Pages

Monday, December 30, 2019

இசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹

தமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்தைத் தக்க வைப்பதுமாகத் தொடர்கிறது. அவ்வப்போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்று யுகப் புரட்சி நிகழ்த்துபவர்களைத் தவிர்த்து மற்றையோரைப் பார்க்கும் போது திறமையில் சற்றும் குறையாத சாகித்தியம் கொண்டவர்களாக தம் சக இசையமைப்பாளர் மத்தியில் திகழ்வர். 

இவர்களில் எந்த மாதிரியான கதைக் களனுக்கும் ஈடு கொடுத்து, அதே சமயம் தம்முடைய தனித்துவத்தையும் தக்க வைத்துக் கொண்டு புதுமை படைத்த இசையமைப்பாளர்கள் தனியே நோக்கப்பட வேண்டியவர்கள். உதாரணத்துக்கு வித்யாசாகர் கொண்டிருந்த திறனைக் குறைத்து மதிப்பிடலாகாது.

2010 - 2019 என்று கடந்த தசாப்தத்தின் புதுவரவு இசையமைப்பாளர்களை எடுத்துக் கொண்டால்,
“புதிய தலைமுறை இசையமைப்பாளர்களில் சந்தோஷ் நாராயணன்  பின்னணி இசை தனித்துவமானது, மகத்துவம் நிறைந்தது #அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும்”
என்று சந்தோஷ் நாராயணன் வரவின் போது குறிப்பிட்டேன்.

“ ஒரு திரைப் படைப்பாக்கத்துக்கு வெறும் நாலு பாடல்களை இசையமைத்துப் பிரபலப்படுத்தி விட்டுப் போய் விட்டால் சரி என்ற நிலையில் தான் சமீபகாலப் போக்கு நிலவுகிறது. ஆனால் குறித்த திரைப்படத்தின் பின்னணி இசையும் உயிர் நாடி என்பதையும் உணர்ந்து சிரத்தையோடு இசை பண்ணிக் கொடுப்பவர்கள் மிகக் குறைவு. அந்த மிகச் சிலரில் ஜஸ்டின் பிரபாகரன் ஒரு முழுமையான இளைய தலைமுறை இசையமைப்பாளர். அதனால் தான் அவருக்கு "இசை இளவல்" என்ற பட்டம்  இட்டேன்.
"பண்ணையாரும் பத்மினி" படத்தில் தொடங்கி இன்று வரை இவர் இசையமைத்த படங்களைத் தேடி நுகர்வோர் இதை உணர்வர்.”

இப்படியாக 2016 இல் தொடர் இசைப் புரட்சி நிகழ்த்திய ஜஸ்டின் பிரபாகரனை மெச்சினேன்.

சந்தோஷ் நாராயணன் என்ன தான் நட்சத்திர இசையமைப்பாளராக இப்போது திகழ்ந்தாலும் ஆரம்பத்தில் இருந்த தேடல் சற்றே ஒரு குறுகிய வட்டத்துக்குள் போய் விட்டாற் போல மெட்ராஸ் படத்துக்குப் பின்னால் எழுந்த படைப்புகளின் வழி அனுமானிக்க முடிகிறது.

ஜஸ்டின் பிரபாகரனுக்கு இன்னும் பன்முகப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் அமைய வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் இந்தத் தசாப்தத்தின் வரவுகளில் அனிருத், ஹிப் ஹாப் தமிழா, ஷான் ரால்டன்,  சாம் C.S, கோவிந்த் வசந்தா, என்.ஆர்.ரகுநந்தன், தாஜ் நூர், விவேக் மெர்லின், நிவாஸ் கே பிரசன்னா, இவர்களோடு  பீனிக்ஸ் பறவை போல மீளவும் எழுந்த D.இம்மான் என்று நீளும் பட்டியலைத் தொடர்ந்தால் சொல்ல வந்ததின் திசை வேறிடம் போய் விடும் என்பதால் இத்தோடு நிறுத்.

இந்தத் தசாப்தத்தில் ஒரு முழுமையான, எல்லா விதமான கதைக்களனுக்கும் ஈடு கொடுக்கக் கூடிய, ஒரே குட்டைக்குள் ஓடிக் கொண்டிருக்காத, பரந்த தேடலும் பதித்தலும் கொண்ட, இன்னும் வற்றாத இசை ஞானம் கொண்டவராக இசையமைப்பாளர் ஜிப்ரானையே அடையாளப்படுத்துவேன். சொல்லப் போனால் அவரை ஒரு “ஜூனியர் வித்யாசாகர்” என்று குறிப்பிட்டாலும் பாதகமில்லை.

“வாகை சூடவா” ஜிப்ரானுக்கு முகவரி கொடுத்த படம். எடுத்த எடுப்பிலேயே ஒரு கிராமியப் பின்புலம் கொண்ட படத்துக்கு இசையமைப்பது என்பதே பாதி வெற்றியை உறுதி செய்து விடும். நகரம் தாண்டி வயல் காட்டில் நிற்பவரை முணு முணுக்க வைத்து விட்டால் அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளை மெல்ல மெல்லச் சுவீகரிக்கிறார் என்று அர்த்தம். இதுதான் இதற்கு முந்திய தொண்ணூறுகளில் தேவா விஷயத்திலும் நடந்தது. ஆனாலும் அங்கேயும் தன்னைத் தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்வதும் இலேசுப்பட்ட காரியமல்ல. ஜிப்ரான் இந்த விஷயத்தில் பயங்கரக் கெட்டிக்காரர். தன் முதல் படமான “வாகை சூடவா” படத்தில்
முழுமையான கிராமியத் தெம்மாங்கை மட்டுமே படர விடாது தன் முன்னோர் ஏ.ஆர்.ரஹ்மான் வழியில் கொஞ்சம் மேற்கத்தேய இசையாடலையும் ஊடுருவ வைத்தார்.

“களவாணி” படத்தின் வழியாக கவனிக்கத் தக்க ஒரு இயக்குநராக அடையாளப்பட்ட தஞ்சாவூர்க்காரர் எஸ்.சற்குணம், தன் அறிமுகப்படத்திலேயே அப்போது “பூ” படம் வழியாக அறியப்பட்ட எஸ்.எஸ்.குமரனோடு கை கோர்த்து அந்தப் படத்தின் கிராமிய மணம் மாறாமல் இசை வாசம் கொடுத்தவர். ஆனால் எஸ்.எஸ்.குமரனோ அவசர கதியில் தானும் இயக்குநராக ஆசைப்பட்டு “தேநீர் விடுதி” என்ற படத்தை ஆரம்பிக்கிறார். 
இந்தச் சூழலில் சற்குணம் தன்னுடைய அடுத்த படம் “வாகை சூடவா” என்ற முற்காலக் (period film) கதைப் பின்னணியில் படத்தை ஆரம்பிக்கிறார். சிங்கப்பூரில் ஏற்கனவே தன்னை ஒரு இசைக்கலைஞராக வளர்த்தெடுத்துக் கொண்ட ஜிப்ரானுக்கு நல்லதொரு வாய்ப்பு இதன் வழி பிறக்கிறது.

