Pages

Friday, April 30, 2021

ஹரிணி மேகம் போலே வானில் வந்தவரே


“நெஞ்சினிலே நெஞ்சினிலே” (உயிரே) பாட்டின் ஹிந்தி வடிவத்தை முதலில் உங்களை வைத்துத் தானே பாட வச்சார் ரஹ்மான்?” – நான்

“அட அது எப்பிடி உங்களுக்குத் தெரியும்” என்று ஆச்சரியத்தோடு கேட்டார் பாடகி ஹரிணி. இது நடந்தது 1999 இல் 

ஆஸ்திரேலியாவில் இன்னிசை மழை பொழிய வந்த ஹரிணியை வானொலிப் பேட்டி வழியே ஒரு நேயராக இந்தக் கேள்வியை அப்போது கேட்டேன். அந்த வேளை மெல்பர்னில் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிந்தேன். ஹரிணி குழுவினர் மெல்பர்னுக்கு வந்த போது எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் வீட்டில் தங்கியிருந்தார்.

“தான் பாடும் எந்தப் பாட்டையும் மனப்பாடம் செய்து பாட்டுப் புத்தகம் பார்க்காமல் படிக்குது இந்தச் சிறுமி” என்று ஹரிணியைப் பார்த்து அப்போது வியந்தார் முருகபூபதி அவர்கள்.

பாடகி ஹரிணியின் துணையாக வந்த அவரின் தந்தையிடம் ஒரு அபூர்வமான திறமை இருந்ததையும் கண்டு கொண்டோம். அது என்னவெனில் முழுப்பாடலையும் சீழ்க்கை ஒலியாகக் (விசில்) கொடுப்பதில் வல்லவர். இந்தத் திறமையை எல்லாம் நேரே கண்டோம்.

இன்னொரு சுவாரஸ்யமான விடயம் ஹரிணி வாழ்க்கையில் மிக முக்கியமானது. சக பாடகராக அதே இசை நிகழ்வுக்குப் பாட வந்த திப்பு அவர்களுக்கும் ஹரிணிக்கும் காதல் அரும்பி  

“மெல்பர்ன் மலர் போல் மெல்லிய மகளா” என்று திப்பு மனசுக்குள் பாட வைத்ததும் இதே காலத்தில் தான்.

அப்படியாக ஹரிணி குறித்த பின்னணியில் ஒரு நனவிடை தோய்தல். இசையமைப்பாளர் ரஹ்மான் கையால் பாட்டுப் போட்டிக்குப் பரிசை வாங்கியவர் கூடவே படப் பாடல் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார்.

குழந்தைப் பாடகியாக ரஹ்மான் அடையாளப்படுத்திய “நிலாக் காய்கிறது” (இந்திரா) தான் ஹரிணியின் முத்திரை என்பதால் “டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா” பாடலில் ஏனோ ஹரிஹரனோடு ஒத்திசைத்த குரலை ஏற்க முடியவில்லை எனக்கு. ஒரு பிஞ்சுக் குரல் தான் அதில் வெளிக்காட்டுமாற்போலொரு உணர்வு. ஆனால் ஹரிணிக்காகவே உருவான, ஹரிணியைத் தவிர்த்து வேறாரையும் சிந்திக்காத ஒரு தொகைப் பாடல்கள் பின்னாளில் தோற்றம் பெற்றன.

அவற்றில் 


“என்ன தவம் செய்தனை யசோதா


“ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ 

யாவுமிசை ஆகுமடா கண்ணா.....”


https://www.youtube.com/watch?v=rogSE4_XtQY


உச்சம் என்பேன். அப்படியே இயக்குநர் கரு பழனியப்பன், இசையமைப்பாளர் வித்யாசாகர், பாடலாசிரியர் கபிலன் ஆகியோர்

“ஆலங்குயிலோடு” தொடர்ந்து “மெதுவா மெதுவா” https://www.youtube.com/watch?v=UfhBP3p3Iuo என்றொரு இன்னிசையையும் கார்த்திக் இணைக் குரலோடு ஹரிணிக்குக் கொடுத்ததும் சிறப்பு.

ஆனால் வித்யாசாகர் ஹரிணிக்குக் கொடுத்த ஜோடிப் பாடல்களில் உச்சமாக அமைந்தது, அறிவுமதி அண்ணன் வரிகளில் மதுபாலகிருஷ்ணனோடு மெல்லிசைத்த


விழியும் விழியும் நெருங்கும் பொழுது 

வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது 

வசதியாக வசதியாக வளைந்து கொடு


https://www.youtube.com/watch?v=HceBo7VaDrg



காதலினால் காதல் தொட்டு விடு

ஆதலினால் நாணம் விட்டு விடு.....

சதுரங்கம் படம் வெளிவர ஒரு யுகம் தாண்டினாலும், இந்தப் படப் பாடல்களில் குறிப்பாக இந்தப் பாடலில் பித்துப் பிடித்தாற் போலக் கிடந்தது ஒரு காலம், இப்போது கேட்டாலும் அதே முற்காலத்து உணர்வில் உறைந்து விடுவேன்.


“காதல் என்ற ஒற்றை நூல்தான்

கனவுகள் கொடுக்கின்றது

அது காலத்தை கட்டுகின்றது

என் மனம் என்னும் கோப்பையில் இன்று

உன் உயிர் நிறைகின்றது”


காதல் வயப்பட்டவர் மன நிலையை நாடி பிடித்து மெட்டுப் போட்டால் எப்படி இருக்கும் அப்படியொரு பாட்டு இது. உயிர் கொண்டு திளைத்தல் என்ற சொலவாடைக்குப் பொருத்தம் தேடினால் இப்படியான பாடல் தான் கிட்டும். கேட்கும் போதெல்லாம் முறுவல் எங்கொருந்தோ வந்து ஒற்றைக் காலை நீட்டிப் பூவில் பதிக்கும் வண்டாய் ஒட்டிக் கொள்ளும்.


“அவள்” என்ற ஏகத் தொனியில் அழைக்கும் உரிமையை எடுக்கும் வரை “அவ” என்ற மரியாதை கலந்த பயமும், காதலும் ஒட்டியிருக்கும். அவள் ஆக அது மாறும் போது இவள் எனக்கானவள் என்ற ஏக உரிமையை அப்படியே எடுத்துக் கொள்கிறான். அந்தக் காதலில் பெருமிதமும் கர்வமும் இருக்கும்.

அது போலவே அவனாக வரட்டும் என்றதொரு தயக்கமும், ஏக்கமும் ஒட்டியிருக்கும் மனநிலையை அவளின் கண்கள் காட்டிக் கொடுத்து விடும்.


இங்கேயும் அதுதான் நடக்கிறது.


ஒரு பஸ் பயணத்தில் பார்வைப் பரிமாறல்கள், பரிமாணமாகிக் காதலாய் முளைக்கும் தருணம், அந்தக் காதலுக்கு இடையே ஒரு வில்லன், அதுவே ஒரு தவறான கற்பிதத்தைக் காதலன் மனதில் எழுப்பிக் குழம்பும் சூழல், இதைச் சொல்லிப் புரிய வைக்க முடியாத மனோ நிலையில் காதலி. குழப்பங்கள் அந்த பஸ்சிலேயே முடிவு கட்டப்பட்டு ஒன்று சேர்கிறார்கள். இப்படியானதொரு அழகான சிறுகதை பாடலில் பொதிந்திருக்கிறது.

ஒரு பஸ் தன் தரிப்பிடத்தில் வந்து நிற்கும் போது முன்னே உதைத்துப் பின் பின்னே நகர்ந்து ஆசுவாசப்படுத்தும் ஒரு சிறு கணத்தில் மீண்டும் அவர்களுக்கான பார்வைப் பரிமாறல்களுக்கு வசதியாகி விடுகின்றது.


அது போலவே நிறைந்த பஸ்ஸில் ஏறிய குழப்பங்கள் தீர்ந்து விடுகின்றன வெறுமையான பஸ் போல. இந்த உருவகங்களை அழகாகக் காட்சிப்படுத்துகின்றது இப்பாட்டு.

உன்னி கிருஷ்ணன், ஹரிணி ஜோடியே ஏதோ ஆத்மார்த்தமான காதலர்களின் பரிபாஷை போலவே ஒத்திசைக்கின்றது. அந்தக் குரல்கள் வரிகளைச் சுரம் பிரித்துப் பாடும் போது ஒரு அழகான சாஸ்திரிய சங்கீதத்தின் நிரவலைப் பூசி மெழுகுமாற் போல இருக்கும். அப்படியொரு வெட்கப் புன்னகையோடே பாடியிருப்பாரோ ஹரிணி....


மீசை மழிக்காத பணக்காரக் களை ஒட்டிய வாலிபன் பிரசாந்த், அழகிய லைலா, உன்னி கிருஷ்ணன், ஹரிணி பாடல்கள் அந்த அழகிய காலகட்டத்தில் உறைந்து விடாதா உலகம் என்று எண்ண வைக்கும்.


பரத்வாஜ் - சரண் - வைரமுத்து கூட்டணியின் வெற்றிக்காலத்தை இது மெய்ப்பிக்கும், உயிர்ப்பிக்கும்.

வாத்திய இசைக் கோப்பில் பரத்வாஜ் எப்போதுமே தன்னை அடையாளப்படுத்தி நிற்பவர். இங்கே வாத்தியங்களை ஓட விடுகிறார் அவை உள்ளுணர்வின் ஓசையாகக் குதூகலித்தும், ஆர்ப்பரித்தும் இவர்களின் காதலை மொழி பெயர்க்கின்றது. இரண்டாவது சரணத்தில் மிதக்கும் அந்த வயலின் இழுவையின் நளினத்தோடு கூடிய இசையைத் திரும்பத் திரும்பக் கேட்பேன் நான்.


வார்த்தை என்னைக்

கைவிடும் போது

மௌனம் பேசுகிறேன்

என் கண்ணீர் வீசுகிறேன்

எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும்

உனக்கேன் புரியவில்லை......


https://www.youtube.com/watch?v=12-eNGaBqqM



சில பாடகர்கள் ஆண், பெண் நகல் போல் தென்படுவார்கள், அது போலவே உன்னி கிருஷ்ணனும், ஹரிணியும். அதனால் தான்

“மனம் விரும்புதே உன்னை” 

https://www.youtube.com/watch?v=s518u0X6gNg 

(நேருக்கு நேர்) இரு குரல்களின் தனிப்பாடல்களையும் சரி சமமாக ரசிக்க வைத்தது.


“அடிக்கிற கை அணைக்குமா” https://www.youtube.com/watch?v=E31hJ1NTDi8

ஹரிணி பாடிய வித்தியாசமான பாட்டுச் சூழல் என்று அப்போதெல்லாம் விரும்பிக் கேட்பேன் இதை.



கொஞ்சும் மஞ்சள் பூக்கள் (உல்லாசம்) கார்த்திக் ராஜாவின் உல்லாசத்தின் உச்சமான பாடல்களில் ஒன்றாகப் பூத்துக் குலுங்கியது.

சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்

தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்

நிலாவும் மெல்ல கண் மூடும் ஹோ


https://www.youtube.com/watch?v=bIcvw_BTyrA 



தொண்ணூறுகளில் உன்னிகிருஷ்ணன் போலே, ஹரிணிக்குக் கிடைத்தவை முத்து முத்தான வாய்ப்புக்கள் பல்வேறு இசையமைப்பாளர்கள் என்று பரிணமித்தார்கள்.



“இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக” (மின்னலே) ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், தன் அறிமுகப் படத்தில் மட்டும் போதாதென்று மீண்டும் உள்ளம் கேட்குமே யில் அதே ஜோடியை பாட வைத்து அழகு பார்த்த “மழை மழை”, “பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்” என்று எஸ்.ஏ.ராஜ்குமாருக்காக ஆனந்தத்திலும், “திரும்பத் திரும்பப் பார்த்துப் பார்த்து” (பார்வை ஒன்றே போதுமே) இசையமைப்பாளர் பரணிக்கும், “சுடும் நிலவு” (தம்பி) வித்யாசாகர் இசை மழையிலும், “ஏப்ரல் மாதத்தில் (வாலி) தேனிசைத் தென்றல் தேவாவுக்காகவும், தங்களை அறிமுகப்படுத்திய ரஹ்மானிடமே வந்து சேர்ந்த காதல் வைரஸ் ஆக “சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனசு” என்று இணைந்து பாடியதுமாக இந்த ஜோடிக்குரல்களை இந்த நூற்றாண்டிலும் மாறக்காமல் ஞாபகம் வைத்து இணை சேர்த்துப் பாட வைத்தார் டி.இமான் தேசிங்கு ராஜாவில்

“நிலா வட்டம் நெத்தியிலே”


https://www.youtube.com/watch?v=kSrCbRN9eZg


என்ற இனிய பாடலில்.


ஜோதிகாவுக்கு அச்சொட்டாகப் பொருந்துமோ என்று “மேகம் கருக்குது” பாடலில் எல்லாம் அனுமானிக்க வைத்தவர் ஹரிணி. அவரின் தனிப்பாடலே ஒரு தொகை தேறும்.



எப்படி ஒரு காலத்தில் ஹரிஹரனுக்குப் பொருந்தாத மழலைக் குரல் என்று மனம் மறுதலித்ததோ அதை மறுபரிசீலனை செய்ய வைத்தது இதே ஹரிஹரனோடு ஹரிணி பாடிய 


"வெள்ளைக் கனவொன்று உள்ளே நுழைந்தது கண்கள் இருளுதடி"


ஒரு பாடல் சட்டென்று மனதுக்குப் பிடித்துப் போவது அவ்வளவு இயல்பானதன்று. முதன் முறை கேட்டேன், கேட்டுக் கொண்டே இருந்தேன் இந்தப் பாடலை வெளிவந்த நாளி.


