மீண்டும் ஒரு நீங்கள் கேட்டவை தெரிவில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய பாடல் தெரிவுகளும் இயன்றவரை அரிதான ஆனால் இனிமையான பாடல்களாகத் தருகின்றேன். கடந்த பாடல் தெரிவில் விருப்பத்தைக் கேட்ட நேயர்களில் சிறீகாந்த் இன் பாடல் தெரிவுகள் மட்டும் இன்னும் கைவசம் வந்து சேரவில்லை. ஏனையோரில் ஐந்து பேரின் விருப்பப் பாடல்களோடு என் விருப்பமும் இணைந்து வருகின்றது.முதலில் என் விருப்பமாக "அறுவடை நாள்" திரைக்காக இசைஞானியின் இசைமைத்துப் பின்னணி ஹோரஸ் கொடுக்க சித்ரா பாடும் "தேவனின் கோயில் மூடிய நேரம்" என்றதோர் இனிய பாடல். இந்தப் பாடலை எத்தனை முறையும் அலுக்காது கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் மேடைகளில் பாடப்படுவது வெகு அரிது.
அடுத்து ஒரு மலையாளப் பாடல். றேடியோஸ்பதியின் பெருமைக்குரிய கொ.ப.செ கோபியின் விருப்பமாக மல்லுவூட்டின் All time favourite ஆன "தும்பி வா, தும்பக் குளத்தே" என்று எஸ்.ஜானகி பாட இளையராஜா இசையமைப்பில் "ஓளங்கள்" திரைக்காக இடம்பெறுகின்றது.
காமிரா கவிஞர் சிவிஆர் விரும்பிக் கேட்ட "பாஞ்சாலங்குறிச்சி" திரைப்பாடல் சுவர்ணலதா குரலில் தேவா இசையமைப்பில் வருகின்றது. தன் விருப்பமாக மட்டுமன்றி இசைப்பிரியர்களுக்கும் இந்தப் பாடல் சென்றடைய வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டிருக்கிறார் இந்த indoor & outdoor ஸ்பெஷலிஸ்ட் ;-)
தங்கமலை ரகசியம் திரையில் இருந்து ஒரு தங்கபுதையலைக் கேட்டிருக்கின்றார் வசந்தன்.
பி.சுசீலா பாடும் "அமுதைப் பொழியும் நிலவே" என்ற அந்தப் பாடலை ரி.ஜி.லிங்கப்பா இசையமைத்திருக்கின்றார்.
இன்று தொடந்து ஒரே தனிப் பெண் குரல் பாடல்களாக ஒலிக்கிறதே என்று சலிப்பவர்களை ஆறுதல்படுத்த நிறைவாக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் ஜோடிப்பாடல் ரிஷான் ஷெரிப் விருப்பமாக "அண்ணா நகர் முதல் தெரு" திரையில் இருந்து சந்திரபோஸ் இசையில் "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டாக" ஒலிக்கின்றது.
பாடல்களைக் கேட்பதோடு உங்கள் விருப்பப்பாடல்களையும் அறியத் தாருங்கள். இலகுவில் கிடைக்காத அரிய பாடல்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேடித் தருகின்றேன். அவற்றுக்குக் கொஞ்சம் கால தாமதம் ஏற்படுவதையும் பொறுத்தருள வேண்டுகின்றேன்.

























