்டேன். எனக்கு இலக்கிய உணர்வை ஏற்படுத்தியது பள்ளியிலே ஒன்பதாம் வகுப்பில் மனப்பாடச் செய்யுளாக இருந்த கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் தான். இந்த அளவுக்குப் படித்ததே சிறப்பாக இருக்கிறதே என்றெண்ணி நூலகங்களுக்குச் சென்று கம்பராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும் முழுமையாகப் படித்தேன். அர்த்தம் தெரியாமல் ஓசை இன்பத்தால் ஈர்க்கப்பட்டு நான் படித்தேன். அதன் பிறகு தான் அவற்றின் பொருளுணர்ந்து படித்தேன். அதன் வழியாக எனக்குத் தமிழார்வம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் பத்திரிகைகளுக்குக் கதை கட்டுரை எல்லாம் அனுப்புவேன். கவிஞர் சுரதா அவர்கள் "இலக்கியம்" என்ற கவிதைப் பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிகையில் தான் என் முதற் கவிதை வெளிவந்தது. அப்போது நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்படித்தான் என் கவிதை ஆர்வம் வளர்ந்தது. அதுபோக என் தாயார் தாலாட்டுப் பாடல்களை என் தம்பி தங்கைகளுக்குப் பாடும் போது இளவயதில் கேட்டவகையில் அதன் மூலமும் என்னுடைய கவிதை உணர்வு உள்ளத்திலே எழுந்தது.

அப்போது கண்ணதாசன் தென்றல் என்றொரு பத்திரிகை நடாத்தினார். அதில் வெண்பாப் போட்டி ஒன்று வைத்தார். அதே சமயம் கவிஞர் சுரதா இலக்கியம் என்ற பத்திரிகையில் குறள் வெண்பாப் போட்டி வைத்தார். அதில் கேள்வி ஒன்று கேட்டார்

"பறக்கும் நாவற்பழம் எது கூறுக?" என்ற அந்தக் கேள்விக்கு நாம் குறள் வெண்பாவில் எழுதணும்.

"பறக்கும் நாவற்பழம் எது கூறுக? இது அகவல், ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது

நான் எழுதினேன்,

"திறக்கின்ற தேன்மலரைத் தேடிவரும் வண்டே

பறக்கின்ற நாவற்பழம்"

அப்படின்னு எழுதினேன்.

இதற்கு எனக்கு முதற்பரிசு கிடைத்தது.

அதன் பிறகு சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்த பிற்பாடு நான் பத்திரிகைத் துறையில் தான் முதலில் பணியாற்றினேன் முரசொலி, அலையோசை ஆகியவற்றில் எல்லாம். அப்போது ஊரில் இருக்கும் காலத்திலே எல்லாம் திரைப்பாடப் பாடல்களை நாமும் எழுத வேண்டும், அவை திரையில் வரவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் சென்னைக்கு வந்தபிறகு அதற்கான முயற்சி செய்தேன். கதாசிரியர் பாலமுருகன் என்பவரால் தான் திரைப்படத்தில் எனக்குப் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இயக்குநர் மாதவனிடம் எனக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். "பொண்ணுக்குத் தங்கமனசு என்ற திரைப்படத்தில் தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா என்ற பாடல்.

அந்தப்பாடலைப் பற்றிச் சொல்லும் போது இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக அங்கீகரிக்கப்பட முன்னர் அவர் இசையமைக்க நீங்கள் எழுதிய பாடல் என்ற பெருமையும் இருக்கின்றது என்று அறிந்துகொண்டேன் அப்படித்தானே?

 ஆமாமா, அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அப்போது அவரிடம் உதவியாளரா இருந்தவர் ராஜா. முதலில் என்ன சொன்னாங்கன்னா கங்கை, காவிரி, வைகை இந்த நதிகள் எல்லாம் பாடுறது மாதிரி அவங்களுக்குள்ள போட்டி வந்து சண்டையிடுவதாகவும் உழவன் வந்து சமாதானம் செய்வதாகவும் ஒரு காட்சி இதை முதலில் எழுதிட்டு வாங்க அப்புறமா ட்யூன் போட்டுடுவோம் என்று கதாசிரியர் பாலமுருகன் சொன்னார். நான் எழுதிட்டுப் போனேன். பாட்டைப் பார்த்தார் ஜி.கே.வெங்கடேஷ் எல்லாம் ஒரே மாதிரி இருக்கே நான்கு ஐந்து பேர் பாடுறதனால ராகமாலிகை மாதிரி அதாவது மாண்டேஜ் சாங் ஆ இருக்கணும். அப்படி இருந்தாத் தான் நல்லா இருக்கும் நாம ட்யூன் போடுறோம் அதுக்கேத்த மாதிரி எழுதுங்கன்னார். ட்யூன் போட்டார் அந்த ட்யூன் டைரக்டர் மாதவனுக்குப் பிடிக்கல. அந்தப் படத்தில் அவர் இயக்குநர் இல்லை என்றாலும் அவரின் தயாரிப்பில் அவரின் உதவியாளர்கள் தேவராஜ் மோகன் டைரக்ட் பண்ற படம். இரண்டு நாள் இருந்து டியூன் போட்டார் வெங்கடேஷ், சரியா வரல. அப்புறமா ஜி.கே.வெங்கடேஷ் சொன்னார் 

