Pages

Friday, July 5, 2019

மரகதமணி என்ற கீரவாணி 🎸


கே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்டில்.
ஒரு பக்கம் கே.பாலசந்தர் இயக்க "வானமே எல்லை" திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகிறார் இசையமைப்பாளர் மரகதமணி. இன்னொரு பக்கம் தன்னுடைய சிஷ்யர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் “அண்ணாமலை” அதற்கு இசை தேவா, இவற்றௌத் தாண்டி புது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கிய ரோஜா என்று மூன்றும் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் சார்பில் தயாரித்து வெளியாகி, மூன்றுமே அதிரி புதிரி வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுக்கின்றன.
இதுவே கே.பாலசந்தரின் திரைப்பயணத்தில் கிடைத்த இறுதி வெற்றி கூட. அதற்குப் பின் அப்படியொரு வெற்றியை அவரால் ஈட்ட முடியாவிட்டாலும் இந்த மூன்று படங்களில் இயங்கிய இசையமைப்பாளர்கள் தொடர்ந்து தமித் திரையிசையின் போக்கைத் தீர்மானிக்க முக்கிய காரணிகளாக அமைந்தார்கள். இவர்களில் எம்.எம்.கீரவாணி என்று தெலுங்கிலும், மரகதமணி என்று தமிழிலும், எம்.எம்.கரீம் என்று ஹிந்தியிலுமாக இன்றுவரை வெற்றிகரமான இசையமைப்பாளராக விளங்கி வருபவரின் அடையாளம் தனித்துவமாகக் கவனிக்கப்பட வேண்டியது.
கவிதாலயா நிறுவனத்தின் சார்பில் புதுப்புது அர்த்தங்கள் படத் தயாரிப்பு மற்றும் இயக்கத்தைக் கவனித்த கே.பாலசந்தர், படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவை விடுத்துத் தன்னிச்சையாக மரகதமணியை வைத்தே படத்தின் பின்னணி இசையை அப்படத்தின் பாடல்களின் இசைத் துணுக்குகளை வைத்தே ஒப்பேற்றி விடுகிறார். அதில் எழுந்த விரிசலால் தொடர்ந்து இருவரும் இயங்க முடியாத சூழலில் கவிதாலயா தயாரிப்பில் இதுவரை வெளியான இறுதிப்படமாக அமீர்ஜான் இயக்கிய “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை” விளங்குகிறது.
தொடர்ந்து கே.பாலசந்தர் “அழகன்” படத்தை இயக்கிய போது மம்முட்டியும் மூன்று நாயகிகளுமாக அமைந்த அழகிய காதல் சித்திரம் “அழகன்" படத்தின் பாடல்கள் அனைத்துமே தேன் சுவை. அதுவும் "தத்தித்தோம்" என்ற சித்ரா பாடும் பாட்டு தமிழ்த்திரையிசைப் பாடல்களில் மேற்கத்தேய வாத்தியம் ஒன்றோடு போட்டி போட்டுப் பாடும் மிகச் சில பாடல்களில் இதுவும் ஒன்று. இன்றுவரை காதலர் கீதமாக விழங்கும் “சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா” வைத் தனியே சொல்லவும் வேண்டுமா?
அதே சம காலத்தில் கேளடி கண்மணி பட வெற்றியைத் தொடர்ந்து பாலசந்தரின் சிஷ்யர் வஸந்த் கவிதாலயாவுக்காக இயக்கிய படம் "நீ பாதி நான் பாதி" இங்கும் மரகதமணி தான் இசை. இந்தத் திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "நிவேதா" என்ற பாடல் வெறும் ஸ்வரங்களோடு மட்டும் இசைக்கப்பட்ட பாடலாகப் புதுமை படைத்தது.
தொடர்ந்து "வானமே எல்லை" தமிழ்த்திரையுலகப் பிரபலங்களின் வாரிசுக்களை நாயகர்களாக்கி வந்த அந்தத் திரைப்படத்தில் நாகேஷ் மகன் ஆனந்த்பாபு, கண்ணதாசன் மகள் விசாலி, மேஜர் சுந்தரராஜன் மகன் கெளதம் போன்றோர் நடித்திருந்தனர். அண்ணாமலை படப் பாடல்கள் ஒரு பக்கம், மறு பக்கம் வானமே எல்லை பாடல்கள் என்று அப்போது ஒலிநாடாக்கள் விற்ற போது அண்ணாமலை வழியாகப் பரந்து பட்ட விளம்பரம் வானமே எல்லை இசையமைப்பாளர் மரகதமணிக்கும் கிட்டுகிறது.
‪நீ ஆண்டவனா, சிறகில்லை, நாடோடி மன்னர்களே என்று எதை எடுக்க எதை விட?‬
கம்பங்காடு பாட்டு வழியாக மரகதமணியின் குரலும் சேர, தமிழில் கம்பியூட்டரைக் காட்சிப்படுத்தி எடுத்த முதல் காதல் பாட்டு என்ற பெருமை வேறு. இந்தக் காட்சி தான் இன்றைய யுகத்தின் Video chat இன் முன்னோடி.
இந்து முஸ்லீம் கலவரப் பின்னணியில் இம்முறை பாலசந்தர் மலையாள நடிகர் முகேஷ் மற்றும் குஷ்புவை வைத்து ஜாதி மல்லி படத்தை இயக்கும் தருணம் அங்கேயும் மரகதமணியின் இசையில் குறை வைக்காத பாடல்களாக இனிக்கின்றன. கம்பன் எங்கு போனான் ஹிட்டடித்தது.
