Pages

Tuesday, July 9, 2024

அனுராதா ஶ்ரீராம்

 



90’ஸ் மழலைகளில் தொட்டில் குரலாக ஒலித்தவர்களில் அனுராதா ஶ்ரீராமுக்குத் தனியிடம் உண்டு.

 

பல்வேறு விதமான பாடல்களைப் பாடும் திறனும், வாய்ப்பும் முன்னணிப் பாடகர்களுக்குத் தானாகத் தேடி வந்தாலும்,

குறித்த பாடலை மிக இலாகவமாகக் கையாளும் திறன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. 

நடிப்புக் கலைஞன் எப்படி ஒப்பனை கடந்து அந்தப் பாத்திரப் படைப்பாகவே மாறும் திறன் போலே, பாடகர்களும் அடிப்படை இசையறிவு தாண்டிய குரல் வித்தை தெரிந்திருக்க வேண்டும்.

இந்த மாதிரியான நுட்பமும், அதைக் கையாளும் திறனும் வாய்த்தவர்களில் அனுராதா ஶ்ரீராமைத் தவிர்க்கவே முடியாது.

 

இன்று 

     முதல்

          இரவு…..

நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா
மெத்தை போட்டு வை

 

https://www.youtube.com/watch?v=9yIFgiXbV7I

 

 உன்னிகிருஷ்ணனோ சாதுவாக உருகி உருகிச் சாதகம் பண்ணிக் கொண்டிருக்க இவரோ,  கட்டைக்குரலில் பாட்டு முழுக்க அதகளம் பண்ணியிருப்பார்.


பாடகிகள் பலர் இம்மாதிரியான வித்தையைக் காட்டியிருந்தாலும் ஒரு காதல் பாடலைக் கையாளும்போது அப்படியே தொடக்கத்தில் இருந்து முடியும் வரை தம் கட்டிக் கொண்டு அடிக் கிணறுக்குள் நின்று பாடும் வித்தையெல்லாம் ஆஹா.

 

அந்த மாதிரியான குரல் வங்கியிலிருந்தா

 

வேண்டும் ஒரு 

சூரியனே

நீ அனுப்பு 

குளிர் கேட்கிறதே

 

நலம் நலமறிய ஆவல்

 

https://www.youtube.com/watch?v=lc2eM5AbmhI

 

இப்படியொரு குளிர்ப் பிரவாகம் பிறக்கிறது என்பதொரு அதிசயம் காட்டுவார்.

அப்படியே இன்னொரு பக்கம் போய்

 

“ஏண்டி சூடாமணி

காதல் வலியைப் 

பார்த்ததுண்டோடி....

 

https://www.youtube.com/watch?v=TpaNs1E-GUQ

 

 

என்று மிரட்டுவார்.

 

இதுதான் ஒரு திரையிசைப் பாடகரின் பல்பரிமாணம். கானாபிரபா

அதில் தேர்ச்சியையும் முதிர்ச்சியையும் தன்னுடைய பாட்டுப் பயணத்தின் குறுகிய காலத்திலேயே காட்டக் கூடிய வல்லமையையும், வாய்ப்புகளையும் பெற்றவர் அனுராதா ஶ்ரீராம்.

 

 

முறையான சாஸ்திரிய சங்கீதத்தில் தேர்ச்சியோடு திரையிசையின் கதவு திறந்த அனுராதா ஶ்ரீராமுக்கு வாய்ப்பு என்ற வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானால் “பம்பாய்” படத்தில் கூட்டுப்பாடகியாக,

(அதில் மேலதிகமாகச் சேர்க்கப்பட்ட பாடல் மலரோடு மலரிங்கு https://www.youtube.com/watch?v=i32sVy9yEn0) அறிமுகமானவர்.

 

ஆனால் அதற்கு முன்பே  Track பாடகியாக இருந்தார் என்ற தகவலைச் சமீபத்தில் தான் விஜய் சூப்பர் சிங்கரில் பகிர்ந்தவர் அவ்விதம் பி.சுசீலாவுக்காகப் பாடிய பாடல்  இசைஞானி இளையராஜாவின் “ அரும்பாகி மொட்டாகி” என்று குறிப்பிட்டிருந்தார்.