"என்னுடைய அசிஸ்டெண்ட் பாடிக்காண்பிப்பாருய்யா 

அதை வச்சு எழுதுங்க" ன்னார். அப்போது இளையராஜா தத்தகாரத்தில் பாடிக் காண்பிக்க அந்த ட்யூன் நல்லா இருக்கே அதையே வச்சுக்கலாம் என்று அமைந்தது தான் அந்தப் பாட்டு. அதனால இளையராஜா இசையில் முதலில் பாட்டு எழுதியவன் என்ற பெருமை என்னைச் சாரும், அல்லது என்னுடைய பாட்டுக்குத் தான் இளையராஜா முதலில் இசையமைச்சார் என்று சொல்லலாம்.

இதோ அந்த "தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா" என்ற அந்தப் பாடலை எஸ்.ஜானகி.பி.எஸ்.சசிரேகா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடுகின்றார்கள். 

https://www.youtube.com/watch?v=UI3zmX7PEos

கவிஞர் முத்துலிங்கம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

கானா பிரபா

20.03.2022


Sunday, March 13, 2022

ஞான ஒளி 50

கிண்ணென்ற அந்த அந்தத் தேவாலயத்து மணியோசையே ஒலிப்பது போலோரு பிரமை. தேவாலயத்து மணியடிக்கும் ஆன்டனி என்ற (அன்பால்) தோற்றுப் போனவன் கதை ஒரு அனுதாப அலையை நம் நெஞ்சில் எழுப்புகின்றது. 

ஞான ஒளி படம் வந்து இந்த வாரத்தோடு 50 ஆண்டுகள் நிறைவுறுகின்றது (11.03.1972). தமிழ்த் திரை வரலாற்றில் தவிர்க்க முடியாத சித்திரங்களில் ஒன்று. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்னொரு திலகமாக அமைந்தது. 

கண்மூடித்தனமான அன்பு, கண்முடித்தனமான கோபம் இரண்டும் கலந்த கலவையாக அந்த முரட்டு அன்டனியாக வாழ்ந்திருக்கிறார்.

தன்னை வளர்த்த பாதிரியாரின் இறுதி நாளில் கரைந்து உடைந்து போய், அவரின் கையை வாங்கி அழதுகொண்டே விரல் சொடக்குப் போட்டுக் கொண்டு அவரின் கையைப் பற்றிக் கொஞ்சி அழும் போது நம்மையும் கண் நனைக்க வைத்து விடுவார். சிவாஜி என்ற பட்டை தீட்டிய வைரம் அப்படியே இந்தப் படத்தில் புத்தம் புதுத் தோற்றம் பெறுகிறார். படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு எண்ணம் என் மனதில் தோன்றியது. இந்தக் காலத்தில் எல்லாம் நடிக்க வருபவர்களுக்கு முன்னோடியாகப் பலர் இருக்கிறார்கள், அல்லது யதார்த்த சினிமாவில் அப்படியே வாழ்ந்து விட்டுப் போகலாம். ஆனால் சிவாஜி என்ற அந்த உன்னதம் ஒரு சுயம்புவாக ஒவ்வொரு படைப்பிலும் தன்னைக் கூடு விட்டுக் கூடு பாய்கிறாரே என்ற ஆச்சரியம் மேலோங்கியது.

இடைவேளைக்குப் பிறகு “அருண்” என்ற தொழிலதிபராகக் கூடு விட்டுக் கூடு பாய்வாரே அடடா என்னவொரு கம்பீரமும், மிடுக்கும்.

“Catch Me If You Can” ஆடு புலி ஆட்டம் அல்ல, புலியும் புலியும் ஆட்டம், இங்கேயும் சிவாஜியின் பால்ய நட்பு மேஜர் எதிர்த் துருவமாக. உயர்ந்த மனிதனில் சிவாஜியின் மனச்சாட்சியை இறுதியில் அசைத்துப் பார்க்கும் கூடிய நட்பு அல்ல, இங்கே இறுதியில் சிவாஜியின் மனச்சாட்சியின் ஆழம் கண்டு உருகிக் கரைந்து விடும் லாரன்ஸ் என்ற போலீஸ் அதிகாரியாக மேஜர் சுந்தரராஜன். இருவருக்குமிடையிலான அந்தக் கண்டுபிடி ஆட்டம் வெகு சுவாரஸ்யமாக நகர்த்தப்பட்டிருக்கும். ஆனால் கடைசியில் பாசத்தால் சிவாஜியை வீழ்த்த வேண்டும் என்ற பாரம்பரியத்தில் கொஞ்சம் நாடகத் தனம் தலைதூக்கி விடும்.