அப்போது ஏவிஎம் ‪நிறுவனமும் தன் பங்குக்கு பாட்டொன்று கேட்டேன் படத்தில் மரகதமணியை ஒப்பந்தம் செய்து தம் ஆஸ்தான இயக்குநர் வி.சி.குக நாதனைக் கொண்டு இயக்கினார்கள். ரகுமான் - சித்தாரா என்ற அப்போதைய புகழ்பூத்த ஜோடி இருந்தும் எடுபடாமல் போன அந்தப் படத்தில் பாட்டொன்று கேட்டேன் பாட்டு அப்போதைய சென்னை வானொலியின் உங்கள் விருப்பம் ஆனது.‬
‪இன்னொரு பக்கம் மரகதமணியின் தெகுங்குப் படங்கள் வரிசை கட்டி வந்தன. ஓட்ட வீராங்கனை அஸ்வினி நாச்சப்பாவின் நடிப்பில் “அஸ்வினி” மெளலி இயக்கி ஹிட் அடித்த படம், ஶ்ரீதேவியின் மொழி மாற்றுப் படமான ராம்கோபால்வர்மா இயக்கிய “என்னமோ நடக்குது” என்று வரிசையாகத் தமிழுக்கு வந்தன.‬
தொடர்ந்து தெலுங்கில் வெற்றிப்படமாக அமைந்த டாக்டர் ராஜசேகரின் நடிப்பில் வந்த திரைப்படமான "அல்லாரி பிரியுடு" , தமிழில் "யாருக்கு மாப்பிள்ளை யாரோ" என்று மொழிமாற்றப்பட்டபோது அருமையான பாடல்களை இவர் தமிழில் மொழிமாற்றித் தந்திருந்தார்.
இலங்கையில் பண்பலை வானொலிகளின் ஆரம்ப காலத்தில் அவற்றுக்குத் தீனி கொடுத்த பாடல்கள் இந்தப் படத்தில் இருந்து தான். பின்னாளில் என் வானொலி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி நான் ஒலிபரப்பினேன். அந்த வகையில்
"அன்னமா உன் பேர் என்பது அன்னமா"
https://youtu.be/92Ry6OZkaT8
அட்டகாஷ் காதல் பாட்டு எஸ்.பி.பி அதைச் சந்தோஷத்திலும் சோகத்திலுமாகத் தனித்தனி வடிவத்தில் கொடுத்திருப்பார்.
"ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே"
https://youtu.be/edyDaJtnaO8
தமிழிலும் தெலுங்கிலும் காதலர்கள் நெஞ்சில் ஹிட் அடிச்ச எஸ்.பி.பி & சித்ரா ஜோடிப் பாட்டு.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "அன்னமா! உன் பேர் என்பது அன்னமா?" மரகதமணி/M.M. கீரவாணி இசையமைத்த பாடல்களிலேயே எனக்குப் பிடித்தமான பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது இதுவே.
நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை ஸ்ரீதேவி , அரவிந்த் சாமியுடன் இணைந்து மலையாள இயக்குனர் பரதனின் இயக்கத்தில் "தேவராகம்" திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே காதில் தேன் வந்து பாயும் இனிமை கொண்டவை. அந்தத் திரைப்படத்தில் இருந்து " சின்ன சின்ன மேகம் என்ன கவிதை பாடுமோ", “யா யா யா யாதவா உன்னை அறிவேன்”ஆகிய ஜோடிப் பாடல்கள் இன்றும் இனிக்கும்.
எம்.எம்.கீரவாணிக்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைக் கொடுத்தது "அன்னமய்யா" என்ற தெலுங்குப்படம். நாகர்ஜீனா நடிப்பில் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது இத்திரைப்படம்.
நடிகர் அர்ஜூன் ஐ ஆக்‌ஷன் கிங் என்ற எல்லைக்குள் மட்டும் அடக்கி விட முடியாது. அவர் காலத்துக்குக் காலம் பல இசையமைப்பாளர்களைக் கை தூக்கி விட்டிருக்கிறார். அந்தப் பாரம்பரியம் மரகதமணி, வித்யாசாகர், டி.இமான் என்று தொடரும்.
நடிகர் அர்ஜூனுக்கு வாழ்வு கொடுத்த படம் அவரே ரிஸ்க் எடுத்து இயக்கிய சேவகன். இதற்கு மரகதமணி தான் இசை. “நன்றி சொல்லிப் பாடுவேன்” பாடல் வெகு ஜன அந்தஸ்த்தைப் பெற்றதோடு சேவகன் வெற்றியிலும் பங்கு போட்டது.
தொடர்ந்து அர்ஜூன் இயக்கிய பிரதாப் படத்திலும் ஜோடி கட்டினார் மரகதமணி. “மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா” அப்போது A ரகப் பாட்டு ரசிகர்களுக்குத் தீனி போட்டது. ஆனாலும் “என் கண்ணனுக்கு காதல் வந்தனம்” பாடலில் தன் இசையில் மரகதம் பொருந்தியிருப்பதை நிரூபித்தார்.
அர்ஜூன் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில்
கொண்டாட்டம் படத்தில் நடித்த போதும் மரகதமணி இசை ஜோடி சேர்ந்தார். கொண்டாட்டத்தில் “உன்னோடு தான் கனாவிலே” மரகதமணியின் பேர் சொல்லும் பாட்டு.