“டிங் டங் டிங் டடிங் 
சர சர சாரக் காத்து வீசும் போது 
சாரைப் பாத்துப் பேசும் போது 
சாரைப் பாம்பு போல 
நெஞ்சு சத்தம் போடுதே”

போறானே போறானே 
காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே 
போவாமத்தான் போறானே”

வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் ஹிட் அடிக்க, ஜிப்ரானை அள்ளி வாரி எடுத்துக் கொள்கிறது இசை ரசிகர் உலகம். வாகை சூடவா ஜிப்ரானுக்கு வெகு ஜன அந்தஸ்தோடு சிறந்த அறிமுக இசையமைப்பாளர்  விருதுகளையும் அள்ளிக் கொடுக்கிறது.
இந்த இடத்தில் ஜிப்ரான் எவ்வளவு தூரம் தன் சுயத்தின் மீது பெரு நம்பிக்கை கொண்டவர் என்பதற்கு வெறு பாடல்களோடு மட்டும் நில்லாது, தன் முதல் படத்திலேயே Lisbon International Symphony Orchestra கூட்டில் “ஆனா ஆவன்னா ஈனா” பாடலை உருவாக்கியதைக் குறிப்பிட வேண்டியது மிக முக்கியம். எடுத்த எடுப்பிலேயே வாகை சூடவா படப் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் சிலாகிக்கும் அளவுக்கு மிகப் பெரிய அங்கீகாரமும் கிட்டியது.

“கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
 என் செல்லக் கண்ணனே வா
 த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா !“

“திருமணம் எனும் நிக்காஹ்” பாடல்களை கொஞ்சம் “வாகை சூடவா” பாடல்களோடு ஒப்பிட்டுப் பாருங்களேன். எவ்வளவு தூரம் தனித்தும், வேறுபட்டும் ஜாலம் செய்யும். அதனால் தான் ஜிப்ரான் தன்னை ஒவ்வொரு படங்களிலும் நியாயம் செய்கிறார் என்கிறேன். “கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்” ஒரு அழகான செவ்வியல் இசை சார்ந்தது,

 “சில்லென்ற சில்லென்ற காற்றிலே
  சிறகை விரித்தேனே”
பார்த்தீர்களா ஒரே படத்துக்குள்ளேயே இன்னொரு தனித்துவம் பொங்கும் இஸ்லாமிய சூபி மரபில் ஒரு இசைக் கீற்று. 
“திருமணம் எனும் நிக்காஹ்” படம் குறித்த தவணைக்குள் வந்திருந்திருந்தால் ஜிப்ரானுக்கு வாய்ப்பு ரீதியாக மிகப் பெரிய பாய்ச்சல் கிட்டியிருக்கும்.

“மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே”

சித்ரா பாடிய இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? ஆமென்றால் நீங்களும் ஜிப்ரானை விடாமல் துரத்தி ரசிக்கும் ரசிகரே தான். சித்ராவின் தணிந்த குரலைக் கேட்கும் போது காட்சிச் சூழலையும் தொடர்புபடுத்தினால் இரட்டிப்பு லாபம் கிட்டும்.
இந்தப் பாடல் மட்டுமல்ல இந்தப் பாடலோடு இடம் பிடித்த அமர காவியம் படப் பாடல்கள் எல்லாம் ஜிப்ரானுக்கு இன்னொரு வாசலைக் காட்டியவை.
“ஏதேதோ எண்ணம் வந்து” பாடலில் மையல் கொண்டிருக்கும் போது

தாகம் தீரகானல் நீரை
காதல் இன்றுகாட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே

கண்கள் ஈரத்தை
காணும் நேரத்தில்
விழி வழி உயிர் போகுதே
அந்தி நேரத்தில்
அன்பின் ஏக்கத்தில்
உயிரேனை மனம் தேடுதே...”

இந்தப் பாடல் மனதின் அடியாழம் வரை ஊடுருவி காதலின் ஊற்றுக்கன்ணைத் திறக்கும். இந்தப் பாட்டையெல்லாம் போகிற போக்கில் அப்படியே கடந்து விடக் கூடாத அளவுக்கு ஜிப்ரானின் மாய இசை நம்மை மயக்கும். 

“வத்திக்குச்சி” வழியாக “அம்மா wake me up”, “ஆத்தா உன் சேல ஆகாயம் போல” - குட்டிப் புலி என்று அவ்வப்போது ஜாலம் செய்தவர் மீண்டும் சற்குணத்தோடு இணைந்த “நய்யாண்டி” பாடல்களிலும் ஜிப்ரான் அவ்வளவு வாகை சூடவில்லை. “அதே கண்கள்” இன்னொரு வரவு என்ற கணக்கிலேயே இருந்தது.

“காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை“

தொடர்ந்து தமிழ், தெலுங்கு என்று திரைப்படங்களுக்கு இசை கொடுத்து வந்தவர் கமல்ஹாசனின் செல்லப் பிள்ளை போல கமலின் தயாரிப்பில் மிளிர்ந்த படங்கள் வரை தொடர ஏதுவாக இருந்தது “உத்தம வில்லன்”.
வணிக ரிதியில் உத்தம வில்லன் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், கமலின் சோதனை முயற்சியில் தோளோடு தோளாக இயங்கிய ஜிப்ரனின் இசை உழைப்பே பின்னாளில் அந்த மூத்த கலைஞனின் நம்பிக்கைக்குரிய இசையாளனாகும் அங்கீகாரத்தைச் சமைத்தது. உத்தம வில்லனை காலம் கடந்து இன்று பாடல்களோடும், பின்னணி இசையோடும் அணுக்கமாகப் பார்க்கும் போது ஜிப்ரான் இந்த நன் மதிப்பைப் பெற எவ்வளவு தூரம் உழைத்திருக்கிறார் என்பது புலனாகும். 
பின்னாளில் “தீரன் அதிகாரம் ஒன்று”, “ராட்சசன்” போன்ற படங்களில் பின்னணி இசையை திகில் கொண்டு காட்சிப் புலத்தின் வலிமையைக் கூட்ட ஜிப்ரான் புது இயக்குநர்களின் நாடித் துடிப்பானதும் முக்கியமாகச் சொல்ல வேண்டியவை.

“சின்ன சின்ன கண்ணசைவில் 
உன் அடிமை ஆகவா
செல்ல செல்ல முத்தங்களில் 
உன் உயிரை வாங்கவா
லாலி லாலி நான் உன் தூளி தூளி”
 இந்தப் பாட்டை எல்லாம் repeat mode இல் வைத்துக் கேட்பேன். அந்தப் படத்தில் இன்னொரு நல் முத்து “செவத்தப் புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேன் நான்”.
“யெய்யா என் கோட்டிக்காரா” (பாப நாசம்), “போகாதே போகாதே” ( சென்னை 2 சிங்கப்பூர்) பெண் குரல் பாட்டு இவற்றோடு கொஞ்சம் கால தாமதமாகக் கண்டுணர்ந்து ரசித்த “தோரணம் ஆயிரம் பார்வையில் காட்டிடும் காட்சியில் என்ன இருக்கு? (அறம்) பாடல்கள் ஜிப்ரானை புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன.

வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்....

தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா..,,

2019 ஆம் ஆண்டின் ஆகச் சிறந்த பாடல்களில் 
முதல் வரிசையில் இந்தப் பாடலை வைத்து நோக்குவேன். கடாரம் கொண்டான் படத்துக்காக ஜிப்ரான் கொடுத்த பாட்டு, இந்த ஆண்டு ஆக அதிகம் ஹிட் பாடல்களைக் கொடுத்த சித் ஶ்ரீராமோடு பொருந்திப் போவது இன்பகரமானதொரு அதிர்வலையைக் கொடுக்கும். இந்தத் தசாப்தத்தை தன் பங்குக்கு ஜிப்ரான் வெகு அழகாக “தாரமே தாரமே” கொண்டு நிறைத்து வைக்கிறார்.

இந்தப் பத்தாண்டுகள் இசையமைப்பாளர் ஜிப்ரானைப் பொறுத்தவரை அவரின் இசைத் திறனை முழு அளவில் உள் வாங்கக் கூடிய  தீனியைக் கொடுத்து உயர்த்தி விட்டவை. கிராமியம், நகரம், திகில், காதல் என்று எல்லா விதத் தளங்களிலும் தன் இசையைத் தனித்துவம் கொண்டு நிரூபித்தவர். ஆனால் அவ்வப்போது தேர்ந்தெடுக்கும் படங்களில் சோடை போகிறாரோ என்ற எண்ணமும் எடடிப் பார்க்கும். அந்த மாதிரியானதொரு எண்ணப்பாட்டை மாற்றித் தன் பாணியைத் தொடர்ந்தால் 2020 இலிருந்து அடுத்த பத்தாண்டுகள் கூட ஜிப்ரான் வசப்படும்.

உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்

தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்

தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே தாரமே தாரமே வா

கானா பிரபா
30.12.2019



Wednesday, December 18, 2019

தேனிசைத் தென்றல் தேவா இசையில் 🌴மரிக்கொழுந்து 🎋 ❤️ நம்ம ஊரு பூவாத்தா 🌿


“கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு
 உன் காதல் கவிதைகளின் வரிகளைக்
  கொஞ்சம் திருப்பிக் கொடு”

இந்தப் பாடல் வந்த நாள் தொட்டு இந்த ஆரம்ப வரிகளில் கண்டிப்பாக இசையமைப்பாளரின் பங்கு இருக்க வேண்டுமென்றே எண்ணிக் கொண்டேன்.
அதையே சமீபத்தில் Chai with Chithra பேட்டியில் உறுதி செய்தார் தேனிசைத் தென்றல் தேவா. இயக்குநருக்குத் தான் கொடுத்த மெட்டு ஒன்றும் திருப்திப்படாமல் போகவே, தானே டம்மி வரிகளை இட்டுப் போட்ட பாட்டு இது என்றார். பாடலின் சரணத்தை பாடலாசிரியர் காமகோடியன் எழுதி முடித்தார். “கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு” சமீபத்தில் கூட பாடல் இசை இசைஞானி இளையராஜா என்று ஒரு பண்பலை வானொலி உச்சரிக்கக் கேட்டேன். 😀

“கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு” போலவே தேவாவின் 50 வது படமான சோலையம்மா வில் “ராசா இளையராசா பாட்டுப் படிக்க்கிறேன் கேளு நா மதுரைப் பக்கத்து ஆளு” https://youtu.be/wYRsv2HEun8
 என்று கங்கை அமரன் & எஸ்.ஜானகியை வைத்து ஒரு அழகிய பாடலைக் கொடுத்தையும் இங்கே நினைவுபடுத்த வேண்டும்.

“மரிக்கொழுந்து” படம் வருவதற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்ட படம். அந்தக் காலத்தின் அழகு தேவதை ஐஸ்வர்யாவுக்கு முகமெல்லாம் கரி பூசி வித்தியாசப் “படுத்தி” பொம்மை, பேசும் படம் சினிமா இதழ்களில் காட்சிப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தார்கள்.
இந்தப் படத்தில் தாய், மகள் என்று இரட்டை வேடம் போட்ட ஐஸ்வர்யாவுக்கு இதுவே அவரின் வாழ்நாளில் பேர் சொல்லும் படமாகவும் இருக்கக் கூடும்.

இயக்குநர் புதியவன் தன் குரு நாதராக பாரதிராஜாவையும், பார்த்திபனையும் வணங்கி முதல் மரியாதை படத்தின் புல்லாங்குழல் இசையோடே படத்தை ஆரம்பிக்கும் போதே தடுமாற்றம் தட்டுகிறது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா, ரமேஷ் அர்விந்த், கவுண்டமணி உட்பட நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும் படத்தின் திரைக்கதையோட்டமும், காட்சி வடிவமைப்பும் கை கொடுக்கவில்லை. இன்று வரை படத்தை நினைவில் வைத்திருக்க ஒரே காரணம் தேனிசைத் தென்றல் தேவா கொடுத்த தேனான பாடல்கள் தான்.

மரிக்கொழுந்து படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். கவிஞர் வாலி மற்றும் காமகோடியன் பங்கிட்டுக் கொண்டார்கள்.
இயக்குநர் புதியவன் பாடல் விஷயத்தில் மகா ரசனைக்காரர் போல.
கண்ணதாசனே பாடலோடு, எஸ்.ஜானகியின் “என் பாட்டு தான்”, சித்ரா பாடிய “பூங்குயில் நித்தம்”ஆகியவை சம காலத்தில் ஹிட்டடித்தன. தேவா இசையில் அதிசயமாக எஸ்.பி.சைலஜா “எனக்கென்ன குறைச்சல்” என்ற விரகதாபம் சொட்டும் பாடலைப் பாடியிருக்கிறார். அந்தக் காலத்தில் பெரும் புள்ளி படத்தில் “பொன்மகள் வந்தாள்” பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியது போல இங்கே “துள்ளுவதோ இளமை” பாடலை எஸ்.ஜானகி பாடி ரீமிக்ஸியிருக்கிறார். “தொடத் தொடத் தொடங்கும் பூஜை தான்” அமைதியாக வந்து ஆக்கிரமிக்கும் கிராமியத் தெம்மாங்கு.
இன்று வரை தேவா இப்படியொரு குரல் தொனியில் பாடவில்லை என்று அதிசயப்படுமளவுக்கு ஒரு பாட்டு இருக்கிறது. அது “ஆலமரமாம் ஆலமரமாம் ஊருக்குள்ள, ஆசைக் குயிலாம் ஆசைக்குயிலாம் சோகத்துல” என்று அமையும் பாட்டு. ஏனோ பலர் கவனத்தை ஈர்க்கவில்லை இது.

மரிக்கொழுந்து பாடல்களைக் கேட்க

https://youtu.be/z4lMU2eeqmM

வெற்றிகரமான இசையமைப்பாளர் & இயக்குநர் கூட்டு எனும் போது தொண்ணூறுகளில் தேனிசைத் தென்றல் தேவா & இயக்கு நர் மணிவாசகம் கூட்டணியை மறவாமல் குறிப்பிட வேண்டும். அந்த வகையில் இந்த இருவர் கூட்டணிக்கும் பிள்ளையார் சுழி போட்ட படம் “நம்ம ஊரு பூவாத்தா”. தேவாவுக்கு ஆரம்ப காலத்தில் தொடர்ந்து கிராமியப் படங்களே கிடைத்ததால் அவரின் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள இது பெரும் பலமாக அமைந்தது. அந்த வகையில் “நம்ம ஊரு பூவாத்தா” வாய்ப்பும் தேவாவை கிராமங்கள் வரை எடுத்துச் செல்லப் பேருதவி புரிந்தது.
இந்தப் படத்தின் வழியாக நடிகை கெளதமிக்கும் அவரின் திரையுல வாழ்வின் மறக்க முடியாத பாத்திரப் படைப்பும் கிடைத்தது.

