Pages

Monday, February 28, 2011

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷுடன் என் வானொலிப் பேட்டி




நான் வானொலி நிகழ்ச்சி படைக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் "முத்துமணி மாலை" என்னும் நிகழ்ச்சியை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்தேன். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகிர்வாக பல்வேறு ஆளுமைகளை வானொலி நேர்காணல் மூலம் அவர்களின் ஆரம்ப கால அனுபவங்களின் தொகுப்பாகக் கொடுக்க எண்ணியிருந்தேன். அந்த வகையில் வந்த வாய்ப்புத் தான் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுடனான பேட்டி. இந்தப் பேட்டியைச் சாத்தியப்படுத்த உதவியிருந்தவர் எனக்கும் டெல்லி கணேஷுக்கும் பொதுவான நண்பராக ரேகா ராகவன் அவர்கள். எனவே இந்த வேளை அவருக்கும் என் நன்றியைப் பகிர்கின்றேன். நண்பர் ரேகா ராகவன் சொன்னது போல எந்தவிதமான சிரமமும் இல்லாமல் பேட்டி செய்ய மகிழ்வோடு ஒப்புக்கொண்டார் டெல்லி கணேஷ்.

ஒரு நாள் காலை ஏழு மணி வாக்கில் வாக்கிங் போய் விட்டுத் திரும்பிய சூட்டோடு டெல்லி கணேஷின் பேட்டியும் ஆரம்பிக்கின்றது. எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் உடனேயே எதிர்ப்படும் கேள்விகளுக்குத் தன் ஞாபக இடுக்குகளில் இருந்து மழையாய்ப் பொழிந்தார் டெல்லி கணேஷ்.

கே.பாலசந்தரின் "பட்டினப் பிரவேசம்" திரைப்படத்தில் ஆரம்பித்து இந்த ஆண்டோடு 34 ஆண்டுகளைத் தொடும் டெல்லி கணேஷின் திரையுலக வாழ்வைக் குறிக்கும் இந்தப் பேட்டியும் 34 நிமிடங்களை நிறைக்கின்றது. நிறைவாக ரேகா ராகவன் அவர்கள் முன்னர் டெல்லி கணேஷ் ஹியூமர் கிளப்பில் பகிர்ந்த நகைச்சுவையோடு நிறைவு பெறுகின்றது.

பேட்டியைக் கேட்க




Download பண்ணிக் கேட்க



பேட்டியில் அவர் சொன்ன சுவாரஸ்யங்களில் சில

டெல்லியில் இந்திய விமானப்படையில் வேலை பார்த்தபோது தமிழ் நாடகங்களில் நடிக்க வாய்ப்புக் கிட்டியதாகவும் அதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து தமிழகம் வந்து முழு நேர நாடக நடிகன் ஆனதும், பாலசந்தர் பட்டினப் பிரவேசம் திரைப்படத்தில் அறிமுகமானது.

பசி திரைப்படத்தில் சிறந்த நடிகராக 1980 ஆம் ஆண்டு கிட்டிய போது பரிசு நிகழ்வில் எம்.ஜி.ஆருடன் நிகழ்ந்த சந்திப்பு

சிந்துபைரவி படத்தில் குருமூர்த்தி என்ற மிருதங்க வித்துவான், அபூர்வ சகோதர்கள் படத்தில் வில்லன், அவ்வை சண்முகியில் நகைச்சுவை கலந்த வில்லத்தனப் பார்த்திரங்கள் கிட்டிய அனுபவங்கள்

டெல்லி கணேஷ் பார்வையில் பாலச்சந்தரின் ஆளுமை, தற்காலச் சினிமாவின் போக்கு என்று தொடர்கின்றது டெல்லி கணேஷின் பேட்டி. பேட்டி முடிவில் தன் 34 வருஷ அனுபவங்களைக் கொட்டித் தீர்த்த திருப்தியை அவரின் குரலில் தொனிக்கக் கண்டேன்.

Tuesday, February 22, 2011

மலேசியா வாசுதேவன் - நீங்காத எண்ணங்கள் ஒன்றல்ல


மலேசியா வாசுதேவன் என்ற பாட்டுக்குயிலின் நினைவுகள் சாகும் வரை தொடரும் பந்தம் போல அவ்வளவு சீக்கிரம் மனதில் இருந்து அகற்ற முடியாது போல. சில மாதங்களுக்கு முன்னர் மலேசியா வாசுதேவனின் தாய் மண்ணில் நடந்த பாராட்டு விழாவின் வீடியோவை எங்கே தொலைத்து விட்டுத் தேடிக் களைத்த நிலையில் இன்று ஒரு கடைக்குப் போய், கடை பூட்டும் அந்த அவசரத்திலும் கடைக்காரரை இம்சித்து வாங்கி வந்த டிவிடியைப் போட்டுப் பார்த்தேன். எஸ்.பி.பாலசுப்ரமணியமும், கங்கை அமரனும் இணைந்து கெளரவித்த இந்த விழா நிகழ்வைப் பார்க்கும் போதே தானாகவே கண்கள் தானாகப் பூக்கின்றன. நிகழ்வின் சில துளிகளாக டிவிடியில் இருந்து ஒலியாகப் பகிர்கின்றேன்.






மலேசியா வாசுதேவனைச் சந்தித்த நினைவுகளைப் பகிரும் கங்கை அமரன்



எஸ்.பி.பாலசுப்ரமணியம் மலேசியா வாசுதேவன் குறித்து வழங்கும் சிலாகிப்பு






T.M செளந்தரராஜன், P.சுசீலா, எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.ஜானகி சித்ரா, சுஜாதா, மனோ, பாரதிராஜா, சத்யராஜ், பிரபு, யுகேந்திரன் வழங்கும் பகிர்வுகள்.
குறிப்பாக எஸ்.ஜானகி அந்த நாள் நினைவுகளைப் பேசும் போது கட்டுப்படுத்த முடியாமல் அழுகை மீறப் பேசும் கணங்கள்..








மலேசியா வாசுதேவனுக்குக் கெளரவம் கொடுத்த விழாவை நடாத்திய கங்கை அமரன் முன்னர் இசையமைத்த சட்டம் திரைப்படத்தில் மலேசியா வாசுதேவனும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடும்
"நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றும் தொடர்வது!"