இன்று பாகுபலி வரை உச்சம் கண்ட மரகதமணியின் பாடல்கள் குறித்து ஆழ அகலமாக நீண்ட தொடர் எழுத வேண்டும். இன்று அவரின் பிறந்த நாளில் ஒரு பொழிப்புரை போல அந்த இனிய தொண்ணூறுகளில் இசை வசந்தம் படைத்த அவர் பாடல்களோடு வாழ்த்துகிறேன்.

🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁

“ஆத்தாடி என்ன உடம்பு அங்கங்கே பச்ச நரம்பு”
இன்று சமூக வலைத்தளங்களைத் தெறிக்க விடும் பாட்டு.
விஜய் தொலைக்காட்சி நகைச்சுவை நட்சத்திரம் ராமர் 25 வருடங்களுக்குப் பின்பு தன்னுடைய நையாண்டிக்குப் பயன்படுத்திய பின்னர் தான் இப்படியொரு பாட்டை அறிந்து மூலப் பாட்டைத் தேடிப் போய் YouTube இல் பார்க்கும் மக்களும் இருக்கிறார்கள். அதற்கு YouTube இல் குறித்த பாடலுக்கு வரும் பின்னூட்டங்களே சாட்சி. இந்த மாதிரி ஒரு மீள் அறிமுகம் கிட்டியதும் ஹிப் ஹாப் தமிழா தன்னுடைய நட்பே துணை படத்துக்காக மீள் கலவை ஆக்கி அறுவடை செய்து விட்டார். இதற்கெல்லாம் ஆதியும் அந்தமுமான இசையமைப்பாளர் செளந்தர்யன் தான் பாடலின் ஆக்க கர்த்தா என்பதைச் சொல்லி வைத்துக் கொண்டே இந்தப் பகிர்வையும் கொடுக்க வேண்டியிருக்கிறது.
“காதல்.....கடிதம்....வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா.....” ஞாயிறு தோறும் சென்னை வானொலியில் வலம் வந்த உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் அசரீரி போல் தொடங்கும் இந்தப் பாடலின் ஆரம்ப அடிகளைக் கேட்ட பரவசம் இன்னமும் மனதில் இருக்கிறது. யாரடா இது இளையராஜா மாதிரி ஒரு நேர்த்தியானதொரு பாட்டை கேட்ட மாத்திரத்தில் எடுத்த எடுப்பிலேயே கவர வைத்தது என்ற ஆச்சரியத்துடன் தான் அப்போது செளந்தர்யன் எங்களுக்கெல்லாம் அறிமுகமானார்.
இசையமைப்பாளர் செளந்தர்யன் இசைத்துறைக்கு வந்ததே இன்பமானதொரு விபத்துத்த்தான். இயக்குநராக எண்ணிக் கதை சொல்ல சூப்பர் குட்ஸ் ஆர்.பி.செளத்ரியிடம் போனவர், கூடவே கே.எஸ்.ரவிகுமாரையும் சந்திக்க வேண்டி வருகிறது. தான் கொண்டு போன கதையைச் சொல்லிக் கொண்டே இடையிடையே காட்சிகளுக்கேற்ப தானே மெட்டுக் கட்டித் தாளம் போட்டுப் பாடியவரைப் பார்த்ததும் “பேசாம என் படத்துக்கு இசையமைப்பாளர் ஆகிடுங்க” என்று கே.எஸ்.ரவிகுமார் சொல்லவும் அப்படியே ஆனவர் தான் இந்த செளந்தர்யன்.
“தன்னேனானே தானேனானே அம்மா....
தன்னேனனே தானே தன்னே தன்னன்னானே.....
ஏ சம்பா நாத்து சரக்காத்து...
மச்சான் சல்லுன்னுதான் வீசுதுங்க அங்கம் பூரா...”
எடுத்த எடுப்பிலேயே தன் அறிமுகப் படத்தை ஒரு ரம்மியமான தெம்மாங்குப் பாடலோடு தொடக்கி வைப்பது எப்பேர்ப்பட்ட வரம். அன்னக்கிளியில் இளையராஜாவுக்கு வாய்த்தது சேரன் பாண்டியனில் செளந்தர்யனுக்குக் கிட்டியது. ஸ்வர்ணலதாவுக்குப் பேர் சொல்லும் ஒரு கிராமியத் தெம்மாங்கு கிட்டியதோடல்லாமல் இன்றும் செளந்தர்யனைச் சிலாகிக்க வைக்கும் பாடலாகவும் அமைந்து விட்டது. வயற்காட்டியில் தோழிமார் பாடும் பாடல்
தனனானே தனனானே எனும் போது நுணுக்கமாக வரும் நறுக்காக வரும் இசைத் துணுக்கு ஒன்று வருடி விட்டுப் போகும். அது செளந்தர்யன் எவ்வளவு தூரம் நேர்த்தியாகத் தன் இசைப் பணியைக் கவனித்திருக்கிறார் என்பதைக் காட்டும்.
வாய்ப்புக் கிடைத்து விட்டதே என்று வாத்தியங்களை உருட்டி விளையாடாமல் ஒவ்வொரு பாடலுக்கும் அதற்கேற்ப தார்ப்பரியம் உணர்ந்து இசை கோத்திருப்பார். பொதுவாகவே இளையராஜாவின் ஆரம்ப காலப் படங்களாகட்டும், தேவாவின் இசையில் வந்த அண்ணாமலை உள்ளிட்ட காலத்து அவரின் தொடக்க காலப் படங்களாகட்டும் ஒலித்தரத்தில் சிறப்பை உணர முடியாது. ஆனால் சேரன் பாண்டியன் படத்தின் ஒலியமைப்பு வெகு நேர்த்தியாக இருக்கும்.