90களில் கிராமங்களின் எல்லை வரை அறியப்பட்டிருந்தார் இயக்குநர் மணிவாசகம். நடிகர் சரத்குமாருக்கு ஆரம்ப காலத்தில் நல்லதொரு அடித்தளமிட இவரின் பங்களிப்பும் முக்கியமானது. மணிவாசகம் - சரத்குமார் - தேவா கூட்டைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்.

 வழக்கமாக தேவாவுடன் வெற்றிகரமான கூட்டு வைக்கும் இயக்குநர்கள் இளையராஜாவுடன் இணையும் போது பெரிய வெற்றியைக் கொடுத்ததில்லை என்பதற்கு மணிவாசகமும் விதிவிலக்கல்ல. ராஜாவுடன் இணைந்த “ராக்காயி கோயில்” சுமாராகவே போனது.
மணிவாசகத்தின் முதல் படமான “நம்ம ஊரு பூவாத்தா” அவரின் சொந்தப் படமாகவே அமைந்தது. இதிலும் ராக்காயி கோயில் கதையின் முக்கிய அங்கமாக வருகிறது.
முரளி, கெளதமி ஜோடியுடன், மணிவாசகம் படங்களில் கலக்கும் கவுண்டமணி & செந்தில் கூட்டோடு பக்கா கிராமிய மணம் கொண்ட படம். முதல் படமே இயக்குநர் மணிவாசகத்துக்கு தேனிசைத் தென்றல் தேவா இசையோடு ஒரு அடையாளம் கொடுத்தது.

“நம்ம ஊரு பூவாத்தா” படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள், அனைத்தையும் எழுதியவர் கவிஞர் காளிதாசன். அவற்றில் சித்ரா பாடிய
“மஞ்சனத்திப் பூவே இளம் சிட்டுக்குருவிகளே”
பட்டி தொட்டி எங்கும் வாசம் வீச
“மாராப்பு போட்ட புள்ள” எஸ்.பி.பி & சித்ரா,
“சின்னச் சின்னப் பூவே செம்பகப்பூ தேனே”
கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா கூட்டில் வந்த சந்தோஷ மெட்டுகளோடு “ஆவாரம் பூவு ஒண்ணு நாரோடு வாடுதுன்னு” சோக ராகமும் இனித்தது.

நம்ம ஊரு பூவாத்தா பாடல்களைக் கேட்க
https://youtu.be/L-T4ifayzy4

என்னென்ன கோலம் உண்டு ஜாதி உண்டு
உன் கண்ணில்..
ஏழெட்டு நாகம் வந்து தீண்டுதம்மா
என் நெஞ்சில்..

எழுதுகிறோம் பல பாடல்களை
எங்கள் காதலுக்கு
இளம் உள்ளங்களில்
அதன் எண்ணங்களில்
சுகம் சேர்ந்திருக்கு

#தேனிசைத்_தென்றல்_தேவா
#ஆர்ப்பாட்டம் இல்லா ஆரம்பகாலம்
#குறுந்தொடர் 🎹

கானா பிரபா
18.12.2019

Wednesday, December 11, 2019

“இசைத் தென்றல்” தேவா கொடுத்த 🎻 மாங்கல்யம் தந்துனானே 🥁



ஒரு அறிமுக இயக்குநரின் படம் முதல் காட்சி முடிந்த கையோடு தியேட்டரில் இருந்து விநியோகஸ்தருக்கு படப் பெட்டிகள் திருப்பி அனுப்பப்படுகின்றன. ஏனென்றால் முதல் காட்சியின் வசூல் நிலவரம் அப்படி.
அதே இயக்கு நர் ஐந்து ஆண்டுகள் கழித்து எடுத்த படமோ சிறந்த இயக்கு நருக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொடுக்கிறது அவருக்கு. அது மட்டுமல்ல 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தேசிய விருது கடந்த 42 ஆண்டுகளாக தமிழில் எந்த ஒரு இயக்குநருக்கு கிடைக்காதது இவருக்குத் தான் முதன் முதலில் கிடைத்திருக்கிறது. அவர் தான் இன்று அகத்தியன் என்று அறியப்படும் பிரபல இயக்குநர்.
முன் சொன்ன அந்த ஒரு காட்சியோடு பெட்டிக்குள் போன படம் “மாங்கல்யம் தந்துனானே”, சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைக் கொடுத்தது நாமெல்லாம் அறிந்த “காதல் கோட்டை”.
தமிழ்ப் படங்கள் மூலம் பாடம் படிக்கிறோமோ இல்லையோ தமிழ்ப் படம் எடுத்தவர்களால் இந்த மாதிரி ஏராளம் பாடம் படிக்கலாம். ஒன்று எப்பேர்ப்பட்ட படு தோல்வியும் அவமானமும், இன்னொன்று எப்பேர்ப்பட்ட மாபெரும் அங்கீகாரமும், வசூல் வெற்றியும். ஏனெனில் சிறந்த இயக்குநர் என்றால் ஓடாத கலைப்படங்கள் ஆகி விடுமே?
சரி இனி “மாங்கல்யம் தந்துனானே” படம் பற்றிப் பார்ப்போம்.

“மக்கள் அன்பன் K.பிரபாகரன்” நாயகனாக நடிக்க, “கவிமுனி காளிதாசன்” பாடல் வரிகளுக்கு “இசைத்தென்றல் தேவா” இசையில் மாங்கல்யம் தந்துனானே என்று ஏகப்பட்ட பில்ட் அப்புகள் பின்னர் ஆப்புகள் ஆயின. ஏற்கனவே மனசுக்கேத்த மகராசா படத்தின் கதை எழுதியவர் அதில் கருணாநிதி
என்ற இயற்பெயரோடு அடையாளப்பட்டவர் இந்தப் படத்திலோ ரவிதாசன் என்ற பெயரில் இயக்கினார். அந்த ரவிதாசன் என்ற பெயருக்கு முதலும் கடைசியுமாக அமைந்தது மாங்கல்யம் தந்துனானே. தொடர்ந்து ராசியான அகத்தியன் என்ற பெயரோடே இயங்கி வருகிறார். அகத்தியன் நல்ல கதை சொல்லியாக இருந்தாலும் தயாரிப்பாளர் வேண்டுகோள் நிமித்தமோ என்னமோ
M.A.கென்னடியின் கதையையே இப்படத்துக்கு எடுத்துக் கொண்டார்.

