Pages

Thursday, June 21, 2012

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவனின் நினைவில்

இன்று திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நினைவுநாளாகக் கொள்ளப்படும் வேளை அவரின் நினைவின் துளிகளாய், சில பாடல்களோடு ஒரு பகிர்வைக் கொடுக்க எண்ணியிருக்கிறேன். கேரள நாட்டில் இருந்து வந்து தமிழ்த்திரையிசையின் மெல்லிசை மன்னராகப் பவனி வந்த எம்.எஸ்.விஸ்வநாதன், அதே போல தமிழகத்தின் நாகர்கோயிலில் பிறந்து தமிழ்த்திரையிசையிலும் எண்ணற்ற படங்களுக்கு இசையமைப்பாளராக விளங்கியிருந்தாலும் தெலுங்கு தேசத்தில் தான் கே.வி.மகாதேவனின் புகழ் ஒப்பீட்டளவில் தமிழை விடக் கோலோச்சியிருந்தது.

இன்றும் பசுமரத்தாணி போல நினைவிருக்கின்றது, 2001 ஆம் ஆண்டு இதே நாள் சிட்னிக்கு இசை நிகழ்வை நடத்த வந்த பாடகி சுஜாதா நமது வானொலி நிலையத்துக்கு வந்த போதுதான் கே.வி.மகாதேவனின் பிரிவுச் செய்தியை இணையம் மூலம் அறிந்து அவருக்குச் சொன்னேன். அப்போது "மாமா" என்று சொல்லியவாறே, தமது குடும்பத்தில் ஒருவரின் இழப்புப் போல வாய்பொத்தி அவர் கலங்கி நின்றார். திரையுலகில் செல்லமாக "மாமா" என்று அழைக்கப்பட்டவர் கே.வி.மகாதேவன். கந்தன் கருணை படத்திற்காகத் தேசிய விருதைத் தமிழில் பெற்றுக் கொண்டவர், திரையிசைக்காகக் கொடுத்த முதல் தேசிய விருது கந்தன் கருணைக்குத் தானாம். தமிழோடு தெலுங்கில் சாதனை படைத்த சங்கராபரணத்துக்கும், சுவாதி க்ரணம் என்ற படத்துக்கும் என்று மூன்று தேசிய விருதுகளை எடுத்ததோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார் கே.வி.மகாதேவன்.
கே.வி.மகாதேவனின் உதவியாளராகவிருந்த புகழேந்தி அவர்களின் மனைவி, மகனை 11 ஆண்டுகளுக்கு முன்னர் நான் வானொலிப் பேட்டி எடுத்தபோது இவரின் அறியப்படாத பரிமாணங்களை அப்போது சொல்லிச் சொல்லிச் சிறப்பித்தனர்.

கே.வி.மகாதேவன் எழுபதுக்கு முன் அள்ளிக் கொடுத்த படங்களில் எதை எடுப்பது எதை விடுவது என்று ஒரு சிக்கல் வரும். எனவே எழுபதுகளின் இறுதியில் இருந்து எண்பதுகளின் ஆரம்பம் வரை இவரின் இசையில் மலர்ந்த சில முத்துக்களை இங்கே தருகின்றேன்.


ஹிந்தியில் ஹிட்டடித்த ரங்கீலாவுக்கெல்லாம் பாட்டி முறையான கதை "ஏணிப்படிகள்" படத்தில். இந்தப் படத்தின் கதையை உருவிப் பின்னாளில் ஏகப்பட்ட படங்கள் வந்து விட்டன, சமீபத்தில் ஜெயராம் நடித்த ஒரு மலையாளப்படம் உட்பட. ஆனால் ஏணிப்படிகள் படத்தின் நேர்த்தியான திரைக்கதையும் கே.வி.மகாதேவனின் இசையும் இன்றளவும் நினைவில் இனிமை சேர்ப்பவை. இந்தப் படத்தில் பி.சுசீலா பாடும் "பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன" என்ற பாடலை இங்கே தருகின்றேன்.





புதுமைப்பித்தனின் கதையொன்றை எடுத்தாண்டு ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் "அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை". தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோப்படங்களும் நம்மிடையே புழங்கிய காலத்தில் அப்போது இந்தப் படத்துக்க்கும் ஏக மவுசு. படத்தில் "சுமைதாங்கி ஏனின்று விழுங்கின்றது" பாடலோடு இங்கே நான் தரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணலையே" பாடலும் அப்போது ஏகத்துக்கும் பிரபலம்.




நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் எண்பதுகளில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது வழக்கம் போலத் திரை ஜோசியப்படி அவரும் நாயகனாக நடித்து வெளிவந்த படம் என்ற ஒரேயொரு பெருமையைக் கொண்டது "பாய்மரக்கப்பல்". இந்தப் படத்தில் எஸ்.பி.சைலஜா பின்னணில் கோரஸ் இசைக்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள்" சென்னை வானொலியில் நீங்காது இடம்பிடித்த பாடல்களில் ஒன்று




கமல்ஹாசனின் ஆரம்ப காலம் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வேடம் பூண்ட போது சிவாஜி கணேசன் நாயகனாக நடித்த படம் "சத்தியம்". இந்தப் படத்தில் "கல்யாணக் கோயிலின் தெய்வீகக் கலசம்" பாடல் கே.வி.மகாதேவனின் பாடல்களில் அழகிய முத்து ஒன்று.




"கேளாய் மகனே கேளொரு வார்த்தை" உத்தமன் படத்தில் வரும் இந்தத் தத்துவப்பாடல் டி.எம்.செளந்தரராஜன், சுசீலா குரல்களில் உத்தமன் படத்திற்காக கே.வி.மகாதேவன் இசையில் வந்த இனியதொரு பாடலாகும்.

Monday, June 4, 2012

ஊமை விழிகளுக்குப் பின் ஆபாவாணனின் திரைப்பயணம்


கடந்த பதிவில் ஆபாவாணின் பேட்டியின் முதற்பாகத்தைக் கொடுத்திருந்தேன். அந்தப் பேட்டியின் இரண்டாவதும், இறுதிப்பாகமுமாக இந்தப் பதிவு அமைகின்றது.


ஆபாவாணின் முழுமையான பேட்டி ஒலி வடிவில் கேட்க



Download பண்ணிக் கேட்க


ஆபாவாணின் முழுமையான பேட்டி பாகம் 2 மட்டும் ஒலி வடிவில் கேட்க



பாகம் 2 மட்டும் Download பண்ணிக் கேட்க


எழுத்து வடிவில் தொடர்ந்து இந்தப் பேட்டியைத் தருகின்றேன்

கேள்வி- நீங்கள் எடுத்த பிரம்மாண்டமான படங்களிலே, குறிப்பாக ஊமைவிழிகள் போன்ற திரில்லர் போன்ற கதையம்சம் கொண்ட படமாகட்டும் அதற்குப் பின்னர் வந்த படங்களாகட்டும். பாடல்கள் அதிகமாக இருக்கும். அப்படி பாடல்களை அதிகப்படியாக நீங்கள் வைப்பதற்கு என்ன காரணம்?