புகழ்பூத்த பிரெஞ்சுப் படைப்பாளி விக்டர் ஹியூகோவின் “Les Misérables” கதையின் அடிநாதம் “ஏழை படும் பாடு” என்றும் பின்னர் மேஜரின் “ஞான ஒளி” நாடகமாகவும், படமாக மாறிய கதையும் சொல்கிறார் இயக்குநர் கார்த்திகேயன் இங்கே

https://www.youtube.com/watch?v=35aZ-QjHGC4

வியட்நாம் வீடு படத்துக்குப் பின் தன் கதையில் சிவாஜிக்கு “ஞான ஒளி” என்ற அற்புதமான படைப்பைக் கொடுத்த கதாசிரியர் வியட்நாம் வீடு சுந்தரம் தொடர்ந்து “கெளரவம்” கொடுத்துச் சிறப்பித்தது போல, எழுபதுகளில் சிவாஜியின் நடிப்பாற்றலுக்குத் தீனி போட்ட படங்களைத் தொடர்ந்து இயக்கிய பி.மாதவன் இயக்கிய படம்.

 பின்னாளில் வந்த தங்கப்பதக்கம் போலே கெட்ட ஜீவனாக ஶ்ரீகாந்த். “ஊர்வசி” சாரதாவுக்குத் தன் தந்தையை இனம் கண்டு ஏற்றுக் கொள்ள முடியாத பரிதவிப்பில் அதுவரை கொட்டியிராத நடிப்பை அள்ளிக் கொட்டுகிறார். 

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இந்த மாதிரிப் படைப்பெல்லாம் எழுதி வைத்தது போலோரு பாக்கியம். துணைக்குக் கவியரசர் வேறு.

“தேவனே என்னைப் பாருங்கள்” பாடலெல்லாம் திரையிசை கடந்தும் தத்துவப் பாடலாக பலர் முணுமுணுப்பதைக் கண்டிருக்கிறேன்.

இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்பே 

“மணமேடை......

மலர்களுடன் தீபம்...”

பாடலோடே பலகாலம் வாழ்ந்திருந்தேன். அந்தப் பாடலைக் கேட்டாலும் உடம்பு முழுக்க மணியோசை அதிர்வு.

அந்தத் தேவாலயத்து மணியோசை ணங் என்று ஒலித்துப் பின் அது அப்படியே பின் இசையாகப் பரவித் தூய காதலைத் தன் தலையாட்டி ஆமோதிக்கிறதோ...

தன் மாசற்ற காதலுக்காக அவனிடம் தன்னை ஒப்படைக்கும் போது எழும் வரிகளில் ஒருதலையாய்க் காதல் விளையும் பாங்கைக் கவியரசர் காட்டியிருப்பார். அந்தப் பாடலுக்குப் பின்னால் தொடரும் விபரீதத்தைப் பார்த்த பின் பாடலை மீண்டும் இரை மீட்டினால் அது துலங்கும்.

“உயர்ந்த மனிதன்” போலே பி.சுசீலாம்மாவுக்கு இன்னொரு ஒளிரும் வைரமிது.

நான் இரவில் எரியும் விளக்கு

நீ என் காதல் மணி மாளிகை

நீ பகலில் தெரியும் நிலவு

நான் உன் கோவில் பூந்தோரணம்

மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்

மண மேடை மலர்களுடன் தீபம்

மங்கையர் கூட்டம் மணக் கோலம்

https://www.youtube.com/watch?v=cfUedZ9DCjs

தொடர்ந்து தோற்றுப் போய்க் கொண்டே நொந்து போனவனுக்குக் கையில் ஏந்த ஒரு “ஞான ஒளி” அது அவனின் அந்திம காலத்தில் தான் கொண்ட கடமைகளைச் செய்ய வைத்துக் கூடவே தன் குடும்ப பந்தத்தை இணைத்தும் அழகு பார்க்கிறது.