அனுராதா ஶ்ரீராம் தன் ஆய்வுப் பட்டத்துக்காக இசைஞானி இளையராஜாவின் பாடல்களை எடுத்திருந்தார். இந்தப் படைப்பு நூலுருவில் வந்திருந்தால் நமகெல்லாம் வரப்பிரசாதமாக இருக்கும்.

 

“சின்ன வெண்ணிலா சாய்ந்ததே

தோளில்....”

https://www.youtube.com/watch?v=No-snJqXc9c

 

என்று காதல் ரோஜாவே படத்துக்காக இசைஞானி தன் பாடகர் குழுவோடு உள்வாங்கிக் கொண்டார்.


 

“அன்பென்ற மழையிலே” பாடலை இப்போதெல்லாம் கிறிஸ்துமஸ் காலத்தில் ஒலிபரப்பாத வானொலிகளே இல்லை எனலாம்.

இவரின் தனித்த குரலுக்கு அங்கீகாரமாக அமைந்து விட்டது அந்தப் பாடல்.

 

தொண்ணூறுகளில் தேனிசைத் தென்றல் தேவா ஒரு பக்கம் சொல்லி மாளாத பாடல்களை அள்ளி வழங்கிய போது, அனுராதா ஶ்ரீராமுக்குக் கொடுத்தவை மாமூல் தாண்டி, ரகம் ரகமாக அமைந்த ராகங்கள். அதையும் சமீபத்தில் தேவா முன்னிலையில் நன்றி பகிர்ந்தார்.

 

பாடல் வரிகளில் விரசம் இருந்தாலும், அதைத்தாண்டி அந்தப் பாடலை மோகிக்க, குறித்த குரல்களின் நளினம் ஒன்றே போதும் என்று அடிக்கடி நான் ரசிக்கும் பாடல்களில் ஒன்று 

“ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி”

https://www.youtube.com/watch?v=UU-PJSs4X84

 

கேகேயோடு இணைந்த அந்தத் துள்ளிசைப் பாடலில் கூட ஒரு கனிவான குரலோடு பயணித்திருப்பார்.

 

 

“ஹே மச்சானே மச்சானே....

 ஐயாரெட்டு நாட்டுக்கட்டை” (மஜா)

 

https://www.youtube.com/watch?v=g4ah9ExU53Q

 

என்று சங்கர் மகாதேவன் வகையறா

 

இன்னொரு பக்கம்

 

“ஏன் மம்முதா அம்புக்கு ஏன்

இன்னும் தாமசம் ஆஆ....

 

https://www.youtube.com/watch?v=6xvTQL7ri-k

 

என்று பக்கா தெம்மாங்கும்,

 

நிதம் நிதம் தான் 

காதல் ராகம்

நிகழ்த்திட தான் 

கேட்கும் தேகம்

என் மனதைக் கொள்ளையடித்தவனே

https://www.youtube.com/watch?v=yNdcpuwfJLw

 

 

என்று மேற்கத்தேயப் பிரவாகத்திலும் ஹரிஹரன் போன்ற பாடகர்கள் தான் அனுராதா ஶ்ரீராம் என்ற பாட்டுக் குதிரைக்கு சமமான ஜோடிக் குதிரையாகத் துள்ளிக் கொண்டிருக்க, மிகவும் அமைதியாக உன்னிகிருஷ்ணனோடு இவர் கொடுத்த பட்டியல் எல்லாமே தேன் தேன் தேன் தான்.கானாபிரபா

இந்த இருவருக்கும் 90ஸ் குழவிகள் நன்றிக்கடன்பட்டவர்கள்.

 

இப்போது கூட இன்ஸ்டா ரீல் எல்லாம் கலக்கிக் கொண்டிருக்கும்

 

அன்று காதல் பண்ணியது, 

உந்தன் கன்னம் கிள்ளியது

அடி இப்போதும் நிறம் மாறாமல் 

இந்த நெஞ்சில் நிற்கிறது

 

மீனம்மா…..