பதில்- ரொம்ப எளிமையான காரணம். இந்திய திரைப்படங்களை பொறுத்தவரைக்கும் இசை
பாடல்கள் அப்பிடின்னு வர்றது ஒரு திரைப்படத்தினுடைய வெற்றிக்கும் அதனுடைய ஈர்ப்புக்கும் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். பாடல்கள் வெற்றியடைஞ்சுதுன்னா படத்தினுடைய 50 சதவீத வெற்றி வந்து அங்கே நிச்சயமாகிடும். இதை வந்து நம்ம சிறு வயசில இருந்து சினிமா ரசிகனாக இசை ரசிகனாக அதை விட இன்னும் சொல்லப் போனால் என்னுடைய இசை ரசனையை வளர்த்தது வந்து இலங்கை வானொலி தான். சின்ன வயசில பள்ளிக்கூடங்கள்ல படிக்கிற காலங்களில எல்லாம் சென்னை திருச்சி வானொலி தான் கேட்கும்;. நான் பிறந்த ஊர் ஈரோடு சேலம் நடுவே பவானிகுமாரபாளையம். அந்த ஊர்ல திருச்சி வானொலி தான் கேட்கும். அங்க வந்து ஒரு அரைமணி நேரம் தான் அதிகப்படியா திரைப்படப் பாடலகளை ஒலிபரப்புவாங்க. மற்ற நேரங்களில வேற வேற நிகழ்ச்சிகள் இருக்கும். அது அவ்வளவு உற்சாகமாய் இருக்காது.
இலங்கை வானொலி நிலையத்தைப் பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா விடியற் காலையில ஆரம்பிச்சுதுன்னா இரவு படுக்கப் போகும் வரைக்கும் புரோக்ரா ஸ் இருந்திட்டே இருக்கும். சினிமா பாடல்கள் வந்து கொண்டே இருக்கும்.

ஊர்ல இருந்த காலகட்டம் முழுக்க எந்த நேரமும் என் பெட்ல வந்து ஒரு டிரான்சிஸ்டர் இருந்திட்டே இருக்கும். காலையில ஆரம்பிச்சேனா இரவு வரைக்கும் பாடல்கள் கேட்டிட்டே இருப்பேன். அந்த இசையை கேட்டுக் கேட்டே வளர்ந்தது தான் அந்த கேள்விஞானம் தான் என்னுடைய இசையறிவு. அதற்கப்புறம் பார்த்தீங்கன்னா கிறிஸ்துவப் பள்ளிக்கூடத்தில சர்ச்சுல பாடறதுக்கு ஆட்களை தேடிட்டே இருந்தாங்க. ஒரு நாள் பாக்கியநாதன் என்று, என்னோட குருநாதர் அவரு. என்னை வரவைச்சு கொஞ்சம் பாடிக்காட்டு என்றுவிட்டு சுருதி பிடிக்கிறனா என்று டெஸ்ட் பண்ணினாரு. அந்தப் பாடல்களை கேட்டுக் கேட்டு சுருதி பிடிச்சேன். அப்ப ஓகே உனக்கு பாட வரும்னு சொல்லிட்டு சர்ச்சுல இருக்கிற பாடல்களை பாடுறதுக்கு என்னை தயார் பண்ணினாரு. அந்த பள்ளிக்கூடத்தில சர்ச்சில பாடின அனுபவமும் இலங்கை வானொலியில நான் கேட்ட பாடல்களும் தான் என்னோட இசையறிவு. இந்த ரெண்டும் தான் வளர்த்துவிட்டது. அந்த பேஸிக் தான் நான் படங்களுக்கு பாடல்கள் எழுத காரணம். நான் முழுமையாக புரிஞ்சுகிட்டது என்னன்னா படத்திற்கு பாடல்கள் ரொம்ப ரொம்ப முக்கியம். வெற்றிப் பாடல்கள் இருந்துதன்னா நம்முடைய வெற்றியில் பாதியை அங்கேயே நாம நிர்ணயம் பண்ணிடலாம்.
அப்படிங்கிறதால பாடல்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தேன். அதனால முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்ததனால நான் வந்து கண்ணதாசனுடைய தீவிர ரசிகன். நான் திரைத்துறையில நுழையிற அந்தக் காலகட்டத்தில அவர் உயிரோடு இல்ல.
அவர் இல்லாத அந்த காலகட்டத்தில ஏன் நாம எழுதக் கூடாது அப்படிங்கிற எண்ணம் வந்தது. அதுக்கு முன்னாடி பெரிசா கவிதை எழுதறதோ வேறு பாடல்கள் எழுதியோ பழக்கம் இல்ல. ஆனா எனக்கு நம்பிக்கை இருந்திச்சு. என்னால பாடல்கள் எழுத முடியும்னு. அப்பிடித் தான் எழுத ஆரம்பிச்சேன். கரெக்டா சொல்லனும்னா என்னோட உடன் நின்றவங்க எல்லாரும் ஐயையோ எதுக்கு இந்த வி ப் பரீட்சை? வேண்டாமே யாராவது பாடலாசிரியரைப் போட்டிட்டு கூட இருந்து வேலை வாங்கிக்கலாமே என்டாங்க. அதுக்கு நான் சொன்னேன். என்னால் முடியும்னு ஒரு எண்ணம் வந்து விட்டால் யார் தடுத்தாலும் விட மாட்டேன். இல்ல வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா நீங்க என்ன வற்புறுத்தினாலும் செய்ய மாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் என்னால பாடல்கள் எழுத முடியும்னு நினைக்கிறேன். நான் தான் பாடல்கள் எழுதப் போறேன் அப்பிடின்னு சொல்லிட்டு தான் பாடல்கள் எழுதினேன். எழுதி வெற்றியானதுக்கப்புறம் எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. அப்பிடின்னா இசையைப் பொறுத்தவரைக்கும் எனது அனுபவம் இசையைப் பொறுத்தவரைக்கும் எனது மதிப்பீடு அந்தப் பாடல்கள் எந்தளவிற்கு சினிமாவில இருக்கனும்கிற எண்ணங்களை வளர்த்து விட்டது இதுக்கு முன்னாடி நம்மட முன்னோர்கள் படங்களில ஏற்படுத்தின மிகப் பெரிய சாதனைகள் தான் நமக்கு உதவியது உதாரணத்துக்கு கண்ணதாசன்.


கேள்வி- ஆமாம். உண்மையிலேயே உங்களுடைய திரைப்படத்திலே இருக்கின்ற பாடல்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையிலே தனித்துவமான ஒரு முத்திரையை கொடுத்திருக்கும்.
குறிப்பாக ஊமைவிழிகள் படத்திலே...

(இடையிலே குறுக்கிட்டு சொல்கின்றார்.)
பதில்- ஆமாம் நீங்கள் முதலிலேயே கேட்டு நான் சொல்ல மறந்த விஷயம் தெரிந்தோ தெரியாமலோ நான் மனோஜ் கியானை பாம்பேல இருந்து கூப்பிட்டிருந்தேன் இல்லையா அவங்க என்னுடைய இந்த தமிழ் பாணி இசையமைப்பும் அவங்களுடைய வட இந்திய பாணியும் கலந்தவுடனே ஒரு சின்னதொரு வித்தியாசம் இருந்தது. மற்ற படங்கள்ல இருந்து வித்தியாசம் இருந்திச்சு. ஆனா அது மிகப் பெரிய உதவியாக இருந்தது. அந்த மாறுபட்ட இசைக்கும் ஒரு வித்தியாசம் இருந்திச்சு.

கேள்வி- நிச்சயமாக. இந்தப் படத்திலே அதாவது முதல் படத்திலே வந்த ஒரு பாடல் காலத்தைக் கடந்தும் குறிப்பாக போராட்டங்களிலே ஓயாது ஒலிக்கின்ற ஒரு பாடல். தோல்வி நிலையென நினைத்தால்... அந்தப் பாடலுக்கு காரணம் ஏதாவது சுவையான செய்தியோ அல்லது சுவாரசியமோ இருக்கின்றதா?


