Pages

Thursday, September 30, 2021

இசையமைப்பாளர் சந்திரபோஸ் “நினைக்கையில் இனிப்பாக இருக்கிறார்”



மாம்பூவே.....

சிறு மைனாவே.....

எங்க ராஜாத்தி ரோஜா செடி

முள்ளிருக்கும் கள்ளிருக்கும்

நினைக்கையில் 

இனிப்பாக 

இருக்கிறா ஆ ஆ

நெருங்கையில் 

நெருப்பாகக் 

கொதிக்கிறா......

https://youtu.be/z1OXjduTZCk

“சந்திரபோஸ் ! 

இந்தப் பாட்டை இசையமைச்சது என்னமோ 

நீங்க தான். ஆனா எனக்குத் தான் 

நிறையக் கடிதங்கள் வந்துக்கிட்டிருக்கு”

என்று இளையராஜா சந்திரபோஸிடம் சொன்னாராம் ஒரு பொழுது.

இந்தத் தகவலைச் சொன்னவர் சந்திரபோஸ் அவர்களின் உறவினரும், வாத்தியக் கலைஞருமான தபேலா முரளி.

“இளமைக் காலத்தில் சேர்த்த சுவாரஸ்யமான அனுபவங்கள் தான் எஞ்சிய காலத்தை இனிமையாக்குகிறது”

என்று ஒருமுறை எழுதியிருந்தேன். நாம் கடந்து வந்த பாதையில் எத்தனை திருப்பங்கள், சவால்கள், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள்....

ஆனால் இந்த மாதிரி ஒரு ஒற்றைப் பாட்டு போதும் அப்படியே எல்லாவற்றையும் வழித்து துடைத்து விட்டு அப்படியே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வசந்த காலத்தில் கொண்டு போய் இருத்தி விடும் கால இயந்திரப் பாட்டு இது.

புத்தம் புதுசு வெள்ளிக் கொலுசு

சத்தங்கள் கொண்டாட

சித்திரப் பொண்ணு செவ்வள்ளிக் கண்ணு

சங்கீதப் பண் பாட

கட்டுக் கருங்குழல் பட்டுத் தளிருடல்

பின் புறம் நின்றாட

கொட்டடிச் சேலை கட்டிய வண்ணம்

பல்லக்கு ஒன்றாட....

ஆகா ஆகா எப்பேர்ப்பட்டதொரு மெட்டுக் கட்டு என்று சிலாகித்துக் கொண்டிருக்கும் போது அப்படியே எடுத்தள்ளி

“அழகான மான்

அதற்காக நான்

பழகாத நாளெல்லாம் 

துயிலாத நாள்

ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ

மாம்பூவே…….”

என்று கொண்டு போய்த் தூளியில் கிடத்தித் தாலாட்ட வைக்கும் இதம். அதுவும் ஜேசுதாஸுடன் ஜோடி போடும் இசையரசி பி.சுசீலாவின் அந்த ஓஓஓஓ லாலியில் லயித்துக் கிடக்கும் மனசு. 

இன்னொரு பக்கம் அந்த Rhythm pattern, ஆரம்பத் தாளக் கட்டில் கவர்ச்சிக் குலுக்கல் ஆடும் தபேலா, தக்கிடத்தத்தோம் 

நான் தனித்துவமானவன் என்று பளிச்சிடுவார் சந்திரபோஸ் அங்கேயே.

இந்தப் பாட்டெல்லாம் நூற்றாண்டு கடந்த தமிழ்த் திரையிசையின் கல்வெட்டில் பொறிக்க வேண்டியதொரு பொக்கிஷப் பாட்டு.

எண்பதுகளில் இசையுலகச் சிற்றரரசராகப் பவனி வந்த சந்திரபோஸ் குறித்து முன்பு ஏவிஎம் படைப்புகளில், விஜயகாந்த் தொடரில் மற்றும் பாலாஜியின் விடுதலை என்றெல்லாம் நான் எழுதிப் பகிர்ந்திருந்தேன். 

இந்தப் பதிவு எழுதும் போதே

“தன்னன்னா தானே தன்னன்னா....” என்று சந்திரபோஸ் சாதகம் கற்பிப்பது போலொரு பிரமை

https://www.youtube.com/watch?v=m5DwbfHnP8s

“ஏலம் மணக்குற கூந்தல் மணத்துல 

வாசமல்லி வச்சு விடவா

பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே

பாலம் கட்டவா?

ஆகா ஆகா கவிஞர் முத்துலிங்கம் ஐயாவுக்கு

தன்னன்னா தானே தன்னன்னா

ஆனாலும் அவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் இன்னும் இன்னும் சிலாகிக்கப்பட்டுக் கொண்டாடப்பட வேண்டியவை.

அதெப்படி ஒரு பக்கம் 

“கன்னம் வெக்க வந்த மச்சான்

கன்னத்துல கன்னம் வச்சான்”

https://youtu.be/PV6anej5Ik8

என்று ஒரு பக்கம் துள்ளிசையிலும், இன்னோர் பக்கம்

நீலமேக குழலிலே 

பூவைச்சூடும் பொழுதிலே.......

வெள்ளைத்திரை போல் நெற்றிமீது 

வண்ணத்திலகம் இடுகிறேன்

பார்வை இசைக்கோர்வை 

புதுப்பாடல் ஒன்று படிக்குமோ.......

https://www.youtube.com/watch?v=n8p9NnrBpjY

என்று இன்னோர் பக்கம் உருகி உருகிக் காதலிக்க முடிகிறது இந்த மெட்டுகளை என்று வியப்பேன். சந்திரபோஸ் அவர்களது இந்தப் பாடல்களைக் கேட்கும் போது.

ஒரு பாட்டு ஹிட் அடித்து விட்டால் ஆ ஊவென்று அதே நகலில் சந்திரபோஸ் பாடல்களைக் கேட்டதுண்டா? கிடையாது.

அவர் ஒருபோதும் “பாதுகாப்பு வளையத்தில்” இருந்து கொண்டு இசைத்தவர் அல்ல.

ஒரு பக்கம் ஏவிஎம், பாலாஜி, தாணு என்று பெரும் பெரும் நிறுவனங்களுக்கும் படம் பண்ண முடியும். இன்னொரு பக்கம் புதிதாக வந்தவர்களுக்கும் தலைவாழை இலை விருந்து படைக்க முடியும் அறுசுவை இன்னிசை விருந்தாக. அதனால் தான் சந்திரபோஸ் என்றால் வகை தொகையில்லாமல் ரசித்து அனுபவிக்க ஏராளம் இன்னிசைப் பாட்டுகளைக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்.

தொண்ணூறுகளில் தொடங்கிய இலங்கையின் கை கொள்ளாப் பண்பலை வானொலிகள் அன்று தொட்டு இன்று வரை ஒதுக்கி வைத்திருக்கும் பாடல்களில் ஒன்று

“என் ராசாத்தி நீ வாழணும்” 

https://youtu.be/EIOmWNSDX7A

வாரத்தில் ஒரு தினமேனும் அவர்கள் இதை ஒலிபரப்பாவிட்டால் அடங்காத தாகம் போல. வானொலிக்கார் விட்டாலும் நேயர் விருப்பம் கேட்கும் ரசிகர்கள் விட்டால் தானே?

ஊமைக்குயில் படத்துக்காக கே.பாக்யராஜின் நகல் ஆக அறிமுகமான யோகராஜின் பட வெற்றிக்கு இந்தப் பாடலும் துணை போனதில் வியப்பில்லை.

இதே படத்தில் வந்த இன்னொன்றை அந்தக் காலத்து ரெக்கோர்டிங் பார் காரர் பழக்கப்படுத்திக் கொண்ட, இதே படத்தின் இன்னொன்று

பூ முடிக்கணும் உன் தலையிலே

https://www.youtube.com/watch?v=ylVEm402cfA

ராமானந்த் சாகர் வழங்கிய "ராமாயணம்" அந்தக் காலத்து தூரதர்ஷன் தொலைக்காட்சியின் இதிகாச பிக் பாஸ் தொடர். அதில் நடித்த உப பாத்திரங்கள் பின்னாளில் சினிமாவில் கரையேற சீதையாக நடித்த தீபிகாவையும் கோடம்பாக்கம் சிறைப்பிடித்தது.

"பெரிய இடத்துப் பிள்ளை" இதில் அர்ஜீன், கனகாவோடு "சீதை" தீபிகாவும் நடித்தார். சந்திரப்போஸ் இசை வழங்கிய இந்தப் படத்தில் "உன்னைப் போற்றி எழுதப் புலவன் இங்கு அருகில் இல்லை" https://youtu.be/W4gaj_RyaHc

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா பாடியது ஒரு பக்கம் ரெக்கோர்டிங் பார் எல்லாம் ஹிட்டடிக்க,

இன்னொரு பக்கம் ஆகாசவாணியில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் வலம் வரும் தூரதர்ஷனின் "ஒலியும் ஒளியும்" வரை எட்டியது

"மனசுல என்ன நெனச்சே மழலையில் சொல்லிடய்யா" 

https://www.youtube.com/watch?v=bk_x4WAolYw

என்ற அற்புதமான பாட்டு பி.சுசீலா மற்றும் கே.ஜே.ஜேசுதாஸ் குரல்களில். எனக்கு இன்று வரை மனசுக்கு நெருக்கமானது. முந்தானை முடிச்சு படத்தில் வரும் "சின்னஞ்சிறு கிளியே" பாட்டின் பாங்கில் இது இருப்பது ஒரு அதிசயம்.