Sunday, February 20, 2011

மலேசியா வாசுதேவன் - "பூங்காற்று இனித் திரும்பாது"

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துக் கொண்டிருந்த பின்னணிப்பாடகர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் மலேசியா வாசுதேவன் இன்று தனது 67 வயதில் தனது இதயத்துக்கு நிரந்தர ஓய்வு கொடுத்திருக்கின்றார். இவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட சேதி பல மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தாலும் மீண்டும் மிடுக்கோடு சங்கீத மகா யுத்தம் போன்ற இசை நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது மலேசியா வாசுதேவன் என்னும் கலைஞனை நாம் அவ்வளவு சீக்கிரம் இழக்க மாட்டோம் என்று நினைத்துக் கொண்டேன். அந்த நினைப்பை இன்று பொய்யாக்கிவிட்டார். மலேசியா வாசுதேவனைப் பொறுத்தவரை அவர் தமிழ்த்திரையுலகுக்கே தன்னைத் தாரை வார்த்துக் கொண்ட பாடகர். எண்பதுகளிலே சிவாஜி கணேசனுக்கும், ரஜினிகாந்த்திற்கும் பொருந்திப் போனது அவர் குரல். என்னம்மா கண்ணு போன்ற நையாண்டிப் பாடல்கள் ஆகட்டும் , அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா, அடி ஆடு பூங்கொடியே போன்ற மென்மையான உணர்வு சொட்டும் பாடல்களாகட்டும் மலேசியா வாசுதேவன் தனித்துவமானவர். குறிப்பாக முதல் மரியாதை என்ற காவியத்திற்கு மலேசியா வாசுதேவனின் குரலின் பரிமாணம் அப்படத்தின் பாடல்களில் வெளிப்பட்டு படத்தின் உணர்வோட்டத்திற்கு உயிரூட்டியதொன்று. அந்தப் படத்திலேயே அவருக்குத் தேசியவிருது கிட்டியிருக்க வேண்டியது வேறெந்தப்படத்துக்கும் கூடக் கிடைக்காதது பெரும் துரதிஷ்டம்.
இந்தக் கலைஞனுக்கு அஞ்சலி பகிரும் விதமாக முன்னர் நான் பகிர்ந்து கொண்ட இடுகைகளில் இருந்து சில பகிர்வுகள், இந்தப் பாடல்களைப் பதிவுக்காக மீளக் கேட்கும் போது இன்னும் இன்னும் இவர் இழப்பின் சோகம் பற்றிக்கொள்கிறது :(

நண்டு படத்தில் மலேசியா வாசுதேவனின் "அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா" என்னும் அற்புதக் குரல்



மலேசியா வாசுதேவன் என்னும் பன்முகக்கலைஞன்

80களில் ரஜனி - கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் நடிப்புலகில் இருந்தது போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் - மலேசியா தேவன் குரல்களும் தனித்துவமாக முன்னணியில் இருந்த குரல்கள். கே.ஜே.ஜேசுதாஸ் தன் பாணியில் தனி ஆவர்த்தனம் கொடுத்துக் கொண்டிருக்க எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் ஆகிய இருவரும் வித்தியாசமான பாடல்களைக் கலந்து கட்டித் தந்து கொண்டிருந்தார்கள்.

ஒரு காலகட்டத்தில் T.M.செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது.

அத்தோடு சூப்பர் ஸ்டாராக அப்போது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு மலேசியா வாசுதேவன் குரல் தான் தொடர்ந்து பல்லாண்டு காலம் பாடல் கை கொடுத்தது.

நடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார். அதில் முத்தாய்ப்பாக இருப்பது முதல் வசந்தம் படத்தில் கவுண்டராக சத்தியராஜோடு மோதிய படம். அந்தப் படத்தில் சத்தியராஜாவுக்கு மனோ குரல் கொடுக்க, காட்சியில் நடித்ததோடு குரல் கொடுத்திருக்கும் மலேசியா வாசுதேவன் பாடும் அந்தப் பாடற்காட்சி "சும்மா தொடவும் மாட்டேன்"



சாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம்.

1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குனராகவும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க "நீ சிரித்தால் தீபாவளி" படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சிட்னிக்கு இசை நிகழ்ச்சிக்காக வந்தபோது "நீ சிரித்தால் தீபாவளி" படத்தை ஞாபகப்படுத்திப் பேசினேன். "அந்தப் படத்தோட டிவிடி கிடைச்சா கொடுங்களேன்" என்றரே பார்க்கலாம். படம் இயக்கியவர் கையிலேயே அந்தப் படம் இல்லைப் போலும் ;)

நீ சிரித்தால் தீபாவளி படத்தில் இருந்து "சிந்து மணி புன்னகையில்" பாடலை வயலின் போன்ற வாத்தியக் கூட்டணியில் சோக மெட்டில் பாடுகின்றார் கே.ஜே.ஜேசுதாஸ்.



நீ சிரித்தால் தீபாவளி படத்தில் இடம்பெற்ற முன்னர் கேட்ட அதே பாடலை ஜோடிப்பாடலாக சந்தோஷ மெட்டில் தருகின்றார்கள் மலேசியா வாசுதேவன், சித்ரா கூட்டணி. இந்த சந்தோஷ மெட்டு அதிகம் கேட்டிராத பாடலாக இருந்தாலும் பாடலுக்கு இசைஞானி இளையராஜா கொடுத்திருக்கும் மென்மையான மெட்டு இதமான தென்றலாக இருக்கின்றது.



சாமந்திப் பூ படம் மலேசியா வாசுதேவன் இசையமைத்த படங்களில் ஒன்று. சிவகுமார், ஷோபா நடித்த இந்தப் படம் வருவதற்கு முன்னரே நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்ட துரதிஷ்டம் இப்படத்தோடு ஒட்டிக் கொண்டது. படத்தின் இறுதிக்காட்சியில் ஷோபாவின் நிஜ மரண ஊர்வலத்தையும் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்கள்

முதலில் "ஆகாயம் பூமி" என்ற பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் மலேசியா வாசுதேவன்.