பதில்- நிச்சயமாக இருக்கு. ரெண்டு விஷயம். ஒண்ணு என்னான்னா நான் என்னோட கல்லூரிப் பருவத்துல படிச்ச அந்த காலகட்டத்துல இலங்கையில ஏற்பட்ட அந்த பிரச்சினைகள் எல்லாம் மிகப் பெரியளவில் என்னை பாதிச்சுது. அது எண்பதுகளினுடைய காலகட்டத்தில மிகப் பெரிய பாதிப்புக்களை எனக்கு ஏற்படுத்திச்சுது. அது உள்ளுக்குள்ளே அந்த உணர்வுகள் துடிச்சிட்டே இருந்திச்சு. அதற்கப்புறம் வந்து திரைத்துறைக்கு வர்றதுக்கு முன்னாடி படங்கள்ளாம் விநியோகப் பிரிவில நுழைஞ்சு ஏகப்பட்ட நட்டம். சொத்துக்களெல்லாம் இழக்கிற அந்த காலகட்டங்கள்ல மிகப் பெரிய போராட்டங்கள். இதனுடைய விளைவுகள் தான் அந்தப் பாடல். அந்த டியூன் போட்ட டைம்ல வந்து முதல் வரி வந்தப்போ அந்த டியூன் அமைச்சப்போ முதல் வரியோட தான் அந்த ரியூன் போட்டேன்.
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா அப்பிடிங்கிற அந்த வார்த்தைகளோடு சேர்ந்து தான் டியூனே போட்டேன். அதற்கப்புறம் வரிகள் தான் பின்னாடி எழுதினேன். அந்தப் பாடல் இசையமைக்கப்பட்டபோதும் அந்த வரிகள் எழுதப்பட்ட போதும் என் மனதில முழுக்க இருந்தது என்னோட போராட்டங்களுக்கு மிகப் பெரிய விஷயமாக இருந்தது அந்த இலங்கையில ஏற்பட்ட அந்த நிகழ்வு தான். அது தான் பாடல் பதிவின் போது கியான் வர்மா கிட்ட சொன்னது இப்பவும் பசுமையாக ஞாபகத்திற்கு வருகுது. ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாது. வார்த்தைகளும் பாடல்களும் இசையமைப்பும் பிற்காலத்தில் படத்துக்கு எப்பிடி இருக்கப் போகுதோ ஆனால் இலங்கையில இருக்கிற எங்கட சகோதர சகோதரிகளுக்கு மிகப் பெரிய உற்சாகமூட்டக் கூடிய பாடலாக காலத்தைக் கடந்தும் நிற்கும் அப்பிடின்னு அன்றைக்கு நான் சொல்லியிருந்தேன்.
அது இன்னைக்கு நீங்க கேள்விகள் கேட்கிறப்போ அப்பிடி நடந்திட்டு இருக்குன்னு சந்தோசப்படறேன்.

கேள்வி- கண்டிப்பாக. அண்மையிலே திரைப்பட இயக்குநர்கள் சங்க விழாவிலே இந்தப் பாடலைப் பாடிய பொழுது அதைப் பார்த்த பொழுது உண்மையிலேயே மெய்சிலிர்த்தது ஏனென்றால் இன்றைய யுகத்திலே எத்தனையோ பாடல்கள் வந்திருக்கின்றன. ஆனால் 25 வருடங்களுக்கும் பிறகும் அந்தப் பாடல் ஒரு அரங்கத்திலே அரங்கேறியிருக்கின்ற அந்த நெகிழ்வான அந்த தருணங்கள் நிச்சயமாக உங்களுக்கும் மட்டுமல்ல. ரசிகர்களுக்கும் ஒரு கவனத்தை ஈர்த்த ஒரு விடயம்.
அன்றைய காலகட்டத்திலே நீங்கள் ஊமைவிழிகள் திரைப்படத்தின் மூலம் ஒரு பிரமாண்டத்தை காட்டி தொடர்ச்சியாக உழவன் மகன் செந்தூரப்பூவே என இப்படி பல படங்களை வெற்றிப் படங்களாக கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய நாயகர்கள் என்று எடுத்துக் கொண்டால் விஜயகாந்த் மற்றும் அருண்பாண்டியன், ராம்கி ஒரு படத்திலே சத்தியராஜ். இப்படி ஒரு சுற்றுக்குள்ளே இருக்கின்றார்கள். நிச்சயமாக அன்றைய காலகட்டத்திலே உங்களுக்கு முன்ணணி நடிகர்களின் கவனமோ அல்லது அழைப்புக்களோ உங்கள் மீது பட்டிரு க்குக்கும் தானே?


பதில்- நிச்சயமாக, உங்களுக்கு முதலே நான் சொன்ன மாதிரி ஊமைவிழிகள் படத்தை எடுதப்போ விஜயகாந்த் எவ்வளவோ ஒத்துழைப்பு கொடுத்தாருன்னு சொன்னேன். அன்றைக்கு பரபரப்பான மார்க்கெட்ல இருக்கிற
ஒரு நடிகர் டைரக்டர் சொல்றத அப்பிடியே கேட்டு செய்றது என்டுறது வந்து பெரிய விசயமாக இருந்திச்சுது. அந்த ஒத்துழைப்பு விஜயகாந்த்ட்ட இருந்து மிகப் பெரியளவில கிடைச்சதனால என்னோட சக்சஸ்க்கு அவராயிருந்தாரு. இது நம்பர் ஒன். அடுத்தது வந்து எல்லோருடனும் பணிபுரியக் கூடிய சூழ்நிலை வந்தப்போ கரெக்டா சூழ்நிலைகள் வந்து ஒத்து வரல. உதாரணத்துக்கு சொல்றதுன்னா நம்ம ரஜனிகாந்த் அவர்களோட மூணு சந்திப்பு நடந்திச்சு. மூன்று சந்திப்பிலயும் வந்து மூணு விதமான காரணங்களுக்காகவும் வந்து ஒரு ஒத்துக்க முடியாத சூழ்நிலை ஒன்று ஏற்பட்டிச்சு.