கானா பிரபா
Saturday, March 12, 2022

ஸ்ரேயா கோஷல் ♥️

திருமண போதை அது தரும் அந்தக் கிறக்கம் சொல்லி மாளாது. ஒரு பக்கம் தன்னையே முன்னுறுத்தி திருமணக் கொண்டாட்டத்தின் பெருங்கூட்டம் கொண்டாடி மகிழந்த அந்த போதையும், தன் வாழ்வின் அடுத்த கட்டத்தை முகிழ்ப்போடு இதழ் விரியும் பூவாய் மனம் கொள்ளாச் சந்தோஷத்தோடு ஏற்றுக் கிறங்கி நிற்கும் போதையுமாக இரட்டை போதை மயக்கத்தில் ஓய்ந்த கொண்டாட்டத்தில் அமைதியின் இடுக்கில், கட்டிலில் அப்படியே  சாய்ந்து கண் மூடிக் கிறங்கினால் எழும் சங்கீதம் எப்படியிருக்குமோ அப்படியொன்று.

குண்டுமல்லி குண்டுமல்லி.....

தென்றல் காத்து அடிச்சதும்

கண்ணு தெறக்குது

கண்ணன் கண்ணு பட

தேனு சொரக்குது

கையில் நீயெடுத்து.....மெல்ல

தோளில் மாலை காட்டு ❤️

மணப்பெண்ணின் அந்த மயக்கக் கிறக்கத்தோடே ஸ்ரேயா கோஷலின் குரலும் போதையோடு தள்ளாடும். கூடவே தோள் கொடுக்கும் ஹரிஷ் ராகவேந்திரா Harish Sai Raghavendra இன்னோர் அந்தத்தில் பறந்து விட்டு மீண்டும் தோள் கொடுப்பார். பாடல் ஓயும் தறுவாயிலில் இருவரின் அலைவரிசையும் ஒருமித்துக் கூடிக் களிக்கும்.

கூடையில் இருக்கும் பூக்குவியலை அப்படியே உயரத்தில் இருந்து உலுக்கிக் கொட்டுமாற் போலக் கற்பனை செய்வேன் இந்தப் பாடலின் இடையிசை கலக்கும் தருணம். 

"குண்டு மல்லி குண்டு மல்லி" என்று இன்ப போதை தலைக்கேறியது போல ஒரு வித கிறக்கத்துடன் ஷ்ரேயா  கோசல்  பாட ஆரம்பிக்கும் போதே பச்சைத் தமிழச்சியின் வெட்கம் கலந்த குரலாகக் கொண்டாடுகிறது மனது. 

மஞ்சள் எல்லாம் வானத்திலே.....

அந்தியிலே ஒட்டிக்கிச்சு

குங்குமமும் சேந்துக்கிச்சு

தாங்கிடுமோ பிஞ்சுநெஞ்சு.....

நான்கு தசாப்தங்களில் ஒவ்வொரு தசாப்தமாகப் பிரித்துப் பார்த்தால் வித விதமான வடிவங்களில் தாம்பத்தியத்தைக் கொண்டாடும் இசையைக் கொடுத்திருப்பார் நம் இசைஞானியார்.  அந்த வகையில் மிலேனியத்தின் ஆகச் சிறந்த வரவு இது.

பாடலாசிரியராக இசைஞானி இளையராஜாவைக் கொண்டாடக் கூடிய பாடல்களில் இந்தப் பாடலை எல்லாம் முதல் வரிசையில் வைத்துப் போற்றுவேன்.

புது மணத் தம்பதிகளின் காதல் மொழிகளை அதே இளமை தப்பாது வரிகளைப் பொருத்தி எழுதிய பாடலாசிரியர் இளையராஜாவுக்கு இதை எழுதும் போது வயது 59. பாடிய ஸ்ரேயா கோஷலுக்கோ 18 வயதே தான்.

அல்லித் தண்டு விரல் மெல்ல மெல்லத் தொடும்

வீணை நரம்பினிலே ஹோ....

நெஞ்சம் கிள்ளும் இசை துள்ளிவந்து தொடும்

எந்தன் நரம்பினிலே ஓ.....

ஷ்ரேயா கோசல் குரலில் இலேசான அப்பாவித்தனம் தொனிக்க, ஹரிஷ் ராகவேந்திராவோ இரு கையை வீசி காற்றை அளையும் சுதந்திரத்தோடு பயணிப்பர் இந்த பாட்டில்.

பாடலைப் பிரித்து விட்டு இசையை மட்டும் கற்பனையில் ஓட்டினால் என்னவொரு துள்ளிக் குதிக்கும் ஆர்ப்பரிப்பு.

பாடல் வரிகளை மட்டும் பதியம் வைத்தால் மெது நடை கட்டி நிதானமாகப் பயணிக்கும்.

இவ்விரு தாள லயமும் சேர்ந்த அற்புதமான கூட்டுப் படையல்.

பாடலுக்குக் கொடுத்திருக்கும் இசை இளையராஜாவும் இயக்குநர் சத்யன் அந்திக்காடுவும் 2000 க்குப் பின் கூட்டணி கட்டி வெளி வந்த மலையாளப் படங்களின் இன்னிசையின் பிரதி பிம்பம் இது.

