Pages

Wednesday, December 31, 2008

புதுவருஷ வாழ்த்துக்களுடன் சிறந்த இசைக்கூட்டணி வாக்கெடுப்பு முடிவுகள்

2008 ஆம் ஆண்டின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றோம். இந்த ஆண்டைப் பொறுத்தவரை எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் சாதனைகளை விடை வேதனைகளையும், சோதனைகளையும் சம்பாதித்த ஆண்டு. உலகெங்கும் ரத்த வெறி பிடித்து அலையும் போர் அரக்கனின் கோரத்தாண்டம் இந்த ஆண்டிலும் தன் ஈடு இணையற்ற கொடுமையைக் காட்டியது. பிறக்கப் போகும் 2009 ஆம் ஆண்டு ஒரு சுபீட்சமான ஆண்டாக அமைய வேண்டும். வீட்டுக்கும், நாட்டுக்கும் நிரந்தர நிம்மதியை ஒரு இனிய இசை கொடுக்கும் திருப்தியை வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்து என்னோடு கூடப் பயணித்தவர்களுக்கும், பயணிக்க இருப்பவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றேன். உங்கள் அனைவருக்காகவும் சிறப்புப் பாடலாக "எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே" என்ற கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் மறுபடியும் திரைப்பாடலை அர்ப்பணிக்கின்றேன்.

Ellorukkum - Jesudas


கடந்த ஒருவாரமாக றேடியோஸ்பதியின் சிறந்த இசைக்கூட்டணிப் போட்டியை வைத்திருந்தேன். இதன் மூலம் வலைப்பதிவு வாசகர்களின் நாடித்துடிப்பை அறிய 2008 இல் சிறந்த இயக்குனர் - இசையமைப்பாளர் என்று இசைக்கூட்டணியாக அமைந்த ஒரு பட்டியலையும் கொடுத்திருந்தேன்.

இன்றோடு அதன் வாக்கெடுப்பு ஒரு முடிவுக்கு வந்து, இதுவரை கிடைத்த முடிவுகளின் படி வாக்கெடுப்பில் பங்கேற்ற 114 பேரில் 41 பேர் ஹாரிஸ் ஜெயராஜ் - கெளதம் வாசுதேவ மேனன் இணைந்த வாரணம் ஆயிரம் கூட்டணிக்குத் தம் வாக்குகளை அளித்து முதல் இடத்தில் அமையும் இசைக் கூட்டணியாக அமைத்திருக்கின்றார்கள்.

அடுத்ததாக 30 வாக்குகள் அளித்து ஜேம்ஸ் வசந்தன் - சசிகுமார் கூட்டணிக்கு இரண்டாவது இடத்தையும், 9 வாக்குகளைப் பெற்று சரோஜாவில் இணைந்த யுவன் ஷங்கர் ராஜா - வெங்கட் பிரபு கூட்டணிக்கு மூன்றாவது இடத்தையும் அளித்திருக்கின்றார்கள். வாக்கெடுப்பில் பங்கேற்ற அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;-)

முழுமையான வாக்கெடுப்பின் முடிவுகளைக் காண

Monday, December 29, 2008

றேடியோஸ்புதிர் 32 - பாடலைப் படமாக்காது அடம்பிடித்த இயக்குனர்?


றேடியோஸ்பதியின் வாக்கெடுப்புக்கு இதுவரை வாக்களிக்காதவர்கள் ஒரு எட்டு இங்கே நடந்து போய் வாக்களித்து விட்டு இந்த ஆண்டின் நிறைவாக வரும் றேடியோஸ்புதிருக்கு வாருங்களேன்.

ஒரு காலகட்டத்தில் தொடர்ச்சியான வெற்றிப்படங்களைத் தந்த இயக்குனர் இவர். அதனாலோ என்னவோ அளவுக்கு அதிகம் படங்களை இயக்கித் தள்ளி இப்போது சரக்கில்லாமல் நகைச்சு வைக்கிறார். இவருடைய உதவி இயக்குனர் ஒருவரின் பேட்டியை சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த போது அவர் சொன்ன தகவலை இங்கே புதிராகவே போடுகிறேன்.