முதல் சூழ்நிலை வந்து மன்னன் படப்பிடிப்பு சூழலில, மன்னன் படப்பிடிப்புக்கு முன்னாடியே ஒரு முறை அதிசய்பிறவி சூட்டிங் டைம்ல. சார் நாம இந்தப் படம் பண்ணுவோம்னு சந்திப்பு நடந்திச்சு. சந்திப்பு நடந்தப்போ என்னாச்சுன்னா நான் வந்து படத்தை இயக்க முடியாது. படத்தை தயாரிப்பேன். திரைக்கதை வசனம் இணை திரைப்பாடல்கள். இதுக்கு வேற இயக்குநர் வைச்சிருக்கலாம். பிரதாப் ஐ போடலாம்னு சொன்னேன். பண்ணலாம் என்கிற மாதிரி முடிவெடுத்து அதற்கான எண்ணத்தில இருந்திட்டு இருக்கிறப்போ அப்ப அவரும் வேற படப்பிடிப்பில இருந்திட்டு இருந்தாரு. நானும் மற்ற படங்களின்ர வேலைகளில இருந்தேன். அதுக்கப்புறம் மன்னன் படப்பிடிப்பில சந்திக்கனும்னு செய்தி அனுப்பிச்சாரு. நான் போய் அங்க மீட் பண்ணினேன். சார் பாலசந்தருக்கு ஒரு படம் பண்ணுவோம். நான் நடிக்கறேன். நீங்க டைரக்ட் பண்ணுங்க அவர் புரொடியூஸ் பண்ணுவாரு என்று சொன்னாரு. அப்ப அந்தக் காலகட்டத்தில என்னோட முடிவு என்னவாக இருந்ததுன்னா வெளிப்படங்களை நான் ஒத்துக்கலை. சொந்தப் படங்களை தவிர நான் யாருக்கும் வேலை பார்க்கலை. இத ஒரு பாலிசியாக வெளிப்படங்களை நான் பண்ணலை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் முக்கியமாக நினைக்கிறது என்னன்னா எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதும் படம் எடுக்கிறதும் பொதுவாக யார் எடுத்தாலும் பண்ணக் கூடியது. அதைவிட தயாரிக்கிற பாலசந்தருக்கும் கண்டிப்பா ஒரு லாபம் இருக்கனும். டைரக்ட் பண்ணுற எனக்கும் வந்து ஒரு பெனிஃபிட் இருக்க ணும். அதால எனக்கொரு பெனிஃபிட் எடுத்திட்டு தயாரிப்பாளரான பாலசந்தருக்கும் லாபத்தை கொடுத்திட்டு அது போக வந்து படத்திற்கு நம்ம என்ன செலவழிக்கிறம்னு பார்த்தம்னா பட்ஜட் வந்து சரியாய் வரும்னு தோணலை
.
அதால வந்து என்னோட படத்திற்கு நீங்க கால்ஷீட் கொடுத்தீங்கன்னா என்னுடைய சம்பளமும் எனக்கு தேவையில்லை. முழுக்க முழுக்க படத்தை எப்பிடி பண்ணலாமோ அப்பிடி பண்ணலாம். அந்த மாதிரி காலகட்டம் வரும் போது சொல்லுங்க. அப்ப கால்ஷீட் கொடுக்க முடியும்னு சொனேன். அப்ப லாஜிக்கலா விளக்கிச் சொன்னேன். சரி அப்ப அந்தக் காலகட்டம் வரும் போது நாம சேர்ந்து செய்வம்னு விட்டிட்டோம். அந்த மன்னன் படம் வந்து தொண்ணூறு ஜனவரியில் ரிலீஸ் ஆச்சு. அந்த ஜனவரி கடைசியில மீட் பண்ணுவோம்னு சொன்ன மாதிரி மீட் பண்ணினம். அப்ப சொன்னாரு சார் உங்கட அதிலயே படம் பண்ணுவம் எனக்கு மூணு மாசத்தில படம் முடிக்கனும்னாரு. நான் சொன்னேன். அப்பிடி படம் என்னால பண்ண முடியாது. ஏன் மூணு மாசத்தில உங்களால படம் பண்ணத் தெரியாதா அப்பிடின்னாரு. பண்ணத் தெரியும் பட் பண்ண இஷ்டப்படலை என்றேன். எனக்கு ஆறு மாசம் காலகட்டம் வேணும். அப்பிடின்னா தான் ஒரு சிறப்பாக ஒரு படம் கொடுக்க முடியும். ஏன்னா அப்ப ஒரு பட சூட்டிங் நடந்திட்டு இருந்த காலகட்டம். ராம்கி அருண் பாண்டியன் என்று ரெண்டு நடிகர்களை வைச்சிட்டு பிரமாண்டமாக ஒரு படம் எடுத்துக்கிட்டிருக்கோம். நம்ம ரெண்டு பேரும் இணையிறதுன்னு சொன்னா எதிர்பார்ப்பு ஜாஸ்தியிருக்கும். அதால அதை ஈடுகட்டக் கூடிய காட்சிகளும் கதையும் இல்லைன்னா பேர் கெட்டுப் போயிடும். அதனால அப்பிடி ஒரு படம் நாம செய்ய வேணாம்.
ஆறுமாத காலம் உங்களால எப்ப தர முடியும்னு நினைக்கிறீங்களோ அப்ப சொல்லுங்க. அப்ப நாம சேர்ந்து பண்ணுவோம். மூணு மாதத்திலே படம் பண்ண விருப்பப்படல. அப்பிடின்னு சொல்லிட்டு வந்திட்டேன். அதுக்கப்புறம் தான் அண்ணாமலை படத்தை சுரேஷ்கிருஸ்னா டைரக்சன்ல பாலசந்தர் சார் தயாரிக்க நடித்தாரு. அந்த நிகழ்வு அப்பிடி நிகழ்ந்திச்சு. அத மாதிரி மூணு சந்திப்பு நடந்தப்தப்புறமும் மூணு சந்திப்பும் வேற வேற காரணங்களுக்காக நடக்காம போய்ச்சு.
அதைப் போல செந்தூரப் பூவே படமும் சத்தியராஜ்க்கு தான் பரிந்துரை பண்ணினேன். அதை வேற ஒரு தயாரிப்பாளர் தயாரிக்கிறதாக இருந்தது. என்னோட ஒரு நண்பர் டைரக்ட் பண்றாங்கன்னு அவங்க வந்து கேட்டாங்க. இசை செய்து கொடுங்கன்னு கேட்டாங்க. அதில ஒரு இணை இசையமைப்பாளராக தான் அந்தப் படத்தில பங்கெடுத்தேன். அவங்களுக்காக வந்து மியூசிக் பண்ணிக் கொடுத்தன். பாடல்கள் வந்திச்சு. அப்புறம் நடிக்கிறவங்க பிக்ட்ஸ் பண்ணிக் கொடுங்கன்னு கேட்க சத்தியராஜ் கூடப் பேசலாமே என்று நான்தான் அவரிட்ட போய் பேசினேன். அவர் சொன்னாரு இல்லை நீங்க பண்ணுற படம்னா கேளுங்க வந்து நடிக்கறேன். வேற யாரும்னா நான் விருப்பப்படல என்று சொல்லிட்டாரு. என்னடா இவரு இப்பிடி சொல்லிட்டாரு என்றுவிட்டு திரும்ப ராவுத்தரிடம் பேசினேன். நீங்க சார் பேசுங்க நீங்க சொன்னா அவரு பேச்சைத் தட்டமாட்டாரு எண்டாரு. திருப்ப வேற வழியில்லாம விஜயகாந்தோட பேசினேன்.