இந்தப் படத்தில் சந்தடியில்லாமல் ஹிட் அடிச்ச இன்னொன்று

“நாதஸ்வரங்கள் வாழை மரங்கள் நாளை வந்த பின்பு கல்யாணம் தான்” (எஸ்.ஜானகி & மனோ)

https://www.youtube.com/watch?v=q9I3GOurC8c

எப்படி இளையராஜாவின் பாடல்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனவோ அது போலவே சந்திரபோஸ் பாடல்களை நினைக்கும் போதெல்லாம் கூட அந்தந்தக் காலங்கள் நினைவுக்கு வரும்.

அப்படியொன்று தான் 

“பிள்ளை மனம் வெள்ளை மனம்”

https://www.youtube.com/watch?v=uXKZ5ClwN3c

பாட்டு. எண்பதுகளில் அப்போது வீடியோ படப்படிப்பு அறிமுகமான காலம். பிறந்த நாள் வீடியோக்களுக்கென்றே இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்றானது. உள்ளூர்த் தொலைக்காட்சிச் சேவையான விஜி அண்ணரின் எக்ஸ்போ தொலைக்காட்சி அப்போது தாங்கள் எடுத்த வீடியோக்களை நிதமும் போட்டுக் காண்பிப்பார்கள். ஊரே பார்க்கும். அப்படியாக ஒவ்வொரு பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோக்கள் வழி வாணி ஜெயராமும், ராஜ் சீதாராமனும் இந்தப் பாடல் வழியாக நம்மிடம் அறிமுகமாகிப் பழக்கப்பட்ட விருந்தாளிகள் ஆகி விட்டார்கள். பாடல் வரிகளுக்கு முழு அர்த்தம் தெரியாத அந்தக் காலகட்டத்தில் 

“கரைகளைத் தேடும் கடலலை பார்த்தேன்

அலைகளில் தோன்றும் இன்னிசை கேட்டேன்

வார்த்தையெல்லாம் வாழ்க்கை அல்ல

உன் முகம் பார்த்தே நான் வாழ்வேன்..”

என்று பாடமாக்கி முணுமுணுத்ததை இப்போதும் நினைத்துச் சிரிப்பேன்.

திருச்சி லோகநாதன் அவர்களின் மகன் T.L.தியாகராஜன் அவர்களுக்கு முகவரி கொடுத்த 

தேடும் என் காதல் கண்பார்வை”

https://www.youtube.com/watch?v=FzBo_XR9ytY

எல்லாம் அதே அதே ரெக்கார்டிங் பார் காரருக்குப் போதை ஏற்றியவை.

“அதோ வானிலே நிலா ஊர்வலம்” 

https://youtu.be/2fdUrm0dlMQ

வழியாக இன்றும் பிரபலமாக விளங்கும் சந்திரபோஸ் கொடுத்த “தண்டனை” படத்தில் வந்த

“கவிஞன் என்னைப் பாடலாம்”

https://youtu.be/XrgcK14J8EA

பாட்டை அந்தக் காலத்து சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சி ஒலி ஒளி என்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பாடிப் பிரபலமாக்கியது பின்னாளில் அது நம்மூருக்கு வீடியோ ஒளி நாடாவாக வந்து பார்க்கக் கிட்டிய போது புரிந்தது. கானா பிரபா

“ஓ.......

மேகமே

https://www.youtube.com/watch?v=PMEjTFfLjvw

அந்தக் காலத்து ஜேசுதாஸ், லலிதாசாகரியைக் காதலிக்க வைத்தது சென்னை வானொலியின் ஞாயிறு தோறும் நேயர் விருப்பம் கொடுத்த இந்தச் சின்னச் சின்ன ஆசைகள் படப் பாட்டு. 

எப்படி ஏவிஎம் நிறுவனம் தொடர்ச்சியாக சந்திரபோஸுக்கு அருமையான வாய்ப்புகளை வழங்கியதோ அது போலவே முக்தா சீனிவாசன் அவர்கள் இயக்கிய ஒரு மலரின் பயணம், வாய்க்கொழுப்பு, கதாநாயகன்  இவற்றோடு தனயன் முக்தா ரவி இயக்கிய “சின்னச் சின்ன ஆசைகள்” படமும் சேர்ந்து கொண்டது தனிச்சிறப்பு. Maya Srinivasan Muktha Ravi

வாய்க்கொழுப்பு படத்திலும் “ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே” 

https://youtu.be/Y7b2ypn_d4k

(T.L.தியாகராஜன் & லலிதா சாகரி) அந்தக் காலத் திரையிசை ரசிகர்களுக்கு நல்ல தீனி.

பின்னாளில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் தொடர் எழுதும் போது இந்தப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் இருந்து காதலில் விழுந்தேன் இந்தப் பாட்டு மீது.

“ம்ம்ம்ம்ம்ம் சந்தோஷ நேரங்கள் (பார்வையின் மறுபக்கம்)

https://youtu.be/_aV1ZE8xiSo

கொஞ்சம் வளர்ந்த காலத்தில் “புதிய பாதை” வழியே கொடுத்த

“பச்சப் புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம்”

https://www.youtube.com/watch?v=wFsRJOXJVRQ

அதன் ஆரம்ப இசை அருவிக்காகவே தேடித் தேடி ரசிப்பேன்.

அதில்

“முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா

இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா...”

பல்லவியில் சரணத்தின் சந்தத்தைக் கொணர்ந்து புதுமை படைத்திருப்பார்.

அதே காலகட்டத்து சோக ராக ஜேசுதாஸ் ஆக

“குடகுமலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு”

https://www.youtube.com/watch?v=De9O8MCbVsg

பாட்டையும் எழுதி வைத்து ஒலிப்பதிவு செய்து கேட்டதெல்லாம் தொடர்ந்த பயணம்.

வம்புல மாட்டி விடாதீங்கோ என் சின்னண்ணே

https://www.youtube.com/watch?v=Czx78Biw5Bg

பாட்டைக் கேட்கும் போது வெளிநாடு தேடிப் புறப்பட்ட என் உடன்பிறவாக சகோதரன் வழியில் பனிப்பாதையில் இறந்ததை நினைக்க வைத்து வருத்தும். இந்த வேடிக்கைப் பாடலை போர்க்கால இரவுகளில் சைக்கிள் டைனமோ சுழற்றிக் கேட்டுக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்துத் திரும்பத் திரும்பக் கேட்பான்.

வலியெழுப்பும் அந்த நினைவுகளை மீட்டிப் பார்க்கையில் அங்கும் வந்து ஒரு சூழ்நிலைப் பாடல் பாடுவார்.

“படத்தான் போறேன் பாட்டு

பலபேரு கதைய கேட்டு

அம்மாடி ஆத்தாடி பொல்லாத ஒலகமடா

பூஞ்சிட்டு குருவிகளா 

புதுமெட்டு கருவிகளா”

https://youtu.be/po6s62vUzxk

இப்படி ஒவ்வொரு பாடல்களை நினைக்குந்தோறும் சந்திரபோஸ் அவர்களுக்கும் நமக்குமான பாடல்களால் தொடர்ந்த பந்தம் காலம் கடந்தும் தொடர்கின்றது, அது பாடல்களோடே வாழ்கின்றது.

இசையமைப்பாளர் சந்திரபோஸ் 

அகவை 73 இல் இன்று ❤️

கானா பிரபா

#சந்திரபோஸ் #Chandrabose

Thursday, September 23, 2021

இளையராஜா கொடுத்தது மீண்டும் யுவன் வழியே பல்லவி அனுபல்லவி – வாழ்க்கை – சர்வம்


இன்று திரும்பின பக்கமெல்லாம் “பேர் வச்சாலும்” பாட்டைப் பற்றித் தான் பேச்சு. 2021 இல் வெளியான “டிக்கிலோனா” படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்ததைக் காப்பியடித்துத் தான் 1990 இல் இளையராஜா “மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் கொடுத்ததாக 2K Kids பேசிக் கொள்கிறார்கள். 


இசைஞானி இளையராஜா இசையமைத்த ஆயிரத்துச் சொச்சம் படங்களின் பின்னணி இசையை உருவினாலேயே ஆயிரம் படங்களுக்கு அவை பாட்டுகளாகப் பிரசவிக்கும். அப்படித்தான் மூன்றாம் பிறை பின்னணி இசை, பாலுமகேந்திராவின் வேண்டுகோளுக்கிணக்க தும்பி வா ( ஓளங்கள்) ஆகி பின்னர் சங்கத்தில் பாடாத கவிதை தொடங்கி தெலுங்கு, ஹிந்தி பாய்ந்த கதையெல்லாம் முன்னர் பார்த்தோம்.



யானை இருந்தாலும் ஆயிரம் பொன்....." என்பார்கள். தென்னிந்திய இசைச் சகாப்தத்தில் இசைஞானி இளையராஜாவின் இசைமரபினைப் பின்பற்றிய விழுதுகளாக அவரின் பாணியை எடுத்தாண்டு வாழ்ந்து போன இசையமைப்பாளர்கள் உண்டு, இன்று இசைஞானி இளையராஜாவின் திரையிசைப் பங்களிப்பு என்பது 80களில் கோலோச்சிய தனியதிகாரம் என்ற நிலை கடந்து இன்று மற்றைய இசையமைப்பாளர்களோடு பங்கு போட்டுப் பயணிக்கின்றது. இந்த நிலையில் அண்மைய இரண்டு வருடங்களாக சினிமாவில் ரீமிக்ஸ் வைரஸ் பரவியபோது ராஜாவின் முத்தான பழைய பாடல்களையும் அது விட்டுவைக்கவில்லை. தவிர வெங்கட்பிரபுவும், பிரேம்ஜியும் சேர்ந்து கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் இளையராஜாவின் பாடல்களை ஓரளவு ரசிக்கும் வகையில் மீள் இசையாகக் கொடுத்திருந்தார்கள். 