ஒரு படத்துக்கான பாடல்களை இசைஞானி இளையராஜா உருவாக்கி அவை ஒலிப்பேழைகளிலும் வந்து வெகு பிரபலம். அபோதெல்லாம் வழக்கமாக எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை வைத்து ஒரு பாடலாவது தரும் ராஜா அந்தப் படத்தில் அவரை உபயோகிக்காமலேயே பாடல்கள் அனைத்தும் பேசப்பட்டன. அதில் ஒரு பாடல் ஆண்குரலிலும், பெண் குரலிலும் தனித் தனியாக இருக்கும். பெண் குரலில் பாடியவர் பி.சுசீலா.ஆண் குரல் பாடலை மட்டும் இயக்குனர் இயக்கிக் கொடுத்து விட்டு படத்தையும் முடித்து விட்டு அடுத்த படத்திற்குப் பாய்ந்து விட்டார். தயாரிப்பாளரோ "படத்தை பிரிவியூ பார்த்த விநியோகஸ்தர்கள் கேட்கிறார்கள், அந்தப் பெண் குரல் பாடலையும் படமாக்கித் தாருங்களேன்" என்று கேட்கவும் அந்த இயக்குனரோ அதெல்லாம் முடியாது என்று மறுத்து விட்டாராம்.

அப்போது அவரின் உதவி இயக்குனராக இருந்தவர் தயாரிப்பாளரிடம் சென்று, "நான் ஒரே நாளில் அந்தப் பாடலைப் படமாக்கித் தருகின்றேன், எனக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள்" என்று கேட்கவும், தயாரிப்பாளரும் வேறு வழியின்றி சம்மதித்து, பணத்தையும் கொடுக்கிறார். அந்த உதவி இயக்குனரும் தான் சொன்னது போலவே இதை சவாலாக எடுத்துக் கொண்டு அந்தப் பாடலைப் படமாக்கிக் கொடுக்கிறார். அந்தப் படம் பெரு வெற்றி கண்டது. அந்த உதவி இயக்குனருக்கு நன்றிக் கடனாகக் கிடைத்தது அதே தயாரிப்பாளரின் அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பு. அந்த உதவி இயக்குனர் இயக்குனராகிய அடுத்த படத்தில், அதே இளையராஜா இசையமைக்க முன்னர் சொன்ன படத்தில் தனித் தனியாகப் பாடிய பாடகர் ஜோடி இணைந்து பாடிய பாடல் வெகு பிரபலமானது. படமும் ஓரளவு ஓடியது.

கேள்வி இதுதான், அந்த பெண் குரலில் வந்த பாடலை இயக்காமல் அடம்பிடித்த இயக்குனர் யார்? உதவிக் குறிப்பு, இந்த இயக்குனர் பெயரில் இன்னொரு குணச்சித்திர நடிகர் இருந்தவர், அவர் கூட படங்களை பின்னாளில் இயக்கியவர். வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் பதிலை சொல்லுங்கள், இல்லாவிட்டால் காத்திருங்கள் ;)

Wednesday, December 24, 2008

2008 இன் சிறந்த இசைக்கூட்டணி?

இந்த ஆண்டின் நிறைவை எட்டிப் பிடிக்க சில நாட்களே எஞ்சிய நிலையில், 2008 இல் இதுவரை திரைப்படமாக வெளிவந்து பிரபலமான பாடல்களை முன்வைத்து ஒரு இசை குறித்த வாக்கெடுப்பு இடம்பெறுகின்றது. எந்த ஒரு நல்ல இசையமைப்பாளருக்குமே அவரோடு இணையும் இயக்குனரின் வேலை வாங்கும் திறன் தான் பல சந்தர்ப்பங்களில் நல்ல பல பாடல்களுக்கு வழி வகுத்திருக்கின்றது. அந்த வகையில் 2008 இல் சிறந்த இசைக்கூட்டணி யார் என்பதே இந்த ஜாலியான வாக்கெடுப்பின் நோக்கம். உங்கள் ரசனையில் பிடித்த இசைக்கூட்டணி யார் என்பதைத் தேர்ந்தெடுங்களேன்.