"வெள்ளைக்கனவொன்று" என்று எடுத்த எடுப்பிலேயே பயன்படுத்தப்பட்ட சொல்லாடல் தான் இந்தப் பாடலின் ஈர்ப்பு சக்தி. யாரோ ஒரு புதுப் பாடலாசிரியராக இருக்க வேண்டும், தன் முதன் முயற்சியை வெகு கவனமாக வார்த்தை அடி எடுத்து வைத்திருக்கிறார் என்று பார்த்தால் சரிதான் அது படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.

“கனவுக்கு நிறமில்லை அதனால் தான் வெள்ளைக்கனவு” என்று விளக்கம் தந்தார் என் நட்புப் பட்டியலில் இருக்கும் ரஞ்சித் ஜெயக்கொடி.


இம்மாதிரியான தொனியில் ஹரிஹரன் பாடியெல்லாம் கேட்டதாக எனக்கு ஞாபகமில்லை. ஒரு இளம் பாடகருக்குண்டான பயபக்தி.

ஹரிஹரன், சித்ரா பாடிய அட்டகாஷ் பாட்டு "உடையாத வெண்ணிலா உறங்காத பூவனம்" பாடல் கூட இந்தப் பாடலோடு ஒப்பிடும் போது வேகப் பாய்ச்சலாய்த் தோன்றும். 


மீண்டும் ஹரிணி வந்திருக்கிறார். இந்த ஜோடியின் குரலில் பாடலைக் கேட்கும் போது தொண்ணூறுகளின் அந்த இறுதி யுகத்தின் இனிமை நாட்களின் நந்தவன மேடையில் மனது.

பாடலை இசையமைக்கும் போதே 90களின் வாசனை பட வேண்டும் என்று இயக்குநரோ இசையமைப்பாளரோ முடிவெடுத்திருக்கக் கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது.

பாடலின் முடிவில் கொடுக்கும் ஆலாபனையில் தான் ஹரிஹரன் முத்திரை. 

"அடி பெண்ணே பெண்ணே" "அடி கண்ணே கண்ணே" என்று கூட்டுக் குரல்கள் எழுப்பும் ஒலி காதலரைக் கண்டதும் துடிக்கும் இதயத்தின் இசை வடிவமாய்.

மெல்லிசை படத்தின் இசையமைப்பாளர் சாம்.C.S இற்கும் இந்த இசை யுகம் பங்கு போட்டுக் கொடுத்து விடவேண்டும். ஆண்டு அனுபவிக்கட்டும் நாமும் குளிர் காய்வோம்.

இந்தப் பாடலை படக்குழுவினர் ஏன் பிரபலப்படுத்த முனையவில்லை என்று தெரியவில்லை.


"கண் முன்னே தேவதை உயிரெங்கும் பெரும் வதை"

பூவொன்று தன் இதழ் விரிக்கும் தரிசனம் கிட்டாது விடினும் அதே மாதிரியான அனுபவத்தை நுகரலாம் இம்மாதிரியான புதுப் பாடலைக் கேட்கும் தருணம். முதல் நாளில் இந்தப் பாடலைக் கேட்ட அந்தக் காலையும் எனக்கு ஆசீர்வதிக்கப்பட்டது.


https://www.youtube.com/watch?v=zh3NPxlb-Hc


சருகென

உதிர்கிறேன்

தனிமையிலே

மௌனமாய்

எரிகிறேன்

காதலிலே


உண்மையிலேயே பழுத்து விழும் சருகு ஒன்று காற்றில் அலைக்கழிந்து போகும் நிலையில் தான் கிடப்பேன் இந்தப் பாடலைக் கேட்டதும்.


எந்தவொரு பாடலையும் முதலில் உள்ளிழுப்பது அதன் இசை தான், ஆனால் அது உயிர் கொண்டு திளைப்பது கவிதைக் கை, கால் முளைத்த வரிகளால், அப்படியொன்று தான் தான் இந்தப் பாட்டும்.

இந்தப் பாடலைப் பிரசவிக்கவென்றே பிறப்பெடுத்திருப்பார்களோ என்று எண்ணுவதுண்டு ;


“பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ

மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ”


என்று வைரமுத்துவின் வரிகளை வித்யாசாகர் இசையூட்டிய போதும்,


“அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்

உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்

உதிர்ந்துபோன மலரின் மௌனமா”


என்று நா.முத்துக்குமாரின் வரிகளில் யுவனின் உயிரிசை ஓடிய போதும்.


அது போலவே இதனையும் பார்க்கிறேன். அருமைக்குரிய பழநிபாரதி அவர்கள் கொடுத்த திரையிசை முத்துகளில் ஒன்று கார்த்திக் ராஜாவின் இசைக்கென்றே பிறப்பெடுத்ததொன்று.

தனயனுக்கு “வீசும் காற்றுக்குப் பூவைத் தெரியாதா” என்று கொடுத்தவர் தான்,


“உலகத்தில் ஏதும் தனிச்சு இல்லையே

குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல....”

என்று தந்தைக்கும் “இளங்காத்து வீசுதே” என்று அன்பின் பரிமாணத்தை இன்னும் சொல்லியிருக்கிறார்.

பழநி பாரதி அவர்களின் “திரையிசை இயல்” தீர ஆராயப்பட வேண்டியதொன்று.

“யாரவள் யாரவள் யாரவள்”

என்று அசரீரியாகப் பின்னணியில் கலக்கும் அந்த சேர்ந்திசைக் குரல்கள் காதலியைக் காணுமிடத்து வேகமெடுத்து எழும் இதயத் துள்ளலின் மொழி பெயர்ப்பு அது.


“உல்லாசம்” படத்தின் காதல் மொழி பகிர்வதற்காகத் தோன்றும் காட்சிகளில் எல்லாம் கார்த்திக் ராஜா இந்தப் பின்னணி இசைக் குரல்களை வழிய விட்டிருப்பார்.


சேர்ந்திசைக் குரல்கள் எனும் இந்த கோரஸ் குரல்கள் வெறும் ஆர்ப்பரிப்பாக பயன்படும்? இல்லை அந்த முதல் சரணத்தை வைத்து மட்டும் முடிவுக்கு வந்து விடக் கூடாது.

“லேலேலோ லேலேலோ

லேலோ லேலோ லேலேலோ

லேலேலோ லேலேலோ

லேலோ லேலோ லேலேலோ”

தரும் உணர்ச்சிப் பிரவாகம் தான் பின்னால் வரும்,

“மேகம் போலே என் வானில் வந்தவளே

யாரோ அவளுக்கு நீதான் என்னவளே”

எனும் காதல் மொழியை உணர்வு கூட்ட முன்னாலேயே தயார்படுத்தி அனுப்புகிறது. இந்த இடத்தில் வரும் கோரஸ் ஒலியைத் தன் காதலின் திசையறியாது தனித்து விடப்பட்டவன் அழுவான். இதுதான் உணர்வை ஊட்டும் இசை.

அதுவும் அந்த ஹரிணி பாடும்


“வீசும் காற்றுக்குப் பூவைத் தெரியாதா” 


https://www.youtube.com/watch?v=8JdSNpGjEZI


பகுதியைக் காதலிக்குக் கொடுக்காமல் சேர்ந்து பாடும் பாடகிக்குக் கொடுத்தாரே அந்த் இயக்குநருள்ளும் ஒளிந்திருக்கிறார் ஒரு கவிஞன்.

கண்ணீர்ப் பூக்கள், நடந்த நாடகங்கள், ஊர்வலம், திருவிழாவில் ஒரு தெருப்பாடகன், நந்தவன நாட்கள் என்றெல்லாம் மு.மேத்தாவின் கவிதைப் புத்தகங்களப் பரப்பி அங்கே தென்படும் காதல் வரிகளை நறுக்கியெடுத்துப் பாடல்களின் முகவுரையாகக் “காதலர் கீதங்கள்” என்று படைத்திருக்கிறேன்.

இங்கே “வீசும் காற்றுக்குப் பூவைத் தெரியாதா” பாடலுக்கு முகவுரை எனக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. காரணம் இந்தப் பாடல் வரிகளுக்குள்ளேயே புதுக்கவிதை பூத்திருக்கிறது.


மேகம் போலே என் வானில் வந்தவளே

யாரோ அவளுக்கு நீதான் என்னவளே

மேக மேக மேக கூட்டம் நெஞ்சில் கூடுதே

உந்தன் பேரை சொல்லி சொல்லி மின்னல் ஓடுதே


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தொண்ணூறுகள் தொட்டு இன்னிசை மேக மூட்டமாய் உலவும் பாடகி ஹரிணிக்கு.


கானா பிரபா


Thursday, April 29, 2021

ஸ்வர்ணலதா காலம் என்ற தேர் ராஜா காலத்துப் பாடல்களோடு ஒரு பயணம்




நெஞ்சமே பாட்டெழுது

அதில் நாயகன் பேரெழுது

மா

லை

யில்


யா

ரோ


மனதோடு 

பேச


ஸ்வர்ணலதாவை நினைக்கும் தோறும் தூரத்தில் எங்கோ யாரோ வீட்டு வானொலிப் பெட்டியில் இருந்து எழுந்து அலைந்து வரும் பாட்டலை போல மனதோடு பேசும்.

மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்று தமிழ் திரையிசை இயக்கத்தின் போக்கை மாற்றிய முப்பெரும் இசையாட்சியரிடம் பாடியவர், நாமெல்லாம் எப்படி எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை நமக்கான சொந்தமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமோ அது போலவே ஸ்வர்ணலதாவைத் தமிழ்த் திரையுலகம் மட்டுமன்றி தென்னிந்தியாவும், ஏன் ஹிந்திக்குப் போன பாட்டரசிகளை விட ஸ்வர்ணக் குரல் இன்னும் அதிகமாக ஈர்த்தது ரஹ்மான் காலத்தில்.


2010 இல் நம்மை விட்டுக் கடப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வரை தமிழில் பாடிக் கொண்டே இருந்தாலும், தெலுங்கு சினிமாவில் தன் கடைசிக் காலம் வரை பாடிக் கொண்டே இருந்திருக்கின்றார். 

“ஸ்வர்ணலதா தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன் சின்னப்பொண்ணா இருக்கும் போது கன்னட ராஜ்குமார் உடன் மேடைகளில் பாடியிருக்கிறார்” என்று சித்ராவே வாய் நிறையப் பாராட்டிய குரல். தான் பாடிய பாடல்களை இன்னொருவர் நகலெடுத்துக் கூடப் பாட முடியாத அளவுக்குப் பாடி விட்டுச் சென்றிருக்கிறார் ஸ்வர்ணலதா. அதுதான் அவரின் தனித்துவம்.

“சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” என்று எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களால் “நீதிக்குத் தண்டனை” (1987) யால் அறிமுகப்படுத்தப்பட்டவர் அடுத்த ஆண்டே இளையராஜாவின் பாட்டுக் கோட்டையில் “உத்தம புத்திரி நானு” என்று துள்ளிசைத்தார். இரண்டுமே வெவ்வேறு பரிமாணங்கள். அதுவே அவர் பின்னாளில் ஒரு கட்டுக்குள் அடக்க முடியாக் குரல் என்ற முத்திரைக்கான அச்சாரம் போட்டது.

இளையராஜாவுக்கு ஸ்வர்ணலதா என்ற பெயர் பழக்கப்பட்டது தான். அது இன்னொரு ஸ்வர்ணலதா. அவர் குறித்து முன்னர் நான் எழுதிய பதிவு  

http://www.radio.kanapraba.com/?p=2842

இன்னொரு ஸ்வர்ணலதாவாக பத்து வருடங்கள் கழித்து அடையாளப்படும் இவரோ முன்னவர் போல ஒரு பாட்டோடு ஓய்வெடுக்காமல் தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கின்றார். அதுவும் இளையராஜாவின் இசைத் தொழிற்சாலை அப்போதெல்லாம் வருடத்துக்கு ஐம்பது கடந்த படங்களின் பாடல்களை உற்பத்தி பண்ணும் போதெல்லாம் வேக வேகமாக ராஜாவின் இசை நாடி பிடித்துப் பயணப்பட்டோருக்கு இன்னும் இன்னுமாக வாய்ப்புகள். அப்படியாகவே ஸ்வர்ணலதாவைத் தாங்கிப் பிடித்து வைத்திருந்தது இளையராஜாவின் இசைக் கூடம்.

குரு சிஷ்யன் காலத்திலேயே நானே உன் காதலி (தாயம் ஒண்ணு) https://www.youtube.com/watch?v=czC0EAu2y4Y பாடலில் பி.சுசீலா, சித்ரா, மனோவுடன் கூட்டுக் குரலாக இவருக்கும் ஒரு வாய்ப்புக் கிட்டினாலும், ஒரு பெரிய மாற்றத்தை விளைவிக்க இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டியது. நானே உன் காதலி பாடலிலும் அதே துள்ளிசைக் குரலாக ஸ்வர்ணலதா.

அப்படியாக “மாலையில் யாரோ மனதோடு பேச” பாடல் ஸ்வர்ணலதாவுக்காகவே காத்திருந்து வந்து கிட்டியது போலானது.

மீண்டும் அடையாளம் எடுபடாத பாட்டொன்று “எத்தனை ராத்திரி நித்திரை போச்சுது” https://www.youtube.com/watch?v=gTrNpafxAMQ அக்னி பார்வை வழியாக. கிட்டத்தட்ட “உத்தம புத்திரி நானு” பாடலைப் போலவே போதைக் கிறக்கத்தோடு இன்னொரு தங்கச்சி. மலேசியா வாசுதேவன் அவர்களும் தன் பங்குக்குக் கலக்கியிருந்தாலும் எடுபடாமல் போனது.


