Pages

Friday, September 22, 2017

P.B.ஶ்ரீனிவாஸ் எனுமொரு மன ஓசை ❣️



P.B.ஶ்ரீனிவாஸ் என்ற பாடகரே இல்லாதவொரு உலகம் எப்படியிருந்திருக்கும்? தீராத் தாகம் கொண்ட ஒருவன் பாலைவனத்தில் தனித்து விடப்பட்ட நிலை போல என்றே அதை எடுத்துக் கொள்வேன். 

P.B.ஶ்ரீனிவாஸ் அற்புதமான பாடகர், மெல்லிசைக் குரலில் அடித்துக் கொள்ள அவரை விட்டால் ஆளே இல்லை, ஜெமினி கணேசனுக்கு இவர் பாடினால் அச்சொட்டாக அமைந்து விடும், தமிழில் மட்டுமா? கன்னடத்தில் இன்றும் கோயில் கட்டாத குறையாகக் கொண்டாடி வருகிறார்களே என்றெல்லாம் புகழ்மாலை சூட்டலாம். ஆனால் இவையெல்லாம் கடந்து ஆத்மார்த்தமாக மனசுக்குள் ஊடுருவும் குரல் அல்லது எமது மனம் பேசினால் அது எந்தவிதமான ஆற்றுப்படுத்தலை உண்டு பண்ணுமோ அப்படியொரு மகா சக்தி இந்தக் குரலில் இருக்கிறது அது தான் முன்னது எல்லாம் கால வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனாலும் இதையே அவரின் சாகித்தியத்துக்கான ஆகச் சிறந்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்ள முடியும்.

“வாடி நின்றால் ஓடுவதில்லை” என்று ஒரு அடியை எடுத்துக் கொடுக்கிறார் மனம் சொல்கிறது 
“இல்லை இதை என்னால் ஏற்க முடியவில்லை இன்னும் மனம் சஞ்சலம் கொள்கிறது தாங்கெணாத் துன்பம் மேலெடுகிறது” 
இதோ அடுத்த கணமே அதே அடியை இன்னும் கனிவாக எடுத்துக் கொடுக்கிறார் அதுவே முதுகில் வருடி ஆறுதல் சொல்லுமாற் போல 
“வாடி நின்றால் ஓடுவதில்லை” 
அழுது ஆறுதல் கொள்கிறது மனம். மயக்கமா கலக்கமா? இனி அது வருமா? ஏழை மனதை மாளிகையாக்குகிறது அந்த இரண்டு நிமிடம் 41 விநாடிகள் ஒலிக்கும் பாட்டு 
https://youtu.be/KrnntpGzTy4

தாங்கெணாத் துன்பத்தில் துவண்டு போயிருப்பவன் ஆழ்கடலில் சிக்கித் தனக்கொரு துடுப்பு கிட்டாதா என்று ஆறுதல் தேடும் போது ஆதரவாய் நாலு வார்த்தை பேசாத நண்பன், உற்றார், உறவினர் இன்ன பிறவெல்லாம் கடந்து இந்த ஶ்ரீனிவாஸ் குரல் இங்கே வா அதை நான் தருகிறேன் என்றழைக்கும்.

தூக்கமற்ற பின்னிரவுகளில் ஆறுதல் தேடி வானொலிப் பெட்டியைக் காதுக்கருகே வைத்திருந்தவர்கள் முகமறியாது அவர் உளமறிந்து அதிகாலை ஒன்று இரண்டு, மணிக்கெல்லாம் 
P.B.ஶ்ரீனிவாஸை துணைக்கழைப்பேன். அப்போது அவர் “தேவி ஶ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே ” https://youtu.be/xYOUZeTMwjM
என்று பாடி விட்டுப் போவார்.

காதலியின் கரு வளையக் கண்மணியை வைத்த கண் வாங்காது பார்ப்பது போன்ற சுகம் தர வல்லது ஏகாந்த இரவின் நிறத்தைத் தனிமையில் அனுபவிப்பது. அந்த நேரத்தில் எழும் பாட்டு இப்படியிருக்குமோவென ஒலிபரப்புவேன் இதை, 
“தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது”
https://youtu.be/o7ghy77qPNk

அதன் பின்னால் வரும் 
“மெளனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாட வேண்டும நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்”
https://youtu.be/-uUZo5GPhwM

அந்தரத்தில் தவிக்கும் மனசு உள்ளே புழுங்கும் ஆற்றாமையை அணை போட்டு நிலவை அவளாக உருவகப்படுத்தி நிராசையாக்கிப் பாடும் அவனின் உள் மனப் போராட்டம் இத்தனை யுகங்கள் கடந்தும் இன்றைய காதலர் நெஞ்சிலும் நிலைத்திருக்கும்
“நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை”
https://youtu.be/F0xW0-EfOrQ

“உங்கள் சனங்களின் மன உறுதியைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது” என்றார் தமிழகத்து நண்பர் ஒருவர்.
“ஏன்” என்று கேட்டேன் சிரித்துக் கொண்டு
“ஒரு தலைமுறையையே எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரேயொரு குடும்பத்தை எடுத்துப் பாருங்கள் இந்த நாற்பது ஆண்டுகளில் எத்தனை இடப் பெயர்வுகளை அந்த மனிதன் சந்தித்திருப்பான்?
அதையும் விடுங்கள், இதோ ஒரு சில நிமிடங்களுக்கு முன் தன் முன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த தகப்பனை, தாயை, உடன் பிறந்தவரை, மகனை, மகளை சட்டென்று வந்து குண்டு போட்டு விட்ட வானூர்திக்கோ, பாய்ந்து வந்த ஷெல்லடிக்கோ தின்னக் கொடுத்து விட்டு, ஒரு சொட்டுக் கண்ணீர் தானும் அந்த இடத்தில் விட முடியாது செங்குருதியை வழித்துத் துடைத்து விட்டு, தன்னைச் சுற்றி இருப்பவர் உயிர் நாடி பார்த்து அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுகிறானே அவனைப் பாருங்கள், ஒரு ஆண்டுக்குள்ளேயே தன்னைப் புதுப்பித்து விட்டு 
தன் உரிமைக்காகப் போராட வருகிறானே அவனைப் பாருங்கள்
என்னால் முடியாதய்யா உங்கள் சனங்கள் மாதிரி வாழ, அந்த இடத்தில் தற்கொலை செய்திருப்பேன்” என்றார்.
அவருக்கு நான் என்ன சொன்னாலும் அது இந்த ஒற்றைப் பாடலின் மொழி பெயர்ப்பாகத் தான் இருக்கும்.
“தோல்வி நிலையென நினைத்தால்  மனிதன் வாழ்வை நினைக்கலாமா?”
https://soundcloud.com/manimekalai-tamil/tholvi-nilyena-ninaithaal
தம் உரிமைக்காகப் போராடும் ஈழத்துச் சகோதரர்களை மனதில் நினைத்தே இதை எழுதினேன் என்றார் ஆபாவாணன் நான் கண்ட வானொலிப் பேட்டியில். ஆபாவாணனோடு P.B.ஶ்ரீனிவாஸ் பாடிய இந்தப் பாடல் வந்த காலத்தில் போராட்டக் களத்திலும் 
முப்பது வருடங்கள் கடந்து முள்ளி வாய்க்காலிலும் முள்வேலி முகாம்களிலும் யாரோ ஒருவரின் மன உறுதியின் முணு முணுப்பாயும் ஆகுமென்று அவர் அப்போது அறிந்திருப்பாரா? “தோல்வி நிலையென நினைத்தால்” ஐ சுவீகாரம் எடுத்துக் கொண்டது ஈழம்.