பி.கு
1. 2008 இல் இசைத்தட்டு வெளியாகி இதுவரை வெளிவராத படங்கள் இங்கே சேர்த்தியில்லை.
2. சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் பாடல்கள் ஏற்கனவே தெலுங்கில் வெளியானாலும் அதை அப்படியே பயன்படுத்திய ராஜாவின் பெருந்தன்மை(?) கருதி அவரும் ஆட்டத்தில் இருக்கிறார்.
3. ஒருவர் தலா ஒரு ஓட்டே வழங்கலாம் (குடும்ப உறுப்பினர்கள் சார்பில் வாக்களிக்க முடியாது ;)
4. வாக்களிப்பு முடிவுத்திகதி 31 டிசம்பர் 2008

இதுவரை வெளியான வாக்கு நிலவரம்

Friday, December 19, 2008

பாடகர் யுகேந்திரன் ஸ்பெஷல்

கடந்த றேடியோஸ்புதிரில் ஒரு பாடலின் இடைக்குரலை ஒலிபரப்பி அந்த மழலைக் குரல் யார் என்று கேட்டிருந்தேன். மனோஜ் கியான் இசையில் வெளிவந்த விஜயகாந்த் படமான "உழவன் மகன்" திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சசிரேகா பாடிய "செம்மறியாடே செம்மறியாடே செய்வது சரிதானா" என்ற பாடலின் இடையில் வரும் மழலைக் குரல் தான் யுகேந்திரன் பாடகராக அறிமுகமானது.

அதன் பின்னர் இவர் வளர்ந்த பின்னர் கங்கை அமரன் தன் மகன் வெங்கட் பிரபுவை போட்டு எடுத்திருந்த "பூஞ்சோலை" திரைப்படத்தில் இளையராஜா இசையில் "உன் பேரைக் கேட்டாலே" என்ற பாடலை பவதாரணியுடன் சேர்ந்து பாடினார் யுகேந்திரன். அந்தப் படம் பத்து வருஷங்களுக்கு மேலாகக் கிடப்பில் இருக்கின்றது. "ஒருவன் ஒருவன் முதலாளி" என்ற பெயரில் அதனைப் பெயர் மாற்றி 2 வருஷங்களுக்கு முன்னர் மீண்டும் கொண்டு வர இருந்தார்கள். அப்படியும் வரவில்லை.

அதன் பின்னர் தேவாவின் இசையில் "பொற்காலம்" திரைக்காக "சின்னக் காணங்குருவி ஒண்ணு" என்ற பாடலைப் பாடினார்.அதுவும் இசைத்தட்டில் வந்ததோடு சரி. படத்தில் வரவில்லை. இவர்களை எல்லாம் கடந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் அருள் யுகேந்திரனுக்குக் கிடைக்கவே "பூவேலி" திரைப்படத்தில் "பொள்ளாச்சி சந்தையிலே" என்ற பாடலைப் பாடி நல்லதொரு அறிமுகத்தைப் பெற்றார். தொடர்ந்து பரத்வாஜின் இசையில் நிறையப் பாடல்களைப் பாடியிருக்கின்றார் இவர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் "காதலர் தினம்" திரைக்காக "ஓ மரியா" பாடலை தேவனுடன் இணைந்து பாடியும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "முதன் முதலாய்" பாடலை மதுமிதாவுடன் இணைந்தும் பாடி அந்தப் பாடல்கள் பிரபலமாயிருக்கின்றன. "வீரமும் ஈரமும்" என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கின்றார்.

சிங்கப்பூர் ஒலி வானொலியில் நிகழ்ச்சி படைத்திருந்த மாலினி என்னும் அறிவிப்பாளர் இலங்கையின் சுவர்ண ஒலி என்ற வானொலியின் நிகழ்ச்சிப் பணிப்பாளராகச் சென்றபோது அந்த நேரத்தில் கெளரவ அறிவிப்பாளராக் வந்து நிகழ்ச்சி படைத்திருந்த யுகேந்திரனுடன் காதல் மலர்ந்து சிங்கப்பூரையும் தமிழ்நாட்டையும் கொழும்பு இணைத்தது ;)
அவர்தான் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன். இவரது தங்கை பிரசாந்தியும் வளர்ந்து வரும் பின்னணிப் பாடகிகளில் ஒருவர். இவர் பின்னாளில் பாடகராகவும், நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றைய தொகுப்பிலே யுகேந்திரன் பாடிய சிறந்த பாடல்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்கின்றேன். கேட்டு மகிழுங்கள். (மேலே படத்தில் யுகேந்திரன் சிட்னி வந்திருந்த போது)