அதன் பிறகு விஸ்வரூபம் எடுக்கிறது ஸ்வர்ணலதாவின் பாட்டு இயக்கம்.

“போவோமா ஊர்கோலம்” (சின்னத்தம்பி) கள்ளங்கபடமற்ற காதலியின் ஊர்வலம்,

“மாசி மாசம் ஆளான பொண்ணு” (தர்மதுரை) விரகதாப சஞ்சாரம்,

“ஆட்டமா தேரோட்டமா” (கேப்டன் பிரபாகரன்) பழி தீர்க்கக் காத்துக் கிடக்கும் பேதை, 

“குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே” (என் ராசாவின் மனசிலே) முரட்டுக் கணவனின் உள்ளார்ந்த நேசத்தை உணர்ந்தவளின் கடைசி நிமிடங்கள் என்று தனது 18 வது வயதிலேயே ஒரு பாடகியின் பன்முகப் பரிமாணத்தை அடையாளப்படுத்தி விடுகிறார் 1991 இல். 

அதன் பிறகு அவர் குட்டி இளவரசி தான். இளவரசி என்று கைகள் எழுதும் போது மனசோ 

“பாடடி குயிலே பாசமலர்களை” 

https://www.youtube.com/watch?v=r6D09IZx_kQ

என்று தாவுகின்றது.

ஸ்வர்ணலதாவின் தனிப்பாட்டு உலகம், ஜோடிப் பாடல்கள் என்று பங்கு போட்டுக் கலக்க இசைஞானியின் பட்டறை வாய்ப்புகளை விரிக்கின்றது.

“என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்”

https://www.youtube.com/watch?v=vnHRkz4xmnQ

ஸ்வர்ணலதாவுக்காகவே இன்னோர் ஆண்டு காத்திருந்து வந்தது போல அந்தப் பாட்டு. தான் பாடியதை இன்னொருவர் நகல் கூட எடுக்க முடியாத அளவுக்கு உச்ச பட்சமான குரல் தானத்தைக் கொடுத்த பாட்டு.

2014 ஆம் ஆண்டில் ராஜா கோரஸ் புதிர் நிகழ்ச்சியை நடத்திய போது அதில் போட்டிப் பாடல் பதிலோடு ரசமான பின்னூட்டங்களைப் பகிர்வார் நண்பர் விஜய் VIJAY (@MAESTROSWORLD) அவர் சொன்னதை விட வேறு என்ன மிகுதியாகச் சொல்ல முடியும் என்பது போல இந்தப் பாட்டு.

அவரின் பின்னூட்டம் இதுதான் ;

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் – வள்ளி

எவ்வளவு முறை இந்த பாடல் கேட்டலும் தாகம் தணியாது. ஒவ்வொரு முறை கேட்கும்பொழுதும் பாடலின் சுவை அதிகரித்துக்கொண்டே இருக்கும். பாடல் ஆரம்பமாகும் விதமே தனி.

மிருதங்கம், செண்டை, ஜதி என்று நம் நாட்டின் பாரம்பரியத்தில் ஆரம்பித்து கிடார் மற்றும் மேற்கத்திய செவ்வியலுக்கு லாவகமாக தாவி மீண்டும் நம் நாட்டு சந்தத்துடன் கலந்து உறவாடி மறுபடி மேற்க்கத்திய புல்லாங்குழல் பாணியில் பெண் குழுவினரின் ஒத்திசைவும் சேர்ந்து நம்மை ஆட்கொள்ளும் அந்த ஆளுமை இசைஞானியை தவிர வேறு யாரும் அவ்விடத்தை அடையமுடியாது என்று நச்சென்று பறை சாற்றுகிறது.

ஸ்வர்ணலதாவின் மற்றுமொரு பரிமாணத்தை இந்த பாடல் மூலம் உணரலாம் பொதுவாக நல்ல தீர்க்கமான ஆணித்தரமான அழுத்தமான குரலில் பாடும் பாடல்களால் அறியப்பட்டவர் இந்த பாடல் மூலம் அவரின் இன்னொரு மென்மையான குரல் மாயத்தால் மயிலறகைப்போல் நம்மை வருடிச்செல்வதை உணரலாம்.

இந்த பாடல் ஆரம்பத்தில் ஸ்வர்ணலதா பெண் குழுவினர்களோடு சேர்ந்து பாடும் பொழுது ஒலிக்கும் அந்த எதிரொலி அவர் தனியாக சரணம் பாடும் பொழுதும் ஒலிக்கும் அற்புதம் அவரின் குரலில் அது இயற்கையாகவே இருக்கிறது என்று இசைஞானி நமக்கு எடுத்துக்காட்டும் ஒரு அற்புதம். ஸ்வர்ணலதா நம்மிடம் இல்லையென்றாலும் அவர் விட்டு சென்ற அந்த அதிர்வும் எதிரொலியும் நம்மை வாழ்நாள் முழுவதும் ஆட்கொள்ளும்.

இப்படியாக நண்பர் விஜய் இன் கருத்து.

“ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது”, “கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ” (உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்), ஏ ஜிங்கான் ஜினுக்குச்சான் சிட்டுக்குருவி (வீட்ல விசேஷங்க), வெடலப் புள்ள நேசத்துக்கு ( பெரிய மருது), புதிய பறவை பறந்ததே (தென்றல் வரும் தெரு) என்று எத்தனை ரக ரகமாக ராகமிசைத்து நெஞ்சை அள்ளினார்.

ஆனால் அவரின் அதிகம் அறியப்படாத தனிப்பாடல்களைத் தோண்டி எடுத்து ரசிப்பது சுகம். 

“முத்து முத்து முத்தாரம் தான் 

முங்கி வந்தேன் இந்நேரம் தான்”

https://www.youtube.com/watch?v=Gb2DLga6Z1k

தம்பிக்கு ஒரு பாட்டு படத்தில் வந்த இந்தப் பாட்டைக் கேட்கும் போது சைக்கிளில் ஏறித் தாயகம் பறந்து விடும் மனசு.

அப்படியே

“தை மாசம் கல்யாணம் அன்று காதல் ஊர்கோலம்”

https://www.youtube.com/watch?v=hHCYpCuUW4o

என்னைக் கல்யாண மேடையில் இருத்தி விடும். திருமண வீடியோவில் இந்தப் பாடலைத் தான் தாலி கட்டியதும் பொருத்த வேண்டும் என்று படப்பிடிப்பாளர் ஜெகதீசன் அண்ணாவிடம் விடாப்பிடியாகக் கேட்டுக் காட்சியோடு அச்சடித்த பாட்டை எப்படி மறப்பேன்? ஒவ்வொரு திருமண நாளிலும் வந்து போவார்கள் ஜெயச்சந்திரனும், ஸ்வர்ணலதாவும். அந்தக் கோரஸ் குரல்கள் ஆர்ப்பரிப்பு ஆசீர்வதிக்கும் நெல் மணி மழை போல. ஸ்வர்ணலதா குரலில் மணப் பெண்ணின் பூரிப்பு இருக்கும்.

மலையாள ஜோடிக் குரல்களாக ஜென்ஸி, சித்ரா, சுனந்தா வரிசையில் ஸ்வர்ணலதாவும் சேரும் ஜெயச்சந்திரன் ஜோடிப் பாட்டில் கேரளத்து வாழைப்பழப் பாயாசச் சுவை கொட்டும் இந்தப் பாட்டில்.

 அது போலவே 

“ஜல் ஜல் ஜல் சலங்கை குலுங்க ஒரு தேவதை வந்தாள்” (பொண்ணுக்கேத்த புருஷன்)

https://www.youtube.com/watch?v=D6PuINzu1t8

மூடி வச்சு மூடி வச்சு மறைச்சு வச்சதெல்லாம்

காத்தடிச்சுக் காத்தடிச்சுக் கலைஞ்சு போனதென்ன

மானே மருதாணி போடவா ஹோ

https://www.youtube.com/watch?v=QPrdth7RY-w

ஆஹா சொர்க்கம் என்று கொண்டாடும் அருண்மொழி & ஸ்வர்ணலதா ஜோடியை, இன்னும் கொஞ்சம் பாடல்களில் இருவரும் சேர்ந்திருந்தாலும்


என் கண்கள் சொல்லும்


என் கண்கள் சொல்லும்

மொழி காதலே

என்றென்றும் செல்லும் விலகாமலே

தனியாக நின்றாலும் உன் தாகமே

துணையாக வந்தாலும் தணியாதது...

https://www.youtube.com/watch?v=VoNEC1PqxRE


என்று புன்னைவனப் பூங்குயிலை அழைக்கும் போது இருவர் தொண்டையிலும் ஒட்டியிருக்கும் அதே சோக சாரீரம் இதைத் தாண்டி எதையும் சிந்திக்காது.

இவர்களுக்கும் முன்னவர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களோடு ஜோடி சேர்ந்தாலும் வெற்றிப் பாட்டுத் தான் என்று “நான் ஏரிக்கரை மேலிருந்து” (சின்னத்தாயி), “ நீ தானே நாள் தோறும்” (பாட்டு வாத்தியார்), “ஆறடிச் சுவரு தான்” (இது நம்ம பூமி) என்றும் விட்டு வைக்காது ஒட்டிக் கொண்டவர்.

எப்படி எண்பதுகளின் மனோ & சித்ரா குரல்களுக்கு ஒரு தனி அரங்கத்தைக் கொடுத்தது போல மனோ & ஸ்வர்ணலதாவுக்குத் தொண்ணூறுகளைக் கொடுத்து விடலாம். ராஜாவும் வஞ்சனை இல்லாமல் இந்த ஜோடிக்குத் தான் அதிக பட்சமாக 33 பாடல்களைக் கொடுத்திருக்கின்றார். 

ஒரு காலத்தில் வானொலியில் “அருகமணி கருகமணி” https://www.youtube.com/watch?v=WJ8rZQ4BvVU பாடலைத் தொடர்ந்து போட்டு ஏச்சும் வாங்கியிருக்கிறேன் நேயரிடமிருந்து.

“நெஞ்சுக்குள்ள நேசமணி...

நித்தவரும் பாசமணி...

வஞ்சி இவள் வாசமணி...

கொஞ்சி கொஞ்சி பேசும்மணி...”

பாட்டு முடிந்ததும் அதை முணுமுணுத்து ரசிப்பேன்.

மல்லியே சின்ன முல்லையே (பாண்டித்துரை), காட்டுக்குயில் பாட்டுச் சொல்ல, வெண்ணிலவு கொதிப்பதென்ன என்று சின்ன மாப்ளே, அந்தியிலே வானம் (சின்னவர்), சித்திரத்துத் தேனே வா ( நாடோடிப் பாட்டுக்காரன்) சிங்கார மானே (தாய் மொழி), சொல்லி விடு வெள்ளி நிலவே (அமைதிப்படை), பொன்னாட்டம் பூவாட்டம் (செவ்வந்தி), கண்ணே இன்று கல்யாணக் கதை கேளடி (ஆணழகன்), வெட்டுக்கிளி வெட்டி வந்த (பிரியங்கா), மலைக்கோவில் வாசலில் (வீரா), மார்கழி மாசம் (வியட்னாம் காலணி) என்று உச்சம் கண்டவை மனோ & ஸ்வர்ணலதா கூட்டணியில் என்றாலும் என்

மனசுக்கு நெருக்கமானது


“கல்லூரி வாசலிலே நட்டு வைத்த காதல் விதை

காயாகி கனிந்துவரும் காலம் உள்ள காலம் வரை


கல்யாணப் பந்தலுக்கு

காத்திருக்கும் வாழை இது

கண்ணா உன் கையணைக்க

பூத்திருக்கும் தாழை இது


ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான்

https://www.youtube.com/watch?v=OFDMaqq0yis

கேரளக் குயில் கூவிடும் இசை

தித்தித்ததோ... தித்தித்ததோ...

ஆவணி திருவோணத்தில் உன்னை

சந்தித்ததோ... சந்தித்ததோ...


“நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் காதலி”

https://www.youtube.com/watch?v=NpqlSSqxZVA


ராஜாவும் ஸ்வர்ணலதாவும் ஜோடிக் காட்டிப் பாடிய சந்தோஷ கீதத்தைப் படத்தில் ஒட்டாமல் விட்டவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

“திசையறியாது நானே...

இங்கு தினசரி வாடினேனே...

இந்த பறவையின் வேடந்தாங்கல்...

உந்தன் மனமென்னும் வீடு தானே...”


ஸ்வர்ணலதாவின் ஏக்கத்தை ஒற்றியெடுத்து மனதார அதை ஏற்று 


நீண்ட காலம்...

நேர்ந்த சோகம்...

நீங்கி போக நானும் தீண்ட...

யோகம் விளைந்திட...


என்று பாடும் குரலாளர் எஸ்பிபி இன்று மோட்சத்தில் இசை மீட்டிக் கொண்டிருப்பரோ?

“என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி”

பாடலுக்கெல்லாம் ஒரு சில வரிகள் போதாதென்று பதிவே அர்ப்பணித்தேன் அன்றொரு சமயம்.

https://www.facebook.com/kana.praba/posts/10209336693679679


அது போலவே “உன்னை எதிர்பார்த்தேன் தென்றலிடம் கேட்டேன்”


https://www.facebook.com/kana.praba/posts/10211583638531896

யாரோடும் ஒட்டிப் போகும் எஸ்பிபி குரலோடு, யாரோடும் உச்சம் கொடுத்தவர் சேர்ந்தால் எப்படியிருக்கும் என்று காட்டியது.

கொட்டுகிற அருவியும்...


மெட்டுக்கட்டும் குருவியும்...

அடடடா அதிசயம்...