சாமந்திப் பூ படத்தில் இருந்து இன்னொரு தெரிவாக வரும் இனிமையான ஜோடிக்கானம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் கலக்கிய பாடல். "மாலை வேளை ரதிமாறன் வேலை" என்ற இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா இணைந்து பாடுகின்றார்கள்.



மலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் "ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே" பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார்.



அதே போல திறமை என்ற படத்தில் உமாரமணனோடு பாடிய "இந்த அழகு தீபம்" பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார். இதோ அந்தப் பாடல்



நிறைவாக வருவது, என் விருப்பப் பாடல் பட்டியலில் இருந்து இன்றுவரை விடுபடாத பாடலான என் ஜீவன் பாடுது படத்தில் வரும் "கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச" பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடுகின்றார் எஸ்.ஜானகி. இந்தப் பாடலும் பெரிய அளவில் பிரபலமாகாத ஆனால் மலேசியா வாசுதேவனுக்கே தனித்துவமான முத்திரைப்பாடலாக அமைந்து விட்டது




நிறம் மாறாத பூக்கள் பின்னணி இசைத்தொகுப்பில் மலேசியா வாசுதேவனின் பாடல்கள்

ராதிகா, விஜயனின் கதையைக் கேட்டு உரையாடல்,"ஆயிரம் மலர்களே" பாடலோடு விஜயன் தன் காதல் நினைவுகளுக்கு மீண்டும் தாவல்.


ராதிகா - விஜயன் இருவரும் ஒரே நிலையில் இருப்பதாக காட்டும் காட்சி சைலஜா "ஆயிரம் மலர்களே" பாடலைப் பாடுவதோடு மலேசியா வாசுதேவனும் கலக்கிறார்.


முதல் மரியாதை பின்னணி இசைத்தொகுப்பில் மலேசியா வாசுதேவன் குரல்கள்


பெரியமாப்பிளை குருவியைப் பார்த்து "ஏ குருவி" பாட மருமகப்புள்ளை எசப்பாட்டு பாட, பரிசல்காரி பாடும் எதிர்ப்பாட்டு



"ஏறாத மலை மேலே எலந்தை பழுத்திருக்கு" பாடலை பெரிய மாப்பிளை பாட, எதிர்ப்பாட்டு பாடும் பரிசல்காரி




மனைவியின் கோப தாண்டவத்தில் மனம் வெதும்பி பெரிய மாப்பிளை பாடும் "பூங்காத்து திரும்புமா" கூடவே "ராசாவே வருத்தமா" என்று தொடரும் பரிசல்காரி பின்னணி இசை ஆரம்பத்தில் வர ஒலிக்கின்றது



ஒட்டுப்போட்ட சினிமாப்பாட்டுக்கள் தொகுப்பில் இருந்து

சுவரில்லாத சித்திரங்கள்" திரையில் வரும் பாடல். கங்கை அமரன் இசையமைத்து அவருக்கு வாழ் நாள் முழுவதும் பெருமை தேடித்தரும் பாடல்களில் "காதல் வைபோகமே" பாடல் தனித்துவமானது. மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் பாடலிது. ஒரு தலைக்காதல் கொண்ட பாக்யராஜின் காதல் கனவும், மனமொத்த சுதாகர், சுமதி ஜோடியின் கனவுலகப்பாடலாகவும் அமையும் இந்தப் பாடலை இசைத்தட்டில் கேட்டால் திடீரென்று காதல் வைபோகமே என்று ஆரம்பித்து திடுதிப்பில் முடிவதாக இருக்கும். ஆனால் படத்தில் காட்சியமைப்புக்கு ஏற்றவாறு இதனை எடுத்தபோது மலேசியாவாசுதேவன் "காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் என்று முதல் அடிகளை மெதுவாகப் பாடி முடித்து நிதானிக்க பஸ் கிளம்பும் ஓசையுடன் பாடல் ஆரம்பிக்கும். கூடவே இரண்டாவது சரணத்தில் இடைச்செருகலாக மேலதிக இசையும் போடப்பட்டிருக்கும். கேட்டுப் பாருங்கள் புரியும்.



என்றோ கேட்ட இதமான ராகங்கள் தொகுப்பில்


"அடுத்தாத்து ஆல்பட்" பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது. ஆனால் "இதயமே.... நாளும் நாளும் காதல் பேச வா...." இந்தப் பாடலை மறக்க மாட்டார்கள். எண்பதுகளில் மலேசியா வாசுதேவனின் தனித்துவமான குரல் மிளிர்ந்த காலகட்டத்தில் அவரோடு இணைந்து எஸ்.ஜானகி பாடிய பாடல். இப்பாடலின் ஆரம்ப சங்கதியே மலை மேட்டொன்றின் மீது மெல்ல உச்சி நோக்கி ஓடுவது போல இருக்கும். அந்த ஆரம்ப வரிகளும் அப்படியே மூச்சுவிடாமல் பதியப்பட்டிருக்கும்.

வானம்பாடி போல நாங்கள் கானம் பாடி ஓடினோம்
வாசம் வீசும் பூவைப்போல வாசம் வீசி பாடினோம்

இப்படி காதலன் பாட பின்னணியில் கொங்கோ வாத்தியம் இதமாகத் தாளம் தட்டும் அதற்கு

ஜாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்
சாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்

இப்படி காதலி பாடுவாள் அந்த சரணம் முடியும் போது இன்னொரு புது மெட்டில்

அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா

எனப் பயணிக்கும் வகையில் புதுமையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் முழுவதும் மெட்டுக்கள் மாயாஜாலம் காட்டும். பின்னணி இசை கூட காதலின் இலக்குத் தேடி ஓடும் பயணமாக வெகு வேகமாக வாத்திய ஆலாபனை இசைஞானி இளையராஜாவின் முத்திரை பதிவு செய்யப்பட்டிருக்கும்.