 

https://www.youtube.com/watch?v=4k_YgQIDE3Q

 

தொடங்கி,

 

சேதுமாதவா உன்னை சேர்த்து அணைக்கவா (சந்தோஷம்)

https://www.youtube.com/watch?v=6j9DJY5owAY

ஒரு நாளும் உனை மறவேனே (வான்மதி)


https://youtu.be/vwWF5OiOQ58?si=Zk4gHw3_eUAGFeFB


 

ரோஜாபூந்தோட்டம் (கண்ணுக்குள் நிலவு)

https://www.youtube.com/watch?v=N2gjtl8TXPY

 

நந்தவனப்பூவே தூது செல்ல வா (குருபார்வை)

https://www.youtube.com/watch?v=EiBeddEf0c4

 

முன்னர் குறிப்பிட்ட “நிலவைக் கொண்டு வா” (வாலி)

என்ன இது என்ன இது (ரோஜாக்கூட்டம்)

https://www.youtube.com/watch?v=UVOysCFeES8

 

“பூ விரிஞ்சாச்சு” (முகவரி)

 

https://www.youtube.com/watch?v=8xtiVxKjCMg

 

 

ஓ வெண்ணிலா (குஷி)

 

https://www.youtube.com/watch?v=cjBQ3QGmRS4

 

முதன்முதலா உன்னைப் பார்த்தேன் (குங்குமப் பொட்டுக் கவுண்டர்)

https://www.youtube.com/watch?v=rLKkzUu3qZI

 

என்று பட்டியல் நீளும்.

 

“என்ன நெனச்சே” (சொக்கத் தங்கம்)

https://www.youtube.com/watch?v=aZj_zDTbyac

 

 

 

அந்த ராசியிலோ என்னமோ “ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே” படத்தில் ஐந்து இசையமைப்பாளர்களில் ஒருவராக அறிமுகமான, அனுராதா ஶ்ரீராமின் சகோதரர் முருகன் அதே படத்தில் இந்த ஜோடியை வைத்து

“பொய் சொல்லலாம்” https://www.youtube.com/watch?v=m-ycM0kxKtU

 

கொடுத்தார்.

 

அப்படியே பரசுராம் ராதாவாக அனுராதா ஶ்ரீராம் தம்பதியினர் ஃபைவ் ஸ்டாருக்கு இசையமைத்த போது “ரயிலே ரயிலே” என்று ராசியான உன்னிகிருஷ்ணனும் பாடகராகப் பங்கு போட்டார்.

 

 

கிருஷ்ணராஜ், புஷ்பவனம் குப்புசாமி, அருண்மொழி என்று கூட்டுச் சேர்ந்த பாடகர்களோடு ஹிட்டுச் சேர்த்தார்.

 

செளந்தர்யன் இசையில் “கோபுர தீபம்” பாடல்கள் ஹிட் அடித்த போது மறக்கமுடியாத வானொலிச் சொத்தானது எஸ்பிபியோடு இவர் பாடிய 

“உள்ளமே உனக்குத்தான்”

 

https://www.youtube.com/watch?v=88YaaTdxONI

 

“ஓ போடு” போட்டு மிடுக்கியாக வலம் வந்தவர்,

 இன்று ஈராயிர யுகத்தின் காற்பகுதி விளிம்பிலும் “அப்படிப் போடு போடு” (கில்லி) பாடலில் வித விதமாகக் குரல் மாற்றி வித்தை செய்தவரையும், “காட்டுச் சிறுக்கி” (ராவணன்) யாகச் சிறைப் பிடித்தவரையும் மறவாது கொண்டாடுகிறார்கள்.

அந்த வகையில் எல்லா இசையமைப்பாளர்களிடமும் மிளிர்ந்த மிகச் சில பாடகிகளில் இவரும் ஒருவர்.

 

தமிழ்த் திரையிசையில் ஒரு காலகட்டத்துப் பாடகர்கள் பல நூறு பாடல்கள் பாடிய வரலாற்றின் கடைசி விழுதுகளில் ஒன்றானவர் அனுராதா ஶ்ரீராம்.

 

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

பன்முகப்பாடகி அனுராதா ஶ்ரீராம் 💐


 கானா பிரபா

 09.07.2024

 

 என் பெயரை நீக்கி பேஸ்புக் மற்றும் வாட்சாப்பில் பகிராதீர்கள் 🙏


 

 

 

Tuesday, July 2, 2024

வைரமுத்துவிடம் ஒத்திகை பார்த்து வாலியிடம் பாட்டு வாங்கிய கங்கை அமரன் 🎹


புதியவன் திரைப்படத்தின் கதைக்களம் இயக்குநரை மையப்படுத்தியதால், பிரபல படத் தொகுப்பாளர் என்.ஆர்.கிட்டு மற்றும் கங்கை அமரன் மற்றும் வைரமுத்து ஆகியோர் காட்சிகளில் தோன்றினார்கள்.

ஒரு இசையமைப்பாளராக கங்கை அமரன் குறித்த சூழலுக்கான பாடலை மெட்டுக் கட்டவும், வைரமுத்து பாடல் வரிகளை எழுதுவதும்,  பாடுவதுமாக அந்தக் காட்சி அமையும்.

https://www.youtube.com/watch?v=w0ekofjDnBI

இந்த மெட்டை அப்படியே தூக்கிக் கொண்டு போய் அடுத்த ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த “நாம் இருவர்” படத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரன் பயன்படுத்திக் கொண்டார்.

அந்தப் பாடல் தான்

“திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா”

https://youtu.be/sHS3di-NMO0?si=8GGfaq38SpecnI6x

கவிஞர் வாலியின் வரிகளில் ஜெயச்சந்திரன், B.S.சசிரேகா பாடும் இந்தப் பாட்டு வெளிவந்த காலத்தில் ரெக்கார்டிங் சென்டர்களின் ஹிட் பாடல்களில் ஒன்று.

இப்பாடலின் முழுமையான வாத்திய இசையும் உண்டு.

https://youtu.be/eMtFd595Sxc?si=VpRFmoY3vZP9Mspa

பாடல்கள் பதிந்தது போக மீதமுள்ள பகுதியில் ரெக்கார்டிங் சென்டர் அண்ணன்மார் இந்த வாத்திய இசையை இணைத்து விடுவார்கள்.

அதுவொரு காலம் ❤️

கானா பிரபா


Saturday, June 15, 2024

மனசில் நிறைஞ்ச மதுரக் குரலோன் மலேசியா வாசுதேவன் முத்தான ஐம்பது செய்திகள்

மனசில் நிறைஞ்ச மதுரக் குரலோன்

மலேசியா வாசுதேவன் 

முத்தான ஐம்பது செய்திகள்


எம் வாழ்வியலின் அங்கமாகிப் போனவர்களில் ஒருவர் மலேசியா வாசுதேவன் அண்ணன் இன்று அகவை எண்பதுக்குள் செல்கிறார்.

அவருடைய வாழ்வியலின் ஐம்பது செய்திகளைத் தரலாம் என்று தீர்மானித்து உழைத்ததை இங்கே பகிர்கிறேன்.

1. மலேசியா வாசுதேவன் பாடிய முதற் திரையிசை “பாலு விக்கிற பத்மா” பாடல் வி.குமார் இசையில் டெல்லி to மெட்ராஸ் (1972). புகழ்பூத்த கவிஞர் மாயவநாதன் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். மாயவநாதன்  இறந்த பின் அஞ்சலிக் குறிப்போடு படம் வெளியானது. மலேசியா வாசுதேவ் என்ற பெயரில் அறிமுகமானார்

2. இவரின் இசைக்கச்சேரி ஒன்றைப் பார்த்து விட்டு அங்கேயே வைத்து, "பாடல் வாய்ப்புக் கொடுக்கிறேன்" என்று சொன்ன மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறந்து போகாமல் மூன்றாம் நாளே பாட அழைத்தார். பாரத விலாஸ் (1973) படத்துக்காக “இந்திய நாடு” பாடலில் கூட்டுப் பாடகராகப் (பாடகர் மலேசியா வாசு) பாடினார். 