சிற்பத்திலும் சின்னப் பெண்ணிடத்தில்

இந்த வெட்கம் தெரிகிறதே ஹோஓஓஓ

சிற்பி செய்த அந்தச் செல்லப் பெண்ணுக்கு

அவன் எண்ணம் புரிகிறதே ஓஓஓ.....

2012 ஆம் ஆண்டில் ஒரு நாள் Zee TV இன் பாலிவூட் படங்களின் விருது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையிடையே தங்களின் பிரபல்யமான நிகழ்ச்சிகளின் படத்துண்டுகளைக் காட்டிக் கொண்டு வந்தார்கள், அப்படி வந்தது தான் "சரிகமப" என்ற இசை நிகழ்ச்சி குறித்த ஒரு சில நிமிடத்துளிகள் கொண்ட காட்சித்துண்டு. அதில் சின்னஞ்சிறுமியாக கலந்து கொண்ட ஷ்ரேயா கொசலைக் காட்டியபோது இந்தப் 20 வருட காலத்தில் அவரின் நதிமூலம் எப்படித் தொடங்கியது என்பதைக் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது. இன்றைக்குப் பாட்டுப் போட்டி நடத்தாத தொலைக்காட்சிகளே இல்லை எனலாம், எல்லோருக்கும் பாடி நம்மைப் படுத்த ஆசை இருக்கின்றது. அதற்கான களம் கூடக் கட்டற்று ஏன் கட்டுக்கடங்காமல் இருக்கின்றது. 

ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு உட்பட்ட திரையிசையில் பாடகிகள் என்று எடுத்துக் கொண்டால், தமிழில் கூட சுவர்ணலதாவுக்குப் பின் சின்மயியை ஓரளவு சொல்லி வைப்பதோடு சரி. மற்றோர் எல்லாம் கூட்டத்தில் கும்மாளம் என்ற நிலை தான். இந்த நிலையில் ஒரு தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் கலந்து தன்னை நிலை நாட்டிப் பின்னர் ஹிந்தி தவிர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் சொல்வாக்குக் கொண்டிருக்கும் பாடகி என்ற பெருமையை ஷ்ரேயா கொசல் பெற்றிருக்கின்றார். இது இன்றைய கூட்டத்தில் கோவிந்தா என்ற சூழலில் அவ்வளவு சுலபமான விஷயமல்ல. தனித்துவமான திறமை ஒன்றே அவரின் மூலதனம், அதிலும் எந்த மொழியில் பாடினாலும் அந்நியம் இல்லாதது ஷ்ரேயாவினுடைய குரல். இந்த அந்நியமற்ற மொழி கடந்த குரல் மொழியை வடநாட்டுச் சகோதரிகள் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்லே கூடப் பெற்றிருக்கவில்லை.

சஞ்சய் லீலா பான்சாலியின் "தேவதாஸ்" என்ற ஹிந்திப் படம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிட்னித் திரையரங்கில் காண்பிக்கப்பட்டபோது அந்தப் படம் தரப்போகும் பிரமாண்ட்டத்துக்காக மட்டுமே தியேட்டருக்குச் சென்றேன். ஆனால் கட்டிப்போட்டது இஸ்மாயில் தர்பாரின் இசை. அதில் தான் தொடங்கியது ஷ்ரேயா கொசலின் இசைப்பயணம். எடுத்த எடுப்பிலேயே அந்த முதற்படத்தில் தேசிய விருது வேறு. 

ஆனால் அவ்வளவு சீக்கிரம் தமிழுக்கு இந்தப் பாடகி வருகின்றார் என்று நினைக்கவேயில்லை, வந்தார் இங்கும் முத்திரை பதித்தார்.

ஆல்பம் படத்தில் "செல்லமே செல்லம்" என்று ஆரம்பித்து வைத்தது கார்த்திக் ராஜாவின் இசையில் முதலடி. ஸ்ரேயா கோஷல் ஹிந்தியில் அறிமுகமான அதே ஆண்டிலேயே தமிழுக்கும் வந்து 20 ஆண்டுகளாகக் கோலோச்சிக் கொண்டிருக்க அச்சாரம் இது.