யுகேந்திரன் மழலையாகப் பாடிய "செம்மறி ஆடே" பாடல் உழவன் மகன் படத்திலிருந்து
மனோஜ் கியான் இசையில் இணைந்து பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சசிரேகாபூஞ்சோலை படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் 'உன் பேரைக் கேட்டாலே" இணைந்து பாடியவர் பவதாரணிதேவாவின் இசையில் பொற்காலம் திரையில் வரும் "சின்னக் காணாங்குருவி ஒண்ணு"பரத்வாஜின் இசையில் பார்த்தேன் ரசித்தேன் படத்திற்காக ரேஷ்மியுடன் "பார்த்தேன் பார்த்தேன்"சித்ரா சிவராமனுடன் பாண்டவர் பூமி திரைக்காக "தோழா தோழா" பரத்வாஜ் இசையில்ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லேசா லேசா திரைப்படத்தில் இருந்து "முதன் முதலாய" இணைந்து பாடியவர் மதுமிதாஆட்டோ கிராப் திரையில் இருந்து " கிழக்கே பார்த்தேன்" பரத்வாஜ் இசையில்சபேஷ் முரளி இசையில் தவமாய் தவமிருந்து திரைக்காக "என்ன பார்க்கிறாய்" இணைந்து பாடியவர் சுசித்ரா

Wednesday, December 17, 2008

றேடியோஸ்புதிர் 31 - எல்லாம் தெரிஞ்ச ஐயா ஹோ!


கடந்த றேடியோஸ்புதிரும் இலகுவாக அமைந்ததில் பலருக்கு கொண்டாட்டமாம். எனவே ஒரு புதிரோடு வந்திருக்கிறேன், ராஜா இல்லாமல் ;)

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த்தின் ஒரு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் இடைக் குரலைப் பாடியிருக்கும் மழலை பின்னாளில் பாடகராகவும், நடிகராகவும் வலம் வந்திருக்கிறார். அவர் யார் என்பதே கேள்வி. இவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் இவர் முதலில் பாடியதே இங்கே கொடுத்த பாடல் தானாம். அதனைத் தொடர்ந்து பெரியவரானதும் ராஜாவின் இசையில் ஒரு வாரிசை வைத்து அவரின் அப்பா இயக்குனர் இயக்கிய படத்தில் பவதாரணியுடன் கூடப் பாடிய பாடலும் அந்தப் படம் வெளியே வராததால் பிரபலமாகவில்லை. அதனைத் தொடர்ந்து தேவாவின் இசையில் சேரன் இயக்கிய அருமையானதொரு படத்தில் இவர் பாடி அந்தப் பாடல் ஒலிநாடாவில் மட்டுமே வந்தது, பாடற் காட்சியாக்கப்படவே இல்லையாம். அதன் பிறகு இன்னொரு இசையமைப்பாளரின் அருளால் பாடகராக வந்தார். பெரும் பாடகர் என்று இவரை சொல்ல முடியாது. வெற்றி பெறும் யோகம் இருந்தால் இந்த யுகத்திலேயே கண்டு பிடிச்சு சொல்லுங்க ;)


sm1.mp3 -

Tuesday, December 9, 2008

றேடியோஸ்புதிர் 30 - மரத்தின் கீழே இருந்து யோசிச்சு பாருங்க

மீண்டும் "ராஜ"பாட்டையோடு வந்திருக்கின்றேன் ;)
இங்கே கொடுத்திருக்கும் பின்னணி இசை வந்த படம் 28 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. ஒரு முன்னணி இயக்குனர் இயக்கத்தில் வந்த இப்படம் ஒரு சமுதாயப் பிரச்சனையைப் பேசுகின்றது. இதே ஆண்டு இதே காலப்பகுதியில் இன்னொரு முன்னணி இயக்குனரும் கூட இதே சமுதாயப் பிரச்சனையை வைத்தே ஒரு படம் பண்ணி இரண்டும் ஒரே ஆண்டில் வெளியாயின.