Friday, February 18, 2011

"மெளனமேன் மெளனமே வசந்த காலமா" - நட்பொன்றைக் காட்டிய பாட்டு


ஒரு பெரும் மழை அடிப்பதற்குக் கட்டியம் கூறுமாற்போல ஒரு நீர்க்குட்டை ஒன்றில் மெல்ல மெல்ல வந்து விழுமாற்போல அந்தப் பியானோ இசை ஆரம்பிக்கிறது. அதைப் பெருப்பித்து ஊதி ஊருக்கே பறைசாற்றுமாற்போலக் கூட வரும் வயலின் கூட்டணி மேலே இழுத்துச் செல்கிறது அந்த ஆர்ப்பரிப்பைக் கொஞ்சம் அடக்கி மெல்ல அரவணைக்கும் புல்லாங்குழல் மனோவிடம் கொடுக்க
"மெளனம் ஏன் மெளனமே வசந்த காலமா..... நினைவிலே வளர்ந்தது பருவராகமா...
தனிமையில் நீ இனிமையை அழைத்து வா...... மனதில் ஆட வா"
என்று நிதானிக்க ஒரு ட்ரம்ஸ் இசைக்கீற்று இதயத்தின் படபடப்பாய் ஒலிக்க
மீண்டும்
"மெளனம் ஏன் மெளனமே வசந்த காலமே....மெளனம் ஏன் மெளனமே" என்று தொடருகிறார்.

ஐந்து வருஷங்களுக்கு முன் ஒரு இரவுப்பொழுதில் தனியனாக இருந்து இந்தப் பாட்டை ஒலிக்க விட்டு மீண்டும் பாட்டுக்குள் புகுந்த கணம் ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது.
"ஆகா, எனக்கு மிகவும் பிடித்த பாட்டாச்சே, என் ஜீவன் பாடுது படத்தில் அல்லவா" மறுமுனையில் ஒலித்த ஆண் குரல் காட்டிய உற்சாகத்திலேயே உணர்ந்து கொண்டேன் அவர் என்னைப் போலவே இந்தப் பாட்டை வெறியோடு கேட்கும் ரசிகர் என்று. தொடந்து பாடல் தன் பாட்டுக்குச் சோக ராகம் பிரிக்க, தொலைபேசியில் தனிப்பட்ட உரையாடலை என்னோடு நிகழ்த்தும் அந்த அன்பரோ இசைஞானி இளையராஜாவைச் சிலாகித்துப் பேச ஆரம்பிக்கிறார். அவரின் தொலைபேசி இலக்கம் வாங்கி வைத்து நாளை அழைக்கின்றேன் என்று சொல்லி விட்டு மீண்டும் பாட்டுப் பயணத்தில் கலக்கின்றேன். மெளனமே மெளனமே பாட்டுப் போட்ட நாள் முதல் ஐந்து வருஷங்களாக இங்கே என்னோடு இசைஞானியின் பாட்டுக்களைக் கேட்டுச் சிலாகிப்பதும், நீண்ட தூரக் கார்ப்பயணங்களைத் தானாக ஏற்படுத்தி இப்படியான சங்கதிகளுக்காக நாம் இருவரும் பயணிப்பததும் ஐந்து வருஷங்களாக நடக்கும் தொடர்கதை. அவர் இப்போது என் நெருங்கிய நண்பர்களில் முதல்வர்.

யோசித்துப் பார்த்தால் இன்னொரு உண்மை தெரியும், எத்தனையோ ஆயிரம் பாடல்கள் பிறக்கின்றன. எல்லாமே எல்லோரையும் ஆட்கொள்ளும் அளவுக்கு ஆவதில்லை. எங்கோ, எப்போதோ இசையமைத்த பாட்டு ஒன்று அவ்வளவு பிரபலமாகாத பாட்டை நம் மனசுக்கு மட்டும் நெருக்கமாக வைத்திருக்கும் போது இன்னொருவரும் அதே அலைவரிசையில் இருக்கும் போது நம் இசைஞானம் அங்கீகரிக்கப்பட்டது போன்ற ஒரு பெருமிதம்.
"மெளனம் ஏன் மெளனமே" பாட்டை எனக்கு தொண்ணூறுகளின் ஒரு ஞாயிறு சென்னை வானொலியின் திரைகானம் தான் அறிமுகப்படுத்தியது. அந்த நேரத்து திண்டாட்டமான வயதும் மனதும் இந்தப் பாட்டுக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்ந்து கொண்டதாலோ என்னவோ மிகவும் பிடித்துப் போனது.

1988 ஆம் ஆண்டு பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய "என் ஜீவன் பாடுது" படத்தில் எல்லாப்பாடல்களுமே இனிமை என்றாலும் அதிகம் புகழ் சேர்த்தது "எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்ற ஆண்குரல் (இளையராஜா), பெண் குரல் (லதா மங்கேஷ்கர்) தவிர படத்தில் அதே பாடல் மனோ குரலில் இருக்கிறது. ஆனால் "மெளனம் ஏன் மெளனமே" பாடல் அவ்வளவு தூரம் பிரபலமாகாத பாட்டு. மனோ பாடிய ஆரம்ப கால முத்துக்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாட்டின் சிறப்பே எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை நகல் எடுக்காத மனோ தைரியத்தோடு அவர் பாடிய விதம் தான். கூடவே கோரசாக சித்ராவின் குரலும் பாடலின் இடையிடையே.
தான் நேசித்த முறைப்பெண்ணை இழந்து விடுவோமோ என்ற அவ நம்பிக்கை தொனிக்கும் சூழ்நிலையில் வருகின்றது இந்தப் பாட்டு. படத்தின் கதாநாயகன் கார்த்திக், நாயகி சரண்யா, ஆனால் இந்தப் பாடலோ இன்னொரு பாத்திரமாக வரும் கபில்தேவ் சரண்யாவுக்காகப் பாடும் பாடலாக வருகின்றது. ஆரம்பம் முதல் பாடல் முடியும் கணம் வரை தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத அவளுக்காக மெளனமாகப் பாடும் இந்தக் காதலனுக்காக அனுதாபத்தைக் கொட்டித் தீர்க்குமாற்போல இசையும் மனோவின் குரலும் சேர்ந்து அந்த ஒருதலைக்காதலின் ஆழத்தைக் காட்டி நிற்கின்றது.