இன்று எண்பத்தேழு வயது காணும் P.B.ஶ்ரீனிவாஸ் ஐயா என்றும் நீங்கள் எங்களோடு உயிர்த்திருப்பீர்.

Friday, September 8, 2017

இசையமைப்பாளர் இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் - மண்ணுக்குள் வைரம் 🌴🍂


மண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்? அதுவே தேவேந்திரனுக்கும் நேர்ந்தது. 
எண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ இருவருக்கும் விரிசல். கோவைத் தம்பி வட நாடு போய் இரட்டை இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் ஐ அழைத்து வந்தும் படம் பண்ணிப் பார்த்தார். பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு படங்கள் தேறவில்லை. 
 
இன்னொரு பக்கம் முதல் மரியாதை பட வெற்றிக்குப் பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறப்பான வேடங்கள் என்று சொல்லக் கூடிய படங்களும் வந்து கிட்டின. 
இயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் தன்னுடைய அறிமுகப் படமான "மண்ணுக்குள் வைரம்" படத்தை இயக்க, கோவைத் தம்பி தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், முரளி, சுஜாதா, ராஜேஷ், ரஞ்சனி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே அணி வகுத்தது.
வண்ண வண்ணப் பூக்கள் புகழ் விநோதினியை இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகப் பார்க்கலாம். "பாராமல் பார்த்த நெஞ்சம்" பாட்டு அழகி வாணி விஸ்வநாத் இற்கு இது அறிமுகப் படம் 
இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அட இந்தப் படத்தை இயக்கிய மனோஜ்குமாரா பின்னாளில் மருதுபாண்டி, வெள்ளையத் தேவன், மறவன் என்றெல்லாம் பாளைக் கத்தியைச் செருகி ரத்தம் பீறிட வைத்தவர் என்று ஆச்சரியப்படுவார்கள். மண்ணுக்குள் வைரம் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் பரவலான கவனிப்பை ஈர்த்தது.

"ஏ சம்பா நாத்து சாரக்காத்து" https://youtu.be/XZNWwQG9UWQ என்று எப்படி ஒரு தெம்மாங்கு இசையையும் "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு" என்று மேற்கத்தேயம் தழுவிய இசையையும் கலந்து கட்டி எப்படித் தொண்ணூறுகளில் இசையமைப்பாளர் செளந்தர்யன் களம் இறங்கினாரோ அது போலவொரு வாய்ப்பு மண்ணுக்குள் வைரம் வழியான அறிமுகத்தில் இசையமைப்பாளர் தேவேந்திரனுக்குக் கிட்டியது. தேவேந்திரன் எப்படித் திரையுலகுக்கு வந்தார் என்பதைப் பின்னுள்ள பகுதி ஒன்றில் பார்ப்போம்.

இசையமைப்பாளர் தேவேந்திரன் பற்றி ஒரு தொடர் எழுதுகிறேன் என்று நண்பர் ஒருவருக்குச் சொன்ன போது "இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஓடும்" என்று பாட ஆரம்பித்து விட்டார்.
எவ்வளவு அற்புதமான பாட்டு இது. திரையிசை இலக்கணம் படித்த, ஒரு துறை தேர்ந்த இசையமைப்பாளர் கொடுக்கக் கூடிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய பாட்டு இதுவல்லவா?
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டில் தான் எவ்வளவு அந்நியோன்யம் சொட்டுகிறது இந்தப் பாட்டில். அதுவும் "இதழோடு" என்று இடை வரியில் கிசுகிசுப்பாகக் காதலி காதில் மட்டும் விழுமாற் போல எஸ்.பி.பி ஒரு சங்கதி கொடுப்பார் பாருங்கள் அப்பப்பா. ஒரு திரையிசைப் பாடலாக இருந்தாலும் ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவிச் சாதகம் பண்ணிக் கொடுப்பார்கள் இந்தப் பாட்டு ஜோடி. முடிக்கும் போது "மடி மீதூஊஊ" என்று எஸ்.பி.பி குரல் சாய்ந்து கொடுக்கும் சுகமே தனி.
பாரதிராஜாவின் பள்ளியில் இருந்து வந்த மனோஜ்குமார் சொல்லிச் செய்ததோ என்னமோ பாரதிராஜா படங்களில் வரும் அந்த முத்திரைக் கைதட்டலோடு தான் இந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.
"இதழில் கதை எழுதும் நேரமிது" என்று இளையராஜாவுக்கு எழுதிய முத்துலிங்கம் இங்கே "இதழோடு இதழ் சேரும்" என்று.