 "எனக்குப் பிடித்த பாடல் அது உனக்குப் பிடிக்குமே" ஜீலி கணபதி படப் பாடலில் உருகிய ஷ்ரேயா கொஷலின் குரல் உருக்கியது எம்மை. ஆனால் அந்தப் பாடலை ஒரு சொதப்பல் காட்சியமைப்பு மேல் இன்றளவும் கோபமுண்டு. இசைஞானி இளையராஜா, ஷ்ரேயா கொஷலுக்கு வள்ளலாக மாறிப் பாடல்களை அள்ளிக்கொடுக்க முன்னோடியாக அமைந்து விட்டது இந்தப்பாட்டு.

https://www.youtube.com/watch?v=lY4NDcECw-0

"இளங்காற்று வீசுதே" பாடல் ஶ்ரீராம் பார்த்தசாரதியின் தனிப்பாடலாகவும் இருக்கிறது, ஷ்ரேயா கொஷலோடு ஜோடி கட்டிய பாடலாகவும் இருக்கிறது. இரண்டையும் ஒருதடவை சுழல விட்டுப் பின் எடை போட்டுப்பாருங்கள் ஷ்ரேயா கொஷலின் அந்தக் கொஞ்சும் குரல் பாடலுக்குக் கொடுத்திருக்கும் வலிமையை. ஊனினை உருக்கிப் பார்க்கின்றது பாடல்.

https://youtu.be/PmKzSECplgI

"ஒன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை" சரணாகதி கொண்டு பாடும் அந்தத் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு கிராமத்தின் வெள்ளாந்திக்குரலுக்குப் பின் பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து வந்த வடநாட்டுக் குரல் உருக்கொண்டிருப்பதை யாரும் நம்ம முடியுமா?

http://www.youtube.com/watch?v=pQa4aoI-guE&sns=em

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சமாதானம் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் மலையாளிகள் இந்த விஷயத்தில் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனானப்பட்ட இசையமைப்பாளர் ரவீந்திரனின் மகன் நவீன் பாடிய மலையாளப்பாடலில் ஒலிச்சுத்தம் தேடிக் கிழித்துக் காயப்போட்டவர்கள். அப்படியிருக்க அங்கும் ஷ்ரேயா கொஷல் சென்று மயக்கினார் தன் குரலால்.

மலையாள சினிமாவின் இன்றைய இசையரசர் ஜெயச்சந்திரன் இசையில் பனாரஸ் படத்தில் பாடும் "சாந்து தொட்டில்லே"

பாடலில் அவர் கொடுக்கும் குரலின் ஜாலத்தில் கிறங்கி விருதுகள் கொடுக்குமளவுக்குப் போய்விட்டார்கள். "பிரியனொராள் இன்னு வன்னுவோ" என்று தொடங்கும் அந்த ஏக்கம் தொனிக்கும் குரல் எப்படியெல்லாம் போகிறது என்று கேளுங்களேன்.

https://www.youtube.com/watch?v=Q9gUU3TDiCQ

ஷ்ரேயா கொஷல் இந்த ஆண்டோடு தன் கலைத்துறையில் 19 ஆண்டுகளைத் தொடுகின்றார். இந்தப் பத்தாண்டுகளில் இஸ்மாயில் தர்பார் கொண்டு, இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான் என்று எல்லா இசையமைப்பாளர்களிடம் இருந்தும் இவருக்குக் கிடைத்த பாடல்கள் மணிமுத்துக்கள். தொடரட்டும் அவரின் கலைப்பயணம். 

தனது கலைப்பயணத்தில் 20 ஆண்டு நிறைவில் மிதக்கும்

ஷ்ரேயா கொஷலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ♥️🎸

மேகப் பெண்ணே

வந்து மூடிக் கொள்ளு 💚

பாடலை இன்று முழுக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். குண்டுமல்லியை நுகர்ந்து நுகர்ந்து பார்த்துக் கிறங்குமாற் போல 

https://www.youtube.com/watch?v=3q26lV9E47U

கானா பிரபா


Wednesday, March 9, 2022

இன்னிசை இரட்டையர்கள் சங்கர் – கணேஷ் இயக்கிய “ஜகதலப்பிரதாபன்”

“பட்ட காலிலேயே படும்” என்னுமாற் போல நடிகர் மோகனின் படங்கள் தொடர்ச்சியாகத் தோல்வி முகத்தைச் சம்பாதித்த போது, ஓரளவு கை கொடுத்தது “சொந்தம் 16”. அந்தப் படத்துக்கு சங்கர் – கணேஷ் இரட்டையர்கள் தான் இசை. 

அம்மன் கோயில் தேரழகு ஆயிரத்தில் ஓரழகு”

https://www.youtube.com/watch?v=QLEMq8k5JnI

பாடலும் ஆல் இந்தியா ரேடியோவின் பெருவிருப்பப் பாடலானது.

இதற்கு முன்பே பல படங்களில் மோகனும், சங்கர் கணேஷ் கூட்டணி இணைந்ததோடு “சகாதேவன் மகாதேவன்” போன்ற வெற்றியையும் கொடுத்ததுண்டு.

தொடர்ந்து மணிவண்ணனின் “மனிதன் மாறி விட்டான்” (மோகன் இரட்டை வேடம்), சொர்ணத்தின் “வாலிப விளையாட்டு” என்று சங்கர் கணேஷ் இரட்டையர்கள் கூட்டுச் சேர்ந்தும் மோகனின் தோல்விக் கணக்கில் இன்னோர் இலக்கங்கள் ஆயின.

