Pages

Saturday, June 20, 2009

"பாக்ய தேவதா" என்னும் இளையராஜா

ஒரு Time Machine இப்போது கிடைத்தால் 80களுக்குப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டே அதில் ஏறியிருப்பேன். அப்போது தானே இளையராஜாவின் அந்தப் பொற்காலத்தில் வந்த பாடல்களையும், படங்களையும் சம நேரத்தில் புதிதாய் அனுபவிப்பது போல அனுபவம் பெறலாம். அப்படி ஒரு Time Machine அனுபவங்கள் தான் மலையாளத்தின் சத்யன் அந்திக்காடுவின் படங்கள்.

இளையராஜா இல்லாது தனித்து வெற்றி பெற்ற ஒரு இயக்குனராக இருந்த இவர் பின்னர் ராஜாவோடு கைகோர்த்து மனசினக்கரே, அச்சுவிண்டே அம்மா, ரசதந்திரம் என்று தொடர்ந்து இசை மழை பொழிய வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தார். அந்த வரிசையில் தற்போது வந்திருக்கின்றது "பாக்ய தேவதா"

மதியம் மூன்று மணி காட்சிக்கெல்லாம் சேட்டன்களும், சேச்சிகளும் வருவார்களா? சீட் மேலே கால் போட்டு ஹாயாய் படம் பார்க்கலாம் என்ற நினைப்பில் போன எனக்கு வாய்த்தது இரண்டாவது வரிசை இருக்கை. அதாவது பல்கனியில் கொடுக்கும் காசில் காலரியில் :(. பாக்ய தேவதா ஆரம்பிக்கிறது, படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலை விட ராஜா எப்படியெல்லாம் பின்னணி இசையிலும் பின்னியிருக்கிறார், பாடல்கள் எப்படிக் காட்சிகளோடு பொருந்துகின்றன என்ற ஆவலே மேலோங்குகின்றது.

கதைச் சுருக்கம் இதுதான். குத்தநாட்டில் வசிக்கும் பென்னி என்ற கேபிள் டிவி கனெக்க்ஷன் கொடுப்பவருக்கு (ஜெயராம்) பணம் வந்தால் தானும் ஒரு மதிப்புள்ள மனுஷனாகத் திரியலாம், கூட இருக்கும் தங்கச்சிகளையும் ஒப்பேற்றிவிடலாம் என்று மனக்கணக்கு போட அவருக்கு கல்யாணம் என்ற திரி வைக்கிறார் அவரில் நேசம் கொண்ட நெடுமுடிவேணு. ஒரு மீன்பிடிப்படகு வாங்கலாம், அதன் மூலம் நிறைய உழைக்கலாம், அதுக்கு ஐந்து லட்சம் வரை தேவை, அதை நீ கட்டும் பெண்ணிடமிருந்து சீதனமாகவே வாங்கிவிடலாம் என்று திரி கிள்ள பென்னி (ஜெயராம்) மீன் பிடிப்படகுக்காரரிடம் அட்வான்சைக் கொடுத்துவிட்டு டெய்சி (கனிகா)வைக் கைப்பிடிக்கிறார், ஐந்து லட்சம் சீதனம் தரவேண்டும் என்ற ஒப்பந்தத்தில்.

ஆனால் மூன்றுமாதமாகியும் பெண்ணின் தந்தையின் வாக்குறுதியில் சொன்ன சீதனம் வராமல் போகவே கனிகாவை பெட்டியும் கையுமாக பிறந்தகத்துக்கு விரட்டி விடுகிறார் ஜெயராம். ஆனால் விதி வேரு ரூபத்தில் விளையாடுகிறது அவருக்கு. எந்தச் சீதனத்துக்காக அவர் போரிட்டாரோ அதே மாதிரி ஒரு சிக்கல் அவருக்கும் வந்து சேர்கின்றது. இடையில் முளைக்கும் வங்கி அதிகாரி (நரேன்) யார்? அவருக்கும் டெய்சிக்கும் கல்யாணம் நடக்கிறதா என்பது மீதிக்கதை.