ஆண்:கற்பனையில் மிதக்குது...

கண்டதையும் ரசிக்குது...

இதிலென்ன ஒரு சுகம்...

ஸ்வர்ணலதா கூட்டில் ராக்கம்மா கையத் தட்டு” (தளபதி), ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் (மன்னன்), கானக் கருங்குயிலே (பாண்டித்துரை), காதலுக்குக் கண்கள் இல்லை மானே (நாடோடிப் பாட்டுக்காரன்), காலையில் கேட்டது கோவில் மணி (செந்தமிழ்ப் பாட்டு), ஓ என் தேவ தேவியே (கண்மணி), மாடத்துலே கன்னி மாடத்துலே (வீரா) போன்ற உச்சங்கள்.

தெலுங்கில் வந்த தளபதி பாடல்களில் "யமுனை ஆற்றிலே" பாடலை எதேச்சையாகக்  கேட்டுக் கொண்டிருந்தேன் ஒரு சமயம். 

தமிழில் பாடகி மித்தாலி பாடியது தெலுங்கில் ஸ்வர்ணலதாவுக்கே என்றானது. இது ஒரு ஆச்சரியம் மிகுந்த பேறு. 

இங்கேயும் பாருங்கள் அந்த ஏக்கமும், தேடலும் கொண்ட ஸ்வர்ணலதா இருக்கிறார். தமிழிலும் அவரே இருந்திருக்கலாமோ

https://www.youtube.com/watch?v=Xg36nIVijU4

காலம் என்ற தேரே 

ஆடிடாமல் நில்லு 

ஸ்வர்ணலதா என்ற கூடு பிரிந்து 11 ஆண்டுகள் கழிந்தாலும் நம் காலத்தேரை உயிர்ப்பித்து வைத்திருக்கும் பாடகிக்கு மானசீகமான பிறந்த நாள் வாழ்த்துகள்.


கானா பிரபா


Tuesday, April 27, 2021

ப்ரீத்தி உத்தம்சிங் ♥️ இசைஞானியின் புதுப் பூம்புனல் ♥️




ஷ்ரேயா கோசல் காலத்துக்கு முன்பே இளங்கன்றின் குரலாய் ஒலித்தவர் ப்ரீத்தி உத்தம் சிங். தமிழுக்கு வட நாட்டிலிருந்து பாட வந்த பெரும் பாடகிகள் லதா மங்கேஸ்கர், ஆஷா போஸ்லே போன்றோரின் புகழடையாளம் ஒன்றே போதுமாயிருந்தது. மற்றப்படி தமிழ் ரசிக உலகு வட நாட்டுச் சகோதரிகள் பாடும் பாங்கில் எழும் மொழிச் சிதைவைச் சகித்துக் குரலினிமையே போதும் என்று கடந்து போய் விட்டது. ஷ்ரேயா கோசல் ஒருவர் தான் ஆற்றொழுக்கான தமிழைத் தன் வாய்க்குள் போட்டுக் கொண்ட முதல்வர் என்று ஷ்ரேயா கோசல் புராணத்திலும் குறிப்பிட்டிருந்தேன். 


ப்ரீத்தி உத்தம் சிங் பாலிவூட்டில் அடையாளப்பட்ட பாடகி. அவரின் தந்தை 

இசையமைப்பாளர் (Dil To Pagal Ha படம் உட்பட)  சக வயலின் வாத்திய விற்பன்னர் உத்தம் சிங் இசைஞானி இளையராஜாவின் மகோன்னத இசையைப் போற்றி வாழ்பவர். அவரளவில் இந்தியாவின் பரிபூரணமான இசை ஆளுமை ராஜா தான்.

ராஜாவோடு இணைந்தும் பணியாற்றியிருக்கின்றார். ராஜாவின் முரட்டு பக்தர்களிடமிருந்து அவரைக் காப்பாற்ற் ராஜாவின் மெய்க்காப்பாளனாகவும் பணியாற்றியிருக்கிறேன் என்பார் உத்தம் சிங் வேடிக்கையாக.


இந்த நிலையில் ப்ரீத்தி உத்தம்சிங் இன் குரலையும் அவ்விதமே ஷ்ரேயா கோசலுக்கு அடுத்த நிலையில் வைத்து ரசிக்க முடியும். 


ஓஓஓஓ ஓஓ ஓஓஓஓஓ


ஆலாபனையிலேயே பாரசூட்டில் மிதந்து வருமாற் போல ப்ரீத்தி அப்படியாக 

“காதல் வானிலே ஓஓஓ” இயங்க ஆரம்பிக்கும்.

அதே ஓ என்ற ஒற்றை எழுத்துத்தான் ஆனால் ஆரம்ப ஆலாபனையில் மிதந்து வரும் “ஓ” அதுவே 


காதல் வானிலே 

காதல் வானிலே...


என்று வரும் போது ஒட்டும் “ஓ” ஒரு சிறு குலுக்கலோடு அபிநயம் காட்டும்.


கூடவே தட் தட். ட்ரில் மாஸ்டரின் கட்டளை போல் இசையின் ரீங்காரம் அப்படியே சரணத்துக்குப் போகும் போது தாய்லாந்து கோயில்களை நோக்கிப் பயணிக்கும் விமானமாய்.


https://youtu.be/n3W_-QlP8Is


கூடப் பாடுவது எஸ்பிபி என்ற மேதை, அவர் தன் பங்கிற்கு நோகாமல் சங்கதிகளைக் கொடுத்துக் கொண்டு போக, 

ஆடியும் துதி பாடியும் ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள்

ஹோ..ஓ..


தன் இடத்தை அடையாளப்படுத்தும் ப்ரீத்திக்கு இப்படியான சங்கதி நுணுக்கத்தால் பதியம் போட்டு விடுவார். ஒவ்வொரு வார்த்தைப் பிரயோகத்திலும் மிகக் கவனமாக அறுத்து உறுத்தி உச்சரிக்க வேண்டும் என்ற முனைப்பைக் காட்டிக் கொடுத்து விடுவார்.


எஸ்பிபியும் விடுவாரா என்ன? இப்படி எத்தனை பேரைப் பார்த்திருக்கிறேன் என்னுமாற் போல ப் ரீத்திக்கு வழி விட்டு விட்டு முதல் சரணம் முடியும் தறுவாயில்


பாடும் தேனிலா

பாடும்

தேனிலா


என்று சொடுக்கெடுத்து விடுவார்.


ஓம் ஷாந்தி 

ஓம் ஷாந்தி 

ஓம் ஷாந்தி


கை கூப்பித் தொழாத குறை தான்.


திங்கள் சூடிடும் தேவன் கோயிலில்

எங்கள் காதலைப் பாடுங்கள்.


ப்ரீத்திக்குக் கிடைத்த இன்னொரு பாட்டும் எதேச்சையாக ஒரு தெய்வீகம் கலந்த பாட்டுத் தான். இங்கே அருண்மொழியின் ஆலாபனையில்

“ஓ” புது வடிவம் பிறக்கும். 


அல்லா உன் ஆணைப்படி 

எல்லாம் நடக்கும் 

ஹோ எல்லாம் நடக்கும்


https://youtu.be/NMK8P0utgLQ


“காதலுக்கு உண்டு கல்யாண ராசி

சேர்த்து வைக்கும் நம்மை அல்லாவின் ஆசி..


“வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம்

ஓடி வந்தேன் இனி நீதான் என் வேதம்“


உன்னிகிருஷ்ணனின் இணைக் குரலாய் ப்ரீத்தி உத்தம் சிங். இருவரது கூட்டும் சம வயதுத் தோழர் போலப் பொருந்தியும்.


இருவரும் போட்டி போட்டுக் கொண்டு உணர்ச்சிப் பிரவாகம் சொரிவார்கள்.


நீ.... நீங்கி இருந்தால்

சோலைவனம் பாலை ஆகும் எனக்கு.....


ப்ரீத்தியின் வாயிலிருந்து பிறக்கும் “நீ” ஒரு நீட்சியிலும்,


நீ கூட நடந்தால்

வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு.....


அதே “நீ” தான் ஆனால் சற்றே அவசரப்படுத்தி அழைப்பார் உன்னிகிருஷ்ணன்.


“காதல் வானிலே” பாடலில் பரமசிவனை அழைத்தும், அல்லாவின் ஆணையை வேண்டி அடுத்த பாட்டிலுமாக இரண்டுமே வாலியின் கை வண்ணங்கள்.


பாலு மகேந்திராவின் முதல் படமான கோகிலா (கன்னடம்) ஹிந்தியில் Aur Ek Prem Kahani என்று தயாரான போது முன்பு தனது ஓளங்கள் (மலையாளம்) படத்தில் பயன்பட்டுப் புகழ் பூத்த “தும்பி வா” பாடல் மெட்டில் கொஞ்சம் நகாசு பண்ணி இங்கும் ஒரு பாடலை ராஜாவிடம் வாங்கினார்.  “Monday Tho utkar” என்ற அந்தப் பாடலிலும் மனோவுடன் ப்ரீத்தியின் பங்களிப்பு உண்டு


https://youtu.be/CayXUhErirI


இந்த தும்பி வா பாடல் மட்டும் பாலுமகேந்திராவின் நிரீக்‌ஷனா (தெலுங்கு), கண்ணே கலைமானே ( நிரீக்‌ஷணாவின் தமிழ்) என்று மொத்தம் 4 படைப்புகளில் மூன்று மொழிகளில் கையாளப்பட்டிருக்கிறது. சங்கத்தில் பாடாத கவிதை தனிக் கதை.


மேலும் அசோக்குமார் இயக்கிய காமாக்னி படத்தில் 

சுரேஷ் வட்கார், ஆஷா போஸ்லேயுடன் ப்ரீத்தி பாடும் Aa Gaya Sapna Koi


https://youtu.be/2t-T-c4xHtg


பாடலும் ராஜாவின் இசையோடு தான்.


ப்ரீத்தி இன்னும் பாடியிருக்கலாமோ என்று மனசு ஏங்கியது இன்றைய காலை ரயில் பயணத்தில் காதல் வானிலே இல் கட்டுண்டு கிடந்த போது.


அப்பர் சுந்தரர் அய்யன் காலத்தில் ஆண்டாள் கொண்டது காதல் தான்


காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல, 

எங்கள் தெய்வமும் காதல் தான்


ஓம் சாந்தி..ஓம் சாந்தி….

ஓம் சாந்தி….ஓம் சாந்தி…. ஓம்


கானா பிரபா

Saturday, April 24, 2021

நதீம் – ஷ்ரவன் சில குறிப்புக்கள்


“ஆண்டவனின் தொழிற்சாலையில் அரிதாக விளைந்த படைப்பு பாலுஜி” என்று எஸ்,பி.பாலசுப்ரமணியம் அவர்களது மறவில் நினைவு கூர்ந்தவர் நதீம் ஷைஃபி. இவர் ஹிந்தித் திரையிசையில் முக்கிய பாங்காற்றிய இரட்டை இசையமைப்பாளர்களான நதீம் - ஷ்ரவன் கூட்டில் ஒருவர்.

ஷாஜன் படப் பாடல்கள் வெளிவந்து 31 வருடங்களாகி விட்டது. அந்தப் பாடல்களில் பெரும் உச்சம் பெற்ற Dekha Hai Pehli Baar https://www.youtube.com/watch?v=PEbSW6mMWvE 

பாடலைப் பதிவாக்கியதே புத்தாண்டு தினத்துக்கு முன் தினம். தானாம். நகரமே புத்தாண்டுக் களியாட்டத்தில் இருந்த போது எதிர்காலத்தில் இந்த உலகமே கொண்டாடப் போகும் பாடலை எஸ்பிபி ஒலிப்பதிவுக் கூடத்தில் கொண்டாடிக் கொண்டிருந்தார்.

அவர் வாத்திய இசைக் கருவிகளில் ஒன்றானவர் என்று தன் நினைவுகளை மீட்டிப் பார்த்தவர் ஷ்ரவன்.


இளையராஜா காலத்துக்குப் பின் ஹிந்திப் பாடல் மோகம் என்பதன் வீச்சு தமிழ்ப் பாடல்களில் அந்நியபட்டிருந்தாலும், தமிழ் ரசிக உலகு முற்றிலும் அதை ஓரம் கட்டி விடவில்லை. அவ்வப்போது அவற்றைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதுவும் எஸ்பிபாலுவின் பாலிவூட் பாடல்களை நம்மாளின் பாடல்களாகக் கொண்டாடிக் கொண்டோம். 


ஏக் துஜே கேலியே காலத்தில் கமல்ஹாசனோடு பயணப்பட்ட எஸ்பிபியை ஒரு சிறு இடைவெளிக்குப் பின் பாலிவூட் உலகம் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்றது மைனே பியார் கியா படத்தின் வழி, ராம்லக்‌ஷமன் இசை கொடுத்த அந்தப் படத்தின் வழியாக சல்மான்கான் மிகப் பெரும் நட்சத்திர அடையாளமாகின்றார். தன் இரண்டாவது படத்தில் உச்சம் கண்டு அதன் அறுவடையை 32 வருடங்களாக இன்னும் அனுபவிக்கின்றார்.

வட நாட்டு சல்மான்கானுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போனது தென்னிந்திய எஸ்பிபி குரல். சல்மானுக்கான குரலாக தொடர்ந்து அடையாளப்படும் எஸ்பிபியைத் தம் இசையிலும் பயன்படுத்தி அழகு பார்க்கிறார்கள் நதீம் – ஷ்ரவன் இசையமைப்பாளர்கள்.

அவ்விதம் எழுந்தது தான் சல்மானுக்கு இன்னொரு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த சாஜன். மொத்தம் பத்துப் பாடல்கள் அவற்றில் 6 பாடல்கள் எஸ்பிபிக்கே எழுதி வைக்கப்படுகின்றன.