அப்ப தழுவாத கைகள் படப்பிடிப்பு நடந்திட்டு இருந்திச்சு. ஏவி எம் ஸ்ரூடியோவில. நேரா அங்க போனேன். போய்ட்டு அவர் அந்த ஷூட்டிங் இடைவெளியில் வெளில வந்தவுடன சொன்னேன். நான் இப்ப ஒரு விசயம் கேட்கப் போறேன். நீங்க ஓகே சொல்லாம அடுத்த ஷார்ட்டுக்கு உள்ள போக விட மாட்டேன் என்றேன்.
நண்பரோட படம், அதுக்கு வந்து பாடல்கள் பண்ணிக் கொடுத்திருக்கேன். அந்தப் படத்தை என்னோட நண்பர்கள் பண்றாங்க. அதால நீங்க அதில நடிச்சுக் கொடுக்கனும் என்றேன். சொன்னவுடன உடனடியா அவர் சொன்னது என்னன்னா நான் அந்தப் படத்தில பண்றேன் சார். பட் ஒரு கண்டிஷன். நான் கொடுக்கிற டேட்டுக்கு
எப்பெல்லாம் ஷீட்டிங் போறனோ அப்பல்லாம் நீங்க அங்க இருக்கணும். இது சம்மதமான்னா நான் அந்தப் படத்தில நடிக்கிறேன்னாரு. அதுக்கு நான் ஒத்துகிட்டு ஓகே நான் இருக்கிறேன் நீங்க பண்ணுங்க என்றேன். அப்பிடி அவர சம்மதிக்க வைச்சு நான் பண்ணிக்க நினைச்சேன். அதுக்கப்புறம் அந்த தயாரிப்பாளருக்கோ, அந்த இயக்குநருக்கோ
பிரச்சினை ஏற்பட்டு அந்தப் படம் நின்னு போய்ச்சு. பட் நல்ல பாடல்கள் நின்னு போய்ச்சே என்றுவிட்டு அந்த தயாரிப்பாளர் நல்ல திறமைசாலியாக இருந்ததாரு. அந்தப் படத்தை நீங்க விலை கொடுத்து வாங்கிக்குங்க என்றார்.அந்தப் பாடல்கள் மாத்திரம் எனக்கு தேவை. அந்தப் பாடல்களை வாங்கிக்கிட்டு விஜயகாந்துக்கு இந்த புரெஜெக்டை பண்ணினேன். அப்பிடித் தான் செந்தூரப் பூவே படம் எடுக்கப்பட்டது. அந்த நண்பர்களுக்கு பாடல்கள் பண்ணிக் கொடுத்து அற்புதமான பாடல்கள் வீணாகிடுமே என்று சொல்லிட்டு அந்தப் பாடல்களுக்காக எடுக்கப்பட்டது தான் செந்தூரப்பூவே!

இப்பிடி ஒரு காலகட்டத்திலே நீங்க கேட்டீங்களே வேற வேற நடிகர்களை வைச்சு அப்பப்ப பண்ணலாம்னு நினைச்சு எடுத்த முயற்சிகள் எல்லாம் பல காரணங்களால அப்பிடியே தள்ளித் தள்ளி வேற மாதிரிப் போய்ச்சு. ராம்கியும் அருண் பாண்டியனும் என்னோட திரைப்படக் கல்லூரியில படிச்சவங்க. நான் வந்து இயக்கத்துறையில படிச்சிட்டு இருந்தப்போ அவங்க நடிப்புத்துறையில படிச்சிட்டிருந்தாங்க. அங்க ஏற்பட்ட நட்பு அது. அதே காலகட்டத்தில ரகுவரன், முரளிகுமார்னு சொல்லிட்டு மற்றது 'கங்கா யமுனா சரஸ்வதி' சீரியல்ல பார்த்திருப்பீங்க கதாநாயகனாக நடிச்சாரு. இவங்கள்லாம் ஒரே சமயத்தில படிச்சிட்டு இருந்த காலகட்டம். முதல்ல வந்து ரகுவரன தான் நினைச்சேன் நான். அவரு என்னோட சேர்ந்து பண்றதில ரொம்ப விருப்பமாக இருந்தாரு. அப்ப எங்களுக்குள்ள சில முரண்பட்ட கருத்துக்கள் ஏற்ப்படவே ரகுரவனை விட்டிட்டு ராம்கி, அருண் பாண்டியன் இவங்களை வைச்சு பண்ண ஆரம்பிச்சேன்.
கரெக்டா சொல்லனும்னா ராம்கியைத் தான் முதன் முதலாக தேர்ந்தெடுத்தன். இரவுப் பாடகன் என்று ஒரு படம் சொன்னேனில்லையா அந்தப் படத்திற்காக தேர்ந்தெடுத்தேன். பட் அந்தப் படம் தள்ளிப் போய் ஊமைவிழிகள் ஆரம்பிச்சப்போ அதில அருண் பாண்டியனை பயன்படுத்திக்கிட்டேன். அப்பிடி நாங்க ஒண்னா படிச்சதால ஒண்ணோட ஒண்ணா பண்ணினம். அப்புறம் முரளிகுமாரை டப்பிங் துறையில பயன்படுத்தினேன், அருண் பாண்டியனுக்காக. ஏன்னா அவரு முழுக்க முழுக்க திருநெல்வேலியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் அப்பா மில்ட்ரில இருந்தாரு அதால வட இந்தியாவில இருந்ததால அவருக்கு ஹிந்தி தான் வரும். தமிழ் சுத்தமா பேச வராது அவ்வளவு தான். ரொம்ப தடுமாறி பேசிட்டு இருந்த காலகட்டம். அதனால அவருக்கு டப்பிங் குரல் கொடுக்கிறதுக்காக முரளிகுமார தயார்பண்ணினம். அதற்கப்புறம் பார்த்தீங்கன்னா டப்பிங் துறையில இன்றுவரைக்கும் முன்ணணி டப்பிங் கலைஞராக இருந்திட்டுருக்காரு. அதுக்கப்புறம் அவர படங்களில நடிக்க வைச்சேன். செந்தூரப் பூவேயில ஊமையனாக ஒரு கரெக்டர் பண்ணியிருந்தாரு.



கேள்வி- இந்த காலகட்டத்திலே அதாவது தாய்மார்களை குறி வைத்து திரைப்பட விளம்பரம் செய்த காலகட்டத்திலே முற்றுமுழுதாக இளைஞர்களுக்கான என்றொரு பாணியிலே இணைந்த கைகள் திரைப்படத்தை நீங்கள் உருவாக்கியிருந்தீர்கள். அந்தப் படத்தினுடைய வெற்றி எவ்வாறு அமைந்திருந்தது?


பதில்- இதை வந்து பலமுறை பல பேருக்கு நான் குறிப்பிட்டு இருக்கேன். இணைந்த கைகள் திரைப்படம் அவ்வளவாக சரியா போகலை என்றொரு எண்ணம் பல பேருக்கு இருந்திச்சு. அதற்கு காரணம் என்னான்னா நாம அதை முறையாக வெளிப்படுத்த தவறிட்டோம்னு நினைக்கிறேன். எங்களுடைய வெற்றிப் படங்களில அதுவும் வந்து மிகப் பிரமாண்டமான வெற்றிப் படம் தான். பல சாதனைகளை நிகழ்த்தியது அது.

என்.கே.விஸ்வநாதன் என்னோட நண்பர்.டைரக்டராகவும் கமெராமேனாகவும் வைச்சு அந்தப் படம் பண்ணப்பட்டது. அந்தப் படத்திற்கு எனக்கு வந்து மிகப் பெரிய சோதனை வந்திச்சு. முதல் படங்கள் வெற்றிப் படமாக இருந்திச்சு. ஆனால் இந்தப் படம் வந்து வெற்றி குடுக்க முடியுமா அந்த பீல் இல்லையே! சேம் கரெக்டர் இல்லையே அப்பிடிங்கிறதில வந்து எனக்கு வியாபார ரீதியாக பெரிய தடுமாற்றம் இருந்திச்சு. ஆனால் செந்தூரப்பூவே வெற்றிக்குப் பிறகு அதை வந்து முறியடிக்க முடிஞ்சுது.
ஆனால் அந்த மூணு வெற்றிக்கப்புறம் இவங்கள வைச்சப்புறம் தான் விஜயகாந்த் என்ற மிகப் பெரிய நடிகருக்கு கால்ஷீட் கொடுத்தாங்க. அதால ராம்கி; அருண் பாண்டியனை வைச்சு எப்பிடி வெற்றிப் படம் கொடுக்க முடியும்னு சொல்லி திரும்பவும் எனக்கு அது ஒரு சோதனைக் கட்டமாய் வந்திச்சு. எனவே மீண்டும் எங்களை நிரூபிச்சாகனும் என்ற காலகட்டம் வந்தது. அதுக்கப்புறம் மிகப் பெரிய வெற்றிப் படமாக கொடுத்தாகனும் என்ற கட்டாயம் ஏற்பட்டு அந்த திரைப்படத்தை தயாரிச்சோம். அது என்ன எதிர்பார்ப்போட செய்யப்பட்டதோ அந்த எதிர்பார்ப்பை முழுமையாக அந்த படம் ஈடுகட்டிச்சு. அது மிகப் பெரிய பிரம்மாண்டமான வெற்றிப் படங்கிறதில சந்தேகம் இல்ல. அது பல சாதனைகளை ஏற்படுத்திச்சு.

