Pages

Monday, December 31, 2007

திரையிசையோடு தாகூரின் காதல் கவிதைகள்

வங்கம் தந்த கவி ரவீந்திர நாத் தாகூரின் காதல் கவிதைகளை வானொலிக்கேற்ற விதத்தில் பயன்படுத்தி தமிழ்த் திரையிசைப்பாடல்களோடு இணைத்துச் நான் செய்த நிகழ்ச்சியை இங்கு பகிர்கின்றேன்.

இத்தொகுப்பில் இடம்பெறும் பாடல்கள்:

1. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

2. மாலையில் யாரோ மனதோடு பேச (ஷத்ரியன்)

3. இதயமதைக் கோயில் என்றேன் ( உயிருள்ளவரை உஷா)

4. ராசாவே உன்னை நான் எண்ணித் தான் ( தனிக்காட்டு ராஜா)

5. காவியம் பாடவா தென்றலே ( இதயத்தைத் திருடாதே)

6. பாடவா உன் பாடலை ( நான் பாடும் பாடல்)

7. நீலவான ஓடையில் (வாழ்வே மாயம்)

8. என் கல்யாண வைபோகம் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

9. உறவெனும் புதிய வானில் ( நெஞ்சத்தைக் கிள்ளாதே)


தாகூரின் கவிதைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்ட சி.எஸ்.தேவ்நாத் இற்கும் வெளியிட்ட நர்மதா பதிப்பகத்துக்கும் என் நன்றிகள்.



இத்தொகுப்பைக் கேட்க



தரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும்

Friday, December 21, 2007

றேடியோஸ்பதி வாக்குப் பெட்டியில் 2007 இன் சிறந்த இசையமைப்பாளர்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் றேடியோஸ்பதியில் வந்து போகும் இசைப்பிரியர்களுக்காக ஒரு வாக்கெடுப்புப் பதிவைக் கொடுத்திருந்தேன். உங்கள் தெரிவில் 2007 இன் சிறந்த இசையமைப்பாளர் என்ற அந்த வாக்கெடுப்பில் கலைந்து சிறப்பித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள். இதோ இந்த வாக்கெடுப்பின் முடிவுகளை இந்த வருடம் முடிகின்ற தறுவாயில் அறிவித்து விடுகின்றேன்.

நவம்பர் 12 ஆம் திகதி ஆரம்பித்து கடந்த ஏழு வார வாக்கெடுப்பின் பிரகாரம் 93 வாக்குகளைப் பெற்று இளையராஜா முன்னணியின் நிற்கின்றார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 72 வாக்குகளைப் பெற்று ஏ.ஆர்.ரஹ்மானும், 68 வாக்குகளோடு மூன்றாவது இடத்தில் யுவன் ஷங்கர் ராஜாவும் இருக்கின்றார்கள்.

இந்தப் போட்டி என்பதே இந்த ஆண்டு வெளிவந்த தமிழ்ப்படங்களில் சிறந்த இசையமைப்பை வழங்கிய இசையமைப்பாளர் என்பதே. ஆனால் இசைஞானியின் கொலை வெறி ரசிகர்களின் ஓட்டுக்களோ இளையராஜாவையே அதிக ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்திருக்கின்றார்கள்.

ஆரம்பத்தில் முன்னணியில் இருந்த யுவன் பருத்தி வீரனுக்காகவும் , ரஹ்மான் சிவாஜிக்காகவும் அதிக ஓட்டுக்களைப் பெற்றிருந்தார்கள்.

இளையராஜாவுக்கு மாயக்கண்ணாடி உட்பட பேர் சொல்லும் திரைப்படங்கள் இந்த ஆண்டு தமிழில் அமையவில்லை. ஆனால் சீனி கம் என்ற ஹிந்தித் திரையில் பழைய பல்லவியோடு புது மொந்தையில் கலக்கியிருந்தார்.

ரஹ்மானுக்கு சிவாஜி படம் உச்ச பட்ச வரவேற்பைக் கொடுத்து ஏறக்குறைய எல்லாப் பாடலையும் ரசிக்க வைத்தது. பாதி புண்ணியம் ரஜினிக்குத் தான். ராஜா என்றைக்குமே இசை ராஜா தான், ஆனால் அவர் மனசு வைக்கணுமே.

வித்யாசாகருக்கு மொழி படம் ஒன்றே அவரின் திறமையின் அடையாளம். வழக்கமான தன் பாணியில் இருந்து புது மாதிரிக் கொடுத்திருந்தார்.

யுவன் காட்டில் இந்த ஆண்டு அடை மழை. பருத்தி வீரன், சென்னை 28, பில்லா போன்ற படங்கள் வெற்றி பெற்றதும் இவரின் இசைக்கு மேலதிக அங்கீகாரமாக அமைந்து விட்டது. கற்றது தமிழ் இவருக்கு பின்னணி இசையில் ஒரு மேலதிக வாக்கைக் கொடுத்து விட்டது.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை தமிழ் திரையிசையின் சாபக்கேடாக ரீமிக்ஸ் காப்பிகள் வைரஸ் போலப் பரவி புதிய சிந்தைகளைத் தடுத்து விட்டன. ரீமிக்ஸ் குறித்த தன் விசனத்தை முன்பு விகடனிலும், கடந்த வாரக் குமுதத்திலும் எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனா இப்ப இருக்குற ரசிகர்கள், இளைய தலைமுறையினர் இதைத் தான் விரும்புறாங்கன்னு சொல்றது தப்பு. ‘‘தொட்டால் பூ மலரும்..’’ பாட்டை ரஹ்மான் ரீ_மிக்ஸ் செய்திருந்த சமயம், ஏர்போர்ட்ல மீட் பண்ணினோம். என்னைப் பார்த்துட்டு நான் எதுவும் சொல்வேனோன்னு பயந்தார் ரஹ்மான். ஆனா, நான் பாராட்டினேன். காரணம் ரஹ்மான் செய்தது ரீ_மிக்ஸ் மாதிரி இல்ல. முழு பாடல் வரிகளையும் அப்படியே வெச்சுக்கிட்டு டியூன் போட்டார். பாட்டு கேட்கவும் நல்லா இருந்தது. அதுதான் சரி. அப்படித்தான் பண்ணணும். ஆனா பழைய ட்யூனை வெச்சுக்கிட்டு இடையில் ‘காச் மூச்’னு கத்தறதும், சத்தமான மியூசிக்கும் கேட்கவே பரிதாபமாயிருக்கு. ஏன் இப்படிப் பண்ணணும். செய்தா ‘பழமை மாறாமல்’ செய்யணும். இப்ப கூட ‘பில்லா’ படத்துல ‘மை நேம் இஸ் பில்லா’ பாட்டை எனக்குப் போட்டுக் காண்பிக்கிறதுக்காக வர்றேன்னு சொன்னாங்க. நான் தவிர்த்துட்டேன். என்னோட வாழ்த்து எப்பவும் எல்லார்க்கும் இருக்கும். ஒரு ரசிகனா நான் இதை ரசிக்கவில்லை. இளைய தலைமுறைக்கு விஷம் பிடிக்குதுன்னா நாம விஷம் கொடுக்கலாமா? இது தப்பு. சரியில்ல...

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்காக கம்போஸ் செய்தபோது, ஒரு கிராமத்துப் பாடலை நான் பாடிக் காண்பித்தேன். ‘கத்தாழங் காட்டுக்குள்ள... விறகொடிக்கப் போனபுள்ள’ இதுதான் அந்தப் பாட்டு. அதையே கண்ணதாசன், ‘எங்கேயும் எப்போதும்’னு உடனே பாடலை எழுதிக் கொடுத்திட்டார். இப்படி ஒன்றிலிருந்து ஒன்று வந்தால் தப்பில்லை. எதையும் கெடுத்திடக் கூடாது"


அடுத்த ஆண்டாவது இந்த நிலை நீங்கி இன்னும் பல புது இள ரத்தங்களின் இசைப் பாய்ச்சலோடு இனியதொரு இசைவருடமாக மலரட்டும்.

இசையமைப்பாளர்கள் கவனத்துக்கு: இப்படியெல்லாம் போட்டி வைக்காதீங்க, எங்களை விட்ருங்க என்று இங்கே வந்து மொக்கை போடாதீங்கப்பா)

முழு வாக்கு வங்கி இதோ:

Sunday, December 16, 2007

நீங்கள் கேட்டவை 24


நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நீங்கள் கேட்ட பாடல்களோடு மலரும் நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் நான் சந்திக்கின்றேன். இனி மாதம் ஒரு பதிவாதல் உங்கள் விருப்பப் பாடல்களோடு கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன். இயன்றவரை இணையத்தில் அதிகம் புழங்காத பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் விருப்பப் பாடல்களை நீங்கள் அறியத்தந்தால் அவை முன்னுரிமை கொடுத்து இடம்பெறும் என்று சொல்லிக் கொண்டு இன்றைய பதிவில் இடம்பெறும் பாடல்களைப் பார்ப்போம்.

முதலில் புதுகைத் தென்றல் என்ற தமிழ்மணத்தின் புதுவரவுப் பதிவர் விரும்பிக் கேட்டிருக்கும் "செவ்வந்தி பூக்களில் செயத வீடு" பாடல் மெல்லப் பேசுங்கள் திரைப்படத்திற்காக தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் குரலில் ஒலிக்கின்றது. இசை: கங்கை அமரனின் சகோதரர், யுவனின் அப்பா

வலையுலக இசை ரசிகர் ஜி.ராகவனின் விருப்பமாக வரும் அடுத்த தேர்வு இளையராஜா சகோதரர் கங்கை அமரன் இசையில் மலர்களே மலருங்கள் திரைக்காக "இசைக்கவோ நான் கல்யாண ராகம்" என்ற இனிய பாடல் ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கின்றது.