மோகன் நடிப்பில் சங்கர் கணேஷ் இரட்டையர்களே படத்தை இயக்கவும் செய்தனர். அப்படி வந்த படம் தான் “ஜகதலப்பிரதாபன்”.

இந்தப் பெயரைப் பார்த்து ஏமாந்த எங்களூர்ப் பெருசுகளின் ஞாபகம் வருகிறது. இந்தப் பாடத்தை வீடியோ கொப்பியில் அண்ணன்மார் எடுத்து வந்து போடவும், அந்தப் படக்காட்சிக்கு வந்த 40 + பேர்களில் பாதிக்கு மேல் 60+ வயசாளிகள். அவர்கள் நினைத்தார்கள். பி.யு.சின்னப்பாவின் “ஜகதலப்பிரதாபன்” படமோ என்று. ஆனால் படம் தாறுமாறாகக் கண்ட மேனிக்கு ஓடிக் கொண்டிருக்க, பெருசுகள் திட்டித் தீர்த்து விட்டார்கள். இதே மாதிரி வீடியோ படக்காட்சியில் கந்த சஷ்டி சூரன் போர் பார்த்த கையோடு “சூரசம்ஹாரம்” படம் போட்டு வாங்கிக் கட்டிய வரலாறும் உண்டு.

சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இயக்கிய படம் என்ற பெருமை மட்டுமே கிடைத்த ஜகதலப் பிரதாபனுக்குப் பிறகு அவர்களும் மோகனோடு இணையும் வாய்ப்பும் வரவில்லை.

கானா பிரபா


Monday, March 7, 2022

என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ.....❤️💚

இன்றைக்கு ஏழு வருடங்களுக்கு முன்பு தேதியும், மாதமும் கூட ஞாபகம் இருக்கிறது. காரணம் அந்த நேரம் அப்படியே பாடலைக் கேட்டு விட்டு மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டு என் ஐஃபோன் Notes இல் முழுப் பாட்டையும் எழுதி வைத்ததை இன்றும் அழிக்காமல் வைத்திருக்கின்றேன்.

அந்த நாள் எனக்கு உவப்பான நாளாக அமைந்திருக்கவில்லை. பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது இவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டி இலங்கை சூரியன் எஃப் எம் ஐக் காதில் விட்டேன். அப்போது அந்த நொடியில் வந்த பாட்டுத் தான் இந்த “என்ன சொல்லிப் பாடுவதோ.....என்ன வார்த்தை தேடுவதோ”.

அதுவரை குழம்பிப் போயிருந்த எனக்கு ஒரு ஒளிக்கீற்றாய் இந்தப் பாட்டு இருந்தது போலிருந்தது. திரும்பத் திரும்பக் கேட்டுக் கேட்டு பாடலை எழுதி வைத்துக் கொண்டேன். சொன்னால் நம்ம மாட்டீர்கள் இந்தப் பாடலை விட்டு வெளியே வந்த ஒரு மணி நேரத்துக்குள் எல்லாம் மாயமானது போல ஒரு உணர்வு. காற்றில் மிதப்பது போலிருந்தது மனம்.

இசைஞானியை, அவரின் இசையை ஏன் இவ்வளவு தூரம் ஆழமாக நேசிக்கிறேன் என்பதற்கு என் வாழ்க்கையிலேயே பல விடைகள் கிடைத்திருக்கின்றன.

இந்தப் பாடல் இவ்வளவு தூரம் அந்நியோன்யமாக இருப்பதற்கு சகோதரர் பழநி பாரதி அவர்கள் எழுதிய வரிகளின் மீதான நேசமும் இன்னொரு காரணம்.

“இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட

அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்

எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ....”

கேட்கும் போது ஒரு மோன நிலைக்குக் கொண்டு போகும். 

அது போல “இளங்காத்து வீசுதே” பாடலுக்கும் இந்த “என்ன சொல்லிப் பாடுவதோ” பாடலுக்கும் ஒரு அழகான தொடர்பை பாடலில் பொதிந்திருக்கும் இயற்கைக்கும் இசைக்குமான தொடர்பு இறுகக் கட்டி விட்டிருக்கிறது.

“வளையாத மூங்கிலில் 

ராகம் வளைஞ்சு ஓடுதே

மேகம் முழிச்சு கேக்குதே....”

என்பது “இளங்காத்து வீசுதே” பாடலில் வரும் பாங்கில் 

“வெறும் காற்று 

இசையாக மாறுகின்ற 

மாயங்களை.....

என்ன சொல்லிப் பாடுவதோ”

இங்கே இந்த “என்ன சொல்லிப் பாடுவதோ” பாடலில் அழகாக இருத்தி விடுகிறார்.