3. குன்னக்குடி வைத்திய நாதன் இசையில் “காலம் செய்யும் விளையாட்டு” பாடலை “அருட் செல்வர்”  ஏ.பி.நாகராஜன் இயக்கிய குமாஸ்தாவின் மகள் படத்துக்காகப் பாடிய போது மலேசியா வாசு என்று பெயர் போட்டார்.

4. இளையராஜாவின் இசையில் பாடுவதற்கு முன்பே பாவலர் பிரதர்ஸ் இசைக்குழு, நாடக மேடையில் பாடகராக இருந்திருக்கிறார். அந்த நாடக மேடைப் பாடல்களில் அவர் பாடிய ஒன்று தான் பின்னாளில் அன்னக்கிளி கண்ட “மச்சானைப் பார்த்தீங்களா” பாடல்.

5. பெரும் திருப்புமுனையாக “செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா” (16 வயதினிலே) வாய்ப்பு இசைஞானி இளையராஜா இசையில் கிடைத்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரல் கெட்டுப் போனதால் பூஜைக்குப் பாடிய ட்ராக் பாடலே இவரின் தலையெழுத்தை மாற்றியது. கானாபிரபா

6. இயக்குநர் ஃபாசிலுக்கு கே.ஜே.ஜேசுதாஸ் போல, இயக்குநர்கள் பாரதிராஜா, கங்கை அமரன் ஆகியோரின் அதிகப்படியான படங்களின் ராசியான பாடகர் மலேசியா வாசுதேவன்.

7. “ஏ ராசாத்தி ரோசாப்பூ” (என் உயிர்த் தோழன்) பாடலில் மலேசியா வாசுதேவன் குரல் இருக்க வேண்டும் என்று பாரதிராஜா வேண்டிக் கொண்டதால் பின்னர் சேர்க்கப்பட்டுப் பாடல் முழுமையானது.

8. “பொதுவாக என் மனசு தங்கம்” (முரட்டுக்காளை) ரஜினிகாந்துக்கான நாயகத் துதிப் பாடல்களில் இன்று வரை கொண்டாடப்படுவது. சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் ரஜினிகாந்தை உயர்த்திய ஆரம்பங்களில் மலேசியா வாசுதேவனே அணி செய்தார்.

9. “நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” (பொன்மனச் செல்வன்) விஜயகாந்துக்கான முத்திரைப் பாடலாக இன்றளவும் விளங்குகிறது. விஜய்காந்த் மட்டுமன்றி ராமராஜன் பிரபு மோகன், முரளி, அர்ஜுன், பாண்டியன், சத்யராஜ் ஆகியோரின் வெற்றிப் படங்களின் குரலாளனாக இருந்திருக்கிறார்.

10. “வான் மேகங்களே” (புதிய வார்ப்புகள்) வழியாக கே.பாக்யராஜ் என்ற நாயகனின் அறிமுகக் குரலாய் விளங்கியவர் பின்னர் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பாக்யராஜ் இணைந்த போதும் நாயகக் குரலாக அதிக படங்களில் இடம்பிடித்தார்.

11. கங்கை அமரன் “மலர்களிலே அவள் மல்லிகை” படத்தின் வழியாக இசையமைப்பாளராக வருவதற்கு மலேசியா வாசுதேவனும் ஒரு தூண்டுதலாக இருந்து வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தார். அந்தப் படத்தின் கதை, வசனம் மலேசியா வாசுதேவன். அதன் பின் 170 படங்களுக்கு மேல் கங்கை அமரன் இசையமைத்தார்

12. மலேசியா வாசுதேவன் ஒரு இசையமைப்பாளராக கொலுசு, சாமந்திப்பூ , 6வது குறுக்குத்தெரு, பாக்கு வெத்தலை, ஆயிரம் கைகள்,  உள்ளிட்ட நிறையப் படங்களுக்கு இசையமைத்தார்.