நயமாகக் காதலித்து பழகும் பாத்திரம் இத்தனை வயசாகியும் ஜெயராமுக்கு அதைப் பார்க்கும் போது அல்வாவாக இனிக்கிறது, உறுத்தல் இல்லாமல். காதல், கோபம், விரக்தி என்று எல்லாப் பரிமாணங்களிலும் சேட்டன் பின்னுகிறார். கனிகாவின் பின்னால் அலையும் போது, பின்னர் துரத்தும் போது உறுத்தவில்லை அவர் நடிப்பு. இவரின் வயதொத்த தமிழ் ஹீரோக்கள் ஹீரோயினின் எடுபிடி கணக்காக அண்ணன், தகப்பன், தா(த்)தாவாக நடிக்கும் போது கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக நடித்து ரசிக்க வைக்கிறார் "ஜெய"ராம்.

கே.பி.சி.லலிதாவுக்கு ஜெயராமின் அம்மாவாக வந்து வழக்கம் போது மனோரமா கணக்காக மூக்குச் சிந்தும் பாத்திரம். நெடுமுடி வேணு டூரிஸ்ட் கைடாக வந்து, ஒரு கைடு செய்யும் தொழில் ரகசியங்களைக் காட்டிக் கலக்குகிறார். கனிகாவை ஏனோ மலையாள ஹீரோயினாகப் பார்க்க இடம் கொடுக்கவில்லை. அவர் சென்னை சில்க்ஸ் பொம்மை கணக்காய் இருக்கிறார். ஆனால் "அல்லிப்பூவே" பாடலில் மட்டும் நளினமாக இருக்கிறார்.

மம்முக்கோயா போன்ற துணை நடிகர்களையும் செதுக்கிச் சிறப்பானதொரு பாத்திரம் கொடுத்து மின்ன வைப்பதில் சத்யன் அந்திக்காடு கைதேர்ந்தவர், அதை இங்கேயும் செய்திருக்கின்றார். இன்னசென்ட் ஜெயராமின் சித்தப்புவாக வந்து நாடக நடிகராகவும் வழக்கம் போல நிறைவாக செய்திருக்கின்றார்.

"பாக்யதேவதா" படம் சமீப காலத்து சத்யன் அந்திக்காடுவின் படங்களைப் போலவே ஒன்றும் பிரமாதமான வித்தியாசமான கதை இல்லை. ஆனால் இதே போல் 80 களில் வெளிவந்த நூற்றுச் சொச்சம் படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாமல் படம் முழுதும் தொய்யவைக்காமல் ரசிக்க வைக்கும் இயக்கம் அனுபவம் மூலம் கை கூடியிருக்கின்றது.

நல்ல சுபாவமுள்ள பென்னி (ஜெயராம்) பணத்தாசை மூலம் மூர்க்கம் கொண்டவனாக மாறுவது போலவும், டெய்சி (கனிகா ) திடீரெனத் துரத்துவதும் பிறகு ஒட்டிக் கொல்வதும் போலவும் வரும் காட்சிகளில் ஆழமில்லை. படத்த்தின் இறுதிக் காட்சியில் கூட ஜெயராம் திருந்துவது போல வரும் காட்சியில் அழுத்தமில்லை. ஆனால் அந்தக் கடைசிக் காட்சி இருக்கிறதே ஆஆஆஆகாஆஆஆ அனுபவிக்க வேண்டிய ஒரு ஹைக்கூ கவிதை அது. (சொல்ல மாட்டேன் பார்த்துட்டு சொல்லுங்கோ)

பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல சத்யன் அந்திக்காடு - இளையராஜா கூட்டணி மலையாளத்தின் பாரதிராஜா - இளையராஜா கூட்டணி போலச் சிறப்பாகவே இருக்கிறது, அது குறித்து இன்னொரு தனிப்பதிவு விலாவாரியாகப் போடவேண்டும். பாக்யதேவதாவிலும் அதை மெய்ப்பித்திருக்கின்றது. படத்தின் இடைவேளை வரை இரண்டு பாடல்களோடு மகா திருப்திப்பட வைத்து பின்னணி இசையில் அடக்கி வாசித்த ராஜா, இடைவேளைக்குப் பின்னர் ராஜசபை விருந்தே வைத்திருக்கிறார்.