சூப்பர் குட்ஸ் ஆடியோ என்று தமது கம்பெனி பெயரிலேயே ஆர்.பி.செளத்ரி வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதொரு விடயம்.
பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் அறிமுக காலம் தொட்டே இயங்கிய வகையில் T.ராஜேந்தர், S.A.ராஜ்குமார் வரிசையில் செளந்தனுக்கும் அந்தப் பேறு கிட்டியது. அதை அவர் வெகு சிறப்பாகப் பயன்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.
சேரன் பாண்டியனைப் பொறுத்த வரை பலருக்கு வாழ்வளித்த படம். புது வசந்தம் மூலம் தமிழில் ஒரு திருப்புமுனை வெற்றிப் படத்தைக் கொடுத்த ஆர்.பி.செளத்ரி தொடர்ந்து விக்ரமனையே இயக்க வைத்த பெரும் புள்ளி படம் பெருந்தோல்வி. தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய புரியாத புதிர் படமும் சுமார் ஓட்டம். இன்னொரு பக்கம் சரத்குமார் வில்லத்தனமான பாத்திரங்களில் இருந்து படிப்படியாக உயர்ந்து கொண்டு போக ஒரு கொழு கொம்பு தேவை. இந்த நிலையில் அண்ணன் - தங்கை பாசப் பிணைப்பு, குடும்ப உறவுகளுக்குள் விரிசல் என்ற இன்னொரு பரிமாணத்தில் ஈரோடு செளந்தர் பண்ணிய கதை தான் இவர்கள் எல்லோரையும் உயர்த்த வேண்டிய நிலை.
அதையே சேரன் பாண்டியன் செய்து காட்டியது.
நாட்டாமை படத்துக்கு முன்பே கே.எஸ்.ரவிகுமாரை முதலுக்குப் பாதகமில்லாத இயக்குநர் என்று சேரன் பாண்டியன் அடையாளப்படுத்தியதால் தான் அடுத்த இருபது ஆண்டுகள் கே.எஸ்.ரவிகுமாரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர வழி கோலியது.
அந்த வகையில் செளந்தர்யனுக்குத் திறமை ஒரு பக்கம், அவல் மாதிரி ஒரு குடும்பச் சித்திரம் இன்னொரு பக்கம் அவரின் திறமைக்குத் தீனி போட வாய்த்தது. “தோல உரிச்சுப் போடுவன்” என்ற கொங்குத் தமிழ் கோவக்காரச் சரத்குமாரின் கல் மனசுக்குள்ளும் ஈரம் காட்ட “சின்னத் தங்கம் எந்தன் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது”. இந்தப் பாட்டை இன்னமும் கிராமங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
“காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா” பாடலின் எளிமையான வரிகளே காதலர்களின் கடிதப் பரிமாற்றம் போல இருக்கும். https://youtu.be/GaZDYdiWSCU
லாப்சன் ராஜ்குமார் - ஸ்வர்ணலதா ஜோடி எப்படி அமைந்ததோ தெரியவில்லை. ஆனால் அந்தப் பாடலுக்கேற்ற கச்சிதமான காதல் மொழிக் குரல்கள் அவை.
“உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்”
என்று லாப்சன் பாடும் கணத்தில் காதலில் தோய்ந்து அந்த அறிமுகக் குரல் அந்நியமில்லாது அந்நியோன்யமாக நெஞ்சில் தங்கி இனிக்கும்.
“பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான் அதிகம் எனக்கு”
அப்பப்பா பள்ளிக்கால இரட்டை ஜடைக் காதலியின் குரலோ இந்த ஸ்வர்ணக் குரல்.
ஒரு தேர்ந்த ஆட்டக்காரர் ஆனந்த்பாபுக்குக் காதல் சோகத்திலும் ஒரு வேக இசையைப் போட்டு “வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே”.
https://youtu.be/y-PfZVnR-Tc
இந்தப் பாடலை அந்தக் காலத்து ரெக்கார்டிங் பார்களில் கேட்ட போது ஒலி அதிர்வில் ஸ்பீக்கர்களே துள்ளியதை ரசித்திருக்கிறோம். எஸ்.பி.பி தன் பங்குக்கு காதல் சோகத்தைக் குரலின் வழியே உணர்வைக் கடத்துவார்.
“கண்கள் ஒன்றாகக் கலந்ததா”
https://youtu.be/plvaJV14PMg
எஸ்.ஏ.ராஜ்குமார்த்தனமான இசையில் மனோ - சித்ரா குழுவினர் பாடியதும் ஹிட்டடித்தது.
ஏழு பாடல் கணக்குக்கு “ஊரு விட்டு ஊரு வந்து ஒத்தையில மாட்டிக்கிட்ட”என்ற எஸ்.பி.சைலஜா குழுவின் குரலும் சேர்ந்து கொண்டது.
மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடும் “கொடியும் தோரணமும் குங்குமமும் தோரணமும்” மலேசிய வாசுதேவனும், சுனந்தாவும் அரிதாக ஜோடி சேர்ந்த இனிமையானதொரு குழுப்பாடல் என்று செளந்தர்யனுக்கு முதல் படத்திலேயே கிராமியம், குடும்ப செண்டிமெண்ட், இளம் காதலர் கீதம் என்று வித விதமாகக் கொடுக்கக் களம் அமைத்தது சேதஜ் பாண்டியன்.
