Pages

Monday, May 12, 2014

இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடகி P.பானுமதியின் தாலாட்டு


அன்னையர் தினத்தை முன்னிட்டு இந்த வார இறுதியில் கோரஸ் புதிர்களை வழங்க எண்ணி இசைஞானி இளையராஜாவின் ஒவ்வொரு பாடல்களாகத் தேடிக் கேட்டபோது தான் "மணி ஊஞ்சல் மீது விளையாடும் மானே" எதேச்சையாகக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. 

http://soundcloud.com/kanapraba/mani-oonjal-periyamma/s-sbuyI


இந்தப் பாடல் "பெரியம்மா" என்ற திரைப்படத்துக்காக கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்டு இசைஞானி இளையராஜா இசையமைப்பில்  1992 ஆம் ஆண்டு வெளிவந்தது. பலருக்கு இப்படி ஒரு படம் வந்திருப்பதே தெரிந்திருக்காது. என்னளவில் இந்தப் படத்தில் மனோ, சித்ரா பாடிய "பூவே வருக" பாடலைத் தான் அடிக்கடி கேட்டிருப்பேன். (இதுவரை கேட்காதோர் அந்தப் பாடலைத் தேடிப் பிடித்துக் கேட்கவும்)

"மணி ஊஞ்சல் மீது விளையாடும் மானே" பாடலைக் கேட்டுப் பாருங்கள் அருமையான தாலாட்டுப் பாடலாக அமைந்திருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்கும் போது பி.பானுமதி நடித்த அன்னை படத்தில் அவரே பாடிய "பூவாகிக் காயாகிக் கனிந்த மனம் ஒன்று" என்ற பாடல் நினைவில் எழக் காரணம் இவரின் சுபாவமே துடுக்கான பெண்மணியாக அறியப்படுபவர். குறிப்பாக கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே பாடலில் அந்த பானுமதியின் கம்பீரக்குரலைக் கேட்கலாம். அதிலிருந்து மாறுபட்ட, சோகம் இழையோடுமாற்போல அடக்கமான குரலின் வெளிப்பாடாக இந்த "பூவாகிக் காயாகி" பாடல் இருக்கும்.  அன்னை படம் அருமையான கதையோட்டம் கொண்ட படமும் கூட. அந்தப் பாடல் போன்றே பெரியம்மா படப் பாடலான "மணி ஊஞ்சல் மீது" பாடலை அதே உணர்வோட்டத்தில் ரசிக்கமுடிகின்றது.

அந்தக் காலத்துப் பெரும் நடிகர்களுக்கு நிகராக இவர் மிடுக்காக நடித்தும், பாடிய பாடல்களில் அந்தத் தொனி இருக்கும் அதே வேளை மென்மையான பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர். ஒரு நடிகையாக மட்டுமன்றி தயாரிப்பாளராக, பாடகியாக, இசையமைப்பாளராக, இயக்குனராகப் பன்முகம் கொண்ட பானுமதி அந்தந்தத் துறைகளில் தன்னை நிரூபித்தும் காட்டினார்.

"வாடா மல்லியே நான் சூடா முல்லையே" என்ற பானுமதி பாடிய பாடல் தான் இளையராஜா இசையில் இவர் பாடிய முதல் பாடல் என்பது என் நினைவுக்கெட்டியவரை இருக்கின்றது. http://m.soundcloud.com/kanapraba/vaada-malliye-kannukku-mai-ezhuthu-1/s-6qpJf