13. இவரின் பூர்வீகம் இந்தியா என்றாலும் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர் மலேசியத் தமிழர்களின் முதற்படமான “ரத்தப்பேய்” படத்தின் தயாரிப்பு வேலைகளுக்காக அவர் தமிழகம் வந்து கலை உலகில் நிரந்தரமானார். 

இந்தப் படத்தின் பின்னணி இசை வழங்கியவர் இளையராஜாவின் குருவான ஜி.கே.வெங்கடேஷ்.

14. மலேசியா வாசுதேவனை “கொலுசு” திரைப்படம் வழியாக கே.எஸ்.மாதங்கன் நடிகராக அறிமுகப்படுத்தினார்.

15. பாடகராக ஒரு திருப்பு முனை கொடுத்த அதே பாரதிராஜாவே ஒரு கைதியின் டைரி வழியாக மலேசியா வாசுதேவன் என்ற நடிகர் தொடர்ந்து புகழ்பூத்த நடிகராக விளங்கத் திருப்புமுனை கொடுத்தார்.

16. உஷா வாசுதேவன் இவரின் மனைவி, யுகேந்திரன், பிரசாந்தினி, பவித்ரா ஆகிய பிள்ளைகளில் முதல் இருவரும் திரையிசையிலும் கோலோச்சினார்கள்.

17.  நகைச்சுவை நடிகர் சுருளிராஜனுக்காக “உப்புமாவைக் கிண்டி வையடி (கீதா ஒரு செண்பகப்பூ), அது மாத்திரம் இப்ப கூடாது (அச்சாணி), மற்றும் அவரோடு இணைந்து "பூப்பறிச்சு மாலைகட்டி (ஹிட்லர் உமாநாத்) வில்லுப்பாட்டு போன்ற பாடல்கள் பாடினார்

18. நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்திக்காக “எங்கெங்கும் கண்டேனம்மா” எஸ்பிபியும், சுருளிராஜனுக்காக மலேசியா வாசுதேவனுமாகப் ( உல்லாசப் பறவைகள்) பாடியளித்தார். கானாபிரபா

19. கவுண்டமணிக்காக “ஊரு விட்டு ஊரு வந்து” உட்பட ஏராளம் பாடல்கள் பாடினார்.

20. “அட வஞ்சிரம் வவ்வாலு மீனு தானா” என்ற குறும் பாடலை மன்சூரலிகானுக்காகப் பாடிச் சிறப்பித்தார்.

21.  நடிகை ஷோபா நடித்த இறுதித் திரைப்படமான “சாமந்திப்பூ” இசை மலேசியா வாசுதேவனே. அதில் “ஆகாயம் பூமி” என்ற புகழ்பூத்த பாடலை இசையமைத்துப் பாடினார்

22.  Folk Songs of Tamilnadu என்ற திரையிசை சாராப் பாடல் தொகுப்பில் பாவலர் சகோதரர்கள் இசையில் (1973) முன்பே பாடியிருக்கிறார். இசையாற்றுகை வழங்கியவர் இளையராஜா

23. ஏ.ஆர்.ரஹ்மான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே Disco Disco என்ற திரையிசை சாரா இசைத் தொகுப்பில் மலேசியா பாடியிருக்கிறார்.

24. தேவாவின் “கண்ணன் பாமாலை” உள்ளிட்ட திரையிசை சாராப் பக்திப் பாடல்கள் பாடியிருக்கிறார்.

25. “தென்கிழக்குச் சீமையிலே” ( கிழக்குச் சீமையிலே) ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மலேசியா வாசுதேவனுக்குப் பேர் சொல்லும் பாட்டு

26. “காதல் வைபோகமே” (சுவர் இல்லாச் சித்திரங்கள்), “டாடி டாடி” ( மெளன கீதங்கள்) போன்ற முத்திரைப் பாடல்களை கங்கை அமரன் இசையில் பாடினார்.

