

இளையராஜா இல்லாது தனித்து வெற்றி பெற்ற ஒரு இயக்குனராக இருந்த இவர் பின்னர் ராஜாவோடு கைகோர்த்து மனசினக்கரே, அச்சுவிண்டே அம்மா, ரசதந்திரம் என்று தொடர்ந்து இசை மழை பொழிய வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தார். அந்த வரிசையில் தற்போது வந்திருக்கின்றது "பாக்ய தேவதா"
மதியம் மூன்று மணி காட்சிக்கெல்லாம் சேட்டன்களும், சேச்சிகளும் வருவார்களா? சீட் மேலே கால் போட்டு ஹாயாய் படம் பார்க்கலாம் என்ற நினைப்பில் போன எனக்கு வாய்த்தது இரண்டாவது வரிசை இருக்கை. அதாவது பல்கனியில் கொடுக்கும் காசில் காலரியில் :(. பாக்ய தேவதா ஆரம்பிக்கிறது, படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலை விட ராஜா எப்படியெல்லாம் பின்னணி இசையிலும் பின்னியிருக்கிறார், பாடல்கள் எப்படிக் காட்சிகளோடு பொருந்துகின்றன என்ற ஆவலே மேலோங்குகின்றது.

ஆனால் மூன்றுமாதமாகியும் பெண்ணின் தந்தையின் வாக்குறுதியில் சொன்ன சீதனம் வராமல் போகவே கனிகாவை பெட்டியும் கையுமாக பிறந்தகத்துக்கு விரட்டி விடுகிறார் ஜெயராம். ஆனால் விதி வேரு ரூபத்தில் விளையாடுகிறது அவருக்கு. எந்தச் சீதனத்துக்காக அவர் போரிட்டாரோ அதே மாதிரி ஒரு சிக்கல் அவருக்கும் வந்து சேர்கின்றது. இடையில் முளைக்கும் வங்கி அதிகாரி (நரேன்) யார்? அவருக்கும் டெய்சிக்கும் கல்யாணம் நடக்கிறதா என்பது மீதிக்கதை.
கே.பி.சி.லலிதாவுக்கு ஜெயராமின் அம்மாவாக வந்து வழக்கம் போது மனோரமா கணக்காக மூக்குச் சிந்தும் பாத்திரம். நெடுமுடி வேணு டூரிஸ்ட் கைடாக வந்து, ஒரு கைடு செய்யும் தொழில் ரகசியங்களைக் காட்டிக் கலக்குகிறார். கனிகாவை ஏனோ மலையாள ஹீரோயினாகப் பார்க்க இடம் கொடுக்கவில்லை. அவர் சென்னை சில்க்ஸ் பொம்மை கணக்காய் இருக்கிறார். ஆனால் "அல்லிப்பூவே" பாடலில் மட்டும் நளினமாக இருக்கிறார்.
மம்முக்கோயா போன்ற துணை நடிகர்களையும் செதுக்கிச் சிறப்பானதொரு பாத்திரம் கொடுத்து மின்ன வைப்பதில் சத்யன் அந்திக்காடு கைதேர்ந்தவர், அதை இங்கேயும் செய்திருக்கின்றார். இன்னசென்ட் ஜெயராமின் சித்தப்புவாக வந்து நாடக நடிகராகவும் வழக்கம் போல நிறைவாக செய்திருக்கின்றார்.
நல்ல சுபாவமுள்ள பென்னி (ஜெயராம்) பணத்தாசை மூலம் மூர்க்கம் கொண்டவனாக மாறுவது போலவும், டெய்சி (கனிகா ) திடீரெனத் துரத்துவதும் பிறகு ஒட்டிக் கொல்வதும் போலவும் வரும் காட்சிகளில் ஆழமில்லை. படத்த்தின் இறுதிக் காட்சியில் கூட ஜெயராம் திருந்துவது போல வரும் காட்சியில் அழுத்தமில்லை. ஆனால் அந்தக் கடைசிக் காட்சி இருக்கிறதே ஆஆஆஆகாஆஆஆ அனுபவிக்க வேண்டிய ஒரு ஹைக்கூ கவிதை அது. (சொல்ல மாட்டேன் பார்த்துட்டு சொல்லுங்கோ)

பிரிவு, பரிவு, மகிழ்ச்சி, ஆர்ப்பரிப்பு, நகைச்சுவை எல்லாவற்றுக்கும் விதவிதமான பின்னணி இசைப் பரிமாறல் போட்டு அம்பானி வீட்டுக் கல்யாணம் போல அமர்க்களமாக்கியிருக்கிறார் நம்ம ராஜா.
சமீபத்தில் இசையமைப்பாளர் தேவி சிறீ பிரசாத்தின் பேட்டியில் "ஏன் நீங்கள் தெலுங்கில் போட்ட மெட்டை தமிழில் உபயோகிக்கின்றீர்கள்?" என்று கேட்ட போது "அடுத்தவன் சுடுறதுக்கு முன்னல நாமே நம்ம மெட்டை சுட்டுப் போட்ட சேப்டி இல்லையா" என்று அவர் சொன்னதை ராஜாவுக்கு வழிமொழிகிறேன். 80 களில் அவர் போட்ட மெட்டில் சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்து மீண்டும் எங்களுக்குத் தந்தாலே மகிழ்வோம், அந்தத் திருப்தி தான் "பாக்யதேவதா"விலும் கிடைக்கின்றது.
நான் கடவுள் போன்ற படங்களில் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய பின்னணி இசை போலல்லாது இந்தப் படத்தில் தன் உழைப்பைக் கொட்டியதைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கின்றது. படம் டிவிடியில் வரட்டும் ஒரு பின்னணி இசைத்தொகுப்பையும் போட்டு விடுகின்றேன்.
கனிகா மீது மையல் கொண்டு ஜெயராம் பாடும் "ஸ்வப்னங்கள் கண்ணெழுதிய" (பாடியவர்கள் சித்ரா, ராகுல் நம்பியார்) பாடலைக் வெறும் கேட்கும் போது இருந்த சுகம் பார்க்கும் போது இரட்டிப்பாகின்றது காட்சியோடு அளவாகப் பொருந்தி.
இளம் பாடகர் கார்த்திக் பின்னணி பாடியிருக்கும் திரை தள்ளிப் போனாலும் என்ற பாடலை இன்னசென்ட் பாடுவது போலக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது ரொம்பவே ரசிக்க வைக்கின்றது. சோகக் காட்சிப் பின்னணியில் வித்தியாசமான பாடலாகக் கலக்கின்றது இது.
நிறைவாக கனிகா, நரேன் தொடர்பில் ஜெயராமுக்கு வரும் சந்தேகங்களுக்கு ராஜாவின் "அல்லிப் பூவே மல்லிப்பூவே" (விஜய் ஜேசுதாஸ், ஸ்வேதா குரல்களில்) துணையாக வாய்க்கின்றது.
youtube: sherinmail123
ஆக மொத்தத்தில் "பாக்ய தேவதா" வில் இளையராஜா தான் ஹீரோ.