தொடந்து ஆனந்த் – மிலிந்த் இரட்டையர்களும் லவ் என்ற திரைப்படத்தில் மூலப்படமான பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) வில் இளையராஜா கொடுத்த மெட்டையும லவுட்டி அதே எஸ்பிபி கலந்து சல்மான்கானுக்குக் கொடுத்தார்கள்.


சல்மான் கானின் ஆரம்ப கால சினிமா இயக்கத்தில் ஒவ்வொரு முக்கிய வெற்றிகளிலும் எஸ்பிபியின்  பங்களிப்பு இருந்திருக்கின்றது. அப்படியாக இன்னொரு பாய்ச்சல் ராம்லக்‌ஷ்மன் இசையில் ஹம் ஆப்கே ஹைன் கோன் இலும்  விளைந்தது.


 நதீம் – ஷ்ரவன் இரட்டையர்களுக்கான வெற்றி ஒன்றும் உடனே கிடைத்த்தல்ல, Maine Jeena Seekh Liya வழியாக 1981 ஆம் ஆண்டில் அவர்கள் அடியெடுத்து வைத்தாலும் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஷிகி (1990) தான் அவர்கள் மேல் ஒரு வெளிச்சத்தைப் பரவ விடுகின்றது, ஆஷிகி என்றால் மோகம் இங்கே இசை ரசிகர்கள் இந்த இரட்டையர்கள் மேல் மோகம் கொண்டு அவர்களைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் கொண்டாடினார்கள்.

அந்தக் காலத்தில் 20 மில்லியன் இசைத்தட்டுகளை விற்றுத் தின்றது ஆஷிகி. Planet Bollywood தனது பட்டியலில் 100 தலை சிறந்த பாலிவூட் இசைத் தொகுப்புகளில் ஒன்றாகச் சொந்தம் கொண்டாடியது.

ஆஷிகி பாடல்கள் https://www.youtube.com/watch?v=KgsYJRnBNeE


ஆஷிகி சிறந்த இசையமைப்பாளர் தொட்டு, பாடலாசிரியர், பாடகர், பாடகி என்று எல்லாவற்றையும் பிலிம்பேரில் அள்ளியது.


இந்த வெற்றிக்களிப்பு f T-Series என்ற இசை நிறுவன அதிபர் குல்ஷான் குமார் படுகொலையில் நதீம் இன் பங்களிப்பும் இருக்கிறது என்ற சந்தேகக் குற்றச்சாட்டு வரை தொடர்ந்தது. அதன் பின்னாலும் வெற்றிகளைப் படைத்தாலும் அதுவே இந்தக் கூட்டணியின் முக்கிய கரும்புள்ளி ஆயிற்று.


பொதுவாக ஒரு இசையமைப்பாளரின் உச்சம் அதிகமாகப் பத்து ஆண்டுகள் இருக்கும் என்பது இவர்கள் கணக்கில் ஒரு துரதிஷ்ட நிகழ்வோடு முடிந்தது அவலம்.


 சல்மானுக்காக மட்டுமன்றி இன்னொரு உச்ச நட்சத்திரம் ஷாருக் கான் இன் ஆரம்ப கால வெற்றிகளிலிம் நதீம் – ஷ்ரவன் கூட்டணியின் இசை பங்கு போட்டது.

அவ்விதம் எழுந்த “தீவானா” 


https://www.youtube.com/watch?v=xxI13oWAfDI

பின்னாளில் “பர்தேஷ்”



https://www.youtube.com/watch?v=lO4A_lohz5Q


படப் பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடித் தீரா அனுபவமாக இன்னும் கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்னொரு முக்கிய நட்சத்திரம் அமீர்கானுக்காக ராஜா ஹிந்துஸ்தானி

https://www.youtube.com/watch?v=mexTtR8gwjg


இந்தப் படத்தின் பாடல்களும் முந்திய நட்சத்திரங்களுக்கு அள்ளிக் கொடுத்தவை போன்றே விருந்து வைத்ததால் விருதும் கிட்டியது.,


அகத்தியனின் காதல் கோட்டை Sirf tum ஆன போது அதற்கும் இவர்கள் தான் இசை. 


https://www.youtube.com/watch?v=W_mZ8ge2qmk


Raaz என்ற அமானுஷ்யக் கதைக் களத்துக்கு இந்த இரட்டையர்களின் இசை விருந்து பெரு வெற்றியை அறுவடை செய்ய வைத்தது.


https://www.youtube.com/watch?v=9wZhiAdQ2RA


தமிழில்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி, சங்கர் கணேஷ் இரட்டையர்கள் போலவே இவர்களில் நதீம் தனித்து இசையமைப்பாளாராகப் பின்னாளில் களம் இறங்கினாலும் இன்றுவரை இசை ரசிகர்கள் நதீம் – ஷ்ரவன் கூட்டணியையே கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.


கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி இந்த இரட்டையர்களில் ஒருவரான  ஷ்ரவன் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தது இந்த கூட்டணிக்கு நிரந்தர சமாதியை எழுப்பி விட்டது.


எந்தக் காலகட்டத்திலும் எந்த மொழிச் சினிமா உலகிலும் வணிக சினிமாவின் முதுகெலும்பாக இரண்டாம் கட்ட இசையமைப்பாளர்கள் இருப்பார்கள் அதுபோலவே இயங்கிய நதீம் – ஷ்ரவன் இரட்டையர் இந்தியத் திரையுலகின் மறக்க முடியாத வெற்றிக் கூட்டணியாக அமைந்து விட்டார்கள்.


கானா பிரபா


புகைப்படங்கள் நன்றி : இந்துஸ்தான் டைம்ஸ் & இந்தியன் எக்ஸ்பிரஸ் 

Friday, April 23, 2021

எஸ்.ஜானகி 83

 


திரையிசை கண்ட உன்னதமான ஆளுமைகளில் எஸ்.ஜானகி ஒரு பாட்டுப் பல்கலைக் கழகம். "எஸ்.ஜானகி அளவுக்கு பாடல் தாங்கியிருக்கும் உணர்வை வெளிப்படுத்த இந்தியாவிலேயே யாரும் இல்லை" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குறிப்பிடுவது வெறும் புகழ்ச்சி மாலை அல்ல என்பதை எம் போன்ற கடைக் கோடி ரசிகனும் உணர்ந்து நிற்பான்.

பாடகி சித்ராவின் ஆரம்ப காலத்தில் ஜானகி அம்மாவின் பாட்டைக் கேளு அவங்க ஒரு பாடலை எவ்வளவு தூரம் நியாயம் செய்து பாடியிருக்காங்க என்று இளையராஜா கை காட்டிய போது அங்கே நடமாடும் பாட்டுப் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்து காட்டுகிறார்.

திரையிசைப் பாடல் என்பது வெறுமனே சங்கீத சாகித்தியத்தின் திரட்டு அல்ல அது பாத்திரத்தின் பண்பை, காட்சிச் சூழலின் அனுபவத்தைக் இசைக் கூட்டில் குரல் வழியே கடத்துவது. அங்கே ஒட்டுமொத்த பாடலுமல்ல ஒவ்வொரு வரிகளுக்குமே உணர்வு பேதம் கற்பித்துக் கொண்டு வர வேண்டும் என்ற நுட்பத்தைப் போதித்தவர்கள் திரையிசையில் ஒரு சிலரே. அங்கு எஸ்.ஜானகி அம்மாவின் பங்கு அளப்பரியது.

ஒரு சாதாரண அல்லது அமைதியாகப் போகும் பாட்டின் உணர்ச்சியை நம்முள் அசுரத்தனமாக ஊடுருவி இறக்கி விடுகிறது எஸ்.ஜானகியின் குரல்.

"ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க" ஒலிக்கையில் தனிமையின் குரலாகவும் "சின்னச் சின்ன வண்ணக் குயில்" பாடும் போது குதூகத்தின் வெளிப்பாடாகவும் மனது மொழி பெயர்க்கும் போது எஸ்.ஜானகி ஒரு பெண்ணின் உணர்வாக மட்டும் அடையாளம் இல்லாது ஆணின் மனோபாவங்களின் மொழியாகவும் அடையாளப்படுத்தப்படுகிறார்.

அதனால் தான் அந்தந்த மன நிலைகளுக்குத் தோதாகச் சவாரி செய்யப் பாட்டு வாகனம் தேடும் போது அது எஸ்.ஜானகி ஓட்டும் குதிரையிலும் சுகமாகச் சவாரி செய்கிறது.

ஒரு பாடலுக்குக் கொடுக்கும் உச்ச பட்ச நேர்த்தியையும், உருவாக்கத்தையும் வைத்து

எப்படி இசைஞானி இளையராஜாவை ஒரு இசையமைப்பாளர் என்ற எல்லை கடந்து இயக்குநர் என்ற நிலையில் வைத்துப் பார்க்க முடிகிறதோ அது போல எஸ்.ஜானகி ஒவ்வொரு பாடலையும் கையாளும் விதத்தில் இசையமைப்பாளராகவே மிளிர்கிறார்.

மெல்லிசை மன்னர் காலத்தில் T.M.செளந்தரராஜன், P.சுசீலா என்று அமைந்ததோ அது போல் இசைஞானி இளையராஜா காலத்தில் எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று பரிணமித்தது.

இவர்கள் காலத்தில் நாமெல்லாம் இருப்பது பெருமை என்ற நினைப்பு வரும் போது கண்டிப்பாக இவர்களும் இருப்பர்.

"மம்மி பேரு மாரி" https://youtu.be/pwbekjLgZWg (நெஞ்சத்தைக் கிள்ளாதே) என்று விடலைப் பையனாகவும், "கண்ணா நீ எங்கே" https://youtu.be/HFDzZBCT0OI (ருசி கண்ட பூனை) என்று குழந்தையாகவும், "போடா போடா பொக்கை" https://youtu.be/BpaHQVXD62g (உதிரிப் பூக்கள்) என்று கிழவியாகவும் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை கற்றவர்.

"லல்லி லலிலலோ" என்ற ஆலாபனையோடு மச்சானைப் பார்த்தீங்களா பாடலை நினைத்தாலேயே உச்சந்தலை உறைந்து போனதொரு உணர்வு கிட்டும் எனக்கு.

எந்த ஒரு துறையிலும் இறங்கியவர்கள் அப்படியே மாற்றமின்றி அதன் போக்கில் வாழ்ந்தவர்கள் அப்படியேதானிருக்கிறார்கள்,அதையும் தாண்டிக் கடந்து சிந்தனையைச் செயல்படுத்தியவர்கள் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். எஸ்.ஜானகியின் இந்த அறுபதாண்டு இசை வாழ்வு அவரைச் சாதனையாளராக முன்னுறுத்துகிறது. தனக்கு வாய்ந்த அழகிய குரல் என்பது அதன் இனிமையைச் சுவைக்க அல்ல அனுபவிக்கவென்று குரல் பேதங்களில் வெளிப்படுத்தும் உணர்வின் வழி நிரூபித்துக் காட்டியவர்.

எமக்கெல்லாம் இசையரசி பி.சுசீலா அம்மாவின் பாட்டு அன்னையின் குரல் என்றால் பாட்டுக் குயில் எஸ்.ஜானகியின் ஓசை தோழியின் குரலாக நிற்கின்றது.

இன்று தனது 83 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தன்னிகரற்ற பாடகி எஸ்.ஜானகியை வாழ்த்துவதில் கடைக்கோடி ரசிகனாக இருந்து பெருமைப்படுகிறேன்.

kana Praba

இன்று சிறப்புப் பகிர்வாக இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.ஜானகி தனித்தும், கூட்டுக் குரல்களோடும் பாடிய 83 பாடல்களைச் சுடச் சுடத் தயாரித்து இதோ பகிர்கிறேன்.