“காகித ஓடம் கடலலை மீது ஓடமும் போலே போய் வருவோமே” கலைஞர் கருணாநிதி எழுதிய பாடல். கலைஞரின் இலக்கியம் மீது தீவிர வேட்கை கொண்டவர் செளந்தர்யன். அதன் பிரபலிப்பிலேயே அவரின் கவித்துவம் இசையோடு மிளிர்ந்தது. “சின்னத்தங்கம் எந்தன் செல்லத்தங்கம்”
https://youtu.be/wwGP_Dbx1Q0
பாடலில் காகித ஓடம் பாடலின் தொனி இருக்கும்.
பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான் அதிகம் எனக்கு
வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்துதான்
பெயரில் வர்ணம் தீட்டுவேன்
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்...

“முதல் சீதனம்” ஈரோடு செளந்தர் முதன் முதலாக கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளோடு இயக்குநராகவும் அறிமுகமான படம். ஆம்னி ஆக முன்னர் மீனாட்சி, ஈரமான ரோஜாவே சிவாவுடன் இணைந்த படம்.
சேரன் பாண்டியன் படத்தின் வெற்றிக்குப் பின் சூப்பர் குட் பிலிம்ஸ் இன் ராசியான கதாசிரியாக ஈரோடு செளந்தர் ஆகி விட, தொடர்ந்து கதாசிரியராக இயங்கியவர்,
நாட்டாமை படத்துக்கு அவர் பண்ணிய கதை ஒரே இரவில் இன்னும் பன் மடங்கு உச்சத்துக்குக் கொண்டு போய் விட்டது. அதனால் நாட்டாமை படத்தின் வெற்றிக்கு நானே காரணம் என்று அப்போது அப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் ஊடல் கொண்டு பத்திரிகைகளுக்குப் பேட்டி எல்லாம் வைத்தார் ஈரோடு செளந்தர்.
“இசைக் கவிஞன்” என்ற சிறப்புப் பட்டம் செளந்தர்யனுக்குக் கிட்டியது. அந்தப் பட்டத்தோடே முதல் சீதனம் படத்துக்கு அவர் இசையமைத்தாலும் தேவாவின் ஆஸ்தான பாடலாசிரியர் காளிதாசனையும் இப்படத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார். கூடவே படத்தில் இடம் பெற்ற நாட்டுப்புறப் பாடல்களை ஈரோடு செளந்தர் எழுதினார். கருணா பாடகராக அறிமுகமானது இந்தப் படத்தில் தான். கூடவே எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன், மனோ, ஸ்வர்ணலதா, மின்மினி, சித்ரா, உமா மகேஸ்வரி என்று பாடக நட்சத்திரக் கூட்டம்.
செளந்தர்யனின் பேர் சொன்ன படங்களில் முதல் சீதனம் படத்துக்குத் தனியிடம் உண்டு. தொண்ணூறுகளின் காதல் சோகப் பாடல்களில் “எட்டு மடிப்புச் சேலை இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை
https://youtu.be/aGxJeJssNE8
பாடல் தவறாது இடம் பெறும். எஸ்.பி.பியின் உருக்கமான குரலும் செளந்தர்ய இசையும் வெகு அற்புதம்.
கிராமத்துப் பேருந்துகளின் மாறாத பெயிண்ட் போல ஒட்டியிருக்கும் பாடல்களில் ஒன்றாக
“ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே”
https://youtu.be/Iyf976axywM பாடலும் ஒட்டிக் கொண்டு முதல் சீனத்தை மறவாது வைத்திருக்கிறது.
“ஏய்! பாக்குறதுக்கு என்னமோ
பக்கா வில்லனாட்டம் தான் இருப்பேன்
நான் சொல்றபடி கேட்டு நடந்துகிறேன்னு வச்சுக்கோ
“நாந்தாண்டா கண்ணு கதாநாயகன்” இந்த முத்திரை வசனத்தோடு முக்கிய வில்லனாக மொட்டையடிச்சு, அதிக காட்சிகளோடு கே.எஸ்.ரவிகுமார் தோன்றிய படம்
“புத்தம் புதுப் பயணம்”. பின்னாளில் குஷ்புவோடு முத்துக் குளிக்க வாரீகளா படத்தில் ஜோடி போட முன்னோட்டமாய் அமைந்தது இந்தப் படம்.
சேரன் பாண்டியன் வெற்றியைத் தொடர்ந்து வந்த படம் இது. கதை, வசனம் பொறுப்பை ஈரோடு செளந்தர் கவனிக்க திரைக்கதையோடு இயக்கியவர் கே.எஸ்.ரவிகுமார்.
புது வசந்தம் காலத்து நான்கு நண்பர் சூத்திரத்தை (formula) வைத்துக் கதை பண்ணிய படம் இந்த புத்தம் புதுப் பயணம். நோயின் பிடியுல் இருக்கும் நண்பர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பி எஞ்சிய நாட்களையாவது சந்தோஷமாகக் கழிக்கலாமே என்று கிராமத்துக்கு வருகிறார்கள். அங்கோ வில்லன் பிடியில் இருக்கும் காதலர்களுக்கு ரட்சகர்களாகி உயிரை விடுகிறார்கள். ஆனந்த் பாபு, விவேக், கண்ணன், சின்னி ஜெயந்த் என்று நண்பர் கூட்டு. இதே கூட்டணி சம காலத்தில் வெளியான சூப்பர் குட்ஸ் இன் எம்.ஜி.ஆர் நகரில் (ஹரிஹரன் நகரில் மலையாளத்தின் தமிழ்ப் பதிப்பு) படத்தில் சின்னி ஜெயந்த் இற்குப் பதில் சார்லி நடிக்க இணைந்தது குறிப்பிடத்தக்கது.
