Pages

Wednesday, December 11, 2019

“இசைத் தென்றல்” தேவா கொடுத்த 🎻 மாங்கல்யம் தந்துனானே 🥁



ஒரு அறிமுக இயக்குநரின் படம் முதல் காட்சி முடிந்த கையோடு தியேட்டரில் இருந்து விநியோகஸ்தருக்கு படப் பெட்டிகள் திருப்பி அனுப்பப்படுகின்றன. ஏனென்றால் முதல் காட்சியின் வசூல் நிலவரம் அப்படி.
அதே இயக்கு நர் ஐந்து ஆண்டுகள் கழித்து எடுத்த படமோ சிறந்த இயக்கு நருக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொடுக்கிறது அவருக்கு. அது மட்டுமல்ல 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தேசிய விருது கடந்த 42 ஆண்டுகளாக தமிழில் எந்த ஒரு இயக்குநருக்கு கிடைக்காதது இவருக்குத் தான் முதன் முதலில் கிடைத்திருக்கிறது. அவர் தான் இன்று அகத்தியன் என்று அறியப்படும் பிரபல இயக்குநர்.
முன் சொன்ன அந்த ஒரு காட்சியோடு பெட்டிக்குள் போன படம் “மாங்கல்யம் தந்துனானே”, சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைக் கொடுத்தது நாமெல்லாம் அறிந்த “காதல் கோட்டை”.
தமிழ்ப் படங்கள் மூலம் பாடம் படிக்கிறோமோ இல்லையோ தமிழ்ப் படம் எடுத்தவர்களால் இந்த மாதிரி ஏராளம் பாடம் படிக்கலாம். ஒன்று எப்பேர்ப்பட்ட படு தோல்வியும் அவமானமும், இன்னொன்று எப்பேர்ப்பட்ட மாபெரும் அங்கீகாரமும், வசூல் வெற்றியும். ஏனெனில் சிறந்த இயக்குநர் என்றால் ஓடாத கலைப்படங்கள் ஆகி விடுமே?
சரி இனி “மாங்கல்யம் தந்துனானே” படம் பற்றிப் பார்ப்போம்.

“மக்கள் அன்பன் K.பிரபாகரன்” நாயகனாக நடிக்க, “கவிமுனி காளிதாசன்” பாடல் வரிகளுக்கு “இசைத்தென்றல் தேவா” இசையில் மாங்கல்யம் தந்துனானே என்று ஏகப்பட்ட பில்ட் அப்புகள் பின்னர் ஆப்புகள் ஆயின. ஏற்கனவே மனசுக்கேத்த மகராசா படத்தின் கதை எழுதியவர் அதில் கருணாநிதி
என்ற இயற்பெயரோடு அடையாளப்பட்டவர் இந்தப் படத்திலோ ரவிதாசன் என்ற பெயரில் இயக்கினார். அந்த ரவிதாசன் என்ற பெயருக்கு முதலும் கடைசியுமாக அமைந்தது மாங்கல்யம் தந்துனானே. தொடர்ந்து ராசியான அகத்தியன் என்ற பெயரோடே இயங்கி வருகிறார். அகத்தியன் நல்ல கதை சொல்லியாக இருந்தாலும் தயாரிப்பாளர் வேண்டுகோள் நிமித்தமோ என்னமோ
M.A.கென்னடியின் கதையையே இப்படத்துக்கு எடுத்துக் கொண்டார்.

1991 ஆம் ஆண்டு இரண்டு பெரிய தயாரிப்பாளர்கள் நாயகர்களாக உருவெடுத்தார்கள். ஒருவர் “என் ராசாவின் மனசிலே” வெற்றிப்படம் கொடுத்த ராஜ்கிரண். இன்னொருவர் இந்த “மாங்கல்யம் தந்துனானே” படத்தின் நாயகன் கே.பிரபாகரன். ஏற்கனவே சிறுசும் பெரிசுமாக பாத்திரங்களில் நடித்தவர் ஜானி படத்தில் ரஜினியின் காதலி தீபாவோடு ஓடி, காலில் சூடு வாங்குபவர் அவரே தான் இவர். அந்தக் காலத்தில் இருந்தே ரஜினியோடு நட்புப் பாராட்டுபவர். இவரின் பட பூஜைகளுக்கும் ரஜினி சிறப்பு விருந்தினர். ராஜ்கிரணுக்கும், கே.பிரபாகரனுக்கும் இன்னொரு ஒற்றுமை.
இருவருமே ராமராஜனை வைத்துப் படம் பண்ணியவர்கள். ராஜ்கிரண் தயாரிப்பில் என்னப் பெத்த ராசா, கே.பிரபாகரன் தயாரிப்பில் “தங்கத்தின் தங்கம்” ஆகியவற்றில் ராமராஜன் நடித்தார். ராஜ்கிரணுக்கும், கே.பிரபாகரனுக்கும் ஒரு வேற்றுமை என்னவெனில் ராஜ்கிரண் தான் நாயகனாக நடித்த படத்துக்கு அவரே தயாரிப்பாளர். ஆனால் கே.பிரபாகரன் நாயகனாக நடித்த “மாங்கல்யம் தந்துனானே” படத்தைத் தன் அன்பாலயா பிலிம்ஸ் சார்பில் தயாரிக்காமல் தப்பித்துக் கொண்டார்.