திரையிசைப் பாடல் ஒன்றை மாமூலாக, வழக்கமான சங்கதிப் பிரகாரம் உருவாக்கும் நடைமுறை தாண்டி, அதன் மெட்டில் ஜாலம் காட்டிய புதுமை தரும் பாடல்களில் தவிர்க்க முடியாதது "முத்து சிரித்தது முல்லை வெடித்தது
முத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே
மலைத் தேனே" பாடல். பூப்பெய்தும் பெண்ணைக் கொண்டாடும் தோழியர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் காதலர் கூடிக் குலாவுதல் என இரண்டு பரிமாணங்கள் கொண்ட பாட்டு இது. பாட்டு முழுக்கச் சதிராட்டம் போடும் மெட்டு. 
"முத்து சிரித்தது முல்லை வெடித்தது" என்று தோழிமார் பாடும் பாடல் சடுதியாக
 "ஒரு சந்தோஷம் ஊஞ்சலாடக் கண்டேனே
புதுச் சங்கீதம் நானும் பாட வந்தேனே" என மாறும்.
ஒரே சீராக இல்லாது முரணாகவும் நேராகவும் பயணிக்கும் இம்மாதிரியான ஒரு சவால் நிறைந்த பாட்டை எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படத்தில் கொடுக்க எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் தேவேந்திரனுக்கு..

"பொங்கியதே காதல் வெள்ளம்" ஆரம்பம் முதல் முடிவு வரை கிராமத்து வயலில் நீர் இறைக்கும் இயந்திரம் வழியே  குபுக் குபுக்கெனப் பாயும் நீரைப் போன்றதொரு பிரவாகம். தேவேந்திரன் என்று அறியாது விட்டால் இதை டி.ராஜேந்தரின் இசைக் கணக்கில் போடுமளவுக்கு ஒற்றுமை இருக்கும். "சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது"
பாட்டையும் கேட்டால் என்னவென்று மனசு சொல்லும்.
பாடலின் தாளக் கட்டு மிருதங்க ஜதியிலிருந்து அப்படியே விலகாது ஒவ்வொரு வாத்தியங்களின் கைப் பிடிக்கும் அழகைத் தனியே ரசிக்க வேண்டும்.

பாரதிராஜாவின் படங்களில் சம்பிரதாயமாக அமைந்து விடும் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனையும் தன்னுடைய படத்தின் முகப்புப் பாடலோடு சேர்க்க வேண்டுமென இயக்குநர் மனோஜ்குமார் கங்கணம் கட்டியிருக்கக் கூடும். அதனால் ஒரு அழகிய கிராமியத்துப் பண் பாடும் பாட்டாக "கிழக்கு வெளுத்திருச்சு" பாடல் அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து பாடல்கள் இயற்றப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன.

தேவேந்திரன் இசையில் மண்ணுக்குள் வைரம் பாடல்கள்

இதழோடு இதழ் சேரும் நேரம் 
https://youtu.be/fu6Y3uqwlts

முத்து சிரித்தது
https://youtu.be/qoqC8_UNk0o

பொங்கியதே காதல் வெள்ளம்
https://youtu.be/UzLJVdNeMUQ

கிழக்கு வெளுத்திருச்சு
https://youtu.be/CyIEch5p4ys

ஜாதி மல்லிகையே
https://youtu.be/VIFF3QFAv0o

ஆத்தா மாரியாத்தா
https://youtu.be/VU83xs5wGdc

கானா பிரபா
08.09.17

#தமிழ்த்திரைஅரசர்கள் #தேவேந்திரன் 
இசைப் பயணம் - மண்ணுக்குள் வைரம் 🌴🍂

மண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்? அதுவே தேவேந்திரனுக்கும் நேர்ந்தது. 
எண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ இருவருக்கும் விரிசல். கோவைத் தம்பி வட நாடு போய் இரட்டை இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் ஐ அழைத்து வந்தும் படம் பண்ணிப் பார்த்தார். பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு படங்கள் தேறவில்லை. 
 
இன்னொரு பக்கம் முதல் மரியாதை பட வெற்றிக்குப் பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறப்பான வேடங்கள் என்று சொல்லக் கூடிய படங்களும் வந்து கிட்டின. 
இயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் தன்னுடைய அறிமுகப் படமான "மண்ணுக்குள் வைரம்" படத்தை இயக்க, கோவைத் தம்பி தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், முரளி, சுஜாதா, ராஜேஷ், ரஞ்சனி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே அணி வகுத்தது.
வண்ண வண்ணப் பூக்கள் புகழ் விநோதினியை இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகப் பார்க்கலாம். "பாராமல் பார்த்த நெஞ்சம்" பாட்டு அழகி வாணி விஸ்வநாத் இற்கு இது அறிமுகப் படம் 
இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அட இந்தப் படத்தை இயக்கிய மனோஜ்குமாரா பின்னாளில் மருதுபாண்டி, வெள்ளையத் தேவன், மறவன் என்றெல்லாம் பாளைக் கத்தியைச் செருகி ரத்தம் பீறிட வைத்தவர் என்று ஆச்சரியப்படுவார்கள். மண்ணுக்குள் வைரம் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் பரவலான கவனிப்பை ஈர்த்தது.

"ஏ சம்பா நாத்து சாரக்காத்து" https://youtu.be/XZNWwQG9UWQ என்று எப்படி ஒரு தெம்மாங்கு இசையையும் "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு" என்று மேற்கத்தேயம் தழுவிய இசையையும் கலந்து கட்டி எப்படித் தொண்ணூறுகளில் இசையமைப்பாளர் செளந்தர்யன் களம் இறங்கினாரோ அது போலவொரு வாய்ப்பு மண்ணுக்குள் வைரம் வழியான அறிமுகத்தில் இசையமைப்பாளர் தேவேந்திரனுக்குக் கிட்டியது. தேவேந்திரன் எப்படித் திரையுலகுக்கு வந்தார் என்பதைப் பின்னுள்ள பகுதி ஒன்றில் பார்ப்போம்.

இசையமைப்பாளர் தேவேந்திரன் பற்றி ஒரு தொடர் எழுதுகிறேன் என்று நண்பர் ஒருவருக்குச் சொன்ன போது "இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஓடும்" என்று பாட ஆரம்பித்து விட்டார்.
எவ்வளவு அற்புதமான பாட்டு இது. திரையிசை இலக்கணம் படித்த, ஒரு துறை தேர்ந்த இசையமைப்பாளர் கொடுக்கக் கூடிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய பாட்டு இதுவல்லவா?
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டில் தான் எவ்வளவு அந்நியோன்யம் சொட்டுகிறது இந்தப் பாட்டில். அதுவும் "இதழோடு" என்று இடை வரியில் கிசுகிசுப்பாகக் காதலி காதில் மட்டும் விழுமாற் போல எஸ்.பி.பி ஒரு சங்கதி கொடுப்பார் பாருங்கள் அப்பப்பா. ஒரு திரையிசைப் பாடலாக இருந்தாலும் ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவிச் சாதகம் பண்ணிக் கொடுப்பார்கள் இந்தப் பாட்டு ஜோடி. முடிக்கும் போது "மடி மீதூஊஊ" என்று எஸ்.பி.பி குரல் சாய்ந்து கொடுக்கும் சுகமே தனி.
பாரதிராஜாவின் பள்ளியில் இருந்து வந்த மனோஜ்குமார் சொல்லிச் செய்ததோ என்னமோ பாரதிராஜா படங்களில் வரும் அந்த முத்திரைக் கைதட்டலோடு தான் இந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.
"இதழில் கதை எழுதும் நேரமிது" என்று இளையராஜாவுக்கு எழுதிய முத்துலிங்கம் இங்கே "இதழோடு இதழ் சேரும்" என்று.