1991 ஆம் ஆண்டு இரண்டு பெரிய தயாரிப்பாளர்கள் நாயகர்களாக உருவெடுத்தார்கள். ஒருவர் “என் ராசாவின் மனசிலே” வெற்றிப்படம் கொடுத்த ராஜ்கிரண். இன்னொருவர் இந்த “மாங்கல்யம் தந்துனானே” படத்தின் நாயகன் கே.பிரபாகரன். ஏற்கனவே சிறுசும் பெரிசுமாக பாத்திரங்களில் நடித்தவர் ஜானி படத்தில் ரஜினியின் காதலி தீபாவோடு ஓடி, காலில் சூடு வாங்குபவர் அவரே தான் இவர். அந்தக் காலத்தில் இருந்தே ரஜினியோடு நட்புப் பாராட்டுபவர். இவரின் பட பூஜைகளுக்கும் ரஜினி சிறப்பு விருந்தினர். ராஜ்கிரணுக்கும், கே.பிரபாகரனுக்கும் இன்னொரு ஒற்றுமை.
இருவருமே ராமராஜனை வைத்துப் படம் பண்ணியவர்கள். ராஜ்கிரண் தயாரிப்பில் என்னப் பெத்த ராசா, கே.பிரபாகரன் தயாரிப்பில் “தங்கத்தின் தங்கம்” ஆகியவற்றில் ராமராஜன் நடித்தார். ராஜ்கிரணுக்கும், கே.பிரபாகரனுக்கும் ஒரு வேற்றுமை என்னவெனில் ராஜ்கிரண் தான் நாயகனாக நடித்த படத்துக்கு அவரே தயாரிப்பாளர். ஆனால் கே.பிரபாகரன் நாயகனாக நடித்த “மாங்கல்யம் தந்துனானே” படத்தைத் தன் அன்பாலயா பிலிம்ஸ் சார்பில் தயாரிக்காமல் தப்பித்துக் கொண்டார்.

“வைகைக்கரைப் பூங்காத்தே
 வாசம் சிந்தும் தேன் பாட்டே
 சொல்லச் சொல்ல பேசும் கிளியே
மெல்ல மெல்ல பாடும் குயிலே
தேடும் இரு கண்ணில்
என் தேவன் வரவில்லையே ”
அந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோ அபிமானிகள் மின்மினி பாடிய இந்தப் பாடலை அடிக்கடி கேட்கத் தவறியிருக்க மாட்டார்கள்.
மாங்கல்யம் தந்துனானே படத்தில் ஒரு புதுமை செய்தார் இசையமைப்பாளர் தேவா. வழக்கமாக எஸ்.பி.பி, ஜேசுதாஸ் போன்றோரைத் தன் படங்களில் இடம் பெற வைத்தவர் இதிலோ ஜெயச்சந்திரன், மின்மினி, கிருஷ்ணசந்தர் என்று அடுத்த் அடுக்குப் பாடகர்களைச் சேர்த்துக் கொண்டார்.

“ஏதோ மோகம் ஏதோ தாகம்” பாட்டு மாதிரி தேவா கொடுத்தால் எப்படியிருக்கும்?
அதுதான் “ஒரு மல்லிகைப் பந்தலும்”
கிருஷ்ணசந்தர், சித்ரா பாடியிருப்பார்கள்.
அந்தக் காலத்து தேவா பாடல்களில் இன்னமும் இனிக்கும் பாட்டு இது.
“வைகைக் கரைப் பூங்காற்றே” பாடலை ஜெயச்சந்திரனும், மின்மினியும் தனித்தனியாகப் பாடியிருப்பார்கள்.

“நான் சொல்ல மாட்டேன்
அதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்”
 என்று இந்தப் பக்கம் தேவா,
“பாவம் விடாது” என்று அந்தப் பக்கம் அன்பாலயா பிரபாகரனும் பாடி ஆசையைத் தீர்த்தார்கள். இங்கேயும் கிருஷ்ணராஜ் தன் பெயரை ராஜன் சக்ரவர்த்தி என்றே அடையாளப்படுத்தியிருக்கிறார்.

“காட்டு வழி பாதையிலே
 கண்டெடுத்த ஆணி முத்து
 நான் புடிச்ச மாமன் மவன் தான்
மனசுக்குள்ள நட்டு வச்சான்
காதல் செடி தான்”

கிராமிய வாசனை இல்லாமல் சென்னை நகரச்சூழலில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு
கிராமத்து அடி நாதம் எப்படியிருக்கும் என்று தன் பாடல் வழியே கற்பித்தவர் இசைஞானி இளையராஜா என்று தேவா மெச்சிப் புகழ்ந்திருக்கிறார். உண்மையில் அப்படியொரு வாய்ப்பை உள்வாங்கிக் கொண்டு தன் இசையைச் செப்பனிட்டுத் தொண்ணூறுகளில் தெம்மாங்குப் பாடல்களுக்கு ஒரு தனி அந்தஸ்தைக் கொடுத்த தேவாவுக்கு உண்மையில் ஒரு பெரும் பாராட்டைக் கொடுக்க வேண்டும். அப்படியொரு பாராட்டைக் கொடுக்கும் போது இந்த “காட்டு வழிப் பாதையிலே” ஐயும் கைப்பிடித்துக் கூட்டிச் செல்லுங்கள்.

துள்ளி நடந்த நிலவே
கண்ணு ரெண்டில்
தொட்டு இழுத்த மலரே
வெள்ளி கொலுசு மணியில்
என் மனச
அள்ளி முடிச்ச அழகே ❤️

மாங்கல்யம் தந்துனானே
படப் பாடல்களைக் கேட்க
https://youtu.be/GD8Mhm-yG3w

#தேனிசைத்_தென்றல்_தேவா
#ஆர்ப்பாட்டம் இல்லா ஆரம்பகாலம்
#குறுந்தொடர் 🎹

கானா பிரபா
11.12.2019

Tuesday, December 10, 2019

மனசுக்கேத்த மகராசாவும் 🎸🌴 மண்ணுக்கேத்த மைந்தனும்



“ஆறெங்கும் தானுறங்க
ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க
திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே ராசா
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா”

யாரடா இது அச்சு அசலா இளையராஜாத்தனத்தோடு பாட்டுப் போட்டிருக்கிறது என்று அப்போது ஆச்சரியப்பட்டுப் போனோம். ஆனால் அந்த ஆச்சரியம் தொண்ணூறுகளில் அகல விரியும் என்று அப்போது எமக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. காரணம் எண்பதுகளில் ஒரேயொரு ராஜா அது இளையராஜா என்று தனிக்காட்டு ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்த சூழல் அது. அப்போது சந்திரபோஸ், அவ்வப்போது கங்கை அமரன், அடிக்கடி T.ராஜேந்தர் என்று இசையுலக சிற்றரசர்களையும் நம் காதுகள் அரவணைத்து உபசரித்த போதும் இம்மாதிரிப் புது வரவுகள் கிரீடம் சூட்டுவார்களா என்று எட்டிப் பார்த்ததுண்டு. அப்படியொரு யோகம் தான் “மனசுக்கேத்த மகராசா” படப் பாடல்களைக் கேட்ட போதும்.

"மனசுக்கேத்த மகராசா" ராமராஜன் இயக்குநர்  பணியிலிருந்து நாயகனாக அடுத்த கட்டத்துக்குப் போன போது வந்த முக்கிய படமாக இது விளங்கியது.
அப்போது வாய்ப்புத் தேடி அலைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கும் வாழ்க்கைப் பாதையைக் காட்டியது இது. முன்னர் மாட்டுக்கார மன்னாரு படத்துக்கு C.தேவா என்ற அறிமுகத்தோடு வந்திருந்தாலும் இந்தப் படம் தான் அவருக்கு A தர நிலையில் கிடைத்த திருப்புமுனை.