இளையராஜாவின் பாடல்களைப் படங்களில் ரீமிக்ஸ் என்னும் மீள் இசைவடிவமாகக் கொடுப்பதோடு மட்டும் நின்று விடாது, "சுப்ரமணியபுரம்" , "பசங்க" போன்ற படங்களில் அவரின் பாடல்களை உள்ளே லாவகமாகப் பின்னணியில் படரவிட்ட காட்சியமைப்புக்கள் கூட அப்படங்களின் வெற்றியில் சிறிது பங்கு போட்டுக் கொண்டன.


இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முன்பே பல படங்களில் இசைஞானியின் மெட்டுகளைத் தன் பாட்டுகளோடு இணைத்துக் கொடுத்தது வரலாறு. உதாரணத்துக்கு சில துளிகள் என்றால் பாலா படத்தில் வரும் “தீண்டித் தீண்டி” https://www.youtube.com/watch?v=yYdGJqe0JzI பாட்டு, இளையராஜாவின் மகாதேவ் படத்தில் வரும் “ரிம் ஜிம் ரிம் ஜிம்” https://www.youtube.com/watch?v=04cU-pDKIEg


பாடலின் தழுவல்.


தாஸ் படத்தில் வரும் “வா வா வா” https://www.youtube.com/watch?v=6yZ94NtMdZM பாட்டு அப்படியே அடியே மனம் நில்லுனா (நீங்கள் கேட்டவை) காலத்துக்கும், நேரடியாகப் பயன்படுத்திய விதத்தில் “வச்சுக்கவா” (சிலம்பாட்டம்) ரீமிக்ஸ், சென்னை 28 பாகம் 2 இல் வந்த “ஏழேழு தலைமுறைக்கும்” (கோவா) https://www.youtube.com/watch?v=lxSQJi9vh5Y  பாட்டின் நதி மூலம் “அம்மன் கோயில் கிழக்காலே” (சகலகலாவல்லவன்) https://www.youtube.com/watch?v=aQHJhX2MLPQ  என்று தொடரும்.




இன்னும் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் யுவன் தன் தந்தையின் “ நெற்றிக்கண்” படத்தின் பின்னணி இசையை அப்படியே லவட்டியிருப்பார்.


இப்போது இது பரிணாம வளர்ச்சி கண்டு இன்று இளையராஜாவின் பாடலையே ஒரு படத்தின் முக்கியமான காட்சியமைப்புக்கு பின்னணி இசையாக மாற்றிக் கொடுக்கும் ட்ரெண்ட் வந்துவிட்டது, அதை ஆரம்பித்து வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்ட பெருமை இசைஞானியின் வாரிசு யுவனுக்கே போய்ச் சேர்ந்திருக்கின்றது. முன்னர் தன் தந்தை இளையராஜா "பாரதி" படத்தில் இசையமைத்துக் கொடுத்த "நல்லதோர் வீணை செய்தே" என்ற பாடலை விஜய் நடிப்பில் உருவான "புதிய கீதை" படத்தின் இறுதிக்காட்சியில் நுழைத்த யுவன், இன்று "சர்வம்" படத்தின் ஆர்யா, த்ரிஷா காதல் காட்சிகளுக்காக தன் தந்தையின் இன்னொரு இசை வடிவத்தை மீள் இசைவடிவம் கொடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்.


வாழ்க்கை திரைப்படத்தில் இடம்பெற்ற மெல்ல மெல்ல என்னைத் தொட்டு என்ற பாடலை பி.சுசீலாவும் ராஜ் சீதாராமனும் இப்படிப் பாடியிருந்தார்கள். இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் பல்லவி, சரணம் என்ற வேறுபாடின்றித் தொடர் நிலைப் பாடல் என்ற வடிவத்தில் அடங்கும். இது குறித்த ஒரு அழகான அறிமுகக் காணொளியைப் பாருங்கள்.


https://www.youtube.com/watch?v=_9h8Vaviv5E&t=27s


மெல்ல மெல்ல என்னைத் தொட்டு


பாடலைக் கேட்க


https://www.youtube.com/watch?v=s25TPaTIB8k


இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்ட இசைவடிவம் இதற்கு முன்னரேயே 1983 இல் கன்னடத்தில் மணிரத்னம் இயக்கிய "பல்லவி அனுபல்லவி" படத்தின் முகப்பு இசையில் இப்படிப் பயன்படுத்தப்பட்டிருந்தது.


இசையைக் கேட்க


 http://www.radio.kanapraba.com/sarvam/pallavi.mp3



கூடவே அந்தப் படத்தின் முக்கிய காட்சி ஒன்றிலும் பயன்படுத்தப்பட்டது, அதன் காணொளி இதோ.

https://www.youtube.com/watch?v=7SznyPpRfJM


1983 இல் பல்லவி அனுபல்லவி படத்தில் பிரசவித்த இந்த இசைஞானியின் இசை 26 வருஷங்கள் கழித்து அவர் வாரிசு யுவனால் "சர்வம்" படத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதை பிரித்தெடுத்துத் தொகுப்பாக இங்கே அளிக்கின்றேன். இந்த இசைக் காட்சிகள் படத்தின் இடைவேளை வரை வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


முதலில் இந்த சர்வம் படத்தில் பயன்படுத்தப்பட்ட இசையை மொபைல் போனின் ரிங் டோனாக நீங்கள் பயன்படுத்தும் வசதிக்காக எடிட் பண்ணி இங்கே தருகிறேன், தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


தரவிறக்கம் செய்ய


http://www.radio.kanapraba.com/sarvam/sarvamring.mp3


வாழ்க்கை படத்தில் வந்த மெல்ல மெல்ல என்னைத் தொட்டு பாடலில் வந்த முகப்பு இசையை மொபைல் போனின் ரிங் டோனாக நீங்கள் பயன்படுத்தும் வசதிக்காக இங்கே தருகிறேன், தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


http://www.radio.kanapraba.com/sarvam/mellamella.mp3


தொடர்ந்து சர்வம் படத்தில் முக்கிய காட்சிகளில் வந்த அந்த இசை மெட்டை ஒரு சில இடங்களில் வெவ்வேறு இசைக்கருவிகளைக் கொண்டு வேறுபடுத்தியிருக்கிறார் கேட்டு அனுபவியுங்கள்.


காட்சி ஒன்று

http://www.radio.kanapraba.com/sarvam/sarvam1.mp3  

காட்சி இரண்டு

http://www.radio.kanapraba.com/sarvam/sarvam2.mp3

காட்சி மூன்று

http://www.radio.kanapraba.com/sarvam/sarvam3.mp3

காட்சி நான்கு

http://www.radio.kanapraba.com/sarvam/sarvam4.mp3

காட்சி ஐந்து

http://www.radio.kanapraba.com/sarvam/sarvam5.mp3

காட்சி ஆறு

http://www.radio.kanapraba.com/sarvam/sarvam6.mp3

காட்சி ஏழு

http://www.radio.kanapraba.com/sarvam/sarvam7.mp3

காட்சி எட்டு

http://www.radio.kanapraba.com/sarvam/sarvam9.mp3

காட்சி ஒன்பது

http://www.radio.kanapraba.com/sarvam/sarvam10.mp3

காட்சி பத்து

http://www.radio.kanapraba.com/sarvam/sarvam11.mp3

ஆர்யா மேல் த்ரிஷாவுக்கு வரும் காதல்காட்சியோடு நிறைவு பெறுகிறது இந்த இசைஜாலம் இப்படியான ஒரு முத்தாய்ப்பான கலக்கல் இசையோடு

http://www.radio.kanapraba.com/sarvam/sarvama.mp3


கானா பிரபா


Saturday, September 18, 2021

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா கிளப்பிய “நீயா” நினைவுகள்

இன்று காலை எழுந்ததுமே எனக்காகக் காத்திருந்தது போல மனசு முணுமுணுத்தது இந்தப் பாட்டை. இச்சாதாரிப் பாம்பு போல விடுவதாயில்லை, அப்படியே அந்தப் பழைய உலகத்தில் நுழைந்து இந்தப் பாடலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 

பி.சுசீலா & எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூட்டணி கொடுத்த இன்னொரு எழுபதுகளின் ஹிட் பாட்டு, வாலி ஐயா வரிகளுக்கு “கவிஞர் வழங்கிய தேவரின்” சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசை.

இந்தப் பாட்டு எழும் காட்சியே அசாத்தியமானது. 

படத்தின் இறுதிக் காட்சியின் பரபரப்புக்கு முன்னோட்டமாக இருக்கும். இச்சாதாரிப் பாம்பு ஜோடிகளாக (ராஜா) சந்திரமோகன் & ஶ்ரீப்ரியா (நாகராணி (ஶ்ரீப்ரியா) காதலனைக்கொன்ற கமலின் நண்பர்கள் ஒவ்வொருவராக வஞ்சம் தீர்க்கும் நாகராணி கடைசியாகக் கமலைக் குறிவைக்கும் நேரம். அந்த நாகராணியை அழிக்க ஏவப்படும் பாம்பால் துரத்தப்பட்டு கமல் வீட்டிலேயே அடைக்கலமாகும். அப்போது கமலின் காதலி லதா ரூபத்துக்கு மாறும் நாகராணி தன்னை இச்சாதாரிப் பாம்பு கொல்ல வருகிறது என்று “நல்ல” பாம்பைக் காட்ட அது கமலின் துப்பாக்கிக்கு இரையாகும். 