திரையிசைப் பாடல் ஒன்றை மாமூலாக, வழக்கமான சங்கதிப் பிரகாரம் உருவாக்கும் நடைமுறை தாண்டி, அதன் மெட்டில் ஜாலம் காட்டிய புதுமை தரும் பாடல்களில் தவிர்க்க முடியாதது "முத்து சிரித்தது முல்லை வெடித்தது
முத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே
மலைத் தேனே" பாடல். பூப்பெய்தும் பெண்ணைக் கொண்டாடும் தோழியர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் காதலர் கூடிக் குலாவுதல் என இரண்டு பரிமாணங்கள் கொண்ட பாட்டு இது. பாட்டு முழுக்கச் சதிராட்டம் போடும் மெட்டு. 
"முத்து சிரித்தது முல்லை வெடித்தது" என்று தோழிமார் பாடும் பாடல் சடுதியாக
 "ஒரு சந்தோஷம் ஊஞ்சலாடக் கண்டேனே
புதுச் சங்கீதம் நானும் பாட வந்தேனே" என மாறும்.
ஒரே சீராக இல்லாது முரணாகவும் நேராகவும் பயணிக்கும் இம்மாதிரியான ஒரு சவால் நிறைந்த பாட்டை எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படத்தில் கொடுக்க எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் தேவேந்திரனுக்கு..

"பொங்கியதே காதல் வெள்ளம்" ஆரம்பம் முதல் முடிவு வரை கிராமத்து வயலில் நீர் இறைக்கும் இயந்திரம் வழியே  குபுக் குபுக்கெனப் பாயும் நீரைப் போன்றதொரு பிரவாகம். தேவேந்திரன் என்று அறியாது விட்டால் இதை டி.ராஜேந்தரின் இசைக் கணக்கில் போடுமளவுக்கு ஒற்றுமை இருக்கும். "சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது"
பாட்டையும் கேட்டால் என்னவென்று மனசு சொல்லும்.
பாடலின் தாளக் கட்டு மிருதங்க ஜதியிலிருந்து அப்படியே விலகாது ஒவ்வொரு வாத்தியங்களின் கைப் பிடிக்கும் அழகைத் தனியே ரசிக்க வேண்டும்.

பாரதிராஜாவின் படங்களில் சம்பிரதாயமாக அமைந்து விடும் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனையும் தன்னுடைய படத்தின் முகப்புப் பாடலோடு சேர்க்க வேண்டுமென இயக்குநர் மனோஜ்குமார் கங்கணம் கட்டியிருக்கக் கூடும். அதனால் ஒரு அழகிய கிராமியத்துப் பண் பாடும் பாட்டாக "கிழக்கு வெளுத்திருச்சு" பாடல் அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து பாடல்கள் இயற்றப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன.

தேவேந்திரன் இசையில் மண்ணுக்குள் வைரம் பாடல்கள்

இதழோடு இதழ் சேரும் நேரம் 
https://youtu.be/fu6Y3uqwlts

முத்து சிரித்தது
https://youtu.be/qoqC8_UNk0o

பொங்கியதே காதல் வெள்ளம்
https://youtu.be/UzLJVdNeMUQ

கிழக்கு வெளுத்திருச்சு
https://youtu.be/CyIEch5p4ys

ஜாதி மல்லிகையே
https://youtu.be/VIFF3QFAv0o

ஆத்தா மாரியாத்தா
https://youtu.be/VU83xs5wGdc

கானா பிரபா
08.09.17

#தமிழ்த்திரைஅரசர்கள் #தேவேந்திரன்

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) - அறிமுகம் 🎸


"தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க
 தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க" https://youtu.be/5TZ6afX_ZJ8
ஏதோவொரு பண்பலை வானொலியோ அல்லது என் ஊர் போகும் பஸ்வண்டியோ இந்தக் கணம் எடுத்து வரக் கூடும் இதை. தொண்ணூறுகளின் சுகந்தமாகப் பரவிய இந்தப் பாட்டு இலங்கையின் பண்பலை வானொலிகளால் இன்றும் மெச்சப்பட்டு வானலையில் தவழவிடப்படுகிறது. "புதிய தென்றல்" படத்துக்காக இடம்பெற்ற பாடல் என்ற அடையாளத்துடன் தொக்கி நின்று விடுகிறது.
சிலவேளை ஆர்வக்கோளாறு ஒலிபரப்பாளர்களால் தேனிசைத் தென்றல் தேவா என்றோ சந்திரபோஸ் என்றோ இல்லை இசைஞானி இளையராஜா என்றோ கற்பிதம் செய்து அறிவிக்கப்படுவதுமுண்டு.
ஆனால் இந்தப் பாடலைப் பிரசவித்த ரவி தேவேந்திரன் என்ற அற்புதமான இசையமைப்பாளர் அடையாளம் மறைக்கப்பட்டு விடும். இந்த மாதிரியான மழுங்கடிப்பை இந்த ரவி தேவேந்திரன் "வேதம் புதிது" காலத்தில் "தேவேந்திரன்" ஆக இருந்த காலத்திலும் அனுபவித்திருக்கிறார். அண்மையில் கூட ஒரு வானொலி "கண்ணுக்குள் நூறு நிலவா" வை இளையராஜாவுக்கு எழுதி வைத்திருந்தது. ராமர் அணைக்கு அணில் போல என்னால் இயன்ற அளவுக்கு ரவி தேவேந்திரன் என்ற தேவேந்திரனை எழுத்துச் சிறைக்குள் அடக்கி வைக்கும் பணியில் இந்தக் குறுந்தொடரை ஆரம்பிக்கிறேன்.

