மை பிரண்ட் போன்ற சகோதரங்கள் ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் வீதம் போடுங்கண்ணா என்று அன்புத் தொல்லை வேறு. ஆனாலும் "இது ஆவுறதில்ல" என்று கவுண்டர் பாஷையில் சொல்லி விட்டு வாரா வாரம் பிரதி வெள்ளி தோறும் இந்த றேடியோஸ்பதி சிறப்பு பதிவர்களைக் கொண்டு வர இருக்கின்றேன்.
இப்பதிவில் உங்களுடைய ஆக்கங்களும் இடம்பெற வேண்டுமானால், உங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் உங்களை ஈர்த்த அம்சங்களையும் சொல்லி வைத்து ஒரு மடலை என்ற kanapraba@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுங்கள்.
சரி நண்பர்களே, இனி இந்த வார சிறப்பு நேயர் யாரென்று பார்ப்போம்.
இந்த வாரம் வலம் வரும் நேயர் புதுகைத் தென்றல் என்ற பெயரில் கடந்த நவம்பர் 2007 இல் பதிவுலகுக்கு வந்து
புதுகைத் தென்றல்
பாட்டுக்குப் பாட்டு
என்று பதிவுகளை அள்ளிக்குவிக்கும் பெண் நேயர். கொழும்பில் தற்காலிகமாக இருந்து கொண்டு இலங்கையில் இயற்கை வனப்பை அணு அணுவாக அவர் ரசிப்பது இவர் சுட்டிருக்கும் புகைப்படங்களிலும் பதிவுகளிலும் தெரிகின்றது.
புதுகைத் தென்றல் சற்று வித்தியாசமாக இலங்கை வானொலியில் வலம் வரும் "இவ்வார நேயர்" பாணியிலேயே தன் விருப்பப் பாடல்களைக் கொடுத்திருக்கின்றார். கேட்டு ரசியுங்கள்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்,
வணக்கம். அன்பு நெஞ்சங்களே! நமது இன்றைய கருத்தும் கானமும் நிகழ்ச்சியில் வளமைப்போல் நேயர் ஒருவரின் பாடல் தெரிவு இடம்பெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு வீதி, இலக்கம் 2037 ஐ சேர்ந்த நேயர்
"தென்றல்" அவர்களின் விருப்பப் பாடல் தெரிவுகள் இடம்பெறுகின்றன.
நிகழ்ச்சிக்கு போகலாமா?
1.இறைவனை வழிபடுதலில் பலவகை உண்டு. தாயாக, தந்தையாக, பிள்ளையாக, நண்பனாக என்று நினைத்து வழிபடுவார்கள். "சரணாகதி" என்ற நிலைமிகவும் உன்னதமானது. களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறுகிறார் நேயர்.
அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
முருகா! முருகா! முருகா!
|
2. இருமணம் இனைவது திருமணம். அந்தத் திருமண உறவை குறித்து அழகாக விளக்குவது இந்தப்பாடல். பாடலின் இடையே இருக்கும் "விகடம்" வெண்பொங்கலின் நடுவே கடிபடும் மிளகைப் போல "நச்".
அந்த அருமையான பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம்
"அவள் ஒரு தொடர்கதை".
கடவுள் அமைத்து வைத்த மேடை
கிடைக்கும் கல்யாண மாலை.
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று.
|
3.இன்றைய "கருத்தும் கானமும்" நிகழ்ச்சியில் புதுகையைச் சேர்ந்த நேயர் தென்றல் அவர்களின் விருப்பப் பாடல் தெரிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
உறவிலேயே சிறந்தது கணவன் - மனைவி உறவு. இடையிலே ஏற்பட்டு இறுதி வரைத் தொடர்வது. மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள பாடலாக நேயர் கூறும் அப்பாடப் பாடல் "புதிய முகம்" படத்தில் இடம் பெற்றுள்ளது.
கண்ணுக்கு மெய்யழகு
கவிதைக்கு பொய்யழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு.
|
4. தாய்மை பெண்ணை முழுதாக்குகிறது. வெட்கமும், சந்தோஷமும் பூசியது
அந்த 10 மாதத் தவக்காலம். தாய்மையை கொண்டாடும் இந்தப் பாடல் தனக்கு மிகவும் பிடிக்க காரணமாக கூறுகிறார் நேயர். "பூந்தோட்ட காவல்காரன்"
திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இதோ :
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு.
|
5. குழந்தையின் முதல் பாட்டு தாலாட்டு தான். தாயின் தாலாட்டைமறக்கமுடியுமா?
இந்தப் பாடலை கேட்கும் பொழுதெல்லாம் தூக்கம் கண்களை தழுவும் என்கிறார் நேயர்,
"நினைத்ததை முடிப்பவன்" படப் பாடலை நேயரோடு சேர்ந்து நாமும் ரசிக்கலாம்.
இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்.- அதில்
பட்டுச்சிறகுடன் அன்னச் சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன். நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட.
|
என்ன நேயர்களே! பாடல்களை ரசித்தீர்களா? நானும் ரசித்தேன்.
மீண்டும் இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் தங்களை சந்திக்கும்
வரை வணக்கம் கூறி விடை பெறுவது தங்கள் அபிமான
கே... எஸ்.. ராஜா.