புது வரவு இலங்கைப் பதிவர் ரிஷான் ஷெரிப் கேட்டிருக்கும் பாடல் கெளரி மனோகரி திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "பார்த்த பார்வையில் என்னுள்ளம் என்ன பள்ளமானது" என்னும் பாடல். இசையை அமைத்தவர் இனியவன் என்னும் அறிமுக இசையமைப்பாளர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த இப்படத்தை வி.சி.டியில் எடுப்பதே கடினம். நடிகர்கள் உட்பட பெரும்பாலான தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு அறிமுகம் இப்படம். இலங்கை எப்.எம் வானொலிகளில் அப்போது அடிக்கடி வந்த பாட்டு இது.


அடுத்து நம்ம பெருமைக்குரிய கொ.ப.செ கோபி விருப்பமாக மலையாள காலாபாணி, தமிழில் சிறைச்சாலை ஆன திரையில் இருந்து ராஜா சார் இசையில் எம்.ஜி.சிறீகுமார், சித்ரா பாடும் "சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி" என்னும் இனிய கீதம்.

உங்களுக்கெல்லாம் போட்டாச்சு. என் விருப்பத்தையும் சொல்லி விட வேண்டாமா?
ஒரு கைதியின் டைரி திரையில் இருந்து விஜய் என்ற பெயரில் பாடிய இப்போதைய உன்னிமேனனும், உமாரமணனும் கூவும் " பொன் மானே கோபம் ஏனோ" பாட்டைக் கேட்டுக் கிறங்கி நீங்களும் பாட்டுக் கேட்க வாருங்கள் ;-)
Powered by eSnips.com

Friday, December 14, 2007

Heart Beats இசை ஆல்பம் - ஒலிப்பேட்டி


ஆராதனா என்னும் இசைக்கல்லூரியைக் கொழும்பில் நடாத்தி வரும் வி.கே.ஜே மதி அவர்களின் முதல் அரங்கேற்றமாக Heart Beat என்ற இசை ஆல்பம் நாளை டிசம்பர் 15 ஆம் திகதி, உருத்திரா மாவத்தையில் உள்ள "கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படுகின்றது. இந்த ஆல்பத்தை அவரே எழுதி இசையமைத்திருக்கின்றார்.

மதி அவர்களையும், அவரின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டு வரும் நோக்கில் அவருடன் ஒரு ஒலிப்பேட்டியைத் தயாரித்து கடந்த புதன் கிழமை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பியிருந்தேன். அதன் பகிர்வை இங்கே தருகின்றேன்.

மதியின் கைவண்ணத்தில் வந்த "யாழ் நகர வீதியில் நாம் சுற்றித் திரிந்த காலங்கள்" என்ற பாடலைக் கேட்டிருந்தேன். அந்தப் பாடலே இவருடைய திறமைக்கு ஒரு சான்று. இப்பேட்டியின் ஆரம்பத்தில் அப்பாடலின் சில துளிகளையும் உங்கள் செவிக்கு விருந்தாக இட்டிருக்கின்றேன். இசைத் துறையில் வி.கே.ஜே.மதியின் புகழ் வியாபியிருக்க வேண்டும் என்று இவ்வேளை வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

Monday, December 10, 2007

நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு நினைவில் - ஒலிச்சித்திரம்


ஊடகவியலாளர் டி.அருள் எழிலன் அவர்கள், சிலவாரங்கள் முன் ஆனந்த விகடன் சஞ்சிகையில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு நினைவாக சிறப்புத் தொகுப்பை அளித்திருந்தார். ஆண்டு முடிவதற்குள் எம்.ஆர்.ராதா குறித்த வானொலிப்படைப்பை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வழங்க வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு அந்த ஆக்கம் பேருதவியாக அமைந்தது. அருள் எழிலன் அனுமதியுடன் அந்தப் பிரதியினை வானொலிக்குப் பொருத்தமான அம்சங்களுடன் இணைத்து "நடிகவேள் எம்.ஆர்.ராதா நினைவில்" என்ற ஒலிச்சித்திரமாக ஆக்கியிருக்கின்றேன். 45 நிமிடம் வரை ஓடும் படைப்பு இது.

இப்படையலில் "ரத்தக்கண்ணீர்" திரையில் வந்த புகழ்பெற்ற வசனங்களுடன், புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை, பொன்னார் மேனியனே, குற்றம் புரிந்தவன், மற்றும் நீயே உனக்கு என்றும் நிகரானவன் போன்ற எம்.ஆர்.ராதா தோன்றி நடித்த பாடல்களும் இடம்பெறுகின்றன.

பிரதியினை அளித்த அருள் எழிலனுக்கு மிக்க நன்றிகள்.

பதிவில் இடம்பெறும் படம் உதவி: மலேசிய ஆஸ்ரோ வானவில் இணையம்



To Download (Right-click, Save Target As/Save Link As)

http://www.radio.kanapraba.com/MRRadha.mp3

Tuesday, November 27, 2007

றேடியோஸ்புதிர் 4 - சொக்கனுக்கு வாய்ச்ச சுந்தரியோ...?


இங்கே வழக்கம் போல் பாட்டுப் புதிர்ப் போட்டிபோடு வந்திருக்கின்றேன். இந்தப் புதிரில் எஸ்.ஜானகி ஸ்வரம் பாடி, ஆரம்ப இசை மட்டும் ஒலிக்கின்றது. பாட்டு என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள்.
பாடலைக் கண்டு பிடிக்க சில உப குறிப்புக்கள். எஸ்.ஜானகியோடு இன்னொரு பாடகரும் பாடியிருக்கின்றார். இசைய வைத்தவர் இளையராஜா. இந்தப் படத்தின் நாயகன் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நடிக்க வந்த காலத்துப் படங்களில் ஒன்று. நல்ல மசாலா இயக்குனரின் திரைப்படமாக இது இருந்தாலும் இந்த நாயகனுக்கு இந்தப்படமோ அல்லது அந்தக் காலகட்டத்தில் வந்த வேறு படங்களோ எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. ஆனால் பல வருஷங்கள் கழித்து ஒரு அறிமுக இயக்குனரின் முதல் படமே இந்த நாயகனுக்கு ஒரு திருப்புமுனையாக வந்து, இன்று முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர்.

தொண்ணூறுகளில் சென்னை வானொலியின் ஞாயிறு தோறும் வரும் நீங்கள் கேட்டவையின் ரசிகராக இருந்தால் இந்தப் பாட்டை இன்னும் சுலபமாகக் கண்டுபிடிக்கலாம். சரி இனிப்பாட்டைக் கண்டு பிடியுங்களேன்.



மேற்கண்ட பாடல் புதிருக்கான சரியான விடை:
படம்: காவல் கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இயக்கம்: எஸ்.பி.முத்துராமன்
அந்த நாயகன்: விக்ரம், ஆனால் பாடலில் வேறு இருவர் தோன்றி நடித்திருக்கின்றார்கள்
போட்டியில் சரியான விடையளித்த மணி, வவ்வால், சொக்கன் உங்களுக்கு பாராட்டுக்கள்.
இதோ முழுமையான பாடல்

Monday, November 26, 2007

80 களில் வந்த அரிய பாடல்கள் - பாகம் 2

கடந்த பதிவின் தொடர்ச்சியாக 80 களில் மலர்ந்த மேலும் சில அரிய பாடல்கள் இந்தப் பதிவிலும் இடம்பிடிக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் இசையமைத்து இந்தப் பாடற் தொகுப்பு மலர்கின்றது.
அந்த வகையில், முதலில் வரும் பாடலை இசையமைத்திருக்கின்றார் டி.ராஜேந்தர். இவர் தன்னுடைய படங்கள் அன்றி வெளியார் படங்கள் சிலவற்றிலும் சிறப்பாக இசையமைத்திருக்கின்றார் என்பதற்கு உதாரணமாக மலரும் இந்த இனிய பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குரல்களில், "பூக்களைப் பறிக்காதீர்கள்" திரையில் இடம்பெறும் "காதல் ஊர்வலம் இங்கே" என்ற பாடலாகும்.

தொடர்ந்து தேவேந்திரன் இசையில் "பொங்கியதே காதல் வெள்ளம்" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாட மண்ணுக்குள் வைரம் திரைக்காக இடம்பெறுகின்றது.

அடுத்து, நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் நாயகனாக நடித்த "பாய்மரக்கப்பல்" திரையில், கே.வி.மகாதேவன் இசையில் வரும் "ஈரத்தாமரைப் பூவே" என்ற இனிய பாடல் எஸ்.பி.சைலஜா பின்னணிக்குரலிசைக்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.

எண்பதுகளில் இளையராஜாவுக்கு மாற்றீடாக விளங்கிய சந்திரபோஸ் இசையமைத்த படமான "விடுதலை" திரையில் இருந்து "நீலக்குயில்கள் ரெண்டு" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.

நிறைவாக மனோஜ் கியான் இரட்டையர்கள் இசையமைப்பில் வரும் "ஒரு இனிய உதயம்" திரைப்பாடலான "ஆகாயம் ஏனடி அழுகின்றது" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுகின்றார்கள்.

பாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் ;-)

Sunday, November 18, 2007

80 களில் வந்த அரிய பாடல்கள் - பாகம் 1


இந்த ஒலித்தொகுப்பில் 80 களில் வெளிவந்த அரியபாடல்கள் சில இடம்பெறுகின்றன. அந்தவகையில்,

"அம்மா பிள்ளை" திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "இனிய தென்றலே இரு கைகள் வீசி வா" என்ற பாடல் முதலில் இடம்பெறுகின்றது. பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து.

வி.குமார் இசையில் "மங்கள நாயகி" திரைப்படத்தில் இருந்து "கண்களால் நான் வரைந்தேன், அன்பெனும் ஓர் கவிதை " என்ற இனிய பாடல் கே.ஜே.ஜேசுதாஸ், பி சுசீலா குரல்களில் ஒலிக்கின்றது.
இந்தப் பாடலைக் கேட்கும் போது "உன்னிடம் மயங்குகிறேன்" பாடல் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாயது.