ஒரு இயக்குநர் பாசறையில் குரு பாரதிராஜா முதல் சிஷ்யர்கள் மனோஜ்குமார், ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் என்று ஒரே இசையமைப்பாளருடன் சம காலத்தில் அல்லது குறுகிய கால இடைவெளியில் பணியாற்றும் அபூர்வம் நிகழ்த்தப்பட்டது இளையராஜாவுக்குப் பின் தேவேந்திரனுடன் தான்.
அது மட்டுமா 1987 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை கார்த்திகை 27 தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புகழ் கூறும் "பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே" பாடலைத் தவற விட்டிருக்குமா ஈழம் கடந்த தமிழுலகம்? அங்கேயும் தேவேந்திரன் இருக்கிறார். இவையெல்லாம் குறித்து விரித்துச் சொல்லவே இத்தொடர்.

மண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்? அதுவே தேவேந்திரனுக்கும் நேர்ந்தது அந்த வாய்ப்பை எப்படி அவர் பயன்படுத்திக் கொண்டார் என்பதைத் தொடரப் போகும் முதல் பாகத்தில் பார்ப்போம்.

- கானா பிரபா - 

(தொடரும்)

#தமிழ்த்திரையிசைஅரசர்கள் #தேவேந்திரன்

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼

ஒரு பாடல் என்ன மாதிரியான ஜாலமெல்லாம் செய்யும், தன்னைச் சுற்றியுள்ள சஞ்சாரங்கள் மறந்து ஏகாந்த உலகத்துக்கு அழைத்துப் போய்விடும். அப்படியானதொரு ஆகச் சிறந்ததொரு உதாரணம் இந்த "மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட".

"நா நன நன ந நா நன நன நன நா" என்று ஜானகி கொடுக்கும் ஆலாபனையோடு ஆமோதிக்கும் இசைஞானி இளையராஜாவின் அந்த ஒத்திசைக்கும் கணம் அந்த யுக மாற்றம் நிகழ்ந்து விடுகிறது. அதுவும் அந்தப் பல்லவிக்குக் கொடுக்கும் சங்கதியில் இருந்து வழுக்கிக் கொண்டு போய் தபேலாவுக்குள் விழும் ஆரம்ப வரிகள் எந்த விதமான நெருடலுமில்லாத நெருடலாகத் திரும்பும் கணம் அந்த இசைவியக்கம் இன்னொரு இசையமைப்பாளர் சிந்தையில் உதித்திருந்தால் உடைத்துக் கொடுத்திருப்பார்.

பல்லவியோடு சேரும் போது வயலின் அந்த நளினம் இருக்கிறதே ஆகா அதற்குள் சின்னதொரு காதல் ஹைகூ. வயலினைச் சீண்டும் காதலனாகக் கற்பனை செய்தால் வெட்கப் புன்னகையோடு பேசுமாற் போலப் புல்லாங்குழலின் சிருங்காரம். 
ஒரு அற்புதமான மெட்டு, அதற்குக் கிட்டிய அழகிய கவிதைத் தனமான கங்கை அமரன் வரிகள் இரண்டையும் மெச்சிப் போற்ற வாத்தியங்களைத் துணைக்கழைக்கின்றார் ராஜா பாடல் நெடுக. இந்தப் பாடலில் அணிவகுத்திருக்கும் வாத்தியங்களின் உணர்வுப் பரிமாறலை ரசிக்க மட்டும் இன்னொரு தரம் கேட்க வேண்டும்.
தன்னுடைய தோழன் கிட்டார் இந்த உபசாரத்தைக் கண்காணித்துப் பயணிக்கும் பின்னால்.

"ஆஆஆ ஆஆஆஆ" இரண்டாவது சரணத்தில் ஆர்ப்பரிக்கும் ஜானகி அப்படியே தன்னைச் தானே சுற்றுச் சுற்றி வானில் மிதக்கும் அனுபவத்தை எழுப்புமே அது போல் இருக்கும்.

இசைஞானி இளையராஜாவோடு எத்தனை பாடகிகள் ஜோடி சேர்ந்தாலும் எஸ்.ஜானகியோடு சேரும் போது கிட்டும் மந்திர வித்தையை அந்த ஒவ்வொரு பாடல்களையும் ஆராய்ச்சி செய்து தேடினால் தகும். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு பக்கம் "சிறு பொன்மணி அசையும்" என்று சொல்ல இன்னொரு பக்கம் "பூமாலையே தோள் சேரவா" என்று மனம் சொல்லுகிறது. இவ்விரண்டு பாடல்களும் போதுமா என்ன?
இங்கே இந்த "மெட்டி ஒலி காற்றோடு" பாடலில் காதலர்களின் உலகில் வேறு யாருக்கும் இடமில்லை அதனால் காதோடு பேசுவது போல நிதானம் தப்பாமல் மெதுவாகப் பாடிக் கொள்கிறார்கள்.

எங்கள் வீட்டில் ஒரு வேடிக்கை நிகழ்ந்தது நேற்று முன் தினம். இந்தப் பாடலை நான் பெருந்திரையில் போட்டு ஒலியை மட்டும் தவழ விட்டேன். பாட்டு முடிந்ததும் இன்னும் இன்னும் என்றொரு குரல் அது வேறு யாருமல்ல மூன்று வயது நிரம்பாத என் வாரிசு தான். அந்தக் குழந்தை உலகத்திலும் குடி கொண்டு விட்டது இந்த இதமான இசை, அதனால் இது காலத்தைத் தாண்டிய பாட்டு இன்னும் அதைத் தாண்டும்.

மெட்டி ஒலி காற்றோடு 
என் நெஞ்சைத் தாலாட்ட
மேனி ஒரு பூவாக
மெல்லிசையின் பா ஆக

என் கல்யாண வைபோகம் உன்னோடு தான் 🌼🎻

இன்று காலையில் இருந்து மத்யமாவதியைச் சுற்றி அலைகிறது மனசு. யாராவது எதிர்ப்பட்டு தன் பெண் குழந்தைக்குப் பெயர் சூட்டச் சொன்னால் கூட"மத்யமாவதி" என்று வைத்து விடுவேனோ என்று கிறுக்குப் பிடிக்குமளவுக்கு இந்த ராகத்தில் அமைந்த "என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்" பாடலோடு தான் இன்று முழுக்கப் பயணம்.
காலையிலேயே இதைக் கிளப்பி விட்டார் அன்பின்
Tesla Ganesh
புதுமை இயக்குநர் ஶ்ரீதர் படங்களில் இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பு 
https://youtu.be/eabZ8MVA9UU
எனும் அட்டகாசமான பகிர்வு வழியாக.