புத்தம் புதுப் பயணம் படக் கதை அடுத்த ஆண்டே வந்த வானமே எல்லை படத்தின் கதைக்கு நெருக்கமானது. அங்கேயும் ஆனந்த் பாபு. ஆனால் வானமே எல்லை போன்று வசூலை வாராத படமாக புத்தம் புதுப் பயணல் அமைந்து விட்டது.
நகரம், கிராமம் இரண்டும் சரி பாதி இருக்கும் கதையமைப்பு என்பதால் செளந்தர்யனுக்கு இங்கேயும் நல்ல தீனி. ஆனால் இந்தப் படத்துக்கு அவர் கொடுத்த உழைப்பு சேரன் பாண்டியன் அளவுக்குப் பெரிய அளவுக்குப் போகாதது இசை ரசிகராக எனக்குப் பெரும் ஆதங்கம். உதாரணத்துக்கு
ஏ காலைப் பனி நேரத்திலே வந்த கன்னிப் பொண்ணு
https://youtu.be/1eMHXWT-nzw
கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் எவ்வளவு அற்புதமான பாட்டு.
மலேசியா வாசுதேவன் & மனோ குழுவினர் பாடும் “பாடுங்க்ளே” https://youtu.be/3delQPJkvwM
“மல்லிகைப் பூவு வாசம் மணக்குது மச்சான் மனசு சுண்டி இழுக்குது
https://youtu.be/hVbHIRhWpYo
போன்ற தெம்மாங்குப் பாடல்களோடு
ஏ பெண்ணே https://youtu.be/ty4wzMXLyjc
என்ற ராப் பாடலுமாக இங்கேயும் எஸ்.பி.பி, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், மனோ, சித்ரா என்று நட்சத்திரப் பாடகர்கள். கொடுமை என்னவென்றால் Jio மற்றும் Saavin போன்ற பேர் போன தளங்களில் கூட பாடல்கள் வைரமுத்து என்றும் இசை வித்யாசாகர் என்றும் போட்டு வைத்திருக்கிறார்கள்.
பாடல்கள் அனைத்தையும் எழுதி இசையமைத்த செளந்தர்யன் “இசைக் கவிஞன்” என்ற பட்டத்துக்கு நியாயம் கற்பித்த படம் இந்தப் “புத்தம் புதுப் பயணம்”.

இசையமைப்பாளர் செளந்தர்யன் 🎸
சிந்துநதி பூ 🥁 முத்துக் குளிக்க வாரியளா
பாகம் 3
அடியே அடி சின்னப் புள்ள....:
ஆவி துடிக்குது நெஞ்சுக்குள்ள.....
கிராமத்தாளுகளிடம் பொதுவானதொரு ஒரு பழக்கம் உண்டு. முகமறியா யாரும் வந்தாலும் அவர்களை வரவேற்று இருத்தி, ஒரு வாய் சாப்புட்டுப் போறீங்களா என்று உபசரித்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள்.
இந்தப் பழக்கம் கலைத் துறையிலிருந்து சினிமாப் பட ரசனை வரை நீண்டிருக்கிறது. அதனால் தான் நகரத்தில் ஒரு வாரமோ இரு வாரமோ ஓடி முடித்த அறிமுகங்களின் படங்கள் கிராமங்களில் அடி தூள் என்று ஓட்டம் ஓடியிருக்கின்றன.
இந்த ரசனை பாட்டுக் கேட்பதிலும் யார் இசையமைப்பாளர் என்ற பேதமில்லாது சமரசமின்றி
உள்ளடங்கியிருக்கிறது. அதனால் தான் “அடியே அடி சின்னப்புள்ள” பாடல் இன்னும் அங்கே ஒலித்துக் கொண்டிருக்கிறது, செளந்தர்யன் என்ற இசையமைப்பாளரின் அறிமுகம் இல்லாத இடத்தில் கூட.
சிந்து நதி பூ படம் வந்த போது குஞ்சுமோன் வருமான வரியை நஷ்டக் கணக்குக் காட்டவே இப்படி ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார் என்று அவர் காது படவே (😀) பேசினோம். இல்லையா பின்னே ஜென்டில் மேன் என்ற உச்ச பட்ச பிரமாண்டத்தை எடுத்து விட்டு, அறிமுகங்களோடு ஒரு சாதா படத்தை எடுக்கிறாரே என்ற துணுக்குத் தான் காரணம். ரஞ்சித் முக்கிய நாயகனாக நடிக்க, மொட்டை மனோரமா, வடிவேலு, ஜெய்சங்கர் என்று தெரிந்த முகங்கள் சிலதோடு ராஜகுமாரியின் அறிமுகமும் அமைந்தது. செந்தமிழன் படத்தை இயக்கியிருந்தார். சிந்துநதி பூ என்ற தலைப்பே வித்தியாசமாக இருக்க, குஞ்சுமோன்
ஜென்டில் மேன் என்று தனக்குத் தானே பட்டம் சூட்ட ஆரம்பித்ததும் இங்கிருந்து தான்.