அப்படியே படுக்கையறைச் சல்லாபத்துக்கு லதாவை அழைத்துப் போன பின்னர் தான் தன் படுக்கையறையில் லதா ரூபத்தில் இருப்பது இச்சாதாரிப் பாம்பு என்று கமலுக்குத் தெரியும், அது தெரியாத பாம்பு அவரைத் தீர்த்துக் கட்டத் தருணம் பார்க்க, எழுகிறது இந்தப் பாட்டு.

அந்த ஆரம்ப சித்தார் இசை பாம்பு வளைந்து நெளியுமாற் போல எழ

“நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா” 

https://www.youtube.com/watch?v=ftj71Uv-LMk

என்று எஸ்பிபி பாடும் பாங்கைப் பாருங்கள். அப்படியே அந்த வரிகள் தாவிப் பட்டு மெத்தைக்குப் போவது போன்ற பாங்கில் இருக்கும். 

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா பின்னணியில் டுக்கு டுடுடு டுக்கு டுடுடு அக்மார்க் சங்கர் – கணேஷ் முத்திரைத் தாள லயம். இடையில் வரும் அந்த கிட்டார் எல்லாம் எழுபதுகளின் பொற்கால இசை நுட்பத்தை அழகாகக் கோடிட்டுக் காட்ட அந்த 2.58 வது நிமிடத்தில் ட டுடுடடக்கு டு டுடுட டக்கு டு மீண்டும் சங்கர் கணேஷ் தாள வாத்திய முத்திரை பீறிடும்.

இந்த வேளை வாலியாரின் குறும்பைப் பாருங்கள். வந்திருக்கிறது தன் காதலி அல்ல பாம்பு தான் என்றும் சொல்ல வேண்டும். அதே நேரம் அந்தக் காதல் களியாட்டத்துக்கும் பொருத்த வேண்டும்.

இப்படி எழுதுவார் குறும்புக்கார வாலி

விழிகளில் தாபம் “படம் எடுத்தாடும்”

ஓ..ஓஓ ஓஓ ஓஓ

வேளையில் நான் வர “சீறுது” சிணுங்குது ஏன்

படம் எடுப்பதும், சீறுவதும் பாம்பின் கலையல்லவா 

அத்தோடு விட்டுவிடவில்லை இச்சாதாரிப் பாம்புக்கும் இரட்டை அர்த்தம் இப்படி

“காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்

“கதை முடிக்க” நன் நாளைப் பார்த்திருந்தேன்”

மீண்டும் கமலுக்கு 

அது புரியாததா நான் அறியாததா

என்று இந்தப் பாடலுக்கு உச்ச பட்ச நியாயம் வாலியாரிடமிருந்து.

நீயா படத்தின் மூலம் “நாகின்” என்ற ஹிந்திப் படம். அந்தப் படத்துக்கு லஷ்மிகாந்த் – பியாரிலால் இரட்டையர்கள் இசை.

ஹிந்திப் படத்தின் பாடல்களை அப்படியே பாவிக்காமல் 

“ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்” https://www.youtube.com/watch?v=OqMKSFrHO4g

பாடலின் மூலப் பாடலான “தெரே சங்கு பியார் மெய்ன்” https://www.youtube.com/watch?v=5tUvq5mKpdI பாடலை மட்டும் எடுத்து அதையும் அப்படியே ஒற்றியெடுக்காமல் பின்னணியில் தமிழ்ச் சூழலுக்கான இசை பொருத்தியது சங்கர் – கணேஷ் இரட்டையர்களின் சாமர்த்தியம்.

“ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்” பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் குரலில் உச்சம் பெற்று விளங்கிய பாடல்களில் ஒன்று. 

அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்

இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே

அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்

இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே

கண்ணதாசனின் ஜீவன் மிகு வரிகளைப் பாட்டு முடிந்ததும் முணு முணுத்துக் கொண்டிருப்போம்.

அப்படியே புலமைப் பித்தன் பி.சுசீலா & எஸ்பிபி ஜோடி சேர்ந்த “உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை” 

https://www.youtube.com/watch?v=1ADyU50yhh0

என்று கூட்டிக் கொண்டு போய் விடுவார். இந்தப் பாட்டைக் கேட்டால் எம்.ஜி.ஆருக்குப் போட்ட பாட்டோ என்று நினைக்கத் தோன்றும் கவி வரிகளும், இசை ஜாலமும்.

பழம் பெரும் பாடலாசிரியர் ஆலங்குடி சோமுவுக்கு ஒரு துள்ளிசைப் பாட்டு “ஒரு கோடி இன்பங்கள்”  https://www.youtube.com/watch?v=FMVWGhhL1Hc

எஸ்பிபி & எஸ்.ஜானகி என்றாலேயே துள்ளிசை ஏரியாவில் கலக்குக் கலக்குவார்கள் என்பதற்கான முன்னோடிப் பாட்டுகளில் ஒன்று.

ஆக பி.சுசீலா, வாணி ஜெயராம், எஸ்.ஜானகி ஆகியோரோடு எஸ்பிபி கொடுத்த ஒவ்வொன்று வித விதமான இன்ப ரசங்கள்.

நீயா படம் போல முன்னணி நடிகர்களை, நடிகைகளை மிகவும் கச்சிதமாக ஒரு படத்தில் கொண்டு வந்ததை நான் அறியேன். கமல்ஹாசன் தொட்டு ஒரு குறும் பாத்திரத்தில் வரும் முத்துராமன் வரை எல்லோருமே வெகு சிறப்பாகப் பயன்பட்டிருப்பார்கள்.

ஶ்ரீப்ரியாவின் குடும்பத் தயாரிப்பு. அந்தக் காலத்தில் “பசி” போன்ற கலைப் படங்களை இயக்கினாலும், “ஆயிரம் ஜென்மங்கள்” என்ற மலையாளத்தில் (யக்‌ஷகானம்) இருந்து தமிழ் வடிவம ஆக்கிப் பெரும் சூப்பர் ஹிட் படம் ஆக்கியதால் இயக்குநர் துரை நீயா படத்தை எடுக்கத் தேர்வாகியிருக்கலாம். ஶ்ரீப்ரியா தான் உறுதிப்படுத்த வேண்டும்.

அந்தக் காலத்தில் புதுப் பட விளம்பரங்கள் இலங்கை வானொலியில் “திரை விருந்து” என்று ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும். இப்படியான ரேடியோ வழி பட விளம்பரங்களுக்கு நமக்கு சிலோன் ரேடியோ ஒன்று தான் கதி என்று போன வாரம் சாய் வித் சித்ராவில் எம்.ஜி.ஆரை வைத்துப் படம் தயாரித்த பழம் பெரும் தயாரிப்பாளர் ஈ.வி.ராஜன் (நடிகை ஈ.வி.சரோஜாவின் தம்பி) கூடக் குறிப்பிட்டிருந்தார். 

நீயா படத்தின் பாடல்கள் அப்போது “றேடியோ சிலோனில்” சக்கை போட்டுக் கொண்டிருந்தன. நீயா பட விளம்பரத்தை கே.எஸ்.ராஜா திரை விருந்து என்று செய்வார். அவரின் அந்தத் திரை விளம்பரப் பாணியே அலாதியானது. 

“போகாதீங்க ராஜா” என்று ஶ்ரீப்ரியாவின் அழுகுரலைக் கச்சிதமானத் தன் நிகழ்ச்சி முடிவில் பொருத்தி விட்டு, தன் அக்மார்க் சிரிப்புடன் நான் மீண்டும் வருவேனம்மா என்று சொல்லும் கே.எஸ்.ராஜாவை அந்தக் காலத்து வானொலிப் பிரியர்கள் அவ்வளவாக மறந்து விட மாட்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் “கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்ற விளம்பரத்தோடு தான் “நீயா” படம் ஓடியது. எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது அப்போது அம்மா பள்ளிக்கூட ஆசிரியை. சித்தியாட்கள் பகல் படக்காட்சி பார்க்க காரை நேராக அம்மாவின் பள்ளிக்கூடத்திற்கே கொண்டு வந்து திடீர் விடுப்புப் போட்டு அள்ளிக் கொண்டு போனார்கள். அப்போது சின்னப் பெடி நானும் ஒட்டிக் கொண்டு விட்டேன். ஒருவாறு தியேட்டர்காரரைச் சமாளித்து பாம்பு வரும் கட்டத்திலெல்லாம் என் கண்ணை அம்மா மூட கதை நான் மூட இப்படியாகப் படம் பார்த்தோம்.
ஊருக்குப் போகும் போதெல்லாம் அந்தப் பழைய தியேட்டர்களை கண் அளந்து விட்டு வருவேன். போர் முற்றிய காலத்தில் குடும்பம் இழந்த தனிப் பெண் போல பொலிவிழந்திருக்கும் தியேட்டர் இருந்த இடம் இருப்பதைப் பார்த்து பெருமூச்சோடு கடந்து வருவேன்.

கானா பிரபா

18.09.2021


Tuesday, September 14, 2021

மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் ❤️

வேலைக்குப் பயணித்துக் கொண்டிருக்கும் போது என் காதில் அடிக்கடி அமர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் பாட்டு இது.

ஆகச் சிறந்த நினைவுக் கிளப்பிகளில் ஒன்று.