பிரிவு, பரிவு, மகிழ்ச்சி, ஆர்ப்பரிப்பு, நகைச்சுவை எல்லாவற்றுக்கும் விதவிதமான பின்னணி இசைப் பரிமாறல் போட்டு அம்பானி வீட்டுக் கல்யாணம் போல அமர்க்களமாக்கியிருக்கிறார் நம்ம ராஜா.

சமீபத்தில் இசையமைப்பாளர் தேவி சிறீ பிரசாத்தின் பேட்டியில் "ஏன் நீங்கள் தெலுங்கில் போட்ட மெட்டை தமிழில் உபயோகிக்கின்றீர்கள்?" என்று கேட்ட போது "அடுத்தவன் சுடுறதுக்கு முன்னல நாமே நம்ம மெட்டை சுட்டுப் போட்ட சேப்டி இல்லையா" என்று அவர் சொன்னதை ராஜாவுக்கு வழிமொழிகிறேன். 80 களில் அவர் போட்ட மெட்டில் சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்து மீண்டும் எங்களுக்குத் தந்தாலே மகிழ்வோம், அந்தத் திருப்தி தான் "பாக்யதேவதா"விலும் கிடைக்கின்றது.

நான் கடவுள் போன்ற படங்களில் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய பின்னணி இசை போலல்லாது இந்தப் படத்தில் தன் உழைப்பைக் கொட்டியதைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கின்றது. படம் டிவிடியில் வரட்டும் ஒரு பின்னணி இசைத்தொகுப்பையும் போட்டு விடுகின்றேன்.

கனிகா மீது மையல் கொண்டு ஜெயராம் பாடும் "ஸ்வப்னங்கள் கண்ணெழுதிய" (பாடியவர்கள் சித்ரா, ராகுல் நம்பியார்) பாடலைக் வெறும் கேட்கும் போது இருந்த சுகம் பார்க்கும் போது இரட்டிப்பாகின்றது காட்சியோடு அளவாகப் பொருந்தி.
இளம் பாடகர் கார்த்திக் பின்னணி பாடியிருக்கும் திரை தள்ளிப் போனாலும் என்ற பாடலை இன்னசென்ட் பாடுவது போலக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது ரொம்பவே ரசிக்க வைக்கின்றது. சோகக் காட்சிப் பின்னணியில் வித்தியாசமான பாடலாகக் கலக்கின்றது இது.

நிறைவாக கனிகா, நரேன் தொடர்பில் ஜெயராமுக்கு வரும் சந்தேகங்களுக்கு ராஜாவின் "அல்லிப் பூவே மல்லிப்பூவே" (விஜய் ஜேசுதாஸ், ஸ்வேதா குரல்களில்) துணையாக வாய்க்கின்றது.

youtube: sherinmail123

ஆக மொத்தத்தில் "பாக்ய தேவதா" வில் இளையராஜா தான் ஹீரோ.

Saturday, June 13, 2009

யாழ்.பாஷையூர் புனித அந்தோனியார் பெருவிழா ஒலி அஞ்சல்

இன்று ஈழத்தின் யாழ்மண்ணில் உறையும் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றிருந்தது. அதன் நேர்முக வர்ணனையை யாழ்மண்ணில் இருந்து தொலைபேசி வாயிலாக யாழ் திருமறைக்கலாமன்றத்தின் அண்ணாவியார் திரு.ஜெசிமன் சிங்கராயர் வழங்க நிகழ்ச்சியைச் சிறப்பானதொரு ஒலிப்படையலாகக் கொடுத்திருந்தார்கள் எமது 24 மணி நேர சமூக வானொலி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் திரு பிறின்ஸ் இமானுவேல் மற்றும் அவர் துணைவி திருமதி சோனா பிறின்ஸ் ஆகியோர்.