1. செந்தூரப் பூவே (பதினாறு வயதினிலே)

http://youtu.be/xq2RodtGTY4

2. ராசாவே உன்னை நம்பி (முதல் மரியாதை)

https://www.youtube.com/watch?v=lL-7q3g0k3k

3. ஊரு சனம் தூங்கிடுச்சு ( மெல்லத் திறந்தது கதவு) - இசை : மெல்லிசை மன்னரும் இசைஞானியும் 

https://www.youtube.com/watch?v=kUwuJ-WYD3c

4. ராசாவே உன்னை விட மாட்டேன் (அரண்மனைக் கிளி)

https://www.youtube.com/watch?v=Urcc4cKLBvw

5. ராதா அழைக்கிறாள் (தெற்கத்திக் கள்ளன்)

https://www.youtube.com/watch?v=ZZucgnCbp0E

6. பொன் வானம் பன்னீர் தூவுது (இன்று நீ நாளை நான்)

https://www.youtube.com/watch?v=axhR6ojSWEk

7. சின்னச் சின்ன வண்ணக்குயில் (மெளனராகம்)

https://www.youtube.com/watch?v=7bmdL9wtHGY

8. தாலாட்டும் பூங்காற்று (கோபுர வாசலிலே)

https://www.youtube.com/watch?v=yiqQpyDOdGo

9. தூரத்தில் நான் கண்ட உன் முகம் ( நிழல்கள்)

https://www.youtube.com/watch?v=cxgzG2A9t8c

10. அழகிய கண்ணே (உதிரிப் பூக்கள்)

https://www.youtube.com/watch?v=e8g4dfXyTsc

11. நாதம் என் ஜீவனே (காதல் ஓவியம்)

https://www.youtube.com/watch?v=0WS4YtAqILY

12. பூட்டுக்கள் போட்டாலும் (சத்ரியன்)

https://www.youtube.com/watch?v=YwAEU-zS8_0

13. ஒரு பூங்காவனம் (அக்னி நட்சத்திரம்)

https://www.youtube.com/watch?v=gTo8Lw3c_Eg

14. வைதேகி ராமன் (பகல் நிலவு)

https://www.youtube.com/watch?v=Qbk77d9DxQk

15. புத்தம் புதுக் காலை (அலைகள் ஓய்வதில்லை)

https://www.youtube.com/watch?v=xYnPknPmz_A

16. இவளொரு இளங்குருவி (பிரம்மா)

https://www.youtube.com/watch?v=1mepao7REnQ

17. ஆசை அதிகம் வச்சு (மறுபடியும்)

https://www.youtube.com/watch?v=p3mHQgwZYIM

18. ஒரே முறை உன் தரிசனம் (என் ஜீவன் பாடுது)

https://www.youtube.com/watch?v=xA5AcuvBMMk

19. மழை வருவது (ரிஷி மூலம்)

https://www.youtube.com/watch?v=nbJ91JLfziQ

20. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் (குரு)

https://www.youtube.com/watch?v=FP0kRW38G48

21. அழகு ஆயிரம் (உல்லாசப் பறவைகள்)

https://www.youtube.com/watch?v=fNfDR-BEZxo

22. இது ஒரு நிலாக்காலம் (டிக் டிக் டிக்)

http://youtu.be/OOE8Ogxrqo4

23. எந்தப் பூவிலும் வாசம் உண்டு (முரட்டுக் காளை)

http://youtu.be/eMmX_bIP734

24. அன்னக்கிளி உன்னை (அன்னக்கிளி)

https://www.youtube.com/watch?v=jXPfszvRL-o

25. பொன்னில் வானம் (வில்லுப்பாட்டுக்காரன்)

https://www.youtube.com/watch?v=azQwUY47lOQ

26. பிள்ளை நிலா இரண்டும் (நீங்கள் கேட்டவை)

https://www.youtube.com/watch?v=14nfOAfxFx0

27. சங்கீதமே (கோயில் புறா)

http://youtu.be/2GOPVy3PRX8

28. பகலிலே ஒரு நிலவினை (நினைவோ ஒரு சங்கீதம்)

https://www.youtube.com/watch?v=GVGIvlE97U0

29. கண்ணன் வந்து (ரெட்டை வால் குருவி)

https://www.youtube.com/watch?v=A__OOVNknqs

30. காலை நேரப் பூங்குயில் (அம்மன் கோயில் கிழக்காலே)

https://www.youtube.com/watch?v=QQyLRAOPNsI

31. மந்திரப் புன்னகையோ (மந்திரப் புன்னகை)

https://www.youtube.com/watch?v=XZo1pisb43w

32. என்னை மானமுள்ள (சின்னப் பசங்க நாங்க)

https://www.youtube.com/watch?v=BobkirXNQp0

33. பட்டு நிலா (வால்டர் வெற்றிவேல்)

https://www.youtube.com/watch?v=B1Zf8hCMF6c

34. ராஜா மகள் (பிள்ளை நிலா)

https://www.youtube.com/watch?v=6LtiVpz91tg

35. நதியோரம் (ஆவாரம் பூ)

http://youtu.be/YtTGh8WfgSc

36. சின்னப் பூ சின்னப்பூ (ஜப்பானில் கல்யாண ராமன்)

http://youtu.be/-FEmuEbl9nU

37. ஆடையில் ஆடும் (ராஜ ரிஷி)

http://youtu.be/atqJe54EPzg

38. பூங்காற்றே தீண்டாதே (குங்குமச் சிமிழ்)

http://youtu.be/KlU-2mtTr8M

39. என்னைப் பாடச் சொல்லாதே (ஆண் பாவம்)

http://youtu.be/lC4VsW75GSQ

40. இரவு நிலவு (அஞ்சலி)

https://www.youtube.com/watch?v=kqv-KSSKRjA

41. ஒரு பூவனக் குயில் (மரகத வீணை)

http://youtu.be/xMaCuH6TkBI

42. கண்களுக்குள் உன்னை (தந்துவிட்டேன் என்னை)

https://www.youtube.com/watch?v=doCjSkKv7_I

43. போட்டேனே பூ விலங்கு (பூ விலங்கு)

https://www.youtube.com/watch?v=ab3sExdqC-8

44. பாடவா உன் பாடலை ( நான் பாடும் பாடல்)

https://www.youtube.com/watch?v=v3CNstSloR0

45. மாமா மாலை நேரம் (அம்பிகை நேரில் வந்தாள்)

http://youtu.be/h8WELIQ-iXY

46.  ஒரு பாட்டு உன் (பாச மழை)

https://www.youtube.com/watch?v=sIvKW9m0nEo

47. இளமைக்கு என்ன விலை (புலன் விசாரணை)

https://www.youtube.com/watch?v=Arb-QdUxvDY

48. வந்தது வந்தது (கிளி பேச்சுக் கேட்கவா)

https://www.youtube.com/watch?v=mnHCUU3xh2Q

49. சோலைப் பூந்தென்றலில் (பூவே பொன் பூவே)

https://www.youtube.com/watch?v=N-8wr4XwzN4

50. சும்மா தொடவும் மாட்டேன் (முதல் வசந்தம்)

http://youtu.be/rdH222_iq-k

51. நினைக்கின்ற பாதையில் (ஆத்மா)

https://www.youtube.com/watch?v=hNdT1UiRavY

52. அடி ஆடி வரும் பல்லாக்கு ( ஐ லவ் இந்தியா)

https://www.youtube.com/watch?v=oCwaYU07cTs

53. நூறு வருஷம் (பணக்காரன்)

https://www.youtube.com/watch?v=6n-m9yHwyJ8

54. இசை பாடு நீ (இசை பாடும் தென்றல்)

http://youtu.be/y8k3pxWdM1w

55. இனிமேல் நாளும் (இரவு பூக்கள்)

https://www.youtube.com/watch?v=-F0M50ZdjOA

56. தூது செல்வதாரடி (சிங்கார வேலன்)

https://www.youtube.com/watch?v=1gOEwp64KCs

57. ஓ எந்தன் வாழ்விலே (உனக்காகவே வாழ்கிறேன்)

https://www.youtube.com/watch?v=32GTNSzZIys

58. அதோ அந்த நதியோரம் (ஏழை ஜாதி)

https://www.youtube.com/watch?v=evtS4hO1cYc

59. தாலாட்டு மாறிப் போனதே (உன்னை நான் சந்தித்தேன்)

https://www.youtube.com/watch?v=5_x5LUGGPlo

60. கோட்டைய விட்டு (சின்னத்தாயி)

https://www.youtube.com/watch?v=Qe62ktwS3Sc

62. சின்னக் கண்ணன் அழைக்கிறான் (கவிக்குயில்)

https://www.youtube.com/watch?v=1g7bBhVQzDI

63. யாரு போட்டது (சத்ரியன்)

https://www.youtube.com/watch?v=6EYSl2JP6wU

64. வா வெண்ணிலா (மெல்லத் திறந்தது கதவு) தனித்து - மெல்லிசை மன்னர் & இசைஞானி

https://www.youtube.com/watch?v=p83c1-bLKkM

65. கொஞ்சம் சங்கீதம் - வீட்ல விசேஷங்க

https://www.youtube.com/watch?v=dXmmOPvRRKA

66. வான்மதியே (அரண்மனைக் கிளி)

http://youtu.be/2PmeVlXeUbU

67. தூரி தூரி தும்மக்க தூரி (தென்றல் சுடும்)

https://www.youtube.com/watch?v=F-cOeKWBsCk

68. நினைக்காத நேரமில்லை (தங்கக் கிளி)

http://youtu.be/MCjLIB1G8Q0

69. நான் உந்தன் தாயாக (உல்லாசப் பறவைகள்)

http://youtu.be/A8k_iwImM1U

70. வாரணம் ஆயிரம் (கேளடி கண்மணி)

https://www.youtube.com/watch?v=UkFxfYHkpUQ

71. ரோஜாப் பூ ஆடி வந்தது (அக்னி நட்சத்திரம்)

http://youtu.be/5YvQMm5DV_Q

72. அன்பே வா அருகிலே (கிளிப்பேச்சு கேட்கவா)

https://www.youtube.com/watch?v=U1RGeMwVcbo

73. ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது (பூட்டாத பூட்டுகள்)

https://www.youtube.com/watch?v=AHEQQUfwxEI

74. அத்திமரப் பூவிது (சாதனை)

https://www.youtube.com/watch?v=D-ZL4J4_-Rg

75. அழகு மலராட (வைதேகி காத்திருந்தாள்)

http://youtu.be/dbj8QjoU_6s

76. நல்ல நேரம் நேரம் (அந்த ஒரு நிமிடம்)

http://youtu.be/vg-4AQkLhL4

77. உதயம் நீயே (என் அருகே நீ இருந்தால்)

http://youtu.be/ayaUUg0nX4c

78. தும்பி வா தும்பக் குளத்தே (ஓளங்கள்)

https://www.youtube.com/watch?v=Wm8Ep-Js_44

79. ஓலக் குருத்தோல (அறுவடை நாள்)

https://www.youtube.com/watch?v=up2BzXShNog

80. மூணாம் பிறையினிலே (மனித ஜாதி)

https://www.youtube.com/watch?v=094THsAAxhg

81. கருத்த மச்சான் (புது நெல்லு புது நாத்து)

https://www.youtube.com/watch?v=ax_x4i_P-R0

82. சொல்லாயோ வாய் திறந்து

https://www.youtube.com/watch?v=mPraXna5BA0

83. ஒரு நாள் அந்த ஒரு நாள் (தேவதை)

https://www.youtube.com/watch?v=GZya0jtICH4


Monday, April 19, 2021

ராதிகாவுக்கான பி.சுசீலா பாடல்கள் இசைஞானி இளையராஜா இசையில்


“ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே

அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே”

https://www.youtube.com/watch?v=tig1izCadIA

இந்தப் பாடலில் மூழ்கியிருந்த போது ஒரு பக்கம் எண்பதுகளில்  பி.சுசீலாவின் பங்களிப்புகளை மனசு கணக்குப் போட்டுப் பார்த்தது.

ஶ்ரீப்ரியா யுகத்தில் இருந்து கெளதமி காலம் கடந்தும் அவரின் பங்களிப்பு இருந்தாலும் ராதிகாவுக்காக சுசீலாம்மா கொடுத்த பாடல்களுக்குள் மையம் கொண்டு விட்டேன்,

அப்படி அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு தினுசாக இருக்கும், வெவ்வேறு காட்சிச் சூழலுக்கு அற்புதமாக ஒட்டிக் கொண்டவை. அதிசயமாக காட்சியில் ராதிகாவை சுசீலா அவர்களின் குரலோடு பொருத்திப் பார்த்த பின் வேறெந்தக் குரல்களும் இவ்வளவு அச்சொட்டாகப் பொருந்திப் போகாது போல என்ற ஐயம் எழுவதற்கும் கூட அது வழி வகுத்தது.

“ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே” ஒரு அழகிய இயற்கை வர்ணிப்புப் பாடல். மாமுல் சினிமாவில் கதாநாயகி அறிமுகத்துக்கான பாடல்கள் இவ்வகை இயற்கையைக் கொண்டாடும் பாடல்களாகவோ அன்றித் தன் மனவுணர்வெழுச்சிப் பாடல்களாகவோ இருக்கும்.

இங்கே பஞ்சு அருணாசலம் அவர்களே பாடல்களோடு இயக்கவும் செய்த படமிது. முன்னாளில் “மலர்களில் ஆடும் இளமை புதுமையே (கல்யாண ராமன்) என்றோர் அழகிய இயற்கை வர்ணனைப் பாடலைக் கொடுத்த இவரே இன்னொன்றாக இதைக் கொடுக்கிறார்.

“ஆ..ஆஹா ஆ ஹாஹா....” என்று சங்கதியில் கூட சுசீலாம்மா வேறுபடுத்த்தித் தான் பாடலை ஆரம்பிப்பார். ஆனால் தொடரும் பாடலில் அதீத சங்கீதத்தனம் கொட்டாது, ராதிகாத்தனமான குறும்புத் துள்ளல் கொட்டிய குரலைக் கொடுத்திருப்பார்.

இந்தப் பாட்டின் பின்னணி இசையோட்டத்தில் ராஜா கையாண்டிருக்கும் தொடரிசை வாத்தியக் கூட்டு புதுமையானது, அந்தத் தாளத்தை ரசித்துக் கொண்டே இந்தப் பாட்டு உலகில் சஞ்சரிக்கலாம்.

“கேளாயோ கண்ணா…. 

நான் பாடும் கீதம்.....”.

https://www.youtube.com/watch?v=d6XuRWXEcYk

இந்தப் பாடலுக்குக் குரல் கொடுக்கும் போது பி.சுசீலாவுக்கு 50 வயது, ராதிகாவுக்கோ 23 வயது தான். ஒரு சோக ராகத்தை எடுத்துக் கொண்டு விரிகின்றது இந்தப் பாட்டு. 

“நானும் சொல்ல வார்த்தையின்றி

வாடும் பொன் மயில்

மௌனம் என்னும் பாடல் பாடும்

ஊமைப் பூங்குயில்...”

இங்கே கவிஞர் வாலியின் வரிகள். தன் ஒருதலைக் காதலோடு மருகும் அவளின் குரலைத் தேடிக் கேட்கும் இன்னொருத்தி அவள் தான் தான் மனதில் கொண்டவனின் முறைப் பெண்ணாக அமைந்தவள். இப்படியானதொரு காட்சிச் சூழலில் வரும் சுசீலாவின் குரலில் அப்படியே சரணத்தைக் கடக்கும் போது மெல்ல விலகி 

“நீ அறியாது ஏங்கிய மாது

என் பிழை எல்லாம் உன் பிழை ஏது”

என்று மாறும் தருணத்தை உள்ளூர உச்சுக் கொட்டி ரசிப்பேன். அற்புதமானதொரு மெட்டின் பரிமாணம் அது.