ராம் லக்ஷ்மன் இசையமைக்க "காதல் ஒரு கவிதை" திரைப்படத்தில் இருந்து "காதல் பித்து பிடித்தது இன்று" என்ற பாடல் நிறைவாக ஒலிக்கின்றது. இத்திரைப்படம் ஹிந்தியில் Maine Pyar Kiya என்று வெளிவந்திருந்தது. ராம் லக்ஷ்மன் என்ற இசையமைப்பாளரின் பெயர் வந்த காரணமும் இவ்வொலித் தொகுப்பில் இடம்பெறுகின்றது.

பாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் ;-)

Monday, November 12, 2007

உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?


இந்த ஆண்டு முதல் றேடியோஸ்பதி மூலம் என் இசைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கும் அதே வேளை ஆண்டு முடிவதற்குள் ஒரு இசைத் தேர்வுப் போட்டியை நடத்த நினைத்தேன்.
2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் இசையமைப்பாளர்களில் இருந்து முதல் மூன்று இசையமைப்பாளர்களை வலைப்பதிவர்கள் மற்றும் வலைப்பதிவு வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் முறையில் இந்தப் போட்டி அமைகின்றது. காரணம் இசை ரசிகர்கள் தான் விருதுகளைத் தேர்தெடுக்கும் உண்மையான நடுவர்கள்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் இசையமைப்பாளருக்காக நீங்கள் பின்னூட்டம் மூலம் பிரச்சாரம் கூட வழங்கலாம். அதாவது, குறித்த அந்த இசையமைப்பாளர் எந்த வகையில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு முதலிடத்தில் இருக்கின்றார் என்று.

இங்கே நான் ஒவ்வொரு இசையமைப்பாளர்களுக்குப் புகழ் கொடுத்த திரையிசைப் பாடலில் ஒன்றையும் தரவிருக்கின்றேன். அதற்குக் காரணம் இப்போதுள்ள ஏராளமான இசையமைப்பாளர்களில் குறித்த பாடலை இசையமைத்தவர் யார் என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம். இதோ இந்தப் போட்டியில் வரும் இசையமைப்பாளர்களின் பாடல்களைக் கேளுங்கள், கேட்டுக் கொண்டே உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.

யுவன் சங்கர் ராஜா

பருத்தி வீரன் படத்தில் கிராமிய இசையாகட்டும், சத்தம் போடாதே, சென்னை 28 போன்ற படங்களில் நகரத்தின் நவீனத்தைக் காட்டும் இசையாகட்டும், கற்றது தமிழ் போன்ற உருக்கமான கதைக்களமாகட்டும் யுவனுக்கு இந்த ஆண்டு நிறைய வாய்ப்பைக் கொடுத்து உயர வைத்தது.


வித்யாசாகர்

இடைக்கிடை தமிழில் வந்து தலை காட்டுவார், பின்னர் தெலுங்கோ மலையாளத்திலோ இசையமைத்துக் கொண்டிருப்பார். பின்னர் அர்ஜீனோ, தரணியோ இவரை தமிழுக்கு இழுத்து வருவார்கள். இம்முறை பிரகாஷ்ராஜ் புண்ணியத்தில் மொழி திரைப்படம் மூலம் "காற்றிற்கும் மொழி" கொடுத்தவர்.


ஏ.ஆர்.ரஹ்மான்

வித்யாசாகருக்கு பிற மாநிலம் போல ரஹ்மானுக்கு பிற நாடுகள். அடிக்கடி வெளிநாடுகளுக்குத் தாவி மேடை நாடகங்களுக்கோ சீனப் படங்களுக்கோ இசையமைத்துக் கொண்டிருந்த இவரை, இயக்குனர் ஷங்கர் விடமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்று "சிவாஜி" படத்துக்கு மெட்டுப் போட வைத்தார்.
விஜய்யின் அழகிய தமிழ்மகனைப் பற்றிப் இப்போதைக்குப் பேசுவதாக இல்லை. ஏனென்றால் கொஞ்சம் காலம் கழித்து தான் ரஹ்மானின் டியூன் சூடு பிடிக்கும்.


ஜி.வி.பிரகாஷ்குமார்

சிக்கு புக்கு ரயிலே பாடிய பையனா இவன்? என்று கேட்கும் அளவுக்கு வெயில் படமூலம் தன் தடம் பதித்தவர். இந்த ஆண்டு கிரீடம் படத்தில் சாதனா சர்க்கம் மூலம் அக்கம் பக்கம் பாடவைத்து ரசிகர்களையும் முணுமுணுக்க வைத்தவர்.


மணிசர்மா

சென்னைக்கார இசையமைப்பாளர், ஆந்திராக்காரம் தான் இவருக்கு பிடிக்கும் போல. ஆனாலும் போக்கிரி மூலம் ஒரு சில தெலுங்கு டியூனை குழைத்து ஒப்பேத்தி விட்டார். இருந்தாலும் போக்கிரி கேட்கப் பிடிக்கும்.


விஜய் ஆண்டனி

நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் பாட்டில் அடையாளப்படுத்தப்பட்ட இவர், நான் அவனில்லை மூலம்
ஏன் எனக்கு மயக்கம் என்ற பாட்டில் கிறங்க வைத்தவர் இந்த ரீமிக்ஸ் புலி.


தினா

"மன்மத ராசா கன்னி மனச கொல்லாதே" மறக்க முடியுமா? தொலைக்காட்சி நாடகங்களின் இசைராஜா தீனா இப்போதெல்லாம் தான் இசையமைக்கும் நாடகங்களுக்கு போடும் பாட்டுக்கு தன் மகன் பெயரை போட்டு விட்டு திரையுலகத்தில் நிரந்தர இடம் பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் உப்பு கல்லு பாட்டு இந்த ஆண்டு இவர் பெயரைச் சொல்ல வைத்திருக்கிறது.


இளையராஜா

இப்போதெல்லாம் ராஜா சார் பாட்டுக் கேட்க ஹிந்தியோ, மலையாளமோ தான் போகவேண்டியிருக்கு. ஆனாலும் சேரனின் மாயக் கண்ணாடி மூலம் மாயம் காட்டிப் போனார். ராஜா ஆடிய ஆட்டம் என்ன, இந்த ஆட்டத்துக்கெல்லாம் அவரை இழுக்கலாமா? இரு தசாப்தங்களாக அவர் தானே முதலில் இருந்தார் என்ற ராஜா வெறியர்கள் சலித்துக் கொள்ளலாம். இருந்தாலும் இந்த ஆண்டு வந்த இசைப் பட்டியல் அடிப்படையில் இளையராஜாவையும் சேர்த்துக் கொள்கின்றேன்.


பரத்வாஜ்

பழைய நினைவுகளை வைத்துப் படம் பண்ண வேண்டுமென்றால் கூப்பிடுங்கள் பரத்வாஜை என்று சொல்லலாம் போலிருக்கிறது. பள்ளிக்கூடம் பாட்டுக்கள் படத்தோடு பேசப்படுகின்றன.


டி.இமான்

நடிகர் அர்ஜீனின் தற்போதய ஆஸ்தான இசையமைப்பாளர், சுந்தர் சி இன் படங்களுக்கும் தொடர்ந்து கைவண்ணம் காட்டுகிறார். வீராப்பு பாடல்கள் மனசில் நிற்கின்றன.


சபேஷ் முரளி

சபேஷுக்கு குத்துப் பாட்டு பாடத் தெரியும், ஆனால் மெலடியாக இசையமைக்க வரும் என்பதை தன் சகோதரர் முரளியோடு இணைந்து நிரூபித்து வருகின்றார். இந்த ஆண்டு அதற்கு உதாரணமாக வந்தது "அம்முவாகிய நான்".


ஸ்ரீகாந்த் தேவா

"நாளைய பொழுதும் உன்னோடு" திரைப்படத்தில் பேசப் பேராசை என்ற பாடலை இவர் இசையமைப்பில் கேட்டிருந்தீர்களானால் இந்தப் போட்டியில் ஸ்ரீகாந்த் தேவாவை விலக்கி வைக்கமாட்டீர்கள். அருமையான மெலடி கொடுத்திருக்கின்றார்.


ஹாரிஸ் ஜெயராஜ்

ரஹ்மானின் ஜெராக்ஸ் என்று வந்த வேகத்திலேயே இவர் மீது புகார் கொடுத்தார்கள். ஆனாலும் என்ன இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிற்கின்றார். ஒரே மாதிரிப் பாடல்கள் கொடுக்கின்றார் என்பது இவர் மீது கொடுக்கப்படும் சமீபத்திய புகார். "உன்னாலே உன்னாலே", "பச்சைக்கிளி முத்துச்சரம்" மூலம் பரவசப்படுத்தியவர்.


சரி, இசையமைப்பாளர்களையும், அவர் தம் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள், இனி உங்கள் வாக்கை வழங்குங்கள். முடிவுகள் இரு வாரத்தின் பின் வெளியாகும்.

றேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி

வழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டிப் பதிவு. பதில்களோடு வாருங்கள். நாளை இதே நேரம் உங்கள் பதில்கள் திறந்து விடப்பட்டுச் சரியான முடிவும் அறிவிக்கப்படும்.

சரி இனிப் போட்டிக்குச் சொல்வோம்.

இங்கே தரப்படும் பாட்டுக்குப் படத்தில் ஆடுபவர் 80 களில் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவுக்கு வந்தவர். கேள்வி இது தான், இப்பாடலுக்கு ஆடும் அந்த நகைச்சுவை நடிகர் யார்?

இப்படி நேற்று ஒரு புதிரை உங்களிடம் வைத்தேன். பெருவாரியான வலையுலக அன்பர்கள் சரியான விடையைக் கொடுத்திருக்கின்றார்கள். அவர் வேறு யாருமல்ல, நகைச்சுவை நடிகர் சார்லி தான்.