இங்கே நான் கொடுத்திருக்கும் பின்னணி இசை வந்த படத்தின் கதையை எழுதியவர் பின்னாளில் ஒரு முக்கியமான இயக்குனரானார். ஆனால் இந்தப் படம் அவருக்கு பேர் வாங்கிக் கொடுக்கவில்லை. இந்தப் படத்தில் இதே படத்தில் ஒரு நாயகனாக நடித்தவர் கூட பின்னாளில் இயக்குனர் தான். இந்தப் படத்தின் இன்னொரு நாயகி மேலே நான் சொன்ன படம் வந்தபோது இதே சமுதாயப் பிரச்சனையை வைத்து படம் பண்ணிய இயக்குனரின் இன்னொரு படைப்பில் நாயகியாக நடித்தார். இந்தப் படம் தமிழ் திரையுலகின் முக்கியமான படைப்பாளியை கூட அறிமுகப்படுத்திய பெருமை கொடுத்தது.

அட இளையராஜாவை கெளரவ நடிகர் பட்டியலில் கூட போட்டிருக்கிறார்களே ;) சரி இம்புட்டும் போதும் ஏதாவது மரத்தின் கீழே இருந்து யோசிச்சு கண்டுபிடிங்கப்பா

p30.mp3 -

Friday, December 5, 2008

இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலம்

கடந்த றேடியோஸ்புதிரில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலாக அமைந்த "மனசுக்குள் மத்தாப்பு" திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலப் பாடல்களைக் கொண்ட தொகுப்பாக இப்பதிவு அமைகின்றது.

ஒரு நட்சத்திர ஹோட்டலின் வாத்தியக் கலைஞராக இருந்த இளைஞர் எஸ்.ஏ.ராஜ்குமார், இயக்குனர்கள் ராபட் ராஜசேகரனின் கண்ணில் படவும் "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார். அந்த நேரத்தில் இசையில் பேராட்சி நடத்தி வந்த இசைஞானி இளையராஜாவின் காலத்தில் அறிமுகமாகி அதுவும் நடிகர் பிரபு தவிர ராம்கி உட்பட முற்றிலும் புதுமுகங்களோடு களம் இறங்கிய "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் ஏழு பாடல்களுமே ஹிட் ஆகி படமும் வெள்ளி விழாக் கண்டு எஸ்.ஏ.ராஜ்குமாருக்குப் பெருமை சேர்த்தது. இதில் பெருமைக்குரிய ஒரு விஷயம் இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் தானே எழுதி இசையமைத்தது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் எல்லாப் பாடல்களுக்கும் எழுதி இசையமைத்த பெருமை டி.ராஜேந்திருக்குப் பின் இவரையே சேர்கின்றது. தொடர்ந்து பல படங்களுக்கு தானே பாடல் எழுதி இசையமைத்திருக்கின்றார்.

"ஒரு வழிப்பாதை" போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்ததோடு "முதல் பாடல்" என்ற படத்தை புதுமுகங்களை வைத்து தயாரித்து அதுவரை தன் பாடல்கள் மூலம் சேர்த்து வைத்த பணத்தையும் கரைய வைத்தார்.

இன்றைய தொகுப்பிலே எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்ப காலப்படங்களை மட்டும் வைத்துக் கொண்டு இவரின் முதல் படமான "சின்னப்பூவே மெல்லப் பேசு" திரைப்படத்தில் ஆரம்பித்து சினிமா ரவுண்டில் முதல் ஆட்டத்தை நிறுத்திய படங்களில் ஒன்றான "பெரும் புள்ளி படத்தோடு நிறைவாக்குகிறேன்.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட "சின்னப்பூவே மெல்ல பேசு" திரையில் இருந்து இரண்டு பாடல்கள் வருகின்றன.
முதலில் "சங்கீத வானில்" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் ஆகியோர் பாடுகின்றார்கள்.அடுத்து இதே படத்தில் வந்த "ஏ புள்ள கருப்பாயி" என்ற பாடலை எழுதி, இசையமைத்து முதன் முதலில் பாடுயிருக்கின்றார் எஸ்.ஏ.ராஜ்குமார். அந்தப் படம் வந்த வேளை ஏகத்துக்கும் பிரபலமாகி இருந்தது இப்பாடல்.
அடுத்து வருவது இந்த வாரம் றேடியோஸ்புதிரில் கேள்வியாக அமைந்த படமான "மனசுக்குள் மத்தாப்பு" . மலையாளத்தில் தாள வட்டம் என்ற பெயரில் மோகன்லால் நடிக்க பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். இந்தப் படமே ராபர்ட் ராஜசேகரன் இயக்கத்த்தில் "மனசுக்குள் மத்தாப்பு" என்ற பெயரில் பிரபு, சரண்யா, லிஸி நடிப்பில் வந்தது. இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இப்படத்தில் நடித்த லிஸி தன் வாழ்க்கைத் துணையாக பிரியதர்ஷனை பின்னாளில் தேடிக் கொண்டார். சரண்யா இந்தப் படத்தின் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகரனை மணமுடித்து கொஞ்ச காலம் ஒன்றாக வாழ்ந்தவர். "மனசுக்குள் மத்தாப்பு" படத்தை சில மாதங்களுக்கு முன் பார்த்தபோது தான் அவதானித்தேன் அப்படத்தின் பின்னணி இசை கொடுத்திருந்தவர் வித்யா சாகர். ஏனோ எஸ்.ஏ.ராஜ்குமார் அப்போது பின்னணி இசைக்காகப் பயன்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின்பே வித்யாசாகர் முழு இசையமைப்பாளராக அறிமுகமானவர்.