ஒலிஅஞ்சலைத் தொடர்ந்து கேட்க

பாகம் 1
தரவிறக்க (to download)


பாகம் 2தரவிறக்க (to download)

பாகம் 3தரவிறக்க (to download)

பாகம் 4தரவிறக்க (to download)

பாகம் 5தரவிறக்க (to download)

Thursday, June 11, 2009

றேடியோஸ்புதிர் 41: இளையராஜா ஒதுக்கிய ஒளிப்பதிவாளர் படம்

அந்தப் பெரும் தயாரிப்பாளரிடம் வந்த ஒரு பெரும் ஒளிப்பதிவாளர் சக இயக்குனர் இவருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று கேட்டபோது தயாரிப்பாளரும் சம்மதித்து அந்தப் படத்தில் பணிபுரிபவர்கள் பட்டியலைப் பார்க்கிறார். அதில் இசை இளையராஜா என்று போட்டிருக்கின்றது. தயாரிப்பாளருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி இளையராஜாவிடம் செல்கிறார். இளையராஜாவோ, "இந்த இயக்குனர் ஏற்கனவே எடுத்த படமொன்று பெட்டியில் கிடக்கிறது, இவரை வச்சா எடுக்கக் போறீங்க" என்று கேட்டு திணறிடிக்கிறார். ஆனாலும் ஒருவாறு ராஜாவைச் சம்மதிக்க வைத்துப் படம் வெளியாகின்றது.

இங்கே கொடுக்கப்பட்ட இசைத்துண்டம் படத்தின் ஆரம்ப இசை, அதனையும் கேட்டவாறு குறித்த இந்தப் படம் எது என்று கண்டுபிடியுங்களேன். இந்தப் படத்தின் நாயகன் ஒரு வாரிசு நடிகர். நாயகிக்கு இந்தப் படம் போல் சொல்லிக் கொள்ள ஒரு படமும் இல்லை.
இது நிறம் மாறாத பூக்கள் ;-)மேலே கேட்ட கேள்விக்கு சரியான பதில்:
சரியான பதில்

படம்: வண்ண வண்ணப் பூக்கள்

அந்த இயக்குனர்: பாலுமகேந்திரா

தயாரிப்பாளர்: தாணு

நடிகர்கள்: பிரசாந்த், வினோதினி, மெளனிகா

Sunday, June 7, 2009

அன்று இளையராஜா போட்ட மெட்டு; இன்றைய யுவனுக்கும் சேர்த்து

"யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்" என்பார்கள். தென்னிந்திய இசைச் சகாப்தத்தில் இசைஞானி இளையராஜாவின் இசைமரபினைப் பின்பற்றிய விழுதுகளாக அவரின் பாணியை எடுத்தாண்டு வாழ்ந்து போன இசையமைப்பாளர்கள் உண்டு, இன்று இசைஞானி இளையராஜாவின் திரையிசைப் பங்களிப்பு என்பது 80களில் கோலோச்சிய தனியதிகாரம் என்ற நிலை கடந்து இன்று மற்றைய இசையமைப்பாளர்களோடு பங்கு போட்டுப் பயணிக்கின்றது. இந்த நிலையில் அண்மைய இரண்டு வருடங்களாக சினிமாவில் ரீமிக்ஸ் வைரஸ் பரவியபோது ராஜாவின் முத்தான பழைய பாடல்களையும் அது விட்டுவைக்கவில்லை. தவிர வெங்கட்பிரபுவும், பிரேம்ஜியும் சேர்ந்து கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் இளையராஜாவின் பாடல்களை ஓரளவு ரசிக்கும் வகையில் மீள் இசையாகக் கொடுத்திருந்தார்கள். அந்த இசைத்தட்டையும் அனுபவித்து வருகின்றேன்.

இளையராஜாவின் பாடல்களைப் படங்களில் ரீமிக்ஸ் என்னும் மீள் இசைவடிவமாகக் கொடுப்பதோடு மட்டும் நின்று விடாது, "சுப்ரமணியபுரம்" , "பசங்க" போன்ற படங்களில் அவரின் பாடல்களை உள்ளே லாவகமாகப் பின்னணியில் படரவிட்ட காட்சியமைப்புக்கள் கூட அப்படங்களின் வெற்றியில் சிறிது பங்கு போட்டுக் கொண்டன.