27. மலேசியா வாசுதேவன் இயக்கிய திரைப்படம் “நீ சிரித்தால் தீபாவளி”

28. “திவ்யா ஐ லவ் யூ” என்ற டெலிஃபிலிம் ஐ மலேசியாவில் இயக்கினார்.

29. “பட்டு வண்ண ரோசாவாம்” (கன்னிப் பருவத்திலே),  நான் ஒரு கோயில் (நெல்லிக்கனி) சங்கர் – கணேஷ் கொடுத்த முத்திரைப் பாடல்கள்

30. “காக்கிச்சட்டை போட்ட மச்சான்” சந்திரபோஸ் இசையில் ஏவிஎம் இன் “சங்கர் குரு” படத்துக்காகப் பாடிய புகழ் பூத்த பாடல்.

31. “நிமிர்ந்த நன்னடை” என்ற சுப்ரமணிய பாரதியார் பாடலை  “எத்தனை கோணம் எத்தனை பார்வை” (வெளிவரவில்லை) படத்துக்காகப் பாடியுள்ளார்.

32. “என்னம்மா கண்ணு செளக்யமா” (மிஸ்டர் பாரத்),” நண்பனே எனது உயிர் நண்பனே” (சட்டம்) உள்ளிட்ட ஏராளம் பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு கூட்டாகப் பாடியிருக்கிறார்

33. “சும்மா தொடவும் மாட்டேன்” (முதல் வசந்தம்) பாடலை எஸ்பிபியோடு இணைந்து பாடியதோடு அந்தப் பாடல் காட்சியில் சத்யராஜோடு ஆட்டம் போட்டு வாயசைத்திருக்கிறார்.கானாபிரபா

34. சிவாஜி கணேசனுக்கான பாடகக் குரலாக இளையராஜாவுக்கு முன்பே சங்கர் - கணேஷ் இசையில் “துணை” படத்துக்காக “அன்பே துணை” பாடல் பாடியுள்ளார்

35. தன் அண்ணனுக்கு முன்பே தம்பி கங்கை அமரன், சிவாஜி கணேசனின் “இமைகள்” படத்தின் அனைத்துப் பாடல்களையும் மலேசியா வாசுதேவனைப் பாட வைத்திருக்கிறார்.

36. “பூங்காற்று திரும்புமா” (முதல் மரியாதை) பாடல் ஒன்றே போதும்பா நீ பாடகனாக இருந்ததற்கு அடையாளமாக எத்தனை காலமும் ஆனாலும் பேர் சொல்லும்” என்று சிவாஜி கணேசன் இவரைப் பாராட்டியிருக்கிறார்.

37. “பூப்பறிக்க வருகிறோம்” படத்தில் சிவாஜி கணேசனின் மகனாகவே நடித்தார்.

38. வெள்ளை ரோஜா படத்தில் சாந்தமான பாதிரியார் சிவாஜிக்காக “தேவனின் கோயிலிலே”, முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரிக்காக “நாகூரு பக்கத்துல” என்று இரண்டு பரிமாணங்களில் மிளிர்ந்திருப்பார்.

39. எழுத்தாளர் ஜெயகாந்தன் பாடல் எழுத இளையராஜா இசையில் “எத்தனை கோணம் எத்தனை பார்வை” படத்துக்காக “புகழ் சேர்க்கும்” , “எத்தனை கோணம் எத்தனை பார்வை” , “என்ன வித்தியாசம்” ஆகிய பாடல்களைப் பாடியிருக்கிறார்.

40. “பஞ்சு மிட்டாய் சேலை கட்டி” (எட்டுப்பட்டி ராசா) தேவா இசையில் தொண்ணூறுகளிலும் மலேசியா வாசுதேவனால் தன்னால் கலக்க முடியும் என்பதை நிரூபித்தது. இந்த 2K யுகத்திலும் கொண்டாடப்படுவது.

41. “தண்ணி கருத்திருச்சு” (இளமை ஊஞ்சலாடுகிறது) என்ற மலேசியா வாசுதேவனின் புகழ் பூத்த பாடலே அன்றைய காலகட்டத்தில் அவரின் யாழ்ப்பாண இசைக் கச்சேரியின் தலைப்பாக விளங்கியது.