சிந்துநதி பூ படத்தை இன்றளவும் நினைவில் வைத்திருக்க உதவுவது படத்தின் இசை தான். செளந்தர்யன் தன் தாய் வீடான சூப்பர் குட்ஸ் இலிருந்து வெளியே வந்து பண்ணிய படம். அப்போது தயாரிப்பாளர் குஞ்சுமோன் படங்களுக்குத் தொடர்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வந்ததால் இந்த சிந்துநதி பூ படத்தின் பாடகர் தெரிவிலும் ரஹ்மான் தனம் இருக்கும். அப்போது ரஹ்மானின் பாசறையில் வளர்க்கப்பட்ட சாகுல் ஹமீது, சுஜாதா (மறு சுற்று), உன்னி மேனன் என்று அமைந்திருந்தார்கள். ரஹ்மான் இசையமைத்த உழவன் படத்தின் பாடல்களோடு நெருக்கம் போல இவை இருக்கும். இப்பேர்ப்பட்ட தன்மை பின்னாளில் மணிரத்னம் தயாரிப்பில் தேவா இசை கொடுத்த ஆசை, கார்த்திக் ராஜாவின் டும் டும் டும் படங்களிலும் மணிரத்னம் படங்களுக்கான பகட்டும், நிறமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிந்து நதி பூ படத்தினை அடுத்த சுற்று விஜய் தொலைக்காட்சி ராமர் பிரபலமாக்கிய “ஆத்தாடி என்ன உடம்பு” பாடலை சாகுல் ஹமீது பாடும் போது இடையில் பொடிப் பயல் குரல் வருவது கூட சிக்கு புக்கு ரயிலே பாடலில் ஜி.வி.பிரகாஷ்குமார் குரலை ரஹ்மான் பாவித்த ஒற்றுமை இருக்கும்.
“அடியே அடி சின்னப் புள்ள” பாடலை மனோ & ஜானகி பாடியது போல, “மத்தாளம் கொட்டிதடி மனசு” பாடிய ஸ்வர்ணலதா & எஸ்.பி.பியும் சரி சமமாகக் கவர்ந்திருப்பார்கள். “குப்பையில நெல் வெளஞ்ச” என்ற மென் சோகப் பாடல் சாகுல் ஹமீது குரலிலும், “ஆலமரம் பெயர்த்தெடுக்கும் ஆடிக் காத்து” என்ற சுஜாதா குழுவினரும் பாட, “கடவுளும் நீயும்” என்ற பாடலை எஸ்.ஜானகி & உன்னிமேனன் பாடியிருப்பார்கள்.
சிந்துநதி பூ படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றால் அது ஜேசுதாசும், ஆஷா லதாவும் பாடிய “ஆத்தி....வாடையில பட்ட மரம் கோடையில கொழுந்து விடாதா”
இந்தப் பாடலின் இசைக் கோப்பும் சரி, ஜேசுதாஸின் உச்ச ஸ்தாயியையும், நீள் சாதகத்தையும் கன கச்சிதமாகப் பயன்படுத்திய அதி அற்புதமான பாடலிது.
இதற்கு முன் சேரன் பாண்டியன் படத்தில் செளந்தர்யனே பாடலாசிரியராக இயங்கியிருந்தாலும் சிந்துநதி பூ படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து.
சிந்துநதி பூ பாடல்களைக் கேட்க
https://youtu.be/ybBJebIUF1A
கே.எஸ்.ரவிகுமார் சூப்பர் குட்ஸ் மூவிசும் இல்லாமல்
கதாசிரியர் ஈரோடு செளந்தரும் இல்லாமல் வெளியே வந்து இயக்கிய படம் “முத்து குளிக்க வாரீயளா”
சந்திரகுமார் கதை, வசனம் எழுதிய படம்.
விக்னேஷ், சங்கவி இளம் ஜோடியுடன் குஷ்புவும், பட்டாளத்தான் கே.எஸ்.ரவிகுமாருமாக நடித்த படமிது.
நாட்டாமை படத்தின் பெரு வெற்றிக்குப் பின் கே.எஸ்.ரவிகுமார் ரிஸ்க் எடுத்து ரஸ்கு சாப்பிட்டார் இதில்.
கே.எஸ்.ரவிகுமாருடன் செளந்தயன் இணைந்த மூன்றாவது படம் முத்துக் குளிக்க வாரீயளா.
பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவிஞர் காளிதாசன்.
“ஓஹோ ஹோ ஹோ தங்கமே தங்கம்
உனது முகம் பூவனம்......”
இன்றும் இலங்கையில் உள்ள பண்பலை வானொலிகளில் வாரம் தப்பாமல் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இசைஞானி இளையராஜா காலத்தில் அவரின் இசை சாம்ராஜ்ஜியத்தில் இசையமைப்பாளர்கள் பலர் ரசிகர் மனதில் பரவலான ஈர்ப்பைத் தக்க வைக்க முடியாமைக்கு ஒரு காரணம் என்ன தான் அற்புதமான மெட்டாக இருந்தாலும் இசைக் கோப்பில் கோட்டை விட்டு விடுவார்கள். ஒரு சீரான வாத்திய ஒழுங்கும், நேர்த்தியும் இருக்காது. ஆனால் இளையராஜாவுக்கு நிகரான அற்புதமான மெட்டுகளைக் கட்டி விடுவார்கள். அப்படி ஒன்று தான் இந்தப் பாட்டும்.
பொதுவாக இசையமைப்பாளர்களிடம் நீங்க இசையமைச்சதில் பிடிச்ச பாட்டு எது என்று கேட்டால் என்னோட எல்லாப் பாட்டுமே என் குழந்தைகள் தானே என்று மாமூலான பதில் வரும். ஆனால்
ஓஹோஹோ தங்கமே தங்கம் பாடல் தான் என் இசையமைப்பில் எனக்கு மன நிறைவைக் கொடுத்த் பாட்டு என்று செளந்தர்யன் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பாடல் முத்துக் குளிக்க வாரீயளா படத்தில் மனோ & சித்ரா குரல்களில் ஒலிக்கும். இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் வழக்கமாக முதலடியில் மட்டுமே வரும் ஆலாபனை இடை வரிகளிலும் வருமாறு இசையமைத்திருப்பார் உதாரணமாக “ஓஹோஹோ ஹோ அருகே வரணும்”.