இதே கால கட்டத்தில் தான் ஜெயச்சந்திரன் குரலை விஜயகாந்துக்குப் பொருத்திப் பார்க்கும் அதிசயமும் நிகழ்ந்து அது வெற்றியும் பெறுகின்றது. இந்த நானே ராஜா நானே மந்திரியில் இருவரின் சங்கமப் பாடலாக அது மலர்கின்றது 

“மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்” என்று.

ஒரு பக்கம் விரக்தி, சோகம், இயலாமை, சுயபச்சாதாபம் கொண்டு ஒருதலையாய்க் காதலித்தவள் மருகிப் புலம்ப, இன்னோர் பக்கம் அவள் எடுத்துக் கொடுத்த காதல் மொழிகளையே தான் நேசித்தவள் மீது பகிரும் போது அந்தக் காதலன் குரலில் தேங்கி நிற்கும் குதூகலமும், துள்ளலும், ஏக்கத்தின் நேரான சிந்தனையுமாக இந்தப் பாடல் இரட்டை வேடம் கொண்டிருக்கிறது.

“மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே….”

https://www.youtube.com/watch?v=8WX0pJ2zuQA

என்று தொடங்கும் போதே தோல்வி கண்டவளின் மனப்பாட்டை எவ்வளவு துயர் சுமந்து ஏக்கத் தொனியோடு கொடுக்கிறார் இந்த சுசீலா பாருங்கள்.

அதையே மீள ஒப்புவிக்கும் ஜெயச்சந்திரன் குரலை

இந்த இடத்தில் வாசிப்பதை நிறுத்தி விட்டு ஒரு கணம் கேட்டுப் பாருங்கள் நான் சொல்லும் அந்தக் குதூகலம் உங்களிடம் கடத்தப்பட்டு விடும்.

தன் காதலியைக் காணுமிடத்து ஒரு காதலனுக்கு எழும் உள்ளத்து உணர்வை அப்படியே கொட்டிக் கொடுக்கிறது.

முதல் சரணத்தில் நின்றாடும் புல்லாங்குழல் ஓலியோடு கலக்கும் இசைத் துள்ளலைக் கேட்கும் கணமெல்லாம் ஊர்க் கோயில் கேணியின் படிக்கட்டுகளின் அந்தம் வரை துள்ளி ஓடும் உணர்வே எழும். காதலிக்கும் காலத்தில் தான் நேசித்தவரைக் காணும் போது எழும் சிலிர்ப்புக்கு நிகரானது இந்த ஒட்டுமொத்தப் பாட்டும்.

அந்த ஊரையே தன்னுடைய அடாவடியால் கட்டிப் போட்டவனுக்குள் ஒட்டியிருக்கும் வெள்ளாந்தித் தனம் கண்டு அவனை நேசிப்பவன், அவன் மனசில் தன் மாமன் மகள் பரிசம் போட்டிருப்பதைக் கண்டு, தன் காதலை மறைத்து அவனுக்குக் காதல் பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். ஆனாலும் அந்தப் பாடத்தின் இரண்டு பரிமாணங்களையும் தொடாமல் விட முடிவதில்லை. தன்னுள் தேக்கிய காதலையும், அது கொடுத்த பிரிவையும் தன்னுள் பாடி, அவனுக்குக் கொடுக்கும் போது அதை நேரான சிந்தனையோட்டமாக்கி விடுகிறாள்.

“ஒன்றாகும் பொழுதுதான்

இனிய பொழுதுதான்

உந்தன் உறவுதான் உறவு!”

இப்படியே சொல்லிக் கொடுப்பவள்

“அந்த நாளை எண்ணி நானும்”


என்று அவனுக்குக் கொடுத்து விட்டு


“அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே”

வாடும் பருவத்தைத் தனக்காக்கிக் கொள்கிறாள்.

அது போலவே முதல் சரணத்தில்

“இரு கண்ணும் என் நெஞ்சும்” என்று போகும் போது

“நீரிலாடுமோ?” என்பதைத் தனதாக்கிக் கொள்கிறாள்.

அங்கே தான் நிற்கிறது உண்மைக் காதல்.

பாடலை முடிக்கும் போதும் “மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்” என்று ஆரம்பிக்கும் போது அந்த “மயங்கினேன்” என்ற சொல்லில் எவ்வளவு தூரம் உடைந்து போகிறாள் என்பதை பி.சுசீலாவின் குரல் கீழிறங்கி மேல் வரும் கணம் உணரலாம்.

ஆத்மார்த்தமான அன்பைத் தேடும் அனைவருக்கும் இதுவொரு தேசிய கீதம். வார்த்தைக் கட்டுக்குள் எழுத முடியாத உணர்வலைகளை எழுப்பும் உன்னதம் இது.

பி.சுசீலாம்மாவின் குரலை அதுவும் தாலாட்டுப் பாடல்களுக்கு அவர் கொடுத்ததை வைத்து ஒரு ஆய்வு நூலே எழுதி விடும் அளவுக்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றார். இங்கே ராதிகாவுக்காகக் கொடுத்த பாடல்கள் அவை தாலாட்டுப் பாடல்களாகவும், குழந்தைப் பாடல்களாகவும் பல் பரிமாணம் கொண்டு விளங்குகின்றன.

அப்படியாக முதலில் பார்த்தால் வைரமுத்து வரிகளில் வரும் தாலாட்டுப் பாட்டு 

“வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி”

https://www.youtube.com/watch?v=UGcI9JqSlf0

ஆஸ்திரேலியா வந்த புதுசு சுற்றும் முற்றும் யாருமே இல்லாத அந்நியச் சூழல், கால்வயிறு நிறைந்தாலே போதும் என்று சொற்பமே இருக்கும் டாலரைக் கணக்குப்பார்த்து சிப்ஸையோ ஒரு வெறும் ப்ரெட் துண்டத்துடன் ஜாம் என வயிற்றுக்குமாக அந்தக் காலம் அப்போதுதான் என் துணையாக, இன்னும் நெருக்கமாக வந்தமர்ந்து கொண்டது இலங்கையிலிருந்து கொண்டுவந்த இளையராஜாவின் பாடல்கள். வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி பாட்டு ஒலிக்கும் போதெல்லாம் ஏழுகடலுக்கு அப்பாலிருந்து பறந்து வந்து என் அம்மாவே என் முதுகைத் தடவிவிடுவதுபோல உணர்வேன் சில்லிட்டு நிற்கும் மனசு.

“ஏலே இளங்குயிலே என்னாசைப் பைங்கிளியே 

பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தீன்சுவையே”

https://www.youtube.com/watch?v=1wgCb4guX2M


“நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க

தெய்வம் தான் தந்தது உன்னைத் தான் இளங்கிளியே”

அப்படியே அச்சொட்டாகப் பல்லாண்டுகளுக்குப் பின் என் வாரிசுக்க்காக என் மனசு ஆத்மார்த்தமாகப் பாடுவது போல இசைஞானி இளையராஜாவே எழுதி இசைமைத்த அந்த நினைவுச் சின்னம் படப் பாடல் இருக்கும்.

“மூடடி வாசற் கதவை

கண்கள் தான் பட்டு விடுமே

பாடடி பாசக் கவிதை

நெஞ்சம் தான் கெட்டு விடுமே”

பாட்டில் யதார்த்தத்தைக் கொடுக்கும் அந்த நிமிடம் ஆகா இசைஞானி என்றோர் கவிஞன் மீது இன்னுமொரு சொட்டு தேன்துளி மரியாதை.


இதே பாடல் மெட்டை “சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன செந்தூரச் செங்கல்லிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன” என்றும் கொடுத்திருப்பார்.

இந்தப் பதிவுக்குச் சம்பந்தம் இல்லாவிட்டாலும் பொறுத்தது போதும் படத்தில் இதே பாங்கில் “ஆராரோ பாட வந்தேனே” https://www.youtube.com/watch?v=OLM6eXbBHHE பாடலை சுசீலாம்மாவுக்கும், இளையராஜாவுக்கும் தனித்தனியாக அமைந்து “ஏலே இளங்குயிலே” பாடலின் அதே உணர்வை தான் கடத்தி நிற்கும்”

அது போல ராதிகாவுக்கான நேரடிப் பாடலாக இல்லாவிட்டாலும் 

கேளடி கண்மணி படத்தில் வரும் 

“கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று”

https://www.youtube.com/watch?v=mXfIEw1TU1c

கேட்டால் கண்கள் பொல பொலவென்று கொட்டித் தீர்க்கும்,


தாய் அன்பிற்கே...ஈடேதம்மா...


ஆகாயம் கூட அது போதாது...

தாய் போல் யார்...வந்தாலுமே....

உன் தாயை போலே அது ஆகாது...

P.சுசீலாம்மா குரலில் சுரக்கும் தாய்ப்பாலாக அந்தப் பாடல் எனக்குத் தொனிக்கும். என் பிள்ளை அருகில் இல்லாத சமயம் இந்தப் பாடலைக் கேட்டால் எப்படா போய்ப் பார்த்து அள்ளி அணைப்பேன் என்று தூண்டி விட்ட மந்திரப் பாட்டு இது. 

இது போல் ராதிகா நடித்தும் அவருக்கான பாடலாக இல்லாமல் கே.ஆர்.விஜயாவுக்காகக் கொடுத்த பாட்டு “பேர் சொல்லும் பிள்ளை நீதானே” (பேர் சொல்லும் பிள்ளை)

“தூரி தூரி தும்மக்க தூரி ஹோ”

https://www.youtube.com/watch?v=7JPVKV-QcA8

இந்தப் பாடல் படத்தில் குழந்தைகளோடு ராதிகா பாடும் சந்தோஷ மெட்டிலும், பின்னர் இழந்த குழந்தைகளை நினைத்துப் பாடும் சோகராகமாக இரு வடிவில் இருக்கும். சந்தோஷ மெட்டில் எஸ்.ஜானகி, யுவன், பவதாரணி சேர்ந்த அந்தப் பாட்டை பி.சுசீலாவுக்கான சோக சோக மெட்டு. சோகத்தை அப்படியே அள்ளிக் கொடுக்காமல் கொஞ்சம் தொய்வாகாப் பயணிக்கும் புதுமையைக் கொண்டு தென்றல் சுடும் படத்துக்காக ராதிகாவுக்காக அமைந்த சுசீலா பாட்டு இது.. 

“தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ 

ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ”

https://www.youtube.com/watch?v=ukx-KBpsHp4


ரெட்டை வால் குருவியில் இரண்டு மனைவியருக்கு ஒரே சமயம் பிரசவம், அந்த நேரம் வரும் பாட்டு இது. கங்கை அமரன் வரிகளில் பி.சுசீலாவுடன், சித்ரா இணைந்து பாடிய பாட்டு படத்தில் ராதிகா மற்றும அர்ச்சனாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

இந்தப் பாட்டைக் குழந்தைப் பாடலா அன்றிக் காட்சியமைப்போடு பொருத்தி வேடிக்கைப் பாடலா என்று பட்டிமன்றமும் வைக்கலாம் 



“சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா

செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா”

https://www.youtube.com/watch?v=sp1m6qWuozw

கருவுற்றிருக்கும் தன் மனைவி மேல் கொள்ளை அன்பு கொட்டித் தீர்க்கப் பாடும் கணவன் பாட்டு. கூடவே அந்த அன்பை முழுமனதாக ஏற்று 

“தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்

சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே”

என்று மனைவியின் குரலாய் ராதிகாவுக்குப் பொருந்திய பி.சுசீலாம்மா பாட்டு. இந்த மாதிரிப் பாடல்கள் எல்லாம் வெறும் திரையிசை என்று ஒதுக்க முடியாத குடும்ப பந்தத்தின் உணர்வோட்டத்தைப் பிரதிபலித்து நம்முள் கடத்துபவை. “மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்” பாடலுக்கு இந்தப் பாடல் சற்றும் குறைவில்லாதது ஆனால் காதல், திருமண பந்தம் என்று இருவேறு பரிமாணங்களின் உச்சம் கொட்டுபவை.

“பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்

கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்

அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்

அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்”


கானா பிரபா


Tuesday, April 13, 2021

தொட்டாச்சிணுங்கி 🌿


“தொட்டாச் சிணுங்கி” இந்தப் பெயர் மேல் ஒரு ஈர்ப்பு. அதுவும் இந்தப் பெயரில் ஒரு படம் வரப் போகிறது என்று தெரிந்ததுமே தலைப்பே கதையைக் கோடிட்டுக் காட்டியது. இந்த மாதிரி ஒற்றைச் சொல்லில் ஒரு படத்தின் முகவரியை நச்சென்று காட்டுவது மிக அரிதாகவே நிகழ்ந்திருக்கின்றது தமிழ் சினிமாச் சூழலில்.  


தொட்டாச் சிணுங்கியை நம்மூரில் தொட்டச் சுருங்கி என்போம்.

நம் வீட்டு வேலியை அண்டிய சிறு பற்றைகளில் தொட்டாச் சிணுங்கி முளைத்திருக்கும். செருப்புப் போடாத காலோடு மண்ணை அளைந்த பருவத்தில் அந்தப் பற்றைப் பக்கம் முள் கிள் குத்தினாலும் பரவாயில்லை என்று இறங்கி கால்கள் முள் ஆணிகளில் மோதி கடுக்கக் கடுக்க அந்தத் தொட்டாச் சிணுங்கிப் பற்றைக்குப் போய், மெல்ல மெல்லப் பாதம் பதித்துப் போய்,  பரந்து விரிந்திருக்கும் அந்தத் தொட்டாச் சிணுங்கி இலைப் பரப்பில் காலால் ஒரே அமுக்கு. அப்படியே எல்லாம் போர்க்களத்தில் தன் படைக்கலங்களை இழந்து ராமன் முன் தலை குனிந்து நின்ற இராவணத் தலைகள் போலச் சுருங்கி விடும்.


