Pages

Tuesday, December 28, 2010

இயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப்பேட்டி

சினிமா ரசிகனாகப் பலமுறை பார்த்துச் சலிக்காத விருந்து ஆண்பாவம் திரைப்படம் அத்தோடு அந்தப் படத்தின் பின்னணி இசைப்பிரிப்பைச் செய்த போது இசைஞானி இளையராஜாவின் சாகித்யத்தை வியந்து ரசித்த வாய்ப்பையும் என் றேடியோஸ்பதி வலைப்பதிவு மூலம் கிட்டியது. அந்த வகையில் ஆண்பாவம் திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் நிறைவாகும் இந்த ஆண்டு அது குறித்த ஒரு விழா ஏற்பாடுகள் நடைபெறுவதாகச் செய்தி அறிந்த போது ஆண்பாவம் திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பை மீண்டும் சில மெருகேற்றல்களோடு கடந்த ஒக்டோபரில் கொடுத்திருந்தேன். "ஆண்பாவம்" - 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு



பின்னர் ஆண்பாவம் திரைப்படத்தின் திரைக்கதை நூல் வெளியீட்டு விழாவும் 25 ஆண்டு விழாவும் சிறப்பாக நடந்ததை அறிந்து நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காச் சிறப்பானதொரு வானொலிப்பேட்டியை ஆண்பாவம் இயக்குனர் திரு.ஆர்.பாண்டியராஜன் அவர்களை வைத்துச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்ட போது அவரின் தொலைபேசி இலக்கத்தை ட்விட்டர் வாயிலாக வழங்கியிருந்தார் நண்பர் கே.ராகவன் அவருக்கும் இந்தவேளை என் நன்றிகள்.

ஒரு இலேசான தயக்கத்தோடு இயக்குனர் பாண்டியராஜனுக்கு அழைத்தேன் என் பேட்டி பற்றி அவரிடம் சொன்னேன். "அரை மணி நேரத்தில் செய்வோமா" என்றார், "இல்ல சார் சாவகாசமா நாளைக்கே பண்ணுவோம்" என்று நான் கேட்டபோது சம்மதித்து அடுத்த நாள் குறித்த நேரத்தில் காத்திருந்து ஒரு அழகான பேட்டியைத் தந்தார் அவர். ஆண்பாவம் 25 ஆண்டு நிகழ்வுப்படங்களையும் அனுப்பி வைத்தார். தமிழ்த்திரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் 25 ஆண்டு விழாவைக் கொண்டாடி அதன் திரைக்கதையை வெளியிடுவது இதுவே முதன்முறை.

பேட்டி முடிவில் என்னுடைய 12 வருட வானொலி வாழ்வில், ஈகோ இல்லாது வெளிப்படையாகப் பேசக்கூடிய இன்னொரு நபராக பாண்டியராஜன் தன் பேட்டியில் பேசிய பாங்கைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தேன்.அதற்கு அவர் நாகரீகமான பண்பான பேட்டியை அமைத்தமைக்கும் நன்றி சொல்லி நன்றி என்ற வார்த்தைக்கு மேல் இன்னொரு வார்த்தை தமிழில் கண்டுபிடித்தால் அதை நான் மீண்டும் சொல்வேன் என்று சொல்லி நிறைவாக்கினார் இந்தப் பேட்டியை.

வானொலியில் இரண்டு முறை ஒலிபரப்பானபோது பல நேயர்கள் சிலாகித்துப் பேசினார்கள் அது தான் இந்தப் பேட்டியின் வெற்றி. இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவமும் எழுத்து வடிவம் சில சுருக்கங்களோடும்

பேட்டியைக் கேட்க




To Download


வணக்கம் திரு பாண்டியராஜன் அவர்களே!

அவுஸ்திரேலியாவில் இருந்து அழைக்கும் பெரிய உள்ளங்களுக்கு இந்த சின்னவனின் வணக்கங்கள்

முதலில் 25 ஆண்டுகளுக்கு மேலாகக் கலைத்துறையில் இருக்கும் உங்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ரொம்ப நன்றி, 25 வருஷங்கிறது எண்ணிக்கையே தவிர நான் எப்பவுமே பின்னோக்கிப் பார்ப்பதில்லை, போகும் வழி தூரம், இன்னும் நிறைய இருக்கு. ஆனால் அப்பப்போ ஒரு பிறந்த நாள் விழா மாதிரி இந்த "ஆண்பாவம்" படத்துக்கு ஒரு பிறந்த நாள் விழாக் கொண்டாடிய உணர்வு தான்.


பாண்டியராஜன் என்றதொரு கலைஞன் திரைப்பட இயக்குனராக, நடிகராக எப்படி வந்தார், அவருடைய அறிமுகம் எப்படி இருந்தது?

பள்ளிப்படிப்புக் காலத்திலேயே இசை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. குலதெய்வம் ராஜகோபால் அவர்களுடைய மகன்கள் சம்பத், செல்வம். குலதெய்வம் ராஜகோபால் வில்லுப்பாட்டு பண்ணுவாரு அந்த நிகழ்ச்சி இடைவேளையின் போது மகன்கள் இருவரும் ஒருவர் கிட்டாரிலும் இன்னொருவர் ஆர்மோனியத்திலும் என்னடி ராக்கம்மா பாட்டை வாசிப்பாங்க. அதுக்கு பிரமாதமான கைதட்டல் இருந்தது. அதைப்பார்க்கும் போது ஏன் நாமளும் கைதட்டல் வாங்கக் கூடாது என்று ஒரு உத்வேகம். அதுக்கப்பறம் அப்பாவிடம் சென்று "அப்பா! நான் ஆர்மோனியம் கத்துக்கணும்"னு சொன்னேன். பல்லவன் போக்குவரத்துக்கழக ஓட்டுனரா இருந்த என்னோட அப்பா, நமக்கெதுக்குடா இதெல்லாம் என்று கேட்காம என்னை மியூசிக் ஸ்கூ ல்லல்ல சேர்த்து விட்டார். அங்கே ஆர்மோனியம் கத்துக்கிற வாய்ப்பு இல்லை. வயலின் தான் கத்துக்க முடிஞ்சது. தமிழிசைக் கல்லூரியில் வயலின் கத்துக்கிட்டேன். வயலின் கற்றுக்கொள்ளும் போது நிறைய நாடக நண்பர்கள் நட்புக் கிடைத்தது. குறிப்பா சைதாப்பேட்டை ஶ்ரீராம் அவர்களின் நட்புக் கிடைத்தபோது கொஞ்சம் கொஞ்சமா நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைச்சது. என்.சி.சியில் நான் இருந்த போது காம்ப்ல ஒரு நாடகம் போட்டேன். அந்த காம்ப்ல இருந்த 64 பள்ளிக்கூடங்களிலேயே இது தான் சிறந்த நாடகமா தேர்ந்தெடுக்கப்பட்டு என்னோட உயர் நிலைப்பள்ளிக்கு ரோலிங் கப் கிடைச்சது. அதுதான் முதன் முறை நான் ஜனங்களால் கைதட்டப்படுவேன் என்ற நம்பிக்கையை ஊட்டியது.

அதற்குப் பின்

அதுக்கப்புறம் சினிமா வாய்ப்புக் கேட்டு போட்டோஸ் எல்லாம் எடுத்திட்டுப் போவேன். எங்கூட இன்னும் பல நடிகர்கள் வாய்ப்புக் கேட்டு வந்திருப்பாங்க. அவங்க உருவத்தை எல்லாம் பார்ப்பேன். அவங்க உயரம், கலரு அவங்களோட ஆஜானுபாகுவான தோற்றத்தை எல்லாம் பார்த்து இவங்களும் வாய்ப்புக் கேட்டு நாமளும் வாய்ப்புக் கேட்ட மரியாதை இருக்காதுன்னுட்டு அதுக்கப்புறம் உதவி இயக்குனரா போயிடலாம் என்று அதுக்கான முயற்சியில் இறங்கினேன். அப்போது வசனகர்த்தா தூயவனிடம் ஆபீஸ் பாய் ஆக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே வந்து திரு.பாக்யராஜ் அவர்கள் வந்தாங்க. விடியும் வரை காத்திரு படத்தின் கதை விவாதம் அப்போது அங்கே நடக்கும். அப்போ டிபன், பஜ்ஜி, போண்டா இதெல்லாம் வாங்கி வச்சுட்டு நாம வெளியே போயிடணும். அதுக்கப்புறமாத் தான் அவங்க கதை பேசுவாங்க. கதை விவாதம் எப்படி நடக்கிறது என்பதை அறிய அந்த அறைக்கதவிடுக்கில் ஒரு சின்னக் கல்லை வச்சிடுவேன். அந்தக் கதவிடுக்கு வழியா கேட்டா கதை விவாதங்களை கத்துக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புற்அம் என் குருநாதர் பாக்யராஜிடம் மூன்று நான்கு படங்களுக்கு வாய்ப்புக் கேட்டு கடைசியில் மெளன கீதங்கள் ஷீட்டிங் நடக்கும் போது அவரின் உதவி இயக்குனர்கள் என் நண்பர்களாயிட்ட காரணத்தால் கூடப்போனேன்.
"உன்னை யாருய்யா கிளாப் அடிக்கச் சொன்னது" என்று அவர் கேட்க
நான் அழுது "சார் எனக்கு அப்பா இல்லை சார், எனக்கு சம்பளம் கூடத் தராட்டா பரவாயில்லை வேலை கத்துக்கொடுங்கன்னு கேட்டேன். அவர் உதவி இயக்குனரா ஏற்றுக் கொண்ட பின் டார்லிங் டார்லிங் டார்லிங், தூறல் நின்னு போச்சு இப்படிப் பல படங்களில் அவரோடு பணியாற்றினேன்.

ஒரு உதவி இயக்குனராக, நீங்கள் உங்கள் குருநாதர் பாக்யராஜிடம் கற்றுக் கொண்டது என்ன?

எல்லாமே, இன்னிக்கு நான் உங்ககிட்ட பேட்டி கொடுக்கிறதா இருந்தாக் கூட அதுகூட அவர் மூலம் தான் கற்றேன்.அதுக்கு முன்னாடி நான் சினிமாவின் ரசிகன் அவ்வளவு தான். சினிமாவை எப்படி எடுப்பது, சினிமா உலகில் எப்படி நடப்பது எல்லாமே அவர்கிட்ட கற்றுக்கிட்டேன். அதுக்கப்புறமா கொஞ்சம் கொஞ்சமா நான் அதை மெருகேற்றிக்கிட்டேன். நான் கற்றுக் கொண்டதைத் தவிர நான் பார்த்த படங்கள், பார்த்த மனிதர்கள், பார்த்த சம்பவங்கள் இதையெல்லாம் என் மனசில் கோர்த்துக் கோர்த்து என்னை நான் வளர்த்துக் கொண்டேன்.

உங்களது இயக்கத்தில் முதலில் வெளியான திரைப்படம் "கன்னிராசி" அந்தப் படம் முழுவதுமே கலகலப்பாக இருக்கும் ஆனால் அந்தப் படத்தின் இறுதி முடிவு சோகமாக அமைந்தது படத்தின் வெற்றியைப் பாதித்ததா?

அந்தப் படம் வெற்றிப்படம் தான், ஆனால் நீங்க கேட்டது அருமையான கேள்வி. அந்த க்ளைமாக்ஸ் அதுவல்ல. செவ்வாய் தோஷமே இல்லை என்று பிரபும் ரேவதியும் கல்யாணம் பண்ணிப்பாங்க. கல்யாணம் பண்ண பிறகு அவங்களுடய வயோதிப தோற்றம் காண்பித்து அவங்களுடைய பிள்ளைகள் சின்ன வயசு பிரபு, சின்ன வயசு ரேவதி ஸ்கூலுக்குப் போவங்க இப்படித் தான் முடிக்க இருந்தேன். ஆனால் முதன்முதலில் ப்ரொடியூசரிடம் சொல்லும் போது அந்த சோக க்ளைமாக்ஸையே சொல்லிட்டேன். ரேவதி செத்துப்போன மாதிரித் தான் இந்தக் கதையை விநியோகஸ்தர்களிடம் சொல்லிட்டேன் நீ போய் திடீர்னு மாத்துறியே அப்படின்னார். வியாபாரத்தில் பிரச்சனை வரக்கூடாதுங்கிறதுக்காகத் தான் இந்த க்ளைமாக்ஸை எடுத்து ஆனால் கடைசி ஷாட்டில் போட்டிருப்பேன் "இந்த முடிவு நிழலுக்கான முடிவே தவிர நிஜத்தில் இதைப் பின்பற்றாதீர்கள்" என்று முடிச்சிருப்பேன்.

கன்னிராசி படத்தைத் தொடர்ந்து உங்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்த படம் ஆண்பாவம். அந்தத் திரைப்படம் 25 வருஷங்கள் கழித்தும் இன்றும் பலராலும் ரசிக்கப்படுகின்ற ஒரு கலைப்படைப்பு. அந்த வகையில் இந்தத் திரைப்படத்தின் 25 ஆண்டு சிறப்பு விழாவையும் அண்மையில் நடத்தியிருக்கின்றீர்கள். இந்த விழாவைப் பற்றிச் சொல்லுங்களேன்?

இந்தப் படத்துக்கு 25 ஆண்டு விழா எடுக்கலாம்னு திடீர்னு தோணிச்சு, அப்புறமா இது தேவையான்னு எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அதுக்கப்புறம் இந்தப் பட விழா முயற்சிகள் எடுக்கும் போது சிலர் முகம் சுருங்கிச்சு, சிலர் முக ஆச்சரியத்தில் விரிஞ்சுச்சு. எப்பவுமே முன் வச்ச காலைப் பின் வைக்கக்கூடாதுன்னு ஆரம்பிச்சேன். அந்த விழாவில் "ஆண்பாவம்" படத்தின் திரைக்கதை நூலை வெளியிட்டேன். அதில் என்னுரையில் "ஆண்பாவம் 25 - இது கொஞ்சம் ஓவரா இல்லை?" இப்படி நானே என்னைக் கேள்விகேட்கிற மாதிரிப் போட்டு, எப்படி நாம வாக்கிங் போறது, ஹெல்த் செக்கப், யோகான்னு உடல் மேல் உள்ள அக்கறையோ அப்படித்தான் கலைமேல் உள்ள அக்கறையாக இந்த ஆண்பாவம் 25.


இந்த விழாவுக்காக இசைஞானி இளையராஜாவைச் சந்தித்த அந்த நெகிழ்வான தருணங்களைப் பற்றியும் செய்திகளூடாக அறிந்தோம்?

அவருக்கு கண்டிப்பா அழைப்புக் கொடுக்கணுங்கிறது என்னுடைய தீர்மானமான எண்ணம். அவர் வீட்டுக்குப் போனேன், அவரில்லை. பத்திரிகையைக் கொடுத்தேன். அது அவருக்குப் போய்ச் சேரும் என்றாலும் நேரடியா அவரைப் பார்த்துக் கொடுக்கணும்னு நினைச்சேன். பிரசாத் ஸ்டூடியோவில் இருக்கிறதா சொன்னாங்க. நேரா அங்கே போனேன், ராஜா அங்கே தனியா தன் அறையில் இருந்தார். அங்கே போனதுமே
"சார்! ஆண்பாவம் 25 ஆண்டு விழா எடுக்கிறேன், அந்தப் படத்தை மக்களிடம் பெரிய அளவில கொண்டு போனதுல உங்க பங்கு பெருசு, எப்படி சார் நன்றி சொல்றது என்று சொல்லி சாஷ்டாங்கமா விழுந்து அவர் பாதத்தைத் தொட்டு வணங்கி எழுந்தேன். என்னையறியாமல் மடமடன்னு என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.அந்தக் கண்ணீருக்குக் காரணமே இல்லாம அது பாட்டுக்கு கொட்டிடுச்சு. நான் அப்படி அழுததே இல்லை.
அப்போ ராஜா "யோவ் உன்னை எப்பவோ நான் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்" அப்படின்னார்.
எனக்கு அதன் அர்த்தம் புரியல. என்ன சார்னு கேட்டேன்
"இல்லைய்யா, நான் ஊர்ல இருந்து அண்ணன் தம்பி கூட வரும் போது "டேய் உன்னை நான் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்"னாங்க அந்த வகையில உன்னை நான் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்னார். அப்ப தான் எனக்கு நிம்மதி வந்தது. உனக்காச்சும் உதவி இயக்குனரா வச்சு சொல்லிக் கொடுத்தாங்க, எனக்கு யாருய்யா சொல்லிக் கொடுத்தாங்க என்று சொல்லி அவருடைய தாயார் ஒரு ரேடியோவை நானூறு ரூபாய்க்கு விற்று அந்த நானூறு ரூபாயை கொடுத்து எங்களைச் சென்னை அனுப்பி வச்சாங்க. அந்த நானூறு ரூபாயில் ஒரு ஐம்பது ரூபாயாவது கொடுன்னு எங்க அம்மா எங்கிட்டக் கேட்கல அப்படிப்பட்ட தாய்னு அவருடைய நிகழ்வை என்கிட்ட பகிர்ந்துகிட்டார். அந்த நிகழ்வை அவர் என்னிடம் பகிர்ந்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை, அதைச் சொல்லும் போது நெகிழ்ந்திட்டேன். அவரோட மனமார்ந்த ஆசிர்வாதம் எனக்கு உண்டு என்று சொன்னார். அது போதும் எனக்கு.

ஆண்பாவம் படத்துக்குப் பெரும் பலமாக இருந்தவை அப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இல்லையா?

நிச்சயமாக, பின்னணி இசை இணையத்தளத்தில் எல்லாம் போட்டிருப்பாங்க (ஆகா ;-) )
இளையராஜாவின் படங்களில் ஆண்பாவம் குறிப்பிடத்தக்க முக்கியமானதொன்று. அந்தப் படத்தின் பூஜைக்கு ஒரு சாங் ரெக்கார்ட் பண்ணணும்னு சொல்லிட்டு அவரிடம் போய்க் கதை சொன்னேன். அப்போது அவருடைய தேதி இல்லாத காரணத்தால், "ஷீட்டிங் ஆரம்பிச்சுடேன்யா முதல்ல"ன்னாரு.
ஷூட்டின் மட்டுமல்ல டப்பிங்கும் முடிச்சுட்டு அவரைப் போய்ப் பார்க்கிறேன். தியேட்டர் சாங் ஒன்று இருக்கும் "இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும்" அப்படி, இதை நானாக ஊகித்த்து அப்படி வரவேணும்னு நினைச்சு ஷூட் பண்ணிட்டேன்.
மீண்டும் அவரைப் போய்ப் பார்க்கும் போது
"என்னய்யா இங்கேயே நிக்கிறாய் ஷுட்டிங் போகலையான்னு"
"ஷீட்டிங் மட்டுமில்ல சார் டப்பிங்கும் முடிச்சிட்டேன்"னு சொன்னேன்
அப்படியான்னு ஆச்சரியப்பட்டு சரி இன்னிக்கே படத்தைப் போடுன்னாரு. சரின்னு அந்த நாள் ஈவினிங்கே படத்தைப் போட்டுக் காமிச்சேன். மறுநாள் காலை ஏழு மணியில இருந்து ஒன்பது மணிக்குள்ள அந்தப் படத்தில் வரும் அத்தனை ட்யூனையும் போட்டுட்டாரு.
ஒன்பது மணிக்கு ரீரிக்கார்டிங் அதுக்கப்புறமா பாடல் பதிவும் பாடல் ஷூட்டிங்கும் இருந்துச்சு.
அந்தப் படத்தின் மீது அவருக்குள்ள ஈடுபாட்டால் உடனேயே ரீரிக்கார்டிங்கை ஆரம்பிச்சிட்டார். அந்தப் படத்தின் ரீரிக்கார்டிங்கைப் பத்தி சொல்லணும்னா எல்லாமே பிரமாதம். நடிகை சீதா அதில் புதுமுகம். அவங்க அறிமுக ஷாட்டில் சாமி கும்பிட்டுட்டு வீடு திரும்பி வர்ரது மாதிரி சீன். நான் ஒரு பத்து ஷாட் எடுத்து வச்சிருந்தேன். ஆனாலும் புதுமுகமாச்சே ரொம்ப நேரம் காமிச்சா நல்லாயிருக்காதுன்னுட்டு ஒரு மூணு ஷாட்டைத் தான் எடுத்தேன்.அதுக்கு அவர் வாசிச்ச பின்னணி இசையைப் பார்த்துட்டு, "சார் சார் நான் இன்னும் சில ஷாட்ஸ் எடுத்திருக்கேன்" என்று சொல்லி மேலும் சில ஷாட்டை இணைத்தேன். அற்புதமான பின்னணி இசை அதுக்கு. ஒரு வசனகர்த்தாவோட வேலையை பின்னணி இசையில் அவர் பண்ணியிருப்பார்.

குறிப்பாக இந்த ஆண்பாவம் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கு உயிரோட்டமாக ராஜாவின் பின்னணி இசை இருந்தது இல்லையா?

ஆமா, ஆண்பாவம் 25 விழாவில் அந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருத்தரைக் கூப்பிடும் போதும் அந்தப் பின்னணி இசையைப் போட்டுத் தான் கூப்பிட்டேன். எங்களை 25 வருஷம் பின்னோக்கிக் கூட்டிப் போனதுன்னு எல்லோரும் நெகிழ்ந்தாங்க. ஆண்பாவம் திரைக்கதை புத்தக வெளியீடே
திடீர்னு "பெட்டி வந்தாச்சு பெட்டி வந்தாச்சு" அப்படின்னு சொல்லி ஒரு படப்பெட்டிக்குள்ளே அந்தத் திரைக்கதை நூலை வச்சு வெளியிடப்பட்டது.

எண்பதுகளின் ஆரம்பத்திலே இந்தப் பின்னணி இசை குறித்த கவனம் அதிகம் இல்லாத வேளையில் ராஜா ஒரு ராஜாங்கமே படைத்திருப்பார், இந்த விஷயத்தில் ஒரு இயக்குனராக உங்களின் பங்களிப்பும் இந்தப் பின்னணி இசை எப்படி வரவேண்டும் என்ற ரீதியில் இருந்ததா?

முழுக்க முழுக்க ராஜா அவர்களுடைய சிந்தனை, செயல், அவருடைய உழைப்புத் தான். ஏன்னா ராஜா அவர்களிடம் அபிப்பிராயம் சொல்லுமளவுக்கு பாண்டியராஜன் இல்லை. காட்சிகளை நான் சில நேரங்களில் அவரிடம் "இப்படி ஒரு காட்சி இருக்கு" என்று சொல்வேனே தவிர இதற்கு இப்படி இசை வேண்டும் என்று நான் கேட்டதேயில்லை. நான் எடுத்த காட்சியை "ஆகா இது இவ்வளவு நல்லாயிருக்கே"ன்னு பிரமித்தது அவருடைய பின்னணி இசைக் கோர்ப்புக்கு அப்புறம் தான். நாம அவரிடம் 60 சதவிகத்தைக் கொடுத்தா அதை 100 சதவிகிதம் ஆக்கிக்கொடுத்திடுவார்.

ஆண்பாவம் படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி, தமிழ் சினிமாவுக்கு அந்நியமான ஒரு நபர், அதில் நடித்ததோடு நாட்டுப்புறப்பாடல்களையும் பாடியிருப்பார்

ஆமாமா, அற்புதமான இதயம் அது. அன்பு, வெகுளித்தனம், அப்புறம் என்ன சொல்வது உலகம் அறியாத ஆனா உலகப்புகழ் பெற்றவங்க. என்னைப் பேரன்னு தான் கூப்பிடுவாங்க. நான் ஒரு நிகழ்ச்சியைச் சொல்லணும் ஒருமுறை ஒரு கார் விபத்தில் சிக்கிட்டேன். நான் மருத்துவமனையில் இருந்தப்போ நான் யார் வருவார்கள் என்று எதிர்பார்த்தேனோ அவர்கள் எல்லாம் வரவில்லை. ஆனா கொல்லங்குடி கருப்பாயி நான் இருந்த மருத்துவமனைக்கு வந்து என் ரூம் வாசல் வரைக்கும் வந்தாங்களே தவிர என்னை வந்து பார்க்கல. என் பேரனை பெட்டில் படுத்திருக்கிறமாதிரிப் பார்க்க மாட்டேன் அப்படின்னு நான் டிஸ்சார்ச் ஆகுற வரைக்கும் அந்த வாசலில் இருந்து அழுது என்னைப் பார்த்துக் கட்டியணைச்சு "அப்பா உனக்கு ஒண்ணும் இல்லையே"ன்னு சொல்லிட்டுப் போன அற்புதமான ஜீவன் அது.

என்னுடைய கோபாலா கோபாலா படத்தில் குஷ்புவுக்கு பாட்டியா போட்டிருப்பேன், கபடி கபடி படத்தில் எனக்கு அம்மாவா நடிச்சிருப்பாங்க. எல்லாப்படத்திலும் அவங்களைக் கூப்பிட்டு வந்து நடிக்க வச்சு கெளரவிக்கணும்ங்கிற எண்ணம் எனக்கிருந்தது.

அப்படியான ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்கும் போது ஏதாவது சுவாரஸ்யமான அனுபவம் ஆண்பாவம் படப்பிடிப்பில் இடம்பெற்றிருக்குமே?

ஆமாம், வி.கே.ராமசாமி அவர்கள் பல தலைமுறை நடிகர்களைக் கண்ட சீனியர். அவரும் கொல்லங்குடி கருப்பாயியும் நடிக்கும் ஒரு காட்சியில் அந்தம்மா ஒரு டயலாக்கை மாத்திச் சொன்னாங்க. நான் சொல்லிக்குடுத்திட்டிருக்கேன்.திடீர்னு வி.கே.ராமசாமி அவர்கள் வந்து "இந்த இடத்துல நீங்க இந்த வசனத்தை விட்டுட்டீங்கம்மா இதை இப்படிப் பேசுங்க" அப்படிச் சொல்லிக் கொடுத்தார். உடனே அந்தம்மா "நீ ஒண்ணும் எங்கிட்ட சொல்லாதே, நீ தான் தப்பு தப்பா பேசுறே" அப்படின்னாங்க. என்னடா இது வி.கே.ஆரை இப்படி சொல்லிட்டாங்களேன்னு நான் அதிர்ச்சியாயிட்டேன். அதுக்கு வி.கே.ஆர் ஐயா ஒரு சிரிப்பு சிரிச்சங்க பாருங்க, அதாவது சந்தோஷத்தின் உச்சத்தில் சிரிச்சாரு. என்னை வந்து இப்படிச் சொன்னாங்களேனு கோபம் வராம அந்த எதார்த்தத்தை ரசிச்சாங்க. இப்படிப் பல சம்பவங்கள்.


இந்தப் படத்தில் கொல்லங்குடி கருப்பாயி அவர்களின் பாடற்திறனைக் கண்டறிந்து அவரைப் பாடவைத்தவர் யார்?

அவங்க பாடகியா இருந்த பிற்பாடு தான் நான் கூப்பிட்டேன். அவங்க அப்போது தொலைக்காட்சியில் எல்லாம் பாடுவாங்க. ஒரு பெரிய ரகசியம் சொல்றேன். ஒருமுறை அவங்க பாடல் நிகழ்ச்சியில் ஒரு புதுமை பண்ணலாம்னுட்டு அவங்க நாட்டுப்புறப் பாடல் பாடுவாங்க அதை இன்றைய நவீன இசையோடு இன்னொருத்தர் பாடுவார் அப்படின்னு ஒரு நிகழ்ச்சி பண்ணினாங்க. அதை அன்றைய முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் பார்த்து உடனே தொலைக்காட்சி நிலையத்துக்குத் தொலைபேசியில் அழைத்து "அவங்க இயல்பு அந்த ஒரிஜினாலிட்டி அதை மாத்துறதுக்கு இதையெல்லாம் பண்ணாதீங்க அவங்களைத் தனியாப் பாட விடுங்க" என்று சொல்லி வைத்தார்.


"ஆண்பாவம்" என்ற முழு நீள பொழுதுபோக்குச் சித்திரம் உருவாவதற்கு உங்களுக்கு ஏதாவது இன்ஸ்பிரேஷன் இருந்ததா?


இன்ஸ்பிரேஷன் எதுவும் கிடையாது. சிந்தனை தான். ஒருத்தர் பொண்ணு பார்க்கப்போற இடத்துல அதே ஊரில இன்னொரு பொண்ணைப் பார்த்துட்டான். அதை யோசிச்சவுடனேயே இவன் பார்க்க வேண்டிய பெண் இன்னொன்று இருக்கு. இவன் போய்ப் பார்த்த பொண்ணைப் பார்க்க வேண்டிய மாப்பிளை இன்னொருத்தன் இருக்கான். ஆக இதுல கதை கிடைக்குது. அப்படித் தான் இந்தக் கதையில் பயணப்பட்டேன். வழக்கமா இப்படியான கதையில் மாற்றிப் பார்த்த பொண்ணு கூட கல்யாணம் நடப்பதா இருக்கும். ஆனா அந்தப் படத்துல பாண்டியனின் தம்பியா நான் நடிச்சதால பார்க்கவேண்டிய அந்தப் பொண்ணை தம்பி கல்யாணம் பண்ணிப்பதாக கதை உருவாக்கியிருப்பேன்.


அந்தப் படத்தில் "காதல் கசக்குதைய்யா" என்ற புதுமையான பாடல் அந்தப் பாடல் பிறந்ததன் பின்னணி ஏதாவது உண்டா?


அந்த ரகசியத்தையும் இவ்வளவு நாட்களுக்கப்புறம் உடைக்கிறேன். அந்தப் பாடலை எனக்கு வைக்கும் போது புதுமுகமான என்னை வச்சு மக்கள் அந்தப் பாடலை ரசிப்பாங்களாங்கிற அச்சம் எனக்கிருந்தது.
ராஜா சாரிடம் கதை சொல்லும் போது குறித்த சிச்சுவேனுக்கு பாடலை வைக்குமாறு சொல்லிருந்தேன். அதை ஞாபகம் வச்சு ராஜா கேட்க , அந்தப் பாடலை "மனைவி ரெடி"ங்கிற அடுத்த படத்துக்கு வச்சுக்குவோம்னு சொன்னேன். அந்தப் பாடலில் கூட சில வரிகள் இருக்கும்.
"பொண்டாட்டியை லவ் பண்ணுங்க, நம்ம தகப்பன் பேச்ச தாய் பேச்சக் கேட்கணும்"னுட்டு மனைவி ரெடி படத்தின் சாரத்தை அந்தப் பாடலில் வச்சிருப்பேன். ஆனா அந்தப் பாட்டு நல்லா வந்ததும் ஆண்பாவம் தயாரிப்பாளர் சுப்ரமணியத்திடம் "சார் இந்தப் பாடலை அடுத்த படத்துக்கு வச்சுக்கப் போறேன்" என்றதும் "ஒ பாட்டு நல்லா இருக்குன்னதும் உங்க சொந்தப்படத்துக்கு வச்சுப்பீங்களோ"ன்னு கேட்டதும் "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க இந்தப் படத்துக்கே வச்சுக்கலாம்"னு சொல்லிப் பாடலைப் படம் பிடித்தேன். அப்ப்போ நடனப்பெண்கள் வெளியூர் போயிட்டாங்க யாருமே இல்லை. உடனே அவ்வளவு நடனப்பெண்களை எடுக்க முடியாதுன்னதும் பெண்கள் இல்லைன்னா என்ன ஆண்களை வச்சுப்போம் என்றேன். புதுசா செட்டுப் போடணும் ஆனா நேரம், பணம் அதிகம் ஆகும்னதும் சரி ப்ளெயின் செட்டு தான் என்றேன். இப்படி ஒரே நாளில் டக்கு டக்குன்னு முடிவெடுத்து அந்தப் பாடலை எடுத்தேன். அதுக்குக் காரணம் அப்போதிருந்த துணிச்சல், இளங்கன்று பயமறியாதுங்கிறது மாதிரி.

இந்தப் படத்தின் வசூல் ரீதியான வெற்றியைத் தவிர விருதுகள் ஏதாவது கிட்டியதா?

சினிமா எக்ஸ்பிரஸ் எனக்கு சிறந்த புதுமுக நடிகர்ங்கிற விருதைக் கொடுத்திருந்தாங்க. தின இதழ் பத்திரிகை கூட சிறந்த புதுமுகமாக கொடுத்தார்கள். அதைத் தவிர எந்தவொரு அரசு விருதுகளையும் நான் இதுவரை பெறவில்லை.

நெத்தியடி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் உருவெடுத்தீர்கள், இந்த முயற்சிக்குப் பின்னால் இருந்தது உங்கள் ஆரம்பகால இசையறிவு அப்படியா?


ஆமாம் ஆனால் வேற தயாரிப்பாளர் என்றால் இது தேவையான்னு கேட்பார். ஆனா நெத்தியடி தயாரிப்பாளர் அவிநாசிமணி அவர்கள் என் மாமனார். நான் மியூசிக் பண்றேன்னதும் அவரால மறுக்க முடியல ஏன்னா மாப்பிளையா போயிட்டேன். அந்தத் துணிச்சலின் நெத்தியடி படத்துக்கு இசையமைச்சேன். அதுக்கப்புறம் யாருமே என்கிட்ட வந்து நீங்க ஏங்க படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று கேட்கவேயில்லை.

ஆனால் அந்தப் படத்தில் கேட்கும் வகையில் பாடல்களும் இருந்தன இல்லையா?

இருந்தது ஆனா எனக்குக் கேட்கல, அதாவது ஏதோ பண்ணோம்கிறது ஓகே, அடடா ஆஹா பிரமாதம் அதுதான் வேணும் சினிமாவுக்கு. ஏதோ பண்ணோங்கிறமாதிரித் தான் இருந்துச்சுன்னு நான் நினைச்சு அன்னிக்கு ஆர்மோனியப்பெட்டியைத் தூக்கி வச்சுட்டேன்.

ஆனால் என்னால் ஒரு இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தக் கூடிய துணிச்சல் இருந்தது. டபுள்ஸ் படத்துக்காக தேவாவின் புதல்வர் ஶ்ரீகாந்த் தேவாவை அறிமுகப்படுத்தினேன்.

உங்கள் கலைப்பயணத்தில் இன்னொரு முக்கியமானதொரு அம்சம், இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களது இயக்கத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா ஆகியோர் இணைந்து இசையமைக்க "என் இனிய பொன் நிலாவே" படம். ஆனால் அது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அங்கீகாரத்தைப் பெறமுடியாமல் போய்விட்டது?

நீண்ட இடைவெளி இல்லைங்க ஒரு நூற்றாண்டு தொடங்கி அடுத்த நூற்றாண்டுல வெளியானது. சினிமா ஒரு ஐஸ்கிரீம், ஐஸ்கிரீமை ஐஸ்கிரீமா இருக்கும் போது கொடுத்தா சாப்பிட்டுடுவாங்க. அது கரைஞ்சு போச்சுன்னா ப்ரீயா கொடுத்தாக் கூடச் சாப்பிடமாட்டாங்க. அதுதான்.
அந்தப் படத்தின் முதல் டைட்டில் அப்பா அம்மா விளையாட்டு அப்புறம் நிறைய இடைவெளிகள் அதுக்கு வந்தது.

நாம எப்பவுமே நடந்த சோக சம்பவங்களை, விபத்துக்களைப் பதிவு பண்ணக்கூடாது. பாலுமகேந்திரா அவர்களின் இயக்கத்திலும் பாண்டியராஜன் நடித்திருக்கிறான் என்ற பெருமையே போதும்.

எண்பதுகளிலே எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் நாயகனாக வலம்வந்தீர்கள், இடையில் ஒரு சிறு இடைவெளி மீண்டும் கோபாலா கோபாலா படத்தின் மூலம் மீள் வெற்றி கிட்டினாலும் அதைத் தக்க வைக்கமுடியாமல் இருந்ததற்கு ஏதாவது காரணங்கள் இருக்குமா?

நிறைய இருக்கலாம்.

ஒரே மாதிரி வெற்றிகள் அமைந்தால் அது வாழ்க்கையும் அல்ல சுவாரஸ்யமும் அல்ல அது வந்து உப்புச் சப்பில்லாதது. ஒரு நாளிலேயே ராகுகாலம் எமகண்டம் அப்படின்னு ஏகப்பட்ட கால நேரம் வரும் போது ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வருவது என்ன வியப்பு.
25 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் இருந்து ஒரு அருமையான மனிதர் என்னைப் பேட்டி காண்கிறார் என்ற தருணத்தை ரசிக்கணும் ருசிக்கணும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு தாய்க்கு ஒரு தாலாட்டு மற்றும் முத்துக்கள் மூன்று ஆகிய திரைப்படங்களிலும் நடித்த பெருமை உங்களுக்கு உண்டு இல்லையா?

நடிகர் திலகத்தோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால் போதும் என்பது தான் என் அதிகபட்ச ஆசை. ஆனால் தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் அவர் எனக்குத் தந்தையாகவும் தாயாக நாட்டிப்ப்பேரொளி பத்மினி அம்மா இந்த வாய்ப்பு கிடைக்குமா என்று என்னை நானே கிள்ளிப்பார்க்கும் அளவுக்கு அதிர்ச்சியா இருக்கு. அற்புதமான உலகம் போற்றும் நடிகர், அவரின் மகனாக நடித்தது பெரும் பாக்கியம். ஊட்டியில் ஷீட்டிங் நடக்கும் போது ஒதுக்குப் புறமா சிறுநீர் கழிக்கப் போகும் போது துணைக்கு வாடா பாண்டியா என்று என்னை அழைத்துப் போகும் அளவுக்கு உரிமை எடுத்திருந்தார்.

உங்கள் ஆரம்பகால வெற்றிப்படங்களிலே கதாநாயகன் படத்தின் மூலக்கதை மலையாளத்தில் நாடோடிக் காற்று திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பின்னர் உங்களின் கோபாலா கோபாலா படத்தை மலையாளத்தில் ரீமேக் ஆக்கியிருந்தார்கள்.அது பெருமை அல்லவா?

வழக்கமா பெரும்பாலும் மலையாளத்தில் இருந்து தான் தமிழுக்குக் கொடுப்பார்கள். என்னுடைய கோபாலா கோபாலா கதையை மலையாளத்தில் எடுத்த போது மிஸ்டர் பட்லர் என்ற அந்தப் படத்தின் டைட்டில் கார்டுக்குப் பின் கதை ஆர்.பாண்டியராஜன் அப்படின்னு வரும். கதாநாயகன் பெயருக்கு முன்னாலேயே என் பெயரைப் போட்டார்கள். எனக்குக் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. அதுதான் கதாசிரியர்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம். அந்தப் படம் ஒரு வெற்றிப்படமும் கூட.
அந்தப் படத்தின் நாயகன் திலீப் அந்த வெற்றிக்காக எனக்கு ஒரு பரிசு கொடுத்தார். அவர் தயாரித்த கதாவிஷேசன் படத்தில் எனக்கு ஒரு பாத்திரம் கொடுத்தார்.

நீங்கள் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் நடந்த நிகழ்வு, "தூறல் நின்னு போச்சு" படத்தின் பாடல் கம்போசிங்கின் போது இளையராஜா இசைமைத்த குறித்த ஒரு ட்யூனை நீங்கள் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று உரிமை எடுத்துக் கொண்டு கேட்டுக் கொண்டதாகவும் ஆனல் உங்கள் குருநாதர் தயக்கம் காட்டியதாகவும் ஒரு செய்தி அதைப்பற்றிச் சொல்லுங்களேன்?


எனக்கு மறந்து போன ஜாதகங்களை எல்லாம் சொல்றீங்க (சிரிக்கிறார்) ராஜா சார் அற்புதமான ஒரு ட்யூன் போட்டார். ஆனால் என்னுடைய குருநாதர் "ரொம்ப உச்சஸ்தாயில் பாடவேண்டியிருக்கு" என்று சொல்லி வேணாம் என்றார். அந்த ட்யூனைப் பயன்படுத்தல. பின்னர் அதையே ஓளங்கள் மலையாளப்படத்தில் ஜானகி அம்மா பாடிய "தும்பி வா தும்பக்குளத்தே" என்று அமைந்து பெரும் புகழைப் பெற்றுக்கொடுத்தது. அதைக் கேட்டதும் குருநாதர் பாக்யராஜ் ஆகா ரொம்ப அற்புதமான பாட்டா இருக்கே என்றதும் , "சார் இதைத் தான் ராஜா சார் நமக்கு முன்னாடி போட்டுக் காமிச்சார்"னு அப்போது சொன்னேன்.

"தூக்கம் வராத போது சிந்தித்தவை" என்ற தனது நூல் குறித்து பாண்டியராஜன் சொல்லும் கருத்துக்கள், ஆண்பாவம் படத்தை ஏன் ரீமேக்கக் கூடாது என்ற போது அவரின் சிந்தனை மற்றும் பணவசதி இல்லாத காரணத்தால் இளமையில் படிக்காத இவர் பின்னர் எம்.ஏ பட்டதாரியாகி பின்னர் தமிழ் சினிமா குறித்து எம்.பில் ஆய்வு மற்றும் தற்போது "தமிழ்த் திரைப்படக்கலைஞர்களின் சமுதாயப் பங்களிப்பு" என்ற பெயரில் பி.எச்.டி படிப்பும் படித்து வருவதாகவும் தன் பேட்டியில் தொடர்ந்தார்.


Thursday, December 2, 2010

கேட்டதில் இனித்தது "என்ன குறையோ என்ன நிறையோ"


சாஸ்திரிய சங்கீத உலகில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்கள் பலர் திரையிசை உலகுக்கு வந்து தம் தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொள்வது காலாகாலமாக நடந்து வரும் சமாச்சாரம். ஆனால் அதற்கும் கூட நல்லதொரு தருணம் வாய்க்கவேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம் பாடகி சுதா ரகுநாதன். இன்றைய நிலையில் சாஸ்திரிய சங்கீதப் பரப்பில் சுதா ரகுநாதன் ஒரு சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது மிகையில்லை. உள்ளூரில் மட்டுமன்றி தமிழர்கள் பரந்து வாழும் வெளிநாடுகளிலும் இவருக்கான பரந்துபட்ட ரசிகர் வட்டம் இருப்பதே அதற்குச் சான்று.
சுதா ரகுநாதனையும் திரையிசை உலகம் விட்டுவைக்கவில்லை. இசைஞானி இளையராஜா (இவன்), தேனிசைத் தென்றல் தேவா (கல்கி), வாரணம் ஆயிரம் (ஹாரிஸ் ஜெயராஜ்) என்று சுதா ரகுநாதனின் குரலைத் திரையிசைப்பாடல்களில் முன்னணி இசையமைப்பாளர்கள் இவர்கள் பொருத்திப்பார்த்தார்கள். உண்மையில் அவர்களுக்கெல்லாம் கட்டுப்படாத இந்தக் குரல் இலாவகமாக, கச்சிதமாகப் பொருந்திப் போனது என்னவோ அண்மையில் வந்த ஒரு பாடலில் தான் என்பேன். அந்தப் பாடல் தான் "மந்திரப் புன்னகை" படத்தில் வரும் "என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்"

இன்றைய முன்னணி இசையமைப்பாளர்களில் இன்னும் ரசிகர்களால் முன்னோ தூக்கி நிறுத்திப் பாராட்டப்பட வேண்டிய இசையமைப்பாளர் வித்யாசாகர் என்பேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக வித்யாசாகர் இசையமைப்பாளராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று சீசனுக்கு சீசன் வந்து போகும் நிலை இவருடையது. இவரைக் கச்சிதமாகப் பயன்படுத்தக் கூடிய இயக்குனர்களில் கரு.பழனியப்பனும் ஒருவர். பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், (இன்னும் வெளிவராத)சதுரங்கம், தற்போது வெளியாகியுள்ள மந்திரப்புன்னகை போன்ற படங்களில் இந்தக் கூட்டு எவ்வளவு தூரம் சிறப்பாக அமைந்திருக்கின்றது என்பதற்கு அந்தப் படங்களின் பாடல்களே சான்றாக விளங்கி நிற்கின்றன. இவர்களோடு இன்னொரு முக்கியமானவர், அவர் தான் பாடலாசிரியர் அறிவுமதி. ஒரு நீண்ட அஞ்ஞாதவாசம் இருந்து மீண்டவருக்கு ஒரு அறிமுகமாக இப்படம் கிட்டியிருக்கின்றது. அறிவுமதியைப் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கின்றார் வித்யாசாகர். மெட்டுக்குப் பாட்டெழுதும் பெரும்பான்மைச் சூழலில் பாடல்வரிகளுக்கு மெட்டமைக்கும் சவாலை வித்யாசாகர் ஏற்கும் போது அறிவுமதி போன்ற கவிஞர்களின் பாடல்வரிகள் தான் அந்தச் சவாலுக்கு உறுதுணையாக வளைந்து கொடுத்து இசை வளையத்துக்குள் கட்டுப்பட்டுவிடுகின்றன.

சரி, இனி இந்தப் பாடலுக்கு வருவோம். ஆண்டவனிடம் தன்னை முழுமையாகக் கொடுத்து விட்ட சரணாகதி நிலையில் உள்ள ஒரு சூழ்நிலைக்கு ஒப்ப இந்தப் பாடல் பின்னப்பட்டிருக்கின்றது. இங்கே ஆண்டவன் என்ற நிலைக்குக் கண்ணன் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றார்.
கண்ணனுக்கே பிடித்தமான புல்லாங்குழல் மெல்ல அடியெடுத்துக் கொடுக்க சுதா ரகுநாதன் முதல் அடியை ஆரம்பிக்கிறார்.

கண்ணா....கண்ணா....கண்ணா
என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்


புல்லாங்குழல் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது இடையில் உறுத்தாத மேற்கத்தேய இசைக்குப் போய் மீண்டும் மிருதங்கம் ஒரு சிறு ஆவர்த்தனம் பிடித்து சுதா ரகுநாதனிடம் ஒப்படைக்க
அவர்

நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டம் ஆகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே

என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
கண்ணன்....கண்ணன்....கண்ணன்...கண்ணன்


மீண்டும் புல்லாங்குழலோடு இம்முறை இன்னொரு கோஷ்டி மேற்கத்தேய வாத்தியங்களின் மெல்லிசை பரவ மிருதங்கம் அதைக் கைப்பற்றி சுதாவிடம் கொடுக்க

உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் தரலாம்
உறவைப்போலே கண்ணன் இருப்பான்

பனிமூட்டம் மலையை மூடலாம்
வழி கேட்டுப் பறவை வாடலாம்
புதிராகக் கேள்வி யாவிலும்
விடையாகக் கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான்..எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையாய் உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை..கனிவு மன்னனை
தினம் பாடிவா மனமே.......


அப்படியே மீண்டும் முதல் அடிகளுக்குத் தாவாமல் நின்று விடுகிறது பாடல் அப்படியே எமது நெஞ்சிலும் நின்று நிலைத்துவிடும் அளவுக்கு. ஒரு சாஸ்திரிய இசைப்பாடகிக்குத் தோதான மெட்டும், இட்டுக்கட்டத் தேர்ந்த ஒரு பாடலாசிரியரும், ரசனை மிகுந்து பொறுக்கி எடுக்கும் வல்லமை வாய்ந்த இயக்குனரும் அமைந்தால் என்ன குறை?
சுதா ரகுநாதனின் இந்தப் பாடல் காலங்கள் கடந்தும் நிற்கும் கண்ணனைப் போலே.

Sunday, November 21, 2010

பாடகர் இளையராஜா - பாகம் 2 (மேற்கத்தேய இசை ஸ்பெஷல்)


பாடகர் இளையராஜா என்ற தொகுப்பு ஆரம்பித்து இசைஞானி இளையராஜாவின் தேர்ந்த முத்துக்களைத் தொடராகக் கொடுக்கவிருந்தேன். பாகம் ஒன்றோடு அது இடை நடுவில் நின்று விட்டது. இதோ மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்கின்றேன்.

பாகம் 2 இல் இளையராஜா பாடிய மேற்கத்தேய இசைக்கலவையோடு இணைந்த பாடற் தொகுப்புக்கள் அணி செய்கின்றன. இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் அவருக்கே உரித்தான கிராமிய மணம் கமிழும் பாடல்கள், தாயின் மகிமை குறித்த பாடல்கள் போலவே "ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா" பாணியிலான மேற்கத்தேய இசை கலந்த பாடல்களும் தனித்துவமானவை. இவற்றில் பெரும்பாலானவை கோஷ்டி கானங்களாகத் தான் இருக்கும். அக்னி நட்சத்திரம் படப்பாடலான "ராஜா ராஜாதினெங்கள் ராஜா" பாடல் மூலமே இந்தவகையான பாடல்களை அதிமுக்கியத்துவம் கொடுத்து ராஜா அள்ளி வழங்கியிருந்தார். அவற்றில் ஐந்து முத்துக்களை இங்கே கோர்த்துத் தருகின்றேன்.



அந்தவகையில் முதலில் வருவது "பொண்டாட்டி தேவை" படத்தில் வரும் "யாரடி நான் தேடும் காதலி". ராஜா இல்லாமல் சந்திரபோஸ் துணையோடு தன் முதற்படமான புதிய பாதை" படத்தை எடுத்துப் பெருவெற்றி கண்ட பார்த்திபன் இயக்கி நடித்த இரண்டாவது படம் "பொண்டாட்டி தேவை". வித்தியாசமான ஒரு கதைப்புலத்தைக் கொண்டிருந்தாலும் படம் தோல்விப்படமா அமைந்தது. ஆனால் இசைஞானி இளையராஜாவின் இசையில் எல்லாப்பாடல்களுமே இப்படத்தில் கலக்கலாக இருக்கும். இந்தப் படத்தின் நாயகன் ஒரு பஸ் கண்டெக்டர். அப்படியான ஒரு பாத்திரத்தின் அறிமுகமாக முகப்புப் பாடலாக வருகின்றது "யாரடி நான் தேடும் காதலி".
"ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா" பாடலின் வாடை அதிகமாகவே இப்பாடலில் தென்பட்டாலும் பாடலின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஒரு பஸ்ஸுக்குள் இருந்து இளசு ஒன்றின் மனக்கிடக்கை அழகான பீட் உடன் கொண்டு வருகின்றது. பலருக்கு இந்தப் பாடலை இப்போதுதான் முதற்தடவை கேட்கும் அனுபவமும் இருக்கும் என்று நினைக்கிறேன்.



அடுத்த தெரிவாக வருவது பரதன் படத்தில் வரும் "அழகே அமுதே பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே " . இந்தப் படத்தை இயக்கிய எஸ்.டி.சபாவுக்கு இதுதான் முதற்படம். இவர் தான் பின்னாளில் சபாபதி என்றும் சபாபதி தக்க்ஷணாமூர்த்தி என்று இன்னாளிலும் தன் பெயரை மாற்றிக் கொண்டு தன் சினிமா வாழ்க்கையில் ராசியைத் தேடிக்கொண்டிருக்கின்றார். ஆனால் இவர் இயக்கிய படங்களைப் பார்த்தால் ஒன்றைச் சிலாகிக்கலாம். அது, பாடல்களைப் படமாக்கும் விதம். பரதன் படத்திலும் இளையராஜா, ஜானகி பாடும் "புன்னகையில் மின்சாரம்" பாடலை எடுத்த விதமே ஒரு சாம்பிள். இங்கே நான் தரும் பாடல் "அழகே அமுதே" வை தனித்துப் பாடியிருக்கிறார் இசைஞானி. பாடலின் ஆரம்பத்திலேயே திடுதிப்பாக வேகமானதொரு பீட் ஓடு ஆரம்பிக்கும் இசை அதையே தொடர்ந்தும் முடிவு வரை இழுத்துச் செல்கின்றது. அண்ணன் தம்பி பாசப் பின்னணியைக் காட்டும் இந்தப் பாடலில் வழக்கமான இப்படியான சூழ்நிலைக்கு வரும் மெலடி இசையைத் தவிர்த்துப் புதுமை காட்டியிருக்கிறார். பாடலில் அண்ணனாக நடிப்பது எஸ்.பி.பாலசுப்ரமணியம், தம்பியாக விஜயாகாந்த். இந்தப் பாடலில் இசைஞானி புகுத்தியிருக்கும் மேற்கத்தேய இசைக்கோவை தனித்துவமானது, அழகானது, அடிக்கடி இதைக் கேட்டு ரசிப்பேன்.



90களில் வந்த கண்ணுக்கொரு வண்ணக்கிளி படத்தில் இருந்து அடுத்து வரும்
"கானம் தென்காற்றோடு போய்ச்செல்லும் தூது" பாடல் ஒலிக்கின்றது. இந்தப் படத்தில் ஆஷா போன்ஸ்லே உட்பட எல்லாப் பாடல் பிரபலங்களும் பாடியிருந்தாலும் யாரோ ஒரு ஞான சூனியம் இயக்குனராக வாய்த்ததால் வெறும் பாடல் சீடியோடு சிலாகிக்கப்பட்டு விட்டது. இசைஞானி இளையராஜா விழலுக்கு இறைத்ததில் இந்தப் படத்தின் பாடல்களும் ஒன்று. இங்கே நான் தரும் "கானம் தென்காற்றோடு போய்ச்சொல்லும் தூது" , ஒவ்வொரு வாத்தியங்களையும் வெகு லாவகமான அணிவகுக்க வைத்து ராஜா தரும் பரிமாறலைக் கேட்கும் போது சுகம். மனுஷர் ரொமாண்டிக் மூடில் "மது மது" என்று உருகிப் பாடும் போதும், கிட்டார், புல்லாங்குழல், வயலின்களின் காதல் ஆர்ப்பரிப்பும் இன்னொரு முறை காதலிக்கத் தோன்றும்.




திரைப்படக்கல்லூரியில் இருந்து செல்வமணி என்ற இயக்குனர் வருகிறார். அவர் இயக்கும் முதற்படம் "புலன்விசாரணை". முதற்படத்திலேயே இளையராஜா என்ற பெரும் இசையமைப்பாளர் துணை நிற்கின்றார் அவரை வைத்து ஐந்து பாடல்களை எடுத்து அதன் மூலமே படத்தை ஓட்டிவிடலாம் என்ற சிந்தனை ஏதும் இல்லாமல் ராஜாவிடம் பின்னணி இசையில் கவனித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மூன்று பாடல்களை மட்டும் வாங்கிக் கொண்டு அவற்றில் இரண்டை மட்டுமே பயன்படுத்தியதாக நினைவு. அதில் வரும் ஒரு பாடல் தான் "இதுதான் இதுக்குத் தான்" என்ற மேற்கத்தேய இசைக்கலப்பில் ராஜா பாடும் பாடல், துணையாக கங்கை அமரனின் பாடல் வரிகள். "நிலா அது வானத்துமேலே" பாட்டு எப்படி ஒரு பரிமாணமோ அதே வகையானதொரு சுகத்தை இந்தப் பாடலும் கொடுக்கவல்லது.



நிறைவாக வருவது தன் மகன் கார்த்திக் ராஜா இசையில் இசைஞானி இளையராஜா பாடும் "ஏய் வஞ்சிக் கொடி" என்ற பொன்னுமணி படத்தில் வரும் பாடல். படத்திற்கு இசை இளையராஜா என்றாலும் இந்தப் பாடல் மட்டும் கார்த்திக் ராஜா இசையமைத்தது. பொன்னுமணி என்ற கிராமியப்பின்னணிக் கலப்பில் வந்த படத்தில் இப்பாடல் வித்தியாசப்பட்டு நிற்கின்றது. பாடலின் தனித்துவம் என்னவென்றால் பாடலின் இடையில் ஹோரஸாக "விட்டா ஒன்னோட ராசி எட்டுத்திக்கும் வரும் யோசி" என்று வரும் கணங்கள் புதுமையான கலவையாகப் பாடலை மெருகேற்றி ரசிக்க வைக்கின்றது. பாடல்வரிகள் ஆர்.வி.உதயகுமார். ராஜாவுக்குப் பொருந்தக் கூடிய பாடல்களில் இதுவும் சிறப்பானது.



Tuesday, November 16, 2010

பி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்

ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப்படித் தான் ஆரம்பித்தது இன்றைய நாளும். பியானோ இசைக்கிறது, மெல்ல மெல்ல அந்தப் பியானோ இசை தன் ஓட்டத்தை நிறுத்த முயலும் போது ஊடறுத்து வருகின்றது "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்" இசைக்குயிலின் குரலைக் கேட்டுப் புழகாங்கிதம் அடைந்த தோரணையில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆர்ப்பரிப்போடு பியானோ இசை சேர, இந்த முறை சாக்ஸபோனும், கூடவே மெல்லிசை மன்னரின் தனித்துவமான வாத்திய அணிகளான கொங்கோ தாள வாத்தியம் அமைக்க, மற்ற இசைக்கருவிகளும் அணி சேர்க்கின்றன.
உன்னை ஒன்று கேட்பேன் என்று சுசீலா வரிகளுக்கு இலக்கணம் அமைக்கையில் உற்றுக் கேட்டுப் பாருங்கள் கூடவே ஒரு வயலின் அதை ஆமோதிப்பதைப் போல மேலிழுத்துச் செல்லும்.
"தனிமையில் வானம்" "சபையிலே மெளனம்" என்று ஒவ்வொரு ஹைக்கூ வரிகளுக்கும் இடையில் கொங்கோ வாத்தியம் இட்டு நிரவியிருக்கும் அந்த இடைவெளியை.
இந்தப் பாடல் ஒன்றே போதும் மெல்லிசை மன்னர் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்துக் காட்ட



இருள் சூழந்ததும் கொல்லையில் சிறுநீர் கழிக்கச் செல்லும் போது கூடவே அண்ணனோ, அம்மாவோ துணைக்கு வரவேண்டிய சிறு பருவம் அது. அந்த நேரத்தில் நிகழ்ந்து நினைவில் ஒட்டாத நினைவுகள் ஏராளம். ஆனால் தசாப்தங்கள் பல கழிந்தும் இன்னும் மனதில் தார் போல ஒட்டிக் கொண்டிருக்கும் நினைவுகளில் அடிக்கடி மீண்டும் மழைக்குப் பூக்கும் காளான் போலத் துளிர்த்துப் போவது " அத்தா.....ன் என்னத்தான் அவர் என்னைத் தான் எப்படி சொல்வேனடி" இலங்கை வானொலியின் இரவின் மடியில் நிகழ்ச்சியில் சுசீலா கிசுகிசுக்கிறார்.

அப்படியே வெட்கம் குழைத்த குரல் அதில் தொக்கி நிற்கும் சேதிகள் ஆயிரம் சொல்லாமல் சொல்லும். இங்கேயும் இசைக்குயில் சுசீலாவுக்கு மாற்றீடைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. "கிறுக்கா", "லூசுப்பையா" என்றெல்லாம் ஏகபோக உரிமை எடுத்துப் பாடும் இந்த நாள் அதிரடிப்பாடலுக்கு முழு நேர்மறை இலக்கணங்களோடு நாணம் கலந்து குழைத்த மெட்டு. குறிப்பா முதல் அடிகளைச் சுசீலா பாடிய ஒரு நிமிடம் கழித்து வரும் இடையிசையைக் கேளுங்கள் அப்படியே குறும்பு கொப்பளிக்குமாற்போலச் சீண்டிப்பார்க்கும் இசை. "அத்தான் என்னத்தான்" மாலை நேரத்து வீட்டு முற்றத்தில் ஈரும் பேனும் எடுக்கையில் நம்மூர்ப்பெண்கள் முணுமுணுத்துப் பாடியதை அரைக்காற்சட்டை காலத்தில் கேட்ட நினைவுகள் மங்கலாக.



பாடல்கள் மீது நான் கொண்ட நேசத்தை மட்டும் புரிந்து கொண்டவர்கள் தமது உறவினர்களின் வீட்டுத் திருமணங்களுக்கு அணி சேர்க்க என்னிடம் திருமணப்பாடல்களைச் சேகரித்துத் தருமாறு கேட்பார்கள். அப்போது நான் ஏதோ ஒரு இயக்குனர் இசையமைப்பாளர் ஒருவரிடம் சிச்சுவேஷன் சாங் போடுங்க என்று கேட்ட தோரணையில் அதீத ஆர்வம் மேலிடப் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துக் கொடுப்பேன். ஆனால் "இதெல்லாம் சரிவராது, நல்ல குத்துப்பாட்டு ரெக்கார்ட் பண்ணித் தாருங்கள்" என்று என் தொகுப்பை நிராகரிக்கும் போது அங்கீகரிக்கப்படாத புது இசையமைப்பாளரின் உணர்வோடு மனதைத் தொங்கப் போடுவேன். ஆனால் சிலபாடல்கள் நான் ரசிக்க மட்டுமே என்று கேட்டுக் கேட்டு அனுபவிப்பதுண்டு. அந்த ரகமான பாடல் தான் இது.
"வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி" என்று நிதானித்து ஆரம்பிக்கும் இந்தப் பாடலைக் கேட்க ஆரம்பியுங்கள். அப்படியே பிரமாண்டமானதொரு மனம் ஒருமித்த கல்யாண வீட்டை உங்கள் மனம் மெல்ல மெல்லக் கட்டத் தொடங்கும். ஒவ்வொரு வரிகளும் அந்தக் காட்சிப்புலத்தை உணர்ந்து பாடும் வரிகளாக அழுத்தமாகப் பதித்திருப்பார் இசையரசி பி.சுசீலா.
இங்கும் வழக்கமான எம்.எஸ்.வியின் ஆவர்த்தனங்கள் தான், ஆனால் மணமேடையின் காட்சிப்புலத்துக்கு இயைவாக ஒலிக்கும் நாதஸ்வர மேள தாளங்கள் பொருந்திப் போகும் இசைக் கூட்டணி.



"காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லிச் சொல்லி " மல்லுவேட்டி மைனர் படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் என்றாலும் நீங்கள் அதிகம் கேட்டிராத பாடல் வகையறா இது என்பது எனக்குத் தெரியும், அதைப் போல நான் அடிக்கடி கேட்கும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இந்தப் பாடலை அதிகம் கேட்டு நான் வளரக்காரணம் சென்னை வானொலியில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஞாயிறு தோறும் நான்கு மணி வாக்கில் வந்து போன "நேயர் விருப்பம்" நிகழ்ச்சி. ஷெனாய் வாத்தியத்தை சோகத்துக்குத் தான் சங்கதி சேர்த்து திரையில் கொடுப்பார்கள். விதிவிலக்காக பாவை விளக்கு படத்தில் வரும் "காவியமா நெஞ்சின் ஓவியமா" என்ற சந்தோஷப் பாட்டுக்குப் பயன்படுத்தினார்கள். அதே வரிசையில் காதல் பூத்த யுவதியின் சந்தோஷக் கணங்களாய் வரும் "காத்திருந்த மல்லி மல்லி" என்ற பாடலில் அடியெடுத்துக் கொடுப்பதும் இந்தக் ஷெனாய் இசைதான்.
ஒரு பதினாறு வயதுப் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோரணையில் தன் குரலினிமையை இந்தப் பாடலில் காட்டிச் செல்லும் சுசீலா இந்தப் பாடலைப் பாடும் போது அவருக்கு 55 வயது என்று சொன்னால் தான் நம்புவீர்களா? (அவர் பிறந்த ஆண்டு 1935, இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1990)
இந்தப் பாட்டின் இசையில் இப்படி ஒரு வரிகள் வரும்
"ராசா நீங்க வரம் கொடுத்தா படிப்பேன் ஆராரோ" (1.35 நிமிடத்தில்) அந்தக் கணம் பின்னால் முறுக்கிக் கொண்டு தபேலா இசையைக் கேட்டுப்பாருங்கள், இசைஞானி இந்த வாத்தியத்தை ஓடிக்கொண்டிருக்கும் இசையில் பெண் குரல் ஒலிக்கும் போது மட்டும் வித்தியாசப்படுத்திப் பயன்படுத்திய இலாவகம் புரிந்து நீங்களும் ரசிப்பீர்கள் மீண்டும் மீண்டும்.



இந்த நான்கு முத்தான பாடல்களுமே போதும் என்று நினைக்கிறேன் பி.சுசீலாவின் குரல் ஏன் எனக்குப் பிடிக்கும் என்று.

Sunday, November 7, 2010

கலைஞானி கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் சிறப்புப்பதிவு "அபூர்வ சகோதரர்கள்"

இன்று கலைஞானி கமல்ஹாசனின் 56 வது பிறந்த நாள். தமிழ்த்திரையுலகின் தவிர்க்கமுடியாத ஆளுமைகள் ஒன்றாக இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் படங்களில் பெரும்பாலானவை அவரின் தனித்துவமான நடிப்பிலும், சிந்தனையிலும் புதிய பரிமாணத்தைத் திரை ரசிகனுக்கு அளித்தவை. தமிழில் இருந்து நேரடிப்படங்களாக மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஓரிரு கன்னடப் படங்கள் என்று சென்ற இடமெல்லாம் அந்தந்தப் பிராந்திய ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்த கலைஞன் இவரைத் தவிர இன்னொருவரைப் பொருத்திப் பார்க்க முடியவில்லை.

இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் கலைஞானிக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அவரின் "அபூர்வ சகோதரர்கள்" படத்தின் பின்னணி இசையை இங்கே மீள் பதிவாகத் தருகின்றேன்.

அபூர்வ சகோதரர்கள் வெளிவந்த ஆண்டு 1989.
கதை பஞ்சு அருணாசலம். இயக்கம் சிங்கிதம் சீனிவாசராவ்.
படத்தின் வசனகர்த்தா கிரேசி மோகன். அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் (கெளரவ தோற்றம்) , சதி லீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், தசாவதாரம் ஆகிய கமல் படங்களுக்கு கிரேசி மோகன் வசனம் எழுதியிருக்கிறார்.
ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம் (கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள் அவரின் ஒளிப்பதிவின் ஒரு சாம்பிள்)



முன்னர் இதே பெயரில் ஜெமினி நிறுவனம் தயாரித்த தமிழ்ப்படத்தில் எம்.கே.ராதா மற்றும் இதே கதை ஹிந்தியில் படமான போது ரஞ்சன் ஆகியோர் நடித்திருப்பார்கள்.



சரி இனி கலைஞானி கமல்ஹாசனின் "அபூர்வ சகோதரர்கள்" படத்திலிருந்து இசைஞானி இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான பின்னணி இசையைத் தொகுத்து இங்கே தருகின்றேன்.



எழுத்தோட்டத்தின் பின்னணியில் கமல், ஸ்ரீவித்யா வில்லன்களிடமிருந்து தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (ட்ரம்ஸ் மற்றும் பல வாத்தியக் கலவை)




எழுத்தோட்டத்தில் வரும் பின்னணியில் கமல் கொல்லப்பட, ஸ்ரீவித்யா மட்டும் தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (புல்லாங்குழல், பல வயலின்கள், தனி வயலின் என்று மாறும்)




குழந்தைகள் ஆளுக்கொரு பக்கம் பிரிதல் (வயலின்)



அப்பு சர்க்கஸில் தோன்றும் முதற்காட்சி (வயலின்)



ரூபணியின் அறிமுகக் காட்சிக்கு சர்க்கஸ் குழு வாசிக்கும் பாண்ட் வாத்தியம்




அப்பு கமலின் கல்யாண சந்தோஷம் (பாண்ட் இசை)



அப்பு கமலின் காதல் தோல்வி (முகப்பு இசையின் வயலின் மீண்டும் ஒன்றிலிருந்து பல வயலின்களாக)




அப்பு தற்கொலை முயற்சி ( பல வயலின்களின் கூட்டு ஆவர்த்தனம்)



அப்புவின் பழிவாங்கும் காட்சி ஒன்று (பல வாத்தியக் கூட்டு)




அப்புவின் பழிவாங்கும் காட்சி இரண்டு




இறுதிக்காட்சியில் மீண்டும் வயலின் மற்றும் புல்லாங்குழல் இசை கலக்கின்றது

Thursday, November 4, 2010

தீபாவளி இன்னிசை விருந்து

தீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலகெங்கும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் தீபாவளி நாளில் போட்டுத் தீர்க்கப் போகும் பாடல் பட்டியலை இங்கே தீபாவளிப் பரிசாகப் பரிமாறுகிறேன். பாடல்களைக் கேட்டு அனுபவியுங்கள்

உன்னைக் கண்டு நான் ஆட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி (கல்யாணப்பரிசு)



நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதசி (நாயகன்)



பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா (பூவே பூச்சூடவா)



தினம் தினம் தினம் தீபாவளி (காட்பாதர்)




தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் (தேவதை)



விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் (ஆத்மா)



Tuesday, October 19, 2010

"ஆண்பாவம்" - 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு


டிசம்பர் 5 இந்த நாளோடு "ஆண்பாவம்"திரைப்படம் வந்து 25 ஆண்டுகளைப் பிடிக்கப் போகின்றது. இந்தப் படம் வந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி சிறப்பு விழா ஒன்று ஏற்பாடாகியிருப்பதாகச் செய்தி ஒன்றை எங்கோ படித்தேன். உடனே றேடியோஸ்பதி சார்பில் நாமும் விழா எடுக்கலாமே என்று முன்னர் போட்ட ஆண்பாவம் பின்னணி இசைத் தொகுப்பைத் தூசு தட்டி மேலும் பாடல்களையும் இணைத்து இந்தப் பதிவைத் தருகின்றேன்.

ஒருவன் தன்னிடமிருக்கும் பலம் எது என்பதை உணர்ந்து அதையே தான் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் பயன்படுத்திக் கொண்டால் பெருவெற்றியடைவான் என்பதற்கு பாண்டியராஜனின் இந்தப் படம் ஒரு நல்ல உதாரணம். தன் குருநாதர் பாக்யராஜின் நகைச்சுவை கலந்த திரைக்கதை என்ற ஆயுதத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு முழுமையானதொரு முகம் சுழிக்காத குடும்பச் சித்திரமாக ஆண்பாவம் படத்தை அளித்திருக்கின்றார்.


றேடியோஸ்பதியில் பின்னணி இசைத் தொகுப்புக்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது நண்பர் சி.வி.ஆர் "அந்த ஆண்பாவம் படத்தில் சீதா தண்ணிக்குடம் எடுத்துப் போகும் சீனில் வரும் பிஜிஎம் கொடுங்களேன், ரிங்டோனா பாவிக்கணும்" என்று கேட்கும் வரை இந்தப் படத்தின் பின்னணி இசையை நான் அவ்வளவு நுணுக்கமாகக் கேட்டதில்லை. ஆனால் பின்னணி இசைப்பிரிப்பைத் தொடங்கிப் பதிவு போட்டு இரண்டு வருடங்களைக் கடந்தும் மீண்டும் மீண்டும் என் பதிவுக்குச் சென்று நானே மீள ஒலிக்கவிட்டுக் கேட்கும் அளவுக்கு இந்த ஆண்பாவம் படத்தின் பின்னணி இசை தேனில் குழைத்த ஒரு கலவை என்று சொல்லலாம், இன்னும் திகட்டவில்லை.



வழக்கமாக இப்படியான நகைச்சுவை கலந்த படத்துக்கு வயலின் போன்ற ஒற்றை வாத்தியத்தை வைத்தே பெரும்பாலும் இசையமைப்பாளர் தன் பின்னணி இசையை ஒப்பேற்றிவிடுவார். ஆனால் பாருங்கள் ஒவ்வொரு காட்சியிலும் இசைஞானி கொடுத்த தனித்துவமான இசைக்கலவை ஒவ்வொன்றும் கேட்கும் போது மனதில் புதுப்பூம்புனலை உருவாக்கும் வல்லமை கொண்டது.


இயக்குனர் ஆர் பாண்டியராஜனின் "கன்னி ராசி" என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, இரண்டாவதாக இயக்கிய படமே ஆண்பாவம். 1985 வெளியாகி வெள்ளி விழாக் கண்ட படம் இது. படத்தில் பெரும்பாலான நடிகர்களுக்கு அவர்களின் பெயரிலேயே இப்படத்தின் கதாபாத்திரப் பெயரும் அமைந்திருக்கும். பதிவுலகத்தில் கூட பாண்டீஸ் பேமஸ் ;) பாண்டியனுடன் சீதா அறிமுக நாயகியாகவும், பாண்டியராஜன், ரேவதி போன்றோரும் நடித்திருக்கும் இப்படம் யதார்த்தமான நகைச்சுவை கலந்த திரைக்கதையைப் பலமாகக் கொண்டது. வி.கே.ராமசாமி, ஜனகராஜ் போன்றோரின் நடிப்பும் விலக்கமுடியாத சிறப்பைக் கொடுத்தது. பாண்டியனின் அந்தக் கள்ளமில்லாக் கிராமியச் சிரிப்பை மீண்டும் திரையில் காணும் போது நல்லதொரு கலைஞனைத் தொலைத்த கவலையும் எட்டிப்பார்க்கும்.

இந்த வேளை இதே படத்தை சச்சா ப்யார் என்ற ஹிந்திப்படமாக, ஜீஹீசாவ்லாவை ஹீரோயினாக வைத்து எடுத்த படம் இன்னும் பெட்டியில் தூங்கிக் கொண்டிருப்பது கொசுறுச் செய்தி.


ஆண்பாவம் திரைப்படத்தின் பெரும்பலங்களில் ஒன்று இசை. இசைஞானி இளையாராஜா இசையில் முத்தான பாடல்களும், அழகான பின்னணி இசையும் இப்படத்துக்கு மேலும் மெருகூட்டியது. கொல்லங்குடி கருப்பாயியை வைத்து மூன்று பாடல்களைப் பாடவைத்தது ஒரு புதுமை.
இன்றுவரை இப்படத்தின் பின்னணி இசையைப் பல ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதே இப்பின்னணி இசையின் சிறப்பாக இருக்கின்றது.


தொடர்ந்து ஆண்பாவம் திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைக் கேளுங்கள்.

றேடியோஸ்புதிரில் வந்த பின்னணி இசை முழுவடிவம்



ராமசாமி அண்ணனின் தியேட்டர் திறப்பை கரகாட்டத்துடன் வரவேற்றல்



கனகராஜ் கபே திறப்பும் ஆட்கள் வராததும்



சண்டைக்காட்சியில் வரும் பின்னணி இசை



சீதா அறிமுகக் காட்சி



சீதாவை பாண்டியன் பெண் பார்க்கும் காட்சி



மாப்பிளையை புடிச்சிருக்கு


பாண்டியன் கொடுத்த கைக்கடிகாரத்தை தண்ணீர் குடத்தில் மறைத்து அவஸ்தை



கள்ள கவுண்டர் திறக்கும் சின்ன பாண்டி



சீதாவின் மனதில் பாண்டியன் நிரந்தரமாக இடம்பிடித்தல்



பாண்டியனை தேடிப் போய் காணாமல் தவிக்கும் சீதா



சீதாவை தேடி புதுமாப்பிள்ளை வரும் நேரம்



ரேவதி தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்படுதல்





ஆண்பாவம் படத்தின் பாடல்கள்


ஏ வந்தனம் வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தணும் குந்தணும் - இளையராஜா குழுவினர்



குயிலே குயிலே பூங்குயிலே - மலேசியா வாசுதேவன், சித்ரா



காதல் கசக்குதைய்யா - இளையராஜா



என்னைப் பாடச்சொல்லாதே - ஜானகி



ஒட்டி வந்த சிங்கக்குட்டி குத்துச்சண்டை போடலாமா - கொல்லங்குடி கருப்பாயி



பேராண்டி பேராண்டி பொண்ணு மனம் பாராண்டி - கொல்லங்குடி கருப்பாயி



கூத்து பார்க்க அவரு போனார் தன்னானேனானே - கொல்லங்குடி கருப்பாயி



Tuesday, October 12, 2010

றேடியோஸ்புதிர் 58 : தேசிய விருது பெற்ற அந்தக் கலைஞருக்கு வயசு 80

ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டு(ம்) ஒரு றேடியோஸ்புதிரில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்தமுறை வரும் புதிர் சற்று வித்தியாசமாக திரைப்படத்திற்கு அத்திபூத்தாற்போல நுழைந்த ஒரு கலைஞர் எடுத்த எடுப்பிலேயே அவரின் இசையமைப்பில் வெளிவந்த படத்துக்குத் தேசியவிருதைப் பெற்றுக் கொடுத்த சங்கதியை வைத்துப் புதிர் போடுகின்றேன்.

குறித்த அந்த இசைக் கலைஞர் இந்த ஆண்டோடு 80 வயதை எட்டியிருக்கின்றார், நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் இவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் இசையமைத்த அந்தப் படம் குறித்த ஆண்டில் வெளியான படங்களில் சிறந்த இசைக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொண்ட தமிழ்ப்படம் அது. கூடவே இதே படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடன இயக்குனர் ஆகிய பிரிவுகளிலும் தேசிய விருதைத் தட்டிக்கொண்டது மேலதிக தகவல்.

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் அடலெயில்ட் நகரில் இடம்பெற்ற படவிழாவிலும் கலந்து கொண்டதோடு சிட்னியிலும் இரண்டு காட்சிகள் காண்பிக்கப்பட இருந்தது. இந்தப் படத்துக்கெல்லாம் கூட்டம் வருமா என்று நினைத்தேன். ஆனால் அரங்கம் நிறைந்த காட்சிகளாக அவை அமைந்திருந்தன. கூடவே படத்தின் கதையம்சமும் எடுத்த விதமும் கூட இயல்பானதொரு வரலாற்றுச் சித்திரமாக அமைந்தது.

சரி, கேள்வி இதுதான். எடுத்த எடுப்பிலேயே தான் முதலில் இசையமைத்த படத்தில் தேசிய விருதைப் பெற்றுக் கொண்ட அந்த இசைக்கலைஞர் யார்? குறித்த அந்தத் தமிழ்ப்படத்தின் பெயர் சொன்னால் போனஸ் புள்ளிகள் ;)

Sunday, October 3, 2010

ஷிக்கார் (The Hunt) - வேட்டையாடத் துரத்தும் பாவக்கணக்கு


"அன்று ருக்மணியின் கண்களில் தெரிஞ்ச நெருப்பு மறுநாள் தெலுங்கானாவில் தெரிந்தது"
பலராமன் (மோகன்லால்) 15 வருஷங்களுக்கு முந்திய அந்தக் கோரநினைவுகளை நினைத்துப் பார்க்கும் போது சொல்லிக் கொண்டது தான் ஷிக்கார் படத்தின் அடிநாதமும் கூட.

"ஷிக்கார்" மலையாளப்படம் குறித்த செய்திகள் வந்தபோது சிட்னியில் அது தியேட்டரில் முத்தமிட்டால் கண்டு ரசிக்க வேண்டும் என்று காத்திருந்தேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் சமுத்திரக்கனி. நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் ஒரே நாளில் தமிழகம் முழுதும் புகழப்பட்ட இயக்குனர், கூடவே சுப்ரமணியபுரம் படத்தில் வில்லன் அண்ணனாக வந்து வித்தியாசமான நடிப்பைக் கொடுத்தவர் இவரை மலையாளப்படவுலகம் வேண்டி அழைத்து நடிக்க வைக்கின்றதென்றால் அப்படி என்னதான் இந்தப் படத்தில் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடு தான் இந்தப் படம் பார்க்கும் ஆசையும். அந்த ஆசை இன்று சிட்னி தியேட்டரில் நிறைவேறிய சுகத்தோடு ஷிக்கார் பற்றி இனி.

இந்தப் படம் ஆரம்பிக்கும் போது சராசரியான நாட்டு ராஜாவு வகையறா மலையாளப் படங்களில் ஒன்றாகவே தென்பட்டது அது இடைவேளை வரை பாட்டும் கூத்துமாகத் தொடர்ந்தது. ஆனால் இடைவேளைக்குப் பின் தான் படம் சூடுபிடிக்க ஆரம்பித்து இறுதி முற்றுப்புள்ளி வரை அந்தச் சூட்டைக் காட்டி வேட்டையாடியது.

பலராமன் (மோகன்லால்) என்னும் லாரி ஓட்டுனர் நகரவாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் காடும் மலையும் தழுவிய பிரதேசத்தில் அவ்வூர் மக்களோடு வாழும் சராசரி மனிதன். அவனுக்குத் துணையாக மணியப்பன் (கலாபவன் மணி) என்னும் உதவியாளனும் சத்தியன் (லாலு அலெக்ஸ்) குடும்பமும் மட்டுமே. பலராமனின் கனவெல்லாம் காலமான தன் மனைவி காவேரி (சினேகா)யின் ஆசையாகத் தன் ஒரே மகள் கங்கா (அனன்யா)வை டாக்டர் பட்டத்துக்குப் படிக்க வைக்க வேண்டும் என்ற இலட்சியம் மட்டுமே. மாணவர் விடுதியில் தங்கிப்படித்த கங்கா தன் தந்தை பலராமனைத் தேடிக் காட்டுக்கு வந்த போது, பலராமனைச் சுற்றி அது நாள் வரை கண்ணுக்குத் தெரியாமல் துரத்திய அவனைக் குறித்த வேட்டை ஆரம்பமாகின்றது. அப்போது தான் 15 வருஷங்களுக்கு முன்னால் அவன் செய்த பாவக்கணக்குத் தீர்க்கும் காலம் வந்ததை உணர்கின்றான் அவன்.






இன்று இந்தியாவில் சூடுபிடிக்கும் விவகாரமாக ஆகிப்போயிருக்கும் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்துத் தெலுங்கானாவைத் தனி மாநிலம் ஆக்கவேண்டும் என்ற போராட்டத்தின் ஒரு பார்வையை ஷிக்கார் தொட்டுச் செல்கின்றது. நக்சலைட் தீவிரவாதி காம்ரேட் அப்துல்லா என்ற பாத்திரமாக வாழ்ந்திருக்கின்றார் நம் சமுத்திரக்கனி. உண்மையில் ஒரு போராட்டக்காரனின் எழுச்சி முகத்தை மிகவும் அன்னியப்படாத உடல்மொழி பாவங்களோடு அமைதியாக நடித்து நம் மனதில் ஆக்கிரமிக்கின்றார் சமுத்திரக்கனி. ஒரு எழுச்சியாளனாக, கவிஞனாகத் தன் சிந்தனைகளைப் பாடியும் பேசியும் பரப்பும் காம்ரேட் அப்துல்லா என்னும் சமுத்திரக்கனி, தன்னைப் பொறிவைத்துப் பிடித்து அழைத்துப் போகும் கான்ஸ்டபிள் பலராமனிடம் அவரின் பிள்ளையின் பெயர் கேட்டு அவள் பெயர் கங்கா என்று அறிந்துகொண்டு அவளுக்கும் ஒரு கவிதை எழுதித் தருகின்றேன் என்னும் போது அந்தப் புரட்சியாளனின் உள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் நேசத்தை நச்சென்று காட்டி வைக்கின்றது.
இப்போதுதான் தெரிகிறது சமுத்திரக்கனியைத் தேடி ஏன் மாநிலம் விட்டு மாநிலம் வந்தார்கள் என்று, அந்தளவுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றார் இவர்.