கேள்வி- அதாவது சாதனைகள் என்று சொல்லும் போது அவற்றையும் சொன்னால் இந்த வேளையிலே சிறப்பாக இருக்கும்.

பதில்- சாதனைகள். உதாரணத்துக்கு சொல்லனும்னா கோயம்புத்தூருக்கு பக்கத்தில மேட்டுப்பாளையம் என்ற ஒரு ஊரு இருக்கு. அந்த ஊர்ல அதற்கு முந்திய அதிகபட்ச ஹவுஸ்புல் காட்சிகள் ஓடுனது வந்து நம்ம ரஜனி நடிச்ச ராஜாதிராஜா. ஆர் சுந்தரராஜன் இயக்கியிருந்தாரு. நம்ம இளையராஜா தயாரிப்பாளராக பண்ணின படம் அது. அது தான் அதுக்கு முன்னாடி அரங்கு நிறைந்த காட்சிகள் ஓடின படம் என்ட சாதனையை பெற்றிருந்தது. அந்த சாதனைகளை முறியடிச்ச படம் இந்த இணைந்த கைகள் படம். மேட்டுப்பாளையம் சிவரஞ்சினி தியேட்டர்ல இந்த ரெக்கார்ட பெற்றிச்சு. அதே மாதிரி நம்ம பழனி முருகன் இருக்கிற அந்த ஊர்ல. இதற்கு முன் கரகாட்டக்காரன் மிகப் பெரிய வசூல் சாதனை ஏற்படுத்திச்சு. அந்த சாதனையையும் அந்த இணைந்த கைகள் படம் முறியடிச்சுது. அதைத் தவிர இணைந்த கைகள் திரைப்படம் தான் உலக மார்க்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த முதல் தமிழ் படம். நிறைய பேருக்கு அந்த செய்தி தெரியாது. நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஜங்கரன் இன்டர்நேசனல் நம்ம லண்டனில இருக்கிற கருணாமூர்த்தி அவர் தான் அதனுடைய நிறுவுனர். அவரு நம்மட செந்தூரப்பூவே பிலிம வந்து ஒரேயொரு பிரிண்ட் மாத்திரம் லண்டனுக்கு போட்டார். ஒரேயொரு பிரிண்ட் கிடைக்குமா ஒரு சோ ஆரம்பிக்கப் போறேன்னார். அதுக்கப்புறம் ஒருமுறை பேசிக்கிட்டு இருந்தப்போ கேட்டாரு ஆதி காலத்தில நம்ம எம்ஜிஆர் திரைப்படங்கள் சிவாஜி திரைப்படங்கள் நிறைய இலங்கையிலும் மலேசியா சிங்கப்பூர்ல வந்து நேரடியாக திரையரங்குகளில வெளியிடப்பட்டது. அதொரு காலகட்டம். அதுக்கப்புறம் என்னாச்சுன்னா திரையரங்குகளில வெளியிடுறது எல்லாம் போய், வெறும் வீடியோ ரிலீஸ் மாத்திரம் தான்.
உலகம் முழுவதும் வெறும் வீடியோவுல தான் நடந்திட்டு இருந்திச்சுது. அந்தக் காலகட்டத்தில தான் நாங்க ஊமைவிழிகள் உழவன் மகன் மற்றும் செந்தூரப்பூவே அந்த காலகட்டம் எல்லாமே வீடியோவுல தான் ரிலீஸ் ஆய்ச்சு.
அப்பத் தான் நம்ம கருணாமூர்த்தி சொன்னாரு ஏன் நாங்க தியேட்டர்ல போய் ரிலீஸ் பண்ணக் கூடாதுன்னு. உலகம் முழுவதும் திரையரந்குகளில வெளியிடலாம்னு நினைக்கறோம் நீங்க என்ன நினைக்கிறீங்க என்டாரு. சொல்லுங்க சார் நாம பிளான் பண்ணலாம்னு சொன்னேன். அதுக்கப்புறம் வந்து அந்த திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடனும் என்ட முடிவோட எடுக்கப்பட்டது. வெளியிடப்பட்டது. வெளியிடுற அன்னைக்கு முழு பக்க விளம்பரத்தில இன்று முதல் உலகம் முழுவதும் வெளியிடும் என்டு சொல்லிட்டு உலகம் பூரா இருக்கிற தியேட்டர்ல ரிலீஸ். மலேசியாவில கோலாலம்பூர் என்ற தியேட்டர். சிங்கப்பூர்ல லண்டன்ல கனடாவுல என்னென்ன தியேட்டர்னு வெளிவர்ற தியேட்டர்ன்ட பெயர் எல்லாத்தையும் போட்டு விளம்பரம் பண்ணியிருந்தம். திரும்பவும் வந்து திரையரங்குகளில வெளியிடுறது என்ற ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் இணைந்த கைகள் திரைப்படம் தான். அது ஒரு மிகப் பெரிய பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. அந்த வெற்றியைத் தொடாந்து இன்னைக்கு வரைக்கும் உலகம் முழுவதும் திரைப்படங்கள் வந்து திரையரங்குகளிலே வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது ஒரு சாதனைன்னு சொல்லாம்.
அதைத் தொடர்ந்து பார்த்தீங்கன்னா மும்பையில தமிழ் படங்களைப் பொறுத்தவரைக்கும் காலம் போக ஒரு வாரம் ரெண்டு மூணு நாலு வாரம் போக ஒரு காட்சிகள் தான் போடுவாங்க. அப்பிடி இருந்த காலகட்டத்தில 84 நாட்கள் அந்தப் படம் போய்ச்சு. எனவே அது மிகப் பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்திச்சு. வசூல் சாதனையை குறிப்பிடும் போது அதனுடைய வெளியீட்டைப் பற்றியும் குறிப்பிடனும். அது எந்தளவிற்கு எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருந்திச்சு என்றது தெரியும்னு நினைக்கிறேன்.
பம்பாய்ல வந்து ட்ரைவ் இன் தியேட்டர் ஒண்ணு இருந்திச்சு, இப்ப அது இல்ல. அந்த ட்ரைவ் இன் தியேட்டர்ல ஹிந்திப் படங்கள் தான் ரிலீஸ் ஆகும். அல்லது ஆங்கிலப் படங்கள். அதில வந்து பம்பாயை சேர்ந்த நம்பி என்பவரு படங்கள் வெளியிடுபவர். அவர் சொன்னாரு, நம்ம இணைந்த கைகள் திரைப்படத்தை ட்ரைவ் இன் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன் என்றார். நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்கன்னாரு. இந்த டிரைவின் தியேட்டர்ல ரெண்டு காட்சிகள். மாலைக்காட்சி. இரவுக்காட்சி. பகல் காட்சி 60 ரூபா திரையரங்கில அப்படின்னு முடிவு பண்ணி விளம்பரம் பண்ணியிருந்தாரு. காலைக்காட்சி போனவுடனே வந்து மிகப் ஷெபரிய வரவேற்பாயிடுச்சு. அன்று மாலைக்காட்சி டிரைவினுக்கு வந்து எக்கச்சக்கமான கூட்டம். கிட்டத்தட்ட நாலாயிரம் பேருக்கு மேல திரண்டு மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டு அந்த டிரைவின் தியேட்டரையே அடித்து நொறுக்கிட்டாங்க. அதற்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் அந்த தியேட்டர் ஓப்பனாகலை. அந்த டிரைவின் தியேட்டர்ல முதன் முதலில வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படம் இந்த இணைந்த கைகள். வெளியிட்ட அன்றே அதை மூடுற மாதிரி சூழ்நிலை ஏற்பட்டிச்சு. அவ்ளோ பெரிய வரவேற்போட அந்தப் படம் பம்பாய்ல வெளிவந்திச்சுது. இது வந்து ரிலீஸ் நேரம் ஏற்ப்பட்ட நிகழ்வு. அதே சமயம் வசூலிலயும் சாதனை பண்ணிச்சுது. அந்தப் படத்தினுடைய வெற்றி மிகப் பெரிய வெற்றியாக இருந்திச்சு.அந்த ரிசல்ட் பல வகையில எனக்கு தாக்கத்தை ஏற்படுத்திச்சுது ஆனா அதை நான் பயன்படுத்திக்கலைல. உதாரணத்திற்கு சொல்லனும்னா கிட்டத்தட்ட வந்து 44 படங்கள் ஒரு வருட காலகட்டத்தில வெறும் இசையமைப்பாளராக என்னை நெருங்கினாங்க. சொல்லப் போனால் எல்லா நடிகரோட படங்களும். ஒரு சிலரைத் தவிர.
ரெண்டு படங்கள் தான் வெளிப்படங்களுக்கு இணை இசையமைப்பாராக பணி புரிந்தேன். ஒண்ணு "தாய்நாடு" மற்றது "அண்ணன் என்னடா தம்பி என்னடா" இந்த ரெண்டு படங்கள் தான். அது நட்புக்காக பண்ணினது ரெண்டுமே. அதால வெளியில ஒரு கமர்ஷியல் ரீதியாக எதுவும் கமிட் பண்ணிக்கவில்லை. அதை ஏற்படுத்திக் கொடுத்தது இணைந்த கைகள் திரைப்படம் தான்.
அதே போல இணைந்த கைகள் படத்தோட வெற்றி எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திச்சுன்னா நம்ம விஜயகாந்தும் ராவுத்தரும் எனக்கு சொல்லிட்டாங்க. சார் உங்களுக்கு ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. அதால உங்களை கதாநாயகனாக போட்டம்னா ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அப்பிடின்னு சொல்லி பெரிய இக்கட்டை ஏற்படுத்திட்டாங்க. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நான் அப்செட்டான மாதிரி சுற்ற்றிக்கொண்டிருந்தேன்.
ராவுத்தர் என்ன சொல்லிட்டாருன்னா சார் கோட்டு போட்டுக்கிறீங்க, கையில நாயை பிடிச்சிட்டு நடக்கிற மாதிரி முழுப்பக்க விளம்பரம் சார், படத்தோட டைட்டில் சொல்லிட்டிருந்தாங்க "ஹானஸ்ட் ராஜ்" இது தான் படத்தோட டைட்டில். நீங்க தான் ஹீரோ ராவுத்தர் பிலிம்ல ஒரு அறிவிப்பு ஒண்ணு கொடுக்கிறோம்ன்னாரு. இன்னொரு முறை இதை பற்றி பேசுறதன்னா இந்த ஆபிசுக்கே நுழைய மாட்டேன்னு சொல்லிட்டு அந்தப் பக்கமே போகலைன்னு வைங்களேன். அப்பிடி ஒரு மிகப் பெரிய இமேஜ்ஜைக் கொடுத்தது. இந்த இணைந்த கைகள் திரைப்படம் தான். அவ்வளவு தூரம் பாதிச்சது.