மங்கலமான குரல் என்றாலேயே வாணி ஜெயராம் எனும் அளவுக்கு "மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடலால் எழுபதுகளில் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். பிடித்த பாடகி என்றால் P.சுசீலாம்மா, S.ஜானகி அளவுக்கு ஏற்றுக் கொள்ள முடியாதபடி வாணி ஜெயராம் அவர்களிடம் ஒரு கண்டிப்பான சங்கீத சாதகர் போன்ற தொனி இருப்பதே அதற்குக் காரணம். 
"பூவான ஏட்டத் தொட்டு", "ஏபிசி நீ வாசி" போன்ற
ஜனரஞ்சகம் தழுவிய பாடல்களில் அந்தக் கண்டிப்புத் தூக்கலாகத் தெரியும்.
ஆனால் வாணி ஜெயராமை மீறி யார் இதைக் கொடுக்க முடியும் எனும் அளவுக்கு "மேகமே மேகமே", "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" என்று நியாயம் கற்பிக்கும் இன்னொரு முகம் அவருக்குண்டு.

"என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்" https://www.facebook.com/kana.praba/posts/10203610960819936 பாடலைப் பற்றி முன்னர் எழுதிய போதும் இதே சிந்தையோடே வாணி ஜெயராமின் குரலை ஆராதித்திருக்கிறேன்.

வாணி ஜெயராம் அவர்களை நான் பேட்டி கண்ட போது மனதுக்குள் "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" படப் பாடல்கள் தான் ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் படத்தில் மட்டும் சுளையாக ஐந்து பாடல்களைப் பாடினாரே. ஆனால் அந்தப் பேட்டியில் இசைஞானி இளையராஜா இவருக்குக் கொடுத்த அருமையான பாடல்கள் அளவுக்கு மெச்சாது கடந்து போனது உள்ளூர வருத்தம் தந்தது. அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தின் ஐந்து பாடல்களில் "குறிஞ்சி மலரில்" பாடலில் வாணி ஜெயராமை மீறி கீச்சு தென்படுவதால் அது இன்னோர் பாடகிக்குப் போயிருக்கலாமோ என நினைப்பதுண்டு. ஆனால் "நானே நானா யாரோ தானா" பாடலும் "என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்" பாடலும் அவருக்கு மட்டுமா எமக்கும் கூடப் பொக்கிஷமாகக் கிட்டியவை ஆச்சே. ஒரு பக்கம் "நானே நானாவில்" போதையேற்றியும் இன்னொரு பக்கம் "என் கல்யாண வைபோகம்" பாடலில் குடும்பக் குத்துவிளக்காகவும் மிளிரும் வாணியின் குரல்.

"மல்லிகை முல்லை பூப்பந்தல்" பாட்டு https://youtu.be/dmx2gkelEnc மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் "அன்பே ஆருயிரே" படத்துக்காகக் கொடுத்தது. அந்தப் பாட்டை எவ்வளவு ரசித்துக் கேட்பேனோ அதன் தங்கை போலவே இந்த "என் கல்யாண வைப்போகம்" பாடலையும் பரிவு காட்டுவேன்.
இந்த இரண்டு பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி என்பது கொசுறுத் தகவல்.

தொண்ணூறுகளில் சன் தொலைக்காட்சியின் சப்தஸ்வரங்கள் வழியாகவே இந்தப் பாடல் எனக்குப் பல்லாண்டுகளுக்கு முன் அறிமுகமாகி நேசிக்க வைத்தது. அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில் சுபாஸ் கஃபே றோல்ஸ், நியூ விக்டேர்ஸ் றெக்கோர்டிங் பார் போன்ற நினைவழியாச் சுவடுகள் மங்கலாகத் தெரியும் என் பால்யத்தில் உறவினர் காரில் படமாளிகைகளுக்குப்  போனதை நினைவு கொள்ளும் போது இந்தப் பாட்டுத் தான் பின்னணி வாசிக்கும்.

"என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்" பாடல் எழுபதுகளில் இறுதியில் தமிழ்த் திரையிசை எவ்வளவு பூரிப்போடு நிறை மாதக் கர்ப்பிணியின் சந்தோஷத்தில் இருந்தது என்பதைக் காட்டும் ஒரு சின்ன உதாரணம். இந்தப் பாடலை உற்றுக் கேட்கும் போது சரியாக 1.12 நிமிடத்தில் ஒரு கிட்டார் துளிர்த்து விட்டுப் போகும் அரை செக்கனுக்குள் அடக்கும் இசைத் துளியே சான்று இந்தப் பாடல் எவ்வளவு பரிபூரணம் நிறைந்ததென்று.

மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்
மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட
மலர்கூட்டம் எதிர்பார்க்கும் இளவேனிற் காலம்
பூவையும் ஒரு பூவினம் அதை நான் சொல்லவோ...

https://youtu.be/diwhdy3vQfE

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா 🎻🌴🌸


ஏவிஎம் நிறுவனம் - இசையமைப்பாளர் சந்திர போஸ் - பாடலாசிரியர் வைரமுத்து வெற்றிக் கூட்டணி கொடுத்த படம் "வசந்தி".
வெற்றிக் கூட்டணி என்று இங்கே அடைமொழி கொடுக்கக் காரணம் படத்தின் வணிக ரீதியான வெற்றியைத் தாண்டி அருமையான பாடல்களால் ரசிகர் மனதை ஆட்கொண்ட படங்களில் இதுவுமொன்று. "ரவி வர்மன் எழுதாத கலையோ" என்ற முத்திரைப் பாடல் வைரமுத்துவின் திரையிசைப் பயணத்தில் விலத்த முடியாத பாட்டு.
அந்தப் பாடல் இடம் பிடித்தது வசந்தி திரைப்படத்தில்.

"பாட்டி சொல்லைத் தட்டாதே" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதே திரைப்படத்தின் (பழம்பெரும்) இயக்குநர் சித்ராலயா கோபு வசந்தி திரைப்படத்தை இயக்கினார். அந்தக் காலகட்டத்தில் நடிகர் மோகனின் திரையுலகப் பயணம் சரிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. நகைச்சுவைக்குப் புகழ் பெற்ற சித்ராலயா கோபுவின் முத்திரை இந்தப் படத்தில் இல்லாத காரணத்தாலும் தோல்வியைய் தழுவிக் கொண்டது.