"மனதோடு மனோ" ஜெயா டிவி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டபோது இந்தப் படத்துக்கு வாய்ப்புக் கிட்டிய அனுபவத்தை மிகவும் சுவையாகச் சொல்லியிருந்தார். ஆட்டோ பிடித்து ஆர்மோனியப் பெட்டியையும் போட்டுக் கொண்டு தயாரிப்பாளரைச் சந்திக்கப் போன போது நடு வழியில் வண்டி நின்று விடவே வாத்தியக் கருவியைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தும், ஓடியும் போய் தயாரிப்பாளரைச் சந்தித்ததாகவும், அந்த வட இந்தியத் தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைக்க ஹிந்திப் பாடலை எல்லாம் பாடிக் காட்டியதாகவும் சொல்லியிருந்தார்.

ராமராஜனைப் பொறுத்தவரை இசைஞானி இளையராஜாவின் இசையில் படங்கள் ஆக்கிரமித்த போதும் எஸ்.ஏ.ராஜ்குமார், கங்கை அமரன், தேவா போன்றோர் இசையிலும் நடித்திருக்கிறார். இவர்களில் தேவாவின் இசையில் மனசுக்கேத்த் மகராசா படமே மிகவும் பிரபல்யத்தை அப்போது கொடுத்தது. கிராமிய மெட்டில் அமைந்த பாடல்களில் "ஆறெங்கும் தானுறங்க" (எஸ்.ஜானகி, மனோ குரல்களில்) ஆறு கடல் மீனுறங்க" பாடலை மறக்க முடியுமா? இந்தப் பாடல் வந்த போது அப்போது ஒன்றாகச் சேர்ந்து பாட்டுக் கேட்கும் நமது ஊர் நண்பர்களுடன் சிலாகித்துப் பேசியிருந்தோம். அதே போல சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய "ஆத்து மேட்டுத் தோப்புக்குள்ளே "பாடலும் கூட.

மனசுக்கேத்த மகராசா படத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் தேவாவுக்குக் கிட்டிய ஆரம்பகால வாய்ப்பிலேயே கே.ஜே.ஜேசுதாஸ் நீங்கலாக பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன், உமா ரமணன், சித்ரா, மனோ, என்று 80 களில் கொடிகட்டிப் பறந்த அனைத்துப் பாடகர்களும் இந்தப் படத்தில் பாடியிருந்தார்கள். ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இது மாதிரியான வாய்ப்பு எனக்குத் தெரிந்து இதுவே முதல் முறை. இது மாதிரி வாய்ப்பே இனி வராதே.

"மனசுக்கேத்த மகராசா" படத்தின் கூட்டணி நாயகன் ராமராஜன், இயக்குநர்
தீனதயாள், இசையமைப்பாளர் தேவா, கவிஞர் காளிதாசன் ஆகியோர் மீண்டும் இணைந்து கொடுத்த ஒரு அட்டகாச இசை விருந்து "மண்ணுக்கேத்த மைந்தன்" திரைப்படம் வாயிலாக அமைந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற "சிந்தாமணிக்குயிலே" (மனோ, எஸ்.ஜானகி), ஏ.ஆர்.ஷேக் மொஹமெட் பாடிய "ஓடுகிற வண்டி ஓட", "கண்ணில் ஆடும் நிலவே" (எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா) போன்ற பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. அந்தக் காலகட்டத்தில் பாடகர் கிருஷ்ணராஜ் தனது பெயரை ராஜன் சக்ரவர்த்தி என்றே அறிமுகப்படுத்தியிருந்தார். "மண்ணுக்கேத்த மைந்தன்" படத்தின் பாடல்கள் "வைகாசி பொறந்தாச்சு" படத்தின் ஒலிநாடாவில் வெளி வந்து அப்போது புகழ்பெற்றாலும் படம் வெளிவந்த சுவடே இல்லை.

ராமராஜனுக்கும் பின்னாளில் தேவாவோடு இணைந்து மனசுக்கேத்த மகராசா அளவுக்கு சிறப்பான பாடல் கூட்டணியாக அமையவில்லை.

சினிமாப் பாடல்களைப் பாடிப் பழகிய மெல்லிசைக் குழுவினர் ஒரு கட்டத்தில் தாமாகவே இசையமைக்கும் வல்லமையைப் பெற்றுவிடுவார்கள். தேனிசைத் தென்றல் தேவா கூட அப்படித்தான். போஸ் (சந்திரபோஸ்) - தேவா இரட்டையர்களாக மெல்லிசை மேடைகளில் கிட்டிய பயிற்சி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சந்திரபோஸ் முதலில் (80 களில்)  அடுத்து தேவா (90 களில்) என்று இயங்க வைத்தது. தேவாவின் இசை நேர்மை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் "மனசுக்கேத்த மகராசா" வில் தொடங்கி "வைகாசி பொறந்தாச்சு" தந்த நட்சத்திர அந்தஸ்த்தை வைத்துக் கொண்டு அவர் தனித்துவமாகக் கொடுத்த பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மனசுக்கேத்த மகராசா பாடல்கள் எல்லாமே சிறப்பான தெம்மாங்கும், நவீனமும் சேர்ந்த கலவை என்றாலும் தேவா மிகவும் நுட்பமான
இசைத் திறனைக் காட்டிய வகையில் “முகமொரு நிலா” பாடலைத் தான் கை காட்டுவேன்.
அந்தப் பாடலைக் கேட்டாலே போதும் தேவா தனக்கான வெற்றிப் பாதையை எவ்வளவு சிறப்பாகப் போட்டிருக்கிறார் என்பதை. மெட்டமைத்ததில் இருந்து வாத்தியக் கருவிகளின் பயன்பாடு வரை சிறப்பாக அமைந்திருக்கும்.

தேனிசைத் தென்றல் தேவா - பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் கூட்டணி தனித்துவமாக நோக்கப்பட வேண்டியது. அது குறித்துப் பின்னர் பேசுவேன். இங்கே ஒரு தகவலுக்காக
மட்டும் ஒரு செய்தி. காளிதாசன் தன் இயற்பெயரான திருப்பத்தூரான் என்ற பெயரிலேயே மனசுக்கேத்த மகராசாவில் அடையாளப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தில் சக பாடல் பங்களிப்பை வழங்கியவர் புலவர் புலமைப் பித்தன்.

நடிகர் ராமராஜன் இயக்குநராக இருந்த சமயம் அவர் இயக்கத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது “மண்ணுக்கேத்த பொண்ணு”. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மறைந்த வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பா. பின்னர் இசையமைப்பாளர் தேவா, நடிகர் ராமராஜன், இயக்குநர்  தீனதயாள் வெற்றிக் கூட்டணியாக மனசுக்கேத்த மகராசா படத்தில் அறியப்பட, பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில் இதே கூட்டணி
இணைந்து கொடுக்க இருந்த திரைப்படம்
“மண்ணுக்கேத்த மைந்தன்”.