ஆனால் ஒரு பக்கம் கையால் சீண்டி அது சுருங்கும் அழகைப் பார்ப்பதும் தனி சுகம்.


தாவடிப் பக்கம் அப்பாவின் தோட்டக் காணி, அவருக்குச் சாப்பாடு கொண்டு போகும் சாக்கில் வழி நெடுக இரு மருங்கும் ஆங்காங்கே விளைந்த தொட்டாச் சிணுங்கிப் பற்றைகளை அமுக்கிக் கொண்டே போவேன். சில சமயம் அதற்குள் மறைந்திருக்கும் வில்லன் முட் பற்றைகள் காலைப் பதம் பார்த்து இரத்தம் வடியும். புழுதி மண்ணில் காலைத் தேய்த்து விட்டு அடுத்த தொட்டாச் சிணுங்கிப் பக்கம் போவேன்.


சாய் வித் சித்ராவில் இயக்கு நர் கே.எஸ்.அதியமான் பேட்டியை 26 வருடங்களுக்கு முன் “தொட்டாச் சிணுங்கி” படம் வந்த போது எழுந்த அதே ஈர்ப்பிலேயே பார்க்கத் தொடங்கினேன். 

இந்தப் பேட்டியின் சாராம்சம் “கண்மூடித் தனமான தன்னம்பிக்கை” அல்லது “இளங்கன்று பயமறியாது”


அதியமான் சுரேஷ் மேனன் சார் பற்றிப் பேசும் போதெல்லாம் அவர் மீதான நன் மதிப்பு இன்னும் ஏறிக் கொண்டே போய் விட்டது. வைரமுத்துவிடம் முரண்பட்ட கதை நல்ல கலகல. ஆனால் 

“ விடிகாலை விண் அழகு

விடியும் வரை பெண் அழகு”

இதற்கு வைரமுத்து கொடுத்த சப்பைக்கட்டை வைத்து இணையத்தில் இன்னொரு போராட்டம் கிளம்பும் என்று எதிர்பார்த்தேன். யாரும் கண்டுக்கவில்லைப் போல 😀


கார்த்திக், ரகுவரனின் இன்னொரு அழகான நல்ல பக்கம், ரேவதியின் அக்கா ஸ்தான பாசம் எல்லாம் நெகிழ வைத்தது.


இந்தப் பேட்டி வழியாக 23 வருடங்களுக்குப் பின் ஒரு உண்மையும் வெளிச்சிருக்கு.

தலைமுறை படம் வந்த போது அதில் அதியமான் அப்பட்டமாக நடிகர் பார்த்திபனைப் பிரதியெடுத்திருந்தார். அது எரிச்சலைக் கூடக் கிளப்பியது. அந்தப் படத்தில் தான் நடிக்கக் காரணமே பார்த்திபன் தான் என்று அவரோடு முரண்பட்ட கதையையும் சொல்கிறார் இந்தப் பேட்டியில்.

அந்தக் கால சஞ்சிகை ஒன்றில் பார்த்திபன் இந்த நகல் நடிப்பைப் பார்த்து அதியமானுக்கு டோஸ் விட்டதாகக் கூடச் செய்தி வந்தது. 


விடுதலை படப்பிடிப்பில் ரஜினிக்கு வசனம் சொல்லிக் கொடுக்கும் போது ரஜினி மாதிரியே பேசி பதிலுக்கு அவர் அதியமானிடம் “சூப்பர் சூப்பர்” ஆனா நீங்க வசனத்தை மட்டும் சொல்லுங்க” என்று சொன்ன பாங்கை நினைத்துச் சிரித்தேன்.


தொட்டாச்சிணுங்கி படம் வந்த காலத்தில் நான் மெல்பர்னுக்குப் படிக்க வந்து விட்டேன். எனவே இதில் ஆஸி இசையமைப்பாளர்கள் பிலிப் & ஜெர்ரி பணியாற்றுகிறார்கள் என்ற போது பெருமை பிடிபடவில்லை. ஆனால் இன்று வரை அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டவில்லை.


படத்தை ஓட வைப்பதற்காக என்ன வித்தையெல்லாம் காட்டியிருப்பார்கள் போல. 

மேக்னா சவுண்ட் புண்ணியத்தில் இலவச இசையாக எடுத்துக் கொண்டாராம் இப்படத்துக்கு.

படத்தில் நாகேந்திர பிரசாத் ரஜினி ரசிகன் ரஜினி புகழ்பாடும் பாட்டே இரண்டு இருக்கும். 

பெப்சி கோலா என்றொரு விளம்பரப் பாட்டு வேறு. இதே மாதிரி பின்னாளில் ஒளிப்பதிவாளர் சக இயக்குநர் தன் படத்துக்கு “உள்ளம் கேட்குமே ஃபெப்சி” என்று பெயர் வைத்து பிறகு ஃபெப்சி நிறுவனத்தோடு முட்டி அதைத் தூக்கியதும் வரலாறு 😀


தொட்டாச் சிணுங்கியோடு இன்று எனக்குள்ள பந்தம் அந்தப் படத்தில் வரும் “மனமே தொட்டாச் சிணுங்கி தானே” தான். அதியமானே எழுதியது..

தொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் ஹரிஹரனின் அலையில் மிக முக்கியமான பாட்டாக இதைச் சொல்வேன். 

பாடலின் பின்னணி இசை ஒரே திசையில் பயணிக்கும், அதன் மேல் ஹரிஹரன் நடந்து தன் நளினங்களைக் காட்டிப் பாடும் விதத்தை ஒவ்வொரு தடவையும் மெச்சி ரசிப்பேன். ஒரு காலத்தில் வானொலியில் நான் அதிகம் ஒலிபரப்பிய பாட்டுகளில் ஒன்று இது.


https://youtu.be/d-LhzUBqWSk


அதிகம் கேட்காவிட்டாலும் சித்ராவின் குரலில் இன்னொரு பரிமாணத்தில் வந்ததும் பிடிக்கும். 


https://youtu.be/sZ1boZNhXX4


நிழலே உன் பின்னால் நிலையில்லை

நிலவே இங்கு யாருக்கும் உறவு இல்லை

காற்றே தன் வழியது அறிந்ததில்லை

கட்லே தன் அலைகளை புரிந்ததில்லை

இதுதானே உலகின் நியதிய்டி


கானா பிரபா

Monday, April 12, 2021

சின்னதம்பி வெளியாகி 30 ஆண்டுகள்


தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் போர் உச்சம் பெற்ற காலத்தில் சவர்க்காரத்தில் இருந்து எரிபொருள் எல்லாம் இலங்கை அரசால் தமிழர் வாழும் வடக்குப் பகுதியில் தடை செய்யப்பட்டிருந்த நேரம், மின்சாரமும் இல்லாத மூன்றாண்டுகள். இந்தப் பொருளாதாரத் தடையால் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 250 ரூபாவாக விற்றுக் கொண்டிருந்தது. அந்த 250 ரூபா இப்போது இரண்டாயிரம் ரூபாவுக்குச் சமன். 

அந்த விலையிலும் கொள்ளையில போன பொழுது போக்கை விட்டோமா என்ன? சைக்கிள் டைனமோவை வலித்து சென்னை வானொலி நேயர் விருப்பம், திருச்சி வானொலியின் திரை கானம், சண் றெக்கோர்டிங் பாரில் பாட்டு பதிவு பண்ணிக் கேட்பது என்று ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்த 250 ரூபா மண்ணெண்ணெய் வாங்கி ஜெனரேற்றரில் படம் பார்ப்பது ஒரு உலக மகா பொழுது போக்கு. அந்த நேரம் தான் சின்னத்தம்பி படப் பாடல்கள் வந்து ஒரு உலுப்பு உலுப்பியது. கலியாண வீடு, பூசை வீடு லவுட்ஸ்பீக்கரில் இருந்து கோயில் மேள, நாதஸ்வரம் வரை “போவோமா ஊர் கோலம்” என்று ஒரு நாளிலேயே மூச்சுக்கு முன்னூறு தரம் பாடிக் கொண்டிருந்தன. 

நண்பர் வட்டத்தில் நான் தான் கே.டி.குஞ்சுமோன். அதாவது எந்தப் படத்தை ஓட்டினால் போட்ட முதலீடு திரும்பி வரும் என்று கணக்குப் போடுவேன்.

மண்ணெண்ணை அப்போது. ஆளுக்கு ஐம்பது ரூபா போட்டு சேர்த்த பணத்தில் ஒரு வீடியோக் கடைக்காரரிடம் ஜெனறேட்டரை வாடகைக்கு வாங்கி, சின்னத்தம்பி படத்தைப் பார்க்கவேண்டும் என்று முடிவு கட்டினோம். சின்னத்தம்பி பட வீடியோ கசற்றுக்கும் அப்போது ஏக கிராக்கி. ஆமிக்காரனைத் தாண்டிக்குளத்தில் தாண்டி ஒரு சில பிரதிகள் தான் வந்திருந்தன.

எங்கள் சகபாடி சுதா துப்பறிந்ததில் சாவகச்சேரியில் ஒரு வீடியோக்கடைக்காரரிடம் சின்னத்தம்பி படம் இருப்பதாகத் தெரிய வந்தது. முதலில் ஜெனறேட்டருக்கான வாடகைப் பணத்தைக் கொடுத்து ஒப்பந்தம் செய்துவிட்டு இணுவிலிலிருந்து சாவகச்சேரி நோக்கி சைக்கிள் வலித்தோம். ஒரு மாதிரி வீடியோக்கடைக்காரரின் வீடும் கண்டுபிடித்தாயிற்று. ஆனால் மனுஷனோ ஏகத்துக்குப் பிகு பண்ணினார். 

"தம்பியவை ! நான் அயலட்டையில் இருக்கிற சனத்துக்குத் தான் வாடகைக்கு கசற் குடுக்கிறது, உங்களை நம்பி எப்பிடித் தருவது " என்று அவர் சொல்லவும் 

சினிமா சான்ஸ் இழந்த புதுமுகத்தின் மனநிலையில் நான். கூடவந்த சகபாடி ஒருவனோ, 

" அண்ணை நம்பிக்கை இல்லையெண்டால், இந்தாங்கோ என்ரை Watch ஐ வச்சிருங்கோ" 

என்று (உணர்ச்சிவசப்பட்டு ) தன் கைக்கடிகாரத்தைக் கழற்ற வெளிக்கிடவும்,வந்தவர்களில் யாரிடமாவது அடையாள அட்டை இருந்தால் அதைக் கொடுத்துவிட்டு நாளை திரும்ப படக்கசற்றுடன் வரும் போது பெற்றுக்கொள்ளலாம் என்று வீடியோக்கடைக்காரர் கொஞ்சம் இறங்கிவந்தார். மணிக்கூடு கழற்றின நண்பனே தன் அடையாள அட்டையைப் பொறுப்பாகக் கொடுத்துவிட்டு பெரிய சாதனை ஒன்றை சாதித்த திருப்தியில் சின்னத்தம்பியுடன் சாவகச்சேரியில் இருந்து இணுவில் நோக்கிய பயணம்.

ஜெனேறேற்றர் குடிக்க இரண்டு போத்தல் மண்ணெண்ணை நானூறு ரூபாய் கொடுத்து வழியில் வாங்கி வந்தோம். அண்டை அயல் சனங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு படம் போட சுதா வீட்டில் ஒரு மணி நேரம் முன்பே டோரா போட்டிருந்தது. இப்படித்தான் சின்னத்தம்பி படம் பார்த்தோம். 


1991 ஆம் ஆண்டு சித்திரை வருடப் பிறப்பை ஒட்டி 

ஏப்ரல் 12 சின்னத்தம்பி

ஏப்ரல் 13 என் ராசாவின் மனசிலே

ஏப்ரல் 14 கேப்டன் பிரபாகரன்

என்று நான்கு மாபெரும் படைப்புகள் இசைஞானி இளையராஜா இன்னிசையில்

கொஞ்சம் தள்ளி ஏப்ரல் 19 கற்பூர முல்லை இளையராஜாவே தயாரித்து வெளியிட்ட படம்.

இப்போது பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். எப்பேர்ப்பட்ட இசைச்சாதனை அது. எல்லாப் படங்களும் பாடல்களால் கோலோச்சியவை. ஒன்று மிச்சம் விடாமல் ரசிகர்களால் இன்னும் கேட்கப்படுபவை.

சின்னத்தம்பியில் இசைஞானியின் இசைப் பங்களிப்பை பி.வாசு மெச்சும் காணொளி

https://www.youtube.com/watch?v=bBDlGILmQUA


சின்னதம்பியில் எட்டு பாடல்கள் (3 ஒரே மெட்டு) எல்லாவற்றையும் 35 நிமிடத்தில் மெட்டுப் போட்டுக் காட்டி ஒன்றரை நாளில் பாடல்களையும் பதிவு செய்து விட்டாராம் ராஜா. பி.வாசுவே சொல்கிறார்.

https://www.youtube.com/watch?v=I19swYP6D8E


இசையில் இந்த அசுர சாதனை இன்னமும் 30 ஆண்டுகளாக நிரப்பப்படாத வெற்றிடமே.

சின்னதம்பி படப் பாடல்கள்

https://www.youtube.com/watch?v=q6NEko5SEAY&t=3s



கானா பிரபா