மனோ, சித்ரா, அருண்மொழி, சுபா, சுஜாதா என்று நட்சத்திரப் பாடகர் கூட்டம் இருந்தாலும் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்பதைப் போல “ஓஹோஹோஹோ தங்கமே” தங்கம் பாட்டு மட்டுமே வெகுஜன அந்தஸ்த்தைப் பெற்றது.
எப்படி கல்லுக்குள் ஈரம் பாரதிராஜாவுக்கு ஒரு கதாநாயக ஆசையை மூட்டியதோ அது போலவே நாட்டாமை வெற்றி தந்த பலத்தால் கே.எஸ்.ரவிகுமார் குஷ்புவுடன் ஆட்டம், பாட்டம் என்று முத்துக் குளிக்க வாரீயளா படம் எடுத்து சிப்பி கூட மிஞ்சவில்லை.
தொடர்ந்து இசையமைப்பாளர் செளந்தர்யன் & கே.எஸ்.ரவிகுமார் கூட்டணிக்கும் மண்ணை அள்ளிப் போட வாரீகளா என்று அமைந்து விட்டது.

நடிகர் ராமராஜன் நாயகனாக அரிதாரம் பூசத் தொடங்கியதிலிருந்து இசைஞானி இளையராஜா மட்டுமன்றி கங்கை அமரன், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி என்று பிற இசையமைப்பாளர் இசையிலும் நடித்துள்ளார். இவர்கள் எல்லோரும் ராமராஜனுக்குக் கொடுத்த பாடல்கள் சிறப்பாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் செளந்தர்யனும் தேர்வானது ஆச்சரியமானதொரு அதிஷ்டத்தையும் அவருக்குக் கொடுத்தது. ஏனெனில் கோபுர தீபம் படத்தின் பாடல்கள் அனைத்துமே வெளிவந்த காலத்தில் கேட்டு ரசிக்கப்பட்டன. அத்தோடு சுகன்யாவோடு ஜோடி சேர்ந்ததோடு இயக்கத்தையும் கவனித்துக் ராமராஜனுக்கு ஒரு கவனிப்பைக் கொடுத்தது இப்படம். அப்போது சரிந்து போய்க் கொண்டிருந்த ராமராஜன் மார்க்கெட்டுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்த படம் “கோபுர தீபம்” எனலாம்.
“உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே”
எஸ்.பி.பி & அனுராதா ஶ்ரீராம் பாடிய இந்தப் பாடல் கோபுர தீபத்தில் உச்சம் எனலாம். ஸ்வர்ணலதாவுக்கு முத்தாக மூன்று பாடல்கள்.
“கங்கை காயும் காய்ந்து போக மாட்டேன்” சோகப் பாடலை எஸ்.பி.பி பாட, ஹம்மிங் ஆக ஸ்வர்ணலதா பயன்பட்டிருப்பது புதுமை.
“சாய்ஞ்சா சாயிற பக்கம்” என்ற நையாண்டிப் பாட்டில் மனோ குழுவினருடன், ஸ்வர்ணலதாவின் குறும்புக் குரல், “மாமா ஏ மாமாவே” மீண்டும் மனோவுடன் ஒரு காதல் பாட்டு,
“என்னுடைய பொண்டாட்டி எங்கேயோ பொறந்திருக்கா” வும் இந்தக் கூட்டத்தில் பிரபலமானது.
“என் வாழ்க்கை மன்னவனே” பாடலை செளந்தர்யம் எழுத, மீதிப் பாடல்களை வைரமுத்து கவனித்துக் கொண்டார்.
அப்போது மின்சாரக் கனவு படத்தின் பாடல்கள் வெளிவந்த போது கோபுர தீபம் படப் பாடல்களும் வெளிவந்ததால் இன்னும் பலரைச் சென்றடைய அது உதவியது.
இடைப்பட்ட காலங்களில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்தார். அதில் குறிப்பிடத்தக்கது சிந்துநதி பூ இயக்குநர் செந்தமிழன் தன் நாயகன் ரஞ்சித் மற்றும் ஆனந்த் பாபுவை வைத்து இயக்கிய சேரன் சோழன் பாண்டியன்.
பாடகி ஸ்வர்ணலதாவுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தவர்களில் செளந்தர்யன் குறிப்பிடத்தக்கவர்.
மேலும் செளந்தர்யன் இடை கொடுத்த
“கண்ணிமைக்கும் நேரத்துல..” என்ற கலாட்டா கணபதி திரைப்படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய பாடலும்
“ஆனந்தம் தான்... “ என்ற நெருப்பூ படப்பாடல் (உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதா...”
தங்கள் ஊர்ப்பகுதிகளில் பிரபலமென சகோதரன் Hardinge Baskar K குறிப்பிட்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் செளந்தர்யன் அப்போது அடித்த தேவா, சிற்பி அலையால் காணாமல் போனார். இப்போதும் அவ்வப்போது இசையமைத்து வருகிறார்.
குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்கள் கிட்டியிருந்தால் அவரின் இன்னிசையைத் தொடர்ந்து பல்வேறு பரிமாணங்களில் கேட்க வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனாலும் தொண்ணூறுகளில் தமிழ் இசை ரசிகர்களை ஆட்கொண்டவர் என்ற வகையில் மறக்கமுடியாதவொரு இசையமைப்பாளர் செளந்தர்யன்.