சரியான விடையை 13 பேர் சொல்லியிருக்கின்றீர்கள்.
இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. சார்லி புகைப்படம் நன்றி: திரைப்படம்.காம்

பாடல் இடம்பெற்ற திரைப்படம் " நியாயத் தராசு". பலர் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், இப்படத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் உண்டு என்பதையும் சொல்லி வைக்கிறேன். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை கலைஞர் மு.கருணாநிதி. வழக்கமாக எஸ்.ஏ சந்திரசேகரனின் அதிக படங்களுக்குத் தான் அன்றைய காலகட்டத்தில் கலைஞரின் பங்களிப்பு இருந்தது. ஆனால் இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ராஜேஷ்வர்.

நடிகர் சார்லி, பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் இயக்குனர் கே.பாலசந்தர் அறிமுகத்தில் வந்தவர். தொடர்ந்து திரையுலகம் இவரை நல்ல முறையில் பயன்படுத்தியிருக்கலாம் என நான் நினைப்பதுண்டு. அதே போல் "நியாயத் தராசு" வந்த போதும் சார்லி பெரிய அளவில் பேசப்படும் நடிகர் அல்ல. இவருக்கு எப்படி இந்த நல்ல பாட்டுக்கு தனி ஆட்டம் போடக் கிடைத்ததுண்டு? இயக்குனர் ராஜேஷ்வர் எப்படி இவரைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்பது இன்னும் எனக்குள் இருக்கும் ஆச்சரியம்.

சார்லியை விருதுப் பட இயக்குனர் ஜெயபாரதி "நண்பா நண்பா" என்ற திரைப்படத்தில் நல்ல பாத்திரம் கொடுத்து நடிக்க வைத்ததாக முன்னர் படித்திருந்தேன். ஆனால் அப்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

வெகுகாலம் முன்னர் ஆனந்த விகடனில் சார்லியின் தனி நடிப்பு ஒன்று தியேட்டர் டிக்கட் கவுண்டரில் நிற்கும் கியூவில் இருக்கும் ஒரு பாத்திரமாக நடித்த அந்தப் பிரதி வெளியானபோதும் அவரின் நகைச்சுவை உணர்வு குறித்து எனக்கு வியப்பிருந்தது.

பின்னூட்டம் வாயிலாக இப்படம் குறித்தும், பாடல் குறித்தும் நண்பர் பாரதீய நவீன இளவரசன் சொல்வதைக் கேளுங்கள்.

CHARLIE was that comeday actor who impressed with good dance in that film...NYAYA THARASU. I really wonder why Charlie did not get an oppurtunity to dance after that.

The film failed to click in box office despite a very good naration and the splendid performance of Radha coming in the fag end of her Tamil film career.

Actually, this is a remake of the malayalam hit PANCHAGNI directed by Hariharan, starring Geetha in the lead and Mohanlal playing the second fiddle.

One more song in NYAYA THARASU that lingers in my mind even today is 'Vaanam arugil oru vaanam, tharaiyil vantha maegam thalai thuvatti pOgum....' in the sweet voice of by KJJesudoss and the melody is composed by none other than our Shankar Ganesh.

அக்னி நட்சத்திரம் படத்தில் நம்ம இளையராஜா "ராஜா ராஜாதி ராஜனெங்க ராஜா" என்று பாடி சூப்பர் ஹிட் ஆக்கினாலும் ஆக்கினார். அவரைத் தொடர்ந்து அன்றைய காலப்பகுதியில் இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் ஆளுக்கு ஆள் அதே மாதிரியான ஒரு டஜன் பாடல்களைக் கொடுத்து விட்டார்கள். அதில் ஒன்று தான் இங்கே நான் ஒலி வடிவில் தந்திருக்கும் மனோ பாடி, சங்கர் கணேஷ் இசையமைத்த " வெண்ணிலா! என்னோடு வந்து ஆட வா" என்ற பாடல்.

Monday, October 29, 2007

வி.எஸ். நரசிம்மனின் இசைச்சித்திரம் - பாகம் 2


வி.எஸ்.நரசிம்மனின் தேனிசையில் மலர்ந்த பாடல்களின் தொகுப்பு ஒன்றை முன்னர் தந்திருந்தேன். அதனைக் கேட்க

தொடர்ந்து அடுத்த பாகமாக வி.எஸ்.நரசிம்மனின் மீதிப் பாடல்களோடு, பின்னணியில் சில துணுக்குகளுடன் மலர்கின்றது இப்பதிவு.

முதலில் வருவது, கே.பாலசந்தரின் இயக்கத்தில் "கல்யாண அகதிகள்" திரையில் இருந்து சுசீலா பாடும் "மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்",

அடுத்து, இளையராஜாவை மூலதனமாக வைத்துப் பல இசைச் சித்திரங்களை அளித்த தயாரிப்பாளர் கோவைத்தம்பி தயாரிப்பில், ஈ.ராம்தாஸ் இயக்கத்தில் வந்த படம் "ஆயிரம் பூக்கள் மலரட்டும்". இத்திரைப்படத்தில் இருந்து "ஆயிரம் பூக்கள் மலரட்டும்" என்ற பாடல் பி.சுசீலா குரலில் ஒலிக்கின்றது.

தொடர்ந்து கே.பாலசந்தரின் முதல் சின்னத்திரை விருந்தான "ரயில் சினேகம்" படைப்பில் "இந்த வீணைக்குத் தெரியாது" என்ற பாடலை கே.எஸ்.சித்ரா பாடுகின்றார்.

"தாமரை நெஞ்சம்" என்ற தமிழ்ப்படத்தினைக் கன்னடத்தில் "முகிலு மல்லிகே" என்று மொழிமாற்றம் செய்தபோது வி.எஸ்.நரசிம்மனுக்கு முதன் முதலில் கன்னடத்திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இருந்து ஒரு பாடல் பி.சுசீலா, வாணி ஜெயராம் இணைந்து பாடக் கேட்கலாம்.

அடுத்து சுரேஷ் மேனன் இயக்கத்தில் வந்த "பாச மலர்கள்" திரைப்படத்தில் இருந்து சுஜாதா, எஸ்பி.பி பாடும் இனிமையான பாடலான "செண்பகப் பூவைப் பார்த்து" என்ற பாடல் ஒலிக்கின்றது.

நிறைவாக இளையராஜாவின் தனி இசைப் படைப்புக்களுக்கு உருவம் கொடுத்தவர்களில் ஒருவரான வி.எஸ்.நரசிம்மன் இல் வழங்கும் வயலின் இசை மனதை நிறைக்க வருகின்றது.
தொடர்ந்து இந்த ஒலித்தொகுப்பைக் கேளுங்கள்



இந்தத் தொகுப்பை வெளியிடும் போது "இந்த வீணைக்குத் தெரியாது" என்ற பாடலின் ஆண்குரலைத் தருமாறு நண்பர் ரவிசங்கர் அன்பு வேண்டுகோள் விடுத்தார். அவரின் விருப்பை நிறைவு செய்ய, இதோ என் ஒலிக்களஞ்சியத்திலே, நான் ஊருக்குப் போனபோது ஒலிப்பதிவு செய்து பத்திரப்படுத்திய பாடலான " இந்த வீணைக்குத் தெரியாது" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கலாம்.

Thursday, October 25, 2007

றேடியோஸ்புதிர் 2 - ஆறிலிருந்து அறுபது வரை - முகப்பு இசை

எனக்கு ஒரு கெட்ட பழக்கம். இளையராஜா இசையமைத்த பாட்டுக்கள் இணையத்தில் குவிந்து கிடந்தாலும், முறைப்படி சீடி இசைத்தட்டாக, அதுவும் முடிந்தவரை நல்ல ஒலிப்பதிவு கம்பனிகள் தயாரித்த இசைத்தட்டாக வாங்கிப் பத்திரப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் எனக்கு ஒரு பொக்கிஷம் கிடைத்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் முழுப்பாடல்களும், கூடவே அப்படத்தின் முகப்பு இசையும் இணைந்த ஒரு சீடி இசைத்தட்டு கிடைத்தது.

கடந்த இரு வாரம் முன்னர் நான் ஒரு இசைப்புதிரை இங்கே வழங்கியபோது எதிர்ப்பாராத அளவிற்கு உங்களில் பலரின் பங்களிப்பு கிடைத்தது. அது போல இன்னுமொரு போட்டியை இந்தப் பதிவில் தருகின்றேன். உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. அவை பத்திரப்படுத்தப்பட்டு, சரியான பதிலை அறிவிக்கும் போது விடுவிக்கப்படும்.

சரி, இனிப் போட்டிக்குச் செல்வோம்.
இங்கே நான் தந்திருக்கும் முகப்பு இசை, இளையராஜாவின் இசையில், ஒரு முன்னணி நாயகன் நடிப்பில் வெளிவந்த படமாகும். இந்த இசையைக் கேட்கும் போது ஒருபாடலின் நினைவு தானாக வரும் இசைத்துளி ஒன்றும் இருக்கும். ஒரு க்ளூ தருகின்றேன், படத்தலைப்பில் எண் அதாவது இலக்கமும் இருக்கும்.

இந்த இனிய இசையைக் கேளுங்கள், விடையோடு வாருங்கள்

மேற்கண்ட போட்டியை நேற்று வைத்திருந்தேன். "ஆறிலிருந்து அறுபது வரை" என்று சரியாக டாக்டர் விஜய் வெங்கட்ராமனும், சந்தேகத்துடன் (;-)) ஜி ராகவனும் சொல்லியிருந்தார்கள். இவர்களுக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;-)))

Wednesday, October 24, 2007

"அழியாத கோலங்கள்" பாடல் பிறந்த கதை


அழியாத கோலங்கள் திரைப்படம் பலருக்கு இன்னும் ஆட்டோகிராப் நினைவுகளைத் தூண்டும் ஒரு காவியம். இந்தப் படத்தை மனதில் அசைபோடும் போது தானாக வந்து நினைவில் மிதக்கும் பாடல் "நான் என்னும் பொழுது....." என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் கங்கை அமரன் வரிகளில் வந்த பாடல். பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள். பாலுமகேந்திரா என்றால் இளையராஜா தான் இசை என்பதற்கு விதிவிலக்காக வந்த திரைப்படம் "அழியாத கோலங்கள்".