யாழ்ப்பாணத்தில் இருந்து நிரந்தரமாகப் பிரிகின்றோம் என்று தெரியாமல் அப்போது கொழும்புக்கு மேற்படிப்பின் நிமித்தம் வந்தவேளை சம காலத்தில் இந்தப் பாடலும் அப்போது வெளிவந்த காரணத்தால், எப்போது இதைக் கேட்கும்போதெல்லாம் வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகை மாளிகையின் மேல்

அடுக்கு மாடியில் நண்பர்களோடு குடியிருந்ததை நினைப்பூட்டும். 

ராஜாவின் பாடல்கள் ஏதோதோ சினிமாவின் காட்சிக்களனுக்குப் பயன்படும் நோக்கில் இசையமைத்திருந்தாலும் குறித்த பாடல்களுக்கு நம் பசுமையான நினைவுகளைத் தட்டியெழுப்பும் வல்லமை உண்டு.

சதிலீலாவதி திரைப்படம் கமல்ஹாசனும் பாலுமகேந்திராவும் நீண்ட வருஷங்களுக்குப் பின் இணையக் காரணமான படம். ராஜ்கமல் என்ற கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமே தயாரித்திருந்தது. வசனத்தை கிரேஸி மோகன் எழுதியிருந்தார். அப்போது ஒரு சஞ்சிகை பேட்டியில் கிரேஸி மோகனின் துணுக்குத் தோரணம் என்ற விமர்சனத்தை  பாலுமகேந்திரா மிகவும் எரிச்சலோடு எதிர்கொண்டார்.

இந்தப் படம் கன்னடத்தில் மீளவும் நாயகன் ரமேஷ் அர்விந்த் இயக்க, கமல்ஹாசன் தமிழில் கோவை வட்டார வழக்கில் பேசி நடித்தது போலவே கன்னடத்தின் ஹூப்ளி வட்டார வழக்கில் பேசி நடித்தார். ராமா பாமா ஷியாமா என்பது கன்னட வடிவத்தின் தலைப்பு.

சதிலீலாவதி படத்தின் அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். 

"மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜயோகம் காலம் தோறும் வாழும்" இந்தப் பாடல் வந்த காலகட்டத்தில் இளையராஜாவின் இசை அதுவரை பயணித்த இசை வடிவத்திலிருந்து மாற்றம் கண்டது. இளையராஜாவின் ஆரம்பகாலம், எண்பதுகள், தொண்ணூறுகள் என்று பிரிக்கும் போது அவரின் இசை வடிவம் ஒவ்வொரு தளங்களிலும் மாறியிருப்பதை அவரின் தீவிர ரசிகர்கள் உன்னிப்பாக அவதானித்திருப்பர். என்னைப் பொறுத்தவரை இந்த "ராஜனோடு ராணி வந்து சேரும்" பாடல் இருபது வருடங்களுக்கு முன்பே தன்னுடைய அடுத்த தலைமுறையான யுவன் ஷங்கர் ராஜா காலத்துக்கு முன்னோடியாக அமைந்ததாகவே எண்ணிக் கொள்வேன்.

தான் கொண்ட கலையைத் தீவிரமாக நேசிக்கும் கலைஞன் என்பவன் தான் வெற்றி பெற்ற அம்சத்தில் இருந்து விலகி, காலத்துக்குக் காலம் புதுமையான படைப்புகளைக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்போடு இருப்பான். ஜனரஞ்சக ரீதியான வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம் தான்.

"எப்படி ஹிட் பாடல்களை அமைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு

"பாடல்களை ஹிட் ஆக்குவது நீங்க தானே" என்று சொன்ன ராஜாவின் பதில் தான் இதை முன்மொழியும்.

இந்தப் பாடலின் உருவாக்கம் குறித்து அப்போது உதவி இயக்குநராக இருந்த சுகா ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் வாத்தியக்கலைஞர் விஜி இம்மானுவேல் இந்தப் பாடலுக்குக் கையாண்ட சாகித்தியத்தையும் சிலாகித்திருப்பார்.

பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கும் இதுதான் 

இளையராஜாவின் இசையில் முதல் பாடல்.

இது மன்மத சாம்ராஜ்யம் எனும் போது அதை அழுத்திக் காட்டும் வயலின் மிதப்பு,

அந்த பித்தளைக் கருவிகள் இடையிசையைத் தங்கமாக உருக்கும் ஜாலம்,

“இன்பக் கனாவைத் தந்தான் அவன் தந்தான்” புல்லாங்குழல் ஓகோ என்று கேட்டு வைப்பது,

“பக்கத் துணை வாய்க்காமல்

பெண் வாடினாளோ

“பக்கம் வந்து கை சேர

பண் பாடினாளோ”

இரண்டுக்கும் இடையில் அணையாக மேவிப் போகும் இசை ஜாலம்,

அப்படியே இரண்டாவது சரணத்தில் சாக்ஸபோனை மிதக்க வைத்து ஒரு ஜலக்கிரீடை,

என்று இந்தப் பாட்டில் மூழ்கினால் ஆழ் கடலுக்குள் முக்கி முத்தெடுக்கும் சுகம்.

இந்த ராஜ யோக இசைக்கு வாலியாரின் வைர வரிகள் நாண் பூணும்.

பாடல்களுக்கு நினைவுகளை உறைய வைக்கும் சக்தி உண்டு. 

இந்த மாதிரிப் பாடல்களைக் கேட்க்கும் போது அந்த நினைவுகளை  உருக்கிக் கொண்டு வரும்.  

அந்தத் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் எந்த வீதியில் எந்தச் சோதனைச் சாவடியில் பொலிஸ்காரன் மறிப்பானோ? 

மறித்து அடையாள அட்டை பார்த்து தமிழன் என்றால் மேற்கொண்டு கேள்வி இல்லாது பொலிஸ் நிலையம் கொண்டு போய் விடுவானோ?

என்ற கழுகும், கோழிக் குஞ்சும் வாழ்க்கையில் தப்பிப் பிழைத்து அந்த அடுக்கு மாடிக் கட்டடத்துக்குள் புகுந்து, மொட்டை மாடியில் 

சாரம் (லுங்கி) கட்டி பெடியளாக இருந்து இளையராஜாவின் பாடல்களை அசை போட்டு மகிழ்வதந்தக் காலத்து இனிய நினைவுகளைச் சொல்லிப் போகும் பாட்டு இது.

தாயகத்துக்குப் போகும் போதெல்லாம் அந்தக் கட்டடத்தின் பக்கம் வலிந்து நடை போட்டுப் போய்ப் பார்த்து விட்டு வருவேன். என் தாயகப் பயணங்களே இம்மாதிரியான பழையதைத் தேடிப் போய்ப் பார்த்து விட்டு வருவது தான்.

அப்போது

"கங்கைக்கொரு வங்கக் கடல் போல் 

வந்தான் அவன் வந்தான்" 

சித்ரா பாடும் வரிகளாக வங்கக் கடலாய் நெஞ்சில்  கிளர்ந்து எழும் அந்த நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டே பயணிக்கும் பாட்டு.


https://www.youtube.com/watch?v=H2uDThYyUFM&list=RDH2uDThYyUFM&start_radio=1

Sunday, September 12, 2021

பாட்டுக் குயில் ஸ்வர்ணலதாவும் சில அறிமுக இசையமைப்பாளர்களும்


மகாகவி சுப்ரமணிய பாரதியார் பாட்டுடன் தான் ஸ்வர்ணலதா

தமிழில் நீதிக்குத் தண்டனை வழியாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அறிமுகமானர்.

மகாகவி சுப்ரமணியபாரதியார் மறைந்தது செப்டெம்பர் 12 ஆம் திகதி அதிகாலை, ஸ்வரணலதா மறைந்ததும் அப்படியே.

பாரதியார் இறக்கும் போது அவருக்கு வயது 38 

ஸ்வர்ணலதா இறக்கும் போது அவருக்கு வயது 37

இந்த வாழ்க்கை எவ்வளவு விசித்திரங்களை ஒற்றுமையோடு நிகழ்த்திக் காட்டுகிறது…..

பாட்டுக் குயில் ஸ்வர்ணலதாவைப் பற்றி நினைத்தால் இசைஞானி இளையராஜாவில் இருந்து ரஹ்மான் ஈறாகப் பல அரிய பாடல்கள் மனசை நிறைக்கும். தொண்ணூறுகளின் அறிமுக இசையமைப்பாளர்களின் முதல் படங்களிலும் ஸ்வர்ணலதாவின் குரலை அரங்கேற்றி அழகு பார்த்தார்கள். அவற்றில் சில இதோ

"செம்பருத்தி செம்பருத்தி நேசப் பூவே இந்தச் செவ்வந்திக்கு எப்ப வருது"

https://www.youtube.com/watch?v=hiEaGseh9Hs

இந்தப் பாடல் தொன்ணூறுகளில் வெளிவர இருந்த "பவளக் கொடி" படத்தில் அறிமுக இசையமைப்பாளர் என்.சோமன்ராஜ் இசையில் வரவிருந்தது. இன்றும் இலங்கையின் பண்பலை வானொலிகள் கொண்டாடும் இந்தப் பாடலை ஸ்வர்ணலதாவுடன் மனோ பாடியிருப்பார்.