Sunday, February 13, 2011

"இதயம்" இசைத் தொகுப்பு @@@ காதலர் தின ஸ்பெஷல் @@@


கடந்த வருஷங்களின் காதலர் தினச் சிறப்புப்பதிவாகப் போடவிருந்து காத்திருந்து இந்த வருஷத்துக்கு கொடுப்பினையாக "இதயம்" பின்னணி இசைத் தொகுப்போடு சந்திக்கின்றேன். இதயம் படம் அந்தக் காலகட்டத்தின் இளசுகளின் நாடித்துடிப்புப் போல, படத்தில் வந்த இதயமே இதயமே, பூங்கொடி தான் பூத்ததம்மா, பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாடல்கள் ஒற்றைக் காதலில் விழுந்த பையன்களுக்குத் தேவாரம், திருவாசகம். இதைப் பற்றி இன்னொரு கதை இருக்கு அதைச் சாவகாசமாகச் சொல்கிறேன் ;-)
1991 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் காதல் கதைகளில் வெள்ளிவிழாக் கண்ட காவியங்களில் ஒன்றாக அமைந்து விட்டது. முரளியோடு அறிமுக நாயகி ஹீரா, சின்னி ஜெயந்த், ஜனகராஜ், விஜயகுமார் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்த படம் இது.


கதிர் அறிமுக இயக்குனராக சத்யஜோதி ஃபிலிம்ஸ் இற்காக இயக்கிய படம் இதயம். எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது இந்தப் படம் தயாரிப்பில் இருந்த வேளை,ஒரு சஞ்சிகையில் கதிர் பேட்டியின் போது இப்படத்தின் காட்சிகளைத் தான் ஓவியமாக வரைந்தே படம் பிடித்ததாக. இதயம் படத்தின் அழகான ஒளிப்பதிவை அளித்தவர் அந்த நாளில் ஆர்.வி.உதயகுமார் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த திரைப்படக்கல்லூரி மாணவர் அப்துல் ரகுமான். ஹீரா அறிமுகமாக வந்த படம், இப்படத்தின் வெற்றியில் ஒரு நல்ல புதுமுகமாக அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒரு பங்கு எனலாம். ஆனா; முரளி , ஹீரா தொடந்து ஜோடி போட்ட இதே சத்யஜோதி ஃபிலிம்ஸின் "என்றும் அன்புடன்" படம் தோல்வியைக் கண்டதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வெற்றிப்படத்தின் ஜோடியை இன்னொரு கதையம்சத்தோடு பொருத்திப்பார்க்க முடியாத ரசிகர் உலகத்தில் இப்படியான நிகழ்வு இது முதல் தடவை அல்ல. இந்தப் படத்தின் எழுத்தோட்டத்தில் பிரபு(தேவா), ராஜீ(சுந்தரம்) அறிமுகம் என்றும் காணக்கிடைக்கின்றது.


ஒரு வரியில் எழுதிவிடக்கூடிய கதைக்குப் பெரும் பலமாக இருந்தது இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை, சக பாடல்கள். கற்பகம் படத்தில் முழுமையாகப் பெண் குரலில் அமைந்த பாடல்களும் ஒருதலை ராகம் படத்தில் முழுமையாக ஆண்குரல்களில் அமைந்த பாடல்களும் இருந்தது போல இதயம் படத்திலும் முழுமையாக ஆண் குரல்களே பயன்படுத்தப்பட்டிருகின்றன (கோரஸ் விதிவிலக்கு). இதயமே இதயமே என்ற பாடலைப் பிறைசூடன் எழுத, மற்றைய அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பது கவிஞர் வாலி. கூடவே படத்தின் முக்கிய காட்சிகளுக்கு கவிஞர் மு.மேத்தாவின் கவிவரிகள், நாயகன் முரளி குரலில் ஒலிக்கின்றன. தனது அறிமுகப்படத்தை வெள்ளிவிழாப் படமாக்கிய இசைஞானி இளையராஜாவை இயக்குனர் கதிர் கண்டு கொள்ளவே இல்லை. தொடர்ந்த அவரின் படுதோல்வி கண்ட உழவன், காதல் தேசம் (வெற்றி), காதலர் தினம், காதல் வைரஸ் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை.


இதயம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இல்லாவிட்டால் படம் படுதோல்வி கண்டிருக்கும் என்பதை படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புக்கு முன்னதாக இயக்குனர் கதிர் கண்டிப்பாக உணர்ந்திருப்பார். படத்தின் எழுத்தோட்டம் முதல் இறுதிப்புள்ளி வரை இளையராஜாவின் இசையோட்டமே அடி நாதமாய் அமைந்திருக்கின்றது. தொடந்து "இதயம்" படத்தில் நான் பெயர்த்தெடுத்த இருபத்தியொன்று இசைக் குளிகைகளைச் சாப்பிடுங்கள் உங்கள் இதயத்துக்கும் இதமாக இருக்கும் ;-)

படத்தின் முகப்பு இசை இதயக் கண்காணிப்புக் கருவியின் ஓட்டமாக


ரயிலில் பயணிக்கும் நாயகன் தன் பழைய நினைவில் மூழ்கும் வேளை
இதோ என் இதயத்தாள்களைப் புரட்டிப்பார்க்கிறேன்
அந்த வெள்ளைத் தாள்களில் கொள்ளை கொள்ளையாய்க் காதல்"


நாயகன் தன் காதலி முகத்தை முதன்முதலில் வெள்ளக்குவியலில் பிரதிபிம்பமாய்க் காணும் போது



"உனக்கென்ன ஒரு பார்வையை வீசிவிட்டாய்
நானல்லவோ வைக்கோற்போராய்ப் பற்றி எரிகிறேன்"


வகுப்பில் இருக்கையில் முன்னே இருக்கும் அவள் திருமுகம் காணக் கண்ணாடிக்குவளையை அவன் போட்டுடைக்க, மெல்லத் திரும்புகிறாள்