இந்தப் படத்தில் இடம்பெறும் "நான் என்னும் பொழுது" என்ற பாடலின் மூல வடிவம் பெங்காலி மொழியில் வந்த, லதா மங்கேஷ்கர் பாடி, சலீல் செளத்ரியே இசையமைத்த கஸல் பாடல்களின் தொகுப்பில் ஒரு பாடல் ஆகும். பின்னர் இதே பாடல் "ஆனந்த்" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் சிறிது மாற்றம் கண்டு லதா மங்கஷ்கரே பாடி வந்திருந்தது. அடுத்து இரண்டு முறை பெண்குரலில் இரு வேறு மொழிகளில் வந்த இந்த மெட்டு "அழியாத கோலங்கள்" திரையில் ஆண்குரலாக எஸ்.பி.பியின் குரலாக ஒலிக்கும் இந்த ஒலிப்பகிர்வில் இம்மூன்று பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்.
புகைப்படம் உதவி: சலீல் செளத்ரி பிரத்யோகத் தளம்

Tuesday, October 16, 2007

ராப் இசையில் சுஜீத்ஜீ வழங்கும் விடுதலை


ஈழத்து இளம் பாடகன் சுஜித் ஜீ, ராப் இசையில் வழங்கும் விடுதலை பாடலை உங்களோடு பகிர்கின்றேன். நம் ஈழத்து நிலையினை வரிகளில் தோய்த்து இன்றைய காலகட்டத்து இளம் நெஞ்சங்களுக்கு வழங்கும் துள்ளிசைப் பகிர்வு இது.

பி.கு: இந்தப் பாடல் இந்த ஆண்டு வெளிவந்ததாக முன்னர் ஒரு தகவல் கிடைத்தது. ஆனால் ஏற்கனவே இது வந்துவிட்டதாக சில சகோதரங்கள் உறுதிப்படுத்தியதால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ;)

ஒரு பாட்டுக் கூட நிம்மதியாப் போடேலாதப்பா

Sunday, October 14, 2007

பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு

முந்திய பதிவிலே கீழ்க்கண்ட விஷயத்தைக் குறிப்பிட்டு ஒரு பாடல் போட்டி வைத்திருந்தேன்.

இளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.

குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.
இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.

சரியான விடை: கீதாஞ்சலி என்று தெலுங்கிலும் இதயத்தைத் திருடாதே என்று தமிழிலும் வந்த படத்தில் "ஜல்லந்த" என்று தெலுங்கு பாடி தமிழில் "ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டு தான்" என்றும் வந்த பாட்டு.

சரியான விடையளித்த நண்பர்கள்: சி.வி.ஆர், அநாமோதய அன்பர், முத்துவேல், சர்வேசன், பெத்தராயுடு, சின்ன அம்மணி, ஸ்ரூசல்
உங்களுக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்கள் ;-))

தோல்வி பெற்றவர்களே துவளாதீர்கள், உங்களுக்கு இன்னொரு வெற்றி காத்திருக்கு.
இதில் புதுமை என்னவென்றால் சிலர் ஓஹோ மேகம் வந்ததோ (மெளனராகம்), வான் மேகம் பூப்பூவாய் தூவும் (புன்னகை மன்னன்) என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்தப் பாடல்களும் ஒரே தீமில் மழைப்பாட்டுக்கள் தான், அதுவும் ராஜாவின் மெட்டும் இந்த மூன்று பாடல்களிலும் அண்மித்துப் போகின்றது. ஒரு நண்பர் "ரோஜா பூ தோடி வந்தது" (அக்னி நட்சத்திரம்) என்று குறிப்பிட்டார். ஆக மேலதிகமாக இரண்டு மணிரத்னம் படங்களும் விடையாக வந்திருக்கின்றன.

இதோ புதிருக்கான விடையாக மலரும் பாடல்களைக் கீழே தருகின்றேன்.

பாடலின்ஒளிப்படம் காண




றேடியோஸ்புதிர் 1 - பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு என்ன?


கடந்த யூலை மாதம் பாடகி சித்ரா, மது பாலகிருஷ்ணன், நிஷாத் ஆகியோர் சிட்னி வந்து இனியதொரு இசை விருந்தை அளித்திருந்தார்கள். பாடகி சித்ராவே நிகழ்ச்சித் தொகுப்பைச் செய்து வழங்கிய நிகழ்வு என்பதால் பாடல்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்த பல சுவையான சம்பவங்களையும் கோடிட்டுக் காட்டிக் கொண்டே போனது இன்னும் சுவையாக இருந்தது. சொல்லப்போனால் இப்படியான இசை நிகழ்ச்சிகளில் நான் அதிகம் ரசிப்பது, பாடகர்கள் தாம் அடைந்த அனுபவங்களைச் சொல்லிப் பாடுவது தான். சித்ராவின் இசை நிகழ்ச்சி குறித்துக் குறிப்பெடுத்துக் கொண்டாலும் நேர காலம் கனிந்து வராததால் அந்த நிகழ்ச்சி குறித்த பதிவை நான் தரவில்லை. அவ்வப்போது அவற்றை நான் தொடரும் பதிவுகளில் பகிர்வேன்.ஆனாலும் அந்த நிகழ்ச்சியில் சித்ரா சொன்ன ஒரு சம்பவத்தை இங்கே கேள்வியாக வைக்கின்றேன். பார்ப்போம் எத்தனை பேர் சரியாகச் சொல்கின்றீர்கள் என்று.

இளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.

குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.
இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.

அந்த ஆர்மோனிய இசையின் ஒலித்துண்டத்தைக் கீழே இணைத்திருக்கின்றேன்.
கேட்டு விட்டுச் சொல்லுங்களேன், பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாடல் எதுவாக இருக்குமென்று.

Thursday, October 11, 2007

நீங்கள் கேட்டவை 23 - எம்.எஸ்.வி ஸ்பெஷல்



தமிழ்த் திரையிசை வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத ஒரு சகாப்தம் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். இந்த மிகப் பெரிய மீடியாவில் தன் காலூன்றுவதற்காக எத்தனையோ சவால்களையும் போராட்டங்களையும் சந்தித்த அவர், தொடர்ந்தும் நின்று நிலைக்க வேண்டி சாதித்துக் காட்டியவை எம்.எஸ்.வி அவர்கள் திரையிசையில் போட்ட பல்லாயிரம் மெட்டுக்கள் தான்.

காதல், வீரம், சோகம், நகைச்சுவை, கோபம், விரகதாபம், சிந்தனை, பொறாமை, வஞ்சனை, வெட்கம் என்று மனிதரது எத்தனையோ குணாதிசயங்களை எத்தனையோ வகை வகையான மெட்டுக்களால் வகைப்படுத்திக் காட்டியவர் இவர்.

பாரம்பரிய இசையை உள்வாங்கித் தரும் இசைப் பாட்டு, மேற்கத்தேயப் பாணியை உள்வாங்கித் தரும் இசைப்பாட்டு, கீழத்தேயத்தின் தாக்கத்தில் ஒரு பாட்டு என்று எத்தனையோ புதுமைகளைச் செய்தவர் எம்.எஸ்.வி.

இந்தச் சாதனைத் திலகத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் பின்னால் பல சுவையான சங்கதிகள் தொக்கி நிற்கும். ஓவ்வொரு இயக்குனரின் சிந்தனையோடும் , ஒளிப்பதிவாளரின் காட்சிப் பகிர்வோடும் முரண்படாது கைகோர்த்துப் பயணிக்கும் எம்.எஸ்.வியின் இசைப் பயணம்.

ஒவ்வொரு பாடகரிடம் இருந்தும் எதைப் பெறவேண்டும் என்பதையும், அதே நேரத்தில் எந்தச் சந்தர்ப்பத்தில் புதுக்குரலை அறிமுகப் படுத்தவேண்டும் என்பதையும் நன்கே தெரிந்தவர் இவர்.

"உனக்கென்ன குறைச்சல் நீயொரு ராஜா" என்று விட்டுவிடமுடியாது. இந்த எம்.எஸ்.வி என்னும் சகாப்தம் தான் வாழும் காலத்திலேயே கெளரவிக்கப்பட வேண்டும். இந்த முனைப்பில் முதலில் சர்வேசன் தன் சிந்தனையை முதலில் தட்டிவிட்டார். தொடர்ந்து நெல்லை சிவாவும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர்களோடு இணைந்து நானும் குரல் கொடுக்கின்றேன்.

இந்திய மத்திய அரசின் அங்கீகாரம் இதுவரை கிடைக்காத எம்.எஸ்.வி இற்கு பெட்டிஷன் மூலம் குரல் கொடுப்போம் வாரீர். உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்குங்கள். இதுவரை 312 வாக்குகள் கிடைத்திருக்கின்றது. இது பல்லாயிரம் ஓட்டுக்களாகக் குவியவேண்டும் என்பதே எம் அவா.

http://www.petitiononline.com/msv2008/petition.html


இந்த வார நீங்கள் கேட்டவை பாடல்கள் அனைத்துமே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் மலரும் பாடல்களாக, சர்வேசன் மற்றும் நெல்லை சிவாவின் பதிவுகளில் மேற்கோள் காட்டிய பாடல்கள் சர்வேசனின் வேண்டுகோளுக்கிணங்க மலர்கின்றன.