ஒரு பாடலை ஆண் குரல் தனித்தும் பெண் குரல் தனித்தும் பாடும் வகையில் ஏராளம் பாடல்கள் இசைஞானி இளையராஜா இசையில் வந்திருக்கின்றன. ஆனால் சந்திரபோஸ் இசையில் வெகு அரிதாகவே இது நேர்ந்திருக்கிறது. "பாட்டி சொல்லைத் தட்டாதே" படத்தின் "வெத்தல மடிச்சுக் கொடுத்த பொம்பள" பாடலைச் சந்தோஷத்திலும் சோகத்திலுமாகக் கொடுத்திருப்பார். அந்த வகையில் சந்திரபோஸ் வசந்தி படத்தில் "சந்தோஷம் காணாத" பாடலுக்கு இரண்டு வடிவம் கொடுத்திருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய "சந்தோஷம் காணாத வாழ்வுண்டா" பாடலுக்கு இன்னொரு சிறப்புண்டு. இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியதும், சித்ரா பாடியதும் தனித்தனியான வெவ்வேறு வரிக்களை சரணத்தில் கொண்டிருக்கும். ஒப்பீட்டில் சித்ரா பாடியதில் கொஞ்சம் எளிமையும் ஜேசுதாசுக்குத் தத்துவார்த்தம் சற்றே தூக்கலாகவும் இருக்கும்.

"இந்தப் பாடல் பாடுவதற்கு நான் தானே பணம் கொடுக்கணும்" என்றாராம் ஜேசுதாஸ் வைரமுத்துவிடம் பாடல் பதிவு முடிந்ததும்.

எண்பதுகளில் எழுந்த தத்துவப் பாடல்களில் இந்தப் பாடலுக்கு என்றும் இடமுண்டு.

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா - கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் கேட்க

https://youtu.be/xal-3n8f9A0

காட்சி வடிவில்
https://youtu.be/QFk5lKCwT4Q

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா - சித்ரா குரலில் கேட்க https://youtu.be/klASf89CbZU

இந்தப் பாடலின் ஆண் குரலுக்காக எழுதப்பட்ட வரிகள் இவை

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால் 
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா

தென்னையின் கீற்று விழவில்லை என்றால்
தென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை
தங்கத்தைத் தீயில் சுடவில்லை என்றால்
மங்கையர் சூட நகையும் இல்லை
பிறப்பதில் கூட துயர் இருக்கும்
பெண்மைக்குப் பாவம் சுமை இருக்கும்
வலி வந்து தானே வழி பிறக்கும்

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா

பாசங்கள் போதும் பார்வைகள் போதும்
பாலையில் நீரும் சுரந்து வரும்
புன்னகை போதும் பூமொழி போதும்
போர்களும் கூட முடிந்து விடும்
பாதையை அன்பே திறந்து விடும்
பாறையும் பழமாய்க் கனிந்து விடும்
வாழ்க்கையின் ஆழம் விளங்கி விடும்

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா

இந்தப் பாடலின் பெண் குரலுக்காக எழுதப்பட்ட வரிகள் இவை

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால் 
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா

ஊருக்குச் சிந்தும் வான்மழை தன்னில்
உனக்கென்று கொஞ்சம் துளிகளுண்டு
நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்
நாளைகள் இன்றே வருவதுண்டு
பகல் வந்த போது வெளிச்சம் உண்டு
இருள் வந்த போது விளக்கு உண்டு
எறும்புக்குக்கூட சுகங்கள் உண்டு

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா

கல்லினில் வாழும் தேரைகள் கூட
கண்களில் நீரை வடிக்கவில்லை
காட்டினில் வாழும் மான்களுக்கெல்லாம்
நாளையை எண்ணி நடுக்கம் இல்லை
ஐந்தறிவெல்லாம் களிப்பதென்ன
ஆறறிவெல்லாம் துடிப்பதென்ன
மதி கொண்டதாலே மயக்கம் என்ன

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால் 
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா

#தமிழ்த்திரைஅரசர்கள் #சந்திரப்போஸ் #இடைக்காலம்

அண்ணாமலையில் இளையராஜாவை அழைத்து வந்த தேவா


நேற்று சிவா (தெலுங்கு) பாடல்களில் மூழ்கியிருந்த போது அதில் வரும்
 "பாட்டனி பாடமுந்தி" 
https://youtu.be/4xdS0OK3zMk 
பாடலைக் கடக்கும் போது அமலா போய் அண்ணாமலை குஷ்பு நினைவுக்கு வந்தார். எவ்வளவு அழகாக இந்தக் கல்லூரிக் கலாட்டாத் துள்ளிசை மெட்டை அப்படியே லவட்டி "கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப் பூ" பாடலாக உருமாற்றியிருக்கிறார் நம்ம தேனிசைத் தென்றல் 😀
எது எப்படியோ அண்ணாமலை படத்துக்கு இளையராஜாவைத் தான் இசையமைக்க வைக்க வேண்டும் என்று (கே.பாலசந்தர் தவிர்த்து) ஆரம்பத்தில் முயற்சித்தார்களாம். அதைக் குறிப்பால் உணர்ந்து கை கூட வைத்திருக்கிறார் தேவா.

"வள்ளி" திரைப்படத்தின் உப நாயகர்களில் ஒருவரான ஹரிராஜ் நடித்த "வசந்த மலர்கள்" படத்தில் "இளந்தென்றலோ கொடி மின்னலோ" https://youtu.be/BuGQ-mpQIFo என்றதொரு அட்டகாஷ் பாட்டு தேவா இசையில் தொண்ணூறுகளில் கலக்கியது. எண்பதுகளில் ராஜா கொடுத்த "பூங்கதவே தாழ் திறவாய்" பாடலை மீளக் கொணர்ந்திருப்பார் நம்மாள்.
"பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன்" https://youtu.be/RT-rv4rDcwE இன்னொரு அழகான பாட்டு கேட்டு முடித்ததும் "ராதையின் நெஞ்சமே கண்ணனுக்குச் சொந்தமே" என்ற பழைய பாடலை நினைவூட்டும். அந்தப் பழைய பாடலே ஹிந்தியில் இருந்து இறக்குமதியான சரக்கு.