கேள்வி- ஊமை விழிகள் படத்திலே மூங்கில் கோட்டைன்னு ஒரு படம் உருவாகுவதாக சொன்னீர்கள் அதைப் பற்றி பின்னர் வராமலேயே போய் விட்டது. அதைப் பற்றி எதுவும் குறிப்பிடலாமா?

பதில்- அதுக்கு குறிப்பிட்ட காரணங்கள் பல காரணங்கள். அதுல ஒண்ணை உங்களோட பகிர்ந்துக்கிறதில தப்பில்ல என்று நினைக்கிறேன். படங்களை வந்து நீங்க வெற்றிப் படங்களாக கொடுத்திட்டு இருக்கிற வரைக்கும் உங்களுக்கு எல்லாமே சுமுகமாகவும் வெற்றியாகவும் நடந்திட்டு இருக்கும். என்றைக்கு நீங்க வந்து தோல்விப் படங்கள் கொடுக்க ஆரம்பிக்கிறீங்களோ உங்களுக்கு எதிராக இருக்கிற எல்லா விசயங்களும் மொத்தமாக கிளம்பி வந்திடும் என்பது மாதிரி முதல் தோல்விப்படம் காவியத்தலைவன் கொடுத்ததில இருந்து பிரச்சினைகள் ஆரம்பமாச்சு. அது ஆரம்பமாச்சுதுன்னா எனக்கும் விஜயகாந்த்க்கும் இருந்த புரிதல் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. சொல்லப் போனால் அதற்கப்புறம் கொஞசம் விலகியே இருந்தேன்னு வைங்களேன். அப்ப அந்த மூங்கில் கோட்டை சம்பந்தமாக பேசறதுக்கு எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கலை. நான் எதிர்பார்த்த மாதிரி கிடைக்கேல்லை. ஒரு பக்கம் வணிக ரீதியான பிரச்சனைகள். இன்னொன்னு இந்த மாதிரியான ஒத்துழைப்பெல்லாம் கிடைக்காமல் இருந்திச்சு.

ஆனால் அத்தனை பிரச்சனைகளையும் தாண்டி இப்ப உங்க மூலமாக தான் அறிவிப்பு பண்றேன். சில விஷயங்களை நாங்களே பார்க்க முடியாத விசயங்களை நீங்கள் இங்க ஆஸ்திரேலியாவில இருந்திட்டு எந்தவளவுக்கு மிக நுணுக்கமாக கவனிச்சிருக்கீங்கன்னா ரொம்ப சந்தோசமாயும் இருக்கு. நான் திரைத்துறையில நுழைஞ்சு 25 வருசம் ஆச்சு. இந்த 25வது வெள்ளிவிழாவில அந்த மூங்கில் கோட்டை நூறு சதவீதம் வெளிவரும்.

கேள்வி- ஓ. மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட காலமாக உங்களுடைய ரசிகனாக இருந்து பார்க்கின்ற அளவிலே எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் படத்தினுடைய நடிகர்க்ள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரங்கள் குறித்து நீங்கள் முடிவெடுத்து விட்டீர்களா? இல்லை இன்னும் அது முற்தயாரிப்பில் தான் இருக்கிறதா?