வேடிக்கை என்னவென்றால் அண்ணாமலை ஒலிப்பேழையின் மறு பக்கத்தில் வானமே எல்லை பாடல்கள் இருக்க அந்த வகையில் வானமே எல்லை பாடல்களைக் கேட்டு ரசித்தது போல, வைகாசி பொறந்தாச்சு படத்தின் ஒலிப்பேழையின் மறு பக்கத்தில் “மண்ணுக்கேத்த மைந்தன்” பாடல்கள் இருந்தது. அதனாலேயே இந்தப் படப் பாடல்களை அப்போது கேட்டு ரசிக்க வாய்ப்புக் கிட்டியது.

“சிந்தாமணிக் குயிலே
மணக்கும் புது
செந்தாழம் பூ மடலே.....”

எடுத்த எடுப்பிலேயே மண்ணுக்கேத்த மைந்தன் படப் பாடல்களில் ஈர்ப்பை ஏற்படுத்தியது இதுதான். கோவை கமலா முதல் எஸ்.பி.பி வரை எல்லா ரகப் பாடகர்களையும் இந்தப் படத்திலும் தேவா பாட வைத்ததைத் தனியே குறிப்பிட வேண்டும்.

“ஓடுகிற வண்டியோட
ஒத்துமையா ரெண்டு மாடு”
இன்றும் கூட இலங்கை வானொலிகளில் அடி தூள் பின்னுகிற பாட்டு இது. மண்ணுக்கேத்த மைந்தனை இன்றும் மறவாமல் வைத்திருக்கிறது ஏ.ஆர்.ஷேக் முகம்மதுவின் குரலில் வந்த இந்தப் பாட்டு.

ஆரம்பத்தில் பக்திப் பாடல்களுக்கு இசையமைத்த தேவாவை திரைப்படத்திலும் ஒரு ஆன்மிகப் பாடல் அதுவும் கிறீஸ்தவப் பாடலுக்கு ஒத்திகை எடுத்தது
“ஒன்றே வானம் ஒன்றே பூமி
ஒன்றே தெய்வம் சொல்லுங்கள்” பாடல். மலேசியா வாசுதேவன் பாடியதால் “தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே” பாடலைச் சம நேரத்தில் நினைவுபடுத்தும் இது.

“கண்ணில் ஆடும் நிலவே
 சந்தோஷக் கவிதை பாடும் குயிலே”
பின்னாளில் தேவாவுக்கென்று தனி முத்திரைப் பாடல்களை இனம் காண இந்த “கண்ணில் ஆடும் நிலவே” பாணியிலேயே பல பாடல்களை இசையமைத்திருக்கிறார். தேவாவின் இசைக்கான தனி வடிவத்தைக் கொடுத்த பாடல்களில் இந்த எஸ்.பி.பி & சித்ரா கூட்டுப் பாடல் முக்கியமானது. தொண்ணூறுகளில் தேவா கொடுத்த ஒரு தொகைப் பாடல்களின் முன்னோடி இசை இதுவெனலாம்.

ஏனோ காரணத்தால் மண்ணுக்கேத்த மைந்தன் படம் வரவில்லை. ஆனால் பாடல்களைக் கேட்கும் போது இசையமைப்பாளர் தேவா, நடிகர் ராமராஜன், இயக்குநர்  தீனதயாள் என்ற மூவர் கூட்டணியின் இன்னொரு வெற்றிச் சித்திரமாக அமைந்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தேவா பிரபலமாகி விட்ட காலத்தின் பின்னர்
“ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க“ பாடலைக் கேட்கும் போது ஆர்மோனியப்பெட்டி சகிதம் மெட்டுப் போட்டுப் போட்டு அவரே பாடுவது போன்ற உணர்வே எழும்.

“மனசுக்கேத்த மகராசா”
பாடல்களைக் கேட்க

https://youtu.be/CXCbYjxyUlo

“மண்ணுக்கேத்த மைந்தன்”
பாடல்களைக் கேட்க

https://youtu.be/Go6cdHmFnZ0

#தேனிசைத்_தென்றல்_தேவா
#ஆர்ப்பாட்டம் இல்லா ஆரம்பகாலம்
#குறுந்தொடர் 🎹

கானா பிரபா
10.12.2019

Saturday, December 7, 2019

L.R.ஈஸ்வரி 💃 80



“அம்மம்மா கேளடி தோழி
 சொன்னானே ஆயிரம் சேதி
 கண்ணாலே வந்தது பாதி
 சொல்லாமல் வந்தது மீதி”

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்திய இரவுகளில் வானொலிக்கூடத்தில் தனிமையில், அந்த ஏகாந்தத்தை அனுபவித்துக் கொண்டே அடிக்கடி ஒலிபரப்பிய இந்தப் பாடலை நினைத்துக் கொண்டேன் இன்று. காலையில் வானொலி நிகழ்ச்சி படைக்கும் போதும் இந்தப் பாடலையே L.R.ஈஸ்வரிக்கான பிறந்த நாள் பாடலாக ஒலிபரப்பி நேயர்களின் தெரிவுகளுக்கும் வழி விட்டேன்.
லூர்து மேரி ராஜேஸ்வரி என்ற L.R.ஈஸ்வரியின் பிறந்த நாள் இன்று.

ஒரு பக்கம் P.சுசீலாத்தனமான முந்தானையை இழுத்து மூடியது போல அடக்கம் தொனிக்கும் குரல், இன்னொரு பக்கம் உஷா உதூப் போல துள்ளிசையில் தெறிக்கும் குரல் இப்படியாகப்பட்ட இரு வேறு பரிணாமங்களில் எல்.ஆர்.ஈஸ்வரியைத் தாண்டி இன்னொருவரின் உச்சத்தைக் காண முடியவில்லை. அவ்வளவு தூரம் பன்முகம் கொண்ட பாடகி இவர். அது மட்டுமா?

ஆடி மாசம் அம்மனுக்குக் கூழ் ஊத்துற நினைப்போடு குழாய் கட்டி அம்மன் பாடல்கள் முந்திக் கொள்ளும். சந்திக்குச் சந்தி “கற்பூர நாயகியே கனகவல்லி” எல்.ஆர்.ஈஸ்வரிகள் பாடிக் கொண்டிருப்பார்கள். பக்திப் பாடல் மரபில் சீர்காழி கோவிந்தராஜனைத் தொடர்ந்து எல்.ஆர்.ஈஸ்வரியையும் சேர்த்து விட்டுத் தான் மற்றவர்கள் வரிசையில் வரக் கூடிய அளவுக்கு பக்தி இலக்கியத்திலும் புகழோச்சியவர்.

கே.பாலசந்தரின் இரண்டு படங்கள்.
ஒன்று வி.குமார் இசையமைத்த “வெள்ளி விழா”, இன்னொன்று எம்.எஸ்.விஸ்வநாதன் இசை கொடுத்த “மன்மத லீலை”.