இந்தப் பாடல் "கண்ணுக்கு மை எழுது" என்ற திரைப்படத்துக்காக இசையமைக்கப்பட்டது. கண்ணுக்கு மை எழுது திரைப்படம் "தாய், மகள்,பேத்தி" உறவை மையப்படுத்தி இயக்குனர் மகேந்திரனால் எடுக்கப்பட்டபோது அந்தப் படத்தில் பானுமதி நடித்ததோடு இந்தப் பாடலையும் பாடினார். இந்தப் பாடலும் முன்னர் குறிப்பிட்ட "மணி ஊஞ்சல் மீது" பாடலைப் போன்றே ஒரு இனிமையான தாலாட்டுப் பாடலாக அமைந்திருக்கிறது.
1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் "அன்பு மலர்களின் சோலை இது", "வண்ணப்பூவே நீ நானாகவும்" போன்ற அருமையான மெல்லிசைப் பாடல்கள் உண்டு. இயக்குனர் மகேந்திரன் தோல்வி முகத்தில் இருந்த காலகட்டத்தில் வந்தது என்பதால் எடுபடாமல் போயிற்று. இந்தப் படத்தின் பாடல்கள் குறித்த சுவாரஸ்யமான குறிப்பு என்னவென்றால் "பூவே நீ நானாகவும்" பாடலை கங்கை அமரன் எழுத, "வாடா மல்லியே உள்ளிட்ட அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பார் அதிமுகவின் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த கா.காளிமுத்து அவர்கள். இசைத்தட்டிலும் மாண்புமிகு கா.காளிமுத்து என்றே சிறப்பிக்கப்பட்டிருப்பார். ஆகவே தமிழ்த்திரையிசை வரலாற்றில் ஒரு பாடலாசிரியர் பெயருக்கு முன்னால் "மாண்புமிகு" என்ற அடைமொழியோடு வந்த பெருமை இப்பாடல்களுக்கு உண்டு. கலைஞர் கருணாநிதி அதே அடைமொழியோடே படத்திலும் இடம்பெற்றிருப்பார். கா.காளிமுத்து அவர்கள் தமிழில் முது நிலைப் பட்டதாரி என்பதும் ஏற்கனவே அறியப்பட்ட கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பி.பானுமதியின் மிடுக்கான குணாம்சத்துக்குப் பொருத்தமாக அமைந்தது இளையராஜா இசையில் "செம்பருத்திப் பூவு" என்ற குழுப்பாடலில் இவர் பாடிய பகுதி.  http://www.youtube.com/watch?v=MkmOkJOG9lI&sns=em

ஒரேயொரு வரி மட்டும் தான் பானுமதியின் பங்களிப்பு அதிலும் அவரின் தனித்துவம் இருக்கும். ஆனால் பல இசைத்தட்டில் மனோ, சித்ரா, குழுவினரின் பெயர் மட்டுமே இந்தப் பாடல் பாடியோராகச் சொல்லப்பட்டிருக்கும். 

அண்மையில் இளையராஜாவைப் பேட்டி எடுத்த நிகழ்வில் அருண்மொழி அவர்கள் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. அதுவரை ராஜாவின் இசை குறித்துப் பேசாதிருந்த பானுமதி அவர்கள் "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ" பாடலைக் கேட்ட பின்னர் ராஜாவின் இசையைச் சிலாகித்துப் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்த்திரையிசை வரலாற்றில் பி.பானுமதி அவர்களின் சாகித்தியம் குறிப்பிடத்தக்கதொன்று. அவரோடு இசைஞானி இளையராஜா இணைந்து கொடுத்த பாடல்கள் அதிகம் அறியப்படாவிட்டாலும் இருவருக்கும் ஆத்ம திருப்தியைக் கொடுத்திருக்கும். 

"வாடா மல்லியே நான் சூடா முல்லையே"

http://m.soundcloud.com/kanapraba/vaada-malliye-kannukku-mai-ezhuthu-1/s-6qpJf

"மணி ஊஞ்சல் மீது விளையாடும் மானே"

http://soundcloud.com/kanapraba/mani-oonjal-periyamma/s-sbuyI


இந்தப் பாடல்களை நான் அடிக்கடி கேட்காவிட்டாலும் கேட்கும் போதெல்லாம் தாயின் அரவணைப்பை உணர்கின்றேன்.