பதில்- அந்தப் படத்தை நான் தான் இயக்கப் போகின்றேன். ஒரு இயக்குநராக அந்தப் படத்தில வெளிவரப்போறேன். அந்தப் படத்தினுடைய மற்ற விடயங்களை நான் உங்களுக்கு அடுத்து நான் தெரியப்படுத்தறேன். அதாவது 25 வருடங்களுக்கு முன்னால் ஊமைவிழிகள் திரைப்படம் முதன் முதல் எடுக்கப்பட்ட பொழுது என்ன ஒரு வேகத்துடன் ஒரு உத்வேகத்துடன் ஒரு பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தனும்னா ஒரு சின்னதொரு புள்ளியை ஏற்படுத்தனும் அது ஓரளவிற்கு ஆரம்பிக்க முடிஞ்சதுன்னு நான் நினைக்கிறேன். அடுத்த கட்டத்திற்கான ஒரு பயணமாக இந்த மூங்கில் கோட்டை திரைப்படத்தின் மூலமாக நிச்சயமாக ஏற்படுத்த முடியும்னு நம்பறேன்.


கேள்வி- உண்மையிலேயே இந்த 25 வருட காலத்திலே ஆபாவாணன் என்ற கலைஞர் தன்னுடைய வெளிப்பாடுகளை தான் சொல்ல வருகின்ற செய்திகளை தன்னுடைய திரைப்படத்தின் மூலமாக தான் காட்டி வந்தார். பரபரப்பான பேட்டிகளோ அல்லது ஊடகம் மூலமான அறிக்கைகளோ இதுவரை நீங்கள் வெளிக்காட்டவில்லை. உங்களுடைய படங்கள் தான் நீங்கள் யார் என்பதை காட்டி வந்தன. ஆனால் இத்தனை மணி நேரமும் ஒரு மணி நேரமாக உங்களுடைய மனதிலே இருந்ததை காட்டியது. எத்தனையோ விடயங்களை பல தெரியாத விடயங்களை எமது ஆஸ்திரேலிய நேயர்களுக்கும் அதைப் போன்று உலகெங்கும் வாழ்கின்ற நேயர்களுக்கும் இணையத்தள நேயர்களுக்கும் கூட இந்த வேளையிலே சொல்லியிருக்கிறேன். உண்மையிலேயே இந்த சந்திப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

பதில்- ரொம்ப சந்தோசம். ரொம்ப சந்தோசம். அதாவது நாம பேசிய விசயங்களில குறிப்பிட வேண்டிய விஷயம் என்னன்னா அதற்கப்புறம் பலமுறை சத்தியராஜ் சொல்லுவாரு .நான் செந்தூரப்பூவே படம் ரெடியானப்போ போட்டுக் காட்டினேன். படத்தை பார்த்திட்டே வந்து கையைப் பிடிச்சிட்டு ரொம்ப நேரமாக மூஞ்சையை பார்த்திட்டு இருந்தாரு. எவ்ளோ பெரிய தப்பைப் பண்ணிட்டேன் சார். வந்து முதன் முதலாக எங்கிட்ட தான் கேட்டிங்க பண்ணுங்கன்னு சொல்லி. நான் அன்னைக்கு ஒரு வேகத்தில வந்து நீங்க தயாரிக்கிறீங்களா நீங்க பண்றீங்களா என்று கொஞ்சம் அலட்சியமாக பேசி அனுப்பிட்டேன். இன்னைக்கு நான் ரொம்ப ஃபீல் பண்றேன். ஏன்னா அதில தான் விஜயகாந்த்க்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைச்சது. தமிழக அரசினுடைய சிறந்த விருது வாங்கின படம். சிறந்த நடிகர். சிறந்த இயக்குநர். சிறந்த ஒலிப்பதிவாளர் என்று நான்கு விருதுகளை வாங்கிய படம் அது.
அது தயாரிக்கிறப்போ யாருமே விஜயகாந்த்ல இருந்து யாருமே சீரியசா எடுத்துக்கலை. பட் அது மிகப் பெரிய வெற்றியாகவும் திருப்புமுனையாகவும் இருக்கும்னு நான் நம்பினேன். அந்த மாதிரி ஏற்படுத்திக் கொடுத்திச்சு. அதற்கப்புறம் நீங்க கேட்டிங்கள்லையா நடிகர்கள் ஏன் பண்ணல என்று? சில விசயங்கள் வந்து தமிழில என்ன ஏற்படுதுன்னு சொன்னன். செந்தூரப்பூவே படம் வந்து ஹிந்திக்கு போறதா இருந்திச்சு. நான் சிகப்பு மனிதன் பண்ணின பூர்ணச்சந்திரா அதை டைரக்ட் பண்றதா இருந்தாரு. அதான் நான் ஒத்துக் கொண்ட முதல் வெளிப்படம் அதான். இந்த காம்பினேசன்ல எடுக்கிறதா வேலைகள் நடந்தது. அதான் நான் ஒத்துக் கொண்ட முதல் வெளிப்படம். ஆனால் அது எடுக்க முடியாம தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில அப்படியே நின்னு போய்ச்சு. இல்லைன்னா அது வேற மாதிரி பயணப்பட்டிருக்கும்.

கேள்வி- இவ்வளவு நேரமாக ஆஸ்திரேலிய நேயர்களுக்கு ஆபாவானன் அவர்களே உங்கள் மன வெளிப்பாடுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு எமது நேயர்கள் சார்பிலும் எங்களுடைய சார்பிலும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பதில்- நன்றி நன்றி. ஒரேயொரு விசயம் மாத்திரம் கடைசியாக வந்து சொல்லிக்க விரும்புறேன். நமது உலகத் தமிழர்களை பொறுத்தவரைக்கும் என்னன்னா நாம இன்னைக்கு மிகப் பெரிய சோதனைகளை சந்திச்சிட்டிருக்கோம்.தங்கம் கூழாங்கல் ரெண்டையும் எடுத்தீங்கன்னா தங்கம் வந்து அடிக்க அடிக்க பக்குவப்படும். பல உருவங்களை எடுக்கும். பல சிற்பங்களை செய்ய முடியும். கட்டித் தங்கம் வெட்டி எடுத்து ... பாடல் வரிகள் கேட்டிருப்பீங்க. தட்டித் தட்டி சிற்பம் செய்வோமடா.. ஒரு மனிதன் தங்கமாகவும் இருக்கலாம். கூழாங்கல்லாகவும் இருக்கலாம். சோ. தங்கம் எப்பிடி மேன்மையுறுதோ அந்த மாதிரி ஏற்பட்ட சோதனைகள் அத்தனையும் நமக்கு ஏற்ப்பட்ட பலமாக எடுத்துக்கிட்டு நாம பல மடங்கு வேகத்தோட வெளிப்படணும். மிகப் பெரிய சாதனைகளை ஏற்படுத்தனும். கூழாங்கல்லை பார்த்தீங்கன்னா ரெண்டு முறை தட்டிங்கன்னா இல்ல நாலு முறை தட்டிங்கன்னா நொறுங்கிடும். அதனால எந்த ஒரு மனிதனும் கூழாங்கல்லாக இல்லாம தங்கம் போல தட்டத் தட்ட தட்ட பக்குவப்படணும் மேலும் மேலும் வலுப்படணும். நமது வாழ்க்கையை பலப்படுத்திக்கணும். மிகப் பெரிய சாதனைகளை ஏற்படுத்தனும். மிகப் பெரிய சாதனைகளை சந்திக்கணும். வேதனைகள் மறக்கப்பட வேண்டும். தங்கமாய் வாழ்வோம் அப்பிடின்னு எல்லோரையும் வேண்டிக் கேட்டுக்கிறேன்.

கேள்வி- மிகுந்த நன்றி. ஆபாவாணன் அவர்களே.

எல்லாருக்கும் நன்றிகள்.