இப்போது இது பரிணாம வளர்ச்சி கண்டு இன்று இளையராஜாவின் பாடலையே ஒரு படத்தின் முக்கியமான காட்சியமைப்புக்கு பின்னணி இசையாக மாற்றிக் கொடுக்கும் ட்ரெண்ட் வந்துவிட்டது, அதை ஆரம்பித்து வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்ட பெருமை இசைஞானியின் வாரிசு யுவனுக்கே போய்ச் சேர்ந்திருக்கின்றது. முன்னர் தன் தந்தை இளையராஜா "பாரதி" படத்தில் இசையமைத்துக் கொடுத்த "நல்லதோர் வீணை செய்தே" என்ற பாடலை விஜய் நடிப்பில் உருவான "புதிய கீதை" படத்தின் இறுதிக்காட்சியில் நுழைத்த யுவன், இன்று "சர்வம்" படத்தின் ஆர்யா, த்ரிஷா காதல் காட்சிகளுக்காக தன் தந்தையின் இன்னொரு இசை வடிவத்தை மீள் இசைவடிவம் கொடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்.

வாழ்க்கை திரைப்படத்தில் இடம்பெற்ற மெல்ல மெல்ல என்னைத் தொட்டு என்ற பாடலை பி.சுசீலாவும் ராஜ் சீதாராமனும் இப்படிப் பாடியிருந்தார்கள்.

பாடலைக் கேட்க


இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்ட இசைவடிவம் இதற்கு முன்னரேயே 1983 இல் கன்னடத்தில் மணிரத்னம் இயக்கிய "பல்லவி அனுபல்லவி" படத்தின் முகப்பு இசையில் இப்படிப் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இசையைக் கேட்ககூடவே அந்தப் படத்தின் முக்கிய காட்சி ஒன்றிலும் பயன்படுத்தப்பட்டது, அதன் காணொளி இதோ.


1983 இல் பல்லவி அனுபல்லவி படத்தில் பிரசவித்த இந்த இசைஞானியின் இசை 26 வருஷங்கள் கழித்து அவர் வாரிசு யுவனால் "சர்வம்" படத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதை பிரித்தெடுத்துத் தொகுப்பாக இங்கே அளிக்கின்றேன். இந்த இசைக் காட்சிகள் படத்தின் இடைவேளை வரை வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்த சர்வம் படத்தில் பயன்படுத்தப்பட்ட இசையை மொபைல் போனின் ரிங் டோனாக நீங்கள் பயன்படுத்தும் வசதிக்காக எடிட் பண்ணி இங்கே தருகிறேன், தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய

வாழ்க்கை படத்தில் வந்த மெல்ல மெல்ல என்னைத் தொட்டு பாடலில் வந்த முகப்பு இசையை மொபைல் போனின் ரிங் டோனாக நீங்கள் பயன்படுத்தும் வசதிக்காக இங்கே தருகிறேன், தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய

தொடர்ந்து சர்வம் படத்தில் முக்கிய காட்சிகளில் வந்த அந்த இசை மெட்டை ஒரு சில இடங்களில் வெவ்வேறு இசைக்கருவிகளைக் கொண்டு வேறுபடுத்தியிருக்கிறார் கேட்டு அனுபவியுங்கள்.

காட்சி ஒன்று


காட்சி இரண்டு


காட்சி மூன்று


காட்சி நான்கு


காட்சி ஐந்து


காட்சி ஆறு


காட்சி ஏழு


காட்சிஎட்டு


காட்சி ஒன்பது


காட்சி பத்து


ஆர்யா மேல் த்ரிஷாவுக்கு வரும் காதல்காட்சியோடு நிறைவு பெறுகிறது இந்த இசைஜாலம் இப்படியான ஒரு முத்தாய்ப்பான கலக்கல் இசையோடு