முதலில் வருவது "கிருஷ்ண கானம்" என்னும் இசைத் தொகுப்பில் இருந்து "ஆயர் பாடி மாளிகையில்" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடக் கேட்கலாம்.
Get this widget | Track details | eSnips Social DNA


தொடர்ந்து எனக்கு எப்போதும் பிடித்த All time favourite MSV பாட்டு "முத்தான முத்தல்லவோ" திரையில் இருந்து எம்.எஸ்.வியும் , எஸ்.பி,பாலுவும் பாடும் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்". இந்தப் பாடலில் ஸ்வர ஆலாபனை செய்வாரே எம்.எஸ்.வி அந்தப் பாகம் இவரின் சாகித்யத்துக்கு ஒர் சான்று.
Get this widget | Track details | eSnips Social DNA


அடுத்த பாடல் "பூக்காரி" திரையில் இருந்து எம்.ஜி.ஆரின் ஜெராக்ஸாக வந்த மு.க.முத்துவுக்காகக் குரல் கொடுக்கும் T.M.செளந்தரராஜன், எஸ்.ஜானகி "காதலின் பொன் வீதியில்" என்று பாடுகின்றார்கள்.
Get this widget | Track details | eSnips Social DNA


M.S.V யும் கே.பாலச்சந்தரும் இணைந்த Musical hit ஆன "நினைத்தாலே இனிக்கும்" திரையில் இருந்து அதே வரிகளை மட்டுமே நிறைத்துப் பாடல் பண்ணியிருக்கும் அற்புதக் கலவையில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் குரல் ஜாலம் காட்டியிருக்கின்றார்கள்.
Get this widget | Track details | eSnips Social DNA


அடுத்ததாக "சிம்லா ஸ்பெஷல்" திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "உனக்கென்ன மேலே நின்றாய்" என்ற பாடல் வருகின்றது.
Get this widget | Track details | eSnips Social DNA


நிறைவாக ஒரு போனஸ் பாட்டு,பாடல் இடம் பெற்ற திரைப்படம் "கீழ் வானம் சிவக்கும்" , T.M செளந்தரராஜன் பாடும் "கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான், வாழ்க்கை உண்டானதே"
இந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே http://www.petitiononline.com/msv2008/petition.html">ONLINE PETITION னில் கீ நாட்டு வையுங்க.

வட்டா ;-)))
Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, October 4, 2007

நீங்கள் கேட்டவை 22


வழக்கம் போல் உங்கள் தெரிவுப் பாடல்களோடு இன்னொரு இசைவிருந்தாக மலர்கின்றது நீங்கள் கேட்டவை 22.

இன்றைய பாடற் தொகுப்பில் இடம்பெறும் பாடல்களைப் பார்ப்போம்.

முதலில் வி.எஸ்.கே விரும்பிக் கேட்டிருக்கும் பாடலை பி.சுசீலா மற்றும் உமா ரமணன் பாட, இளையராஜா இசையில் "அமுதே தமிழே எனதுயிரே" என்ற பாடல் "கோயில் புறா" திரைக்காக ஒலிக்கின்றது.

அடுத்ததாக சந்தன முல்லை, "பயணங்கள் முடிவதில்லை" திரையில் இருந்து "சாலையோரம் சோலை" என்ற பாடலை இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடக் கேட்கின்றார்.

தொடர்ந்து சார்ஜாவில் இருந்து Backi கேட்டிருக்கும் பாடல் "கிழக்குக் கரை" திரையில் இருந்து சித்ரா பாடும் "சிலு சிலுவெனக் காத்து" தேவாவின் இசையில் மலர்கின்றது.

நிறைவாக ஐயப்பன் கிருஷ்ணன் கேட்டிருக்கும் பாடல் "மணிச்சித்ர தாளு" என்ற மலையாளத் திரையில் இருந்து "ஒருமுறை வந்து பார்ப்பாயா" என்ற பாடலை சுஜாதா பாட எம்.ஜி ராதாகிருஷ்ணன் இசையமைத்திருக்கின்றார்.
இப்பாடலின் வீடியோ வடிவைக் காண உடனே நாடுங்கள் வீடியோஸ்பதி ;))

Powered by eSnips.com

Thursday, September 27, 2007

நீங்கள் கேட்டவை 21

வழக்கம் போல் வகை வகையான பாடல்களை வலைப்பதிவர்கள் கேட்டிருக்கும் நீங்கள் கேட்டவை 21 இல் சந்திக்கின்றோம்.

இன்றைய நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியின் முதல் பாடல் அண்மையில் மறைந்த நடிகர் விஜயனுக்கு அர்ப்பணமாக ஒலிக்கின்றது. ஏற்கனவே வீடியோஸ்பதியில் விஜயன் நினைவாக "நிறம் மாறாத பூக்கள்" திரைப்படத்தில் இருந்து "ஆயிரம் மலர்களே மலருங்கள்" பாடலைத் தந்திருக்கின்றேன். றேடியோஸ்பதியில் ஒலி வடிவில் நடிகர் விஜயன் நடித்த "ஒரு விடுகதை ஒரு தொடர்கதை" திரைப்படத்தில் இருந்து " விடுகதை ஒன்று....தொடர்கதை ஒன்று" என்ற பாடலை கங்கை அமரன் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் பாடக் கேட்கலாம். காலம் மறக்கடிக்காத பாடல் உங்கள் காதுகளையும் வருடட்டும்.

சரி இனி நீங்கள் கேட்ட பாடல்களுக்குச் செல்வோம்.
முதலில் பாடலை விரும்பிக் கேட்டிருக்கும் சுதர்சன் கோபால், ராஜ ராஜ சோழன் திரைப்படத்தில் இருந்து "ஏடு தந்தானடி தில்லையிலே" என்ற இனிய பாடலை வரலஷ்மி பாடக் கேட்கின்றார். இசை: குன்னக்குடி வைத்திய நாதன்

அடுத்ததாக ஜீ 3 இன் விருப்பமாக மனதில் உறுதி வேண்டும் படத்தில் இருந்து அதே வரிகளோடு கே.ஜே. ஜேசுதாஸ் பாடும் பாடல் இளையராஜா இசையில் மலர்கின்றது.

அவள் அப்படித்தான் திரைப்படத்தில் இருந்து நக்கீரன் விரும்பிக் கேட்கும் பாடல் ஒலிக்கின்றது. "வாழ்க்கை ஓடம் செல்ல" என்ற அந்தப் பாடல் எஸ்.ஜானகி குரலில் இளையராஜா இசையில் ஒலிக்கின்றது.

நிறைவாக சந்தன முல்லை, "வான் போலே வண்ணம் கொண்டு: என்ற பாடலை சலங்கை ஒலி திரையில் இருந்து இளையராஜா இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா பாடக் கேட்கின்றார்.

பாடல்களைக் கேளுங்கள், கேட்ட வண்ணம் உங்கள் விருப்பப் பாடல்களையும் அறியத் தாருங்கள்.

முகப்புப் பட உதவி : சீர்காழி இணையத் தளம்

Powered by eSnips.com

Saturday, September 22, 2007

புதுப் பாட்டுக்கள் கேட்போமா....?

என்னடா இந்தாளு 80 களுக்கு முந்திய காலத்தின் பாட்டுக்களைப் போட்டுச் சாவடிக்கிறாரே என்று இளசுகள் ஏங்கும் குரல் கேட்கின்றது. எனவே இந்தப் பதிவில் சமீபத்தில் திரைக்கு வந்த, வரப் போகின்ற திரையிசைப் பாடல்களின் அணிவகுப்பு " புத்தம் புது வாசம்" என்ற பெயரில் இடம்பெறுகின்றது. இதில் விசேசமாக, தமிழ் திரையுலகில் சமீபகாலமாகக் கூட்டணி ஆட்சி செய்து வரும் ஏழு இசையமைப்பாளர்களின் பாடல்கள் இடம்பெறுகின்றன.
இந்தத் தொகுப்பில் பாடல்கள் குறித்த சிறு அறிமுகத் துணுக்குகளைக் கொடுத்து நிகழ்ச்சியைப் படைத்திருக்கின்றேன்.

பாகம் 1 இல் இடம் பெறும் பாடல்கள்

1. பள்ளிக்கூடம் திரைப்படத்தில் இருந்து பரத்வாஜ் இசையில் " இந்த நிமிடம்" என்ற பாடல் சிறீனிவாஸ், ஜனனி குரல்களில் ஒலிக்கின்றது.

2. அம்முவாகிய நான் திரைப்படத்தில் இருந்து சபேஷ்-முரளி இசையில் "உன்னைச் சரணடைந்தேன்" என்ற பாடல் ஹரிஸ் ராகவேந்தர், கல்யாணி குரல்களில் ஒலிக்கின்றது.

3. கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தில் இருந்து தீனா இசையில் " உப்புக்கல்லு" என்ற பாடல் பாம்பே ஜெயஸ்ரீ குரலில் ஒலிக்கின்றது.

பாகம் ஒன்றைக் கேட்க


பாகம் 2 இல் இடம்பெறும் பாடல்கள்

1. கிரீடம் திரைப்படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் இசையில் "விழியில்" என்ற பாடல் சோனு நிகாம், சுவேதா குரல்களில் ஒலிக்கின்றது.

2. பீமா திரைப்படத்தில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "ரகசியக் கனவுகள்" என்ற பாடல் ஹரிஹரன், மதுஸ்ரீ மதுஸ்ரீ

3. வீராப்பு திரைப்படத்தில் இருந்து டி.இமானின் இசையில் " புலியை கிளி ஜெயிச்சாக் காதல்" என்ற பாடல் ஹரிஸ் ராகவேந்திரா மற்றும் மதுஸ்ரீ மதுஸ்ரீ

4. தொட்டால் பூ மலரும் திரைப்படத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜாவின் இசையில் " முகத்தை எப்போதும்" என்ற பாடல் ஹரிசரண் மற்றும் யுவன் சங்கர் ராஜா குரல்களில் ஒலிக்கின்றது.