ஆனந்த், கோபால் ராவ் & ஷலீன் ஷர்மா ஆகிய மூன்று இசையமைப்பாளர்களும் "ஆகோஷ்" என்ற பெயரில் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரித்து அவர் மகன் எபி குஞ்சுமோன் நாயகனாக நடிக்க "கோடீஸ்வரன்" படத்தில் அறிமுகமாக இருந்தார்கள். படம் 20 வருடங்கள் கடந்தும் இன்னும் வராவிட்டாலும் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இங்கேயும் மனோ மற்றும் ஸ்வர்ணலதாவின் "அடி கண்ணே"

https://www.youtube.com/watch?v=mhm1-fl9LjQ கலக்கலான துள்ளிசை ரகம்.

"கோகுலம்" என்ற பெயரைப் போலவே படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள். இயக்குநர் விக்ரமனோடு இசையமைப்பாளர் சிற்பி அவரின் ஆரம்ப காலத்தில் இணைந்த இந்தப் படத்தில் முத்தான மூன்று பாடல்கள். அதில் மனோவுடன் ஜோடி கட்டிய "புது ரோஜா பூத்திருக்கு" https://www.youtube.com/watch?v=3eyhkUt_xJM ஒரு காலத்தில் எனையாண்ட காதல் பாட்டு.

ஆனால் சிற்பி அவர்களுக்கு முதன்முதலாக ஒரு “சிறப்பு” அறிமுகத்தைக் கொடுத்த செண்பகத் தோட்டம் படத்தில் “முத்து முத்துப் பூமாலை” https://www.youtube.com/watch?v=AnPPw0wSbv8

சிறு பாட்டு என்றாலும் மனோவோடு கூட்டுச் சேர்ந்து கலக்கியிருப்பார். இதே பாடல் சோக வடிவில் ஸ்வர்ணலதாவுக்குப் பதில் ஜானகி இணைந்திருப்பார்.

வெற்றி முகம் படத்தில் வசந்த ராஜன் என்ற இசையமைப்பாளர் மூன்று ஜோடிப் பாடல்களை மனோ & ஸ்வர்ணலதாவுக்காகப் பகிர்ந்து கொடுத்திருப்பார்.

தொட்டு விட நான் தொட்டு விடத் தான்

இந்தப் பட்டு உடல் பூப்பூக்கும்

https://youtu.be/BLukaNjROtA

எஸ்பிபி & ஸ்வர்ணலதா கூட்டுப் பாடிய இந்தப் பாடல் கேட்ட கணம் கொண்டு இன்னும் கேட்கக் கேட்கத் தூண்டுகிறது. எஸ்பிபியின் கலகலப்பான வாய் மொழி ஒரு பக்கம், இலேசாக ஜலதோஷம் தொற்றியது போன்ற ஸ்வர்ணக் குரலோடு ஸ்வர்ணலதா என்று அழகிய கூட்டு இது. பாடல் சரணத்துக்குப் பாயும் போது சங்கதிகள் தெறிக்கும் இலாவகம். கறுப்பு ரோஜா படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை இசையமைத்தவர் எம்எஸ்வி ராஜா.

தொண்ணூறுகளின் சூப்பர் குட் படங்களின் தயாரிப்பாளர் சூப்பர் குட் செளத்ரியுடம் கதை சொல்லப் போய் இசையமைப்பாளர் ஆன செளந்தர்யனின் முதல் படம் சேரன் பாண்டியன். படம் பார்க்கும் போது அந்த நேரத்தில் தான் அறிமுகமான "ஏ சம்பா நாத்து" https://www.youtube.com/watch?v=Gal__ab6Njo பாடலைக் கேட்டதுமே கவர்ந்து கொண்டது. ஸ்வர்ணலதா ஜோடிக் குரல்களோடு பாடிய அந்தப் பாட்டுக்கு முன்பே அதே படத்துக்காக ராஜ்குமாருடன் பாடிய "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு" https://www.youtube.com/watch?v=DutG8rDr3Uw பட்டி தொட்டியெல்லாம் கலக்கிய பாட்டு.

"இரவுகளை உறங்க வைக்கவே தாலாட்டு" https://m.youtube.com/watch?feature=share&v=unTwWw1l5Jc இசையமைப்பாளர் காண்டீபன் இசையில் சித்திரமே நீ சொல்லடி படத்துக்காக ஸ்வர்ணலதா பாடிய தனிப்பாட்டு இன்றும் கனேடியத் தமிழ் வானொலி ஒன்றின் இரவு நேரத்து நிகழ்ச்சியை நிறைக்க வைக்கும் பாட்டு.

மேலும் யுவன் ஷங்கர் ராஜாவின் அறிமுகப் படம் அரவிந்தன் இலிருந்து "தங்கச் சூரியனே"

https://www.youtube.com/watch?v=prxftSE4w-k

மனோ, ஸ்வர்ணலதா, குழுவினர்

முன்பு ஸ்வர்ணலதா நினைவு நாளுக்காகப் பகிர்ந்தது. மேலதிக சேர்க்கைகளோடு இந்நாளில் பகிர்கின்றேன்.

கானா பிரபா


Monday, September 6, 2021

சுனில் பெரேரா நாடோடிப் பாடகன் விடை கொடுத்தார்



தாயகத்துக்குப் பயணிக்கும் கடந்த இரண்டு தசாப்தங்களில் சுனில் பெரேராவின் பெரும் பதாகை பதாகை கண்ணில் தாப்பாமல் இருக்காது, எங்காவது ஒரு வீதியிலாவது கிட்டார் வாத்தியத்தோடு தன் குழுவோடு சிரித்துக் கொண்டிருப்பார் ஏதோவொரு இசை நிகழ்வுக்காக.  

ஐம்பது ஆண்டுகள் சிங்கள இசை மேடைகளின் எல்லை தாண்டி வியாபித்த கலைஞர் அவர். அந்தக் காலத்தில் ரூபவாஹினியில் தோன்றிய இசை முகம் என்ற அளவோடு இருந்தாலும், கொழும்புப் பக்கம் வந்தால் இவரின் வீச்சை அறிந்து வியப்படைய முடிந்தது. மெல்பர்ன், சிட்னியில் இருக்கும் சிங்களவரது மளிகைக் கடைகளிலும் இவரின் இசைச் சுற்றுப் பயணங்கள் குறித்து அறிவதுண்டு. இலங்கையின் மேடையிசைக் கலைஞர்கள் பன்முகப்பட்ட இசையாளராகவும் இருப்பதுண்டு. அதே தான் சுனில் பெரேராவின் விஷயத்திலும் கூட.

ஒரு பாடகராக, பாடலாசிரியராக, வாத்தியக் கலைஞராக, இசையமைப்பாளராகப் பன்முகம் கொண்ட இசை ஆளுமை அவர்.

இங்கே சுனில் பெரேராவின் தந்தை அன்டன் பெரேரா ஒரு ஓய்வு பெற்ற இராணுவ வீரர். இலங்கை இசை மேடைகளில் பைலா பாடல்களுக்கான வீச்சு அதிகம். அன்டன் பெரேராவும் அவ்விதமே The Gypsies என்ற வாத்தியக் குழுவை நிறுவி சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடல்களை அரங்கேற்ற ஏதுவாக அமைந்தது. 

அன்டன் பெரேராவின் ஐந்து புதல்வர்களில் தலை மகன் இந்த சுனில் பெரேரா. தன்னுடைய 11 வது வயதிலேயே கிட்டார் இசைக் கருவியைக் கற்றுத் தேர்ந்தவர் படிப்பில் ஆர்வம் காட்டாமல் தன்னுடைய 15 வது வயதிலேயே தந்தையின் இசைக் குழுவில் சேர்ந்து விட்டார். 

ஜிப்ஸீஸ் இசைக் குழுவின் தலைப் பாடகராக சுனில் பெரேரா விளங்கினார். 

சுனில் பெரேரவின் அந்தப் பருத்த முகமும் சிரிப்புப் பற்களுமே ஒரு உற்சாகத்தை எழுப்ப, அதையும் தாண்டி ஒரு உற்சாகத் துள்ளலோடு மேடை இசை நிகழ்ச்சியை அவர் கொடுக்கும் பாங்கில் ரசிகர் சொக்கிப் போவதில் என்ன வியப்பு?

ஜிப்ஸீஸ் இசைக் குழுவுக்கு முதலில் உச்சம் கொடுத்த பாட்டு

“லிண்ட லங்க சங்கமய” 

https://www.youtube.com/watch?v=59zW5FHBQZM

அதனைத் தொடர்ந்து 

அம்மா அம்மா மே மட்ட

https://www.youtube.com/watch?v=-lMdrwTSKSA

இன்னொரு பிரபலம் கொடுத்த எழுபதுகளின் இறுதியில் விளைந்த பாட்டு.

கொத்தமல்லி 

https://www.youtube.com/watch?v=6X-hCN-A6EA

போன்ற பாடல்கள் இவர்களின் பிரபலம் கொடுத்த துள்ளிசைக்கு மேலும் சான்று.

எழுபதுகளின் இறுதியில் Dance With the Gypsies என்ற தொடர் இசைத் தட்டுகள் ஐந்தைத் தமது குழுவின் சார்பில் வெளியிட்டு இலங்கை ரசிகர்களின் மனதில் அவர்கள் பதியம் போட்டார்கள். பின்னாளில் அவர்கள் மேடை இசை தாண்டி, வீடு தேடி வரும் இசைத்தட்டு யுகம் வரை இந்த இசை முயற்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் இசைச் சுற்றுப் பயணங்களையும் வெளிநாடுகளில் நிகழ்த்திக் காட்டினார்கள். இலங்கையின் ஆகப் பெரிய பைலா கோஷ்டிக் குழுவாக அடையாளப்பட்டார்கள்.