“வைகைக்கரைப் பூங்காத்தே
 வாசம் சிந்தும் தேன் பாட்டே
 சொல்லச் சொல்ல பேசும் கிளியே
மெல்ல மெல்ல பாடும் குயிலே
தேடும் இரு கண்ணில்
என் தேவன் வரவில்லையே ”
அந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோ அபிமானிகள் மின்மினி பாடிய இந்தப் பாடலை அடிக்கடி கேட்கத் தவறியிருக்க மாட்டார்கள்.
மாங்கல்யம் தந்துனானே படத்தில் ஒரு புதுமை செய்தார் இசையமைப்பாளர் தேவா. வழக்கமாக எஸ்.பி.பி, ஜேசுதாஸ் போன்றோரைத் தன் படங்களில் இடம் பெற வைத்தவர் இதிலோ ஜெயச்சந்திரன், மின்மினி, கிருஷ்ணசந்தர் என்று அடுத்த் அடுக்குப் பாடகர்களைச் சேர்த்துக் கொண்டார்.

“ஏதோ மோகம் ஏதோ தாகம்” பாட்டு மாதிரி தேவா கொடுத்தால் எப்படியிருக்கும்?
அதுதான் “ஒரு மல்லிகைப் பந்தலும்”
கிருஷ்ணசந்தர், சித்ரா பாடியிருப்பார்கள்.
அந்தக் காலத்து தேவா பாடல்களில் இன்னமும் இனிக்கும் பாட்டு இது.
“வைகைக் கரைப் பூங்காற்றே” பாடலை ஜெயச்சந்திரனும், மின்மினியும் தனித்தனியாகப் பாடியிருப்பார்கள்.

“நான் சொல்ல மாட்டேன்
அதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்”
 என்று இந்தப் பக்கம் தேவா,
“பாவம் விடாது” என்று அந்தப் பக்கம் அன்பாலயா பிரபாகரனும் பாடி ஆசையைத் தீர்த்தார்கள். இங்கேயும் கிருஷ்ணராஜ் தன் பெயரை ராஜன் சக்ரவர்த்தி என்றே அடையாளப்படுத்தியிருக்கிறார்.

“காட்டு வழி பாதையிலே
 கண்டெடுத்த ஆணி முத்து
 நான் புடிச்ச மாமன் மவன் தான்
மனசுக்குள்ள நட்டு வச்சான்
காதல் செடி தான்”

கிராமிய வாசனை இல்லாமல் சென்னை நகரச்சூழலில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு
கிராமத்து அடி நாதம் எப்படியிருக்கும் என்று தன் பாடல் வழியே கற்பித்தவர் இசைஞானி இளையராஜா என்று தேவா மெச்சிப் புகழ்ந்திருக்கிறார். உண்மையில் அப்படியொரு வாய்ப்பை உள்வாங்கிக் கொண்டு தன் இசையைச் செப்பனிட்டுத் தொண்ணூறுகளில் தெம்மாங்குப் பாடல்களுக்கு ஒரு தனி அந்தஸ்தைக் கொடுத்த தேவாவுக்கு உண்மையில் ஒரு பெரும் பாராட்டைக் கொடுக்க வேண்டும். அப்படியொரு பாராட்டைக் கொடுக்கும் போது இந்த “காட்டு வழிப் பாதையிலே” ஐயும் கைப்பிடித்துக் கூட்டிச் செல்லுங்கள்.

துள்ளி நடந்த நிலவே
கண்ணு ரெண்டில்
தொட்டு இழுத்த மலரே
வெள்ளி கொலுசு மணியில்
என் மனச
அள்ளி முடிச்ச அழகே ❤️

மாங்கல்யம் தந்துனானே
படப் பாடல்களைக் கேட்க
https://youtu.be/GD8Mhm-yG3w

#தேனிசைத்_தென்றல்_தேவா
#ஆர்ப்பாட்டம் இல்லா ஆரம்பகாலம்
#குறுந்தொடர் 🎹

கானா பிரபா
11.12.2019

0 comments: