Pages

Friday, February 19, 2021

இயக்குநர் கே.விஸ்வநாத் 90
நடனக் கலையை மானசீகமாக நேசிக்கும் ஒருவன் தன் வாழ்நாளில் ஒரு தடவையேனும் மேடை வாய்ப்புக் கிட்டாமலேயே மரித்துப் போகும் வகையில் கதை அமையப் பெற்றிருக்க வேண்டும் என்று இயக்குநர் கே.விஸ்வநாத் முடிவு செய்தாராம். 

அந்தக் கதையின் முடிவிடமாக அமையும் காட்சிக் களத்தில் தான் கற்ற வித்தையின் பிரதிபிம்பமாக அவள் இருக்க வேண்டிய தேவையின் வெளிப்பாடாக அமைந்த ஏக்கம், துடிப்பு இவை எல்லாம் கலந்த ஒரு போராட்டம்  பரத அரங்கேற்றத்தின் வழியாக வெளிப்பட்டிருக்கும் போது அதன் அச்சாணியாக அமையும் பாடல் (வேதம் அணுவிலும்) எப்படியிருக்க வேண்டும் என்று பாட்டுக் கட்டும் நேரம் கே.விஸ்வநாத் அவர்களின் ஆவியே கூடு விட்டுக் கூடு பாய்ந்து இசைஞானியிடம் சென்று சேர்ந்ததோ என்று நினைக்குமளவுக்கு பாடல் கோப்பு, கதை இயக்குநரும், இசை இயக்குநரும் எதிர்பார்க்கும் அந்த உணர்வைப் பார்வையாளனுக்கும் கடத்தினார்கள்.

சங்கராபரணம் படத்தில் ஒரு சாஸ்திரிய இசை மேதையின் குரலாக, எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாட்டுத் திறன் அமைய வேண்டி அவரது உறவினராக இயக்கு நர் கே.விஸ்வ நாத் வேண்டவும் எஸ்பிபிக்கு வந்தது தயக்கம். ஆனால் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனின் உதவி இசையமைப்பாளர் புகழேந்தி அவர்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டதை எஸ்.பி.பி. பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். புகழேந்தி அவர்களின் இறப்புக்குப் பின் பல்லாண்டுகளுக்கு முன்னர் புகழேந்தி அவர்களின் மனைவியை வானொலிப் பேட்டி எடுத்திருந்தேன். அப்போது இந்த அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டதோடு இன்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் அந்த நன்றி உணர்வோடு இருந்ததைச் சொல்லி நெகிழ்ந்தார். அந்தப் பேட்டி நீண்டது. பேட்டி முடிவில் அந்த அம்மையார் அழுது முடித்ததும் நினைவுக்கு வருகிறது.

இவ்விதம் ஒரு படத் தயாரிப்பில் தான் வேண்டுவதை மிகவும் கறாராராகப் பெற்றுக் காட்டிய விதத்தில்  இயக்குநர் கே.விஸ்வநாத் அவர்களின் பெருமை விளங்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கான முதல் தேசிய விருது வரை அந்த அங்கீகாரம் நிலை நாட்டப்பட்டது.

கே.விஸ்வநாத் கொடுத்த சங்கராபரணம் படம் மொழி கடந்து, ஏன் நாடு கடந்து இலங்கை ஈறாகத் திரையிடப்பட்டது. இதற்கு முன் இந்தப் பெருமையான  “செம்மீன்” நிலை நாட்டியது. ஒரு படம் மொழி கடந்து கொண்டாடப்பட்ட பெருமையை விளைவித்தார்.

சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனில் இருந்து இசைஞானி இளையராஜா, வித்யாசாகர், கீரவாணி என்று எல்லா இசை விற்பன்னர்களுக்கும் அவர் படைப்புகள் தீனி போட்டன. 

சலங்கை ஒலியின் மூலம் சாகர சங்கமம் வழி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தன் படத்தின் வழி இன்னொன்றும், இசைஞானி இளையராஜாவுக்குச் சிறந்த இசையமைப்பாளர் என்றும் தேசிய விருது கிட்டியது.

அது போலவே இன்னும் கொண்டாடியிருக்கலாமே என்று இன்னும் ஏங்கும் கலைஞன் வித்யாசாகருக்கும் கே.விஸ்வநாத் இன் “ஸ்வாராபிஷேகம்” தேசிய விருதைக் கொடுத்தது.

சுப சங்கல்பம் படத்தை (தமிழில் பாசவலை) கீரவாணி இசைத்த போது இசைஞானியின் “தகிட ததிமி” பாடலோடு பிணைத்துப் பாடலாக்கினார்.

https://www.youtube.com/watch?v=TeU_AteGRh4

அந்தப் படம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெலுங்கில் தயாரித்து, தமிழில் கமல் மொழி மாற்றியது.

“யாரடி நீ மோகினி”, “உத்தம வில்லன்” போன்ற தமிழ்ப் படங்களிலும் தன் குணச்சித்திரத்தால் மிளிர்ந்தவர் கே.விஸ்வநாத்.

நன்றாக ஆடக் கூட்டிய நடனக் கலைஞன் கமல்ஹாசனையே விஸ்வநாத் அவர்கள் ஆட்டுவித்த நிகழ்வை ராதிகா ஒரு மேடையில் சொல்லியிருக்கிறார்.

“ஸ்வாதி முத்யம் (சிப்பிக்குள் முத்து) படத்தில் 

“துள்ளித் துள்ளி நீ பாடம்மா”

https://www.youtube.com/watch?v=9tLYhiSVLv0

பாடல் காட்சிக்கு கமலோ தன் நடன வித்தையைக் காட்ட, திட்டி விட்டு இந்தப் பாத்திரம் இப்படியா ஆடும் என்று பெண்டு எடுத்து இயல்பாக ஆடப் பழக்கினாராம்.

இப்போது அந்தக் காட்சியைப் பாருங்கள் எவ்வளவு நுட்பமாகப் பதிந்திருக்கும்.

இதையெல்லாம் தாண்டி நான் அசை போடும் ஒரு அழகியல், கே.விஸ்வநாத் இன் மனைவி கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியை “ஸ்வாதி முத்யம்” என்று தான் அழைப்பாராம்.


இனிய 90 வது பிறந்த நாள் வாழ்த்துகள் “தாதா சாகேப் பால்கே” விருது கண்ட மூத்த படைப்பாளி கே.விஸ்வநாத்.


கானா பிரபா


Thursday, February 18, 2021

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குப் பாட்டெழுதிய எழுத்தாளர் ஜெயகாந்தன்
“பார்த்தீங்களாங்கோ.....

செருப்புக் கூடப் புதுசா இருந்தாகக் கடிக்குதுங்கோ...

அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களோங்கோ?

அவள் சிரித்துக் கொண்டு தான் சொன்னாள்.

அவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது விட்டான்”

இரட்டை வாழ்வில் அந்தரிக்கும் மனதின் சஞ்சாரத்தை இருவேறு கோணங்களில் காட்டிய “புதுச் செருப்புக் கடிக்கும்” சிறுகதையின் நிறைவுப் பாகத்தைத் தான் மேலே கொடுத்திருந்தேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களது சிறுகதை இது.

பின்னாளில் ஜெயகாந்தன் தன் குழுவோடு தயாரித்து இயக்கிய “புதுச் செருப்பு கடிக்கும்” படத்தின் மூலக்கதை இதுவாகத்தான் இருக்கும். ஆனால் படம் எடுத்தும் வெளிவராத நிலையில் இதுவும் அந்தரத்தில் நிற்கும் கேள்வியாக.

“புதுச் செருப்பு கடிக்கும்” படத்தை எத்தனை பேர் நினைப்பில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தை இன்னொரு வழியில் அக்காலத்தில் பிரபலப்படுத்திய நிகழ்வு ஒன்று இருந்தது. அது தான் “சித்திரப்பூச்சேலை” என்ற பாட்டு, ஜெயகாந்தன் எழுதியது. இந்தப் பாடல் பச்சையாக, ஆபாசம் தெறிக்கிறது என்ற கூவல்களும் எழுந்தன. ஆனால் இலங்கை வானொலியின் பொற்கால யுகத்தில் விலத்த முடியாத பாடல்களில் ஒன்றாக அமைந்து விட்டது.

“சித்திரப்பூ சேலை......

சிவந்த முகம் சிரிப்பரும்பு

முத்துச்சுடர் மேனி 

எழில் மூடி வரும் முழு நிலவோ

மூடி வரும் முழு நிலவோ......”

https://www.youtube.com/watch?v=sYHe8oXaJfQ

எம்.பி.ஶ்ரீனிவாசன் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய பாட்டு. இந்தப் பாட்டு வெளிவந்து (1978) 43 வருடங்களாகி விட்டது இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிவந்த பாடல்களை நிறுத்துப் பார்த்தால் இங்கே ஆபாசத்தின் அளவுகோல் எங்கே நிற்கின்றது என்பதையும், அது காலத்துக்குக் காலம் வெவ்வேறு அளவுகோல் கொண்டும் கணிக்கப்படுகின்றது என்றும் பார்க்க முடியும்.


எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது குரலை முன்னுறித்தி, இடையிசையிலும் அடக்கி வாசித்து ஒரு அமைதியான நீரோடை போலப் பயணிக்கும். அதீத ஆலாபனைகள் இன்றி ஒரு மனக்கிளர்ச்சியின் வார்த்தை விபரிப்பாகவே பாடும் பாங்கிருக்கும்.

“தென்றலில் நீந்திடும் சோலையிலே 

சிட்டுக்குருவி ஆடுது 

தன் பெட்டைத் துணையைத் தேடுது….”

https://www.youtube.com/watch?v=wplkczKa3Zg

எம்.பி.ஶ்ரீனிவாசனை இலங்கை வானொலி ரசிகர்களுக்கு இரவின் மடியில் காலத்து இலங்கை வானொலி ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய பாட்டு அது. “பாதை தெரியுது பார்” வழியாகத் தமிழுக்கு அடையாளப்பட்ட அந்த இசையமைப்பாளர் P.B.ஶ்ரீனிவாஸ் & எஸ்.ஜானகிக்குக் காலம் மறக்கவொண்ண அற்புதப் பாடலாக அதைக் கொடுத்து விட்டார். 

இந்தப் பாடலைப் பற்றிப் பேசும் போது இன்னொருவரையும் மறக்கக் கூடாது. அவர் இந்தப் பாடலை எழுதிய ஜெயகாந்தனே தான். பாதை தெரியுது பார் படம் மார்க்சிய சிந்தனைகளைத் திரையில் காண்பிக்க வடிகால் தேடிய படம். எனவே ஜெயகாந்தனும் தோழர்களோடு சேர்ந்து தன் பங்களிப்பை இவ்விதம் வழங்கினார்.

“கண்டதைச் சொல்லுகிறேன்

உங்கள் கதையைச் சொல்லுகிறேன்

இதைக் காணவும் கண்டு நாணவும்

உமக்கு காரணம் உண்டென்றால்

அவமானம் எனக்குண்டோ...?

https://www.youtube.com/watch?v=8dpZi5Qcdl4

“சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற தன் படைப்பு திரைக்காவியமாக பிம்சிங் இயக்கத்தில் வெளிவந்த போது பாடல்களை எழுதிய ஜெயகாந்தன், இங்கே கண்டதைச் சொல்லுகிறேன் பாடல் வழியாகக் கதையைக் கோடிட்டுக் காட்டியும் விட்டது அது உங்கள் கதையைச் சொல்லுகிறேன் என்றொரு பீடிகையும் போட்டு விட்டார். மெல்லிசை மன்னர் படங்களின் அசரீரிக் குரலாகப் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்ததொன்று இது.

“வேறு இடம் தேடிப் போவாளோ, இந்த

வேதனையில் இருந்து மீள்வாளோ...?

https://www.youtube.com/watch?v=HXkpklmE9LM

கதையின் நாயகிக்காக எழுத்தாளனின் அனுதாபப் பார்வை கொண்டு எழுதப்பட்ட பாட்டு, ஜெயகாந்தன் வரிகளுக்கு வாணி ஜெயராம் பாடுவார்.

தொடர்ந்து வெளிவந்த “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” என்ற தன் நாவலின் திரை வடித்துக்கான பாடல்களையும் ஜெயகாந்தனே எழுதினார். 

"நடிகை பார்க்கும் நாடகம் இதில் ரசிகர் எல்லாம் பாத்திரம்

முடிவில்லாத துயரிலும் சுப முடிவைக் காணும் இவள் மனம்"

https://www.youtube.com/watch?v=YlFwADCUMuo

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தில் ஜாலி ஏப்ரஹாம் & சசிரேகா பாடிய அற்புதமான பாட்டு.

“புதுச் செருப்பு கடிக்கும்” படத்தைப் போலவே இன்னொரு வெளிவராத படத்துக்கும் ஜெயகாந்தன் பாட்டு எழுதியிருக்கின்றார். 

அது, இசைஞானி இளையராஜா இசையமைத்த “எத்தனை கோணம் எத்தனை பார்வை”. ஜெயகாந்தனின் நாவல்களைத் (சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்) தன் தந்தை பீம்சிங் இயக்கியது போலவே இங்கே பாடலாசிரியராக பீம்சிங் மகன் லெனின் இயக்கிய படம் அது.

ஒளவையார், தியாகராஜ சுவாமிகள், மகாகவி சுப்ரமணிய பாரதியார், ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் (அலைபாயுதே கண்ணா), இவர்களோடு ஜெயகாந்தனும் அப்படத்தில் பாட்டெழுதினார். ஒன்றல்ல இரண்டு, இரண்டுமே மலேசியா வாசுதேவன் பாடியவை, “புகழ் சேர்க்கும்” மற்றும் “எத்தனை கோணம் எத்தனை பார்வை” ஆகிய பாட்டுகள் தான் அவை.

ஜெயகாந்தனைத் தன் வழிகாட்டிகளில் ஒருவராகக் கொண்ட இளையராஜாவுக்கும் இவ்விதம் ஒரு வாய்ப்புக் கிட்டியது.

"நல்லதென்பதும் தீயதென்பதும்

 நாமணிந்திடும் வேடமே....- இதில்

வெல்வதென்னடி தோல்வியென்னடி

மேடையில் ஓர் விளையாடலில்" - ஜெயகாந்தன்

கானா பிரபா

Wednesday, February 17, 2021

பாடகர் எஸ்.என்.சுரேந்தர் ❤️ தனிமையிலே ஒரு ராகமாய்


குரல் வளம் கொண்ட ஒரு கலைஞர் பாடகராகவோ, இன்னொரு நடிகருக்கான குரல் வங்கியாகவோ அன்றில் வானொலிப் படைப்பாளியாகவோ மிளிர முடியும். இதில் ஒருவரே பாடகராகவும், நடிகரின் குரல் அடையாளமாகவும் மிளிர்வதென்பது அசாத்தியமானதொரு செயற்பாடு. உச்சம் பெற்ற பாடகர்கள் குரல் கொடுக்கும் போது அவர்களாகவே அடையாளப்படுவார்கள். ஆனால் இதற்கெல்லாம் ஒரு விதிவிலக்குத் தமிழ் திரையுலகில் இருக்குமென்றால் அது ஒருவரை நோக்கிக் கை காட்டி விடும். 
அவர் தான் எஸ்.என்.சுரேந்தர்.

“மெளன ராகம்” படத்தை 35 வருடங்கள் கழித்தும் இன்னும் நேசிக்கும் போது அந்தக் கணவன் பாத்திரம் மீதான அனுதாப உணர்வு மேலெழும்புவதற்கு முதற் காரணம் தன்னை விட்டு விலகி நிற்கும் மனைவியைச் சகித்துக் கொண்டே தணிந்த குரலில் பேசும் அந்தப் பாத்திரப் படைப்பு. இதை எழுதும் போதே மனதில் அந்த மோகன் குரல் ஒலிப்பது போல இருக்கும்.
தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் விஜயகாந்த், பிரதாப் போன்றோரின் ஆரம்ப காலப் படங்கள் தொட்டு, பின்னர் மோகனின் மெல்லத் திறந்தது உள்ளிட்டவை வரை சுரேந்தர் என்ற குரல் கலைஞர் “அடையாளமாகி இருந்தார். அந்த வெற்றிகளுக்கெல்லாம் மறை பொருள் காரணியாக இருந்தார்.  
நடிகர்களுக்குப் பின்னணிக் குரலை அச்சொட்டாகக் கொடுப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது அந்தத் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமன்றி, சாதாரண ரசிகர் நமக்கும் பல சந்தர்ப்பங்களில் உய்த்துணர முடிந்திருக்கின்றது பொருந்தாக் குரல்கள் மொழி மாற்றுப் படங்கள் போல.

ஆனால் எத்தனை எத்தனை நூறு நாட் படங்கள், சுரேந்தர் குரல் பின்னணிக்கு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் பாட்டுக்கு என்று ஒரே நடிகருக்கு அபூர்வமான குரல் சேர்க்கைகள். இரண்டுமே வெவ்வேறு பரிமாணம் கொண்டவை.

மங்கை நீ மாங்கனி...
மடல் விடும்...
மல்லிகை வாழ்த்திடும்...
மழைத்துளி...
சிந்திடும் புன்னகை...
சிந்தாமணி...
நடக்கும் தோட்டம் நீ...
நானொரு தேனீ...

இந்தப் பாடலை இன்னும் ஒரு சொட்டுப் பாடக் கூடாதா என்ற ஆவலைக் கிளப்பிவிடும் அந்த கஸல் வடிவமான தமிழ்.
பாடகராக எஸ்.என்.சுரேந்தரை நினைத்தாலேயே தொண்ணூறுகளில் பாட்டுகளோடு வாழ்க்கைப்பட்டவர்களுக்கு இதுதான் நினைப்புக்கு வரும். ஆனால் நம் அண்ணன்களைக் கேட்டுப் பாருங்கள்.
“தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம்”
என்று முணுமுணுப்பார்கள் அந்த ரேடியோ சிலோன் காலத்தைச் சிலாகித்துக் கொண்டு.
அந்தக் காலத்தில் விதி படத்தின் கதை,வசன ஒலிநாடா ஒலிக்காத தேநீர்க்கடைகளே இல்லை எனலாம். அங்கே மன்மதக் குஞ்சு மோகனின் பசப்பு வார்த்தைகளுக்குப் பின்னால் ஒட்டியிருக்கும் சுரேந்தர் குரலை ரசித்தவாறே கடப்போம்.

சுரேந்தரின் குரலில் இருக்கும் அதிராத நாதம், அந்தக் காலத்துப் பாடகர்களை நினைப்பூட்டி விடும். அதனால் தானோ என்னமோ 
“பாரிஜாதப் பூவே 
அந்த தேவலோகத் தேனே
வசந்த காலம் தேடி வந்தது ஓஓஓ
மதன ராகம் பாட வந்திடு”
என்று இசைஞானியும் நாற்பதுகளின் குரலைத் தொண்ணூறுகளில் கொணர்ந்திருப்பார் எஸ்.என்.சுரேந்தர் வழி. இந்த மாதிரியான உத்திகளுக்குத் தோதாய் வாய்த்தவர்கள் மலேசியா வாசுதேவன், தீபன் சக்ரவர்த்தியோடு சுரேந்தரும் தான் என்று நீங்கா இடம் பிடித்து வைத்திருக்கின்றார்.
நடிகர் விஜய்யின் தாய்மாமன், ஆரம்ப கால விஜய் படங்களில் விஜய்க்கான குரலாகத் தன் இரண்டாவது தலைமுறை இணைப்பை வைத்திருக்கிறார். “சின்னப் பையன் சின்னப் பொண்ணைக் காதலிச்சா பாட்டு வரும்” (தேவா), “பூவே பூவே பெண் பூவே (ஒன்ஸ்மோர்) எல்லாம் தொண்ணூறுகளைத் தாண்டி நிலைத்திருக்கின்றன. விஜய் பாடகராக அறியப்பட்ட பின்னரும் இவர் குரலிலும் மெலிதான வேறுபாடு தான்,

எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களில் தன்னுடைய மைத்துனர் சுரேந்தருக்கும் ஒரு பாடலை, அதுவும் அதிகப்படியான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் - கணேஷ் இசையில் பெற்றிருக்கின்றார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முதல் படமான அவள் ஒரு பச்சைக் குழந்தை படத்தில் தன் சகோதரி ஷோபாவோடு “மாலை இளம் மனதில்” பாடலை இசைஞானி இளையராஜா இசையில் பாடியிருக்கிறார். “நான் உள்ளதைச் சொல்லட்டுமா?” வசந்த ராகம் பாட்டுகள் அந்தக் காலத்து ரெக்கார்டிங் பார் ஸ்பீக்கர்களின் சோக ராகம்.
விஜயகாந்தின் ஆரம்ப காலப் படங்களில் முன்னர் குறிப்பிட்ட தனிமையிலே ஒரு ராகம் (சட்டம் ஒரு இருட்டறை) பாடலைப் போன்றே இன்னொரு பிரபலப்பாட்டு
“ நீலகிரிப் பூவே” 
கங்கை அமரன் இசையில் குடும்பம் படத்தில் வந்த கலக்கலான பாட்டு அது.

மனோஜ் கியான் இரட்டையர்கள் மிரட்டிய ஊமை விழிகள் படத்தில் முத்தான மூன்று பாட்டுகள். அதில் “மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா” பட்டி தொட்டியெல்லாம் கலக்கிக் கொண்டிருந்தது. இப்போதும் ஊர்ப் பக்கம் போனால் எங்கோ ஒரு மூலையில் ஒலிக்கும்.
கங்கை அமரன் இசையில் அடிக்கடி சிலாகிக்கும் பாட்டு “சங்கீதம் கேளு” (ஜீவா) அங்கே மலேசியா அண்ணர் பாட இடையில் வந்து தன் அடையாளத்தை நிறுவுவார்.
“தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது நம்பி” போன்ற பிரபல பாடகர் கூட்டுப் பாடல்களில் சுரேந்தருக்கும் ஒரு இடம் இருக்குமாறு இசைஞானி பார்த்துக் கொள்வார்.
எஸ்.என்.சுரேந்தர், எண்பதுகளில் இருந்து நாம் கூட நேசிக்கும் குரலாளருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
கானா பிரபா