இப்படியான பாடல்களை தேவா இசையில் மீளக் கேட்கும் போது "வெள்ள மனம் உள்ள மச்சான்" என்று மனசார வாழ்த்தத் தோன்றும் 😀

சிவகுமாரின் இருநூறாவது படம் "வாட்ச்மேன் வடிவேலு" தேவா இசையமைப்பில் இந்தப் படத்திலும் மணியான இரண்டு பாடல்கள். அதில் "சந்திரனும் சூரியனும்" https://youtu.be/M2DCCLhLQoU அழகான பாடலைத் தன் பேரப் பிள்ளைக்குப் பாடுமாற் போலக் காட்சியமைத்து மோசம் செய்திருப்பார்கள்.
"கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ" https://youtu.be/FFH_ra9q8vI என்றொரு பாட்டு ஏற்கனவே காதல் தேவதை படத்துக்காகத் தமிழில் மீளவும் ராஜா கொடுத்த "சம்மதம் தந்துட்டேன் நம்பு " https://youtu.be/kdxR57emV2k பாடலை அவ்வ்

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் 
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் 💃🏃🥁

இசைஞானி இளையராஜாவை வெறுமனே இசையமைப்பாளர் என்ற எல்லைக்குள் அடக்கி விட முடியாது என்பதற்கு எவ்வளவோ விதமான உதாரணங்களை அவரின் பாடல்களின் வழியாகவும், பின்னணி இசையில் கொடுத்திருக்கும் ஆழமான உணர்வலைகளின் வழியாகவும் உய்த்துணரலாம். இவர் கொடுத்த எத்தனையோ பாடல்களை அவை திரை வடிவம் பெறுவதற்கு முன்னமேயே மனக்கண்ணில் இன்னது போலக் காட்சி வடிவம் பெறுக் கூடும் என்றதொரு பிரதியை எடுத்து விடுவோம். பின்னர் காட்சியில் காணாத திருப்தியை விலக்கி விட்டு நாம் கற்பனையில் ஆக்கிய அந்த வடிவத்தோடே பாடலை அனுபவிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் வாய்த்ததுண்டு.

ஒரு பாடலில் அவர் கொடுத்திருக்கும் நுட்பம் உணர்ந்த தேர்ந்த ஒளிப்பதிவாளரோ, நடன இயக்குநரோ, படத்தின் இயக்குநரோ ஒளிச் சேர்க்கையிலும், காட்சிப் பின் புலத்திலும், நடன அசைவிலுமோ நியாயம் கற்பித்துக் குறித்த பாடலின் தரத்தைப் பேணியிருக்கிறார்கள்.

பாடகராக எப்படி ஒரு T.M.செளந்தரராஜன் குரல் சிவாஜி கணேசனாகவும் எம்.ஜி.ஆராகவும் இனம் பிரித்துக் காட்டியதோ அதே பாங்கில் ரஜினிகாந்துக்கான குரலில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இயங்கியதை இசையமைப்பாளர் என்ற பேதமின்றிக் கண்டுணரலாம். உதாரணமாக சந்திரபோஸ் இசையில் "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா" என்பது ஒரு சோறு.

இனி "ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்" பாடலுக்கு வருவோம். இந்தப் பாடல் உங்களுக்கு எப்படியோ எனக்கு வாரா வாரம் ஏதோவொரு உலக வானொலி வழியாகவேனும் காதில் விழுந்து விடுகிறது. அதுவும் இந்தப் பாட்டைப் பற்றி நினைத்தாலே
"டுக்கு டுக்குடு டும் டுக்கு டுக்குடு டும்...." என்று பாட்டைத் துள்ள வைத்திருக்கும் தாள லயம் தான் காதுக்குள் ஒலிக்குமாற் போலவொரு பிரமை.
இந்தத் தாள லயம் அல்லது அடி ரஜினிகாந்துக்கான பாடலை உருவாக்க முனையும் போதே இது இவருக்கான துள்ளல் இசை தான் என்று இசைஞானியார் தீர்மானித்திருப்பது போலத் தென்படும். இந்த இடத்திலேயே பாடலின் நிறம் தீர்மானிக்கப்பட்டதும் மீதியெல்லாம் தானாக மனதில் இறங்குமளவுக்கு அற்புதமான பயணமாக இந்தப் பாடல் அனுபவம் இருக்கும்.

"ராஜ்ஜ்ஜாதி ராஜா உன் தந்திரங்கள்" எனப் போதை ஊசி போடும் ஸ்வர்ணலதாவுக்கு

"மாய ஜாலமென்ன" என்று ஸ்டைலாக வார்த்தையை அள்ளி விடும் அக்கணமே எஸ்.பி.பி ரஜினியாகி விடுகிறார்.

பாட்டு முடியும் போது எஸ்.பி.பியின் ரஜினியிசம்
"ரூபாப்ப ராபாப்ப ராப பப்பா" முத்தாப்பு.

ஸ்வர்ணலதாவின் குரல் குஷ்புவுக்கானதோ என்றொரு சினிப் பட்டிமன்றம் நிகழ்ந்த தொண்ணூறுகளை நினைப்பூட்டும் வகையில் இங்கேயும் பாடல் வழியே அது முன் மொழியப்படுகிறது. 

இந்த இரண்டு பாடகர்களும் தத்தமது பாணியில் வேற்றுமையில் ஒற்றுமை காட்டும் சுவையான கலவை.

மேற்கத்தேயத்தோடு களம் இறங்கிய பாட்டு இடையிசையில் "டண்டக்கு டண்டக்கு டக்கு" என ஒரு நாட்டுப் புறக் குத்து போட்டுப் பார்க்கும் போது அப்பப்பா அதன் சுவை தான் என்னே 😀

ஆகவே தான் இசைஞானி இளையராஜாவை ஒரு முழுமையான இசை இயக்குநராக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் எந்த இடத்தில் நடனமும், நளினமும், ஓசை கலவாத குரலும், குரல்களின் அணி வகுப்பும் அதற்கேற்ற நடன மாந்தரும் வர வேண்டும் என்று தீர்மானித்து எழுதி இசைத்தும் விடுகிறார். அப்படியாகக் காட்சியிலும் தப்பிப் பிழைத்த அழகான படைப்பு இந்த
டுக்கு டுக்குடு டும் டுக்கு டுக்குடு டும்....