சுனில் பெரேரா எந்தவொரு உலகியல் சார்ந்த விடயங்களிலும் வெளிப்படையாகத் தன் கருத்துகளைக் கொடுப்பவர் என்ற அடையாளத்தையும் கொண்டிருந்தார். 

வெறுமனே பொழுது போக்குக்கான இசை மேடைப் பாடகனாக அன்றி, சமூக நீதிக்கான குரலாகத் தன்னை அடையாளப்படுத்தி நிறுவியும் காட்டியவர்.

சம கால நடப்புகளை, அரசியல் விமர்சனமாகச் சாடி எள்ளல் பாணியில் இவர் கொடுத்த I don't know Why 

https://www.youtube.com/watch?v=1SYnoRcIW08

பாடல் அரசியல் அச்சுறுத்தலால் முடக்க நிலையில் கூடச் சில ஆண்டுகள் இருந்தது.

இலங்கை அரசியலின் நிகழ் கால “மன்னர்களின்” கடந்த ஆட்சியைக் கூடச் சாடி வந்தவர். 

ஜிப்ஸுஸ் இசைக் குழு தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடிய இதே ஆண்டில் தான் சுனில் பெரேரா தன் ரசிகரிகளிடமிருந்து நிரந்தரமாக விடை பெற வேண்டிய துர்ப்பாக்கியமும் கொரோனா வடிவில் வந்திருக்கின்றது.

கொரோனாவுக்கான சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர் நேற்று செப்டெம்பர் 5 ஆம் திகதி கொரோனாவுக்குப் பிந்திய உடல் நலக் கேட்டால் மரண தேவதையைப் பற்றிக் கொண்டார்.

இன்னும் 11 நாட்களில் அவரின் பிறந்த நாள் (14 செப்டெம்பர் 1952) வரவிருக்கும் சூழலில் தன்னுடைய 68 வயதில், 53 வருட இசை வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி கொடுத்திருக்கிறார்.

அடுத்த தடவை தாயகப் பயணம் போகும் போது அந்தத் தொப்பிக்காரப் பாடகரின் பெரும் பதாகை இருக்காது.

இந்தியச் சூழலில் எப்படி ஒரு உற்சாகப் பாட்டுக்காரன் எஸ்பிபியின் பிரிவை ஆண்டொன்று தொடும் போதும் இன்னும் ஏற்க மறுக்கும் ரசிக உலகம் இருக்கிறதோ அது போலவே சுனில் பெரேராவின் பிரிவையும் ஏற்க மறுத்து அவரை ஆண்டாண்டு காலம் கொண்டாடப் போகின்றார்கள். 

சுனில் பெரேரா குறித்த வரலாற்று உசாத்துணை நன்றி : விக்கிப்பீடியா

கானா பிரபா

Sunday, September 5, 2021

கவிஞர், பாடலாசிரியர் மு.மேத்தா அகவை 76

இன்று கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள். தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்றவர் என்ற தகமையைத் தாண்டி, ஈழப்பிரச்சனை குறித்து அன்று தொட்டு இன்றுவரை "தெளிவான" சிந்தனையோடு இயங்கும் மிகச்சில படைப்பாளிகளில் இவரும் ஒருவர் என்ற மேலதிக காரணத்தால் மு.மேத்தா அவர்களின் மீது எனக்கு இன்னும் ஒருபடி அதிகப்படியான நேசத்தை என்னுள் விதைத்து வைத்திருக்கிறேன். ஒருமுறை ஆனந்த விகடனில் இவர் எழுதிய சிறுகதை ஒன்றில் ஈழத்தமிழர் தரப்பின் நியாத்தை மறைபொருளாகச் சுட்டி எழுதியிருந்தார். 

அதற்கு முன்னரே ஈழத்தின் எண்பத்து மூன்றுகளின் அவலங்களை

"எல்லார்க்கும் விருந்தளித்து 

ஏற்றம் பெற்ற எங்கள் இனம்

மரணதேவதையின் கோரப்பசிக்கு 

விருந்து கொடுத்த பின்

அங்கே இப்போது அகதியானது"

போன்ற புதுக்கவிதைகள் தாங்கிய "திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்" என்ற தொகுதியில் கொடுத்திருப்பார்.

மு.மேத்தாவின் கவிதைகளை அவரின் "ஊர்வலம்" என்ற கவிதைத் தொகுதியே எனக்கு அறிமுகப்படுத்தியது. பின்னர் அவளுக்கு ஒரு கடிதம், நடந்த நாடகங்கள், முகத்துக்கு முகம், அவர்கள் வருகிறார்கள், கண்ணீர்ப்பூக்கள், வெளிச்சம் வெளியே இல்லை, நந்தவன நாட்கள், மு.மேத்தா முன்னுரைகள், மு.மேத்தா திரையிசைப்பாடல்கள் என்று வாங்கிக் குவித்தேன். பத்து வருடங்களுக்கு முன்னர் "காதலர் கீதங்கள்" என்ற வானொலித் தொகுப்பைத் தயாரித்து வழங்கியபோது வெறுமனே காதல் பாடல்களை மட்டும் சேர்த்து இட்டு நிரப்பாமல், பின்னணி இசையோடு அவரின் கவிதைத் தொகுதிகளில் இருந்து இரண்டடி வரிகளை எடுத்துக் கொடுத்துவிட்டு அதற்கேற்ற சூழலுக்குப் பொருந்துமாற்போலப் பாடல்களை இணைத்துக் கொடுத்தேன். அந்தப் படைப்பு நேயர்களைக் கவரவே பின்னர் தாங்களும் ஈரடிக் கவிதையோடு பாடல்களை இணைத்து வானொலிப் பிரதியாக அனுப்பி நிகழ்ச்சி தயாரிக்க வைத்தார்கள். 

கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இந்த நிகழ்ச்சியைச் செய்தேன்.

மு.மேத்தாவின் புதுக்கவிதைகளை நடிகர் முரளியின் ஏக்கம் கலந்த தொனியில் அந்தக் காதலன் உள்ளக்கிடக்கையாகக் கொடுத்த இதயம் படம் சிறப்பானது.அந்த ஒலிப்பகிர்வுகளை இங்கே கொடுத்திருக்கிறேன்.

http://www.radiospathy.com/2011/02/www-www.html

கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துலிங்கம் உள்ளிட்ட வெற்றிகரமான திரையிசைப்பாடலாசிரியர்கள் தம் திரையிசை அனுபவங்கள், பாடல் பிறந்த கதைகளை நூலுருவில் கொடுத்தது போன்றே மு.மேத்தா அவர்களும் தனது திரையிசைப்பாடல்கள் நூலில் தன் ஆரம்பகாலப் படங்களின் பாடல்கள் உருவான சுவையான பின்னணி மற்றும் காட்சிக்குப் பொருந்திய பாடல் வரிகளின் நியாயத்தை எல்லாம் நிறுவியிருப்பார். அத்தோடு பிரபல வானொலி, தொலைக்காட்சிப் படைப்பாளர் பி.ஹெச்.அப்துல்ஹமீத் அவர்கள், கலைஞர் தொலைக்காட்சியில் படைத்த இன்னிசை மழை என்ற நிகழ்ச்சியிலும் மு.மேத்தாவின் பாடல் அனுபவங்கள் சிறப்பாகப் பதிவாகியிருக்கின்றன.

"அனிச்ச மலர்" என்ற படத்தில் சங்கர்-கணேஷ் இசையில் அறிமுகமான மு.மேத்தாவுக்கு "ஆகாய கங்கை" என்ற இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த படத்தின் "தேனருவியில் நனைந்திடும்" என்ற பாடலே அதிக புகழைக் கொடுத்தது. அந்தப் பாடல் வாய்ப்பை மு.மேத்தாவின் நண்பர் கமல்ஹாசனே பெற்றுக் கொடுக்கக் காரணமாக அமைந்தாராம்.

தொடர்ந்து 

இதய கோவில் படத்தில் இடம்பெற்ற "யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ" ,

நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் இடம்பிடித்த "பெண்மானே சங்கீதம் பாடிவா" ,

சொல்ல துடிக்குது மனசு படத்தில் வந்த "வாயக்கட்டி வயித்தக் கட்டி" 

என் புருஷன் எனக்கு மட்டும் தான் படத்தில் வந்த "மனதில் ஒரே ஒரு பூப்பூத்தது" 

கோடை மழை படத்தில் இடம்பெற்ற "பல பல பல பல குருவி"

போன்ற இனிமையான பாடல்களுக்குச் சொந்தக்காரர் மு.மேத்தா. 

உதய கீதம் படத்தில் வந்த "பாடு நிலாவே தேன் கவிதை" 

பாடலை நாயகி பாடுவது போல் ஆரம்பித்து நாயகனும் இணையும் வேளை நாயகனும் பாடு நிலாவே என்று பாடுவது பொருந்தாது ஏனென்றால் அவன் மூடிய சிறைக்குள் இருந்து அவளின் குரல்கேட்டுப் பாடுகிறானே எனவே "பாடும் நிலாவே" என்று மாற்றி பாடல் வரிகளில் நுணுக்கம் இருக்க வேண்டிய தேவையைச் சுட்டினாராம் இளையராஜா.

"ராஜராஜ சோழன் நான்" என்ற ரெட்டைவால் குருவி படப்பாடலே மு.மேத்தாவைப் பரவலாகக் கொண்டு சேர்த்த இனிய பாடல். அந்தப் பாடல் ஒன்றே போதும் மு.மேத்தாவின் கவிச்சிறப்பைத் திரையில் காட்ட. 