மனசுக்குள் மத்தாப்பு படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்களைத் தருகின்றேன்.
முதலில் வருவது றேடியோஸ்புதிரில் இடையிசையாக வந்த பாடலான "ஓ பொன்மாங்குயில்" என்ற இனிய பாடலைப் பாடுகின்றார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.அடுத்து வருவது "பூந்தென்றலே ஓடோடி வா" என்னும் பாடல், இதனை ஜெயச்சந்திரன், சுனந்தா ஆகியோர் பாடுகின்றார்கள்.தொடர்ந்து வரும் படம் "பறவைகள் பலவிதம்" . கல்லூரி வாழ்வில் எதிர்காலக்கனவோடு இணைந்த நண்பர்கள் பின்னர் திசைமாறிய பறவைகளாய் மாறும் சோகமே படத்தின் கரு. இப்படத்தினையும் ராபர்ட் ராஜசேகரன் இரட்டையர்கள் இயக்கியிருந்தார்கள். இப்படத்தின் தோல்வி இரட்டை இயக்குனர்களையும் நிரந்தரமாகப் பிரித்தது. பின்னர் "பூமணம்" என்ற பெயரில் ராஜசேகரன் நாயகனாக ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்து இப்போது தொலைக்காட்சி தொடர்களிலும், சினிமாவிலும் அப்பா வேஷம் கட்டுகிறார். நிழல்கள் படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" பாடலைப் பாடி நடித்த இந்த ராஜசேகரனை மறக்க முடியுமா?

"பறவைகள் பலவிதம்" திரையில் வந்த "மனம் பாடிட நினைக்கிறதே" என்ற இனிய பாடலை மனோ, சுனந்தா, எஸ்.சந்திரன், எஸ்.பி.சைலஜா ஆகியோர் பாடுகின்றார்கள்.தொடர்ந்து எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு பெயர் சொல்லும் விதமாக எந்தப் படமோ இயக்குனரோ அமையவில்லை. அவரின் சரிவுக்காலத்தில் வந்த படங்களில் வந்த " ஒரு பொண்ணு நெனச்சா" படத்தில் வரும் "உதயமே உயிரே" என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமா ரமணன் பாடும் பாடலை கேட்க கேட்க இனிமை. கேட்டுப் பாருங்களேன்எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு ஆரம்பத்தில் நல்லதொரு அறிமுகத்தை ராபர்ட் ராஜசேகரன் கொடுத்தது போல இவருக்கு "புதுவசந்தம்" மூலம் வாழ்க்கையே கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். "இது முதல் முதலா வரும் பாட்டு" என்று பாடியே புதுவசந்தத்தை வெற்றி வசந்தமாக்கினார். புது வசந்தம் படத்தின் பாடல்கள் எல்லாமே தேன் தேன் தேனே தான். இப்படம் வந்த காலம் குறித்து இன்னொரு விரிவான பதிவு தேவை. எனவே "புதுவசந்தம்" படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்களைக் கேளுங்கள்.