வாய் பேசாத இரு ஜீவன்களின் காதல் பரிபாஷையை எவ்வளவு அழகாகச் சங்கேத பாஷையில் இந்தப் பாடலின் வரிகள் காட்டி நிற்கின்றன. பாடலின் பின்னணியில் பொருத்தியிருக்கும் இசையைத் தனியாகக் கழற்றிப் பார்த்தால் இதயத்துடிப்பு ஏறி இறங்கும் இயந்திரத்தின் திரை போல இருக்கும்.

இந்தக் காதலர்களின் தூய அன்பை எந்தவிதமான அனுதாப முத்திரையையும் இசையிலும், வரிகளிலும் காட்டாத ஒரு பாட்டு. இதுவொரு நேரான சிந்தனையின் வெளிப்பாடு. இது போலவே 

“மீண்டும் ஒரு காதல் கதை” படத்தில் குழந்தை சுபாவம் கொண்ட, மனதளவில் வளராத காதலர்களுக்கான பாட்டு

“அதிகாலை நேரமே 

புதிதான ராகமே

எங்கெங்கிலும் ஆலாபனை

கூடாத நெஞ்சம் ரெண்டும் 

கூடுதே பாடுதே....”

என்று பயணிக்கும். அங்கே கங்கை அமரன் பாட்டெழுதிய போது 

“காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது.....”

என்று இசைக்கும் இயற்கைக்குமான பந்தத்தைக் காட்டி நிற்பார்.

வட நாட்டுப் பாடகர்கள் தமிழுக்குப் பாட வந்த போது அது லதா மங்கேஷ்கராகட்டும் ஆஷா போன்ஸ்லே ஆகட்டும் இசை தந்த இனிமையை அவர்கள் பாடும் போது எழும் மொழிச் சிதைவு நெருடலாக இருக்கும்.

“பாட்டுச் சொல்லிப் பாடச் சொல்லிக் குங்குமம் தந்ததம்மா”என்று தேசிய விருதளவுக்கு அங்கீகாரத்தைப் பெற்ற பாடகி சாதனா சர்க்கம்

பாடும் தோறும் அந்த நெருடல் அவ்வளவாக எழுவதில்லை. அதிலும் இந்த “என்ன சொல்லிப் பாடுவதோ” பாட்டு அப்பழுக்கில்லாத பிரவாகம்.

ஹரிஹரன் - சாதனா சர்க்கம் ஜோடியில் அப்படியென்ன மந்திரமோ மாயமோ அவர்கள் எதைத் தொட்டுப் பாடினாலும் தேனாக இறங்குகிறது.

‪இந்தப் பாடல் வெளிவந்த புத்தாயிரம் ஆண்டுக் காலப் பகுதியில் எப்படி கார்த்திக் ராஜாவோ, யுவனோ அதே காலகட்டத்து இசைப் பரிமாணத்தில் கொடுத்திருப்பார்களோ அதே இளமைத் துள்ளலோடு ராஜா கொடுத்திருக்கிறார்.‬

14 ஜூலை 2015 இல் எழுதி வைத்த இந்தப் பாடல் வரிகளை அச்சுப் பகிர்கிறேன் இதோ. பாட்டுக்குள் போய் விட்டு வாருங்கள் அது ஒரு தனி உலகத்தைக் காட்டும்.

என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ

வண்ணம் தரும் தூரிகையே

எண்ணங்களைச் சொல்லிடாதோ

என் ஓவியமே

என்ன சொல்லி பாடுவதோ

என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ

கோடி குயில் கூவி

எந்தன் நெஞ்சில் கூடி

மெளனம் ஏனோ என்று கேட்குதே

ராகம் போடும் நேரம் 

வானம் தொடும் மேகம்

என்னில் உந்தன் எண்ணம் மீட்டுதே

நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓ

மூச்சுக்குள் புல்லாங்குழல்

வெறும் காற்று இசையாக 

மாறுகின்ற மாயங்களை.....

என்ன சொல்லிப் பாடுவதோ 

என்ன வார்த்தை தேடுவதோ

அந்திப் பிறை வந்து 

மஞ்சள் வானில் நின்று

உன்னழகின் வண்ணம் சொல்லுதே 

ஓ ஹோ

பூவின் மடி தூங்கி 

தென்றல் மொழி வாங்கி

ஊமை நெஞ்சின் ஓசை சொல்லுதே

தீராத தேடல் ஒன்று ஓ

தேடட்டும் நெஞ்சம் ரெண்டு

சொல்லாமல் நில்லாமல் 

மனம் கொள்ளும் 

இன்பதுன்பம் தனை

என்ன சொல்லி பாடுவதோ

என்ன வார்த்தை தேடுவதோ

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

சாதனா சர்க்கம்

https://www.youtube.com/watch?v=iA4MjaIe4gU