42. “சுராங்கனி” என்ற இலங்கையின் புகழ்பூத்த பைலா பாடலை இளையராஜா இசையில் “அவர் எனக்கே சொந்தம்” படத்தில் திரை வடிவமாகப் பாடினார். 

43. திரையிசைப் பாடல்கள் தவிர ஏராளம் பக்திப் பாடல்களைத் தமிழகத்து ஆலயங்கள் மட்டுமன்றி ஈழத்து ஆலயங்கள் மீதும் மலேசியா வாசுதேவன் பாடியிருக்கிறார். “மணியோசை கேட்குதம்மா” முப்பது ஆண்டுகளாக ஈழத்து இணுவில் பரராஜ சேகரப் பிள்ளையார் கோயிலின் முகப்புப் பாடலாக விளங்குகிறது.

44. தெருக்கூத்துக் கலைஞர் புரசை கண்ணப்பதம்பிரான் எழுதிப் பாடிய “ நந்தன் என்பவன் நானே” பாடலில் இவரும், பாடகர் சாய்பாபாவும் இணைந்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைத்த கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தில் இடம்பெற்றது.

45. மலேசியாவில் நடிகராக மட்டுமன்றி இளவயதில் ஜிக்கி குரலில் மேடைப் பாடகராகவும் விளங்கியிருக்கிறார்.

46. பழம்பெரும் பாடகர் சி.எஸ்.ஜெயராமன் குரலில் “ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே” (மணிப்பூர் மாமியார்), “இந்த அழகு தீபம்” ( திறமை) , சுகராகமே (கன்னிராசி), அழகான மனைவி (புதுப்புது அர்த்தங்கள்) ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

47. பிறப்பால் கேரளத்தவர் என்றாலும் வெகு அரிதாகவே மலையாளப் பாடல்கள் பாடியுள்ளார். நேரடிப் பாடல்களில் ஒன்று “கல்லெல்லாம்” (அனஸ்வரம்) படத்துக்காக இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆண்டோவுடன் பாடியுள்ளார்

48. திரைக்கு வராத போதிலும் “ஒரு மூடன் கதை சொன்னான்” (நெஞ்சில் ஆடும் பூ ஒன்று), “மலர்களே நாதஸ்வரங்கள்” (கிழக்கே போகும் ரயில்), “ஆழக்கடலில் தேடிய முத்து” (சட்டம் என் கையில்), “ஆனந்தத் தேன்காற்று” (மணிப்பூர் மாமியார்) ஆகியவை மலேசியா வாசுதேவன் பாடிய வகையில் புகழ் பூத்தவை

49. நடிகருக்காகப் பாடாமல், நடிக்கும் பாத்திரத்துக்காகப் பாடுவது எனக்குப் பிடிக்கும் என்பவர் அப்படியாக அமைந்த “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” (16 வயதினிலே), “ஆகா வந்திருச்சு” (கல்யாண ராமன்) ஆகிய பாடல்களை உதாரணம் காட்டுவார்.

50. மலேசியா வாசுதேவனுக்காக அவரின் வாழ்நாளின் இறுதியில் 2010 ஆம் ஆண்டு மலேசியாவில் “கலைமாமணி மலேசியா வாசுதேவனுக்கு ஒரு பாராட்டு விழா” நிகழ்வை மலேசியத் தமிழர்கள் நடத்திய போது எஸ்.பி.பாலசுப்ரமணியமும், கங்கை அமரனும் இணைந்து சென்று கெளரவித்துத் தம் தோழனின் கன்னத்தில் முத்தம் வைத்துப் பிரியாவிடை கொடுத்தனர்.

கானா பிரபா

15.06.2024

ஒளிப்படம் நன்றி: கே.பிச்சுமணி

இந்தப் பதிவைத் தொகுத்து எழுத மூன்று மணி நேரம் பிடித்தது. ஆகையால் தயவு செய்து என் பெயரை நீக்கி விட்டு வாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பகிர வேண்டாம்.

மிக்க நன்றி.