“காதோடு தான் நான் பாடுவேன்
 மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் உறவாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்”
என்று கணவனின் நெஞ்சத் தொட்டிலில் முகம் சாய்த்து ஆரும், ஊரும் கேளா வண்ணம் “வெள்ளி விழா”வில் பாடும் இந்தக் குரல் தான்
“ஹல்லோ....
பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்
பூஜையறை பார்க்கும் ஆசை வரக்கூடும்”

என்று தொலைபேசி வழியே சல்லாபம் கொட்டக் கிசிகிசுப்பார். இந்த மாதிரிக் காட்சியின் திறன் அறிந்து தன் குரலின் தொனியை மாற்றி, பாடலைக் கேட்கும் போதே நம் மனக் கண்ணில் அந்தச் சூழலைக் கொண்டு வருவது தான் எப்பேர்ப்பட்ட வல்லமை.
அது எல்.ஆர்.ஈஸ்வரியிடம் இருக்கிறது.

“இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்குக் கவலை எதுக்கு
Love Birds.......”
அப்படியே ஒரு ஆர்ப்பாட்டமான மன நிலைக்குத் தூக்கிக் கொண்டு போய் வைத்து விடுவார். ஆரம்ப இசை கூட இல்லாமல் நேரே அந்தத் துள்ளல் உணர்வைச் சுமக்க வேண்டிய தார்ப்பரியத்தை உணர்ந்து அப்படியே வெகு இலகுவாகக் கடத்தி விடுவார் நமக்கும். கூடப் பாடிய ஆனானப்பட்ட எஸ்.பி.பியே ஆளை விடுங்கய்யா எல்.ஆர்.ஈஸ்வரி போல இவ்வளவு தூரம் பாட யாரால் முடியும் என்று சரணாகதி அடைந்து விடுவார். அந்த ஆங்கில உச்சரிப்பில் பக்கா இங்கிலீஷ்காரி இந்த எல்.ஆர்.ஈஸ்வரி.

“தேடினேன் வந்தது நாடினேன் தந்தது” ஊட்டி வரை உறவு படத்துக்காக பி.சுசீலா பாடியது எல்.ஆர்.ஈஸ்வரிக்குத் தான் போய் சேர வேண்டியது ஆனால் அந்தச் சூழலில் அவர் இல்லாததால் சுசீலாவுக்குப் போனதாக ஒரு செய்தி. அந்தப் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரிகான நளினத்தை உணரலாம். ஊட்டி வரை உறவு படத்தில் பி.சுசீலாத்தனமான பாட்டு “ராஜ ராஜஶ்ரீ” பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது புதுமை.

“எலந்தப் பழம்....எலந்தப் பழம்” இந்தப் பாட்டு அந்த நாளில் கேட்டால் சரஸ்வதிப் பெரியம்மா நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார். தான் பள்ளிச் சிறுமியாக இருந்த காலத்தில் வந்தது என்று கொள்ளைப் பிரியத்தோடு கேட்பார்.
கே.வி.மகாதேவன் இசையில் பின்னாளில் சர்வசாதாரணமாக அங்கீகரிக்கப்பட்டாலும் வெளிவந்த காலத்தில் ஒரு ஆபாசக் கிளப்பி என்று பொங்கித் தீர்த்ததாக ஊர்ப் பெருசுகள் சொல்வார்கள். எல்.ஆர்.ஈஸ்வரிக்கு மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது இந்தப் பாட்டு. “வாராய் என் தோழி வாராயோ” கூட ஆரம்ப கால அடையாளம் இவருக்கு.

“பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” இல்லாத் பாட்டுப் போட்டி மேடைகளைக் காட்ட முடியுமா? சிவந்த மண் படம் வெளிவந்து இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் கழித்தும் இந்தப் பாட்டு நினைவில் நிறைந்திருக்க அந்தச் சாட்டையடி வாங்கிக் கொண்டே உதறும் குரலும், நளினமான பாவங்களும் கொடுத்த எல்.ஆர். ஈஸ்வரி தானே முக்கிய பங்காளி?

இதே மாதிரி “ஆடவரலாம் ஆடவரெல்லாம்”, “முத்துக் குளிக்க வாரீகளா” என்று துள்ளிசை ஒரு பக்கம்,

“ பேசாத கண்ணும்
பேசுமா......
பெண் வேண்டுமா
பார்வை போதுமா”

என்னவொரு நக்கல் தொனியைக் கொடுப்பார் ஈஸ்வரி, பாவம் T.M.செளந்தரராஜன் தன் பாட்டுக்கு வெகு கர்ம சிரத்தையாக “பார்வை ஒன்றே போதுமே” பாடிக் கொண்டிருக்கையில்.

இல்லற சுகத்தை இனிமை தரும் பாட்டாய் இன்னொன்று “இது மாலை நேரத்து மயக்கம்”.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வழியாக ஏராளம் நன் முத்துகள் வித விதமாக எல்.ஆர்.ஈஸ்வரிக்குக் கிடைத்தது.
அதே நேரம் “அம்மனோ சாமியோ” என்று
“நான்” படத்தில் பக்கா துள்ளிசை ஒன்றைக் கொடுத்துத் தனியாக இசையமைக்கச் சென்ற
T.K.ராமமூர்த்தி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு இன்று வரை ஒரு முகவரிப் பாடலாகவும் ஆக்கி விட்டார்.

“அடி என்ன உலகம் இதில் எத்தனை கலகம்”
ஒரு படத்தின் சாரத்தை அசரீரியாகக் கொண்டு வரும் நுட்பம் அவள் ஒரு தொடர்கதை படத்தின் வழியே ஈஸ்வரியின் குரலாய், அது போலவே மூன்று முடிச்சில் “அவள் ஒரு கதாநாயகி”. அது போல எழுபதுகளில் ஒரு அரிய முத்து “நிலவே நீ சாட்சி” படத்தில் மெல்லிசை மன்னரோடு இவர் களியாட்டம் போட்ட “நீ நினைத்தால் ஏதேதோ நடக்கும்”

 அந்தக் காலத்து மார்டன் தியேட்டர்ஸ், விஜயலலிதா எல்லாம் நினைப்புக்கு வந்தால் எல்.ஆர்.ஈஸ்வரியும் கூட வருவார். உதாரணத்துக்கு “வல்லவன் ஒருவன்” படத்தில்
“பளிங்கினால் ஒரு மாளிகை” பாட்டில் எப்பேர்ப்பட்ட கவர்ச்சிகரமான வில்லத்தனம் காட்டுகிறது இந்த ஈஸ்வரிக் குரல்.

இன்னோர் பக்கம்
“அன்னை போல என்னைக் காத்த
அன்பு தெய்வமே.....”
என்று தானும் உருகி நம்மையும் உருக்கி விடுகிறாரே?

அறுபது ஆண்டுகளைக் கடந்து பாடிக் கொண்டிருப்பவரை ஒரு கட்டுரையின் கொள்ளளவில் அடக்க முடியாதெனினும் ஆசை தீர நினைவில் நின்றவைகள அவரின் அகவை எண்பதில் நினைத்துப் பார்த்து இசையால் வாழ்த்துகிறேன்.

இதுதான் சுகமோ இன்னும் வருமோ
இளமை தருமோ மயக்கம் வருமோ...
அம்மம்மா கேளடி தோழி....

இலங்கை வானொலியின் எண்பதுகளின் இரவின் மடிகளில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவது போன்றொரு அசரீரி காதில் கேட்கிறது.

எல்.ஆர்.ஈஸ்வரி நம் எல்லார் ஈஸ்வரி.

கானா பிரபா
07.12.2019