முதற்பாதியில் ஒரு சராசரி லாரி ஓட்டுனர், அடுத்த பாதியில் தன் கடந்தகால நினைவுகளில் பயணிக்கும் போது ஒரு கான்ஸ்டபிள் இதுதான் பலராமன் என்னும் மோகன்லாலின் பாத்திரம். தன்னைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத அபாயம் தன் மகளின் காதலன் ரூபத்தில் கூட வந்திருக்குமோ என்று பரிதவித்து அங்குமிங்குமாகப் பரிதவித்து அலைபாயும் மன உளைச்சலை வெகு இயல்பாகக் காட்டியிருக்கின்றார் மோகன்லால், இதெல்லாம் அவருக்குப் புதுசா என்ன?
காம்ரெட் அப்துல்லாவைக் கைது செய்ய நடத்தும் நாடகத்தில் தன் இயலாமையைக் காட்டும் போதும், கண்ணுக்கு முன்னால் அப்துல்லாவுக்கு நேரப்போகும் நிலையைக் கண்டு கையறு நிலையில் இருக்கும் போதும், மகளையும் தன்னை யும் துரத்தும் மரணதூதர்களைத் தேடும் போதும் மோகன்லால்
பலராமன் பாத்திரத்துக்குப் பெரும் பலம். மலையாளத்தின் ஒரு சூப்பர் ஹீரோ இப்படி ஒரு சாதாரண கதாபாத்திரமாக மாறும் வல்லமை அங்கு மட்டுமே எதிர்பார்க்கக் கூடியதொன்று.

இந்தப் படத்தின் பலவீனம் என்றால் ஒரு பெரும் செய்தியைத் தொக்கவைத்துக் கொண்டு இடைவேளை வரை ஏனோதானோவென்று சராசரிக்காட்சிகளோடு இழுத்துக் கொண்டு போயிருப்பது, பலம் என்னவென்றால் இடைவேளைக்குப் பின்னான அழுத்தமான கதைக்கருவை கச்சிதமாகக் காட்சிவடிவம் கொடுத்திருப்பது. காடுகளுக்குள் காமரா ஓடும்போது பரபரப்புத் தொற்றிக் கொள்கின்றது. இறுதியில் ஒரு சவாலான பிரச்சனையை எப்படி முடிக்கப் போகின்றார்கள் என்றால் அதையும் நாடகத்தனமில்லாமல் நம்பத்தக்கவகையில் முடித்திருப்பதும் நேர்த்தியாக இருக்கின்றது. மோகன்லாலுக்குத் தெரியாத அந்த நக்சலைட் தீவிரவாதி குறித்த தன்னைச் சுற்றிய சந்தேகத்தோற்றத்தை நமக்கும் ஏற்றிவிடுகின்றது படத்தின் திரைகதை அமைப்பு. தெலுங்கானா சூழலின் அந்தக் காட்சிப்பரப்பை வெகுசிறப்பாகக் காட்டி வைக்கின்றார் இயக்குனர் பத்மகுமார். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருப்பவர் சுரேஷ்குமார், கத்தி மேல் நடப்பது மாதிரியான மூலக்கதையம்சத்தை கவனமாகக் கையாண்டிருக்கின்றார்.


தலைவாசல் விஜய் (சக கான்ஸ்டபிள்), சினேகா (மோகன்லால் மனைவி காவேரி) , நடன இயக்குனர் கல்யாண் (போலீஸ் தலைமை அதிகாரி), சமுத்திரக்கனி ( காம்ரேட் அப்துல்லா)என்று தமிழ் முகங்கள் முக்கிய பாத்திரங்களில் என்றால் கூடவே இயக்குனர் லால் கெளரவ வேஷத்தில் வந்து "குதிரவாலு குலுங்குதடி குமரி நீயும் நடக்கையிலே" என்று முழு நீளத் தமிழ்ப்பாட்டையும் பாடுகின்றார். ஒரு மலையாளப்படத்தில் மலையாளப்பாட்டுக்களோடு இந்த குதிர வாலு என்ற தமிழ்ப்பாட்டும், காம்ரேட் அப்துல்லா பாடும் "பிரதிகாடின்சு" என்ற தெலுங்குப் பாடலும் என்று மூன்று மொழிப்பாடல்கள் ஒரே படத்தில் இருப்பது புதுமை. பாடல்களுக்கான இசை சமீபகாலமாக மலையாள உலகின் "இளைய"ராஜாவாக இருக்கும் எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை கடந்த வருஷம் தேசிய விருதை வாங்கிக் கொண்ட அவுசப்பச்சன்.

ஷிக்கார் - மனதை வேட்டையாடி அப்துல்லா என்ற காம்ரேட்டை முத்திரையாகப் பதிக்கின்றது.

மலையாளப்பாடல் "எந்தடி எந்தடி பனங்கிளியே"



தெலுங்குப்பாடல் "பிரதிகாடின்சு"



Thursday, September 30, 2010

சந்திரபோஸ் - ஒரு இசையுலக சிற்றரசனின் மரணம்

தமிழ்சினிமாவின் எண்பதுகள் இளையராஜா என்ற பேரரசனின் இசையாட்சி நடந்துகொண்டிருந்த போது அவரின் எல்லைக்குள் வர முடியாத தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்த சிற்றரசர்களில் முதன்மையானவர் சந்திரபோஸ். குறிப்பாக பெருந் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிவரும் ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக அமரும் அளவுக்கு சந்திரபோஸ் ஆசீர்வதிக்கப்பட்டார். இதற்கெல்லாம் வெறும் பரிந்துரைகள் மட்டும் பலனளிக்காது, அதற்கும் மேல் தன்னை நிலை நாட்டிக்கொள்ள வேண்டும் என்ற இலட்சியமும் வேகமும் இருக்கவேண்டும், அதுதான் சந்திரபோஸின் உயரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தமிழகத்து நண்பர்களோடு பேசும் போது அடிக்கடி சொல்லிக்கொள்வேன், "பாடல்களைக் கேட்கும் ரசனையில் ஈழத்தவர்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இருக்கிறதென்று".
ஆமாம், இலங்கை வானொலி ஆரம்பித்து வைத்த இந்த ரசனை ஈழத்தின் கடைக்கோடி ரசிகனுக்குமான பழக்கமாக மாறி விட்டது.

அந்த வகையில் எண்பதுகளில் ஈழத்து ரசிகர்களால் பெரிதும் ஆகர்ஷிக்கப்பட்ட ஒரு இசையமைப்பாளராக சந்திர போஸ் விளங்குகின்றார். அன்றைய காலகட்டத்தில் அவரின் இசையமைப்பில் வெளிவந்த ஒவ்வொரு பாடலுமே எமது போரியல் வாழ்வின் மறக்கமுடியாத அந்த நாட்களின் சிறு ஞாபக எச்சங்களை நினைவுபடுத்தும் வல்லமை மிக்கதானது.

இரண்டாண்டுகளுக்கு முன் அமீரகத்தில் ஒரு விழா எடுக்கும் போது அந்த நிகழ்வின் ஒருங்கமைப்பாளராக இருந்த நண்பர் ஆசிப் மீரான், சந்திரபோஸ் தான் இந்த விழாவின் விருந்தினராக வருகின்றார் என்று சொல்லியிருந்தார். ஆசீப் மீரானிடம் சந்திரபோஸ் இலக்கத்தைப் பகிர்ந்து கொண்டால் அவரை வானொலிப் பேட்டிக்காக உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று நான் கேட்டபோது " நம்ம சந்திரபோஸ் தானே, தரலாம்" என்றிருந்தார். நானும் சாவகாசமாக இந்தப் பேட்டியை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து வைத்திருந்தேன்.


சந்திரபோஸ்! எங்களின் அந்தக் கால ஞாபகங்களைப் புதுப்பிக்க உதவினீர்கள், இன்று உங்களை எங்களின் நினைவுகளில் நிரந்தரமாக உறைந்து விட்டீர்கள்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதனின் இசையில் "ஆறு புஷ்பங்கள்" திரைப்படத்திற்காக தமிழ் சினிமாவில் சந்திரபோஸ் அறிமுகமான போது பாடிய பாடல் "ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை"



ஒரு தொட்டில் சபதம் திரைப்படத்திற்காக சந்திரபோஸ் பாடி பட்டி தொட்டியெல்லாம் புகழ்பூத்த "பூஞ்சிட்டுக் குருவிகளா...புதுமெட்டுக்கருவிகளா..."



வடிவங்கள் திரைப்படத்திற்காக சந்திரபோஸ் இசையமைத்துப் பாடிய "நிலவென்ன பேசுமோ"



சந்திர போஸ் குறித்து நான் றேடியோஸ்பதியில் தந்திருந்த முந்திய இடுகை ஒன்று

எண்பதுகள் என்பது தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத இளையராஜா காலம். தீபாவளிப் படங்களில் எல்லாமே ராஜாவின் இசையில் பல வருடங்களாக வந்த காலமும் இருக்கின்றது, அதே போல் அந்தக் காலகட்டத்தின் முதல் வரிசை நாயகர்களின் முதல் தேர்வே இளையராஜாவாகத் தான் இருந்தது. அந்த வேளையில் சிறு முதலீட்டில் உருவான படங்களுக்கும், பெரிய நாயகர்கள் நடித்த ஒரு சில படங்களுக்கும் ஆபத்பாந்தவர்களாக இருந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் சங்கர்-கணேஷ், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன் வரிசையில் மிக முக்கியமாகக் குறிப்படத்தக்கவர் இசையமைப்பாளர் சந்திரபோஸ்.

1978 இல் வெளியான "மச்சானைப் பார்த்தீங்களா" திரைப்படம் சந்திரபோஸுக்கு நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்திருந்தது. அதில் குறிப்பாக "மாம்பூவே சிறு மைனாவே" பாடல் காலத்தால் விஞ்சிய ஒரு தேன் விருந்து.ஒரு சிறு இடைவெளிக்குப் பின் சந்திரபோஸின் அலை அடிக்க ஆரம்பித்தது கே.பாலாஜியின் "விடுதலை" திரைப்படத்தின் மூலம். எண்பதுகளின் மத்தியிலே கே.பாலாஜியின் மொழிமாற்றப்படங்களிலே கங்கை அமரனுக்கு மாற்றீடாக "விடுதலை" (குர்பானியின் மொழிமாற்றம்)திரைப்படத்தில் சந்திரபோஸின் இசைதான் வந்து கலக்கியது. பொதுவாக இப்படியான மொழிமாற்றுப் படங்களிலே மூலப்படங்களின் பாடல்கள் முழுவதையுமே நகல் எடுப்பது வழக்கம். ஆனால் "விடுதலை" திரைப்படத்துக்காக விஷேஷமாக சந்திரபோஸால் மெட்டமைக்கப்பட்ட "நீலக்குயில்கள் ரெண்டு" பாடல் மீண்டும் இவர் அடுத்த இசையாட்டத்தில் ஆட சிறப்பானதொரு வாய்ப்பைக் கொடுத்தது. அடுத்த சில ஆண்டுகளில் ஏ.வி.எம் நிறுவனத்தின் செல்ல இசையமைப்பாளரானார்.

சந்திரபோஸின் இசை ஜாலங்கள் ராஜாவின் இசையைப் போல மந்திரித்து வைக்கவில்லை என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இளையராஜாவுக்கு சவால் இளையராஜாவே தான். ஆனால் அவருக்கு அடுத்த வரிசை இசையமைப்பாளர்களில் தனித்துவம் மிக்கவராக சந்திரபோஸ் இருந்ததாலேயே மற்றைய இசையமைப்பாளர்களை ஓரம் கட்டிவிட்டு அவரின் இசையில் மலர்ந்த பாடல்கள் ரசிகர்களின் காதுகளை வெகுவாக ஆக்கிரமித்தன. இளையராஜா என்னும் மகா கலைஞன் இசையாட்சி நடத்திக் கொண்டிருக்கும் வேளை அவருக்கு ஈடு கொடுத்து இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்களையும் ரசிகர்களைக் கேட்க வைக்க இன்னொருவருக்கும் திறமையும் வல்லமையும் வேண்டும். அந்த வல்லமை சந்திரபோஸிற்கு இருந்திருக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் ராஜாவைச் சீண்டவோ என்னவோ "வில்லதி வில்லனையும் ஜெயிச்சுடுவேன், நான் ராஜாதிராஜனையும் தோற்கடிப்போன்" என்று மதுரைக் காரத் தம்பி திரைப்படத்திலும், கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் வந்த "அண்ணனுக்கு ஜே" படத்தை சீண்டுமாற் போல என்று நினைக்கிறேன் "உங்கப்பனுக்கும் பே பே" என்று "ராஜா சின்ன ரோஜா"விலும் பாட்டுப் போட்டிருந்தார் சந்திரபோஸ். ராஜா-வைரமுத்து விரிசல் கடலோரக் கவிதைகளைத் தொடர்ந்து வரவும், வைரமுத்துவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது சந்திரபோஸ் இசையமைத்த படங்கள். சொந்தக்காரன் திரைப்படத்தில் வைரமுத்துவின் குரலையும் பயன்படுத்தி ஒரு பாடலும் பண்ணியிருக்கிறார். இசையமைப்பாளர் சந்திரபோஸை வானொலிப் பேட்டி ஒன்று எடுத்து அவர் காலகட்டத்து இசையனுபவங்களைத் திரட்டவேண்டும் என்பது என் வெகுநாட் கனவு.