அவளின் நினைப்பை இதயத்தில் இருத்தி அவன் காதலில் திளைத்தவேளை





இந்தப்பாதங்கள் மண் மீது
நடக்கவேண்டியவை இல்லை
மலர்கள் மீது



"மூச்சு நின்றுவிட்டது என்பதற்காக
காற்று இறந்து விடுவதில்லை
அது போல என் காதலும்"
காதலி இன்னொருவனை நேசிக்கின்றாள் என்று தப்பபிப்பிராயம் கற்பிக்கும் அவனின் மன உணர்வில்





அவளின் தந்தை பியோனா வாசிப்பில்



காதலைச் சொல்ல அவன் தருணம் பார்த்துத் தடுமாறும் வேளை


ஒருவழியாக நான்கு வருஷங்களாய் அவன் இதயத்தில் புதைத்திருந்த அவளைப் பற்றி அவள் முன்னே கொட்டும் வேளை



அவனின் காதல் டயறியை அவள் புரட்டுகிறாள்
"ராஜா, நீ உச்சரித்த போது தான் தெரிந்தது
என் பெயரே இத்தனை அழகானது என்று"


அவனின் காதல் டயரியை வாசித்த அவளின் உணர்வைப் புரிந்து கொள்ளத் தடுமாறும் அடுத்த நாள் கல்லூரியில்



பேசா மடந்தையாக அவள் பின்னாலே அவன் துரத்தும் காதலோடு (படத்தின் முக்கியமான இசைவேள்வி இது)


மருத்துவக்கல்லூரி ஆண்டுவிழாவில் இயக்குனர் பாரதிராஜா முன்னிலையில் அவன் காதல் தேவதை அரங்கில் இருக்க, அவனோ மேடை நடிப்பில் வரித்துக்கொண்ட காதல் தேவதைக்குக் கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றான்


தன் காதலிக்கு இன்னொருவனுடன் நிச்சயதார்த்தம் என்று அவன் அறியும் வேளை இதயத்துடிப்பு இடி போல அந்த அதிர்ச்சியே அவன் இதயத்துக்கு வினையாக


அவன் இதயத்தில் கோளாறு என்றுணரா அவளின் இதயத்தில் இப்போது அவன் இடம்பிடிக்க



காதல் அலைவரிசையில் ஒன்றான அவள் அவனைத் தேடியோடும் கணம்


அவன் இதய நெருப்பை
அந்தக் கண்ணீர் அணைத்து விடும் (நிறைவுப்பகுதி இசையாக)


இதயம் படத்தில் இடம்பெற்ற முக்கிய பாடல்கள்

"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா" - கே.ஜே.ஜேசுதாஸ்


"இதயமே இதயமே" - எஸ்.பி.பாலசுப்ரமணியம்


"பூங்கொடி தான் பூத்ததம்மா" - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Thursday, February 10, 2011

பாடகி சித்ராவின் பிஞ்சுக்குரல்



காதலிக்கும் பருவத்தின் ஆரம்ப நாட்களைப் போலத் தொடர்ந்து வரும் காலங்கள் இருக்காது போல ஒரு சில பாடகர்களின் ஆரம்பகாலத்துப் பாடல்களைக் கேட்கும் சுகமே தனிதான். ஒரு பாடகர் அனுபவம் மிக்கவர் ஆகிவிடும் போது குறித்த பாடகரின் பாடல்களைக் கேட்கும் போது மிதமிஞ்சிய தன்னம்பிக்கை உணர்வோடு பாடுவது மாதிரி இருக்கும். இப்போதெல்லாம் ஓரிரண்டு பாடல்களைப் பாடி விட்டு அடுத்த முதல்வர் கனவில் இருக்கும் இளைய நடிகர்கள் போல ஆர்ப்பாட்டம் பண்ணும் இளம் பாடகர்கள் சிலரின் பாடல்களைக் கேட்கும் போது வெறுப்புத் தான் மிஞ்சும். எல்லோரும் எஸ்பிபி ஆகிவிடமுடியுமா என்ன?

எஸ்.ஜானகியின் ஆரம்ப காலத்துப் பாடல்களில் "உள்ளம் தேடாதே என்று சொல்லுதே" (எதையும் தாங்கும் இதயம்), "மலரோடு விளையாடும் தென்றலே வாராய்" (தெய்வபலம்),எஸ்.பி.சைலஜாவின் அறிமுகக் குரலில் "சோலைக்குயிலே" (பொண்ணு ஊருக்கு புதுசு), "மலர்களில் ஆடும் இளமை புதுமையே" (கல்யாண ராமன்), சுஜாதா அறிமுகமான வேளை "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" (காயத்ரி) இப்படியாக இந்த முன்னணிப் பாடகர்களின் அன்றைய பின்னணிப் பாடல்களைக் கேட்பதே தனி சுகம்.

இப்படியான அரிதான பாடல்களைப் பற்றிப் பேசும் போது அதே அலைவரிசையில் இருந்து ரசித்துக் கேட்கும் நண்பனோ, ரசிகனோ கூட இருந்து என்னளவில் சிலாகித்துப் பேசாவிட்டால் அது துரதிஷ்டமாகிவிடும். வானொலியில் பாடல்களை ஒலிபரப்பும் போதும் ஜனரஞ்சக அந்தஸ்துக் கிட்டிய பாடல்களைக் கேட்டால் தான் வானொலிப் பக்கம் நேயர்கள் வருவார்கள் என்ற கள்ளத்தனத்தால் இப்படியான அரிய பாடல்கள் மனசுக்குள் மட்டுமே முடங்கிவிடும். அப்படியான பாடல்களை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இன்னொருவர் சிலாகித்துப் பேசும் போது வரும் கிளர்ச்சி தான் இந்தப் பதிவாக வெளிப்பட்டிருக்கின்றது. ட்விட்டரில் நண்பர் கிரிஷ்குமார் என்னிடம் சித்ராவின் ஆரம்பகாலப் பாடல்களைப் பற்றிச் சிலாகித்த போது என் பங்கிற்கும் அவற்றைப் மீளப் புதுப்பிக்கக் கூடியதாக இருக்கிறது.