பாகம் இரண்டைக் கேட்க

Wednesday, September 19, 2007

நீங்கள் கேட்டவை 20


நீங்கள் கேட்டவை 20 பதிவில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த வாரமும் நிறையப் பதிவர்கள் தங்களுடைய விருப்பப் பாடலுக்காகக் காத்திருக்கின்றார்கள். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் இதோ உங்களுக்காக

முதலாவதாக நம்ம வலைப்பதிவின் கொ.ப.செ கோபி விரும்பிக் கேட்ட பாடல் "தளபதி" திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" இசை: நம்ம இளையராஜா

தொடர்ந்து பதிவர் முத்துலெட்சுமி விரும்பிக் கேட்டிருக்கும் "என் ஜீவன் பாடுது" திரைப்படப் பாடலான "ஒரே முறை உன் தரிசனம் பாடலை இளையராஜா இசையில் எஸ்.ஜானகி பாடுகின்றார்.

வடுவூர் குமார், ஜெயச்சந்திரன், எஸ்.பி.சைலஜா பாடும் "தவிக்குது தயங்குது ஒரு மனது" பாடலை "நதியைத் தேடி வந்த கடல்" படத்திலிருந்து கேட்டிருக்கின்றார். இசையமைப்பாளர் யாரென்று சொல்ல மாட்டேன் ;))

நீண்ட நாட்களாக இந்தப் பாடல் வருமா? என்று ஓட்டுப் போட்ட பொதுஜனம் போலக் காத்திருக்கும் ஜி.ராகவனுக்காக "சந்திப்பு" திரையில் இருந்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாணி ஜெயராம் பாடும் "ராத்திரி நிலாவில்" என்ற பாடல் தமிழ் வலை உலகில் முதலாவதாக (;-))) இடம்பெறுகின்றது.

நிறைவாக ஒரு நிறைவான ஈழத்துப்பாடலை ஈழத்துச் சகோதரன் ஒருவர் கேட்டிருக்கின்றார். "நெய்தல்" என்ற ஒலிப்பேழையில் இருந்து ஜி.சாந்தன் பாடும் "வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்" என்ற பாடல் காற்றில் மிதக்கின்றது.

பிற்குறிப்பு:
இந்த நீங்கள் கேட்டவை பதிவை வலையேற்றிய பின் நம்ம கொ.ப.செ.கோபியிடமிருந்து ஒரு கண்டன மடல் தனிப்பட வந்தது. அதில் அவர் கேட்ட பாடல் தளபதியில் வரும் "அடி ராக்கம்மா கையத் தட்டு" பாடலே என்றும், "சுந்தரி கண்ணால்" ஒரு சேதி பாடலைக் கேட்கும் மனநிலையில் தான் இல்லையெனவும், காரணம் தனக்கு இன்னும் ஜோடி கிடைக்கவில்லையென்றும் வருத்தத்தோடு தெரிவித்தார் ;)
கொ.ப.செயின் கோபத்துக்கு ஆளாகாமல் இதோ அவர் கேட்ட "ராக்கம்மா கையத் தட்டு" பாடல். அத்துடன் அவரின் வேண்டுதல் நிறைவேறவும் பிரார்த்திப்போம் ;-)))


பாடல்களைக் கேட்டவண்ணம் நீங்களும் உங்கள் விருப்பப் பாடல்களை அறியத் தாருங்கள்.
Powered by eSnips.com

Monday, September 17, 2007

பாடிப் பறந்த குயில்கள் - பாகம் 2


ஒரு காலகட்டத்தில் மிகவும் உச்சத்தில், அல்லது புகழேணியில் இருந்து பின் ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் பாட வந்த பாடகர்களின் பாடல்களின் அணிவகுப்பாக மலரும் "பாடிப் பறந்த குயில்கள்" பாகம் இரண்டு இப்பதிவில் இடம்பெறுகின்றது.

முதலில் திரைப்பாடலில் மட்டுமல்ல, நம் நிஜவாழ்விலும் ஜோடி போட்ட பாடகர் சக இசையமைப்பாளர், ஜிக்கி ஆகியோர் பாடிய "புகுந்த வீடு" பாடலான "செந்தாமரையே" என்ற பாடல் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையில் மலர்கின்றது. ஏ.எம்.ராஜாவைப் பொறுத்தவரை ஒரு உச்சத்தில் இருந்து பின் வாய்ப்புக்கள் வற்றி எழுபதுகளில் மீண்டும் வந்த வாய்ப்பு இது.

அடுத்ததாகத் தன் கணவர் ஏ.எம்.ராஜா மறைவுக்குப் பின் ஒதுங்கிக் கொண்ட பாட்டுக்குயில் ஜிக்கி நீண்ட இடைவெளிக்குப் பின் பாடிய பாடல்களில் ஒன்றான " வண்ண வண்ணச் சொல்லெடுத்து" என்ற பாடல், விஸ்வநாதன் இளையராஜா கூட்டுச் சேர்ந்த "செந்தமிழ்ப் பாட்டு" திரையில் இருந்து ஒலிக்கின்றது.

ஒரு காலகட்டத்தில் ஓய்வெழிச்சல் இல்லாது இசையமைத்துக் கொண்டே தானும் சிறப்பான பாடல்களை அளித்த எம்.எஸ்.விஸ்வநாதன் "காதல் மன்னன்" திரையில் தானும் நடித்துக் கொண்டே நீண்ட இடைவெளிக்குப் பின் பாடிய பாடலான "மெட்டுத் தேடித் தவிக்குது" என்ற பாடலை பரத்வாஜ் இசையில் மலர்கின்றது.

நிறைவாகப் பழம்பெரும் பாடகிகள் இருவர் நீண்ட இடைவெளிக்குப் பின் பாடிய, அதுவும் ஜோடி போட்டுக் கொண்ட பாடல் "நாயகன்" திரையில் இருந்து வருகின்றது. அந்தப் பாடகிகள் ஜமுனா ராணி மற்றும் எம். எஸ். ராஜேஸ்வரி, "நான் சிரித்தால் தீபாவளி" என்று இளையராஜா இசையில் பாடுகின்றார்கள்.

ஒலித் தொகுப்பைக் கேட்க

Thursday, September 13, 2007

நீங்கள் கேட்டவை 19



வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் வெல்கம் to நீங்கள் கேட்டவை 19.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஏற்கனவே பாடல்களைக் கேட்ட பதிவர்கள் வலை மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்காங்க. இதோ நீங்கள் கேட்ட பாடல்கள்.


பதிவர் முத்துலெட்சுமி, தன் சக பதிவர் மங்கைக்காகக் கேட்ட பாடல் "முத்துக் குளிக்க வாரீகளா", அனுபவி ராஜா அனுபவி திரைக்காக, டி.எம்.செளந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மலர்கின்றது.


அடுத்ததாக வெயிலானின் விருப்பமாக, இது நம்ம பூமி திரையில் இருந்து இளையராஜா இசையில் "வான மழை போல " என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கலாம்.


சுந்தரி விரும்பிக் கேட்டிருக்கும் " அஞ்சு விரல் கெஞ்சுதடி" பாடலை ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி பாட, மனோஜ்-கியான் இரட்டையர்கள் உரிமை கீதம் திரைக்காக இசையமைத்திருக்கின்றார்கள்.

நிறைவாக நம்ம ஓமப்பொடியார் சுதர்சன் கோபால், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி திரைப்படத்தில் இருந்து மனோ பாடியிருக்கும் "வந்தாள் வந்தாள் ராஜகுமாரி" பாடலை இளையராஜா இசையில் கேட்டிருக்கின்றார்.

பாடல்களைக் கேளுங்கள், கேட்ட வண்ணம் உங்கள் தெரிவுப் பாடல்களையும் அறியத் தாருங்கள். வட்டா...;)

Powered by eSnips.com

Sunday, September 9, 2007

சூர்யா அசின் மலையாளப்பாட்டுக்கு ஆட்டம்

நகல் பாட்டைப் பார்க்க



அசல் பாட்டைப் பார்க்க

Monday, August 27, 2007

ஓணம் ஷ்பெஷல் மலையாளப் பாட்டுக்கள்



இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேட்டன்களுக்கும், குறிப்பா சேச்சிகளுக்கும் இனிய பண்டிகை வாழ்த்துக்கள்.

இதோ உங்களுக்காக ஷ்பெஷல் பாட்டுப் படையல்

முதலில் வருவது சலீல் செளத்ரி இசையில் பி.லீலா குழுவினர் பாடிய "செம்மீன்" திரைப்பாடலான "பெண்ணாளே பெண்ணாலே" என்ற பாடல்.

அடுத்து ரவீந்திரன் இசையில் "ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா" திரைக்காக மலையாளப் பாட்டுக்கடவுள் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய "ப்ரமதவனம் வீண்டும்" என்னும் பாடல் வருகின்றது.

தொடர்ந்து "மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா" என்ற பாடலை "மனசினக்கரே" திரையில் இருந்து நம்ம குலதெய்வம் இளையராஜா போட்ட டியூனைப் பாடுகிறார்கள் எம்.ஜி.சிறீகுமார் குழுவினர்.

மலையாளத் திரையுலகில் ஒரு சகாப்தம் படைத்துக் காலமான ரவீந்திரன் இசையில் வந்த இறுதித் திரைப்படமான "வடக்கும் நாதன்"படத்தில் இருந்து "பாகி பரம்பொருளே" என்ற இறைமணம் கமிழும் பாடலைப் பாடுகின்றார்கள் மஞ்சரி மற்றும், சிந்து பிரேம்குமார் குழுவினர்.

நம்ம தல கோபி ஓணம் பண்டிகைக்கு ஒரு பாட்டு வேணும்னு அடம்பிடிச்சார். அவருக்காக நோட்டம் திரையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "பச்ச பானம்" என்ற பாடல் ஜெயச்சந்திரன் இசையில் வருகின்றது.