இப்படி சந்திரபோஸ் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். அவரின் அரிய பாடல்கள் பலவற்றைத் தேடித் தேடிச் சேமித்தும் இருக்கின்றேன். ஆனால் இந்த வாரம் சந்திரபோஸின் இசையில் மலர்ந்த முத்தான பத்து காதல் மெட்டுக்களை மட்டும் தருகின்றேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் எஞ்சிய பாடல்களோடு அவற்றின் சிறப்பையும் தருகின்றேன்.

"மச்சானைப் பார்த்தீங்களா" திரைப்படம் வி.சி.குகநாதன் இயக்கத்தில் சிவகுமார், சுமித்ரா போன்றோர் நடித்து 1978 இல் வெளிவந்த திரைப்படம். இப்படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா பாடும் "மாம்பூவே சிறு மைனாவே" பாடல் ஆரம்ப தபேலாவும், மெலிதாக இழையோடும் கிட்டார் இசையும் கலக்க, ஒரு காலகட்டத்தில் றேடியோ சிலோனில் கலக்கிய பாடல் என்று இப்போதும் அந்த நாளைய இளைசுகள், இந்த நாளைய பெருசுகள் சொல்லும். அதே காலகட்டத்தில் இளையராஜா போட்ட பாடல்களை நினைவுபடுத்துவதே இந்த இசையின் பலவீனம். அருமையான பாடகர் கூட்டும், இசையும் கலக்க இதோ "மாம்பூவே"




தொடர்ந்து 1982 இல் வெளிவந்த வடிவங்கள் திரைப்படம் , ராம்ஜி என்ற ஒரு நடிகர் நடித்தது. ஆனால் படத்தின் பெயரை இன்றும் ஞாபகம் வைக்க உதவுவது சந்திரபோஸின் இசை. இப்படத்தில் இவரே பாடிய "நிலவென்ன பேசுமோ" என்ற அருமையான சோகப்பாடல் இன்றும் இருக்கின்றது. கூடவே எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடும் 'இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே" ரசிகர்களின் இதய வானில் பச்சென்று இடம்பிடித்த காலம் ஒன்றும் இருக்கின்றது. அதற்கும் இலங்கை வானொலியை ஆதாரம் காட்டவேண்டி இருக்கின்றது.




கே.பாலாஜியின் இன்னொரு மொழிமாற்றுத் திரைப்படம் "விடுதலை". சிவாஜி, ரஜினி, விஷ்ணுவர்த்தன் போன்ற பெருந்தலைகளைப் போட்டும் இசைக்கு மட்டும் சந்திரபோஸை மீண்டு(ம்) திரைக்கு வரவழைத்த படம். புத்துணர்ச்சியோடு சந்திரபோஸ் மெட்டமைத்திருக்கின்றார் என்பதற்கு சிறப்பானதொரு உதாரணம், இப்படத்தில் வரும் "நீலக் குயில்கள் ரெண்டு" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல். இடையிலே ஹோரஸ் குரலாய் 'ஓஹோஹோ ஓஹோஓஹோஓஒ" என்று சந்திரபோஸ் கலப்பது வெகு சிறப்பு.



எண்பதுகளில் ஏ.வி.எம் நிறுவனத்துக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்த திரைப்படம் சங்கர் குரு. அர்ஜீன, சீதாவுடன் பேபி ஷாலினி பாடிக் கொண்டே வரும் "சின்னச் சின்னப் பூவே" பாடலும் இப்பட வெற்றிக்குக் கைகொடுத்த சமாச்சாரங்கள் என்றால் வைரமுத்து வரிகளில் சந்திரபோஸ் இசையமைத்த "காக்கிச் சட்டை போட்ட மச்சான்" பாட்டு கூட இந்த வெற்றியில் பங்கு போட்டது.இதோ மலேசியா வாசுதேவன், மற்றும் அந்தக் காலகட்டத்தில் சந்திரபோஸின் இசையில் அதிகம் பாடிய சைலஜா குரல்களில் "காக்கிச் சட்டை போட்ட மச்சான்"



ஆண்பாவம் படம் கொடுத்த போதையும் பாண்டியராஜன் கன்னாபின்னாவென்று படங்களை நடித்து வைக்க, பதிலுக்கு ரசிகர்களும் அவர் படங்களுக்கு டூ விட்டுக் கொண்டிருந்த வேளை டில்லிக்கு ராஜான்னாலும் "பாட்டி சொல்லைத் தட்டாதே" என்ற மந்திரத்தோடு வெற்றிக் கனியை அவருக்குக் கொடுத்தது. இப்படத்தில் வெத்தல மடிச்சுக் கொடுத்த பொம்பளை பாடல் சோகம், சந்தோஷம் இரண்டிலும் கேட்க இதமான பாடல்கள். அத்தோடு "வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சு" பாடல் அந்தக் காலகட்டத்தில் நம்மூர் திருவிழாக்களில் நாதஸ்வரக் கலைஞர்களின் வாசிப்பில் தவறாது இடம்பிடித்த கலக்கல் பாடல். அந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோர் பாடுகின்றார்கள்.



ஏ.வி.எம் தயாரிப்பில் வசந்தி என்றொரு படம் வந்தது. மோகன், மாதுரி ஆகியோர் நடித்திருப்பார்கள். அப்படத்தில் வரும் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் "ரவிவர்மன் எழுதாத கலையோ" என்று. அப்பாடலில் நாயகன் பாடுவதாக " பூமாலையே உன்னை மணப்பேன், புதுச் சேலை கலையாமல் அணைப்பேன்" என்று வைரமுத்து எழுதியிருப்பார். அணைக்கும் போது சேலை கலையாதா என்று என்று ஒரு ரசிகர் வைரமுத்துவிடம் ஒருமுறை கேட்கவும் அதற்கு "முதலிரவில் அணைக்கும் போது சேலைக்கு என்ன வேலை என்று சொன்னாராம் அந்தக் குறும்புக்கார வைரமுத்துக் கவிஞர். இதோ அந்தப் பாடல்.



மலையாளத்தின் சிறந்த மசாலாப் படங்களையும் குடும்பப் படங்களையும் கொடுத்து வரும் சத்யன் அந்திக்காட் எடுத்து மோகன்லால், சிறினிவாசன் போன்றோர் நடித்த "காந்திநகர் 2nd Street" அதுவே பின்னர் சத்யராஜ், ராதா, பிரபு (கெளரவம்) ஜனகராஜ் நடித்த "அண்ணா நகர் முதல் தெரு" ஆனது. "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" பாடலை அந்தக் காலகட்டத்தில் காதல் திரி வைத்தவர்களுக்கு ஒருமுறை போட்டுக் காட்டுங்கள். முகத்தில் ஒரு புன்னகை தானாகக் கிளம்பும். பலரைக் காதலிக்க வைத்ததும், காதலியை நினைத்து மனசில் பாடவைத்ததும்" இந்த எஸ்.பி.பி, சித்ரா பாடும் பாட்டு. "ராத்தூக்கம் ஏனம்மா கண்ணே உன்னாலே" என்று காதலன் பாடவும் பதிலுக்கு "ராசாவே நானும் தான் கண்கள் மூடல்லே" என்று காதலியும் பாடும்போது புதுசா புதுசா அதில் காதில் கேட்டு காதலிக்கத் தோன்றும் மீண்டும் மீண்டும். என்னவொரு அற்புதமான மெட்டும், இசையும்.



எண்பதுகளில் ஏ.வி.எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்திரபோஸுக்கு போனஸாய் கிடைத்தவை ரஜினிகாந்திற்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுத்த "மனிதன்", ராஜா சின்ன ரோஜா" திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்புக்கள். ரஜினியின் திரைப்படங்களில் இளையராஜாவுக்கு அடுத்து இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்கள் வெகுவாக அன்று பேசப்பட்டதென்றால் அவை இவை இரண்டும் தான். குறிப்பாக ரஜினியின் "ராஜா சின்ன ரோஜாவில்" வரும் "பூ பூ போல் மனசிருக்கு" பாடலும் "மனிதன்" திரைப்படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் "ஏதோ நடக்கிறது" பாடலும் மெல்லிசையாக மனதில் இடம்பிடித்த அருமையான பாடல்கள். இதோ ஏதோ நடக்கிறது கேளுங்கள், இதமாய் இருக்கிறதல்லவா சொல்லுங்கள்.



நடிகர், இயக்குனர் பார்த்திபனுக்கு இளையராஜாவே முதல் படத்தில் இசையமைக்காத வாய்ப்பு. ஆனாலும் சந்திரபோஸுடன் இணைந்து "புதிய பாதை" போட்டார். இப்படத்தின் பாடல் காசெட் அப்போது வெளியானபோது ஒவ்வொரு பாடலுக்கும் வைரமுத்துவின் முத்தான குரல் விளக்கமும் இருக்க வந்திருந்தது. "பச்சப்புள்ள அழுதிச்சின்னா பாட்டு பாடலாம் இந்த மீசை வச்ச கொழந்தைக்கு என் பாட்டு போதுமா?" என்று வாணி ஜெயராம் கேட்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ன சொல்கின்றார் என்பதைப் பாடலிலேயே கேளுங்கள்.



இசையமைப்பாளர் சந்திரபோஸுன் உச்சம் குறைந்து மெதுவாகக் குறைந்த காலகட்டத்தின் போது வந்தது ஏ.வி.எம்மின் "மாநகரக் காவல்".விஜய்காந்த், சுமா ஆகியோர் நடித்திருக்க, சந்திரபோஸின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் "தோடி ராகம் பாடவா" என்று கேட்க சித்ரா சொல்லும் " மெல்லப்பாடு" என்று பதில் போடும் பாட்டோடு அடுத்த கட்ட சினிமா யுகமும் ஆரம்பித்தது, புதுப்புது இசை (இளவரசர்கள்)யமைப்பாளர்கள் வந்தார்கள். குறுநில மன்னர்களும் மெல்ல மெல்ல விலகினார்கள். சந்திரபோஸும் நீண்ட பல வருசங்களாய் இசையமைப்பில் இருந்தும் விலகப் போனார்.



XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

உண்மையில் கடந்த றேடியோஸ்புதிரைத் தொடர்ந்து இன்னொரு இசைப்படைப்பைத் தான் கொடுக்க இருந்தேன். ஆனால் என் நினைப்பை மாற்றி சந்திரபோஸின் பாடல்களையே முழுமையாகக் கொடுக்க ஏதுவாக அமைந்தது, கடந்த புதிரின் பின்னூட்டம் வாயிலாக R.லதா, இசையமைப்பாளர் சந்திரபோஸ் குறித்து வழங்கிய இந்தக் கருத்துக்களை அவருக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டே பகிர்கின்றேன்.


From: R.Latha on Mon Feb 18 5:31:35 2008.
தமிழ் சினிமாவில் 350-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். இதில் ரஜினி நடித்த மனிதன், ராஜா சின்னரோஜா உள்ளிட்ட ஏவி.எம்.மின் தயாரிப்பில் வந்த 12 படங்களும் அடங்கும். 1977-ல் தொடங்கிய இவரது இசை சாம்ராஜ்யம் தொடர்ந்து 20 வருடங்களுக்கும்மேலாக நிலைத்தது.

ஒய்வெடுக்கிறாரோ என்ற யோசித்த நேரத்தில் இதோ வந்து விட்டேன் என்று சின்னத்திரையில் ஆஜர். இம்முறை இசையமைப்பாளராக அல்ல, நடிகராக. மெட்டிஒலி சித்திக் தயாரித்த மலர்கள் தொடரில் லிங்கம் என்ற வில்ல கேரக்டரில் தனது நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்தவும் செய்தார்.

இந்த லிங்கம் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு இவரை தொடர்ந்து நடிப்புக்கு முகம் காட்ட வைத்தது. இந்த கேரக்டரில் இவரது நடிப்பை பார்த்த டைரக்டர் தினேஷ் இவரை தனது கத்திக்கப்பல் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் போட்டு விட்டார்.அதோடு ஏவி.எம்.மின் வைர நெஞ்சம் தொடரிலும் மாமனார் கேரக்டரில் குணசித்ர நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். மெகா சேனலில் இப்போது திகிலும் தெய்வீகமுமாய் யார் கண்ணன் இயக்கத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜனனம் தொடரில் வைத்தியராகவும் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

"இனி தொடர்ந்து நடிப்பு தானா?''

ஜனனம் தொடர் படப்பிடிப்பில் இருந்தவரிடம் கேட்டபோது...

"நடிக்கும் ஆசையில் தான் சினிமாத் துறைக்கே வந்தேன்.ஆனால் வெளிப்படுத்த முடிந்தது எனக்குள் இருந்த இசையைத்தான். 12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கவந்து விட்டேன். கலைஞர் நடித்த மணிமகுடம் நாடகத்தில் கூட நடித்திருக்கிறேன். கலைஞரின் பராசக்தி நாடகமாக நடந்தபோது அதிலும் நடித்திருக்கிறேன்.என் நடிபபில் எனக்கே திருப்தி ஏற்பட்ட நேரத்தில் தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன்.எதிர்பாராமல் இசையமைப்பாளராகி அதில் பிரபலமான நேரத்தில் நடிப்பு ஆசையை ஒத்தி வைத்தேனே தவிர, நடிப்பார்வம் உள்ளூர கனன்று கொண்டுதான் இருந்திருக்கிறது. அதுதான் இத்தனை வருடம் கழித்து மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இசையமைப்பில் சாதித்ததையும் தாண்டி நடிப்பில் சாதிக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு எனக்குள் விதவித கேரக்டர்களாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.''