1984 ஆம் ஆண்டில் தமிழில் அறிமுகமாகிய சித்ராவின் ஆரம்ப காலப்படங்களில் குருவை மிஞ்சாத சிஷ்யை போல ஒரு அடக்கமான தொனியிலேயே அவரின் பாடல்கள் இருப்பது போலத் தென்படும். அந்த ஆரம்பப் பாடல்களைக் கேட்டாலே போதும் தானாக ஆண்டுக் கணக்கு வெளிவந்து விடும். வருஷங்கள் நான்கைக் கடந்த பின்னர் தான் ஒரு முதிர்ச்சியான தொனிக்கு அவரின் குரல் மாறிக் கொண்டது, அதாவது இன்றிருப்பதைப் போல.சித்ராவின் வருகை பூவே பூச்சூடவாவில் ஆரம்பிக்கிறது. அந்தக் காலத்து முன்னணி நாயகிகள் நதியா, ராதா, அம்பிகா, சுஹாசினி என்ற பட்டியலுக்குக் குரல் இசைத்தாலும் நடிகை ரேவதியின் குரலுக்கும் குணாம்சத்துக்கும் பொருந்தி வரக்கூடியாதான பாங்கில் அமைந்திருக்கின்றது.

எங்களூரில் 80 களின் மையப்பகுதியில் வீடியோப் படப்பிடிப்புக்காரர்கள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருந்த வேளை அது. பெண் பூப்படைந்ததைக் கொண்டாடும் நாள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கல்யாணக் காட்சி என்று வீடியோக்காரருக்கும் புதுத் தொழில்கள் கிட்டிக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிறந்த நாள் விழாக்களை எடுக்கும் வீடியோக்காரருக்கு அந்தக் காட்சிகளுக்குப் பொருத்தமான பாடல்களையும் பின்னணியில் பொருத்த வேண்டிய சூழ்நிலை வரும்போது தவறாமல் பயன்படுத்தப்படும் பாடல்களில் ஒன்று டிசெம்பர் பூக்கள் படத்தில் வரும் "இந்த வெண்ணிலா என்று வந்தது எந்தன் பாடலை நின்று கேட்டது". சித்ராவின் ஆரம்பகாலக் குரலில் ஒன்று இது, இசைஞானி இளையராஜா இசையமைத்த பாட்டு. அளவான மேற்கத்தேய இசையும் சித்ராவின் அடக்கமான குரலும் சேர்ந்து இப்போது கேட்டாலும் அந்தப் பிறந்த நாள் வீடியோக்காலத்தைச் சுழற்றும்.



மனிதனின் மறுபக்கம் என்றொரு படம். இசைஞானி இளையராஜாவை எண்பதுகளில் அதிகளவில் பயன்படுத்திய இயக்குனர்களில் முதலிடத்தில் இருப்பவர் என்று சொல்லக்கூடிய கே.ரங்கராஜ் இயக்கத்தில் வந்த படம். இந்தப் படத்தில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றையும் எழுதத் தனித்தனிப் பதிவுகள் தேவை. அவ்வளவுக்கு வித்தியாசமான கலவையாக இருக்கும். அப்படியானதொரு பாடல் தான் சித்ராவின் குரலில் ஒலிக்கும் "சந்தோஷம் இன்று சந்தோஷம் இந்தப் பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்". ராஜாவுக்கே உரிய ஒழுங்குபடுத்தப்பட்ட வாத்தியக் கலவைகளின் நேர்த்தியான அணிவகுப்பில் இருக்கும் இசை, பாடலின் சரணத்திற்குப் பாயும் போது "மாலை சூடிடும் முன்னே இவள் காதல் நாயகி" என்று இன்னொரு தடத்துக்கு சித்ரா மாறுவார் அப்போது பின்னால் வரும் ட்ரம்ஸ் வாத்தியத்தின் தாளக்கட்டும் இலாவகமாக மாறி வளைந்து கொடுக்கும். பாட்டின் பின் பாதியிலும் "உன்னைக் கேட்கவே வந்தேன் ஒரு ஆசை வாசகம்" என்னும் இடத்திலும் முந்திய பாங்கில் இருக்கும். ஆர்ப்பாட்டமில்லாத அழகில் அளவான மேக்கப்பில் இருக்கும் காதலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சுகம் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.



எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அகப்பட்டு அவஸ்தைப்படும் நடிகர்கள் போல இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் பலதும் அவரின் படங்களுக்கு இரையாகியிருக்கின்றன. அப்படியொன்று தான் "எனக்கு நானே நீதிபதி" படமும். இந்தப் படத்தில் சித்ரா பாடும் "திருடா திருடா" என்ற பாடல் அதிகம் கேட்காத பாடல்களுக்குள் அடங்கும். ஆனால் இசைஞானியின் பாடல்களைத் தேடிக் கேட்கவேண்டும் என்ற முனைப்பில் இருப்போர் தவறவிட்டிருக்காத பாடல். நீங்கள் தவற விட்டிருந்தால் இதோ கேளுங்களேன்

Friday, February 4, 2011

புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை.....

இத்தாலியின் பொலோனியா என்ற சிற்றூரில் இருக்கும் ஒருவன் ஒரு இந்திய சினிமாப் பாடலைக் கேட்கின்றான். அந்தப் பாடலைக் கேட்ட மாத்திரத்திலேயே குறித்த பாடலை இசையமைத்த இசையமைப்பாளர் யார் என்ற வேட்கை கிளம்பவே அவன் இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வருகின்றான். தமிழகத்திலே இருக்கும் அந்த இசையமைப்பாளரைத் தேடிக் கண்டுபிடித்துத் தரிசிக்கின்றான். அந்த இசையமைப்பாளரை 40 இசைக்கலைஞர்களோடு இத்தாலிக்கு அழைத்துச் சென்று இசைக் கச்சேரி நடத்தி அவருக்குப் பாராட்டு வைக்க நினைக்கின்றான். அவன் கனவு 2004 இல் நிறைவேறுகின்றது. அந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, இத்தாலியின் குக்கிராமத்தில் இருந்த இத்தாலிக்காரனைச் சென்னைக்கு இழுத்து வந்த அந்தப் பாடல் "புத்தம்புதுக் காலை பொன்னிறவேளை". இயக்குனர் சங்க 40 ஆவது ஆண்டு விழாவில் இந்தத் தகவலை மேடையில் வைத்துப் பகிர்ந்து கொண்டவர் யூகி சேது. அரங்கத்தில் இருந்து யூகி சேதுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார் இசைஞானி இளையராஜா.

"புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை" பாட்டைக் கேட்கும் கணங்கள் எல்லாம் விடிந்தும் விடியாத காலையில் சந்தடியில்லாத கடற்கரை மணலில், கடற்காற்று மெலிதாகச் சில்லிடக் கண்களை மூடிக் கொண்டு கேட்கும் சுகானுபவம் எப்போதும் எனக்கு. புல்லாங்குழல் மெல்ல மெல்லத் தனியாவர்த்தனம் கொடுத்துப் பாடலைக் கேட்கத் தயார்படுத்த ஒரு சில வயலின்கள் தொகுதி உடன்பாடு வைத்துக் கொண்டு தொடர பின்னணியில் கீபோர்ட் நிபந்தனையில்லாத ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கும். பாட்டு முழுக்க ஒற்றை நோட்டிலேயே பயணிக்கிறது.ஜானகியின் குரல் தனக்கு மட்டுமே கேட்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பாடுமாற்போல கீழ்ஸ்தாயில் ஆரம்பித்து அதே அலைவரிசையில் 4.34 நிமிடங்களையும் தொட்டுச் செல்வார். மேற்கத்தேய வாத்தியங்களோடு கிராமியத்தனமே சுத்தமாக இல்லாமல் ஒரு நகர்ப்புற மங்கையின் உணர்வுகளாகப் பிரதிபலிக்கும் இந்தப் பாடலுக்கு வயசு 31. ஆனால் இப்போது கேட்டாலும் அதே புத்துணர்வு. இந்தப் பாடலுக்கு இன்னார் தான் என்று இறைவன் எழுதி வைத்திருப்பான் போல, எஸ்.ஜானகியைத் தவிர்த்து மற்றைய பாடகிகள் பாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தால் எல்லாரையும் ஓரங்கட்டி விட்டுக் கடைசிச்சுற்றிலும் ஜானகி தான் பொருந்துகிற அற்புதம். மேல்ஸ்தாயில் ஆர்ப்பாட்டம் பண்ணும் பாட்டுக்களாகட்டும் இம்மாதிரிக் காதுக்குள் கிசுகிசுக்கின்ற கீழ்ஸ்தாயி ஆகட்டும் எஸ்.ஜானகி தான் சூப்பர் ஸ்டாரிணி போல.

சில பாடல்களை இந்த நேரத்தில் தான் கேட்கலாம் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொள்வதுண்டு. ஆனால் எல்லாக் காலத்திலும் எல்லா நேரத்திலும் சுதந்திரமாக என் செவிகளுக்குள் நடமாடிச் செல்லும் சுதந்திரத்தைக் கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

இயக்குனர் பாரதிராஜாவுக்கும் சில பாடல்களுக்கும் அப்படி என்ன பெரும் பகையோ தெரியவில்லை. இவரின் இசையில் வந்த படங்களில் கிழக்கே போகும் ரயில் படத்திற்காக "மலர்களே நாதஸ்வரங்கள்", நிழல்கள் படத்திற்காக "தூரத்தில் நான் கண்ட உன் முகம்", வேதம் புதிது படத்திற்காக "சந்திக்கத் துடித்தேன் பொன்மானே" என்று மெட்டுப் போட்டு ரசிகர்களைக் கட்டிப் போட்ட பாடல்களைத் திரையில் வராமல் கட் போட்டு விடுவார். அந்த வரிசையில் அலைகள் ஓய்வதில்லை திரைக்காக இசையமைத்த "புத்தம் புதுக்காலை" பாடலும் சேர்ந்து விடுகின்றது. அலைகள் ஓய்வதில்லை படத்தின் ஒரு காட்சியில் (ராதா அறிமுகக் காட்சி என்று நினைக்கிறேன்) கடற்கரை மணற்பரப்பில் டேப் ரெக்கார்டர் சகிதம் ராதா இருக்கும் வேளை இந்தப் பாடலின் மெலிதான இசை வந்து போகிறது அனேகமாக அந்தக் காட்சியில் தான் "புத்தம் புதுக்காலை" ஆரம்பத்தில் ஒட்டியிருக்கலாம்.

இந்த அதியற்புதமான பாடலைக் கழற்றி விட்டு "வாடி என் கப்பக்கிழங்கே" சேர்த்த பாரதிராஜாவை என்ன செய்யலாம்? பாரதிராஜா ஒருபக்கம் இருக்க, இந்தப் பாடலை அணுவணுவாக ரசித்து மெட்டுப் போட்டு முத்துமாலையாக்கிய இசைஞானி இளையராஜாவின் உணர்வலைகள் எப்படி இருக்கும்? சரி அலைகள் ஓய்வதில்லை படத்தில் தான் வரவில்லை, வேறு ஒரு படத்திலாவது இதே பாடலைச் சேர்த்திருக்கலாமே? அப்படி வந்த ஒரு பாட்டுத் தானே இங்கேயும் ஒரு கங்கை படத்தில் "சோலைப் புஷ்பங்களே" என்ற இன்னொரு முத்து. 30 வருஷங்களுக்குப் பின்னர் "Paa" ஹிந்திப் படத்தின் ஆரம்பக் காட்சியில் பள்ளிக் குழந்தைகள் பாடும் ஒரு சின்ன கோரஸ் பாட்டுக்கு மட்டும் வந்து தலைகாட்டிப் போகிறது இந்தப் பாட்டின் மெட்டு.

மூலப்பாடலைக் கேட்க


"Paa" ஹிந்திப்படத்தில் வந்த மீள் கலவையைப் படத்தில் இருந்து பிரித்துக் கொடுத்திருக்கிறேன்


"புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை" பாடலை தாரா என்றொரு ரசிகை பாடி அதை இணையத்தில் பதிவேற்றியிருக்கிறார், கேட்க இதமாக இருக்கிறது அந்த மீள் இசையும் அவரின் முயற்சியும்

Get this widget | Track details | eSnips Social DNA