எந்தா இது? ஓணம் டோயில் ஒரே மெலடி பாட்டு?
என்று அலுக்கும் சேட்டன்களுக்காக ஒரு துள்ளிசைப் பாடல் நிறைவாக "காழ்ச்சா" திரையில் இருந்து கலாபவன் மணி குழு மோகன் சித்தார்த்தா இசையில் பாடும் "குத்தநாடன் காயலிலே" வருகின்றது.

வரட்டே.....;-)

Powered by eSnips.com

Thursday, August 16, 2007

நீங்கள் கேட்டவை 18



இன்றைய நீங்கள் கேட்டவை 18 பதிவில் நான்கு முத்தான பாடல்கள் இடம்பெறுகின்றன.

முதலில் சர்வேசனின் விருப்பமாக மலரும் "காதோடு தான் நான் பாடுவேன்" பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாட, வி.குமாரின் இசையில் "வெள்ளி விழா" திரைக்காக ஒலிக்கின்றது.

தொடர்ந்து ஒலிக்கும் பாடல் கீர்த்திகாவின் விருப்பமாக டி.எம்.செளந்தரராஜன் பாடும் "நதியினில் வெள்ளம்" என்ற பாடல் "தேனும் பாலும்" திரைக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம்பெறுகின்றது.

அடுத்து வரும் இரண்டு பாடல்களுக்கும் இசை வழங்கியிருப்பவர் இசைஞானி இளையராஜா
அவற்றில் முதலில் வரும் "ஆனந்த ராகம்" என்ற பாடலை உமாரமணன் பாட சுதர்சன் கோபால் விரும்பிக் கேட்டிருக்கின்றார். பாடல் இடம் பெற்ற திரைப்படம் "பன்னீர் புஷ்பங்கள்".

நிறைவாக நெல்லைக் கிறுக்கன் தேர்வில் "இளமைக் காலங்கள்" திரைக்காக "பாட வந்ததோர் கானம்" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா ஆகியோர் பாடக் கேட்கலாம்.

Powered by eSnips.com

வி.எஸ்.நரசிம்மனின் தேன் மழையிலே...!



இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து அடுத்த வரிசையில் நான் நேசிக்கும் இசையமைப்பாளர்களில் முதன்மையானவர் வி.எஸ்.நரசிம்மன். கே.பாலசந்தர் தனது "அச்சமில்லை....அச்சமில்லை...!" திரைக்காக இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகப் பணியாற்றியது மிகச் சொற்பப் படங்களே. ஆனால் பல பாடல்களுக்குப் பின்னால் இவரின் ஆவர்த்தனம் சேர்ந்திசையாக மிளிர்ந்திருக்கின்றது.

இன்றைய ஒலிப்பகிர்வில் வி.எஸ்.நரசிம்மன் திரையுலகிற்கு இசையமைப்பாளராக வந்த அறிமுகம் குறித்த பார்வையும் தொடர்ந்து "அச்சமில்லை அச்சமில்லை" திரைக்காக இவர் முதன் முதலில் இசையமைத்த "ஆவாரம் பூவு" பாடலும் இடம்பெறுகின்றது.


தொடர்ந்து பாலசந்தரின் உதவியாளராக இருந்த இயக்குனர் அமீர்ஜான் இயக்கத்தில் வெளிவந்த "புதியவன்" திரைக்காக "நானோ கண் பார்த்தேன்" என்ற பாடல் என் பாடல் பொக்கிஷத்திலிருந்து உங்களுக்காக வெளிவருகின்றது.

வி.எஸ்.நரசிம்மன் இசையமைத்த மற்றைய அனைத்துத் திரைப்படப் பாடல்களும் அவை பற்றிய குறிப்புக்களும் அடுத்தடுத்த பகுதிகளில் வெளிவரும். இந்த நிகழ்ச்சிக்கான தகவல் குறிப்புக்களைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் தொடராக வெளிவந்த "திரையிசைச் சாதனையாளர்கள்" பகுதியில் இருந்து பத்திரப்படுத்தித் தேவையான பகுதிகளை மட்டும் வானொலி வடிவமாக்கியிருக்கின்றேன். இதோ தொடர்ந்து கேளுங்கள்.

Monday, August 13, 2007

பாடிப் பறந்த குயில்கள் - பாகம் 1

பாடிப் பறந்த குயில்கள் என்ற புதிய தொடர் இன்று முதல் றேடியோஸ்பதியில் ஆரம்பிக்கின்றது. இந்தத் தொடர் மூலம், ஒரு காலகட்டத்தில் தமிழ்த் திரையிசை உலகில் கொடிகட்டிப் பறந்த பாடகர்கள், ஒரு சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் பாட வந்த போது வந்த பாடல்கள் இடம்பெறுகின்றன.

அந்த வகையில், இன்றைய பதிவில் வரும் மூன்று பாடல்களில் முதலாவதாக வருவது,
டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா ஜோடி சேர்ந்த "தாய்க்கு ஒரு தாலாட்டு" திரைப்படத்தில் இருந்து "இளமைக் காலம் எங்கே" என்ற இனிய பாடல் இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்கின்றது. இந்தப் படத்தை இயக்கியிருந்தார், மலையாளத் திரையுலகப் பிரபலம் பாலச்சந்திர மேனன்.

தொடர்ந்து மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த "கண்ணுக்கு மை எழுது" திரைப்படத்தில் நடிகை மற்றும் பாடகி பி.பானுமதி, பி.எஸ்.சசிரேகாவின் ஆரம்பக் குரலோடு பாடும் "வாடாமல்லியே நான் சூடா முல்லையே" பாடல் அரங்கேறுகின்றது.
இசை இளையராஜா.



இந்தப் பாகத்தின் நிறைவுப் பாடலாக P.B.சிறீநிவாஸ் சங்கீதாவோடு பாடும் "உயிரே உன்னை இதயம் மறந்து செல்லுமோ" என்ற பாடல் ஆதித்யனின் இசையில், "நாளைய செய்தி" திரைக்காக வருகின்றது.

Thursday, August 9, 2007

நீங்கள் கேட்டவை 17

இன்றைய நீங்கள் கேட்டவை பதிவும் பல்வேறு காலகட்டத்துப் பாடல்களோடு மலர்கின்றது. சரி, உடனேயே இன்றைய பாடல் பகுதிக்குப் போகலாம்.

முதலில் வெயிலான் விரும்பிக் கேட்ட "பெண்ணல்ல நீ ஒரு பொம்மை" என்ற பாடல் வி.குமாரின் இசையில் "சொந்தமடி நீ எனக்கு" திரைப்படத்திற்காக ஜெயச்சந்திரன், சுசீலா பாடும் பாடலாக மலர்கின்றது.

அடுத்ததாக மாயாவின் விருப்பமாக "நெஞ்சில் ஓர் ஆலயம்" திரையில் இருந்து P.B.ஸ்ரீநிவாஸ் குரலில் "நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்" என்ற பாடல் வருகின்றது.
பாடல் இசை எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்கள்

கோபிநாத் விருப்பமாக "புதிய பறவை" திரையில் இருந்து "பார்த்த ஞாபகம் இல்லையோ" பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடுகின்றார்.

நட்பு திரையில் இருந்து நக்கீரன், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் இளையராஜா இசையில் வரும் "அதிகாலை சுபவேளை" பாடலைக் கேட்கலாம்.

நிறைவாக சர்வேசனின் விருப்பமாக "ராஜா சின்ன ராஜா" என்ற இனிய பாடலை பூந்தளிர் படத்திற்காக பி.சுசீலா, இளையராஜா இசையில் பாடுகின்றார்.

Powered by eSnips.com

Thursday, August 2, 2007

நீங்கள் கேட்டவை 16



நீங்கள் கேட்டவை 16 பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் விருப்பப் பாடல்களோடு இந்த நிகழ்ச்சி வாரா வாரம் இடம்பெறுகின்றது. எனவே தொடர்ந்து உங்கள் விருப்பப் பாடல்களை அறியத் தாருங்கள், அவை பிந்திய பதிவுகளில் வரக் காத்திருக்கின்றன.

சரி,இனி இந்த வாரப் பாடல் தெரிவுகளுக்குச் செல்வோம்.

முதலாவதாக அய்யனாரின் விருப்பமாக "நண்டு" திரைப்படத்தில் இருந்து "மஞ்சள் வெய்யில்" என்ற பாடலை உமா ரமணன் பாடுகின்றார். இசைய வைத்தவர் இசைஞானியே தான்.

அடுத்த தெரிவாக "ரசிகன் ஒரு ரசிகை" திரையில் இருந்து நெல்லைக் கிறுக்கன் தேர்வு செய்திருக்கும் "பாடியழைத்தேன்" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் தன் அருமை நண்பர் ரவீந்திரன் இசையில் பாடுகின்றார்.

வடுவூர் குமாரின் விருப்பமான " மஞ்சள் நிலாவுக்கு" என்ற பாடலை, இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன், பி.சுசீலா, ஆகியோர் முதல் இரவு திரைக்காகப் பாடுகின்றார்கள்.

லட்சுமி திரைப்படத்தில் இருந்து "மேளம் கொட்ட நேரம் வரும்" என்ற பாடல் பி.எஸ்.சசிரேகாவின் குரலில் ஜி.ராகவனின் விருப்பமாக மலர்கின்றது.

மதி கந்தசாமி விரும்பியிருக்கும் "ஆஹா" படப் பாடலான முதன் முதலில் பார்த்தேன்" என்ற பாடலை ஹரிஹரன், தேவா இசையில் பாடக் கேட்கலாம்.

வெயிலான் உட்பட பல நேயர்களின் பாடல்கள் இன்னும் வர இருக்கின்றன. அடுத்த வாரம் வரை பொறுத்துக் கொள்ளுங்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Powered by eSnips.com