வேலைக்காரன் படத்தின் படக்குழு இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுடன் வட நாட்டுக்குச் சென்றுவிட, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா சார்பில் இயக்குநர் கே.பாலசந்தரே ஒவ்வொரு பாடலுக்குமான கதைக்களனைச் சொல்லி மு.மேத்தாவை அனைத்துப் பாடல்களையும் எழுத வைத்து, இசைஞானி இளையராஜா இசையில் கொண்டுவந்தது ஒரு புதுமை. "தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்" என்று சமூக சிந்தனையை "வா வா வா கண்ணா வா" காதல் பாடலில் புகுத்தியிருப்பார் மு.மேத்தா.

தன் திரைப்படப் பாடல்கள் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுகின்றார்.

"தென்றல் வரும் தெரு"

என்று சிறையில் சில ராகங்கள் படத்துக்குப் பாடல் எழுதினேன்.

இப்பாடலின் தொடக்க வார்த்தைகளே பின்னர் நான் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படத்தின் பெயரானது. வேறு பெயர் வைக்கலாம் என்று நான் விரும்பினேன். பெயரை மாற்றக்கூடாது என்று மொத்த யுனிட்டே பிடிவாதம் பிடித்தது.

நான் தயாரித்த "தென்றல் வரும் தெரு" திரைப்படத்திலும் இதே பாடல் வரிகளை முதல் அடிகளாகக் கொண்டே பாடல் ஒன்று இருக்கின்றது. அப்பாடலின் வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா கேட்டார். கதைச் சூழலுக்காக இந்த வரி கட்டாயம் வேண்டும் என்று வேண்டினோம்.

இரண்டு பாடல்களுக்கும் முதல் வரிகள் இரண்டும் ஒன்றே. இசை வேறு, இரண்டுக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா. "தென்றல் வரும் தெரு அது நீ தானே" என்ற பாடல் வரிகளை முதல் அடியாகக் கொண்டு "சிறையில் சில ராகங்கள்" திரைப்படம் 1990 இல் வெளியானது. அது நடிகர் முரளி, பல்லவி நடிப்பில் வெளியானது.அடிகள் பயன்பட்ட மு.மேத்தாவின் தயாரிப்பில் வந்த "தென்றல் வரும் தெரு" ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடிப்பில் வெளியானது. நான்கு ஆண்டுகள் கழித்து 1994 இல் தான் படம் வந்தது.

இளையராஜா இசையில் மு.மேத்தா எழுதிய பாடல்கள்

1. தேனருவில் – ஆகாய கங்கை

2. பாடுபட்டு சேர்த்த துட்டை – உறங்காத நினைவுகள்

3. வாய் திறவாய் பூங்குயிலே – நீ தொடும் போது

4. பொன் மானைத் தேடுதே – ஓ மானே மானே

5. முதல் முத்த மோகம் – புதிர்

6. வெளஞ்சிருக்கு சோளக்காடுதான் – ராஜ கோபுரம்

7. யார் வீட்டில் ரோஜா – இதயக் கோவில்

8. பெண் மானே சங்கீதம் – நான் சிகப்பு மனிதன்

9. தேகம் சிறகடிக்கும் – நானே ராஜா நானே மந்திரி

10. ஏ புள்ள – நீதியின் மறு பக்கம்

11. பாடு நிலாவே – உதய கீதம்

12. மலரே மலரே உல்லாசம் – உன் கண்ணில் நீர் வழிந்தால்

13. வாழை மரம் கட்டி வாழ நினைப்பதென்ன – இசை பாடும் தென்றல்

14. பல பல பல பல குருவி – கோடை மழை

15. ஒரு பூவனக் குயில் – மரகத வீணை

16. ராஜ ராஜ சோழன் நான் – ரெட்டை வால் குருவி

17. ஆனந்தம் பொங்கிட – சிறைப்பறவை

18. வாயைக் கட்டி – சொல்லத் துடிக்குது மனசு

19. தனியாகப் படுத்து – கிருஷ்ணன் வந்தான்

20. வேலைக்காரன் படத்தின் அனைத்துப் பாடல்கள்

21. மனதில் ஒரே ஒரு – என் புருஷன் எனக்கு மட்டும் தான்

22. காத்து - என் புருஷன் எனக்கு மட்டும் தான்

23. இன்னும் என்ன பேச்சு – ராஜா ராஜா தான்

24. கற்பூர பொம்மை ஒன்று – கேளடி கண்மணி

25. தண்ணியில நனைஞ்சா – கேளடி கண்மணி

26. நிக்கட்டுமா போகட்டுமா – பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

27. தென்றல் வரும் தெரு – சிறையில் சில ராகங்கள்

28. தென்றல் வரும் தெரு படத்தின் அனைத்துப் பாடல்கள்

29. சின்னச் சின்ன ரத்தினமே – சக்திவேல்

30. உன்னை நான் சேர்ந்திருக்க – இளையராகம்

31. மருதாணி – இளையராகம்

32. நான் ஒன்று கேட்டால் – இளையராகம்

33. தலைவன் ஒருத்தன் – கட்டப்பஞ்சாயத்து

34. என் பாட்டு – பூமணி

35. என் வீட்டு ஜன்னல் – ராமன் அப்துல்லா

36. கண்மணி ஒரு கவிதை படத்தின் அனைத்துப் பாடல்கள்

37. மேல மாசி வீதியிலே – புண்ணியவதி

38. ஒத்த ரூபாவுக்கு – அண்ணன்

39. சூப்பர் பாட்டொண்ணு – கும்பகோணம் கோபாலு

40. மீட்டாத ஒரு வீணை – பூந்தோட்டம்

41. யம்மா யம்மா – தொடரும்

42. சிட்டு பறக்குது – நிலவே முகம் காட்டு

43. சேதுவுக்கு – சேது

44. நினைச்சு நினைச்சு – சேது

45. எந்தப் பாவி – திருநெல்வேலி

46. மயில் போல – பாரதி

47. வட்ட நிலவே – இளையவன்

48. உந்தன் ராஜ்ஜியத்தில் – ஆண்டான் அடிமை

49. நான் காணும் உலகங்கள் – காசி

50. என் மன வானில் – காசி

51. ரொக்கம் இருக்கிற – காசி

52. தங்கச்சி தங்கச்சி – குட்டி

53. ரோட்டோரப் பாட்டுச் சத்தம் – என் மன வானில்

54. உலகமே நீ – இவன்

55. வானம் அதிரவே – ரமணா

56. அள்ளி முடிச்ச – ரமணா

57. ஏழு வண்ணம் கொண்ட – கொஞ்சிப் பேசலாம்

58. ஒரு ஜோடிக் குயில் – மனசெல்லாம்

59.  அடடா அகங்கார – பிதாமகன்

60. உனைத் தேடும் – பொன் மேகலை

61. கொட்டி வச்ச – கரகாட்டக்காரி

62. கிளித்தட்டு – அது ஒரு கனாக்காலம்

63. பொண்ணாப் பிறந்த – சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி

64. என்னை கேட்கும் – கஸ்தூரி மான்

65. என் நெஞ்சின் ராகம் – உதயம் 2006

66. எங்கே நம் தேசம் – உதயம் 2006

67. கையில் ஒரு – அஜந்தா

68. உலகிலே அழகி – மாயக்கண்ணாடி

69. உனக்குள்ளே – தனம்

70.  நாளை இந்நேரம் – கண்களும் கவி பாடுதே

71. புலர்கின்ற பொழுது – உளியின் ஓசை

72. கிழக்கு வெளுக்குது – அழகர் மலை

73. மலரே மலரே – காதல் கதை

74. எங்கே நீ – கண்ணுக்குள்ளே

75. ஏழைக்கிந்த – மத்திய சென்னை

76. ஒண்ணுக்கொண்ணு – நந்தலாலா

77. காற்றினைப் போல் – அய்யன்

78. எங்கே இருக்கு – மறந்தேன் மன்னித்தேன்

79. இப்படியும் ஒருத்தன் – ஒரு ஊர்ல

80. ஒரு ஊர்ல படத்தின் அனைத்துப் பாடல்கள்

81. விடிவா இது – போர்க்களத்தில் ஒரு பூ

82. கிடா பூசாரி மகுடி படத்தின் அனைத்துப் பாடல்களும்

பிற இசையமைப்பாளர்களுடன் மு.மேத்தா முக்கியமான பாடல்கள் மட்டும்

1. தலைவா நீ இங்கு வர வேண்டும்

இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

படம் : மூக்கணாங் கயிறு

2. காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே

இசை : சந்திரபோஸ்

படம் : மைக்கேல் ராஜ்

3. தென்ன மரத் தோப்புக்குள்ள

இசை : சந்திரபோஸ் 

படம் : மைக்கேல் ராஜ் 

மைக்கேல் ராஜ் படத்தின் அனைத்துப் பாடல்களும் எழுதினார்.

4. யார் போகும் வழியில்

இசை : ஆனந்த் சங்கர்

படம் : யாரோ எழுதிய கவிதை

5. ஆகா ஆயிரம் சுகம்

இசை : ஆனந்த் சங்கர்

படம் : யாரோ எழுதிய கவிதை

6. போகாதே அடி பொன் மானே

இசை : தேவா

படம் : மைந்தன்

7. நந்தவனம் ஆனதம்மா

இசை : தேவா

படம் : மைந்தன் 

8. தேடும் என் காதல்

இசை : சந்திரபோஸ்

படம் : ஒரு மலரின் பயணம்

9. நட்சத்திர ஜன்னலில்

இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்

படம் : சூரிய வம்சம்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கவிஞருக்கு

கானா பிரபா