ஆர்மோனியத்தினை முக்கிய பலமாக வைத்துக் கொண்டு "பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா" என்று கே.ஜே.ஜேசுதாஸ் பாடுவது ஒரு வகை இனிமை.அதே "அதே பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா" (மற்றைய வரிகளில் மாறுதலோடு) வேக இசை கலந்து பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல் தான் அன்று சூப்பர் ஹிட்.ராஜாவின் புண்ணியத்தில் பொழைப்பை நடத்திய ராமராஜன் சொந்தக் காலிலும் நின்று பார்ப்போமே என்று தன் குருவானவர் எம்.ஜி.ஆரின் படங்களின் தலைப்புக்களை உல்டா செய்து அன்புக்கட்டளை (அரசகட்டளை) இதுக்கு ராஜா தான் இசை, மற்றும் மில் தொழிலாளி (விவசாயி), வகையறாக்களில் நடித்த படம் "தங்கத்தின் தங்கம்" (எங்கள் தங்கம்). தங்கத்தின் தங்கம் படத்தின் இசை எஸ்.ஏ.ராஜ்குமார். ஆஷா போன்ஸ்லேயை வைத்தும் பாடல் கொடுத்திருப்பார், அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் தருகின்றேன். இப்போது அந்தப் படத்தில் இருந்து " செவ்வந்திப்பூ மாலை கட்டு" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடக் கேளுங்கள்.பல வருஷமாக எடுபிடியாகவும், உதவி இயக்குனராகவும் அலைந்து திரிந்த கே.எஸ்.ரவிகுமாருக்கு இயக்குனர் பட்டம் கொடுத்தது "புரியாத புதிர்" முந்திய தனது தயாரிப்பான புது வசந்தம் பெரு வெற்றி கண்டதால் சூப்பர் குட் பிலிம்ஸ் எஸ்.ஏ.ராஜ்குமாரையே ஆஸ்தான இசையமைப்பாளராக பல காலம் வைத்திருந்தது. அந்த வகையில் புரியாத புதிர் படத்திலும் "கண்ணோரம் கங்கை தான்" பாடலோடு இங்கே நான் தரும் "ஓர் இரவில் பாட்டு வந்தது" பாடலும் இனிமை. பாடலைப் பாடுகின்றார்கள் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பி.சுசீலா.எஸ்.ஏ.ராஜ்குமாருக்கும், இயக்குனர் விக்ரமனுக்கும் சரிவைக் கொடுத்த காலம் "பெரும்புள்ளி" படத்தோடு. இப்படத்தில் தற்போது செயல் இழந்து பரிதாப நிலையில் இருக்கும் பாபு மற்றும் சுமா ரங்கனாத் நடித்திருப்பார்கள். இப்போது ரீமிக்ஸ் பாட்டில் பேயாய் அலையும் இசையமைப்பாளர்களுக்கும் முன்னோடியாக சொர்க்கம் படத்தில் வரும் "பொன்மகள் வந்தாள்" என்ற ரி.எம்.செளந்தரராஜன் பாடலை புது இசை கலந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கொடுத்திருந்தார். அதை விட்டு விட்டு இன்னொரு இனிய பாடலான "மனசும் மனசும் சேர்ந்தாச்சு" பாடலை சுனந்தா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடக் கேளுங்கள். இன்னொரு தொகுப்பில் சந்திப்போம்.

Wednesday, December 3, 2008

றேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ

இந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண்பதுகளில் கலக்கிய இன்னொரு பாடல் இது. சென்னை வானொலியின் நேயர் விருப்பத்தில் 90 களில் ஆரம்பவரை ஒலித்துக் கொண்டே இருந்தது.

இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆரம்பத்த்தில் ஒரு குண்டான நடிகர் நடித்து வந்தது. பின்னர் தமிழில் ஒரு குண்டான நடிகர் நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. பின்னர் ஹிந்தியிலும் மான் வேட்டை நடிகர் நடித்து மலையாளத்திலிருந்து ஹிந்திக்கு மாற்றும் தொழிலை மும்முரமாக செய்துவரும் இயக்குனர் கைவண்ணத்தில் வந்தது. தமிழில் மட்டும் இரண்டு இயக்குனர்கள் சேர்ந்து வேலை செய்தால் தான் படமே வந்ததாமே ;)

இன்னொரு க்ளூ, தமிழில் காதலியாக நடித்த நடிகை, மலையாள,ஹிந்திப் பதிப்பு இயக்குனரின் மனைவி.

பாடல் இசையைக் கேட்டுக் கண்டு பிடியுங்கள், வெற்றி பெற்றால் பட்டாசு இல்லாவிட்டால் புஸ்வாணம் தான் ;)

p1.mp3 -